Saturday, March 17, 2012

தகுந்த மதிப்பெண்கள் போடுவது எப்படி?

First Published : 17 Mar 2012 01:26:29 AM IST


ஜனவரி, பிப்ரவரி பிறந்துவிட்டால் போதும். பிளஸ் டூ பயிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? சுலபமாய் மதிப்பெண்கள் பெற நூறு டிப்ஸ், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்று ஊடகங்கள் விதவிதமாய் செய்திளை வெளியிடுகின்றன. பல்வேறு கல்வியாளர்களின் பேட்டிகள், உளவியல் நிபுணர்களின் பரிந்துரைகள்... மாணவர்கள் திக்கு முக்காடித்தான் போகிறார்கள். நல்லது.
இவற்றின் நீட்சியாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் பணி குறித்தும், விடைத்தாள் திருத்தும் மையங்களின் வசதிகள் குறைத்தும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் பிளஸ் டூ தேர்வுகள் இறுதி வாரத்தில் முடிவடைகின்றன. இந்த விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் கொடுக்கப்பட்டு வெவ்வேறு மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா மாவட்ட தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உள்ளன. மாவட்டத் தலைநகரில் எல்லா அடிப்படை வசதிகளும் அமைந்த பள்ளியை விடைத்தாள் திருத்தும் மையமாக அரசு தேர்வு செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியமானது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். நல்ல காற்றோட்டமான வசதி கொண்ட வகுப்பறைகள் இருக்க வேண்டும். பேப்பர் திருத்தும் காலம் சரியான கோடை காலம் என்பதால் மின் விசிறி பொருத்தப்பட்ட அறைகளாக இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். (தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பு, ஏப்ரல் இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்).
ஆசிரியர்கள் அமர்வதற்குச் சரியான இருக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் வகுப்பறை போதாமல், வேதியியல் ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய அனுபவங்கள் ஆசிரியர்களுக்கு உண்டு. மின் விசிறி இல்லாமல், உஸ்... உஸ்... என்று பேப்பரால் விசிறிக் கொண்டு தூண்களில் சாய்ந்தபடி பேப்பர் திருத்தும் வயதான ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.
ஆசிரியர்களுக்கு நல்ல குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரும் சூழலே நீடிக்கிறது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிவப்பு பால் பேனாக்களை அரசே வழங்கலாம். இதுநாள்வரை ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே வாங்கி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 12 விடைத்தாள்களும், மாலை 12 விடைத்தாள்களும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. நிதானமாய் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குறைந்த எண்ணிக்கை. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளியிலேயே இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, அவர்கள் குளிப்பதற்கும், கழிப்பறை செல்வதற்கும் அடிப்படை வசதிகளை பள்ளிகள் செய்து தர வேண்டும். பராமரிப்பில்லாத கழிப்பறைகள், குளியலறைகள் இருக்கும்பட்சத்தில் பெண் ஆசிரியர்களோ, ஆண் ஆசிரியர்களோ தங்குவதற்குப் பயந்து, தினமும் தங்களது ஊர் சென்று திரும்புவார்கள். இரவு 7 மணிக்கு தங்களது ஊர் பேருந்தைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விடைத்தாள்களைத் திருத்துவார்கள். "அவனுக்கு நேரம் சரியில்லை' என்பார்களே... அது இதுதான்' இந்த நேரத்தில் ஆசிரியரின் கையில் எவன் பேப்பர் கிடைக்கிறதோ... அவனுக்கு "நேரம் சரியில்லை'தான். அந்தி சாயும் வேளையில், கண்ணாடி போட்டபடி அவசர அவசரமாய்த் திருத்த முற்படும்போது, தவறு ஏற்பட வாய்ப்பு அதிகம்!

ஆசிரியர்கள் மனநிலை சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்திலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளுடன் ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படும் சூழலில், அதன் வெளிப்பாடு விடைத்தாளில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதுகூட பிரதான காரணங்களில் ஒன்று. ஆசிரியர்கள் இதை உணர வேண்டிய அதே நேரத்தில், பள்ளி நிர்வாகங்களும் இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையம், பேருந்து வசதி அடிக்கடி கொண்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமாக அமைய வேண்டும்.

திருத்தும் ஒவ்வோர் ஆசிரியரும், திருத்தும் வேளையில் தமது குழந்தைகளை நினைத்தபடி திருத்தினால் கவனம் சிதறாது. நிச்சயமாக மாணவச் செல்வங்கள் யாவருமே அவர்களது குழந்தைகள்தானே? இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அழைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பிளஸ் டூ ஆசிரியர்களில் 75 சதவிகிதம் பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபடாமலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர்களும் உள்ளனர். "மேலிட' செல்வாக்கு காரணமாக, அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாமல் தப்பித்து விடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது இவர்களிடம் பயிலும் மாணவர்கள்தாம்
. ஒரு வினாவுக்கு எப்படி விடை எழுத வேண்டும்? அதற்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படுகிறது என்பதை விடைத்தாள் திருத்தி அனுபவப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே தமது மாணவர்களுக்கு விளக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமானது என்றே கூற வேண்டும். எனவே, ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியும் ஆசிரியப் பணியின் ஒரு பகுதியே என்பதை உணர வேண்டும்.

போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. அரை மதிப்பெண்ணில் நல்ல பொறியியல் கல்லூரியை கோட்டை விடும் மாணவியும் உண்டு. எனவே, விடைத்தாளின் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மதிப்புமிக்கது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள்கொண்ட பள்ளியைத் தேர்வு செய்து முறைப்படி அறிவிக்கலாம். ஒவ்வோராண்டும் விடைத்தாள் திருத்தும் பணி என்பது நிரந்தரம் ஆனதால், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையம் என்ற கட்டடத்தை அரசே கட்டலாம். அதிலே அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர முடியும். ஏனைய நாள்களில், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் கூடங்களாகக்கூட அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மொத்தத்தில், விடைத்தாள் திருத்தம் மையங்கள், எல்லா அடிப்படை வசதிகளுடனும் இருந்தால் ஆசிரியர்கள் நல்ல மன நிலையில் பணி புரிய முடியும். நல்ல மனநிலையில் பணி புரிந்தால், மாணவர்களின் விடைத்தாள் நல்ல முறையில் திருத்தப்படும். அதைவிட வேறு "அதிர்ஷ்டம்' என்ன வேண்டும்?
நன்றி : தினமணி மார்ச் 17

No comments: