Sunday, May 1, 2011

நன்றி முத்துக்குமார்

வலைப்பூ உலகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த ரெண்டு நாளில் வேறு ஒரு மந்திர உலகத்திற்குள் புகுந்த மாதிரி இருக்கிறது.சென்னையிலிருந்து வேணு அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்.நூறு பேருக்கு குறையாமல் மெயிலில் தகவல் பரிமாற்றம் செய்திருப்பதாக கூறுகிறார். 104 டிகிரீ வெய்யில் அடிக்கும் நெல்லையில் ஒரு மத்தியான நேரத்தில் வண்ணதாசன் தொலைபேசியில் தொடர்ந்து எழுதுங்கள் நாறும்பூ என்று அன்பாய் வேண்டுகோள் விடுக்கிறார்.அதி காலையில் செல்போனில் மாதவராஜ் பெயர் display யில் தெரிகிறது.அன்போடு கை குலுக்குகிறார். உங்கள் ப்ளாக்கில் நானே போட்டோவை set செய்கிறேன் என்று உரிமையுடன் சொல்லி layout இல் சில மாற்றங்களை செய்கிறார்.அமெரிக்கா சென்று இருக்கும் மூத்த அண்ணன் ஆர்.எஸ்.மணி அங்கிருந்து உற்சாகமாக பேசுகிறார்.சென்னையில் இருக்கும் இன்னொரு அண்ணன் குமரகுருபரன் ஈமெயில் மூலம் விமர்சனம் செய்கிறார்.டாக்டர் ராமானுஜம் எழுதிய ஒருமணி நேரத்தில் comments கொடுக்கிறார்.சாத்தூரில் இருந்து அன்பு நண்பர் காமராஜ் என்னோடு இணைகிறார்.இன்னும் அறிமுகம் இல்லாத எத்தனையோ நண்பர்கள் பூங்கொத்துகளோடு வரவேற்கிறார்கள்.என்ன நடக்கிறது என்றே புரியாமல் கனவில் நடப்பது போல தான் உணர்கிறேன்.எழுதி ரெண்டு நாளில் சுமார் 250 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள் என்பது மிக பெரிய சந்தோசத்தை தருகிறது.என்னோடு இனி நீங்கள் பேசுவது குறைந்து விடும் என்று மனைவி உஷா பெரிதும் கவலைப்படுகிறாள்.சோம்பேறியாய் கிடந்த என்னை வலைப்பூ உலகத்துக்கு கொண்டு வந்து மண் தோண்டி செடியாய் வூன்றி பூவாளியால் கொஞ்சம் தண்ணீர் வூற்றி விட்டு சென்ற கவிஞர் முத்துக்குமார் ..உங்களுக்கு என் முதல் நன்றியைப் பதிவு செய்கிறேன்.

7 comments:

மாதவராஜ் said...

நாறும்பூ நாதன்,

ஜன்னலைத் திறந்து வைத்து இருக்கிறீர்கள். இனிக் காற்றை அனுபவியுங்கள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

venu's pathivukal said...

மிகவும் மகிழ்ச்சியடையும் உள்ளமான பால்வண்ணத்திடம் நேற்று மே தினக் கொடி ஏற்று நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களது வலைப்பூ பற்றிச் சொன்னேன்.

அவரைப் போன்றோரை உங்களது நவீன அறிவியல் தொழில்நுட்ப சாளரம் வழி பார்க்க வைக்க இயலாது என்பது சற்று வருத்தமான விஷயம் தான். சாளரம் இரண்டு வழி கொண்டது அல்லவா, உள்ளிருந்து வெளியேயும் அங்கிருந்து உள்ளேயும்..அவரது பார்வையும் உங்களுக்கு கிடைக்காது.

ஆனால் புதிய வேக இலக்கிய தாகத்தோடு கண்களையும், உடல் நலத்தையும் பாதித்துக் கொண்டாவது கணினி வாசிப்பில் புதியன தேடுவோருக்கு உங்களது வலைப்பூ ஓர் உற்சாக புதிய முகவரி.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கிறக்கமும், தோழர் உஷாவிற்குத் தோன்றத் தொடங்கி இருக்கும் நடுக்கமும் இன்னொரு பக்க விளைவு. தொலைவில் இருப்போரை வாழ்த்த வைக்கிற உங்களது எழுத்துக்கள், அருகில் இருப்போரை ஏக்கத்தோடு பார்க்க வைத்துவிடும். ஆனால் மெல்லுணர்வின் உபாசகரான உங்களை கோபித்துக் கொண்டுவிட யாராலும் இயலாது ...
என்றாலும், அழகான கையெழுத்தில் கையிட்டெழுதிய காலங்களில் யார் உங்களது முதல் வாசகராயிருந்தனரோ அவர்களது வாசிப்பு இன்பத்தின் பிரதிபலிப்பை இழந்துவிடாதிருப்பது உங்களது வலை பிரவேசத்தை மேலும் மெருகேற்றும்...

நேரத்தின் முடிச்சு உங்களது கையில் இருக்கட்டும்..அதன் மடியில் நீங்கள் விழுந்துவிடாமல்.

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

நாறும் பூ அவர்களே! நச்சினார்க்கினியன், பூந்துறை, சொல்லச் சொல்ல இனிக்கும் பெயர் நெல்லையில் தானே உண்டு. அற்புதமான இடுகை. வேணு தான் தகவல் தந்தார். உம் பின்னூட்டத்தையும் பார்த்தேன். "உங்க பிரண்டு பொண்டாட்டி பிள்ளைக இருக்கா இல்லயானு வந்து பார்த்துக்குங்க" என்று பூரணி சொன்னது உமக்கு மட்டுமில்ல. அது சரி அந்தக்காலத்தில் செம்மலரில் எழுதும்போது புனைப்பெயர் வேறாக இருந்ததோ! மகிழ்ச்சி தரும் வருகை. வாழ்த்துக்கள்---காஸ்யபன்

ஆடுமாடு said...

வாழ்த்துக்கள்.

ramanujam said...

நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.கையால் எழுதுவதற்கும் கணினியில் தட்டச்சுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?நான் எப்பவும் தட்டச்சுதான்.எனினும் நேரம் கிடைக்கும் போது கையால் எழுதும் சுகம் தனி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்வரவு , வாழ்த்துக்கள். :)

-கயல்