Saturday, April 30, 2011

சுகாவை எனக்கு பிடிக்கும்

ஆனந்த விகடனில் சுகா மூங்கில் மூச்சு எனும் தொடரை எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், திருநவேலி காரர்களுக்கு ஏக சந்தோஷம்.

"அது யாருடே ! நம்ம ஊரைப்பத்தி அப்படியே எழுதுதான்...அருமையா எழுதுதாண்டே ! ஒனக்கு தெரியாமலா இருக்கும்? "

எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக நான் செயல்பட்டு கொண்டு இருப்பதால் எழுத்தாளர் சுகாவை நான் கண்டிப்பா அறிந்து இருப்பேன் என்ற நினைப்பில் பல திருநெவேலி வாசிகள் என்னிடம் உரிமையாய் விசாரிப்பார்கள். உண்மையில் இந்த ஆண்டு ஜனவரி 30 வரை நான் சுகாவை அறிந்திருக்கவில்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது சுகாவின் அப்பா சுகா எழுதிய "தாயார் சன்னதி " என்ற நூலை எனக்கு படிக்க கொடுத்தார்.அன்று இரவே அந்த நூலை வாசித்து முடித்து விட்டேன்.

மனுஷன் என்னமாய் எழுதியிருக்கான். நான் கரிசல்காட்டு மண்ணான கோவில்பட்டியில் பிறந்து வளந்தவன் தான்.எனினும் கடந்த 25 வருசங்களாக தாமிரபரணி தண்ணியை குடித்து வளர்ந்து விட்டதால் அந்த மண்ணின் வாசம் எனக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.நெல்லை மண்ணின் ஈரமான மனிதர்களை, பிரியமான ஆச்சிகளை, அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை இவ்வளவு நுட்பமாக பதிவு செய்துருக்கிறாரே என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. கல்யாணி ஆச்சியை பற்றி அவர் கூறுவதை கேளுங்கள்.


....யாரையுமே நெருக்கமாக பழகுபவர் போலவே தான் ஆச்சியால் சொல்ல முடியும்.ஒருமுறை சொன்னாள்.

"சாவடிபிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்துருந்தா. ஆனா நான் அவாள அங்க வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுதான் பாத்தேன்.பக்கத்துல போய் கும்பிட்டேன். பச்சபுள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டே அவாளும் பதிலுக்கு கும்பிட்டா"

தமிழகத்தின் மற்ற பகுதியில் அவாள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்.ஆனால் திருநேவேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல்.கல்யாணி ஆச்சி "அவாள்" என்று சொன்னது மகாத்மா காந்தியை.

திருநெல்வேலி சிவசக்தி ரெடிமேடு கடையில் துணி கிழிக்கும் சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளை, திருமண துப்பு சொல்லும் பிரியமான வீரையன் தாத்தா, நடிகை விஜலலிதாவின் பரம விசிறி பிரம்மநாயகம் தாத்தா , விஞ்சைவிலாஸ் கைலாசம் பிள்ளை , எப்போதும் பவுடர் பூசியிருக்கும் கிரிஸ்டி டீச்சர், பொருட்காட்சியில் "ராட்டுல" சுத்தி அவஸ்தை பட்ட சுந்தரம்பிள்ளை பெரியப்பா , இளம்பிராய காதலி சந்திரா ...என எத்தனை விதவிதமான மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்துகிறார்..!

படிக்க படிக்க அப்படியொரு இன்பம் மனசுக்குள் ஊற்றாய் பெருகியது.
உண்மையில் இப்படியொரு பிரியத்துடன் திருநெல்வேலியில் மட்டும்தான் இத்தகைய மனுசர்கள் இருப்பார்களா? மதுரையிலோ கோவையிலோ ஈரோட்டிலோ அல்லது ராமநாதபுரத்திலோ உள்ள மனுஷர்களின் வாழ்க்கையிலும் இது போன்ற ஈரமான பக்கங்கள் இருக்கும்தானே ? இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.நான் படிக்காமல் கூட இருந்திருக்கலாம்.

வண்ணதாசனின் அருமையான முன்னுரை மனசை ரொம்பவே இளக வைக்கிறது. ஓவியர் பொன்.வள்ளிநாயகத்தின் அற்புதமான கோட்டோவியங்கள் புத்தகத்துக்கு மேலும் பொலிவூட்டுகிறது.

