Wednesday, May 23, 2012

கோவில்பட்டி சங்கமம்

பால்யம் என்றும் இனிமையானது தான்.மனம் எப்போதுமே பால்ய நினைவுகளில் நீந்தும் போது துள்ளிகுளிக்கதான் செய்கிறது.இயந்திரதனமான வாழ்க்கையில் மனம் சோர்வுறும்போது பழைய நண்பர்களை தேடுகிறது. வங்கி வூழியர் சங்க மாநாட்டில் பழைய நண்பர்களை பார்க்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி மனசில் கொப்பளிக்கிறது.இப்படிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் எங்களோடு பணிபுரிந்த ஜெயந்தி மற்றும் ஆன்சிலா ஆகியோரை சந்திக்கும்போது கோவில்பட்டியில் பணிபுரிந்த பழைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்களேன் நாதன் என்று சொன்னபோது மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.ஆஹா ..இப்படி ஒரு ஏற்பாட்டை ஏன் நாம் பண்ணகூடாது என்று நண்பர் ஆறுமுகத்திடமும் ஆண்டியப்பனிடமும் கேட்டேன். அவர்களும் சந்தோசமாக பண்ணலாமே என்று சொன்னதும் மனம் அசைபோட துவங்கியது. கோவில்பட்டி சங்கமம் விதையாக மனசில் வூன்றியது அன்றுதான்.

உடனடியாக எங்கள் வழிகாட்டியும் இனிய தோழருமான பால்வண்ணம் அவர்களிடம் இது குறித்து பேசினோம்.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.பழய கோவில்பட்டி நண்பர்கள் அனந்தசங்கர், எஸ்.பெருமாள், லோகநாதன்,சரவணகுமார்,ஜோ பெர்னாண்டோ ,சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நண்பர்கள் கூடி பழய நண்பர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை சேகரிக்க ஆரம்பித்தோம். சில நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி ஏப்ரல் இருபத்து ஒன்பது நாம் கோவில்பட்டி நகரில் சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னபோது அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.சென்னையில் இருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் ரயிலுக்கு ரிசெர்வ் செய்து விட்டதாக ஜெயந்தி , ஆன்சிலா மற்றும் லதா தெரிவித்தார்கள். கோவில்பட்டியில் எங்கள் முன்னோடி தளபதி கோபாலகிருஷ்ணன் , வெற்றிலை ரசனை கொண்ட எங்கள் அன்பு நைனா முத்துவரதராஜன் ஆகியோர் தங்கள் வருகையை உறுதிபடுத்தி கொண்டார்கள்.
நண்பர்கள் லிஸ்ட் பெருகிக்கொண்டே போனது. கட் ஆப் வருஷம் எழுபத்தெட்டு என்பது போய் வர விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வரட்டும் என்று தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.
பழைய புகை படங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்.திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் பாலசுப்ரமணியன் தனது புகைப்பட பொக்கிசங்களை தபாலில் அனுப்பிவைத்தார்.சென்னையில் இருந்து சுவாமிநாதன், முரளி, கோவில்பட்டியில் இருந்து ரெங்கநாயகி, திருவனந்தபுரத்தில் இருந்து லதா என போட்டோக்கள் குவிந்தன.பழய புகைப்படங்களை பார்க்கும்போதே என் மனம் பழைய உலகிற்கு சென்று விட்டது. அட எனக்கு கூட தலையில் இவ்வளவு முடி இருக்கிறதா என்று சிரித்து கொண்டேன்.(எந்த படம் என்று கேக்காதீர்கள்..)

சாப்பாடு ஏற்பாடுகளை ஆண்டியப்பனும் வள்ளியும் கவனித்துகொண்டர்கள்.எங்கள் அன்பு தோழர் மில்க் ராமசுப்பு இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை..ராஜ்மஹால் மண்டப உரிமையாளர் ராஜேந்திரனை சந்திக்க ஏற்பாடு செய்தார். வழக்கமான வாடகையில் நான்கில் ஒரு பங்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அவர் சொல்லி விட்டார். பழய , மிக பழய நண்பர்களும் கூட வருவதற்கு ஆர்வம் காட்டியது தான் எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
முதல் நாள் இரவு நண்பர் ஆறுமுகம், ஜெயசிங் , மற்றும் கோவில்பட்டி தோழர்கள் உதயசங்கர், சாரதி, ரெங்கராஜன் ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை விடிய விடிய செய்தோம்.இரவு வள்ளிநாயகம் வீட்டில் அருமையான விருந்து சாப்பாடு...

இருபத்து ஒன்பது காலை ...
நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரவர் குடும்பத்தோடு வர ஆரம்பித்தார்கள்.எங்கும் ஒரே உற்சாகம்..பழைய நண்பர்களை பார்த்த உடனே தழுவி கொண்டார்கள்.வேறு எந்த கிளையிலும் இது சாத்தியமா என்று தெரியவில்லை..(இன்னும் வரும் ...)