Sunday, September 13, 2020

நாட்டார் வழக்காற்றியலின் தந்தை நா.வானமாமலை ------------------------------------------------------------------------------------- வைணவ கோவில்களில் வைணவப் பிராமணர்களுக்கு உதவ " தாதர் " என்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியினர் உண்டு. அவர்களை சாத்தானியர்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் மாலைகள் தொடுப்பது,தெய்வங்களின் ஊர்வலத்தில் தீவட்டி தூக்கி செல்வது, நாமக்கட்டி செய்யப்பயன்படுத்தும் வெள்ளைக்களிமண் உருண்டைகள், குங்குமம் தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். மடப்பள்ளிகளில் பிரசாதம் தயாரிக்கவும் இவர்கள் உதவுவார்கள். நெல்லை மாவட்டம் நான்குனேரியில் இந்த சாத்தானியர் குடும்பத்தில் பிறந்தவர் நா.வானமாமலை. பள்ளிக்கல்வியை நான்குனேரியிலும், ஏர்வாடியிலும் கற்ற நா.வானமாமலை, கல்லூரிப் படிப்பிற்கு நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். கல்லூரியில் மிக சிறந்த இலக்கிய நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேரா.அ.சீனிவாச ராகவன்.(சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ) பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, காங்கிரஸ்காரர் வைத்யநாதய்யர் தொடர்பு ஏற்பட்டது. அதனால், மாணவர் இயக்கத்தில் ஈடுபாடு வந்தது. பின்னர், ஆசிரியராக பணியாற்றினார். அரசுப்பணியை உதறி விட்டு, 1947 இல், நெல்லையில் ஸ்டுடண்ட்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட் என்ற தனிப்பயிற்சி நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார். இந்த டுடோரியல் மையத்தில் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மற்றும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் ஆகியோரும் பகுதி நேரமாக பணிபுரிந்தனர். சுதந்திரமாக இருந்த நா.வா.அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் வெளிப்படையாக ஈடுபட்டார். நெல்லை கொக்கிரகுளத்தில் முதல் வார்டில் நா.வா.வும், இரண்டாவது வார்டில் தோழர்.சு.பாலவிநாயகமும் நகராட்சி கவுன்சிலர் பதவியில் வெற்றி பெறுவது வழக்கம். 1961 இல், கலை இலக்கிய பெருமன்றத்தின் துணை தலைவராக இருந்த நா.வா. அவர்கள் உருவாக்கிய நாடோடி இலக்கிய குழுவில் தோழர்கள்.கு.சின்னப்ப பாரதி, எஸ்.எஸ்.போத்தையா, எஸ்.எம்.கார்க்கி போன்றோர் இருந்தனர். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957 இல் நடைபெற்றபோது, ஒரு கருத்தரங்கு நடத்த கம்யூனிஸ்ட் கட்சியில் தீர்மானித்தார்கள். கட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி " தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாட்டார் பாடல்களை சேகரியுங்கள் " என்று நா.வா.அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதுவே இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. மக்கள் மத்தியில் இந்த நாடோடி இலக்கிய குழு சென்று நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்தது. ஏற்றம் இறக்கும் விவசாயிகள்,நாற்று நடும் பெண்கள், சலவை தொழிலாளர்கள் என எல்லா உழைப்பாளி மக்களிடமும் சென்று, அவர்களோடு வாழ்ந்து,உணவு உண்டு, அவர்களின் வாய்ப்பாட்டுக்களை எழுத்தில் பதிவு செய்தனர். இப்படி தொகுத்த பாடல்களை " தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் " என்ற பெயரில் நூலாக கொண்டு வந்தார் நா.வா. அதற்கு முன்பு இது போன்ற பாடல்களை தொகுத்தவர்கள், பாடல்களில் இருந்த கொச்சையான சொற்களை திருத்தி எழுதினார்கள். மேலும், பாடல்களை சேகரித்தவரின் பெயர்,இடம் எதுவும் இடம் பெறவில்லை. இதற்கு மாறாக, நா.வா.தொகுத்த பாடல்கள் தொகுப்பில், எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டார். பாடல்களை சேகரித்த தோழர்களின் பெயர்,ஊர் போன்றவற்றையும் எழுதி, இது ஒரு கூட்டு முயற்சி என்பதை அறியும் வண்ணம் நூலை வெளியிட்டவிதம், அனைவரையும் கவர்ந்தது. சங்க இலக்கிய நூல்களின் ஏட்டுசுவடிகளை தேடித்தேடி அலைந்து பதிப்பித்த உ.வே.சா. அவர்களை போல, நாட்டுப்புற மக்கள் வாய்மொழியாக பாடி வந்த ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதை,கட்டபொம்மு கதை, வீணாதி வீணன் கதை, முத்துப்பட்டன் கதை என கதைப்பாடல்களை தேடி தேடி தொகுத்தவர் பண்பாட்டுப் போராளி நா.வா.அவர்கள். அவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த அவரது மாணவர் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் நா.வா.பற்றி கூறும்போது, " நா.வா.என்ற மார்க்சியவாதி, அறிவால் ஆலமரமாகவும், பண்பால் வாழை மரமாகவும் விளங்கியவர். தன்னருகில் தன் பக்கக்கன்றுகளுக்கு இடம் கொடுத்து வளர்க்கும் வாழைமரம் போன்று தாம் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியனவற்றின் வாயிலாக இளம் ஆய்வாளர்களை உருவாக்கியவர். அவர்களை படிக்கவும்,எழுதவும், விவாதிக்கவும் தூண்டினார். அவர்கள் எழுதும் கட்டுரைகளை படித்து திருத்தினார். வாழை மரம் தனக்குரிய நீரையும் உரத்தையும் தன் பக்கக் கன்றுகளுடன் பகிர்ந்து கொள்வதைப்போன்றதாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தது " என்று சொல்கிறார். தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பேரா.நா.ராமசந்திரன் அவர்கள் நா.வா.வின் இன்னொரு முக்கிய மாணவர் ஆவார். இந்திய தத்துவம், பண்பாட்டியல் ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி முறை மகத்தானது. வேதாந்த பிரபஞ்சம் என்னும் நூலுக்கு அவர் எழுதிய விமர்சனம் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவையும் வரலாற்றுணர்வையும் புலப்படுத்தும். இவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த ஆய்வாளர்கள், ஒப்பாரி பற்றியும், நாட்டுப்பாடல்களில் மழை பற்றியும், கிராமப்புற தெய்வங்கள் பற்றியும், தமிழ்நாட்டு விதவைகள் பற்றியும்,தமிழ்நாட்டுப் பளியர்கள் பற்றியும், இலங்கைக்கு குடிபெயர்ந்த மக்கள் பற்றியும், தமிழ்நாட்டு தத்துவங்கள் பற்றியும், பவுத்த,ஜைன, சைவ தத்துவ போராட்டங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சமூகத்திற்கு இவரது பங்களிப்பினை அறிந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
பாரம்பரிய விளையாட்டுக்கள் ------------------------------------------------ " நாங்கல்லாம் அந்தக் காலத்துல பம்பரம்,கோலிக்காய், பாண்டி,பல்லாங்குழி ன்னு விளையாடிட்டு இருந்தோம்..ஒங்களை மாதிரி கிரிக்கெட் எல்லாம் வெளையாண்டது இல்லம்மா..இப்ப என்னடான்னா கிரிக்கெட் கூட நீங்க வெளையாடுறது இல்ல..பொழுதன்னைக்கும் அப்பா செல்லை எடுத்து நோண்டிக்கிட்டே இருக்கீக.." வீடுகளில் இப்படியான பரவலான குரலை கேட்க முடிகிறது. நூலக இயக்குனர் உதயசந்திரன் சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால கொண்டாட்டம் நடத்துங்கள் என்று. மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் யோகாசனப்பயிற்சி,பாரம்பரிய விளையாட்டுக்கள்,ஓவிய பயிற்சி , கழிவு பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்குதல் பயிற்சி, கதை சொல்லல் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என்று சுற்றறிக்கை விட்டார். பாளையங்கோட்டையில் உள்ள மைய நூலகத்தில் தினமும் சுமார் 100 முதல் 150 பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவ,மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றது இனிய அனுபவம். பாரம்பரிய விளையாட்டுக்களான பாண்டியாட்டம், பல்லாங்குழி, கிளித்தட்டு, கோலிக்காய் போன்ற விளையாட்டுக்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதெல்லாம் பொய் என நிரூபித்து காட்டினார்கள். விளையாட்டின் விதிமுறைகள் ஒரு சில தெரியவில்லையே தவிர, சொல்லி கொடுத்ததும் உற்சாகமாய் பாண்டி கட்டம் வரைந்து விளையாட ஓடு ஒன்றையும் கண்டெடுத்து விளையாட ஆரம்பித்து விட்டனர். நூலகத்தின் திறந்த வெளியெங்கும் " ரைட்டா, தப்பா ?" என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. அம்மாக்கள், பாட்டிகள், தாத்தாக்கள் என பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், அரங்கின் இன்னொரு மூலையில்,சாக்பீஸால் வரையப்பட்ட தெப்பக்குளம் வடிவிலான தாயக்கட்டத்தில் நான்கு மாணவிகள் அமர்ந்து தாயக்கட்டைகளை உருட்டி " தாயம், ஈராறு,.." என சொல்லியபடியே விளையாடிக்கொண்டிருந்தனர். உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள், புளியங்கொட்டைகள் போன்றவற்றை விளையாடும் காய்களாக பயன்படுத்தி கொண்டனர். வலதுபுறம், மரத்தால் செய்யப்பட்ட பல்லாங்குழியில், சோவிகளால் நிரப்பி இரு மாணவிகள் விளையாட, சுற்றிலும் நாலைந்து மாணவிகள் விளையாட்டை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். தனக்கான குழியில் இருந்து ஐந்து காய்களை எடுத்து ஒவ்வொரு குழியாய் போட்டபடி வந்து இறுதியில் காலியாய் இருக்கும் குழியை தடவி விட்டு அடுத்த குழியில் இருக்கும் காய்களையும், அதன் எதிரே இருக்கும் குழியில் இருக்கும் காய்களையும் எடுத்துக்கொள்ளும் ஆட்டக்காரரின் விரல் அசைவுகளை நுட்பமாக கவனித்துக்கொண்டிருந்தனர். இடையிடையே " கள்ளாட்டம் ஆடுதியோ .." என்ற குரல்களையும் கேட்க முடிந்தது. ஆம்பளைப்பயலுவலை சும்மா சொல்லக்கூடாது. விளையாட்டின் உத்திகள் மரபிலேயே இருக்கும்போல. பம்பரத்தை வாங்கியவுடன் கயிறை எடுத்து சுற்ற ஆரம்பித்து விட்டனர். சுற்றும் பம்பரத்தை கயிற்றால் சுண்டி மேலே தூக்கி " கோஸ்" என்று சொல்லியபடி கேட்ச் பிடித்தார்கள். இன்னொரு பக்கம், கிளித்தட்டு கட்டங்கள் வரைந்து இரண்டு அணிகளாய் பிரிந்து கிளிகள் ஐவர், அவர்களை பிடிக்கும் பொறிகள் ஐவர் என விளையாட்டு துவங்கியது... ஒருவன் சாதுரியமாக கட்டங்களை தாண்டி, " கிளி பறக்குது " என்றபடியே ஓட ஆரம்பிக்க, இன்னொருவன் அவனை துரத்திப்பிடிக்க பின்னாலேயே ஓடினான். ஐம்பது வயது பெண்கள் இருவர், பெண் குழந்தைகளுக்கு " பூப்பறிக்க வருகிறோம்.." விளையாட்டை சொல்லிக்கொடுக்க, பிள்ளைகள் அவற்றை கச்சிதமாக உள்வாங்கிக்கொண்டு, கோடு போட்டு விட்டு, " பூப்பறிக்கவருகிறோம் பூப்பறிக்கவருகிறோம், யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க, ராணியைஅனுப்பபோகிறோம் ராணியைஅனுப்பபோகிறோம்; எந்த பூ வேண்டும்…எந்த பூ வேண்டும், மல்லிகைப் பூ வேண்டும் மல்லிகைப் பூ வேண்டும் " என்று விளையாட, மொத்தக்கூட்டமும் அவர்களை நோக்கி திரும்பியது. ஸ்கிப்பிங் விளையாட்டு கேட்கவே வேண்டாம். இப்போதும் குழந்தைகளின் விளையாட்டு தான். இரண்டு பசங்க கயிற்றை சுற்ற, நடுவே இருக்கும் பெண் குதித்து குதித்து விளையாட வேண்டும். இதில் சமயங்களில் ஜோடியாகவும் குழந்தைகள் குதிப்பதுண்டு. இதில் வேடிக்கை என்னவெனில், ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டை 15 நிமிடங்களுக்கு மேல் விளையாடவில்லை. விரும்பிய விளையாட்டை தேர்வு செய்து விளையாடி, அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, அடுத்த விளையாட்டை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். யாரும் இதை கட்டாயம் விளையாடு என சொல்லவில்லை. அவர்களாகவே தேர்வு செய்து, அவர்களே விளையாடுகின்றனர். உண்மையில், தற்போது கோடை வகுப்புகள் என்ற பெயரில், ஸ்கெட்டிங் ,நடனம்,இசை,நீச்சல்,யோகா, ஹிந்தி பயிற்சி என குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவது எல்லா நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் வேறு. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றால், பசங்களை எங்காவது சேர்த்து விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அல்லது போட்டிகள் நிரம்பிய உலகில், தங்களின் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்து ஈடு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறில்லை. தங்களின் குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது என்பதை தெரிந்து அதில் சேர்த்து விடுகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. பெற்றோர் பெரும்பாலும், தங்களின் விருப்பதையே குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். குழந்தையின் தனித்திறமையை பெற்றோர்களோ அல்லது ஆசிரியரோ தான் கண்டறிய வேண்டும். அவனுக்கு ஓவியம் வரைய ஆர்வம் இருக்கும் பட்சத்தில், அவனைப்போய் கராத்தே விளையாடு என்று கட்டாயப்படுத்தினால், அவன் வேண்டாவெறுப்பாக சேர்வான்.( கவனிக்க : விளையாட மாட்டான். ) விருப்பத்திற்கு மாறாக, அவை எல்லாமே கண்டிப்பு நிறைந்த இன்னொரு வகுப்பாகவே மாறும். வருடம் முழுவதும் பாடங்கள், டியூசன், தேர்வுகள்,காலை நேர பதட்டங்கள் என மன அழுத்தத்துடன் இருக்கும் மாணவர்கள், தேர்வு முடிந்தவுடன் இந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைக்கு செல்ல விரும்புகிறார்கள். வெளியூரில் இருக்கும் ஆச்சி, தாத்தா வீட்டுக்கோ, அத்தை,மாமா வீட்டுக்கோ சென்று அங்கு இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி, கிணற்றில் குதித்து நீச்சல் படித்து, நுங்கு தின்று, பதநீரை பட்டையில் குடித்து மகிழ விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முற்றிலும் மாறுபட்ட சூழல்..விரும்பிய விளையாட்டை விளையாடனும் என்பது மட்டுமே. விளையாட்டை விளையாடும்போது மட்டுமே, குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு, பொறுமை, வெற்றி தோல்வியை சமமாய் பாவிக்கும் தன்மை போன்றவை ஏற்படும். பொதுத்தேர்வில் தோல்வி அடையும்போது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருவாவதற்கு காரணமே அவர்கள் யாருமே பள்ளியில் விளையாடுவதில்லை. படிப்பு..படிப்பு..படிப்பு..மட்டுமே. விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமே, உடல் ஊக்கம் மட்டுமின்றி, தோல்வியும் ஒரு அனுபவமே என்பதை மாணவன் உணர்வான். பாம்பு கட்டம் விளையாட்டில் வரும் ஏணியும்,பாம்பும் வாழ்க்கையில் வரும் ஏற்றங்களும், இறக்கங்களும் என்பதை அவர்கள் உணர்வார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த இரண்டு ஆச்சிமார்கள், ஒரு கட்டத்தில், பிள்ளைகள் எழுந்து ஓடியதும் அவர்களே உட்கார்ந்து தாயக்கட்டைகளை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டனர். விளையாட்டு அவர்களை உள்ளிழுக்க ஆரம்பித்து விட்டது. மொத்தத்தில், இந்த கோடை காலம், மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இது போன்ற விளையாட்டுக்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், அவர்களை செல்பேசியில் இருந்தும் தொலைக்காட்சியில் இருந்தும் சற்றே தள்ளி நிற்க வைக்கலாம். ------------------------------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்
