Monday, June 27, 2011

இலை உதிர்வதைப்போல...

இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை நாள் என்றாலே பிள்ளைகளைப்போலவே எனது மனமும் குதூகலிக்கத்தான் செய்கிறது. எதையும் நிதானமாகச் செய்யலாம். பதட்டத்துடன் காலைச்சாப்பாட்டை அவசர அவசரமாய் சாப்பிட்டு பள்ளிக்கு ஓட வேண்டியதில்லை. இரண்டு பேருக்கும் டிபன் கேரியரில் மதியச் சாப்பாட்டை எடுத்து வைக்க வேண்டியதில்லை. காலை டிபனையே பத்து மணிக்கு நிதானமாய் சாப்பிடலாம். சாப்பிடாமல் கூட இருக்கலாம். நம் இஷ்டம் தானே? மாலையில் எதிர்வீட்டு வினோதினியுடன் ஜவுளிக்கடைக்கு போகவேண்டும். அவளுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். 'நீங்களும் வாங்கக்கா!' என்று திரும்ப திரும்ப அழுத்தியதால் வருவதற்கு ஒப்புக்கொண்டேன.; பீரோவைத் திறந்து என்ன சேலை கட்டுவது என்ற யோசனையில் மனம் அலசத் தொடங்க, கைகள் சேலைகளைப் புரட்டியபடி இருந்தன. ஊடுவாக்கில் கை எதையோ ஒரு சேலையைப்பற்றி இழுக்க, கால்களுக்கிடையே வேறு ஒரு புடவை விழுந்தது. குனிந்து பார்த்தபோது நீல வர்ணத்தில் வெள்ளைப்பூக்கள் பூத்த சேலை அம்மா கடைசியாய் கட்டியிருந்த சேலை கைகள் அந்தச் சேலையை அனிச்சையாய் தூக்கின. சேலையைப் பிரித்த போது அம்மாவின் வாசனையை உணர்ந்தேன்.

இதேபோல் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்தான் அம்மா தனது கடைசி மூச்சுக்காற்றை விட்டுவிட்டு, நீலநிறப் புடவையில் மௌனித்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். என்றுமே ஏழு மணி வரை தூங்காத அம்மா, அன்று வெகுநேரம் தூங்குவதைப் பார்த்து நான் அம்மாவை எழுப்பியபோது அம்மாவின் ஜில்லிட்ட உடம்பு கீழே சரிந்தது. அறுபது வயதில் ஏன் அம்மா என்னை விட்டுச் சென்றாய்? வரும் தைப்பொங்கல் வந்தால் அம்மா இறந்து பத்து வருஷங்கள் ! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அம்மா இறக்கும் போது ரிஷிக்கு ஒன்பது வயதிருக்கும். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆச்சி இறந்து எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது, அழுவதற்குக்கூடத் திராணியற்று, விக்கித்துப் போய் ஒரு போர்வையில் முடங்கிக் கிடந்தான்.

அவனை அம்மா தானே வளர்த்தாள்! சிசேரியன் மூலம் அவன் பிறந்தபோது டாக்டருக்குப் பிறகு முதலில் அவனைத் தூக்கி எடுத்து உச்சி முகர்ந்தது அம்மா தான்! மூன்று வயசு வரை முழுசாய் அவனை வளர்த்தது அம்மா.. அவனைக் குளிப்பாட்டுவதில், மருந்து கொடுப்பதில், அவனோடு விளையாடுவதில், நர்சரி வகுப்பி;ற்குப் போகும்போது அவனை இடுப்பில் சுமந்தபடி தெருவில் வேடிக்கை பார்த்தபடி அழைத்துச் செல்வதில்... அம்மாவுக்கும் அவனுக்குமான பந்தம் மிகவும் இனிiமான தருணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்குப் போகும்போது ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகளை அம்மா நாய் அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சியிடம் காண்பிப்பான். 'குட்டி நாயை எடுத்துக்கொடு.. அதைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும்' என்று அடம்பிடிப்பான். அம்மா அவனுக்காக எதுவுமே செய்வாள். அம்மாவின் பொறுமை எனக்குத் துளியும் கிடையாது. அம்மாவிடம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டிருக்கிறேன். இது கூடக் கண்ணுக்குத் தெரியலையா' என்று நான் கேட்ட போதெல்லாம், அம்மா பதிலுக்கு ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்திருக்கிறாள். அதே மாதிரி தான் ரிஷியும் என்னிடம்கோபப்படுவான். 'என்னம்மா பாக்குறே! பக்கத்துல வச்சுக்கிட்டே தேடுறியே' என்பான். கண்ணாடியைப் போட்ட பின் தான் தெளிவாகத் தெரிகிறது உலகமே.. அம்மா கடைசியாய் படுத்த போது தலையணை அருகே மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குக் கண்ணாடியை ரிஷியின் அப்பா பத்திரமாக எடுத்து சாமி போட்டோவின் கீழே வைத்திருக்கிறார். அம்மாவின் மாத்திரை டப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. டயானில் மாத்திரைகள் மீதம் முப்பதும் அப்படியே இருந்தன. கடைசிக் காலத்தில் அம்மா எங்கே சென்றாலும் சேலைகளை எடுத்து வைக்கிறாளோ இல்லையோ, மாத்திரை டப்பாவும், கண்ணாடி கூடும் ஞாபகமாய் அவளது கைப்iயில் இடம் பெற்றிருந்தன.

