Monday, October 10, 2016

"யாதோன் கி பாரத் " படம் பார்த்ததை நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான், நடராஜன் அங்கு வந்தான்.
" எந்த தியேட்டர்ல படம் பார்த்த..?" என்றான் என்னிடம்.
" நம்மூர் ராமசாமி தியேட்டர்ல தான்..ஏன் ?" என்றேன்.
" போலே போ..இதை எல்லாம் இங்க பார்க்கக் கூடாது..எங்க ஊரு தங்கம் தியேட்டர்ல பார்க்கணும்..அங்க பார்த்தாதான் பாத்தமாதிரி இருக்கும்.."
பீற்றிக் கொள்வான் அவங்க ஊர் தங்கம் தியேட்டர் பற்றி.
ஆசியாவிலேயே பெரிய கொட்டகையாம்..2500 பேரு உட்கார்ந்து பார்ப்பாங்களாம்...எங்கே இருந்து பார்த்தாலும், படத்தை நல்லா பார்க்க முடியுமாம்..முன்னால பெரிய மைதானம் மாதிரி இடம் கிடக்குமாம். பசங்க விளையாடலாமாம். கதை விட்டுக் கொண்டே இருப்பான் அவன்.
1981 இல் திருப்பத்தூரில் வேலை கிடைத்து சென்றபிறகு, மதுரை செல்லும் போதெல்லாம் அங்கே படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தணியாமல் இருக்கும்.
1982 என்று நினைக்கிறேன். மதுரைக்கு நண்பர்களுடன் பாக்கியராஜ் நடித்த " தூறல் நின்னு போச்சு" படம் பார்க்க தங்கம் தியேட்டர் போனோம். நீண்ட நாள் கனவு நனவு ஆகப் போகுது என்ற ஆசையுடன். டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன்.
அதன்பிறகு, தொண்ணூறுகளின் மத்தியில், அந்தப் பக்கம் சென்றபோது, தியேட்டர் மூடிக் கிடந்தது. பூட்டிய கதவுகளின் ஊடாக, அந்த தியேட்டரைப் பார்ப்பேன். நடராஜன் சொன்னதை எல்லாம் கற்பனையில் நினைத்துப் பார்ப்பேன். யாரிடம் கேட்டாலும், இன்னும் கொஞ்ச நாளில் திறந்து விடுவார்கள் என்று சொல்வார்கள். அப்போது எல்லாம் நம்பிக்கை இருந்தது. என்றேனும் ஒருநாள், ஒரு படம் இங்கே பார்த்துரணும் என்று.
எழுத்தாளர் சங்க அலுவலகம் அந்தத் தெருவில் தான் இருக்கிறது. அங்கு செல்லும் போதும் மூடிய கதவுகளின் வழியே பார்ப்பேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு , தியேட்டர் கை மாறிய போது, படம் பார்க்கும் ஆசையும் விழுந்த கட்டிடங்களைப் போலவே நொறுங்கிப் போனது.
இப்போது தியேட்டர் வளாகத்தில், நெல்லை ராயல் தியேட்டர் போலவே, வேறு ஒரு நிறுவனம் வந்து உட்காரப் போகிறது..
தங்கம் தியேட்டர் - என் வாழ்வில் கனவாகவே போய் விட்டது.
" என் சோகக் கதையைக் கேளு..தாய்க் குலமே.." என்ற பாடல் அந்த தியேட்டர் வாசலில் கேட்டது மட்டும் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஜோல்னாப்பை 
-----------------------
இலக்கியவாதிகளின் அடையாளமாக இன்றுவரை இருந்து வருபவை ஜோல்னாப்பைகள். ஆரம்பத்தில், கண்ணாடி..பின்னால் குறுந்தாடி..அதன் தொடர்ச்சியாய் ஜோல்னாப்பை..இன்னும் சிலர் இடதுசாரி சிந்தனையாளர்களின் அடையாளமாகவும் காண்கின்றனர்.
1990 இல் நெல்லையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடந்த போது, " நெல்லை நகரமே ஜோல்னாப்பைய்யர்களின் வருகையால் களை கட்டியுள்ளது " என்று தினமலர் நாளேடு எழுதியது.
