Sunday, May 29, 2011

யாருக்குத் தண்டனை?

சட்டம், நீதிமன்றம் பற்றியெல்லாம் நீங்கள் என்ன சார் நினைக்கிறீர்கள்? சட்டம் ஒரு கழுதை என்கிறார்கள். சிலர் இருட்டறை என்பார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று வசனம் பேசுவதையெல்லாம் இப்போது கேட்டாலும் எனக்கு சிரிப்பான சிரிப்பு.....

அப்படியொரு சிரிப்பு வரும். சட்டம் குற்றவாளிகளைத் தண்டிக்கிறதோ இல்லையோ, நீதியை நிலைநாட்ட முற்படும்போது. அதன் காலடியில் அப்பாவி ஜந்துக்கள் நசுங்கிப் பரிதவிப்பதைப் பார்க்க வேண்டுமே? என்னோட கதை ஒன்றைச் சொல்லட்டுமா?

எனக்கு கல்யாணம் ஆன புதிதில் நடந்த சம்பவம் அது. லோடிகான் தெருவில் வீடு பார்த்து வந்தபோது எனக்கும் சிவகாமிக்கும் அந்த வீடு ரொம்பவும் பிடித்துப் போனது. மாடிவீடு தான். மிலிட்டரி லைனில் வீடு கிடைப்பது என்றால் குதிரைக் கொம்பு. அர்த்த ராத்திரியில் கூட பஸ்ஸில் வந்து இறங்கலாம். அப்படியொரு பஸ் வசதி! கீழ்வீட்டின் வராந்தாவிலிருந்து வலது ப.க்கமாய் மேலேறிச் சென்றால் குட்டி குட்டி அறைகளாய் மூன்று அறைகள். சமையலறை தனியாய் வானவெளியில் பிரிக்கப்பட்டிருந்தது. வெள்ளைக்காரன் வீட்டுப்பாணி.

இஸ்ரவேல் தாத்தா ரொம்ப கவனமாய் அவரது பாரம்பரியப்படி கட்டியிருந்தார். முன்புறம் பால்கனியில் உட்கார்ந்தால் காற்றின் சிலுசிலுப்பில், தன்னை மறந்து தூங்கலாம். அப்போது எங்களுக்கு அவ்வளவாய் வீட்டுச் சாமான்கள் இல்லாததால் வீடு, தேவையை விடப் பெரிதாகவே தெரிந்தது. சனி, ஞாயிறு வந்துவி;ட்டால் இருவரும் அம்பை சென்று விடுவோம். பாபநாசம் தலையணையில் குளித்துப் பழகியவர்களுக்கு, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேராச்சியம்மன் படித்துறையில் குளிக்க கொஞ்சம் தயக்கம் வரத்தான் ஐயா செய்யும்? புதுமைப்பித்தன் காலத்து படித்துறை வேறு. இன்றைக்கு நிலைமையில் வேறு. மொத்தத்தில் திருநெல்வேலி ஊர் அவ்வளவாய் ஒட்டாத நேரம் அது.

இப்படியாகப்பட்ட ஒரு சனி, ஞாயிறு விடுமுறையில் அம்பாசமுத்திரம் சென்றுவி;ட்டு, திங்கள் காலை வந்து வீட்டைத் திறந்து உள்ளே வந்தபின் தெரிந்தது, எவனோ களவாணிப் பயல் வந்து சென்றிருக்கிறான் என்பது.

'என்னங்க..... அடுப்படி கதவு திறந்து கெடக்குது'.....

எனக்கும் சில வினாடிகள் 'திக்' கி;ட்டன. பின் சமாளித்து சமையல் கட்டில் சென்று பார்த்தால் கடுகு உளுத்தம்பருப்பு டப்பாக்கள் உருண்டு கிடந்தன. அருவாமனை நட்ட நடுவில் கிடந்தது. பால்குடித்த டம்ளர் ஒன்று, சிந்திய பால் வடுக்களோடு இன்னொரு மூலையில் பாத்திரங்கள் பலவற்றைக் காணவில்லை.

'சரி... பதட்டப்படாம .. என்னென்ன போயிருக்குன்னு மொதல்ல பார்ப்போம்' என்றேன்.

