Sunday, November 2, 2014

அவர் தான் தொ.ப.



தெற்கு பஜாரில் உள்ள ரத்னா ஜவுளி கடையில் அவசரத்திற்கு என்று ஒரு பனியன் வாங்கிகொண்டு திரும்பும்போது எதிர் கடையில் தொ.ப.உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டேன்.ரொம்ப தளர்ந்திருந்தார்.பார்த்து ஏழெட்டு மாதங்கள் இருக்கும்.அவரை கடந்து போக முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அவரிடம் பேச புது புது விசயங்கள் நிறையவே இருக்கும்.அவரிடம் உள்ள விஷேச பண்பு என்பதே அது தான் .அரை மணி நேரத்தில் அது வரை கேட்டிராத அறுபது விசயங்களை சொல்லி விட்டு போய்  விடுவார். நான் ஹெல்மெட் போட்டிருந்ததால் உடனடியாக அவரால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.கவசத்தை கழட்டியதும் என்னை பார்த்து உற்சாகமாக கை அசைத்து வரவேற்றார்..
"ச்சே..இவ்வளவு நாளா சந்திக்காம இருந்துட்டமே .."என்று மனசுக்குள் தோன்றியது.ஈழ பிரச்னையில் இருந்து கூடங்குளம் வரை எத்தனையோ மனஸ்தாபங்கள்..கருத்துக்களை வெளிப்படையாய் பேச ஏற்பட்ட தயக்கம் தான் இந்த இடைவெளிக்கு காரணம் ...

தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது என்பதை கூறியவர், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நடந்த முக்ய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்...இந்த நேரத்தில் கவிஞரும் நடிகருமான திரு.அருணா சிவாஜி அவர்கள் அந்த பக்கமாக வந்தவர் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார்.வெளியூருக்கு சென்று பேச மனசு விருப்பபட்டாலும் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது என்று வருத்தப்பட்டார்.அவரது குருநாதர் சி.சு.மணி நினைவு சொற்பொழிவு கூட்டம் ஒன்று வரும் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு நடக்கிறது வாருங்கள் என்று அழகான ஒரு அழைப்பிதழ் கொடுத்தார்.ரொம்ப பேர் வேண்டாம். ஒரு பத்து பதினைந்து பேர் போதும் என்றார். பாளையம்கோட்டை பற்றிய ஒரு நூல் எழுதி கொண்டு இருக்கிறேன்..முனைவர் நவநீதன் உள்ளிட்ட சில நண்பர்கள் நான் சொல்ல சொல்ல எழுதிக்கொண்டு வருகிறார்கள் என்று போகிறபோக்கில் ஒரு முக்கிய செய்தியை சொன்னார்..நானும் வேண்டுமானால் வந்து தங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன்.பேச்சு எங்கெங்கோ சென்றது..பை பாஸ் ஆபரேஷன், மாத்திரை,மருந்து என்று எங்கள் சொந்த பிரச்னைக்கு வந்து சேர்ந்தோம்.கால் வலி தீராத வலியாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார். அம்னீசியா நோய் போல சில சமயங்களில் எதிரே இருப்பவர் பேர் மறந்து போய்  விடுகிறது என்று சொன்னவுடன் எதிரே இருந்த சிவாஜி "அய்யா ..நான் யார் என்று தெரியுதா ..?:என்று பதட்டத்துடன் கேட்டார்.
"நீங்க அருணா சிவாஜி தான .." என்று தொ.ப.அவர்கள் சிரித்ததும் தான் அவருக்கு கொஞ்சம் திருப்தி வந்து சேரில் சாய்ந்து உட்கார்ந்தார்.
தொ.ப.என்றாலே அவரது ஞாபக சக்தி தான் நினைவுக்கு வரும்..தான் படித்த அதனை புத்தகங்களையும் எழுதிய ஆசிரியர் முதற்கொண்டு நினைவாய் சொல்வார் அவர்..

பேச்சு குடும்ப விசயத்துக்கு திரும்பியது.பையன் இப்ப என்ன வருஷம் படிக்கிறார் என்றார்.அவன் வேலைக்கு போய்  ஒரு வருஷம் ஆகிறது என்று சிரித்தேன்.
அட ..நாம சந்தித்து அவ்வளவு நாள் ஆகி விட்டதா என்று அவரும் சிரித்தார்.கோயம்புத்தூர் ல metallurgical engineering  தான படிச்சான் என்றார்.நல்லவேளை அம்னீசியா வேலை செய்யவில்லை என்று நினைத்துகொண்டேன்.அவன் கோவை P .S .G .T e c h  கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து இருக்கிறான் என்றவுடன் உலோகவியல் முக்யமான படிப்பு என்று பாராட்டியது இப்போதும் நினைவில் ஓடியது.

அவர் நெல்லை வந்தால் பார்த்து பேசணுமே ...என்றார்.
நான் உடனே பதறிபோய் "என்னய்யா நீங்க..அவன் வந்தா நானே அழைத்து வருகிறேன் உங்கள் வீட்டுக்கு.."என்றேன்.
"ஆதிச்சநல்லூர் மக்கள் பயன்படுத்திய உலோக துண்டுகள்,  இடையங்குளம் மக்கள் உருவாக்கிய இரும்புத்துண்டுகள் எல்லாம் என்கிட்டே இருக்கு..இதை எப்படி அந்த காலத்து மக்கள் உருக்கியிருப்பர்கள் என்று அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கணும்..இது சம்பந்தமான வேற சந்தேகங்களும் இருக்கு..அவர்கிட்ட கேக்கணும் ..என்றார்..
வழக்கம்போல எங்களுக்கு தேனீர் வாங்கி கொடுத்தார்..நாங்கள் குடித்தோம்.பின் வழக்கம்போல அவர் சிகரட்டை பற்ற வைத்து கொண்டார்..அருணா சிவாஜி பதறினார்..
ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க..சிகரெட் பிடிக்கறது உயிருக்கு ஆபத்தே என்றார்.
சிகரெட் குடிக்காட்டி அவருக்கு இப்ப உடனே ஆபத்து என்றேன்.தொ.ப.சிரித்தார்.
தமிழக அறிவுஜீவிகள் வியந்து பாராட்டும் தொ.ப.என்ற பேராசிரியர்.தொ.பரமசிவன் அவர்கள் எவ்வளவு படித்து இருந்தபோதிலும் தன் முன்னால் வளர்ந்த சிறுவன் ஒருவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது என்று கருதினால், அவரது பண்பு என்னை வியக்க வைத்தது...சந்தேகங்களை எவரிடமும் கேட்டு தீர்த்து கொள்ளலாம் எனும் அவரது வேட்கை அவர் மீதான மதிப்பை மேலும் கூட்டியது..
எனது வண்டியை கிளப்புமுன் அவரை திரும்பி பார்த்தேன்..
சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கொண்டு இருந்தார்.

"எங்கள்      அன்பிற்குரிய தொ.ப..."