Sunday, August 13, 2017

துரை கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ‘‘ஆதிச்சநல்லூரில் 2004-ல் நிகழ்ந்த அகழாய்வின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். நிறுத்தப்பட்ட அகழ்வாய்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, அங்கு மறைந்திருக்கும் நகர நாகரிகத்தை வெளிக்கொணர வேண்டும்’’ என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் (தற்போது தூத்துக்குடி) இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூரின் சமீப வரலாறே வியப்புக்குரியது. வரலாற்றுப் பாடத்தில் நாம் படித்த ஹரப்பா நகரத்தில் தொல்லியல் ஆய்வு நடைபெற்றது 1920-ல். இறந்தவர்களின் நகரம் என்று சொல்லப்படும் மொஹஞ்சதாரோ நகரில் தொல்லியல் ஆய்வு நடைபெற்றது 1922-ல்.

இந்தியாவின் முதல் அகழ்வாய்வு

ஆனால், தொல்லியல் துறை என்றொரு துறை குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, அதாவது, 1876-லேயே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் புதையுண்டு கிடக்கும் பழம்பொருட்களைத் தோண்டி எடுக்க முடிவுசெய்தார். பெர்லின் நகரிலிருந்து கப்பலில் புறப்பட்டு, ரயிலில் நெல்லை வந்து, பின்னர் மாட்டுவண்டியில் நீண்ட பயணம் மேற்கொண்டு, ஆதிச்சநல்லூர் பரம்பிற்கு வந்து சேர்ந்தார். உள்ளூர் மக்கள் யாரும் தடுத்துவிடக் கூடாது என்ற நோக்கில், வரும்போதே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஸ்டூவர்ட் மற்றும் மாவட்டப் பொறியாளரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்து, பறம்பில் உள்ள கல்லும் மண்ணும் கலந்த களர் நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.
உள்ளூர் மக்கள், ‘பேய் அடித்துவிடும்’ என்ற பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, நிலத்திலிருந்து பல முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள், பழைய மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் புதையல்போல வெளிப்பட்டன. உட்கார்ந்த நிலையில் இருந்த எலும்புக்கூடுகளுடன், இறந்த மனிதர்களின் விருப்பமான உணவாக இருந்த சாமை, தினை, உமி போன்றவையும், இற்றுப்போன துணிகளும் இருந்தன. தொட்டவுடன் அவை பொலபொலவென உதிர்ந்துபோயின. தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி மீண்டும் மாட்டு வண்டி, கப்பல் உதவியுடன் தனது நாட்டில் பெர்லின் நகரில் உள்ள வோல்கார்குண்டே என்ற அருங்காட்சியகத்தில் கொண்டு சேர்த்தார். ஜாகோர் மேற்கொண்ட இந்த முயற்சியே இந்தியாவின் முதல் அகழாய்வு என்று கொள்ளலாம்.

கிழக்கிந்திய கம்பெனியின் முயற்சி

இதன் பிறகு, கால் நூற்றாண்டு கழித்து, 1903-ல், இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லாப்பிக்யூ என்பவர் இந்தியா வந்து, ஆதிச்சநல்லூர் பறம்பில் தோண்டி, அவர் பங்ககுக்குச் சில பழம்பொருட்களை எடுத்துச் சென்று, பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் வைத்தார்.
இப்படித் திறந்த மடமாய், இந்தியா இருந்தது. யார் யாரோ வந்து இங்கே இருக்கும் பழம்பொருட்களை எடுத்துச் செல்வதும், தங்கள் நாடுகளில் காட்சிப் பொருட்களாய் வைப்பதும் தொடர்ந்தது. இந்திய நாட்டைக் கொள்ளையடிக்க வந்த கிழக்கிந்திய கம்பெனியோ இது குறித்துக் கிஞ்சித்தும் அக்கறையின்றி இருந்தது. எனினும், நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்டூவர்ட், ஜாகோர் வந்து ஆய்வு செய்து பொருட்களை எடுத்துச் சென்ற விவரம் குறித்தும், பிரெஞ்சு அறிஞர் லூயிஸ் லாப்பிக்யு கொண்டு சென்ற பொருட்களைப் பற்றியும், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினார்.
அதன் பிறகே, விழித்துக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி, அதிகாரபூர்வமாக அலெக்சாண்டர் ரே என்பவரை, ஆதிச்சநல்லூர் அனுப்பி, ஆய்வு செய்யப்பணித்தது. அவர் தலைமையில் ஒரு குழு அகழாய்வு செய்து, பல்வேறு பொருட்களை எடுத்தது. இங்குள்ள புதைகுழிகளிலிருந்து மேலும் பல்வேறு எலும்புக்கூடுகள், இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 30 வகை மட்பாண்டங்கள் நான்கு அடி உயரம் கொண்டவையாக இருந்தன. இரும்பால் செய்யப்பட்ட போர்க் கருவிகள், கத்திகள், குறுவாள்கள், கைக்கோடரிகள் போன்ற பொருட்களும் கிடைத்தன. இங்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அலெக்சாண்டர் ரே, சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் ஒன்றை 13 படங்களுடன் 1913-ல் வெளியிட்டார்.

