அவனும் அவளும் (சிறுகதை)
வாசல் கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழையும் போது மணி 8.30ஐ த் தாண்டியிருந்தது. காம்பவுண்டுச் சுவருக்கும் வீட்டிற்குமான திறந்தவெளி முழுவதும் வேப்பிலைகள் சருகுகளாய் சிதறிக்கிடந்தன. காலையில் என்னதான் பெருக்கித் தள்ளினாலும், மாலையில் வீடு திரும்பும்போது பழுத்த இலைகள் உதிர்ந்து பெருகிக் கிடந்தன. துளிர்த்தலும் உலர்தலுமாய்....... அஞ்சல் பெட்டியைத் திறந்து, உள்ளிருந்த நாலைந்து தபால்களைக் கையில் எடுத்துக் கொண்டு, பூட்டினைத் திறந்தாள் அவள். ஹாலில் இருந்த டீப்பாயில் பையை வீசி விட்டு சோபாவில் சரிந்தாள். அவன் வர இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். சமயங்களில் இரவு 11 மணிக்குக் கூட வந்து "பெல்"லை அழுத்துவான். அப்போதெல்லாம் அரைத்தூக்கத்தில் வந்துதான் கதவைத் திறப்பாள். கை, கால்கள் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தன. நெற்றிப்பொட்டு விண் விண் னென்று தெறித்தது. யாராவது கொஞ்சம் டீ போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அரசு நன்றாக டீப் போடுவான். சனி, ஞாயிறு மாலைப் பொழுதுகளில் அவன் வீட்டிலிருந்தால் அருமையான தேநீர் போட்டு, கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு வருவான். அந்த தேநீரின் மணமும், சுவையும் அவளுக்குக்கூட வராது. அதில் அவனுக்குப் பெருமை கூட உண்டு. "எப்படி உன்னாலே மட்டும் இப்படிப் போட முடியுது?" அவள் வேண்டுமென்றே கேட்பாள். அது அவனைச் சந்தோசப்படுத்தும். அதற்காகத்தானே கேட்டதே? அவன் மென்மையாகச் சிரிப்பான். எல்லாத்துக்கும் இந்தச் சிரிப்புத்தான்.... அந்தச் சிரிப்பில் தான் தான் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கின்றோமோ என்று கூடத் தோன்றும் அவளுக்கு.
பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி தொடரின் அழுகைச் சத்தம் இவள் காதுகளில் எதிரொலித்துத் திரும்பியது. "ஏன் இவ்வளவு சத்தமாய் அழுகையைக் கேட்டு ரசிக்கிறார்கள்?" என்று எரிச்சலாய் வந்தது. எழுந்து அடுக்களைக்குச் சென்று அவசர அவசரமாய் டீப் போடத் தொடங்கினாள். தலைக்கு மேலே உயரத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகளைத் திறந்து தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைத்தாள். அரசு போன மாதம் டில்லி போயிருந்த போது வாங்கி வந்த பீங்கான் கோப்பைகள். பிங்க் கலர் பூப் போட்டவை. அவனுக்குப் பிடித்தது இந்த பிங்க் நிறம். சேலை கட்டினாலும், பிங்க் நிறத்தில் கட்டியிருந்தால் அவன் சந்தோசத்தில் கைகோர்த்து நடப்பான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஒரு லட்ச ரூபாய் செலவில் இந்த மாடுலர் கிச்சன் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விதவிதமான மரவேலைப்பாடுகளுடன்..... பாத்திரங்கள் வைக்க வசதியான கப்போர்டுகள்..... மென்மையான வெளிர் நிற பிங்க் நிற வர்ணம் பூசப்பட்ட மரக்கதவுகள். ஒரு லட்சத்திற்கும் மேலேயே தான் ஆகியிருக்கும்...