தமிழறிஞர் சாத்தான்குளம் ராகவன் (1902 -1981 ) ---------------------------------------------------------- பேரா.தொ.பரமசிவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், அவர் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு தமிழறிஞர் பெயர் சாத்தான்குளம் ராகவன் என்பதை நெருங்கிப் பழகியவர்கள் அறிவர். தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை எழுதியவர் அவர் என்று சொல்வார். பின்னாட்களில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலைப் பார்த்தபோது, மிகப்பெரும் வியப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ராகவன் துவக்கத்தில் ஆசிரியர் வேலை தான் பார்த்தார். பின்னர், ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் துவக்கப்பட்டபோது அதற்கு மேலாளர் பொறுப்பிற்கு சென்று விட்டார். பின்னர், ஜீவானந்தம் அவர்களின் தொடர்பால், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார். " அறிவு " என்ற இதழை நடத்திய அனுபவம் உண்டு. குடும்ப சூழல் காரணமாக இலங்கை செல்ல வேண்டியதாயிற்று. கொழும்பு நகரில் ஒரு நூலகத்தில், " திருநெல்வேலி காசுகள் " என்றொரு நூலை படித்து ஆச்சரியம் அடைந்தார். கொற்கையில் கிடைத்த காசுகள் பற்றி ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த அந்த நூல் அவரின் வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசின் தொல்லியல் ஆய்வு துறை இணை இயக்குனர் சண்முகநாதன் என்பவரின் தொடர்பால், மேலும் மேலும் இது போன்ற ஆராய்ச்சி நூல்களை படிக்க ஆரம்பித்தார். மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த ராகவன், கொற்கைக்கு பயணம் மேற்கொண்டார். ஒருகாலத்தில், கொற்கை துறைமுக நகராக இருந்தது. தற்போது கடல் உள்வாங்கி, கொற்கை என்பது ஒரு சிறிய கிராமமாக இருப்பதை அறிந்து வியப்புற்றார். கொற்கை குறித்து ஆய்வாளர் கால்டுவெல் எழுதிய நூல்களை படித்தார். கொற்கை குறித்தும், முதன்முதலில் இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் குறித்தும் நூல் எழுதினார். அவை கோநகர் கொற்கை, ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் ஆகியன. ஆதிச்சநல்லூர் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவே. பண்டை தமிழர் பயன்படுத்திய மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், பயன்படுத்திய உலோகங்கள், உமி,தானியங்கள்,இரும்பாலான ஆயுதங்கள் போன்றவற்றை பற்றி எல்லாம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அலெக்சாண்டர் ரே எழுதிய குறிப்புக்களோடும், படங்களோடும் விளக்கமாய் எழுதியிருப்பதை காணமுடியும். இவர் திருநெல்வேலியின் மகத்தான புகைப்பட கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் நெருங்கிய நண்பர். இசக்கி அண்ணாச்சி நெல்லை சந்திப்பின் அருகில் உள்ள உடையார்பட்டியில் ஸ்டூடியோ வைத்திருந்தார். இவர் எழுதிய " தமிழர்களின் அணிகலன்கள் " என்ற நூலுக்கு முகப்பு படம் வரைந்து தருவதாக இசக்கி அண்ணாச்சி சொல்லி இழுத்தடித்துக்கொண்டே வந்தார். அவ்வ்ளவு எளிதாக எல்லாம் இசக்கி அண்ணாச்சியிடம் படத்தை வாங்கி விட இயலாது. (தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்..நூலுக்கு அட்டைப்படம் வாங்க அவர் அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும் ) படத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார் சாத்தான்குளம் ராகவன். இசக்கி அண்ணாச்சி இதுபற்றி பேசும்போது " தம்பி..நானும் நாளைக்கு,நாளன்னைக்கு ன்னு சொல்லிட்டே இருந்தேனா..ஒரு நாள் ராத்திரி வந்தவன் படத்தை தந்தா தான் ஆச்சு..ன்னு வீட்டிலேயே படுத்துக்கிட்டான். ராத்திரி பதினோரு மணிக்கு வரைய ஆரம்பிச்சு நாலு மணிக்கு முடிச்சு தந்தேன்..கூடவே இருந்தான் ராகவன்..மனுஷன் தூங்காம பேய் மாதிரி முழிச்சுருந்து படத்தை பார்த்து " நல்லா வந்துருக்கு ன்னு " பாராட்டி விட்டு, பேப்பர்ல சுற்றி, மொத பஸ்ல போயிட்டான் " என்று சிரியாய் சிரித்தார். இவர் எழுதிய பிறநூல்கள் தமிழரின் கப்பல் கட்டும் கலை, திருவிளக்குகள், தமிழரும் தாமரையும், தமிழரும் படைக்கலன்களும் போன்ற 15 நூல்கள். தமிழர்களின் கலை,பண்பாட்டு வரலாற்றை எழுதியவர்களுள் மயிலை சீனி வேங்கடசாமி க்கு அடுத்தபடியாக சாத்தான்குளம் ராகவன் அவர்களை உறுதியாய் சொல்லலாம். ஜனசக்தி இதழில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் ராகவன். இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியாது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போனார். தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்த இந்த தமிழறிஞரின் பெயர் பெரிய அளவில் பேசப்படாதது வருந்தத்தக்க விஷயமே.
இன்னொரு ஜாலியன் வாலாபாக் ----------------------------------------------------- " தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 13 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியானது வேதனையளிக்கிறது. எனினும், இந்த ஆலையை தொடர்ந்து இயக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் ." துப்பாக்கி சூட்டிற்கு மறுநாள், லண்டனில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ரொம்ப கூலாக அறிக்கை விட்டார். அவருக்கு தெரியும் இதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று. 1997 இல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 165 பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோதும், 1999 இல், வானொலி நிலைய ஊழியர்கள் 11 பேர் மயங்கி விழுந்தபோதும் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், எண்ணி முப்பது நாளில் மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ? மீண்டும் ஆலையில் இருந்து சல்பியூரிக் அமிலம் கசிந்து ஒருவர் மரணம்,பலருக்கு மூச்சு திணறல் என்று பிரச்னை எழுந்தபோது ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தை மூடுவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி நூறு கோடி ரூபாயை அபராதம் கட்டி விட்டு இயக்கலாம் என்று சொன்னவுடன், சிரித்துக்கொண்டே தனது பர்சில் இருந்து ஒரு நாள் லண்டன் பயண செலவு போல எடுத்து வீசி விட்டு மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ? கடந்த பெப்ரவரி 12 ஆம் தேதி (2018 ) ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தை ஆரம்பித்தபோது, அரசு கண்டுகொள்ளவில்லை. பத்து வயது சிறுவன் " ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு " என்று அடிவயிற்றில் இருந்து கோஷம் போட்டபோதும் , மாவட்ட நிர்வாகத்திற்கோ, அரசுக்கோ கேட்கவில்லை. போராடிய அனைவரையும் கைது செய்தது அரசு. முன்னணி தலைவர்களை மட்டும் பிணையில் விடுவித்து விட்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள். மறுநாள் muthal அந்த ஊர் மக்கள் மரத்தடியில் அமர்ந்து அறவழியில் போராட ஆரம்பித்தார்கள். பேச்சுவார்த்தை நடத்த வருபவர்களிடம், தங்கள் ஊரின் கிணற்று தண்ணீரை குடித்து பாருங்கள் என்று சொன்னார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவு பெருகியது. எழுத்தாளர்கள் கோணங்கி , சோ.தருமன் ,யவனிகா ஸ்ரீராம், சுகிர்தராணி உள்ளிட்ட பல படைப்பாளிகள் ஒருநாள் அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர். 99 நாள் வரை போராடும் மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தை அரசு புரிந்து கொள்ளவில்லை. நூறாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றவுடன் 144 தடையுத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கிறது. மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி ஜமாபந்திக்கு சென்று விடுகிறார். ஊரே தீப்பற்றி எரியும்போது மாவட்ட ஆட்சியர் எதற்கு கோவில்பட்டி செல்கிறார் ? சுமார் 50 ,000 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கின்றனர். வி.வி.டி.சிக்னல் அருகே போலீசார் வழி மறித்து தடியடி நடத்துகின்றனர். எனினும், மக்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையும்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் பத்தாம் வகுப்பு மாணவி ஸ்னோலினும் ஒருவர். வயது 17 . துப்பாக்கி குண்டு அவரது வாயில் பாய்ந்துள்ளது. தானியங்கி துப்பாக்கியை காவல் துறையினர் பயன்படுத்தியுள்ளனர். சாதாரண உடையணிந்த காவல் துறையினர் தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஸ்னைப்பர்களாக செயல்பட்டு சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களை மஞ்சள் உடையணிந்த காவல்துறையினர் சுட்டுக்கொள்வதை செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் போடவே, தூத்துக்குடி,நெல்லை,குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கியது தமிழக அரசு. மே 22 க்கு முதல்நாள் காவல்துறை வீடு வீடாக புகுந்து 122 பேரை கைது செய்து கண்காணாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டதாக பலரும் கூறுகின்றனர். வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திற்கு காவல்துறை கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சுடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மதுரை, பாளையங்கோட்டை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களை கேட்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை பலரும் எழுப்பவே, ஏழு நாட்கள் கழிந்த நிலையில், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த மூன்று துணை வட்டாட்சியர்கள் என்று இப்போது அரசு தெரிவிக்கிறது. 144 தடையுத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர் எங்கே போனார் ? அவராக சென்றாரா அல்லது போக வைக்கப்பட்டாரா என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர்கள் இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? போராட்டக்காரர்கள் வன்முறையை கையாண்டனர் என்று சிலர் கூறுகிறார்கள். 99 நாள் அமைதியான முறையில் போராடும்போது அரசும், பொதுவாக ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. நூறாவது நாள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என்று சொன்னபிறகே 144 தடையுத்தரவு வருகிறது. காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. போராடும் மக்களுக்கு இதுதான் பரிசு என எச்சரிக்கை விடுக்கிறது அரசு. 13 பேர் பலியான பிறகே அரசு ஆலையை மூட நடவடிக்கை எடுக்கிறது. இதை, முன்பே எடுத்திருந்தால், இத்தனை உயிர்களை பலி கொடுத்திருக்கவேண்டாம். போராடும் மக்கள், வேலை கேட்டார்களா..இல்லை சம்பள உயர்வு கேட்டார்களா ? எங்கள் சந்ததிகள் நோயின்றி வாழ வேண்டும் என்று தானே போராடினார்கள் ? சுற்று சூழலை மாசுபடுத்தி, புற்று நோயை உருவாக்கும் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள் என்ற ஒரே கோரிக்கையை வைத்து தானே போராடினார்கள் ? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து உலகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. லண்டனில், வேதாந்தா நிறுவன தலைவர்அ னில் அகர்வால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போது நிரந்தரமாக மூடி விட்டதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆலைக்கு சீல் வைத்தாகி விட்டது. சுமார், 110 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தல் போன்ற கோரிக்கைகளுக்காக போராடியபோது அன்றைய வெள்ளைக்கார அரசு அவர்களை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தவில்லை. வேலை நிறுத்தத்தை தூண்டிய வ.உ.சி. மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது ஆலை நிர்வாகம். சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகள் வெற்றி பெற்றன. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து வஉசி யும், சிவாவும் கைது செய்யப்பட்டபோது, தூத்துக்குடி நகரத்தில் கலவரம் உருவானது. தொடர்ந்து நெல்லையிலும் கலவரம் ஏற்பட்டது. புகழ்பெற்ற " திருநெல்வேலி கலகம் " பற்றி லண்டன் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில், அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்காக பொதுமக்கள்,தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது முதல்முறையாக வ உ.சி. க்காக தான். இதன்பிறகே, திலகர் கைது செய்யப்பட்டபோது, பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. வரலாறு படைத்த தூத்துக்குடி மக்களுக்கு, போராட்டம் என்பது புதிதல்ல. மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் கொக்கரித்துள்ளார். பிரச்னையை ஆறப்போட்டு மூன்று மாதங்கள் கழித்து மாறுபட்ட முடிவை நீதிமன்றம் எடுக்கலாம். கடந்த கால வரலாறுகள் எதுவும் நடக்கலாம் என்பதைத்தானே தெரிவிக்கின்றன ? எந்த சூழ்நிலையிலும், மீண்டும் ஆலையை திறக்க பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோணுகிறது. திருநெல்வேலி எழுச்சி வரலாற்றை யாரேனும் அனில் அகர்வாலுக்கு சொன்னால் நல்லது.