இப்பொழுதெல்லாம் அம்மா அடிக்கடி கனவில் வருகிறாள். கிட்டே வந்து எதுவோ சொல்ல நினைத்து பின் எதுவும் சொல்லாமல் விலகி.... பால்வெளியில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு கிரகத்தைப் போல பிரகாசித்தும், மினுங்கியும் செல்வது போல இருக்கும். வீட்டிலே வேலை செய்யும் பணியாளிடம் அம்மா சுவாரசியமாய் கதை கேட்டுக்கொண்டிருப்பாள். சாப்பி;ட்டு மீந்து போனதை அல்லது பழைய தின்பண்டங்களை எதையாவது வேலை செய்யும் இசக்கியம்மாளுக்குக் கொடுக்கப்போனால் அம்மா சொல்வது அடிக்கடி நினைவிற்கு வரும். 'எது கொடுத்தாலும் சாப்பிடுற நிலையில் உள்ளதையே கொடு. வேலைக்காரிதானே என்று நினைத்து ஊசிப்போன காய்கறிகளையோ, கெட்டுப்போன சாப்பாட்டையோ கொடுக்காதே! அதைவிடப் பாவம் எதுவுமில்லே...' என்று அம்மா சொல்வாள். சாப்பாடு விஷயத்தில் அம்மாவின் தாராளம் என்னை பல சமயங்களில் வியக்க வைக்கும். ஐந்து பேருக்குச் சமையல் என்றால்கூட அம்மா எட்டு பேருக்குச் சாப்பிடுவது போல செய்வாள். திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டால் என்ன செய்வது... என்று விளக்கம் வரும். சமயங்களில் அது உண்மையாகக் கூட ஆகிவிடும். அண்ணனின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது 'சாப்பிட்டுப் போயேன் சுப்பையா' என்று அம்மா இயல்பாகச் சொல்வது வழக்கம். அவர்களும் பெரும்பாலும் மறுப்பு சொல்வதில்லை. அம்மாவின் சாப்பாட்டு ருசியை அனுபவித்தவர்கள் அவர்கள்! கோணங்கி வீட்டிற்கு வந்தால் தாராளமாய் பத்து, பனிரெண்டு முழு உளுந்தம் தோசைகளை ஒரு பிடிபிடிப்பான். அடுத்தவர்கள் முழு ஈடுபாட்டோடு ரசித்து உண்பது அம்மாவுக்கு இயல்பிலேயே பிடித்தமானதாக இருந்தது

. இப்பொழுதும் கன்னி விநாயகர் கோவிலில் எல்ஆர்.ஈஸ்வரியின் 'தாயே கருமாரி!' பாடலைக்கேட்கும்போது எனக்கு வ.உ.சி.நகர் நினைவிற்கு வந்து விடுகிறது. மதுரையில் வ.உ.சி. நகரில் நாங்கள் குடியிருந்த காலத்தில் நானும் அம்மாவும் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப்பாடல்கள் எல்லாமே கேட்டு, கேட்டு மனசுக்குள் மனப்பாடம் ஆகியிருந்த காலம்!. கால அடுக்கின் எல்லைகளை இசைப்பாடல்களே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தெருவில் என் வயதொத்த இளம்பெண்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் எனக்கு அம்மாவே மிகச்சிறந்த தோழி... நானும் அம்மாவும் பார்க்காத சினிமா கிடையாது. வீட்டிலிருந்து இரண்டு பர்லாங் தொலைவில் இருக்கும் சரஸ்வதி தியேட்டருக்கு இருவரும் பேசியபடியே நடந்து செல்வோம். கல்லூரியில் எனக்கு சீனியராகப் படிக்கும் உமாசங்கர் சைக்கிளிலேயே பின்னால் வருவதைக் கவனித்திருக்கிறேன். இதைக்கூட அம்மாவிடம் கூச்சமின்றிக் கூறியிருக்கிறேன். அம்மா எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்வாள். கல்லூhயில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் அம்மாவிடம் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு மிகச்சிறந்த தோழியைப் போல அம்மா எல்லாவற்றையும் ஆர்வமாய்க் கேட்பாள். புடவை எடுக்கவோ, ஸடிக்கர் பொட்டு, வளையல், தோடு வாங்கவோ, எனக்கான பேனா, நோட்புக்ஸ் வாங்கவோ கூட நான் அம்மாவையே துணையாய் அழைத்துச் செல்வேன். என் வாழ்க்கைப்பயணத்தில் இடையில் நின்றுவிட்ட சக பயணியாகவே அம்மாவை உணர்கிறேன்.

போன வாரம் வைரஸ் காய்ச்சலில் அவதிப்பட்டபோது, ரத்தப் பரிசோதனை செய்யச்சொல்லி டாக்டர் அட்வைஸ் பண்ணினார். அப்போது வழக்கமான பரிசோதனையுடன் சாக்கரைநோய் இருக்கிறதா என்பதையும் பார்த்து இல்லையென்பதை உறுதி செய்து கொண்டேன். அம்மாவிற்கு மட்டும் எப்படி வந்தது இந்த சர்க்கரை வியாதி.. கடைசி இரண்டு வருஷங்கள் மாத்திரை டப்பாவுடன் அம்மா இருந்த நினைவு வந்தது. வியாதி வந்து விட்டதே என்று அம்மா ரொம்ப வருத்தப்பட்டதும் இல்லை. அதைக்கூட எல்லாவற்றையும்போல இயல்பாக எடுத்துக்கொண்டாள்.