ஏழாம் வகுப்பு படிக்கும்போது அப்பா கட்டியிருந்த வீடே ஒரு லட்சத்திற்கும் குறைவு தான்.. வாசலில் ஒரு சின்ன வராண்டா. அப்பா சைக்கிள் நிறுத்த வசதியாக இருந்தது. அதன்பின் சின்னதாக ஒரு ஹால். பக்கவாட்டில் ஒரு பெட் ரூம். ஹாலை அடுத்து அடுக்களை. அடுக்களையில் பாத்திரங்கள் வைக்க போதிய ஸ்லாப் இல்லை என்பது அம்மாவின் நீண்டநாள் வருத்தமாயிருந்தது. கடைசி நேரம் கைக்கடிப்பில் அதில் வந்து இடி விழுந்தது. சுவர்களுக்கு வெள்ளை மட்டும் தான் அடிக்க முடிந்தது. விதவிதமான டிஸ்டம்பர் வர்ணங்கள் அடிக்க முடியாமலே போயிற்று. "ஆறு மாசம் கழிச்சி அடிச்சாத்தான் கலர் நல்லாப் பிடிச்சு நிக்கும்" யாரோ சொன்னதை அப்பா ஆறு வருசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டு அவர் இப்போது வீட்டைக் கட்டியிருக்க வேண்டாமோ என்று கூட அம்மா நினைத்ததுண்டு.
"பாரு..... வேகு வேகுன்னு சைக்கிள்ல போறத.... சின்னதா ஒரு செகண்ட் ஹேண்ட் டிவிஎஸ் 50 வண்டிய வாங்கலாம்ல....." அம்மா அவரை நினைத்துப் புலம்புவாள்.
"இப்பதான் வீடு கட்டியிருக்கு. அடுத்த லோன் உடனே வாங்க முடியாது.... வண்டி வாங்கினா பெட்ரோல் போடணும்... சைக்கிள மாதிரி காத்தடிச்சிட்டு ஓட்ட முடியும்னு நெனைக்கியா?" அப்பா சிரித்தபடி கூறுவார்.
தேநீர்க்கோப்பையை கையில் ஏந்தியபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள். டீப்பாயில் கிடந்த "ரிமோட்"டை எடுத்து பொத்தானை அமுக்கினாள்.
சுவரில் பெரிதாய் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவி உயிர் பெற்றது. சுட்டி டிவியி்ல் மிக்கி மவுஸ் விளையாடிக் கொண்டிருந்தது. அரசு நேரம் கிடைக்கும்போது சுட்டி டிவி பார்ப்பான். காலையில் அவன் பார்த்த சேனல்... அவளுக்கு காமெடிக் காட்சிகள் பிடிக்கும். திருநங்கைகளைக் கேலி செய்யும் ஒரு பழைய நகைச்சுவை ஓடிக் கொண்டிருந்தது. அவளுக்கு இதை ரசிக்க முடியவில்லை. சேனலை மாற்றினாள். ஒரு மலையாளச் சேனலில் மோகன்லாலும், தபுவும் நடித்த பாடல் காட்சி...... ரம்மியமான சுழலில் இருவரும் கை கோர்த்து நடந்து கொண்டிருந்தனர். மெலிதான தூரல் விழுந்து கொண்டிருந்தது. போன மாசம் அம்மா இங்கு வந்திருந்தபோது, ஹாலில் மாட்டியிருந்த இந்த டிவியைப் பார்த்து அசந்தே போனாள்.
"மதி இதென்னடி இப்படி சினிமா தியேட்டர் மாதிரி கேக்குது... டங்டங்னு... எவ்வளவு பெரிசா தெரியுது..... சினிமா பார்க்க தியேட்டருக்கே போக வேண்டாம் போல.... எவ்வளவு டீ ஆச்சி?"
அம்மாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அம்மாவும் அவளும் எல்லா சினிமாவும் பார்த்து விடுவார்கள். அவளை விடவும் அம்மாவிற்குத்தான் சினிமா ஆசை அதிகம். அம்மாவின் ஒரே பொழுதுபோக்கு இதுதான். ராயல் தியேட்டர், ரத்னா தியேட்டர், பாப்புலர் தியேட்டர்..... என மாறி, மாறி ஏதாவது ஒரு படம்.... சமயங்களில் பார்த்த படத்தையே பார்க்க வேண்டி கூட வரும். எல்லா வீடுகளிலும் டிவி பெட்டிகள், மாடியில் ஆன்டெனாக்கள் முளைக்கும் போது அம்மா தான் முதலில் நச்சரித்தாள். "ஏதாவது ஒரு பிளாக் அன்ட் ஒய்ட் டிவியாச்சும் வாங்கி மாட்டுங்களேன்..."