குருதியில் நனைந்த தாமிரபரணி ----------------------------------------------------- அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. கையில் கொடியும், இடுப்பில் குழந்தையுமே இருந்தன. கூட்டத்தை கலைக்கிறோம் என்று சொல்லி விரட்டினார்கள். கட்டிடம் கட்ட குவிக்கப்பட்டிருந்த செங்கல்களை காவல்துறையினர் எடுத்து பொதுமக்களை குறி பார்த்து எறிந்தனர். ஆறு அடி நீளமுள்ள சவுக்கு கம்பால், தண்ணீருக்குள் குதித்த ஆண்களை,பெண்களை அடித்து துவைத்தனர். ஆற்றின் மறுபுறம் கரையேறி தப்பிக்க முயன்ற ஆண்களையும், ஈர சேலையுடன் இருந்த பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஆற்றில் குதிக்கும் முன்பு, தனது ஒன்றரை வயது குழந்தை விக்னேஷை, அம்மா இரத்தினமேரி கரையில் போடும்போது, குழந்தையையும் தூக்கி போலீஸ்காரர்கள் உள்ளே எறிந்தனர். ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள் என்று திரும்ப திரும்ப சொல்லும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை பார்த்து, நீச்சல் போட்டியில் கோப்பைகள் வென்ற அவர்களின் புகைப்படங்கள் சிரிக்கின்றன. தெருவெங்கும் இறைந்து கிடந்த ஒற்றை செருப்புகள் , மூன்றுமணி நேர வெறியாட்டத்தின் உச்சத்தை காட்டுகின்றன. எல்லாம் முடிந்த பின், சுலோச்சனா முதலியார் பாலத்தில், வழக்கம்போல பேருந்துகள் ஓட ஆரம்பித்தன. பாலத்தின் அடியில், பதினேழு உயிர்களை சுமந்தபடி தாமிரபரணி ரத்தச்சிவப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். 1 .விக்னேஷ் ( ஒன்றரை வயது குழந்தை ) 2 .ரத்தினம் 3 .சஞ்சீவி 4 .ஷாநவாஸ் 5 .குட்டி என்ற குமார் 6 .திருமதி இரத்தினமேரி 7 .இன்னாசி மாணிக்கம் 8 .ஜான் பூபாலராயன் 9 .வேலாயுதம் 10 .கெய்சர் 11 .ஜெயசீலன் 12 .அந்தோணி 13 .முருகன் 14 . திரு.ராஜி 15 .ஜோசஃபின் 16 .அப்துல் ரஹ்மான் 17 .ஆறுமுகம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளவரை, தாமிரபரணி ஆறு இருக்கும் வரை, இந்த பதினேழு பேரின் பெயர்களும் நிலைத்து நிற்கும். ( ஜூலை 23 - மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். வருடம் : 1999 ) Attachments area
கலகக்காரர் தொ.மு.சி.ரகுநாதன் ---------------------------------------------------- ஒரு நாவல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதன்மூலம் எழுத்தாளனின் பேனா பிடுங்கப்பட்டது என்பது இன்றைய சரித்திரம். ஒரு நாவலின் சர்ச்சைக்குரிய எழுத்துக்காக ஒரு எழுத்தாளன் கைது செய்யப்பட்ட விவகாரமும் தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த காலத்தில் நடந்துள்ளது என்பது பலரும் அறியாத செய்தி. 1949 இல், எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய " முதலிரவு " என்ற நாவலுக்கு அத்தகைய பெருமை உண்டு. பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாய் பேசாத அந்தக்காலங்களில், ஓரின சேர்க்கை குறித்தும்,முறை தவறிய உறவுகள் குறித்தும், காமம் சார்ந்தும் எழுதப்பட்ட இந்த நாவல் பெரும் புயலை கிளப்பியது. அக்காலத்தில் பல பதிப்புக்களையும் கண்ட இந்த நாவலை, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தடை செய்து உத்தரவிட்டார். இந்தத்தடையாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொ.மு.சி.போராடியபோதிலும், தோல்வியடைந்து, இறுதியில் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டி விட்டு வெளியே வந்தது தனிக்கதை. இருந்தும் சளைக்காமல், மறுவருடமே " கன்னிகா " என்ற இன்னொரு நாவலை எழுதினார். இப்போது இந்த நாவல் வெளி வந்திருந்தால் பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் தேடிப்படித்துக்கொள்ளவும். இப்படி அதிரடியாய் எழுதிய அதே தொ.மு.சி. தான் நெல்லை மாவட்டத்தில் பஞ்சம் தலை விரித்தாடிய நிலையில் நெசவாளர் பட்ட துயரம் கண்டு, " பஞ்சும் பசியும் " என்ற நாவலையும் எழுதி பெரும்புகழ் பெற்றார். தமிழில் வெளி வந்த முதல் யதார்த்த நாவல் என்று சொல்லலாம். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலை செக் நாட்டு தமிழ் அறிஞர் கமில் ஸ்வலபில், செக் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழில் இருந்து ஒரு ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான தொ.மு.சி., புதுமைப்பித்தன் இறந்தபிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தனது எழுத்துலக ஆசானாக புதுமைப்பித்தனையே கருதினார். பாரதி மீது அளப்பரிய பற்றுதல் கொண்டு, பல ஆண்டுகள் பல்வேறு தரவுகளை சேகரித்து, " பாரதி : காலமும் கருத்தும்" என்ற அற்புதமான நூலை எழுதினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலின் எழுத்தில் மயங்கி, பின்னர் அவரைப் பற்றி அவரது " சாந்தி " இதழ் பற்றி, பல்வேறு விஷயங்களை தேடித்தேடி படித்தேன் என்றே சொல்ல வேண்டும். பாகப்பிரிவினையில் தனக்கு கிடைத்த சொத்தான மூவாயிரத்தை கொண்டு " சாந்தி " என்ற இலக்கிய இதழை 1954 இல் நெல்லையில் தொடங்கியவர் ரகுநாதன். நெல்லை பப்ளீசிங் ஹவுஸ் நடத்திய சண்முகம் பிள்ளை அண்ணாச்சியின் ஒத்துழைப்போடு, அவரது கடைக்கு அடுத்ததாக இருந்த சேவியர் என்ற கம்யூனிஸ்ட் தையல்காரரின் தையல் கடையின் ஒரு மூலையில் சாந்தி அலுவலகம் தொடங்கப்பட்டது. அதற்கு வாடகை இலவசம். ஒருபுறம் தையல் இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும்.இன்னொரு புறம், பத்திரிக்கைக்கு வரும் படைப்புக்களை சரிபார்ப்பது, பிழை திருத்துவது, தபால் அனுப்புவது என இலக்கிய வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அறையில் கிடக்கும் அலமாரி,சாய்வு நாற்காலி கூட அவரது சொத்தில் கிடைத்தவையே. சாந்தி இதழுக்கு வேண்டிய உதவிகள் செய்தவர் எழுத்தாளர் சுந்தரராமசாமி. முதல் இதழில் சுந்தர ராமசாமி எழுதிய தண்ணீர் என்ற சிறுகதை வெளி வந்தது. சாந்தி இதழுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. சாந்தி அலுவலகத்தில் பல்வேறு படைப்பாளிகள் வந்து போவது போல இன்னொரு விருந்தாளியும் தினமும் வருவார். அது ஒரு அணில் பிள்ளை. தனது சாப்பாட்டில் ஒரு கவளத்தை இந்த அணிலுக்கு அளித்து விட்டே சாப்பிடுவாராம் ரகுநாதன். நீண்ட நாள் அவரது அன்பைப் பெற்றது இந்த அணில்பிள்ளை. பிற்காலத்தில், அவரது வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார் அவர்.இறுதிக்காலத்தில், தன்னிடம் இருந்த பொக்கிஷமான நூல்களை எல்லாம் எட்டயபுரம் பாரதி ஆய்வு மையத்திற்கு (ரகுநாதன் நூலகம் ) அளித்து விட்டு, தனது வீட்டுப் பொருட்களை, நகைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுக்கும் உயில் ஒன்றையும் எழுதி வைத்தார். அதில் இந்த வெள்ளை நாயை பற்றியும் ஒரு செய்தி உண்டு. தனது இறப்பிற்கு பிறகு இந்த நாயை யாரும் கவனிக்க மாட்டார்கள் எனக்கருதி, அது தெரு நாயாக அலைய நேரிடுமோ என்று நினைத்து, தான் இறந்தபிறகு, நகராட்சிக்கு தெரிவித்து அதை கொன்று விடுமாறு உயில் எழுதி வைத்திருந்தார் என்கிறார் எழுத்தாளர் பொன்னீலன். காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார் போன்ற நூல்கள் படித்த பின்னணியில், அவரை நெல்லையில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற அழைக்க முடிவு செய்திருந்தோம். எழுத்தாளர் தமிழ்செல்வன்,கவிஞர் கிருஷி மற்றும் நான் மூவரும் அவரது பெருமாள்புரம் வீட்டில் சந்திக்க சென்றோம். வாசலுக்கு வந்தவர், யாரென விசாரித்தார். விஷயத்தை சொன்னோம். கேட்டு விட்டு, " இன்னும் மூணு மாசம் இருக்குல்ல..பார்ப்போம் ." என்று சொல்லி விட்டு வாசல் கதவைக்கூட திறக்காமல் உள்ளே போய்விட்டார். எங்களுக்கு முகம் வாடி விட்டது. தமிழ்ச்செல்வன் எங்களிடம் " பெரிய ஆளுமை ன்னா அப்படித்தான்..எழுத்தாளர்க்குள்ள கெத்து எப்படி இருக்குன்னு பார்த்தீகளா ..அது பாரதியின் ஞான செருக்கு .." என்று சொல்லி சமாதானப்படுத்தினார். பின்னால் மாநில மாநாட்டில் சிறப்பான சொற்பொழிவு ஆற்றியதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சம். ஒருமுறை, பாரதி விழாவில் பேச அழைத்தபோது ரொம்ப உற்சாகமாய் தனது வெள்ளை ஜிப்பாவில் கைகளை நுழைத்தபடி பேச்சை துவக்கினார். இந்தியன் வங்கியின் அப்போதைய தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பற்றி நகைச்சுவையாய் பேச ஆரம்பிக்கவும், எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதை எதற்கு இவ்வளவு நேரம் பேசுகிறார் என்று. திடீரென்று, பின்னோக்கி செல்ல ஆரம்பித்தார். நெல்லையில் மேம்பாலத்திற்கு அடியில் சந்திர விலாஸ் அருகில் வெள்ளைக்காரன் ஆரம்பித்த அர்பத்நாட் வங்கியை , அதன் வரலாற்றை சொல்லி, ஒரு திங்கள் கிழமை அது திவாலா என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட போது, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி புலம்பிய கதையை சொல்லி, அதில் ஏற்பட்ட துயரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களை பற்றியும், மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாய் அலைந்தவர்களைப்பற்றியும் சொல்ல ஆரம்பித்தபோது கூட்டத்தில் நீண்ட மௌனம் ஏற்பட்டது. அந்த மக்கள் கூட்டத்தில், பைத்தியமும் பிடிக்காமல், தற்கொலையும் செய்து கொள்ளாமல் திக்பிரமை பிடித்து நின்ற மூவர் வ.உ.சி, பாரதி,சிவா. சுதேசி இயக்கத்திற்காக மக்களிடம் வசூலித்த தொகையை இந்த அந்நிய நாட்டு வங்கியில் போட்டு இழந்தவர்கள் இவர்கள். அந்நிய வங்கிகளிடம் இனியும் ஏமாறக்கூடாது என்று நினைத்து கல்லிடைக்குறிச்சி ஐயர்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆகியோரிடம் பேசி, சுதேசி வங்கி ஒன்றை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அப்படி ஆரம்பிக்கப்பட்ட வங்கி, இன்றைய இந்தியன் வங்கி என்று வீர முழக்கமிட்டு, அப்படிப்பட்ட வங்கியை இன்று நஷடத்தில் இயங்குகிறது என்று மூடி விட முயற்சி செய்யும் போக்கினை கடுமையாய் சாடினார். சுமார் ஒரு மணிநேரம் பேசிய அவரது உரை அற்புதமான தகவல்களின் தொகுப்பு. அது தான் தொ.மு.சி. திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற பெயரில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார் அவர். பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்ட ரகுநாதன், ஜீவா,நா.வானமாமலை,என்.டி.வானமாமலை,தி.க.சி, அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பாளை.சண்முகம், கணபதியப்பன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். ஜீவா அவர்கள் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கியபோது உடன் இருந்து பணியாற்றியவர். ஜீவாவிற்குப் பிறகு அதன் தலைவர் பொறுப்பில் இருந்தார். இவரது புகை பிடிக்கும் பழக்கத்தை இவரது துணைவியார் விட சொல்லி வற்புறுத்தியபோதெல்லாம் கேட்காமல், அவர் இறந்தபிறகு, தனிமையில் அவரது புகைப்படத்தை பார்த்து இனி பிடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து ஒரு நாளில் நிறுத்தி விட்டதை பலரும் அதிசயமாய் பார்த்தனர். எழுதும் எல்லோரையும் பாராட்ட மாட்டார் ரகுநாதன். ஒருவரின் எழுத்து வசீகரித்து விட்டால், அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் பாராட்டுவார். இறுதிக் காலத்தில், தனது மகள் பேரா. மஞ்சுளா வீட்டில் வசித்து வந்தார். அந்த நேரத்தில், பாளையங்கோட்டையின் புறநகர் பகுதியில் அது இருந்ததால், அவரால் பல கூட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. தனிமையில் இருந்த அவருக்கு மகள்,பேரன் இல்லாத நேரங்களில்,நாய் மட்டுமே துணை. எப்போதாவது சந்தித்தால், " வீட்டுக்கு வாங்களேன்..பேசுவோம்." என்று சொல்லி, கேடிசி நகர் தெரு விபரம்,தண்ணீர் தொட்டி அருகில் எதிரே செல்லும் மண் பாதையில் கடைசியில் இருக்கும் மஞ்சள் நிற வீடு என்றெல்லாம் சொல்லி விட்டு, லேசாக இருமிய படி, " அங்கெ வந்து ரகுநாதன் வீடுன்னா, யாருக்கும் தெரியாது..மஞ்சுளா வீடு எதுன்னு கேளுங்க..சொல்லுவாங்க.." என்று சொன்னபோது அதிர்ந்து போனேன். புதுமைப்பித்தன், ஜீவா,கு.அழகிரிசாமி,கலாநிதி.க.சிவத்தம்பி,கலாநிதி.க.கைலாசபதி,சுந்தர ராமசாமி,தவத்திரு குன்றக்குடி அடிகளார், கிருஷ்ணன் நம்பி என பல இலக்கிய ஆளுமைகளுடன் நட்பு பாராட்டிய தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் என்ற தொ.மு.சி. ரகுநாதன் உண்மையில் ஒரு கலகக்காரரே !