சிவகாமியும் நெஞ்சு படபடக்க, மேலோட்டமாய் பார்த்தவள் 'ஒரு தட்டையும் காணோமே! பால்செம்பு ரெண்டு மூணு உண்டு... அட எளவெடுத்தவன்... கரண்டியும்லா எடுத்திட்டுப் போயிருக்கான்.. அவங் கைய பாம்பு புடுங்க....' என்று சாபமிடத் தொடங்கினாள்.

திருடன் வீட்டுக்குள் வரவில்லை. வீட்டின் பின்பக்கமாய் மாடியேறி வானவெளிக்கு வந்து, சமையலறை பூட்டை உடைத்து, உள்ளே உள்ள பண்ட பாத்திரங்களை ஒரு கோணிப்பையில் அள்ளி எடுத்துச் சென்றிருக்கிறான்.

இன்னென்ன சாமான்கள் காணோம் என்பதை எங்களால் திட்டவட்டமாய் சொல்ல முடியவில்லை. இரவு தோசை சுட, அடுப்பில் கல்லைப் போட்ட பின்பு சட்டாப்பையைத் தேடும் போதுதான் தெரிந்தது. 'இதையும் தூக்கிட்டுப் போயிட்டானா? கருமாந்திரம் பிடிச்சவன்'.

'இன்னும் என்னென்ன போயிருக்கோ.. இதப்போயி என்னத்துக்கு போலீஸ்ல சொல்லி கம்ப்ளெய்ண்ட் கொடுக்க... சவத்த விட்டுத் தொலைப்போம்..' என்று முடிவு செஞ்சு விஷயத்தை அத்தோடு முடிக்க நினைத்தோம்.

அங்க தான் வினை பிடிச்சது. வினை எங்களுக்கா, களவாணிப்பயலுக்கா என்று பார்த்தால் ரெண்டு பேருக்கும்தான் என்பதைப் போல சம்பவங்கள் நடைபெற்றன. எங்கள் வீட்டு சம்பவம் நடந்த நாலு நாட்கள் கழித்து, திருடன் ஒரு பெண்ணின் தாலிச் செயினைப் பறிக்கும் போது பிடிபட்டு விட்டான். அவனை அடித்து உதைத்தபோது, எங்கெல்லாம் திருடினான் என்பதைப் பட்டியலிட்டுக் காண்பித்து விட்டான். நானும் சிவகாமியும் வேலைக்குப் போயிருந்தபோது, பிற்பகலில் போலீஸ் திருடனோடு எங்கள் வீட்டு முன் வந்த போது தெருவே வேடிக்கை பார்த்திருந்தது. அவன் எப்படி மேலேறி வந்தான் என்பதையும், எப்படி பின் பக்க கதவை உடைத்து சாமான்களை எடுத்துச் சென்றான் என்பதையும் திரும்பவும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

மாலையில் நாங்கள் வீட்டிற்கு வந்தபோது, எதிர்வீட்டு ஸ்கூல் வாத்தியார் வேதநாயகம் சார் தான் விஷயத்தைச் சொன்னார். 'என்ன சார்.. இவ்வளவு நடந்திருக்கு.. எங்ககிட்டே கூட நீங்க வாயே திறக்கலியே! நெறைய்ய சாமான்கள் போயிருச்சா?... சரி போனது போகட்டும்! கர்;த்தர் கிருபைல போனது கிடைச்சுட்டு.... அந்த மட்டுக்கும் சந்தோஷம் தான்' என்றார்.

எனக்கு சர்வமும் ஆடிப் போயிற்று.

'அடப்பாவி மக்கா! இப்படியா போயி மாட்டுவ நீ! இப்ப என்னியும்லா சேர்த்து மாட்டி விட்டே' என நினைத்துக் கொண்டேன்.