அம்மாவின் உலகம் ரொம்ப சிறியது. அப்பா, இரண்டு அண்ணன்கள், நான் மட்டுமே அந்த உலகில் உண்டு. திருமணத்திற்குப் பிறகு மருமகன், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்ற உறவுகளைத் தாண்டி வேறு யாரும் கிடையாது. தனது சொந்தங்களைக் கடந்து வெகு தூரம் வந்து விட்டவள். ஆனால் எல்லா மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவள். மனிதர்களை உணர்வுபூர்வமாக உணர்ந்தவள். சர்க்கரை வியாதியை ஒரு பொருட்டாகவே அம்மா எடுத்துக் கொள்ளாமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். 'எம்மா! பேசாம படுத்திறேன்... நான் பாத்துக்க மாட்டேனா?' என்பேன்.'நீ ஸ்கூல் விட்டு இப்பத்தான் வந்திருக்கே... கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு' என்றபடி அம்மா காப்பியைக் கலப்பாள். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் அம்மாவின் மணமான காப்பியைக் குடிக்க நாக்கு பரபரக்கும். விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால், மனம்தான் எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இருந்த ஜாலியான உணர்வு மனசைத் தொற்றிக் கொள்கிறது. காலையில் சீக்கிரமாய் எழுந்து காப்பி போட வேண்டாம்! வேலைக்காரிக்கு பாத்திரங்களை அவசர அவசரமாய் எடுத்துப்போட வேண்டாம.! எல்லாவற்றிற்கும் மேலாக சமையல் பண்ண வேண்டாம். எல்லாத்துக்கும் அம்மா இருக்கிறாள்... மனம் நிம்மதிப் பெருமூச்சில்.. ஆனந்த நித்திரை கண்களைக் கட்டிப்போடும்... எவ்வளவு பாதுகாப்பாய் உணர்ந்திருக்கிறேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படித்தானே தூங்கினேன்? முதல்நாள் இரவு 11மணிக்கு அம்மாதானே எல்லோருக்கும் தோசை சுட்டுக்கொடுத்தாள். நாளை மதியத்துக்குமேல் ஊருக்குக் கிளம்பணும்' என்று படுக்குமுன்பு என்னிடம் சொல்லிவிட்டுப் படுத்தாள். உலகத்தை விட்டே கிளம்பப்போவது யாருக்குத் தெரியும்? என்றுமே ஏழுமணி வரை தூங்காத அம்மா அன்று தூங்கினாள். யார் எதிர்பார்த்தார்கள் இதை? அப்பா விக்கித்துப் போனார். வெளியூர் போயிருந்த அண்ணன் உடல் பதைபதைக்க ஓடிவந்தான். அம்மா ஆழ்நத நித்திரையில் உறங்குவது போலத் தான் இருந்தாள். முகம் எலுமிச்சை நிறத்தில் கலங்கமற்று இருந்தது. யார் யாரோ வந்தார்கள். அம்மாவுக்கு நல்ல சாவு தான். படுக்கையில் கிடந்து சங்கடப்படாமல்... கொடுத்து வச்ச மகராசிதான்... யாரோ ஒரு வயதானவர் அண்ணனிடம் கூறிக்கொண்டிருந்தார். மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அதன்பின் எது நடந்தாலும் மனம் அதனைப் பக்குவமாய் ஏற்றிpருக்கும்.திடுதிப்பென்று நிர்க்கதியாய் விட்டுப்போனாயே அம்மா.

.ஒரு மாதத்திற்கு முன்பு அம்மா பேச்சுவாக்கில் சொன்னாள். 'மகள் மருமக எல்லோரும் வேலைக்குப் போயிட்டு இருக்கீக... படுக்கையில மட்டும் விழுந்துறக்கூடாது மீனா... யாரையும் தொந்தரவு படுத்தாம போய்ச்சேரணும்...பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்ற மாதிரி உதிர்ந்து போகணும்.' சொன்னது போலவே, இயல்பாய் உதிர்ந்து விட்டாள் அம்மா...வாழ்க்கையில் அம்மா ஜெயித்துவிட்டது போலவே தோன்றுகிறது. அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரு தெளிந்த நீரோடை போல சென்றுவிட்டது. சேலையைக் கட்டிவிட்டு கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் சாயல் எனக்குள் படிமமாய் உறைந்தது. நீ எங்கேயும் போகவில்லை அம்மா! எனக்குள்தான் இருக்கிறாய்!.

Sunday, June 26, 2011

ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்


திருச்செந்தூர் பாசஞ்சர் வண்டி வரும் நேரம் நெருங்கிவிட்டது.

செய்துங்கநல்லூர் ஸ்டேசன் மாஸ்டரிடம் எண்ணை வாங்கிக் கொண்டு சிக்னல் போட்டுவிட்டு கேபிள் ரூ;மைவிட்டு வெளியே வந்து கிழக்கே திரும்பிப் பார்த்தார் சாமிக்கண்ணு. எந்த நேரமும் ரயில்வே கேட் அடைக்கப்படும் என்ற அவசரத்தில் மோட்டார் சைக்கிள்களும் ;கார்களும் ஒலியெழுப்பியபடி வேகவேகமாய் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தன. காலை எட்டு முப்பது மணி ரொம்பவும் பரபரப்பான நேரம். ; கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் மாணவிகளும்; குழந்தைகளைச் சுமந்து செல்லும் பெற்றோர்களும் அரை டவுசர் அணிந்த சாமிக்கண்ணுவின் உருவம் கண்ணில்படுமுன் தண்டவாளத்தைக் கடந்து விடவேண்டும் என்ற படபடப்புடன் கரும்புகைகளைக் கக்கியபடி தலைதெறிக்க வாகனங்களை ஓட்டிச்சென்றனர். சாமிக்கண்ணு மனசிற்குள் சிரித்துக்கொண்டார்.

'போங்க... போங்க.. பதட்டப்படாம போங்க...'

யோசித்தபடி மெதுவாக ரயில்வே கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் தலையைப் பார்த்ததும் நூறடி தூரத்தில் வந்து கொண்டிருந்த பள்ளி வாகனங்கள் நீண்ட ஹார்ன் ஒலியை எழுப்பியபடி வேகமாக வரத் துவங்கின. தண்டவாளத்தைத் தாண்டிவிட்ட திருப்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சாமிக்கண்ணுவைப் பார்த்து 'தேங்க்ஸ் அண்ணாச்சி' என்றபடியே கையை உயர்த்திப் புன்னகைத்தவாறு சென்றனர். இது போன்ற சமயங்களில் சாமிக்கண்ணுவிற்கு சிரிப்புத்தான் வரும். தண்டவாளத்தைக் கடந்து வி;ட்டால் களிப்புடன் செல்வதும்ரூபவ் மாட்டிக் கொண்டால் அதுக்குள் இவ்வளவு அவசரமா என்பது போல முறைத்துப் பார்ப்பதுமான முகங்களைப் பார்த்துப் பழகிப்போய் விட்டது.