படித்து முடித்ததும் நாற்பது ஆண்டுகள் டவுன் அம்மன் சன்னதி தெருவில் குடியிருந்த உணர்வு ஏற்பட்டது. இவரது பல கதாபாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள்.அறிந்தவர்கள்.சுகாவை தவிர.

சொல்வனம் வெளியீடான தாயார் சன்னதி டிசம்பர் 2010 இல் வெளியானது.
மறுநாள் காலையில் அவரது அப்பாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

"என்கிட்ட பேசினது எல்லாம் சரிதான்.அவனுக்கு ஒரு கடுதாசி எழுதி போட்டுரு.குறிச்சிக்கோ அவன் முகவரியை .."என்றபடி அவரது முகவரியை தந்தார்.

நெல்லைக்கண்ணன் அண்ணாச்சி ! மன்னிச்சுக்குங்க ..இன்னமும் உங்க பையனுக்கு நான் கடுதாசி எழுதல..எதை எழுத..எதை விட..என்று மனசு அடிச்சுக்குது..எப்படியும் எழுதிவிடுவேன் "

Wednesday, April 27, 2011

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்

மெய்ப்பொருள் நாயனார் தெருவுக்குள் நுழையும்போதே மனம் கனத்தது. எவ்வளவு நாளாயிற்று வந்து? வீடுகளின் முகத்தோற்றங்கள் ரொம்பவே மாறியிருந்தன.இரும்புகடைக்காரரின் பெரிய காம்பௌண்டு சுவர் இடிக்கப்பட்டு அங்கே சின்னச்சின்னதாய் நாலைந்து புதுவீடுகள்... பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை சண்முகம் அண்ணாச்சி எங்கே போனாரோ? கடையையும் காணோம்..அங்கேதான் கணேசன் புத்தகமும் சிகரெட்டுமாய் கிடப்பான். எனக்கு நினைவில் தெரிந்து சொல்வதானால் கணேசன் சிகரெட்டுடன் தான் முதலில் அறிமுகமானான்.கோல்ட் பில்ட்டர் சிகரெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவன் நினைவு தான் வரும்.

கணேசன் வீடே எனக்கு அடையாளம் தெரியவில்லை.அந்த தெருவில் அவன் வீடு மட்டும் வித்தியாசமாக இருக்கும்.மற்ற வீடுகள் நெருக்கமாக முன் தள்ளி இருக்கையில் அவன் வீடு மட்டும் காம்பௌண்டில் இருந்து சற்று உள்ளடங்கி இருக்கும்.காம்பௌண்டு கதவில் இருந்து வீடு சுமார் இருபது அடி தூரம் இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருந்தது. "வீட்டின் முன்புறம் திறந்தவெளி இருப்பது தாண்டா அழகு" என்று அடிக்கடி சொல்வான். காம்பௌண்டை ஒட்டி முன்புறம் ஒரேஒரு உயரமான தென்னை மரம்.வீட்டின் முற்றத்தில் நிறைய பூச்செடிகள் விதவிதமாய் பூத்திருக்கும்.வீட்டின் வலது மூலையில் உள்ள வேப்பமர நிழலில் அவன் சைக்கிள் நிற்கும். பின்னால் அவன் மொபெட் வாங்கியபோதிலும் சைக்கிளை அவன் ஒரு போதும் விற்றதில்லை.ஆபீஸ் போவதற்குதான் மொபெட். மீதிநேரம் சைக்கிள் தான்.கன்னிவினாயகர் கோவில் முன் பக்கம் உள்ள தந்தி போஸ்டில் சைக்கிளில் சாய்ந்தபடி நிற்கும் கணேசன் நினைவில் வந்து போனான்.

கணேசன் வீட்டு காம்பௌண்டுக்குள் ஒரு செல்போன் கடை புதுசாய் உருவாகி இருந்தது. கடையில் நாலைந்து மாணவர்கள் ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.யாரையும் அடையாளம் காணமுடியவில்லை.அவன் வீட்டிற்கு எதிரே இருந்த காலி மனையில் பெருசாய் ஒரு வீடு எழும்பி நின்றது.கணேசன் வீட்டு வாசலில் சின்னதாய் இருந்த நுழைவாயிலின் கேட்டை திறந்து உள்ளே சென்றேன்.செல்போன் கடையின் சுவர் நீளமாய் உட்புறம் சென்றதால் வீட்டு முகப்பே பெரிதும் மறைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

வலது ஓரத்து மூலையில் ஒட்டடை தூசிகளோடு நின்றது கணேசனின் சைக்கிள்.
"யாரு?"