'பாக்கியம் சார்! நீங்க உடனே பாளையங்கோட்டை ஸ்டேஷனுக்குப் போயி எஸ்ஐயப்பார்த்துட்டு வந்துருங்க... திருட்டுப் போனா கம்ப்ளெய்ண்ட் கொடுக்கிறதில்லையா... படிச்சவங்க தானே நீங்கள்ளாம்...' அப்படின்னு சத்தம் போட்டுட்டு போனார் சார்! எதுக்கும் போலீஸ்ல உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கூட்டிட்டுப் போறது நல்லது' என்று சொல்லிவிட்டுச் சென்றார் வேதநாயகம் சார். எனக்கும் சிவகாமிக்கும் ஒரு பக்கம் லேசான சந்தோஷம் என்றாலும் இன்னொரு பக்கம் எஸ்ஐ யை எப்படிச் சமாளிக்க என்ற யோசனையும் கவலையும் பற்றிக் கொண்டன.

'சரி மொதல்ல நாம காணாமப் போன சாமானையெல்லாம் ஒரு லிஸ்ட் எழுதி வெச்சுக்கிட்டு அப்புறமா யாரோடு போகலாங்கறதை யோசிப்போம்' என்று முடிவு பண்ணி, லிஸ்ட் எழுத ஆரம்பித்தோம்.

எவாசில்வர் தட்டு - 4
பால் செம்பு - 2
எவர்சில்வர் கரண்டி - 5
சட்டகப்பை - 1
பெரிய போனிச்சட்டி- 2
சின்ன போனிச்சட்டி - 2
எவாசில்வர் டம்ளர் - 5
இட்லித் தட்டு - 4

சரி வேறெதுவும் இருக்கா.. நல்லா யோசிச்சுப்பாரு?

'இல்லே அவ்வளவு தாங்க.. மத்ததெல்லாம் இருக்கறமாதிரித்தான் தெரியுது.. மொத்தம் எவ்வளவுன்னு பாருங்க! ' ஆக.. இருபத்தைஞ்சு ஐட்டம் காணல. நம்ம பிரம்மநாயகம் அண்ணன் திருமலை, டவுண் ஸ்டேஷன்ல தான இருக்கான். அவனக் கூட்டிட்டுப் போனா என்ன.. 'என்று நான் சொன்னதை ஆமோதித்தாள் என் சகபத்தினி. கடைசியில் ஒரு வழியாய் திருமலையின் பாதுகாப்போடு நான் பாளையங்கோட்டை ஸ்டேஷனுக்குள் பயபக்தியுடன் நுழைந்தேன். 'என்ன சார்! போலீஸ்னா உங்களுக்கு இளக்காரமாப் போச்சா... திருட்டுக்கேசெல்லாம் கம்ப்ளெய்ண்ட் பண்றதில்லையா.. படிச்ச ஆளுங்க மாறியா நடந்துக்கறீங்க?' என்று ஒரு பாட்டம் பாடிவிட்டு திருமலையைப் பார்த்துச் சொன்னார் '. வேய்! நீராவது சொல்லியிருக்கலாம்லா?

'சரி விடுங்க அண்ணாச்சி! சாமாங்க என்னென்னு போயிருக்குன்னு கண்டுபிடிக்கவே நாலு நாளாயிடுச்சு.. பண்ட, பாத்திரம் தானேன்னு கொழுந்தியாளும் பேசாம இருந்துட்டா.. சரி .. இந்தாங்க லிஸ்ட்... எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க... பேக் டேட் போட்டு ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதித் தரச்சொல்றேன்' என்று திருமலை சொல்லிவிட்டு லிஸ்ட்டைக் கொடுத்தான்.

லிஸ்ட்டை மேலும் கீழும் பார்த்த எஸ்ஐ என்னைப்பார்த்தார். 'சார்! நீங்க எழுதின லிஸ்ட் தானே? நல்லாத் தெரியுமா இருபத்தைஞ்சு ஐட்டம்தான்னு?' என்று ஒரு மாதிரியாய் பார்த்தார். அந்தப்பார்வையில் ஒரு ஏளனம் தெரிந்தது. எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. அட எளவே! கூடுதலா எதையாச்சும் எழுதித் தொலைச்சுட்டோமோ? என்ன கண்றாவியொ தெரியலையே! 'யோவ்! ஏட்:டு! அந்தக்குட்டிச்சாக்கை இங்க தூக்கிட்டு வாரும்!' என்று சத்தம் கொடுத்தார்.