நெல்லையில் லெனின் சிலை ---------------------------------திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவ்வை முளரி நுண்கலைக்கூடம் கடந்த நான்கு மாத காலம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தோழர் லெனின் சிலை உருவான இடம். தினமும் நாலைந்து தோழர்களாவது இங்கே வந்து சிலை உருவாவதை நேரில் பார்த்து வியந்தவண்ணம் சென்றார்கள். கைத்தறி துணியில் பனியனும், கரண்டைக்காலுக்கு மேல் நிற்கும் நாலு முழ வேட்டியுமாய் கிராமத்து விவசாயியை போலிருக்கும் இந்த மனிதர், தேசிய , சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி என்று அறியும்போது பலருக்கும் வியப்பு ஏற்படும். ஜப்பானில் 1996 இல் பனிச்சிற்பத்தை உருவாக்கி விருது பெற்றவர். கொழும்பில் 1997 இல் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் இவரது கலைப்படைப்பிற்கு பரிசு கிடைத்தது. சென்னை ஓவியக்கல்லூரியின் முன்னாள் முதல்வர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் சந்துரு அவர்களிடம், லெனினோடு இருந்த அனுபவத்தை கேட்டபோது... " ஆமாம்..இந்த நான்கு மாதங்கள் தோழர் எங்களோடு இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சிலைகள் செய்வதற்கும், இந்த சிலை செய்ததற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. சாதாரண நேரத்தில் ஒரு சிலையை இயல்பாக செய்வது வேறு. வடக்கே ஒரு மாநிலத்தில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி சில காரணங்களால் தோல்வியுறும்போது, ஆட்சியை கைப்பற்றியவர்கள் சித்தாந்தத்தை தகர்ப்பதாக நினைத்துக்கொண்டு, லெனின் சிலையை தகர்த்தபோது, பலரையும் போல நானும் அதிர்ந்து தான் போனேன். அடுத்தடுத்து இது போன்ற செய்திகள் வரும்போது, சிலையை உடைத்தால் ஏன் அதற்கு ஒப்பாரி வைக்கணும் ..நீ அங்கெ உடைத்தால் நாங்கள் இங்கே எழுப்புவோம்டா ன்னு சொல்றது தானே சரி.. (சிரிக்கிறார் )... அதைத்தான் தோழர் பாஸ்கரன் செய்தார். ஒரு அதிகாலைப்பொழுதில் அவர் இங்கே வந்து, தோழர் லெனின் சிலையை எட்டடி உயரத்தில் செய்ய வேண்டும்..எங்கள் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிறுவ இருக்கிறோம்..என்றார். ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனெனில், லெனினை ஒரு வெளிநாட்டு சித்தாந்தத்தின் குறியீடாக எவருமே நினைக்க இயலாது. அவர் எல்லா தேசத்திற்கும், உழைக்கும் மக்களின் உந்து சக்தியாய் திகழ்ந்த தலைவர். மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பதை உணர்ந்து ரஷ்ய மண்ணிற்கேற்றபடி செயல்படுத்தியவர். அவரது சிலையை உருவாக்குவது பெருமையாக இருந்தது. சிலை எட்டடியில் இருந்து பத்தடியாய் உயர்ந்து, பிறகு பெலோனியாவில் இருந்த பதினோரு அடியை விட கூடுதலாய் இருக்க வேண்டும் என நினைத்து பன்னிரண்டு அடியாய் செய்யப்பட்டது. இந்த நாலைந்து மாதங்களில் இரவு பகலாய் உழைத்தவர்கள் எனது அருமை மாணவர்கள் பரணி,ராமச்சந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர். சிலை உருவாக்கத்தின்போது தோழர் வாசுகி வந்து பார்த்தாங்க..பின்னர் தோழர் நல்லக்கண்ணு வந்து பார்த்தாங்க...நல்லா வந்திருக்கு என்று எல்லோரும் சொன்னது திருப்தி..தினமும் பல்வேறு தோழர்கள் இங்கே வந்தவண்ணம் இருந்தாங்க..அது எங்கள் குழுவிற்கு உற்சாகம் அளித்தது. சோவியத்தின் பிர்ச் மரங்களின் மத்தியில் வாழ்ந்த லெனின், இங்கே எங்களது கலைக்கூடத்தில் வேப்ப மரங்களின் குளுமையை ரசித்தபடி எங்களோடு வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்.. நாலைந்து மாதங்கள் எங்களோடு இருந்த மகத்தான ஒரு தலைவர் ,என்னோட வார்த்தையில் சொல்லனும்னா , எங்க வீட்டில் இருந்த பெரிய மனுஷன் , இப்போ இல்லாதது, ஒரு வெற்றிடம் போல கூட இருக்குது..(சிரிக்கிறார் ) அவரோடு சிலை உருவாக்கத்தில், பெரும்பங்காற்றிய ஓவியர் பரணி , நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காத்தமுத்து அவர்களின் மகன் வயிற்று பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அப்பாவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவரே. பரணியிடம் பேசியபோது... " சந்துரு சார், என்னிடம் இந்த பெரும்பொறுப்பை ஒப்படைத்தபோது சந்தோசமாய் இருந்தது. லெனின் எனக்கு பூட்டன் தாத்தா மாதிரி. நிறைய படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். சிலை உருவாகும்போது, பல தோழர்கள் வந்து பார்த்தார்கள். ஒருநாள், இரண்டு பேர் வந்து கேள்விகளாய் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நானும், சிலையில் கவனம் செலுத்தியபடி பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். இந்த சிலை என்ன மெட்டல்..என்ன வெயிட் வரும்..இதுல வேற என்னல்லாம் சேர்ப்பீங்க..என்று கேட்டுக்கொண்டே இருந்தாங்க..அப்போதான் திரும்பி அவங்க முகத்தை பார்த்தேன்.. எதுக்கு இதெல்லாம் கேக்கீங்க..என்றேன். மேலே இருக்கவங்க கேட்டா சொல்லணும்ல..என்றார்கள். அவங்களை இங்கே வர சொல்லுங்க..எப்படி செய்யணும்னு சொல்லி தரேன் என்று சொன்னேன்.. அவங்க முகத்தை பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விட்டேன். இவங்க க்யூ பிரான்ச் போலீஸ் ஆக இருக்கும் என்று. நாங்க சிபிஐ ன்னு சொல்லிட்டு போனாங்க.. அதன்பிறகு கூட இருந்த நண்பர்கள் சொன்னாங்க..ஒரு மாசமா இவங்க வாசல் பக்கம் நின்னு நோட்டம் பார்த்துட்டு இருந்தாங்க என்று. இந்த மனுஷனை கண்டால் , அதிகார வர்க்கத்திற்கு இன்னமும் நடுக்கம் இருக்கு போல ..ஒருவேளை உசிரோடு எழுந்து வந்து விடுவார்னு நெனைச்சாங்களோ என்னவோ...என்று சிரிக்கிறார் பரணி. ----------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் ----------------
பதியமிட்ட மனிதர்கள் -1 ------------------------------------ சங்கரனை உங்களுக்கு தெரியுமா ? தெரியாவிட்டாலும் பரவாயில்லை...உங்கள் ஊரிலும் நிச்சயம் ஒரு சங்கரன் இருப்பார். என்ன..என்னோட சங்கரன் எம்.ஜி.ஆர்.ரசிகர் என்றால், உங்கள் ஊர் சங்கரன் , கணேசன் ரசிகராய் இருப்பார். அவ்வளவுதான்...! எங்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி மூணு ஓட்டு சாய்ப்பு வீடுகள் உண்டு. அதில் முதல் வீட்டில் தான் சங்கரன் இருந்தார். ஒண்டிக்கட்டை. அவர் நடக்கையில் " சரக்..சரக்.." என்று செருப்பை தேய்த்து தேய்த்து தான் நடந்து வருவார். சந்துக்குள் நுழையும்போதே செருப்பு சத்தத்தில் தெரிந்து கொள்ளலாம். கல்யாணம் மற்றும் விசேஷ வீடுகளில் பண்டம்,பலகாரம் செய்வதில் கெட்டிக்காரர் நம்ம சங்கரன். துவக்கத்தில் தவசுப்பிள்ளை உத்தியோகம்தான் பார்த்துக்கொண்டிருந்ததாக சொல்லுவார்கள். தவசுப்பிள்ளைன்னா தெரியும்ல ? நெல்லை வட்டாரத்தில், சமையல்காரரைத்தான் தவசுப்பிள்ளை என்று சொல்வது வழக்கம். சமையல்காரர் என்று சொன்னால் கோபம் மூக்குக்கு மேல் வந்து விடும் . தவசுப்பிள்ளை என்றால், பத்துபேரை வைத்து வேலை வாங்கும் தலைமை சமையல்காரர் என்பதனால் கூட இருக்கலாம். சரி சவத்தை விடுங்கய்யா.. . இவரது பூந்தி ரொம்ப விசேஷம். எம்.ஜி.ஆர்.ரசிகரான சங்கரன், ரிஃசாக்காரன் படத்தை கோவில்பட்டி ராமசாமி தியேட்டரில் தொடர்ந்து அம்பது நாட்கள் பார்த்து சாதனை படைத்தவர். ஐம்பதாவது நாளில் ஒரு தங்க செயின் போட்டதை பெருமையாகக் காட்டுவார். கையில் போட்டிருக்கும் தங்க மோதிரம், உலகம் சுற்றும் வாலிபன் 75 வது நாள் விழாவில் போட்டது... உரிமைக்குரல் படத்தை 100 நாள் தொடர்ந்து பார்த்து அவருக்கு பெரிய ஷீல்ட் கொடுத்தார்கள். " வெளங்காத பயலுவோ..எனக்கு என்னத்துக்கு இந்த பதைக்கம் எல்லாம்..? ஒரு சின்னதா மோதிரமோ, செயினோ போட்டா பரவாயில்ல..வாத்தியார் படத்தை நடுவுல போட்டுக் கொடுதுத்துட்டானுவோ ..அதனால தான் தம்பி வச்சுருக்கேன்.." என்று மர பீரோக்கு மேலே தூசி தும்பட்டையோடு கிடக்கும் ஷீல்டை காட்டி சொல்வார். மர பீரோவின் முகப்பில், எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.- மஞ்சுளா, எம்.ஜி.ஆர்.- லதா இணைந்து இருக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு எண்ணெய்படிந்து இருக்கும். சில நோட்டீஸ் களில் ஐம்பது நாள் வசூல், நூறு நாள் வசூல் தொகை குறிப்பிடப்பட்டு . அடைப்புக்குறிக்குள் சிவாஜி பட வசூல் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆர்.பட வசூல் அதிகமாகவே சொல்லப்பட்டிருக்கும் என்பதை தனியாக குறிப்பிட வேண்டியதில்லை. விரைவில் பொன்மனச்செம்மல் நடிப்பில் வெளிவர இருக்கும் " கிழக்காப்பிரிக்காவில் ராஜு " என்ற பேப்பர் விளம்பரம் ஒன்றையும் சங்கரன் பசை தடவி மர பீரோவில் ஒட்டி வைத்திருந்தார். அந்தப்படம் கடைசி வரை வரவே இல்லை என்றாலும், வரலாறு முக்கியம் என்பதாலோ என்னவோ அது பீரோ முகப்பில் இடம் பெற்றிருந்தது. " அண்ணாச்சி..அது எப்படி உங்களால தொடர்ந்து பாக்க முடியுது..நானும் வாத்தியார் ரசிகன் தான்..ஆனாலும் மூணு வாட்டி பாக்கலாம்..அதுக்கு மேலே என்னால ல்லாம் முடியாது..." என்பேன். " தம்பி...வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போறேன்..அதனால தரை டிக்கெட்டு எடுத்துட்டுப் போவேன்..ஒரு மூலையில சாஞ்சு உக்காந்து கொஞ்ச நேரம் பார்ப்பேன்.." நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு..." பாட்டு வரைக்கும் பார்ப்பேன்..அப்புறமா கண்ணு அசந்துரும்... அப்புறம், " ஒரு தாய் வயிற்றில் பிறந்த .." ன்னு ஒரு பாட்டு வரும்..உருக்கமான பாட்டு தம்பி. அண்ணனை பார்த்து வாத்தியார் பாடுற பாட்டு...முழுசும் பார்ப்பேன்..அஞ்சாறு பைட்டு உண்டு..சிலது பார்ப்பேன்..ஆனா மொதத்தடவ பார்க்கும்போதே எத்தனை பைட்டுன்னு பாத்துக்கிடுவேன்..எல்லாவனும் என்கிட்டே வந்து தான் கேப்பானுவ ..சொல்லணும் பாத்தீகளா..? " தோளில் போட்டிருக்கும் துண்டை கீழே விரித்து திண்ணையில் படுத்து விடுவார். அடுத்த சில நொடிகளில் குறட்டை சத்தம் வந்து விடும். எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் அன்று முதல் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று விடுவார். தியேட்டர் ஆபரேட்டர் எல்லாரும் அவருக்கு பழக்கம். கல்யாண வீடுகளுக்கு அவரை புக் செய்ய வருபவர்கள் தெருவில் வந்து " எம்.ஜி.ஆர்.