உள்ளே இருந்து முதலில் வந்தது சின்னவன் காசி. நன்கு வளர்ந்து இருந்தான்.
"காசி ... எப்படிடே இருக்கே?"

அவன் கையை பிடித்து கொண்டேன்.முதலில் தயங்கி, பின் சுதாரித்து கொண்டவனாய் "மாமா ..மணி மாமா .."என்று சொல்லிக்கொண்டு உட்புறமாய் திரும்பி "மணி மாமம்மா " என்றான்.

இருபத்தஞ்சு வருஷங்களுக்கும் மேலாக வந்து போன வீடு என்றாலும் வராண்டா சேரில் உட்காரும் போது புதுசாய் உட்கார்வது போல இருந்தது. உள்ளே இருந்து வந்தாள் பூரணி.

"வாங்கண்ணே..இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?"

சிரித்தபடியே கேட்டாள். முன்பைவிட சற்றே பெருத்து இருந்தாள்.சமையல் கட்டில் இருந்து வந்ததால் முகமெல்லாம் வியர்வை. சேலை தலைப்பால் முகத்தை துடைத்து கொண்டாள்.

காசியை பக்கத்தில் இழுத்தேன். "என்ன படிக்கே? நாலாப்பா?"

"நாலப்பா ...எல்கேஜி யான்னு கேக்ககூடாது ? ஆறு படிக்கான்.." என்றவள்
"ஏல..மாமவ உள்ளே கூட்டியா..தார்சா லேயே உட்கார்ந்துடீக..உள்ளே வாங்க .."
பூரணி உட்புறம் திரும்பினாள்.

ஹாலில் ஷோபாவில் அமர்ந்தேன்.அறைக்குள்ளும் நிறைய மாற்றங்கள். கணேசனும் பூரணியும் இருந்த பெரிய கருப்பு வெள்ளை புகைப்படம் டிவி க்கு மேல்புறம் தொங்கிக்கொண்டு இருந்தது .திருமணத்தின்போது மாரிஸ் எடுத்தது. இடது பக்கம் மேல்புறத்தில் கணேசனின் பெரிய வண்ணபுகைப்படம் ..புகைப்படத்தில் சந்தனமாலை தொங்கிக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.

"பெரியவன எங்க ?" பூரணியிடம் கேட்டேன்.

"மூர்த்தியா அவன் டுஷன் போயிருக்கான் ..இந்த வருஷம் பிளஸ் டூல்ல.." என்றவள் "அக்கா எப்படி இருக்காங்க ? கூட்டிட்டு வர வேண்டியதுதான..? திலக் படிப்ப முடிச்சுட்டானா? " ஆவலுடன் கேட்டாள் பூரணி.

குரலில் இப்போது தெளிவு தெரிந்தது. முன்பெல்லாம் பேசுவதுக்கே ரொம்ப கூச்சபடுவாள்.விபத்தில் கணேசன் இறந்த அன்று அவள் உடைந்து போய் முட்டி முட்டி அழுத காட்சி கண்ணில் நிழலாடியது.

"பி.எட் முடிச்சுட்டீங்களா ? பென்ஷன்லாம் ஒழுங்கா வருதா?" வார்த்தைகள் திக்கி திணறி மோதித்தான் வெளிவருகின்றன எனக்கு.

"பி.எட் முடிச்சு பதிஞ்சும் வச்சாச்சு. எப்ப வருதுன்னு பார்ப்போம்..டி.டி பி வொர்க் பார்த்துக்கிட்டு இருக்கேன். அண்ணன் ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் ஜாப் வொர்க் கிடைச்சுட்டு இருக்கு.பென்ஷன் பணம் மட்டும் போததுல்ல..கொஞ்சம் இரிங்க அண்ணாச்சி ..அடுப்ப தணிசுட்டு வரேன் " உள்ளே போனாள்.

காசியின் கைகளை கையில் எடுத்து கொண்டேன். லேசான சூட்டுடன் மென்மையாய் இருந்தது. கூச்சத்துடன் கைகளை இழுத்து கொண்டான். கணேசனை உறிச்சி வச்சு பிறந்தவன்.

"அண்ணன் டுஷன் விட்டு எப்ப வருவான்? " என்றேன்.

"சித்தி மார்க்கெட்டுக்கு போயிட்டு வரும்போது அவன கூட்டிட்டு வருவா" என்றான்.

"காப்பிய குடிங்க முதல்ல .."நீட்டினாள் பூரணி.