குட்டிச்சாக்கா அது.. பெரிய சாக்கு!

'சணல் முடிச்சை அவிழ்த்து உள்ளேயிருக்கும் பாத்திரங்களை எடுத்து புதுசா லிஸ்ட் எழுதுங்க.. ஏட்டு! நீரே எழுதும்யா....' என்றார்; எஸ்ஐ. ஏட்டையா என்னைப் பார்த்து' சார்! ரூல்டு போட்ட பேப்பர் ஒரு ரெண்டு டஜன் வாங்கிட்டு வாங்க சார்.. எதிரால உள்ள கடையிலே கிடைக்கும்' என்று சந்தடிச் சாக்கில் சொன்னார்.

ரெண்டு டஜன் என்ன... பத்து டஜன்னாலும் வாங்கித் தந்துரலாம். மனுஷன் தோசை சாப்பிட சட்டை ஆப்பை இல்லே .. ம்.. உள்ள என்னவெல்லாமோ இருக்கும் போலிருக்கே வாங்கி வந்து கொடுத்தேன் பவியமாய் ஏட்டையா சொல்ல்சசொல்ல எழுதினேன். நான். போனிச்சட்டி – 5 பெரிய தவளைப்பாணை – 2 அஞசரைப்பெட்டி – 1... அடப்பாவி மட்டய.... இதெல்லாம் எங்களுக்கு மறந்து போச்சே கை எழுதிக்கொண்டே வந்தது.

'ம்.. டோட்டல் போடுங்க' எஸ்ஐ சத்தமாய் இருமினார். 'அஞ்சும் இரண்டும் ஏழு ஏழு ஒண்ணும் எட்டு அஞசும் பதிமூணு... ஆக அறுபத்து மூணு ஐட்டம் சார்!' எனக்கு நாக்கு குளறியது.

'நீங்கள் எவ்வளவு எழுதியிருக்கீங்க... இருபத்தைஞ்கா?... மீறிய நாங்க வெச்சுக்கவா... சரி. சரி.. குத்து மதிப்பா ரெண்டாயிரம் ரூபாய்னு எழுதுங்க...' என்றார்.

ரெண்டாயிரம் ரூபாய் சாமானைத் தொலைச்சிட்டு. குத்துக்கல்லாட்டம் பேசாம இருந்திருக்கோமே... என்று என்னையே திட்டிக்கொண்டேன. பரவாயில்லை. எஸ்ஐ திட்டினாலும் நல்லா மனுஷனாய்த்தான் இருக்கார். திருமலை வந்ததும் நல்லதாப்போச்சு... இவ்வளவு சீக்கிரம் சாமான்கள் கிடைக்கும்னு நெனைச்சுக்கூடப் பார்க்கலை. ஒரு ஆட்டோல போட்டுக்கொண்டு போயிர வேண்டியதான்... மனசு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

ஒரு வழியாய் கையெழுத்துப்போட்டு எஸ்ஐ கிட்டே கொடுத்தபின்பு திருமலை சொன்னார். 'தம்பி! நாம கிளம்புவோமா... நாளைக்கு காலைலே கோர்ட்டுக்கு வந்துடுங்க'

'கோர்ட்டுக்கா? அப்பா சாமான்கள் எடுக்க வேண்டாமா?' சிரித்தான் திருமலை. 'தம்பி! அக்யுஸ்டு ஆம்புட்டுட்டான்னா உங்க சாமானையெல்லாம் கோர்ட்ல ஒப்படைச்சுடுவாங்க... கேஸ் முடிஞ்ச பின்னாடி தான் கிடைக்கும்.'

ஆகா! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமப் போச்சே! இந்த கோர்ட் விவகாரம் இருக்கே... அது ஒரு பெரிய்ய...கதை. லீவைப் போட்டு கோர்ட் வளாகத்திற்குள் கால்கடுக்க கேஸ் வரும் வரை காத்திருக்கும் கொடுமை இருக்கே... அப்பப்பா! அதுவும் களவாணிப்பயல் கண்ணெதிரிலேயே காத்திருப்பது ரொம்பக் கேவலம். மாயாண்டி (அது தான் களவாணியின் பெயர்) சர்வ சாதாரணமாய் விலங்கு மாட்டிய கைகளோடு பீடியைப் பற்ற வைக்க பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம் தீப்பெட்டி வாங்கிள விதத்தைப் பார்க்கணுமே! இருவருக்குமிடையே எவ்வளவு அன்னியோன்யம்! 'பாக்கியம்! பாக்கியம்! பாக்கியம்!'