ஒரு சிலருக்கு இது கர்ணனின் கவச குண்டலம் போல ஓட்டிப் பிறந்தது வோ என்பது போல இருக்கும். துவக்க காலத்தில், கோவில்பட்டியில் தோழர்.பால்வண்ணம் ஜோல்னாப்பையுடன் எப்போதுமே இருப்பார். நெல்லையில் ஜோல்னாப்பை இல்லாத கிருஷியை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் இருக்கும்போது வேண்டுமானால், அவரது மனைவியோ மகனோ பார்த்திருக்கலாம். கோவில்பட்டி நகரில், தோழர்.ஜவகர் ஜோல்னாப்பைக்குள் ஒரு பெரிய புதையலே இருக்கும். சில புத்தகங்கள்,ஒரு சின்ன டார்ச், ஒரு ஸ்டேப்ளர், கம் பாட்டில், தீக்கதிர்..இத்தியாதி..
ஜோல்னாப்பைக்காரர்களை ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போல பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். " அந்த ஆளுகிட்டே கொஞ்சம் கவனமா இருந்துக்கடே.." என்பார்கள்.
மிக எளிதாக, தோளில் போட்டபடி செல்லலாம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.
கோவில்பட்டி என்றாலே, கடலைமிட்டாய்,காரச்சேவு நினைவுக்கு வரும். நண்பன் உதயசங்கர் எடுத்து வரும் ஆவணப்படங்களின் விளைவாய் இலக்கியவாதிகளின் தலைநகரம் என்ற அந்தஸ்தும் கிடைக்கலாம். (எத்தனை பேரு ஏசிக்கொண்டு இருக்கிறார்களோ )
ஜோல்னாப்பைகள் நினைவும் வரும் அளவிற்கு, இங்கே ஜோல்னாப்பைகளை ஏராளமாய் தைத்துக் கொடுப்பவர் அவ்வையார் மணி.( இவர் பெயரே இது தாங்க.. இவங்க வீட்டில், தொடர்ந்து 5 பெண் பிள்ளைகள் பிறந்து, அவ்வையாரிடம் வேண்டி, விரதம் இருந்து இவர் பிறந்ததால், இவருக்கு அவ்வையார் மணி என்று பெயர் வந்தது )
சின்ன வயதில், வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு, பம்பாய் நகரம் சென்று அங்கே தையல் படித்து, திரைப்பட கலைஞர்களுக்கு எல்லாம் சட்டை,பாண்ட் தைத்துக் கொடுத்து இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் கோவில்பட்டி வந்து, "பம்பாய்" புகழ் தையல்காரராக விளங்கினார்.
பெல்ஸ், டைட்ஸ் என்று புதிய புதிய வடிவங்களில் பாண்ட்ஸ் தைத்துக் கொடுத்தவர் தான். நேரம் கிடைக்கும் போது, துண்டு விழும் மீதித் துணிகளில் அழகான ஜோல்னாப்பைகளைத் தைக்கத் துவங்கினார்.
நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினோம். தோழர் பால்வண்ணம் மொத்தமாக 10 பைகள் வாங்குவார். விளைவு ?
நண்பர் அவ்வையார் மணி இப்போது, ஜோல்னாப்பைகள் மட்டுமே தைத்து விற்பனை செய்து வருகிறார். தொழிற்சங்க மாநாடுகள், மாவட்ட,மாநில மாநாடுகள் என இவருக்கு ஆர்டர்கள் வந்து கொண்டே இருக்கும்.
கேரளா மாநிலத்தில் இருந்து கூட, இவருக்கு அழைப்புகள் வரும்.
விதவிதமான வர்ணங்களில் அழகுற வடிவமைப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. ஓரத்தில் சின்னதாய் பாரதியின் படம் தான் இவரது இலைச்சினை.
ஜோல்னாப்பை...அறிவுஜீவியின் அடையாளமோ என்னவோ, எடுத்துப்போக வசதியான இலகுவான பை.