தெரு முழுக்க எல்லோரும் டிவி வாங்கிய பின்னணியில், ஒரு மாலை நேரத்தில் அப்பா சைக்கிளில் ஒரு டிவி பெட்டியை வைத்து உருட்டியபடி வந்து கொண்டிருந்தார். தம்பி வேணு பெட்டியை இறுகப்பிடித்தபடி அப்பாவிற்கு ஒத்தாசையாக வந்து கொண்டிருந்தான்.
புதுசாய் வாங்கிய டயனோரா கலர் டிவியைப் பார்த்து அம்மாவுக்கும் அவளுக்கும் தலைகால் புரியவில்லை.
"ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வர வேண்டிய தான..... சைக்கிள்ல உருட்டிட்டு வாறீக.... எசகு பிசகா சரிஞ்சி போச்சுன்னா..." அம்மா ஆச்சரியத்தில் கூவினாள். அன்று வீடே என்னமாய் கொண்டாட்டமாய் இருந்தது. அக்கா சக்தி, தம்பி வேணு, இவள் எல்லோருமே உற்சாகக்களிப்பில் இருந்தார்கள்..... அன்று இரவு முன் வராண்டா லைட் ரொம்ப நேரமாக எரிந்தது. அப்பா கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வழக்கம் போல அவள் ஒருநாள் உள்ளே நுழையும் போது தான் பார்த்தாள். ஹாலில் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவியை. இது எப்ப மாட்டியது?
செல்பேசியில் அவனை அழைத்தாள்.
"சும்மா தான்.... உனக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேன்னு நான் தான் இன்னிக்கு மதியம் வந்து மாட்டறதுக்கு ஏற்பாடு செஞ்சேன்....." அரசு சிரிப்பது தெரிந்தது. அவளுக்கும் சந்தோசமாகத்தான் இருந்தது. திருமணமான ஒரு வருடத்தில் எது பாக்கி இருக்கிறது..... எல்லாமே கச்சிதமாக அதனதன் இடத்தில் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இந்த வீட்டை அரசு வாங்கியிருந்தான். கடனில் முக்காவாசிக்கு மேலேயே கட்டியிருந்தான். காம்பவுண்டுச் சுவரையொட்டி விதவிதமான பூச்செடிகளும் குரோட்டன்ஸ்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அவன் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா பைக் கூட புதுமாடல் தான் முன்னமேயே வாங்கியிருந்தான். குளிர் சாதனப்பெட்டி, பெட்ரூமில் கிடந்த புதிய படுக்கை, கட்டில், இன்டக்சன் ஸ்டவ், வாஷிங் மெஷின்..... என எல்லாமுமே முதல் இரண்டு மாதங்களில் இருவருமே சேர்ந்து வாங்கியிருந்தார்கள். ஆயிரத்து ஐநூறு சதுர அடியில் நவீனமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டின் சகல அறைகளிலும் எல்லாமுமே தேவைக்கு மேலேயே அலங்கரிக்கப் பட்டிருந்தன.
அவன் சிரத்தையோடு சில காரியங்களைச் செய்யும்போது, அவளும் உடன்சேர்ந்து உதவி செய்வாள். சுவரில் ஆணி அடித்து, ரவி வர்மாவின் அந்த ஓவியத்தை மாட்டும்போது தூரத்தில் நின்று ரசிப்பாள்.
"எல்லாம் சரியாயிருக்கா?"
அவன் புருவத்தை உயர்த்திக் கேட்பான். அவள் ஆமோதித்துக் கையசைப்பாள். அவன் மென்மையாய் சிரிப்பான்... அதே சிரிப்பு!