கேட் அருகே நின்றுகொண்டு அடைப்பதற்குத் தயாரான பாவனையில் நின்று கொண்டிருந்தார். வெளிர் பச்சை நிற மாருதி காரை ஓட்டி வரும் டாக்டரம்மா இன்று சீக்கிரமாய் கடந்து சென்றது ஆச்சரியம்தான். பழைய டுவீலர் வண்டியை புகை கக்கியபடி ஓட்டிவரும கொண்டை போட்ட டீச்சர் கூட இன்றைக்கு நேரத்தில் கடந்து சென்றது அதிசயம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் கேட் அடைப்பில் மாட்டிக் கொண்டு மனசிற்குள் முணுமுணுத்தவாறு காலைத் தரையில் தேய்த்துக்கொண்டு தவியாய் தவித்துக் கொண்டிருப்பவர்கள். சின்னப்பாப்பாவை இன்னமும் காணவில்லை. ஒரு வேளை முன்னதாகப் போயிருக்குமோ? இன்றைக்கு எப்படியும் பார்த்தாகணுமே என்ற கவலை சாமிக்கண்ணுவின் முகத்தில் தொற்றிக் கொள்ள கண்ணுக்கெட்டிய தூரம் வரை சைக்கிளில் வரும் சின்னப்பாப்பாவைத் தேடினார். விஷயத்தை நேற்றே சொல்லியிருக்கலாமோ என்று பட்டது. இன்றைக்குச் சொல்வது தான் சரி என்று மனசிற்குள் தோன்றியதால் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் சாமிக்கண்ணு.

கதவருகே நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் சாமிக்கண்ணுவை வியப்புடன் பார்த்தவாறே கடந்து சென்றனர் பள்ளி மாணவர்கள். ஒரு வேளை இன்றைக்கு லீவு போட்டுவிட்டதோ? மனம் சஞ்சலமடைந்தது அவருக்கு.

மூன்று வருடங்களுக்கு முன்பு விருதுநகர் பக்கத்திலிருந்து இங்கே மாற்றலாகி வந்த சாமிக்கண்ணுவிற்கு பாளையங்கோட்டை நகரத்திற்குள் இருக்கும் இந்த ரயில்வே கேட் ரொம்பவும் பிஸியான பகுதி என்பது வந்தபின்தான் தெரிந்தது. அங்கேயெல்லாம் ரயில் வரும்போது கேட் அடைத்தால் ஒரு சில மாட்டுவண்டிகள் நிற்கும். சமயங்களில் மணல் அடிக்கும் லாரிகள்; டிராக்டர்கள் நிற்பதுண்டு. வெயில் சுட்டெரிக்கும் அந்த கந்தக பூமியில் நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி; கருவேல மரச் செடியின் கீழே உட்கார்ந்து வெள்ளரிப் பிஞ்சுகளை தட்டில் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள் சிறுவர்களும் சிறுமிகளும். ரயில்வே கேட்டை சாமிக்கண்ணு மூட வரும்போது; அவர்கள் மனசுக்குள் குதூகலம் பொங்க வெள்ளரிப்பிஞ்சு தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டு தயாராக இருப்பார்கள். செம்மண் புழுதியைக் கிளப்பியபடி வந்து நிற்கும் லாரிக்காரர்களிடம் ஓடோடிச் செல்வார்கள்.

'அண்ணே! வெள்ளரிப்பிஞ்சுண்ணே! தட்டு மூணு p;வான்னேன்...ஒரு தட்டு வாங்கிக்கங்கண்ணே!'

காலையில் பதினோரு மணிக்கும் மதியம் இரண்டு மணிக்கும் வேப்பிலைப்பட்டிக்குச் செல்லும் ஜெயவிலாஸ் பஸ்ஸில்தான் சிறுவர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். பயணிகளை புளி மூட்டையாய் அடைத்து வரும் ஜெயவிலாஸ் வண்டி மூடிய ரயில்வே கேட் அருகே நின்றவுடன் வண்டியில் உள்ள பெரும்பாலோர் புழுக்கம் தாளாமல் கீழே இறங்கி விடுவதுண்டு. அந்த பத்து நிமிடங்கள்தான் சிறுவர்களின் இயங்கும் நேரம்.'அண்ணே! ஒரு தட்டு மூணு ரூபா! பிஞ்சுக்காயிண்ணே!'

'எக்கா! ஒரு தட்டு வாங்கிக்குங்கக்கா! மூணு ரூ;வாதாங்க்கா'

பஸ்ஸின் பக்கவாட்டில் சிறுமிகள் விற்றுக்கொண்டிருக்கும்போது பஸ்ஸிற்குள் லாவகமாய் ஏறும் சிறுவர்கள் தட்டுடன் கூட்டத்தில் மூண்டியடித்துச் சென்று சில நிமிடங்களில் விற்றுவிடுவார்கள். இடையன்குளம் மாரிச்சாமியின் மகன் தவசி வெள்ளரிப்பிஞ்சுகளை விற்பதில்லை. பெரிய பெரிய வெள்ளரிக்காய்களின் தோலைப் பக்குவமாகச்சீவி கத்தியால் நான்காய் பிளந்து அதில் மிளகாய்ப்பொடிரூபவ் உப்புப்பொடி தூவி; ஒரு காய் இரண்டு ரூ;பாய் என்று விற்றுவிடுவான்.

மாரிச்சாமி சாத்தூர் பஸ்-ஸ்டாண்டில் வியாபாரம் பார்ப்பதால் அந்த தொழில்நுட்பத்தை தவசி அங்கிருந்து இறக்குமதி செய்துவிட்டான். மற்ற சிறுவர்கள் நான்கு தட்டுகள் விற்கும் நேரத்தில் தவசி பத்து பதினைந்து ரூயஅp;பாய்க்கு வியாபாரம் பார்த்துவிடுவான்.

'ஏலேய் தவசி! நீ பொழைச்சுக்குவேலே...' சாமிக்கண்ணு சிரித்துக் கொண்டே கூறுவார். மற்றவர்களுக்கும் தவசியைப் போல விற்க முடியலையேங்கற ஆதங்கம் மனசிற்குள் இருக்கும். அவர்கள் தோட்டத்தில் விளைகிற பிஞ்சுகளை அன்றைக்கே விற்றால்தான் நாலுகாசு தேறும். காயாக வரும்வரை காத்திருக்க விடாது வயிறு. கோணிப்பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து விடுவார்கள்.

கேட்; மூடி திறந்து ஜெயவிலாஸ் வண்டி சென்றபின்; மயான அமைதி தான் நிலவும். அதன்பிறகு மாட்டுவண்டிக்காரர்கள்; லாரி டிரைவர்கள் வழிப்போக்கர்கள் யாரேனும் வாங்கினால்தான் உண்டு. மற்ற நேரங்களில் சாமிக்கண்ணு தான் அவர்களுக்கு பொழுது போக்கு நண்பன்.