சங்கரன் " வீடு எங்கன இருக்கு ? என்று தான் வருவார்கள். ( அந்தக் காலத்துலேயே இதெல்லாம் வந்தாச்சு ...) அதிலே அவருக்கு ஏகப் பெருமை.. கண்ணு கண்ணாய் இருக்கும் பெரிய கண்ணாகப்பையோடு அவர் வெளியே கிளம்பி விட்டால், விசேஷ வீட்டிற்கு போகிறார் என்று அர்த்தம். அவரோட கைப்பக்குவத்தைப் பற்றி " கோட்டி" கண்ணாயிரம் தான் வானளாவ புகழுவான். இதென்ன கோட்டி கண்ணாயிரம்னு கேக்கீகளா..அது ஒரு தனிக்கதை..அப்புறமா சொல்லுதேன்..எம்.ஜி.ஆர்.சங்கரன் பிறகு கோவிச்சுக்குவார். என்னோட பெரிய அக்கா சடங்குக்கு காரா பூந்தியும், லட்டும் செய்வதற்கு அப்பா , எம்.ஜி.ஆர்.சங்கரனிடம் தான் சொல்லி இருந்தார். வீட்டு தார்சாவை அடுத்து இருந்த வானவெளியில் எண்ணெய் சட்டியை போட்டு விடிய விடிய பலகாரங்கள் செய்ததை பக்கத்தில் இருந்து நானும், சின்ன அக்காவும் பார்த்து கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. " அண்ணாச்சி..உங்களுக்கும் வயசான மாதிரி இருக்கு..ஏன் நீங்க கலியாணம் பண்ணிக்கிடவே இல்ல.." என்றேன் ஒருதடவை. அண்ணாச்சி பதிலே சொல்லவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து, " அதெல்லாம் நடந்து எல்லாம் முடிஞ்சு போச்சு.. அவளுக்கு நம்ம கூட வாழ கொடுத்து வைக்கல..அவ்வளவு தான்.." என்று ஒரு வரியில் முடித்து விட்டார். கோர்ட் முருகன் தான் சொன்னார்." கூரு இருக்காலே உனக்கு ? அவரு பொண்டாட்டி அவர விட்டுட்டு வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டா..எத்தன மட்டம் சொல்லி இருக்கேன்..இதப் போயி அவருட்டேயே ஒருத்தன் கேப்பானா .." என்று தலையில் அடுத்துக் கொண்டார். இப்ப தான் என்னிடம் சொல்கிறார் என்றாலும் எத்தனை மட்டம் என்பது அவரோட மானரிசம்..அடிக்கடி அதை சொல்வார். அதன்பிறகு சங்கரனைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாய் இருக்கும். ஊருக்குள்ளே சில இளவட்டங்கள் அவரை மானாங்கன்னியா பேசுவாங்க. அவருக்கு ஏலலெ ன்னா என்ன பண்ணுவாரு என்று கேலியும் குதர்க்கமுமாய் பேச்சுக்கள்...! " வாத்தியார் படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது அண்ணாச்சி.." என்று ஒருதடவை கேட்டேன். " என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீக..எல்லாப்படமுமே புடிக்கும்..சதி லீலாவதி படத்துல இருந்து நவரத்தினம் படம் வரைக்கும் வரிசையா ஒன்னு விடாம என்னால சொல்ல முடியும்...வாத்தியார் படத்துல அவருக்கு என்ன பேரு என்பதைக் கூட சொல்லிருவேன்.." என்று சொன்னார். இரவு திண்ணையில் படுக்கும்போது அவர் தலைமாட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ மாத்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். தூங்கும்போதும் அவர் எம்.ஜி.ஆர்.பாடலைக் கேட்டுக் கொண்டே தான் தூங்குவார். "பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ " படகோட்டி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. " எம்.ஜி.ஆரை பார்துருக்கீகளா ? " என்றேன். " அதெல்லாம் எதுக்கு தம்பி...படத்துல இருக்குற மாதிரி தான நெசத்துலேயும் இருப்பாரு..மெனெக்கெட்டு போயி பார்க்கனும்னு எல்லாம் நெனைச்சது இல்ல...நம்மூருக்கு ஓட்டுக் கேட்டு வந்தாப் பாத்துக்குவோம்.." என்று நிதானமாய் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு கோடைகால அதிகாலைப் பொழுதில், சங்கரன் போய் சேர்ந்திருந்தார். அவரது நெஞ்சில் இருந்த பனியனில் " பல்லாண்டு வாழ்க " எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டிருந்தார். ------------------------------------இரா.நாறும்பூநாதன்
கதம்ப மனிதர்கள் ---------------------------- நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி .. பழகும் விதம் அப்படி. வருஷங்கள் பல ஓடினாலும், அவர்களின் சித்திரம் நமது உள்ளத்தில் ஆழமாய் உறைந்து நிற்கும். வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் நாம், என்றேனும் நின்று நிதானமாய் அசைபோடும்போது, அவர்கள் மனதில் உயிர்த்தெழுந்து வருவார்கள். அடடா..எப்பேர்ப்பட்ட மனுஷி அவ..என்று உதடுகள் நம்மையறியாமல் முணுமுணுக்கும். அவர்களை மீண்டும் சந்திக்க காலம் அனுமதிப்பதில்லை. பலர் காலமாகியிருப்பார்கள். இன்னும் சிலர் திசை மாறி பறந்துபோயிருப்பார்கள். அப்படியான மனிதர்கள் நம் எல்லோரின் வாழ்விலும் வந்திருப்பார்கள். கடந்து சென்றிருப்பார்கள். மனித வாழ்வின் உன்னதமே அவர்களை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடுவது தான். அப்படி எனது மனதில் பதியமிட்டு சென்ற மனிதர்கள் பலருண்டு. இந்த நேரத்தில் அவர்களில் சிலரை மீண்டும் நினைவில் கொண்டு வந்து, உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன். வங்கியில் வேலை பார்த்த நாட்களில் விதவிதமான மனிதர்களை பார்த்ததுண்டு. சிலருக்கு கூட்டத்தை பார்த்தாலே அலர்ஜி. எனக்கு மனிதர்களை வாசிக்க பிடிக்கும். . சிலர் கோபுலுவின் கோட்டோவியங்களில் வரையும் அளவிற்கு சுவாரஸ்யமானவர்கள். சிலர், ஆர்.கே.லக்ஷ்மணன் கார்ட்டூனில் வரும் வெகுஜனம் போன்றவர்கள். சேது அம்மாள் எதில் சேர்த்தி என்று சொல்ல முடியவில்லை. வெள்ளை சீலை கட்டியிருக்கும் சேது ஆச்சிக்கு வயசு எண்பது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள் பட்டியலில் எல்லாம் சேது ஆச்சி கிடையாது தான். ஆனால், எங்களுக்கு சேது ஆச்சி வங்கிக்குள் வந்துவிட்டால், ஒரே கலகலப்பு தான். உள்ளே நுழையும்போதே, " ஏம்மா..நல்லா இருக்கியா ? எய்யா..வளந்த தம்பி..சொகமா இருக்கியாய்யா ?..ஏ ராசாத்தி..ஒனக்கு போன புரட்டாசில தான கலியாணம் ஆச்சு..ஏதும் விசேஷம் உண்டுமா ?..பேராண்டி..ஏன் இப்படி காலங்காத்தால கொட்டாவி விட்டுட்டு இருக்கே.. மூஞ்சியை கழுவீட்டு வந்து உக்காருய்யா..நல்லாவா இருக்கு.." என்று ஏகத்துக்கு வசனங்கள் பேசிவிட்டு, எனது இருக்கை அருகே வந்து உட்காருவாள் ஆச்சி. " எய்யா..நல்லா இருக்கியா..கொஞ்சம் கரைஞ்சாப்ல இருக்கியே.." என்று சொல்லி விட்டு அமர்வது ஆச்சியின் இயல்பு. இவ்வளவு உரிமையோடு எல்லோரிடமும் பேசினாலும், ஆச்சிக்கு யார் மேலும் நம்பிக்கை கிடையாது. என்னவோ என்னை ஆச்சிக்கு பிடித்துப்போச்சு என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சி தாலியறுத்து அம்பது வருஷம் இருக்கும் என்பாள். புள்ளைகுட்டிகள் எதுவும் கிடையாது. கூட பொறந்த தம்பி மகன் வீட்டில் இருக்கிறாள். தம்பி செத்துப்போயி நாளாச்சு. பெருமாள்புரம் ஏரியாவில் உள்ள சில வீடுகளில் சமையலுக்கு ஒத்தாசையாய் வீட்டு வேலைகள் செய்து கொடுப்பது ஆச்சியின் அன்றாட தொழில். வீடுகளில் பாத்திரம் தேய்த்து கொடுக்கும் வீட்டு வேலை செய்பவள் என்று சொன்னால் பழியாய் கோபம் வரும் ஆச்சிக்கு. " வாரியல கொண்டு அடி.. என்னை என்ன வேலைக்காரின்னா நெனைச்சே..எதோ அந்த அம்மா கூடமாட ஒத்தாசைக்கு வந்து நில்லுன்னு சொன்னாளேன்னு போயிகிட்டுருக்கேன்..நான் பவுசா வாழ்ந்த வாழ்க்கை என்ன..இப்படி என்னை அவரு நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாருன்னு தான ஆளாளுக்கு பேசுதீக.." என்று கண்ணீர் சிந்தி விட்டு, சீலை முந்தானையால் கண்களை துடைத்துக்கொள்வாள். வெள்ளை சீலைன்னு தான் பேரு. எப்போதும் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை சீலை முந்தியில் முடிந்து வைத்திருக்கும் முடிச்சை அவிழ்த்து தனது பர்ஸை வெளியே எடுப்பாள். அதில் பொதிந்திருக்கும் பத்து ரூபாய், இருபது ரூபாய், அம்பது ரூபாய் நோட்டுக்களை எனது மேஜையில் பரப்புவாள் ஆச்சி. சிலவற்றில், திருநீற்றின் வாசம் இருக்கும். அவற்றை நோட்டு வாரியாக பிரித்து,அடுக்கி, எண்ணி ரப்பர் பேன்ட் போட்டு செல்லானில் எழுதுவது வரை என்னோட வேலை. " எவ்வளவு இருக்குய்யா ?" கண்களை இனுக்கியபடி ஆச்சி கேட்பாள். " முன்னூத்தி இருபது.." என்பேன். " ஆங்..நல்லா பாரு..முன்னூத்தி எம்பதுல்லா இருக்கும்..ஒரு தடவைக்கு ரெண்டு தடவைல்லா எண்ணிட்டு வந்தேன்.." ஆச்சி நம்மிடம் போட்டு வாங்குவாள். ஆச்சி கண்முன்னேயே, மூணு மட்டம் எண்ணி காண்பித்தபிறகு, " இருக்கும்..இருக்கும்..வரும்போது கந்தையா பிள்ளை கடைல பாக்கி சில்லறை கேட்டாருன்னு எடுத்து கொடுத்தது அயத்துப்போச்சு .." என்று பொக்கை வாயை திறந்து சிரிப்பாள் சேது ஆச்சி. கவுண்டரில் பணத்தை கொடுத்து பாஸ் புக்கில் வரவு வைத்த பிறகு மீண்டும் என்னிடம் வந்து " இப்ப எவ்வளவுய்யா மொத்தம் இருக்கு.?" என்று கேட்பாள். பார்த்து சொன்னபிறகுதான் நிம்மதி. ஆச்சியின் மனதில், முந்தைய பாலன்ஸ் நினைவில் இருக்கும். மனக்கணக்கில் கூட்டி சரி பார்த்துக்கொள்வாள். " எனக்கு நீ சொன்னாதான்யா ஒரு திருப்தி வரும் பாத்துக்க.." என்று வாயை கோணியபடி ஒரு சிரிப்பு. ஆச்சி, சமயத்தில் என் பக்கத்தில் உள்ள மர ஸ்டூலில் அமர்ந்து வீட்டு கதைகளை எல்லாம் சொல்லுவாள். தம்பி மகன்,மருமகள் மேலே நிறைய ஆவலாதிகள் உண்டு அவளுக்கு. " நல்ல சாப்பாடு கெடையாதுய்யா..ஒரு நல்லது கெட்டதுக்கு என்னை கூட்டிட்டு போக மாட்டாகய்யா..நான் சம்பாதிக்குறத எல்லாத்தையும் இவுகளுக்குத்தானய்யா கொடுக்கேன்..நாளைக்கு நான் செத்துப்போனா, நாலு பேருக்கு ஒருவாய் காப்பித்தண்ணி கொடுப்பாளாய்யா..நீயே சொல்லு.." ஆச்சி இப்படி சொல்லும்போது அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகும். " கவலைப்படாத ஆச்சி..நீ செத்துப்போனா, வர்ற ஆளுகளுக்கு நான் காப்பித்தண்ணி வாங்கி தரேன்..நிம்மதியா இருங்க..உங்களை ஜாம் ஜாம்னு வழியனுப்பி வச்சுருவோம்.." என்று நான் சொல்வேன். ஆச்சிக்கு ஏகத்துக்கு சந்தோசம். " நம்ம ஆபிஸ் ல உள்ள எல்லாரும் வருவாக..அவங்க பிள்ளைகள் எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்கும் ஆச்சி..சரிதானா மணி ? " என்று ஆபீஸ் மணியிடம் நான் ஆச்சி முன்பு ஒப்புதல் வாங்குவேன். ஆச்சி வாயெல்லாம் சிரிப்பை பார்க்கணுமே..ஒரே சிரிப்பாணி தான். " நீ மகராசனா இருக்கணும்யா.." ஆச்சி இடுப்பில் இருந்து சுருக்குப்பை எடுத்து திருநீறு பூசி விட்டாள். அன்று முதல், வங்கிக்கு வரும்போதெல்லாம், ஆச்சி என்னிடம் " எய்யா..காப்பித்தண்ணி ..