கோர்ட்டில் டவாலி கூப்பிட்டவுடன் அலறியபடி உள்ளே ஓடினேன்.

'உங்கள் வீட்டில் திருட்டு நடந்தது உண்மையா?'

'ஆமா சார்!'

'இந்தப் பாத்திரங்கள் எல்லாம் உங்களது தானா?'

கோர்ட்டார் முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களைப் பார்த்து என்னிடம் கேட்டார் அரசு வக்கீல்.

'ஆமா! சார்'

'சரி நீங்க போகலாம்'

வெளியே வந்தேன் படப்படப்புடன். பல வாய்தாக்கள்! எனக்கு கேசுவல் லீவெல்லாம் இதிலேயே காலியாகிப் போயின. இடையிடையே விசாரணைக்கு சாட்சியாக வேதநாயகம் சாரும் லீவு போட்டு வந்து கொண்டிருந்தார்.

என்னாலே உங்களுக்கும் கஷ்டம்...'என்று இழுத்தேன். 'இதிலே என்ன சார் இருக்கு... பக்கத்து வீட்ல இருந்துக்கிட்டு இந்த ஹெல்ப் கூட பண்ணாட்டி என்ன இருக்கு?' என்று சொன்னார். பாவம் அவர் ரிடையர்டு ஆக இன்னும் மூணு வருஷம் தான் இருக்கு! இந்த வயதில் அவரையும் விட்னஸாகப் போட்டு அலைக்கழித்து... ஒவ்வொரு முறையும் பரப்பி வைக்கப்படும் பாத்திரங்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. இந்த சமயத்தில்தான் கோர்ட்டில் வேலைபார்க்கும் சண்முகநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் அப்பாவிடம் மாணவராய் படித்தவராம். அப்பா வாத்தியாராய் இருந்ததில் உள்ள நன்மைதான் அவராய் வந்து அறிமுகம் செய்து கொண்டு 'என்ன சங்கதி' என்று கேட்டுத் தெரிந்துகொண்டார்.

ஒரு வெள்ளைப் பேப்பரை என்னிடம் கொடுத்து, 'நான் சொல்லச் சொல்ல எழுதுங்க...'என்றார். நானும் எழுதினேன். 'கணம் கோர்ட்டார் அவர்கள் சமூகத்திற்கு... .... .... ஆகவே, கோர்ட்டார் உத்திரவின்பேரில், எனது சாமான்களை எ;பபோது வேண்டுமானாலும் தங்கள் வசம் சமர்ப்பிக்கத் தயாராய் இருக்கிறேன்... இப்படிக்கு....'

அடுத்த அரைமணி நேரத்திற்குள் கோணிப்பையில் அடைக்கப்பட்டிருந்த வீட்டுச் சாமான்கள் எங்கள் வீட்டில். இதற்குள் எனக்கு ஒரு மகன் பிறந்து அவனுக்கு வயதும் இரண்டு ஆகியிருந்தது. பாத்திரங்கள் சிலவை ஆங்காங்கு துருப்பிடித்துப் போயிருந்தன. எப்படியோ தொலைந்த அய்ட்டங்கள் கிடைத்த சந்தோஷத்தில் துருக்கள் கண்களில் உறுத்தவில்லை. கதை இன்னமும் முடியவில்லை ஐயா... மிச்ச சொச்ச...கதையையும் கேளுங்கள்....

திடீரென்று கோர்ட்டார் உத்தரவு வந்து, அவசர அவசரமாய் ஒரு குட்டிச்சாக்கினுள் கையில் அகப்பட்ட பாத்திரங்களை அள்ளிப் போட்டு, டிவி எஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோர்ட்டார் முன் சமர்ப்பித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஒரு வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது. 'சம்பவம் நடந்த தேதியச் சொல்லுங்க'

ஒவ்வொரு முறை உள்ளெ நுழையுமுன்பும், ஏட்டையா தனது பைலை விரித்துக் காண்பித்து, களவு போன நாள், உள்ளிட்ட விபரங்களை ஞாபகப்படுத்தியது நினைவுக்கு வந்தது.