"ரேவதி இப்ப அடுத்த வீட்டுல தான இருக்கு.அவ தான் அவன கவனிச்சுகுவா. வாரத்துக்கு ரெண்டு நாள் டுசனுக்கு கொண்டு போய் விடறதும்கூட்டியாறதும் அவ தான்.சைக்கிள் ள்ள தனியா விட பயமா தான இருக்கு "

கணேசன் சாலையில் சைக்கிளில் கால் ஊன்றி நின்றபடி செல்பேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது தான் அந்த லாரிகாரன் பின்புறமாய் வந்து இடித்து தூக்கி எறிந்து...

"அடுத்த வாரம் புது வீடு க்ரஹப்ரவேசம்..திருநவேலி ல தான்..பிள்ளைகளை கூட்டிட்டு கட்டாயம் வரணும்.." என்றபடி கைப்பையில் இருந்து எடுத்து அழைபிதழை பூரணியிடம் நீட்டினேன்.

"பூரணி கணேசன் " என்பதை எழுத்து கூட்டி வாசித்தது போல இருந்தது. "அடுத்த புதனா ? சந்தோஷம். எவ்வளவு நாளா வீடு கட்டணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க ..நம்ம வீடு மாதிரி முன்னால இடம் விட்டு கட்டணும்னு சொன்னேகல்ல..அப்படிதான் கட்டி இருக்கீகளா" சிரித்தாள் பூரணி.

நான் செல்போன் கடையை பார்த்தேன்.அவள் பெருமூச்சு எறிந்தாள்.

"என்ன செய்ய ? அம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்து அவனே கடையை கட்டிகிட்டான். வாடகை ரெண்டாயிரம் வருது. சென்டரான இடம்லா. சரின்னுட்டேன். செடி கொடில்லாம் அவுகளோட போச்சு.." என்றவள்
"பிள்ளைகளையும் ரேவதியையும் அனுப்பி வைக்கிறேன். நான் இன்னொரு நாள் வரேன் .." என்றவளை மறித்து "இல்லை இல்லை நீயும் கண்டிப்பா வரணும் " என்று அழுத்தமாய் கூறினேன்.

"மூத்தவனையும் பார்க்கலாம்னு நெனச்சேன். நேரமாயிரும். அப்ப நான் கெளம்பறேன் " எழுந்தேன்.

ஷோபாவின் பக்கவாட்டில் இருந்த ஷெல்பில் கணேசன் அடுக்கி இருந்த புத்தகங்கள்..தூசி படிந்து கிடந்தன.

மேல்புற வரிசையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். ஜமீலா நாவல்.சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ் மதாவ் எழுதிய அழகான காதல் கதை.முத்தஆனந்தபுரம் மடத்தில் உள்ள பெரிய புளியமரத்தின் கீழ் அமர்ந்து எண்பதுகளில் கணேசன் மணிக்கணக்கில் சிலாகித்து பேசிய நாவல். ஜமீலாவையும் ஐஸ்மதேவையும் எனக்கு அவன் தான் அறிமுகம் செய்தவன். மனம் பிரளயம் கொண்டதை போல உணர்ந்தேன்.

"இத நான் எடுத்துகிடடுமா? " நாவலை கையில் எடுத்தேன்.

"எடுத்துக்குங்கனேன்.."பூரணியின் குரல் கம்மியது.

வெளியே வந்தேன். காதுகளில் பூரணியின் கேவல் சத்தம் விழுந்தது. "முப்பது வருஷமா பழகி இருக்கீங்க. அவரு போய்ட்டா எல்லாமே போச்சா ?கடைசில என்கூட பொறந்தவங்க மட்டும்தான் எனக்கு உறவா? அப்பப்ப வந்து பார்த்துக்குங்க உங்க பிரெண்டு பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்களா இல்லையானு . .."என்பது போல இருந்தது அந்த விசும்பலின் உணர்வுகள்.

அவளை திரும்பி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

முதல் தப்படி ...


பேனா பிடித்தே பழகிய கைகளுக்கு கணிப்பொறியை கையாளுவதில் சற்றே கூச்சமும் , தயக்கமும் ...

சிறுகதை இலக்கியத்தில் துவங்கிய ஆர்வம் ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரச் செய்திருக்கிறது . தொகுப்பில் வராத சில கதைகளை வலைப்பூவில் கொண்டு வர விரும்புகிறேன் . எதிர்வினையைப் பொறுத்து எனது வலைப்பூவின் வாசம் தொடரும் ...


நாறும்பூநாதன்