மறந்துராதீக.." என்று சிரித்துக்கொண்டு சொல்வது வழக்கமாகி போனது. என்னோடு பணிபுரியும் ஊழியர்கள் கூட கேலி செய்யும் அளவிற்கு காப்பித்தண்ணி பிரபலமாகி விட்டது. வங்கி கணினிமயமாகியபிறகு, நிலைமை ரொம்பவே மாறிப்போனது. வங்கி வாடிக்கையாளர்களை நிமிர்ந்து பார்த்து பேசும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது. சேது ஆச்சி எப்போதும் போல வந்தாள். போனாள். வங்கிக்கு என்று இருந்த வாடிக்கையாளர்கள் போக, புதிது புதிதாய் ஆட்கள் வந்து போனார்கள். வேறு வேறு கிளையின் வாடிக்கையாளர்கள் எல்லாம் வந்து வெவ்வேறு கிளைகளின் கணக்கிற்கு பணம் கட்டினார்கள். கோர் பாங்கிங் முறையில் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்..வங்கி முழுவதும் குளிர் சாதன வசதி..ஆச்சி குளிரில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. விரைக்குது என்பாள். வெள்ளை சீலையை உடம்பு முழுக்க இழுத்து போர்த்தி கொள்வாள். முன்புபோல எனது இருக்கை அருகே அமர்ந்து கதை சொல்ல எல்லாம் இப்போது அனுமதி இல்லை. நேரமும் இல்லை. ஆச்சி சத்தமின்றி வந்து போனாள். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அலுவலகம் வந்த என்னைப்பார்த்து ஆச்சி அழுதே விட்டாள். " இப்படி அரை ஆளா போயிட்டியேய்யா...உடம்புக்கு என்னய்யா செஞ்சது..யாருகிட்டேயும் கேட்டா ஒழுங்கா சொல்லுதாகளா.. கரைஞ்சு போயிட்டீகளே.." எனது கைகளை பிடித்து மூசு மூசென்று அழுதாள் ஆச்சி. " ஆச்சி..உனக்கு காப்பி தண்ணி கொடுக்காம, நான் முந்திக்குவேன்னு பயந்து போயிட்டிகளா ?" என்று சிரித்தேன். சட்டென்று வாயை பொத்தினாள் ஆச்சி. " வேண்டாம்யா..அந்த வார்த்தை எல்லாம் சொல்லாதேய்யா..ஒனக்கு வாழற வயசு..பேரன்,பேத்திக எல்லாம் எடுத்து சந்தோசமா இருக்கணும்.. நேத்து தான் பழனிக்கு போயிட்டு பழநியாண்டவனை பார்த்துட்டு வாறன்..ஜெயா மகள அங்க தான கட்டி கொடுத்திருக்கு.. மாசமா இருக்காளாம்..அதான் பார்த்துட்டு வருவோம்னு எல்லாரும் போனாக..நானும் போயிட்டு வந்தேன்..நெத்தியக்காட்டு.." என்று சொல்லி பட்டு போல இருந்த திருநாறு பூசி விட்டாள் ஆச்சி. பூசும்போது ஆச்சியின் கைகள் நடுங்கின. வாய்க்குள் என்னவோ முணுமுணுப்பது கேட்டது. திருவாசகமாய் இருக்குமோ என்னவோ..? சில மாதங்களில், நான் அருகில் இருந்த வேறொரு கிளைக்கு மாறி சென்று விட்டேன். போகும்போது சேது ஆச்சியிடம் சொல்லி செல்ல இயலவில்லை. ஆச்சி ரொம்ப வருத்தப்படுவாள் என்று தெரியும். பின்னொரு முறை, ஆச்சியை பற்றி விசாரித்தபோது, தம்பி மகன் பொண்டாட்டிக்கும், ஆச்சிக்கும் பேச்சு தடித்துப்போய் ஆச்சி கோவிச்சுட்டு வெளியே வந்து லைன் பஸ் முதலாளி வீட்டு கார் கொட்டகையில் படுத்து வேலைக்கு செல்கிறாளாம்..அட கண்றாவியெ.. இங்கே வந்தபிறகு, பழைய கிளைக்கு அடிக்கடி சென்று வர முடியவில்லை. ஒருமுறை வங்கியில் இருந்து வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் முறை எனக்கு வந்தது.( 570 கோடி கண்டைனர் லாரி மாதிரி ) பழைய கிளைக்கு உற்சாகமாய் சென்றேன். நல்ல கூட்டம். நவீன இருக்கைகள்..டோக்கன் சிஸ்டம்..வலது ஓரத்தில் இடுங்கியபடி உட்கார்ந்திருந்த வெள்ளை சீலை கட்டிய ஆச்சி.. அட..சேது ஆச்சி..வேகமாய் அருகில் சென்றேன். எதிர் சீட்டில் இருந்த சரோஜா மேடம் " சார்..வாங்க..நல்லா இருக்கீகளா..சேது ஆச்சி மண்டையை போட்டு மூணு மாசம் ஆச்சு..எல்லோரும் உங்களைத்தான் நினைச்சோம்..நீங்க வெளியூர் போயிருந்ததாய் சொன்னாங்க..அதான் சொல்லல.." நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். காப்பித்தண்ணி யாராச்சும் வாங்கி கொடுத்தாகளா? என்று கேட்க வார்த்தைகள் வந்தன. அடக்கி கொண்டேன். ஆச்சியின் தம்பி மகன் வாங்கி கொடுத்திருப்பான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். -------------------------------நாறும்பூநாதன்
இடம் : மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமம். நாள் : 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி. கோவில் வாசல் முன்பு அந்த அலங்கரிக்கப்பட்ட ரெட்டை மாட்டு வண்டி நிற்கிறது. மாட்டு வண்டி நிறைய புத்தகங்கள். வண்டியில் இருந்து கிராமபோன் ரெகார்டுகளில் பாடல்கள் ஒலிக்கின்றன. மக்கள் ஆர்வத்துடன் கூடுகின்றனர். ஊர் வழக்கப்படி ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் அமர்கின்றனர். ஊர்க்காரர்கள் போட்ட பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த மனிதர் பேச தொடங்குகிறார். " நீங்கள் உலக நடப்பை தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதில் கதைகள் உண்டு. வரலாறு உண்டு. இலவசமாக இதை நீங்கள் வாசிக்கலாம். உங்களில் படித்தவர்கள் , இவற்றை படிக்காத மக்களுக்கு வாசித்து காட்டலாம். காந்தியடிகள் சொன்னது போல, அனைவரும் கற்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நூலகத்துறை மூலமாக இந்த ஏற்பாட்டை செய்கிறோம். இந்த நடமாடும் நூலகத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்வீர்களா ? " பேசியவர் எஸ்.ஆர்.ரெங்கநாதன். மாட்டு வண்டியை ஏற்பாடு செய்தவர் மன்னார்குடியை சேர்ந்த கனகசபை பிள்ளை என்பவர். அவர் அந்த பகுதியில் முதியோர் கல்வி நடத்தி வருபவர். கூட்டம் அமைதி காத்தது. ரெங்கநாதன் மீண்டும் கேட்கிறார் " யாரேனும் வந்து பேசுங்களேன் " ஆறு பேர் தயங்கி தயங்கி முன் வருகின்றனர். " நாங்கள் படிக்க ஆர்வமாத்தான் இருக்கோம். ஆனால், பகல் முழுக்க வயக்காட்டில் வேலை செஞ்சுட்டு, சூரியன் சாஞ்சபிறகு தான் வீட்டுக்கு வருவோம். இருட்டுனப்பிறகு தான் படிக்க முடியும் " ஒருவாறு சொல்லி முடிக்கின்றனர். ஆண்கள் பகுதியில் தலைவர் போன்று இருப்பவர் கூறுகிறார் " ராத்திரி தான் படிக்க முடியும்னா , வெளக்குக்கு ஊத்துறதுக்கு எண்ணெய் யாரு கொடுப்பாக ? " பெண்கள் பகுதியில் இருந்து லேசாக சத்தம் வருகிறது. " நாங்க எண்ணெய் தர்றோம் ". தலைவர் : நாங்க எண்ணெயெல்லாம் தர முடியாது..ஆமா.." பெண் : "நீங்க ஒன்னும் தரவேண்டாம் " தலைவர் : " அப்படின்னா, எண்ணெய்க்கு எங்கே போவீங்க ?" பெண் : வீடு வீடாய் போயி எண்ணெய் கேட்கலாமே..?" தலைவர் : " என்னது..பிச்சையா...எங்க வீட்டு பெண்கள் எல்லாம் எண்ணெய் பிச்சை எடுக்க வர மாட்டாங்க..(ஆவேசத்துடன் ) பெண் : பிச்சை கேட்க வேண்டாம். சின்ன பசங்களை அழைச்சு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் மட்டும் வாங்கிட்டு வாங்க..ன்னு சொல்லலாம்..கிருஷ்ண ஜெயந்திக்கு அப்படித்தானே சேகரிக்கோம்..அதை மாதிரியே செய்வோம்.." கூட்டம் அந்த பெண்ணின் குரலை கை தட்டி ஆமோதிக்கிறது. தலைவர் முகத்தை தொங்கப்போட்டபடி அமர்கிறார். கனகசபை பிள்ளை முகத்தில் மகிழ்ச்சி. இப்போது அவர் பேச ஆரம்பிக்கிறார். " இந்த மாட்டு வண்டி இரண்டு மாதம் கழித்து மீண்டும் வரும். இப்போது எடுத்து படித்து விட்டு, அடுத்த முறை கொடுக்கலாம்.எல்லோரும் படியுங்கள். படித்தவர்கள் வாசித்து காட்டுங்கள் ". படித்த இளைஞன் ஒருவன் கூட்டத்தில் எழும்பி பேசுகிறான். தேவாரம், திருவிளையாடல்புராணம், பூகோளம் மற்றும் வரலாறு சார்ந்த புத்தகங்கள் சில நிரந்தரமாய் இங்கே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றான். கனகசபை : " ஒரு கிராமத்திற்கு என்று நிரந்தரமாய் புத்தகங்களை எப்படி கொடுக்க முடியும். நம்மிடம் வாங்க பணம் இல்லையே.." இளைஞன் : அந்த பெண்மணி அதற்கு வழி காட்டி இருக்கிறார். முதியவர் ஒருவர் : அதெப்படி ? எண்ணையை வாங்குவது போல புத்தகம் எப்படி வாங்க முடியும் ? ஒருத்தர்ட்டயும் புத்தகம் கிடையாதே.." இளைஞன் : இல்லை..அறுவடை நேரத்தில், ஒவ்வொருத்தர்ட்டயும் அவர்களால் இயன்ற நெல்லை கொடுங்கள் என்று கேட்கலாம். அப்படி வாங்கினால், வருடத்திற்கு பத்து ரூபாயாவது கிடைக்காதா ? அதை கொண்டு நிரந்தரமாய் புத்தகங்கள் வாங்கலாமே?" பெஞ்சில் அமர்ந்திருந்த ரெங்கநாதன் மற்றும் கனகசபை ஆகியோர் முகத்தில் மகிழ்ச்சி. மக்கள் ஆர்வத்துடன் கரவொலி எழுப்புகின்றனர். இரண்டு மணி நேரம் கழித்து மன்னார்குடிக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்றனர் அந்த இருவரும். மக்களின் அறிவு தாகம் அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மாட்டு வண்டி மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் 12 மைல் சுற்றளவிற்கு செல்கிறது. கிராமத்து மக்கள், மாட்டு வண்டிக்கு ஒரு ஜோடி மாடுகளையும், ஒரு வண்டிக்காரரையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். எஸ்.ஆர்.ரெங்கநாதன் பிரமித்து போகிறார். மன்னார்குடியில் நூலக இயக்கத்திற்காகவே ஒரு மாநாடு நடத்திய கனகசபை கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார். அக்டோபர் 18 முதல் 21 வரை (1931 ) நடத்திய மன்னார்குடி மாநாடு, நூலக வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை உருவாக்கியது. லண்டன் நூலகத்தில் நூலகப்பயிற்சி பெற்ற, சீர்காழி எஸ்.ஆர்.ரெங்கநாதன், மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனத்தில் நடமாடும் நூலகத்தை அறிமுகம் செய்ததை போல, நமது நாட்டில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகத்தை அறிமுகம் செய்தால் என்ன என்று யோசித்து ஸ்லைடு ஷோ மூலம் மாட்டு வண்டி நூலகத்தை வடிவமைத்து வெளியிட்டார். அதை பார்த்த மன்னார்குடி கனகசபை என்ற அறிஞர் , " புத்தகங்கள் நிரம்பிய மாட்டு வண்டியை ஒற்றை மாடு இழுக்க இயலாது. இரட்டை மாடுகள் இழுக்கும் வண்டியாக அதை மாற்றி அமையுங்கள். இல்லையெனில், அதை நானே செய்து தருகிறேன்..அந்த மாநாட்டில் நீங்கள் வந்து பேசி, நூலக இயக்கத்தை மாட்டு வண்டியில் ஆரம்பியுங்கள் " என்று யோசனை சொன்னார். அது மகத்தான வெற்றி பெற்றது. அப்படி 72 கிராமங்களில் 275 முறை பயணங்கள் செய்து, 3782 நூல்கள் 20000 தடவைகளுக்கு மேல் அந்த மக்களிடம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன என்கிற செய்தி உண்மையில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ரெங்கநாதன் அவர்களின் மாட்டு வண்டி பயணத்தால் ஈர்க்கப்பட்டு, மறு வருடம் ஜூலை 10 ஆம் நாள் தென்னாற்காடு மாவட்டத்தில் வில்வ ராய நத்தத்தில் மிதிவண்டி மூலம் நடமாடும் நூலக இயக்கத்தை தொடங்கியவர் வழக்கறிஞர் டி.ஆர்.சக்கரபாணி என்பவர். மிதி வண்டியில் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வீடு வீடாக நூல்களை கொடுத்து ஐந்தே மாதங்களில் 1649 வாசக அன்பர்களுக்கு 2379 நூல்களை கொடுத்து வாங்கி இருக்கிறார். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாட்டு வண்டி மூலம் நூலக இயக்கப்பணியை மேற்கொண்டவர் பாலசுப்பிரமணிய ஐயர். தனது வண்டிக்கு பாரதியின் " ஞானரதம்" என்று பெயர் வைத்துக்கொண்டாராம். 1936 இல் நடைபெற்ற இந்த நடமாடும் நூலகம் மூலம் 25 கிராமங்களில் 3407 வாசக அன்பர்களிடம் 787 நூல்கள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் நடமாடும் மோட்டார் வாகன வண்டி நூலகம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள் ? ஒவ்வொரு மாவட்ட தலைநகர் மைய நூலகத்திலும் ஒரு பேருந்து இருக்கிறது. நூலகங்கள் இல்லாத கிராமப்புறங்களுக்கு இந்த வண்டி செல்கிறது. மக்களிடம் புத்தகங்களை வழங்கி அவர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுகிறது. 1948 இல், தனது மாணவராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக ஆனதை கேள்விப்பட்டு, எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவரை பார்க்க அதிகாலையில் ஆறு மணிக்கு அவர் வீட்டு கதவை தட்டுகிறார். அதிகாலையில் தனது முன்னாள் ஆசிரியர் வந்து நிற்பதை பார்த்து அவர் திடுக்கிடுகிறார். " ஐயா..வாருங்கள்..என்ன இந்த அதிகாலை நேரத்தில் ?" முன்னாள் ஆசிரியர் ரெங்கநாதன் அவரிடம், " நான் உங்களுக்கு குரு தானே..எனக்கு இப்போது குருதட்சணை வேண்டும் " என்கிறார். " என்ன தர வேண்டும்..சொல்லுங்கள்.." என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார் அவர். " நீங்கள் தானே கல்வி அமைச்சர்..பொது நூலக சட்ட முன் வரைவு இதோ இருக்கிறது. இதை எப்படியேனும் சட்டமாக்கி தர வேண்டும். அனைத்து மக்களும் நூலகத்தை பயன்படுத்த இது உதவி செய்யும் " என்கிறார் எஸ்.ஆர்.ரெங்கநாதன். அப்படி நிறைவேறியது தான் 1948 பொது நூலக சட்டம். இந்தியாவில் முதன்முதலில் சட்டம் நிறைவேற்றப்பட்டது சென்னை மாகாணத்தில் தான். தனது வாழ்நாள் சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை நூலக இயக்கத்திற்கு அளித்தவர் " தேசிய நூலக இயக்கத்தின் தந்தை " யான எஸ்.ஆர்.ரெங்கநாதன், தஞ்சை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர். கணித பேராசிரியராகவும், சென்னை பல்கலை கழக நூலகராகவும் பணியாற்றிய இந்த மனிதரின் வீட்டில் விருந்தாளிகள் வந்தால் உட்கார ஒரு நாற்காலியோ, ஷோபாவோ கிடையாது. பழைய பாய் விரித்து அதில் தான் யார் வந்தாலும் அமர வேண்டும். மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்த இந்த மனிதர் உருவாக்கிய கோலன் பகுப்பு முறை உலகின் பல்வேறு நூலகங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ---------------------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தொடர்பிற்கு ; narumpu @gmail .com Attachments area
இன்னா நாற்பது , இனியவை நாற்பது ----------------------------------------------------------- அற்புதமான சிறுகதைகள் எழுதி புகழ்பெற்ற அன்டன் செகாவ், ஷெர்லாக் ஹோம்ஸ் புகழ் சர் ஆர்தர் கானன் டாயில், வில்லியம் சாமெர்செட்மாம், ஆலிவர் கோல்ட்ஸ்மித், காதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்ற ஜான் கீட்ஸ், ராபின் குக், சீனக்கவிஞர் லூசுன் ஆகியோர் வரிசையில் தற்போது மருத்துவர் கு.சிவராமனும் இணைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இதென்ன வரிசை என்று கேட்கிறீர்களா ? மேற்கூறிய அனைவரும் மருத்துவம் படித்த எழுத்தாளர்கள் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. . நான் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் நீண்டநாள் வாசகன். ஆறாம் திணை, ஏழாம் சுவை,உயிர் பிழை, நலம் 360 இவற்றை தொடர்ந்து இன்னா நாற்பது, இனியவை நாற்பது .. என்னதான் நமக்கு தமிழ் மொழி மீது பற்றிருந்தாலும், பதினெண்கீழ்க்கணக்கு , பதினெண் மேல்கணக்கு நூல்கள் எவை என்று கேட்டால், காத தூரம் ஓடுவோம். இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வரும் என்பதை போகிற போக்கில் சொல்லி செல்கிறேன். " கொடுங்கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா ; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ; கடு மொழியாளர் தொடர்பு இன்னா, இன்னா தடுமாறி வாழ்தல் உயிர்க்கு " என்ற பாடலை சொல்லும்போது, எட்டாம் வகுப்பில் மனப்பாட செய்யுளில் நாலு மதிப்பெண் சொளையாய் எடுத்த ஞாபகம் வருகிறதா ? அப்போது அதன் பொருள் அறிய கோனார் நோட்ஸ் துணைக்கு இருந்தாலும், வாழ்வோடு சேர்த்து பொருத்திப்பார்க்கும் அதன் உண்மைப்பொருள் நாற்பது வயதில் தான் தெரியும். சரி..நம்ம நூலுக்கு வருவோம். இதற்கு முந்தைய தலைமுறை அப்பாக்கள் பார்த்த கேன்சர் நோயாளிகள் , " வாழ்வே மாயம் " கமலும், " பயணங்கள் முடிவதில்லை " மோகனும் தான் என அவர் நகைச்சுவையோடு ஆரம்பிக்கும்போது நாம் வாய்விட்டு சிரிக்க ஆரம்பிக்கிறோம். நாற்பதின் " மகிமைகள் " தான் என்னே ! நாற்பது வயதில் மாஸ்டர் செக் அப் பண்ணாவிடில், நாம் வினோத ஜந்து போல சமூகத்தில் பார்க்கப்படும் பார்வையில் இருந்து துவங்குகிறது நூல். சர்க்கரை நோய் பெற்றோர் கொடுத்த சீதனம் என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, காற்றில் கலந்துள்ள ஆபத்தான துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், அவை நமது நுரையீரலுக்கும், மூளைக்கும், ரத்தத்திற்கும், கணையத்திற்கும் ஊடுருவி செல்லும் தன்மை கொண்டன என்பதும், இப்படி காற்று மாசுபடுதலும் கூட சர்க்கரை நோய்க்கு காரணம் என்ற புதிய உண்மை அச்சுறுத்துகிறது. உலகில் ஆரோக்கியமான உணவு பட்டியலில் , நமது இட்லியும், சாம்பாரும் இரண்டாவது இடம் என்று ஒருமுறை படித்த ஞாபகம். திருநெல்வேலி டவுண் விஞ்சை விலாஸ் ஓட்டல் வாசலில் இந்த பேப்பர் செய்தியை ஒருவர் கத்தரித்து ஒட்டி இருந்தார். இப்போது ஓட்டலுக்கு சென்றால், யார் இட்லியை சாப்பிடுகிறார்கள் ? " வீட்டுல தான் தெனமும் இதத்தான அவிச்சுக்கொட்டுதோம். இங்கயும் வந்து இதையெ சொல்லுதீகளே ? " என்று ஒரே ஆவலாதி பெண்களிடம் இருந்து வருவதை புறந்தள்ள முடியாது. EAT LANCET GLOBAL COMMISSION என்ற சர்வதேச அமைப்பு 2050 க்குள் உலகில் உணவு முறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றொரு அறிக்கை விட்டு, " உணவில் இனி அதிகம் தாவர உணவும், குறைவான மீன் புலால் புரதமும் சேர்க்கப்பட வேண்டும் " என்று வலியுறுத்துகிறதாம். தலைவாழை இலைபோட்டு, அதில் காய் வகைகள் பலவும் பரிமாறி விட்டு, ஆவி பறக்கும் சோற்றை, டேபிள் ஸ்பூன் கொண்டு இனிமேல் பரிமாறுங்கள் என்று மருத்துவர் சொல்லும்போது, மனசு திக்கென்றது. முட்டைகோஸ், பீன்ஸ் பொரியலில் சாம்பார் ஊற்றி பிசைந்து, ஓரமாய் கொஞ்சூண்டு இருக்கும் மல்லி சம்பா சோற்றை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் என்று நைசாக அறிவுறுத்துகிறார் மருத்துவர். எடையை குறைக்க, " கீட்டோஜெனிக் டயட், மரக்கறி வீகன் டயட்" என்ற இருவகைகள் இருக்கின்றன. இந்த இரண்டு உணவு வகைகளிலும் உள்ள சர்வதேச உணவு அரசியலை இவர் சொல்லும்போது, க்ரில் சிக்கன் உள்ளே இறங்க மறுக்கிறது. இன்றைய தலைமுறையை " FAANG " என்ற அமைப்பே நிர்வகிக்கிறது என்று சொன்னவுடன், எதோ ஒரு சர்வதேச அமைப்பு போல என நினைத்தால், facebook ,apple ,amazaan ,netflix , google என்று விளக்கம் கொடுத்தபோது குபீர் சிரிப்பு எழுந்தாலும், அதுவே ஆட்டிப்படைக்கும் பூதங்கள் என்பது நம் கண் முன்னே தெரிகிறது. காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது, காதில் செவிட்டு மெஷின் போல வயரை மாட்டிக்கொண்டு, எதிர்ப்படும் எந்த ஜீவனையும் உற்று நோக்காத, " காலை வணக்கம் " கூட சொல்லாத, நாற்பது வயதினரை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதன் அவ்வளவு வெறுப்பானவனா ?.. தனி தீவாக இப்படி மாறிப்போயிருக்கும் மனிதர்களை என்ன செய்வது ? மனிதர்களை விடுங்கள்..அதிகாலை பொழுதில் இரை தேட வலசை செல்லும் பறவைக்கூட்டங்களை ரசிக்கலாம்..கலைடாஸ்க்கோப் போல வானில் மாறும் வினோத அதிசயங்களை காணலாம். எதையுமே ரசிக்காமல் வாட்ஸ் ஆப் வாந்திகளை அடுத்தடுத்து எடுத்துக்கொண்டிருக்கும் இந்தக்கால தலைமுறைகளை கவலையோடு கவனிக்கிறார் மருத்துவர். முந்தைய தலைமுறையினரின் கோபங்கள் எப்படி எல்லாம் வெளிப்பட்டன, இந்த தலைமுறையினரின் கோபங்கள் எப்படி வெளிப்படுகின்றன என்ற ஒப்பீடு சுவாரசியமானது. அப்பாக்கள் யாரும் யோகா வகுப்பிற்கு சென்றதில்லை. " ஒரு முழ மல்லிகைப்பூவில், அம்மாக்களோடு சமரசம் செய்து விடுவார்கள் அல்லது " கூட ஒரு வாய் தான் சாப்பிடுங்களேன் " என்ற அம்மாக்களின் குழைவில் கோபமெல்லாம் கரைந்து விடும் என்று சொல்லும்போது, ஊடலும், கூடலும் எவ்வளவு இயல்பாக நடந்து விடுகின்றன என்பதை உணர முடிகிறது. முப்பது நொடிகளில் வாட்ஸ் ஆப் பில் பதில் வரவில்லை எனில், அன்பில்லை..என்று சண்டையிடும் இன்றைய தலைமுறையின் சகிப்பற்ற போக்கினை அதோடு ஒப்பீடு செய்து சொல்லும் அதே வேளையில், அதற்காக அந்த காலத்தில் எல்லாமே சரி, இப்போது எல்லாமே மோசம் என்ற முடிவுக்கு வருவதும் சரியல்ல என்றும் சில உதாரணங்கள் கூறி செல்கிறார். ஒரு நாளைக்கு 15 கி.மீ நடக்கும் யானைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்ற செய்தி புதியது. யானைகளை தேக்கு மரக்கட்டைகளை எடுத்து செல்ல பயன்படுத்தலாம். பக்தர்களிடம் பத்து ரூபாய் வாங்கவும், கடைகளில் ஓசி மிச்சருக்கு கையேந்த வைப்பதும் அந்த மிகப்பெரும் ஆகிருதியை கேவலப்படுத்தும் செயல் தானே ? ஒரு நாளைக்கு 150 கிலோ இலை தழைகளை தின்று வாழும் அந்த ஜீவனை, புளியோதரைக்கும் சர்க்கரை பொங்கலுக்கும் பழக்கப்படுத்தினால், பின்னே சர்க்கரை வியாதி வராமலா இருக்கும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மருத்துவர். பெண்களுக்கு மெனோபாஸ் போல ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் வருவதையும் சொல்லி, கணவனுக்கும், மனைவிக்கும் இரண்டும் ஒரே சமயத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, இருவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஐந்து வயது இடைவெளி இருக்கும்படி அக்காலத்தில் திருமணம் செய்து வைத்ததையும் நினைவுகூரும்போது, வியப்பளிக்கிறது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு ஆஞ்சியோ பார்த்தபிறகு, வெளியே வந்த டாக்டர் , நோயாளியின் மனைவியிடம் " அடைப்பு நாலஞ்சு இருக்கு. மெடிகேட்டட் ஸ்டண்ட் வச்சிடலாமா ? மூணு லட்சம் தான்..