'டிசம்பர் 23ம் தேதி சார்... வருஷம் அட எளவே! இந்த நேரத்திலா இது மறந்து போகும்? எண்பத்து ஏழா, எண்பத்து எட்டான்னு மறந்து போச்சே.. கடைசி நேர க்ராசிங்ல இப்படி மாட்டிக்கிட்டோமோ?

எனக்கு அடுத்த சாட்சியாக விசாரிக்கப்பட இருந்த வேதநாயகம் சார் வெளியே பதற்றத்துடன் ஃபைலை திருப்பிப் பார்த்தபடி இருந்தது போலிருந்தது.
'பாவம்! நம்ம தலையெழுத்துத் தான் இப்படி? அவருக்குமா..?

கோர்ட்டார் முன் பரப்பி வைக்கப்படாமல், குட்டிச்சாக்கினுள் நைலான் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் வேறு பயங்காட்டின. திடீரென்று சாக்கை அவிழ்த்து, மொத்த அயிட்டங்கள் அறுபத்துநான்கும் இல்லையென்றால் என்னையல்லவா களவாணிப்பயல் போல எல்லோரும் பார்ப்பார்கள்.

மாயாண்டியை விடக் கேவலமான ஜந்துவாக அல்லவா நினைப்பார்கள்?
இதற்குள் கணம் கோர்ட்டார் அவர்கள் குறுக்கிட்டு'இனி அடுத்த சாட்சியை விசாரிக்கலாம்' என்றவுடன்தான் எனக்கு மூச்சே வந்தது. கோர்ட்டாருக்கு பாவனையில் எனது பணிவைத் தெரிவித்தபடி, குட்டிச்சாக்கினையும் பூனைபோல தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

எதிர்ப்பட்ட வேதநாயகம் சார், 'பாக்கியம்! எனக்கு ஸ்கூல்ல பரீட்சை நேரம். லீவே தர மாட்டேன்னாங்க ஒரு மணிநேரம் பெர்மிசன் போட்டு வந்;திருக்கேன். என்று நாத்தழுதழுக்க கூறினார். நான் கையைப்பிசைந்தபடி நின்றேன்.
மாயாண்டி ரொம்பப்பணிவாய் இன்று நின்று கொண்டிருப்பது போலத் தோன்றியது. அவன் மீது கொஞ்சம் இரக்கம்கூட ஏற்பட்டது என்றே சொல்லலாம்.
'இந்தப் பாத்திரங்களைத் திருடிவிட்டு மூணு வருஷமா ஜெயிலிலே வேற இருக்கான்.. இதெல்லாம் இவனுக்குத் தேவைதானா?' என்று ஏட்டையாவிடம் குசுகுசுத்தேன்.

'அட நீங்க வேறே! அவன் பெயில்லே வெளியே போய்ட்டு அறுபது தடவை வேற வேற கேஸ்ல மாட்டி, உள்ளேயும், வெளியுமாத்தான் இருக்கான். மூணு நாளைக்கு மேல ஜெயிலுக்குள்ள இருந்ததா சரித்திரமே இல்ல..' என்று கொட்டாவி விட்டார் ஏட்டையா.

நான் அதிர்ந்து போனேன்.

அதற்குப் பிறகு பல தடவை இப்படித்தான்... கோர்ட்டார் உத்தரவின்பேரில் சாக்கு நிறையப்பாத்திரங்களோடு வருவதும், போவதும் எனக்குப் பழகிப் போயிருந்தது. நானும் இந்த இடைப்பட்ட காலத்தில் கோர்ட்டிற்குப் பக்கத்திலேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக்குடிபெயர்ந்தேன்.