'ஏட்டி மாரிக்கனி! நீ போன வருஷம் வரைக்கும் பள்ளிக்கூடம் போனீல்ல...இப்ப ஏன் போகலை...'

'ம் ... போகலை அவ்வளதான்...' மாரிக்கனி இழுத்தாள்..

'அதாண்டீ கேக்கேன்...ஏன் போகலை...நல்லா படிப்பீல்லா... இதுகளோட சேர்ந்தா நீ உருப்பட்டால தான்'

பீடியை இழுத்துக் கொண்டே சாமிக்கண்ணு; மாரிக்கனியின் தட்டில் இருந்து ஒரு பிஞ்சை எடுத்து டவுசரில் துடைத்துக்கொண்டார்.

'எங்கம்மாதான் படிச்சது போதும்னுட்டா! மாரிக்கனி சலிப்புடன் கூறினாள். :ஆமா..படிச்சு பெரிய்ய டீச்சர் வேலைக்குப் போகப் போறாளாக்கும்..' பேச்சியும்; காளியும் கிண்டல் செய்தார்கள்.

'அடச்சீ மூதிகளா படிக்காட்டியும் வாய்க்கு ஒண்ணும் கொறைச்சலில்லை.. போன வருஷம் பரீச்சையிலே அறுபது எழுபதுன்னு மார்க்கெல்லாம் வாங்கிருந்தீல்ல...இங்கிலீஸ்ல கூட பாஸாயிட்டயே....இதுகள மாதிரி படிப்பு மண்டையிலே ஏறலைன்னா எக்கேடும் கெட்டுத் தொலைன்றலாம். வெள்ளரிப் பிஞ்சைக் கடித்துக்கொண்டே சொன்னார் சாமிக்கண்ணு.

'தாத்தா! ரயில்வருது! ரயில்வருது! ரயில்வருது! ஓடு! ஓடு!' இசக்கியம்மாள் பயங்காட்டினாள்.

'அட எடுபட்ட சிறுக்கி! வந்தேன்னா கைய முறிச்சுப்புடுவேன்...ஆமா..' சாமிக்கண்ணு போலியாய் விரட்டுவார்.

அவரது திருநெல்வேலி பேச்சு பிள்ளைகளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஊருக்குப் போகும்போது மொத்தமாய் வெள்ளரிப் பிஞ்சுகள் வாங்கிக் கொண்டு போவார். பிள்ளைகள் ஆசையாய்க கேட்டதால் ஒருமுறை திருநெல்வேலி அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். 'இருட்டுக்கடை அல்வாடா' என்று பாடியவாறே தவசி அல்வாவை ஒருகை பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

'ஏலே டவுசர் அவுந்தூராம பாத்து ஆடுல்லே! அல்வா எப்டியிருக்கு?

விரலை நக்கியபடி' நல்லாத்தேன் இருக்கு...எங்க ஊரு கருப்பட்டி மிட்டாசு மாதிரியில்லே...' என்றான்.

சாமிக்கண்ணு எழுந்தவுடன் ஓட்டம் பிடிப்பான் தவசி.

சொந்த ஊருக்கு மாற்றலாகி வரும்போது பிள்ளைகளைப் பிரியமனசில்லாமல் தான் வந்தார் சாமிக்கண்ணு. கிழிந்த பாவாடையை இழுத்துக்கட்டிக்கொண்டு வெள்ளரிப்பிஞ்சுத் தட்டுகளோடு அலையும் மாரிக்கனியின் நினைவு அவ்வப்போது அவருக்கு வருவதுண்டு.

கேட்டை மூடும்போது இருபுறமும் பத்து பதினைந்து பேருக்கு மேலிருக்காது. 'சின்னப்பாப்பாவிற்கு உடம்புக்கு ஏதும் முடியலையோ என்னவோ' மனம் வெறுமையாய் தவிக்க கேபிள் ரூமை நோக்கி நடந்தார் சாமிக்கண்ணு. தினமும் நூற்றுக்கணக்கான ஆண்களும்; பெண்களும் பள்ளி மாணவர்களும் இந்தப்பகுதியைக் கடந்து சென்றாலும் சின்னப்பாப்பா அறிமுகமானது சுவாரசியமான சம்பவத்தில்தான்.

மாற்றலாகி வந்த புதிதில் ஒவ்வொரு முறை கேட்டை மூடித் திறக்கும்போதும் பெரும்பிரச்னையாகத் தான் இருந்தது அவருக்கு. ஒரு கேட்டை மூடிவிட்டு அடுத்த கேட்டை மூடும் போது உள்ளே வந்தவர்கள் தங்களை மட்டும் போகவிடுமாறு கெஞ்சினார்கள். சிலர் கோபப்பட்டார்கள். ரயில் சென்றவுடன் கேட்டைத் திறப்பதற்குள் தங்களது வாகனங்களைக் கிளப்பி ஒருவரையொருவர் முந்திக் கொண்டும்உரசிக்கொண்டும் செல்வோர்ரூபவ் எதிர்த்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் செல்லாமல் எதிரெதிரே முட்டிக்கொண்டு ஹார்ன் ஒலிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வார்கள். சாமிக்கண்ணுவிற்கு பழியாய்க் கோபம் வரும்.

'இவங்கெல்லாம் படிச்ச மனுசங்கதானா? எத்தனை முறை கூறினாலும் யார் காதிலும் எதுவும் ஏறவில்லை. போக்குவரத்து போலீஸ்காரரிடம் ஒருமுறை முறையிட்டு இரண்டு வாரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். பின் அவரும் வருவதில்லை. போன வருடத்தின் கோடைகாலத்தில் என்று ஞாபகம். இப்படித் தான் கேட்டை மூடிவிட்டு கேபிள் ரூயஅp;ம் பக்கம் பச்சைக் கொடியுடன் நின்று கொண்டிருந்தபோது பொறுக்கமாட்டாத அவசரக்குடுக்கைகள் சிலர் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தனர். அவசரம் அவசரம். எல்லோருக்குமே அவசரம் தான்! அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்ப வேண்டியதுதானே! நூறடி தூரத்தில் தண்டவாள வளைவில் ரயில் வந்து கொண்டிருக்கும்போதுதான்ரூபவ் வெள்ளைச் சீரூடை அணிந்த அந்தச் சிறுமி தனது சைக்கிளை சிரமமப்பட்டுத் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருப்பதை சாமிக்கண்ணு கவனித்தார். ஒரு நொடியில் வெலவெலத்துப் போனவர் விருவிருவென்று ஓடிவந்து 'ஏ பாப்பா! நில்லு.. நில்லுங்கறேன்ல..என்ன அவசரம்? வீ;ட்லே சொல்லிட்டு வந்திட்டியா? கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரயில் மிகுந்த இரைச்சலுடன் இருவரையும் கடந்து சென்றது.

