Sunday, June 5, 2011

அந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் ?

கடந்த வெள்ளிகிழமை (ஜூன் மூன்று ) பின்னிரவில் தொலைபேசி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.தோழர் பாலு தான் பேசினார்.முதலில் தொலைபேசியை எடுத்த என் மனைவி பேசினாள்.மறுநிமிடம் "அய்யயோ " என்று பதறினாள்.என்னிடம் ரிசீவரை கொடுத்தாள்.
...சந்தர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டார்னு உதயசங்கர் போன் பண்ணினான்..."அவரது குரலின் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பாலச்சந்தர் என்ற சந்தர் எங்களுக்கு அறிமுகமானது எண்பதுகளின் துவக்கத்தில்.
எங்கள் என நான் குறிப்பிட்டது நான், உதயசங்கர்,சாரதி, மாரிஸ், , ரெங்கராஜ் மற்றும் காலம் சென்ற தோழர்கள் சிவசு, முத்துசாமி ஆகியோரை தான்.கோவில்பட்டியில் நிஜ நாடக இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட காலம்.வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களில் எழுபதுகளிலேயே தலைநகருக்கு சென்று எதையாவது சாதிச்சு விடலாம் என்று சென்றவர் சந்தர்.

எண்பதுகளின் துவக்கத்தில் கோவில்பட்டி திரும்பினார்.எங்களுடைய வீதி நாடக இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.அதற்கு முன்பாகவே சென்னை கலைக்குழு தோழர் பிரளயனால் துவக்கப்பட்ட போது அதில் நாடக கலைஞராக நடித்த அனுபவம் அவருக்கு உண்டு.தென் மாவட்டங்களில் பல வூர்களில் எங்களின் ஸ்ருஷ்டி நாடக குழுவின் நாடகங்கள் நடத்தப்பட்ட போது அதில் சந்தரின் பங்கு பிரதானமானது. நாடகம் முடிந்து சாப்பிடும் போது அவரின் சிரிப்பு சத்தம் எப்போதும் எங்களை சூழ்ந்தபடியே இருக்கும். பொதுவாக சிரிப்பை வகைப்படுத்த முடியும் என்றாலும் ஒரு மனிதனை போல இன்னொரு மனிதன் சிரிக்க முடியாது அல்லவா ?சந்தரின் சிரிப்பும் அது போலத்தான். மனுஷன் வாய் விட்டு சிரிப்பார்.சக கலைஞரை கேலியும் கிண்டலும் அவரை போல யாரும் பண்ண முடியாது. எல்லாமே ரொம்ப இயல்பாக தான் இருக்கும்.

கோவில்பட்டியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் அனைத்துக்கும் தட்டி போர்டுகள் தயாரான நிலையில் ஓவியர்கள் இல்லை எனில் நானும் சந்தரும் தான் எழுதுவது உண்டு. நம்ம ஆட்களுக்கு தான் ரெண்டு பேரு கிடைத்தால் போதுமே ? அவர்களையே உண்டு இல்லை என்று ஆக்கி விட மாட்டார்களா ? கார்டூன் அருமையாக வரைவார் சந்தர். தட்டி போர்டுகளில் கூட அவரது எழுத்து ரொம்ப வித்தியாசமானது. மிக விரைவாக எழுதுவது அவரது பாணி. தட்டி போர்டுகளில் கருப்பு நிறம் பயன்படுத்துவது அவருக்கு பிடித்தமான ஒன்று. வெளியூருக்கு சென்றாலும் பிறர் எழுதிய தட்டி போர்டுகளை உற்று கவனிப்பது அவரது பழக்கம்.

"ந எப்படி போட்டுருக்கான் பார்த்தியா? " என்பார்.
பேப்பர் படித்தாலும் நாம் யாரும் படிக்காத ஒரு மூலையில் கிடக்கும் இத்துனூண்டு செய்தியை சொல்லி அதனை விரித்து விரித்து அதன் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை அவர் விவரிக்கும் போது நமக்கு ஏன் இது பிடிபடாமல் போயிற்று என்று தோன்றும்.

தோழர்கள் பலரும் பாரதியின் கவிதைகளை குறிப்பிடும்போது அவர் அடிக்கடி பாரதிதாசனின் கவிதை வரிகளை குறிப்பிடுவார். நம்ம ஆட்கள் பாரதிதாசனை படிக்கறது இல்லையே என்பார். எப்போது பேசினாலும் அவரின் பின்னணி இசை போல அவரது சிரிப்பு சத்தம் இருந்துகொண்டே இருக்கும்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் சென்னையில் உள்ள மேற்கு வங்க இளைஞர் விடுதியில் பணியில் சேர்ந்தார். சற்றே தாமதமான திருமணம் என்றாலும் அவரது மணவாழ்க்கை இனிமையானது என்றே சொல்லவேண்டும்.அவரது பெண்ணின் புத்திசாலித்தனம் பற்றி நான் கூறுவதை காட்டிலும் கிருஷி கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். "தம்பி இப்படி ஒரு பொண்ணை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.."

த.மு.எ.ச .மாநாடுக்கு செல்லும்போது எல்லாம் சந்தரை சந்திக்க தவறுவது இல்லை. மாநாட்டின் கலை இரவு நடந்து கொண்டு இருக்கும் போது, பூட்டி இருக்கும் ஒரு கடையின் படிகளில் அமர்ந்து பழைய கதைகளை மணிகணக்கில் பேசிக்கொண்டு இருப்போம்.

சென்ற மாதம் கோவில்பட்டி, நெல்லை வந்து எல்லா நண்பர்களையும் பார்த்துவிட்டு சென்றார்.இது தான் எனது கடைசி சந்திப்பு என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அன்பு தோழர் சந்தர் , எங்களின் மதிப்பு மிக்க பால்வண்ணம் தோழரின் அக்கா மகன் என்பது தனியான செய்தி. எதற்கும் கலங்காத தோழர் பால்வண்ணம் இன்று கண்கலங்கி அழுது விட்டார் என்று சென்னையில் இருந்து தோழர் ஜெயசிங் பேசும்போது எனக்குள் துக்கம் பீரிட்டு கிளம்புகிறது.

சந்தர் இனி எங்கே காண முடியும் அந்த சிரிப்பை ?

2 comments:

kashyapan said...

நாறும் பூ நாதன் அவர்களே ! திருச்சியிலிருந்து என் மகள் தொலை பெசி மூலம் பாலசந்தர் மரணம் பற்றிய செய்தியை தெரிவித்தார். எப்பேர்ப்பட்ட மனிதர்.சென்னை முத்து மூலமும், கிருஷி மூலமும் உறுதி செய்து கொண்டேன். நாம் இழக்கக் கூடாதவர்களில் ஒருவர் பாலசந்தர்---காஸ்யபன்

நாறும்பூ நாதன் said...

அன்பு தோழர் காஷ்யபன்,
உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன்.மதுரை நாடக பட்டறை 1987 ஆம் வருடத்தில் நடந்தது.எஸ்.வீ.சஹஸ்ரநாமம் , ராமானுஜம், சீனிவாசன் போன்ற நாடக ஆசிரியர்கள் நமக்கு பயிற்சி அளித்ததும் அதில் எங்கள் சிருஷ்டி நாடக குழுவில் தோழர் பாலச்சந்தரும் பங்கேற்றார் என்பதும் நினைவு இருக்கிறதா ? 5 நாட்கள் நடைபெற்ற அந்த நாடக பட்டறை அனுபவம் என்றும் மறக்க இயலாது.
அன்புடன்
நாறும்பூ