ஒரு திங்கள்கிழமை பிற்பகலில் நான் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பஸ்ஸில் வரும்போது, நீதிமன்ற பஸ் நிறுத்தத்தில் வண்டி நின்ற வேளையில் மரத்தடியில் வேதநாயகம் சார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரைப் பார்த்தவுடன், குற்றவுணர்வில் எனது தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். 'நம்மைப்பார்த்தால் உலுக்கி எடுத்து விடுவாரே மனுஷன்!'

குடையை மடக்கியபடி என்னைப் பார்த்து வந்தவர்.' பாக்கியம்!நல்லா இருக்கீங்களா தம்பி! நம்ம கேஸ் விடியமாத்தான் வந்தேன்.' என்றார்.
'ஐயோ அப்படியா சார்! நீங்க இன்னமும் அலையறது எனக்குத் தெரியாதே சார்?' என்றேன் தவிப்புடன்.

'அத விடுங்க தமபி! இன்னிக்கும் வாய்தா தான். அடுத்த வெள்ளிக்கிழமை வரணும்! உங்ககிட்டே ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. நான் போன மாசம் ரிடையர்டு ஆயிட்டேன். அதனாலே இப்ப லீவு ப்ராப்ளம் இல்லே.. நிம்மதியா வந்துட்டுப் போயிட்டு இருக்கேன்... சிவகாமி நல்லா இருக்காளா?;;;....பையனுக்கு இப்ப வயசு என்னன்னு சொன்னீங்க....

அவர் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அட ஆண்டவா!

நான் சொன்னது சரிதானே சார் ... நீங்களே சொல்லுங்க.....

Sunday, May 1, 2011

நன்றி முத்துக்குமார்

வலைப்பூ உலகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த ரெண்டு நாளில் வேறு ஒரு மந்திர உலகத்திற்குள் புகுந்த மாதிரி இருக்கிறது.சென்னையிலிருந்து வேணு அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்.நூறு பேருக்கு குறையாமல் மெயிலில் தகவல் பரிமாற்றம் செய்திருப்பதாக கூறுகிறார். 104 டிகிரீ வெய்யில் அடிக்கும் நெல்லையில் ஒரு மத்தியான நேரத்தில் வண்ணதாசன் தொலைபேசியில் தொடர்ந்து எழுதுங்கள் நாறும்பூ என்று அன்பாய் வேண்டுகோள் விடுக்கிறார்.அதி காலையில் செல்போனில் மாதவராஜ் பெயர் display யில் தெரிகிறது.அன்போடு கை குலுக்குகிறார். உங்கள் ப்ளாக்கில் நானே போட்டோவை set செய்கிறேன் என்று உரிமையுடன் சொல்லி layout இல் சில மாற்றங்களை செய்கிறார்.அமெரிக்கா சென்று இருக்கும் மூத்த அண்ணன் ஆர்.எஸ்.மணி அங்கிருந்து உற்சாகமாக பேசுகிறார்.சென்னையில் இருக்கும் இன்னொரு அண்ணன் குமரகுருபரன் ஈமெயில் மூலம் விமர்சனம் செய்கிறார்.டாக்டர் ராமானுஜம் எழுதிய ஒருமணி நேரத்தில் comments கொடுக்கிறார்.சாத்தூரில் இருந்து அன்பு நண்பர் காமராஜ் என்னோடு இணைகிறார்.இன்னும் அறிமுகம் இல்லாத எத்தனையோ நண்பர்கள் பூங்கொத்துகளோடு வரவேற்கிறார்கள்.என்ன நடக்கிறது என்றே புரியாமல் கனவில் நடப்பது போல தான் உணர்கிறேன்.எழுதி ரெண்டு நாளில் சுமார் 250 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள் என்பது மிக பெரிய சந்தோசத்தை தருகிறது.என்னோடு இனி நீங்கள் பேசுவது குறைந்து விடும் என்று மனைவி உஷா பெரிதும் கவலைப்படுகிறாள்.சோம்பேறியாய் கிடந்த என்னை வலைப்பூ உலகத்துக்கு கொண்டு வந்து மண் தோண்டி செடியாய் வூன்றி பூவாளியால் கொஞ்சம் தண்ணீர் வூற்றி விட்டு சென்ற கவிஞர் முத்துக்குமார் ..உங்களுக்கு என் முதல் நன்றியைப் பதிவு செய்கிறேன்.