"குட்டிப்பாப்பா மட்டும் வேண்டாம்னு ஏன் சொல்ற அரசு?" அவள் கண்களில் நீர் கோர்க்க கேட்பாள் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வாள்.
"ஏய் கழுதை! யாராவது பாப்பா வேணாம்னு சொல்லுவாங்களா..... கொஞ்சம்... கொஞ்சம் காலம் பொறு.... மூணு பிள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாம்.... ஓகேயா?" அவன் சிரித்தான். அவளை மென்மையாய் அணைத்தான். அவள் திமிறினாள்.
"போதும்..... விடு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுக்கறது? என்னால ஒத்தையில் இருக்கமுடியல..." அவள் கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.
"என்ன மதி இப்படிக் கோபப்படறீயே டா! இன்னும் ஒரு வருஷம் பொறுக்க மாட்டியா.... இப்ப நீ கன்சீவ் ஆனேன்னா.... ஆறு மாசத்துலே வேலைய விட வேண்டி வரும்.... அப்புறம் வேற கம்பெனிக்கு போகணும்னாலும் முடியாதுப்பா.... ஒரு வருஷம் நீ சும்மா தான் வீட்டுல இருக்கணும்.... அது இத விடப் போரா இருக்கும்பா... புரிஞ்சுக்கவே மாட்டிங்கியே...."
அவனும் சமயங்களில் இப்படிக் கோபப்படுவதுண்டு. இந்த வீட்டில் எல்லாம் இருப்பதாக அவன் நினைத்துக் கொள்வதை அவள் வெறுத்தாள். வீட்டில் எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் ஒழுங்கு மாறாமல் இருக்கின்றன. தரை கூட அழுக்காவதில்லை. எல்லா ஒழுங்கையும் சீர்குலைக்க ஒரு மழலைச் சத்தம் வேண்டும். தரையில் இரைந்து கிடக்கும் பொம்மைகள் வேண்டும். பின்வாசல் கொடியில் குழந்தைகளின் ஈர ஜட்டிகள் காய வேண்டும். ஈரம் சொட்டச்சொட்ட காட்டன் சட்டைகள் தொங்க வேண்டும்.
டீப்பாயில் கிடந்த அம்மாவின் கடிதத்தைப் பார்த்தாள். என்ன எழுதியிருப்பாள் என்று தெரியும். கவரை உடைக்க மனசு வரவில்லை. விலாவரியாய் எல்லாம் எழுதிவிட்டு " ஏதும் விசேசம் உண்டா?" என்று கேட்டு முடித்திருப்பாள்.
அரசு இன்றைக்கு சரியாக 9.30 மணிக்கு வந்து விட்டான் "தலை வலிக்குதா மதி?" அவன் அவள் அருகே அமர்ந்து அவள் தலையைக் கோதி விட்டான். பேண்ட், சமர்ட்டைக் கூட மாற்றாமல் உட்கார்ந்திருந்தான்.
"நான் ஒண்ணு கேப்பேன்... மாட்டேன்னு சொல்ல மாட்டீங்களே?" அவள், அவன் மடியில் தலை சாய்த்து கேட்டாள்.
"ம்.... சொல்லு..." அவன் கைகள் இன்னமும் தலையைக் கோதியபடியே இருந்தது.
"நான் ஒரு வாரம் எங்கம்மா வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா?"
அவள் கண்கள் பளபளக்க கேட்டாள். அவன் அவளை முதன்முறையாக வித்தியாசமாகப் பார்த்தான். பின் சிரித்தபடி தலையாட்டினான். ஆனால் அது வழக்கமான சிரிப்பு போல இல்லை.
Reply | Reply to all | Forward |
4 comments:
கதை ரொம்ப நல்லாருக்கு..
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html
குழந்தையின் அழுகை சத்ததிற்கும், அதை நிறுத்த அன்னையின் ஆனந்த கொஞ்சலுக்கும் எதுவும் ஈடாகாது. அறிந்தும் அறியாமலும் வாழும் நவீனயுகத்தை பிரதிபலிக்கும் கதை.
"ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட்" ...வெறுமையைப் பதிவு செய்யும் சித்திரம்
Post a Comment