படபடத்துப்போன சிறுமிக்கு பேச வாய்வரவில்லை. நடுங்கியபடியே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கேட்டின் இருபுறமும் வாகனங்களில் நின்றவர்கள் எதுபற்றியும் கவலையின்றி முதல் கியரில் 'டுர்....டுர்'.... என்று வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு சாமிக்கண்ணுவிற்காக பொறுமையிழந்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

கதவைத் திறந்து விட்டுப் பார்க்கும் முன்பே சிறுமி சைக்கிளில் சிட்டாய்ப் பறந்து விட்டாள். அன்று மாலை வெயில் சாயும் நேரத்தில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த பழனியுடன் சாமிக்கண்ணு பேசிக் கொண்டிருந்தபோது காலையில் பார்த்த சிறுமி சைக்கிளை உருட்டியபடி தன்னைப்பார்த்து வருவதை உணர்ந்தார். பத்து பதினோறு வயதிருக்கும். செழிப்பான வீ;ட்டுப் பிள்ளை என்பது முகத் தோற்றத்திலேயே தெரிந்தது.

'தாத்தா! ரொம்ப ஸாரி! காலைல ஸ்கூலுக்கு நேரமாச்சுங்கற அவசரத்தில வேகமா க்ராஸ் பண்ணினேன்! ட்ரெயின் வர்றதக்கவனிக்கல... உங்ககிட்டே சொல்லாம போயிட்டேன்.'
படபடவென்று பேசினாள் அவள்.

'பாப்பா! கேட் அடைச்சுட்டானா க்ராஸ் பண்ணவே கூடாது...அஞ்சு நிமிஷம் முன்னால கௌம்ப வேண்டியதானே?

'காலைல வீட்டிலே சொல்லிட்டுதான் வந்தேன். நீங்க எதுக்குக் கேட்டீங்க?'

சிறுமி கேட்டபோது சாமிக்கண்ணுவிற்கு 'ஏன் அப்படிச் சொன்னோம்னு' போயிட்டுது ஆத்திரத்தில் குழந்தைகள் கிட்டேகூட புத்தி கெட்டுதான் பேசித்தொலைச்சிருதோம்னு பட்டது அவருக்கு.

'உம் பேரு என்னம்மா? சைக்கிள் ஹேன்ட்பாரைப்பிடித்தபடி சாமிக்கண்ணு கேட்டார்.

'சௌம்யா சிக்ஸ்த் படிக்கேன். செயின்ட் மேரீஸ் ஸ்கூல்ல'

சௌம்யா வாய்க்குள் நுழைய மறுத்தது.

'இருக்கட்டும் நல்ல பேருதான்.. வீடு எங்கன இருக்கு;'
தியாகராசநகர்த் தெருவைச் சொன்னாள்.

இப்படி அறிமுகமான சின்னபாப்பா (பெயர் வாய்க்குள் நுழையாததால் சாமிக்கண்ணு சூட்டிய பெயர்) இடையிடையே சாமிக் கண்ணுவைப் பார்த்துப் பேசி விட்டுச் செல்லும் அளவிற்கு கலகலப்பாய் பழகியிருந்தாள்.

பெண்குழந்தைகளின் மீது சாமிக்கண்ணுவிற்கு தனி பிரியம் உண்டு. அவருக்கு இருப்பது மூன்றும் ஆம்பிளைப்பிள்ளைங்கதான். நாலாவதாய்ப் பிறந்த பார்வதி மீது பாசம் அதிகம் அவருக்கு. பத்தாம் வகுப்பிலே பெயிலாகிப் போனதால் அரளிவிதையை அரைத்துக்குடித்து அந்த இளம்பிஞ்சு இறந்து போனபோது நொறுங்கிப் போனார் சாமிக்கண்ணு. யாரைக்குற்றம் சொல்ல என்று தெரியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கி கரைந்து போனார். வெறித்து நோக்கிய கண்களுடன் உடல் விரைத்துக் கிடந்த அந்த இளந்தளிரின் உருவம் திடீரென்று கனவில் தோன்றும்போது தூக்கம் கலைந்து எழுந்து உட்காருவார். தூக்கமின்றி பல இரவுகள் இடைவிடாத இருமலையும் மீறிப் பீடிகளை புகைத்தவாறு நட்சத்திரங்கள் இல்லாத இருள்வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

வேப்பிலைப்பட்டியில் வெள்ளரிக்காய் விற்கும் மாரிக்கனியைப் பார்க்கும் போது பார்வதி ஞாபகம் வரும். இவளை மாதிர்pத்தான் நல்ல கறுப்பு பளபளவென்று மின்னும் கண்கள் கூட அவஜாடைதான். பெருமூச்செறிவார் சாமிக்கண்ணு. காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து. இந்தப் பத்து வருஷங்களில் அவரை ஒரு மாதிரி தேற்றியிருந்தது.