பொருநை நாகரிகம்

மொஹஞ்சதாரோ ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி, ‘மாடர்ன் ரெவியூ’ இதழில் ‘திராவிட நாகரிகம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘அண்மையில் சிந்து வெளியிலும், பலுசிஸ்தானிலும் நடைபெற்ற கண்டுபிடிப்புகள் இந்தியாவில் மிக தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து அறுந்துபோகாத ஒரு சங்கிலித் தொடர்போல திராவிடர்களின் பண்பாட்டுத் தொடர்பு உள்ளது’ என்று கூறி, ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி, சிந்துவெளித் தாழி போன்றவற்றையும் படங்களாய் பிரசுரித்துள்ளார். ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி பெரிய அளவில் நூல் எதுவும் வராத சூழலில், முதன்முதலில் சாத்தான்குளம் அ.ராகவன் 1980-ல், ‘ஆதித்தநல்லூரும், பொருநை வெளி நாகரிகமும்’ என்றதொரு (பொருநை-தாமிரவருணி) அரிய நூலினை எழுதினார். இப்போது மேலும் பல நூல்கள் வந்துள்ளன.
2004-ல், மீண்டும் ஆதிச்சநல்லூரில், டாக்டர் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், உதவி கண்காணிப்பாளர் சத்தியபாமா, தொல்லியல் உதவி ஆய்வாளர் டாக்டர் நம்பிராஜன், திருமூர்த்தி,பா.அறவாழி ஆகியோரும் ஈடுபட்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், செப்புப் பொருட்கள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில், பெண் உருவம், மான், நாரை, முதலை, வாழைமரம் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன. எனினும், இதன் ஆய்வு முடிவுகள் முழுமையாய் வெளியிடப்படவில்லை. மாபெரும் இடுகாடாய் ஆதிச்சநல்லூர் பறம்பு இருந்தது எனில், அருகிலேயே மக்களின் வாழ்விடங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா? அந்த ஊர்கள் எவை? வடக்கே பாயும் தாமிரபரணி நதிக்கு அப்பால் இருக்கும் கொங்கராயக்குறிச்சி என்ற ஊரில் தான் மக்கள் வாழ்ந்தார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
இங்கே கிடைத்திருக்கும் இரும்பாலான ஆயுதப் பொருட்களைப் பார்க்கும்போது, இரும்பின் பயனை உணர்ந்து, அதைப் பயன்படுத்தும் தொழில் நகரமாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முதுமக்கள் தாழியில் உள்ள தானியங்களைப் பார்க்கும்போதும், இற்றுப்போன துணிகளைக் காணும்போதும், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்த் தொழில் மற்றும் நெசவுத் தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. ஆதிச்சநல்லூரில் இருக்கும் 114 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இங்கு எடுக்கப்பட்ட பழம்பொருட்களை இங்கேயே பாதுகாக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அருங்காட்சியகம் ஒன்று 25 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கே ஒன்றும் கிடையாது. வாயில் இரும்புக் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. கட்டிடம் முழுவதும் உடைந்த மது பாட்டில்கள்.. உடைந்த ஓடுகள்.. கதவு உடைக்கப்பட்ட நிலையில் குளியலறை. அருங்காட்சியகத்தில் அலுவலர் நியமிக்கப்பட்டு, பொருட்களும் வைக்கப்பட்டிருந்தால், மக்கள் பார்த்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.
கீழடியின் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளும் மீண்டும் தொடரப்பட வேண்டும் என்பதே இந்தப் பகுதி தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. மத்திய அரசு செவி சாய்க்குமா?
-இரா.நாறும்பூநாதன்
தொடர்புக்கு: narumpu@gmail.com