'என்ன வேய்! ஒரு மாதிரி நெல கொள்ளாம இருக்கீரு? கடைசி நாளுங்கற டென்சன்ல இருக்கீரா?'நுங்கு சீவிக் கொண்டிருந்த பழனிரூபவ் தலைப்பாகையை அவிழ்த்து மேல் கை காலெல்லாம் துடைத்துக் கொண்டே கேட்டார். ஆமா இன்னியோட கடைசீ தான்! நாளைலயிருந்து குப்புறப்படுத்து தூங்கவேண்டியதுதான்! அதுவுந்தான் என்ன பொழப்பு...'பீடியைப் பற்றவைத்துக்கொண்டார் சாமிக்கண்ணு.'காலைல ரொம்ப அவசரப்படுத்தினீரு... இள நொங்கா பத்தை எடுத்துப் பார்சல் பண்ணுன்னு... ஓலைல சுத்தி வச்சிருக்கேன்...யாருக்கு பிள்ளைகளுக்கா...?'பழனி தான் கேட்டார்..'நம்ம பிள்ளைக என்னைக்குச் சாப்பிட்டதுக....நம்மள எதிர்பார்த்து நிக்கற காலமெல்லாம் போயாச்சு....'பெருமூச்சுடன் புகையை விட்டார். சாமிக்கண்ணு. பார்வதிக்கு நுங்கு பிடிக்கும். வெறும் நுங்கைச் சாப்பிடுவதைவிட மடித்துக் கொடுத்த பனை ஓலையில் ஆழாக்கு பகநீரை ஊற்றி அதிலே நுங்கைப்பிய்த்துப் போட்டால் ஒரு சொட்டுக் கீழே விழாமல் உறிஞ்சுக் குடிப்பாள் பார்வதி. அவளுக்குப் பிடித்தமானதையெல்லாம் ஞாபகமாய் வாங்கித் தருவார்.'எனக்கு இங்கிலீசு வரமாட்டேங்குப்பா...'ஒரு முறை பார்வதி அழுதுகொண்டே கூறினாள். படிச்சது போதும்டா...முடிஞ்சத எழுது. மண்டைல ஏறலன்னா வுடு கழுதய..பொட்டப்புள்ளதான...படிச்சு என்ன செய்யப்போற...வெள்ளக்காரன் போனாலும் தரித்திரம் பிடிச்ச பயலோட இங்கிலீசு இருக்கறவன் உசிற வாங்குது...' சாமிக்கண்ணு மகளைத் தேற்றினார். கடைசியில் இங்கிலீசே அவளுக்கு எமனாகி விட்டது. இங்கிலீசு பாடத்தில் பெயிலாகி தோல்வியைத் தாங்கிக்க முடியாமல் இப்படிப் பண்ணிட்டுப் போனாளே...!. மாலை வெயிலின் வெக்கை குறை;நது லேசான காற்று வீசிக்கொண்டிருக்கும் போது அந்த பச்சை மாருதி கார் தண்டவாளம் அருகே பாதையை விட்டுக் கீழிறங்கி ஒதுக்குப்புறமாய் நின்றது.காரிலிருந்து இறங்கிய சின்னப்பாப்பர்'தாத்தா! நாங்க புதுசா கார் வாங்கியிருக்கோம்! வந்து பாருங்க!. காலைலே இந்த வழியாத்தான் போனோம். நேரமாச்சுன்னு பேச முடியல....'

மூச்சுவிடாமல் சாமிக்கண்ணுவைப் பார்த்துப் பேசினாள். எதிர்பாராமல் சின்னப்பாப்பாவைப் பார்த்த வியப்பில் சாமிக்கண்ணு விரைவாக வந்து சேர்ந்தார்.'கார் ரொம்ப ஜோரா இருக்கே! புதுசா?'காரைச் சுற்றி வந்தார். டிரைவர் சீட்டில் கண்ணாடி அணிந்த நடுத்தர வயது இளைஞர் அமர்ந்திருந்தார். சாமிக்கண்ணுவைப் பார்த்து சிரிக்க முயன்றார். 'ஆமா!புதுசு...நேத்துதான் வாங்கினோம்.: என்றவள் முன்பக்கம் வந்து'அப்பா! நான் சொன்ன தாத்தா இவங்க தான்! ரொம்ப நல்லவரு. இனிமே உங்க காரைப் பார்த்தவுடனே கேட்டை மூடாம போகவிட்டுத் தான் அடைப்பாரு...என்ன தாத்தா?' என்றாள்.'ஆமா!ஆமா!...' என்ன தாத்தா?' என்றாள். 'ஆமா! ஆமா!... என்ற சாமிக்கண்ணு பதில் கூறினாலும் துணிப்பையில் உள்ள நுங்கு பார்சலை சின்னப்பாப்பாவிடம் தரவா வேண்டாமா என்ற சஞ்சலத்தில் இருந்தார்.'தாத்தா இந்தாங்க கேக்!'சின்னப்பாப்பா நீட்டிய கேக்கை பவ்யமாய் வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு குழந்தையின் சந்தோஷ மனநிலையைக் குலைக்கும் வகையில் எதையும் சொல்லி விட வேண்டாம் என்று தோணியது. 'நாளைக்குப் பார்ப்போம் தாத்தா!'வேகமாகக் காருக்குப் பின்புறம் வந்து கதவைத் திறந்து ஏறப்போன சின்னப் பாப்பாவின் மென்மையான கரங்களை தனது தடிப்பேறிப்போன கைகளில் பிடித்து அன்பாய் ஒரு முத்தம் கொடுத்து 'போய்ட்டு வாடா' என்று வழியனுப்பினார். கண்கள் கலங்கியபடி மாருதி கார் புள்ளியாய் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தார். கேபிள் அறைக்குப் போகும்போது;'என்ன நுங்குப் பார்சலை பாப்பாட்ட கொடுக்கலையா?' என்றார். பழனி.'பார்சல் பாப்பாக்கு இல்லப்பா! மாரிக்கனிக்கு...'என்றவர் இந்தா! இந்த கேக்கிலே கொஞ்சம் எடுத்துக்க..' என்று கேக்கில் பாதியை எடுத்துக் கொடுத்தார்.'எந்த மாரிக்கனி? கேக்கை வாயில் போட்டவாறே பழனி சாமிக்கண்ணுவிடம் கேட்டார்.'இதுவா? வீட்டுக்குப் பக்கத்தில மாரிக்கனின்னு ஒரு பொட்டப்புள்ள சொல்லலையோ..'

செய்துங்கநல்லூர் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிய நம்பரைப் பெற்றுக் கொண்டு வரவிருக்கும் ரயிலுக்கான சிக்னலைப் போட ஆரம்பித்தார். கடைசி முறையாய் சாமிக்கண்ணு.

Sunday, June 5, 2011

அந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் ?

கடந்த வெள்ளிகிழமை (ஜூன் மூன்று ) பின்னிரவில் தொலைபேசி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.தோழர் பாலு தான் பேசினார்.முதலில் தொலைபேசியை எடுத்த என் மனைவி பேசினாள்.மறுநிமிடம் "அய்யயோ " என்று பதறினாள்.என்னிடம் ரிசீவரை கொடுத்தாள்.
...சந்தர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டார்னு உதயசங்கர் போன் பண்ணினான்..."அவரது குரலின் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பாலச்சந்தர் என்ற சந்தர் எங்களுக்கு அறிமுகமானது எண்பதுகளின் துவக்கத்தில்.
எங்கள் என நான் குறிப்பிட்டது நான், உதயசங்கர்,சாரதி, மாரிஸ், , ரெங்கராஜ் மற்றும் காலம் சென்ற தோழர்கள் சிவசு, முத்துசாமி ஆகியோரை தான்.கோவில்பட்டியில் நிஜ நாடக இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட காலம்.வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களில் எழுபதுகளிலேயே தலைநகருக்கு சென்று எதையாவது சாதிச்சு விடலாம் என்று சென்றவர் சந்தர்.

எண்பதுகளின் துவக்கத்தில் கோவில்பட்டி திரும்பினார்.எங்களுடைய வீதி நாடக இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.அதற்கு முன்பாகவே சென்னை கலைக்குழு தோழர் பிரளயனால் துவக்கப்பட்ட போது அதில் நாடக கலைஞராக நடித்த அனுபவம் அவருக்கு உண்டு.தென் மாவட்டங்களில் பல வூர்களில் எங்களின் ஸ்ருஷ்டி நாடக குழுவின் நாடகங்கள் நடத்தப்பட்ட போது அதில் சந்தரின் பங்கு பிரதானமானது. நாடகம் முடிந்து சாப்பிடும் போது அவரின் சிரிப்பு சத்தம் எப்போதும் எங்களை சூழ்ந்தபடியே இருக்கும். பொதுவாக சிரிப்பை வகைப்படுத்த முடியும் என்றாலும் ஒரு மனிதனை போல இன்னொரு மனிதன் சிரிக்க முடியாது அல்லவா ?சந்தரின் சிரிப்பும் அது போலத்தான். மனுஷன் வாய் விட்டு சிரிப்பார்.சக கலைஞரை கேலியும் கிண்டலும் அவரை போல யாரும் பண்ண முடியாது. எல்லாமே ரொம்ப இயல்பாக தான் இருக்கும்.

கோவில்பட்டியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் அனைத்துக்கும் தட்டி போர்டுகள் தயாரான நிலையில் ஓவியர்கள் இல்லை எனில் நானும் சந்தரும் தான் எழுதுவது உண்டு. நம்ம ஆட்களுக்கு தான் ரெண்டு பேரு கிடைத்தால் போதுமே ? அவர்களையே உண்டு இல்லை என்று ஆக்கி விட மாட்டார்களா ? கார்டூன் அருமையாக வரைவார் சந்தர். தட்டி போர்டுகளில் கூட அவரது எழுத்து ரொம்ப வித்தியாசமானது. மிக விரைவாக எழுதுவது அவரது பாணி. தட்டி போர்டுகளில் கருப்பு நிறம் பயன்படுத்துவது அவருக்கு பிடித்தமான ஒன்று. வெளியூருக்கு சென்றாலும் பிறர் எழுதிய தட்டி போர்டுகளை உற்று கவனிப்பது அவரது பழக்கம்.

"ந எப்படி போட்டுருக்கான் பார்த்தியா? " என்பார்.
பேப்பர் படித்தாலும் நாம் யாரும் படிக்காத ஒரு மூலையில் கிடக்கும் இத்துனூண்டு செய்தியை சொல்லி அதனை விரித்து விரித்து அதன் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை அவர் விவரிக்கும் போது நமக்கு ஏன் இது பிடிபடாமல் போயிற்று என்று தோன்றும்.

தோழர்கள் பலரும் பாரதியின் கவிதைகளை குறிப்பிடும்போது அவர் அடிக்கடி பாரதிதாசனின் கவிதை வரிகளை குறிப்பிடுவார். நம்ம ஆட்கள் பாரதிதாசனை படிக்கறது இல்லையே என்பார். எப்போது பேசினாலும் அவரின் பின்னணி இசை போல அவரது சிரிப்பு சத்தம் இருந்துகொண்டே இருக்கும்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் சென்னையில் உள்ள மேற்கு வங்க இளைஞர் விடுதியில் பணியில் சேர்ந்தார். சற்றே தாமதமான திருமணம் என்றாலும் அவரது மணவாழ்க்கை இனிமையானது என்றே சொல்லவேண்டும்.அவரது பெண்ணின் புத்திசாலித்தனம் பற்றி நான் கூறுவதை காட்டிலும் கிருஷி கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். "தம்பி இப்படி ஒரு பொண்ணை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.."

த.மு.எ.ச .மாநாடுக்கு செல்லும்போது எல்லாம் சந்தரை சந்திக்க தவறுவது இல்லை. மாநாட்டின் கலை இரவு நடந்து கொண்டு இருக்கும் போது, பூட்டி இருக்கும் ஒரு கடையின் படிகளில் அமர்ந்து பழைய கதைகளை மணிகணக்கில் பேசிக்கொண்டு இருப்போம்.

சென்ற மாதம் கோவில்பட்டி, நெல்லை வந்து எல்லா நண்பர்களையும் பார்த்துவிட்டு சென்றார்.இது தான் எனது கடைசி சந்திப்பு என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அன்பு தோழர் சந்தர் , எங்களின் மதிப்பு மிக்க பால்வண்ணம் தோழரின் அக்கா மகன் என்பது தனியான செய்தி. எதற்கும் கலங்காத தோழர் பால்வண்ணம் இன்று கண்கலங்கி அழுது விட்டார் என்று சென்னையில் இருந்து தோழர் ஜெயசிங் பேசும்போது எனக்குள் துக்கம் பீரிட்டு கிளம்புகிறது.

சந்தர் இனி எங்கே காண முடியும் அந்த சிரிப்பை ?