இல்லேன்னா விலை குறைஞ்ச ஸ்டண்ட் வைக்கவா " என கேள்வி கேட்பதை பார்த்து மருத்துவர் கூறும் வாசகங்கள் மனதை நெகிழ வைக்கின்றன . " திக்கற்று திகைத்து நிற்கும் அந்த மனைவிக்கு எதுவும் தெரியாது. ஸ்டண்ட் டும் தெரியாது. அதன் விலையும் தெரியாது. அவருக்கு வேண்டியதெல்லாம் கணவனின் உயிர். எது செய்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது என்பதை ஒரு சகோதரனாய், நல்ல ஆலோசகனாய், அறம் சார்ந்த உணர்வோடு மருத்துவர்களே..நீங்களே முடிவெடுங்கள் " என கூறும் அறிவுரையை மருத்துவ உலகம் செவி சாய்த்து கேட்குமா ? உடல் சார்ந்த பரிசோதனைகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்று சொல்லும் அதே நேரத்தில், இந்த நேரத்தில் இவ்வளவு சோதனைகளும் அவசியமா என்பதையும் வணிகமாய் செயல்படும் மருத்துவமனைகள் மேல் வைக்கிறார். யோகா நல்லதா என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இடுப்பில் லங்கோடு கட்டி, காலை முதுகுக்கு பின்புறம் போட்டபடி ஆசனம் போடும் ஆசன ஆண்டியப்பன் திருநெல்வேலியை சேர்ந்தவர். அறுபதுகளின் பிற்பகுதிகளில் பாளையங்கோட்டை சந்தை அருகே யோகாசன மையத்தை துவக்கியவர். அவர் யோகாசனம் என்றே சொல்வார். என்ன ஆசனம் செய்தால், என்ன நோய் வராமல் தடுக்கலாம் என்று சொல்வாரே தவிர ஆன்மீகத்துடன் முடிச்சுப்போட்டதில்லை. நவீன விஞ்ஞானம் யோகா மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்று சொல்கிறது. இதனால் பின்னாளில் ஏற்படும் சிறுநீரக, இதய பிரச்னைகள் வருவதும் கணிசமாக தடுக்கப்படும். திருமூலரின் மூன்றாம் தந்திரத்தையும், ஒன்பதாம் தந்திரத்தையும் நியூட்டனை படித்தது போல அறிவியலாய் பார்க்காமலும், பிடிக்காமலும் போனதும் காரணம் என்று குறிப்பிடுகிறார் ஒரு இடத்தில. இந்த நூல் புற்றுநோய் பற்றி..பக்கவாதம் பற்றி..மாரடைப்பு பற்றி, சுற்றுசூழல் பற்றி..எல்லாம் பேசுகிறது. ஆனால், நோய்கள் பற்றிய புத்தகம் என்று சொல்ல மாட்டேன்..தம்பதியர்களிடையே ஏற்படும் இடைவெளியை பற்றி பேசி விட்டு, அவற்றை களைய சில மெனக்கெடல்களை பற்றியும் பேசுகிறது. மலரினும் மெல்லிய காதலை பற்றி பேசுகிறது. நாற்பது வயதில், அந்த மலர் சூலுற்று, காயாகி,முள் சீத்தாப்பழமாகி போய்விடுகிறது என்று சொல்கிறது. கணவனோடு சண்டை போட்டு விட்டீர்களா ? அரை மணி நேரம் கழித்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வாங்கி அன்பை கொட்டி ஒரு கடிதம் எழுதிப்போடுங்கள் என்று சொல்கிறது. " சங்கத்தில் பாடாத கவிதை, உன் அங்கத்தில் யார் தந்தது ?" என்ற இளையராஜா பாடலை கேளுங்கள் என்று கிளுகிளுப்பூட்டுகிறது. நாற்பது வயது பெண்ணுக்கு தேவை " எத்தனை முறை என்னிடம் நீ உச்சம் பெறுகிறாய் அல்லது கொடுக்கிறாய் " என்பதல்ல. எத்தனை முறை என்னிடம் புன்னகைக்கிறாய் ? எவ்வளவு நிமிடங்கள் கண் பார்த்து பேசுகிறாய் ? எத்தனை முறை என் கரம் பற்றி உனது நெஞ்சில் வைத்து கொள்கிறாய் ? என்றெல்லாம் அகநானூற்று பாடல்களாய் காதல் உணர்வுகளை கண்முன்னே விரிக்கிறது என்றே சொல்லலாம். " இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் ? முழுமை பெற்ற காதல் என்றால், முதுமை வரை கூட வரும் " என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன. நோய் பற்றிய நூலை தொடர்ந்து வாசித்தால், வாசகனுக்கு களைப்பும் சோர்வும் ஏற்பட்டு மூடி விட வாய்ப்புண்டு. வாசிக்க வாசிக்க எல்லாமே இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆனால், இந்த நூலை நகைச்சுவை உணர்வும், காதலும் இழையோட எழுதியிருப்பதால், படிக்க சுவாரஸ்யமே ஏற்படுகிறது. நோய்க்கூறுகளை சொல்லிய அடுத்தகணமே, அவற்றை எப்படி இயல்பாக சரி செய்யலாம் என்பதை சொல்லி செல்கிறார் மருத்துவர். இது கூட ஒரு உளவியல் பார்வை தான். நோய்களை மட்டும் அல்ல. மலிவான ஆட்கள் கிடைக்கும் தேசமாய் மாறிப்போயுள்ள அவலத்தையும் சொல்கிறது. கொடுப்பதை வாங்கி விட்டு வேலை செய்ய 1000 ஜிகாபைட் இயந்திரங்கள் 120 கோடிப்பேர் உள்ளதை சொல்லி, பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டு கம்பளம் விரிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள்,அரசுகள் பற்றியும், சூழலியல் சிதைவுகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. எதிர்காலத்தில், கிரிக்கெட்டில் மேற்கு இந்திய தீவு அணி வேண்டுமானால் இருக்கும். தீவு இருக்குமா என்று தெரியாது என்று சொல்கிறது. பயணங்களின்போது நல்ல திரைப்படங்களை பாருங்கள் என்கிறார்.நல்ல புத்தகங்களை வாசித்தால், ஆயுள் கூடும் என வாசகர்களுக்கு மட்டுமல்ல, நோயை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் சேர்த்தே கூறுகிறார். பறை இசை என்பது இழவுக்கு அடிக்கும் இசையல்ல. உழவுக்கும், உடலுக்குமான கொண்டாட்ட ஒலி.. அமெரிக்க தமிழ் சங்கங்களின் தேசிய கீதமாக பறை இசை ஒலிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். பறை இசை மன அழுத்தத்தை குறைக்கிறது என்று சொல்லும்போது, மனம் குதூகலிக்கிறது. திருமண வீடுகளில், நண்பர்களோடு, சுற்றத்தாரோடு சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள் என்று உற்சாகமூட்டுகிறார். காத்திருத்தல் பற்றிய கட்டுரை அருமையான கவிதை. காத்திருத்தல் என்பது எவ்வளவு சுகம். 3000 , 4000 மூலிகைகளை முகர்ந்து பார்த்து, சுவைத்து பார்த்து, அந்த சாறு இறங்கிய 3000 மனிதர்களின் முகங்களை பார்த்து, விழி பார்த்து நாடி பார்த்து சொன்ன சித்தர்களின் காத்திருத்தலை விவரிக்கும்போது, சித்த மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது. இடையிடையே, இவரது அப்பாவின் பழைய அட்லஸ் சைக்கிள் கேரியரில் நம்மை அரூபமாய் உட்காரவைத்து திருநெல்வேலி ராயல் டாக்கீஸுக்கும் அழைத்து செல்லும்போதும், அசோக் பிளேடு கொண்டு எட்டாவது முறை அவர் சவரம் செய்வதை பார்க்க வைக்கும்போதும், பழையதை தயிர் விட்டு பிசைந்து , தொட்டுக்க லட்சுமி விலாஸில் வாங்கிய பக்கடா பொட்டலத்தை வைத்துக்கொள்வதை வர்ணிக்கும்போதும், என்னைப்போன்ற திருநெல்வேலிக்காரன்களின் விழியோரம் நீர் கோர்ப்பதை தவிர்க்க முடியாது. நோய்களைப்பற்றி எழுதும்போதே, தேவதேவனின் கவிதையை சொல்கிறார். வண்ணதாசனின் கதையை, வேள்பாரியின் நினைவை, புதுமைப்பித்தனின் " காஞ்சனையை " ...அடேங்கப்பா...மனிதர் எவ்வளவு வாசிக்கிறார் என்று வியக்க வைக்கிறது. இவை எல்லாமும்தான் இந்த நூலின் சுவை..! இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, பின்னணியில் ராஜாவின் இசையில் ஜென்சி பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது. அன்புடன்... இரா.நாறும்பூநாதன்
புதுமைப்பித்தன் (ஏப்ரல் 25 - பிறந்த நாளை முன்னிட்டு ) ---------------------------- இவருக்கு எல்லாமே எள்ளல் தாம்..ஆனால் இலக்கிய விமர்சனம் என்று வந்து விட்டால் மனுஷன் நெற்றிக்கண்ணை திறந்து விடுவார். தனக்கு வேண்டியவர் என்பதால் அவரது படைப்புக்களை பாராட்டி விடமாட்டார். மனிதர் நக்கீரப்பிறவி தான். அவரோட நண்பர் சுடலைமுத்து அஞ்சல் துறையில் வேலை பார்ப்பவர். கூடவே கொஞ்சம் கவிதைப் பைத்தியமும் உண்டு. ஒரு பிரபந்தத்தை இயற்றி (!) புதுமைப்பித்தனிடம் நீட்டி, " இதுக்கு ஒரு சிறப்புப் பாயிரம் எழுதிக்கொடும் ஓய்.." என்றார். நண்பர் என்பதால், பிரபந்தத்தை முழுவதும் கேட்டார். கேட்டபிறகு ஒன்றுமே சொல்லவில்லை.( மனுஷன் எப்படித்தான் பொறுமையுடன் கேட்டாரோ ). சிறப்புப்பாயிரம் எழுதியே தர வேண்டும் என்று குரங்குப்பிடியாய் நிக்கிறார் நம்ம சுடலைமுத்து. மளமளவென ஒரு தாளை எடுத்து ஒரு பாடல் எழுதினார் : " அஞ்சல் சுடலைமுத்துவின் ஆலகவி கேட்டவர்கள் நெஞ்சம் உலர்ந்துபட்ட நேர்மை என்னே ! - நஞ்சு தின்னும் பிறந்திறவா வரம் பெற்றான் பித்தனான என்றக்கால் பிறந்திருப்பார் பெற்றி என்ன சொல் ! " பாடலின் அர்த்தம் புரிகிறதா ? கோனார் நோட்ஸ் தேவையே இன்றி புரியும் என்று நினைக்கிறேன். காதில் ரகசியமாய் வந்து கேட்பவர்களுக்கு சொல்கிறேன். திருப்பாற்கடலில் உருவான விஷத்தை சிவபெருமான் பருகியது தேவர்களை காப்பாற்றுவதற்காக இல்லை ஐயா..நம்ம சுடலைமுத்துவின் கவிதைகளை கேட்ட கொடுமை தாங்காமல் பருகி விட்டார்..அவரால், தற்கொலையும் பண்ண முடியாத நிலைமை ஏற்பட்டு பித்தனாகி விட்டார்..ஆனானப்பட்ட ஆதிசிவனுக்கே இந்த நிலைமை எனில், சாதாரண மானிடப்பிறவிகளான மக்களின் கதி என்னவாகும் ? அன்றோடு போனவர் தாம் சுடலைமுத்து. ************************************ ஞானராஜசேகரன் தயாரித்த " பாரதி " திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பீஜித்தீவில் கண்ணீர் விடும் தமிழ்பெண்களை எண்ணி பாரதி கவிதை வரிகளை எழுதும்போதே, கண்ணீர் விட்டு அழுவார் : " நாட்டை நினைப்பாரோ ? எந்த நாளினிற் போயதைக் காண்போமென்றே அன்னை நாட்டை நினைப்பாரோ ?- அவர் விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே ! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுங்குரல் மீட்டும் உரையாயோ ?... .. .. .. .. .. .. .. .. .. .. " இந்தக்காட்சி எவரின் மனதையும் தொடும். இந்த கவிதை வரிகளில் இருந்தே புதுமைப்பித்தனின் " துன்பக்கேணி " உருவாகியது. இலங்கை தேயிலை தோட்டத்தில் வெள்ளைக்காரர்களின் பொருளாதார சுரண்டலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளான தமிழ்ப்பெண்களின் குரலை தனது நீண்ட நெடுங்கதையில் பதிவு செய்தார். அந்தக்கதையில் " வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது " என்ற வரிகளை போகிறபோக்கில் எழுதி இருப்பார். வெள்ளக்கோவில் சுடுகாட்டு அருகே உள்ள பனைவிளையில் இருக்கும் மருதாயி கிழவியிடம் மூக்குடை பட்டு திரும்பும் எமதர்ம ராஜாவைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாய் இருக்கும். சாகப்போகிற கிழவியைப்பார்த்து " நான்தான் எமன்.." என்று விஸ்வரூபம் எடுத்து காட்சி தரும்போது, "அப்படியா..வா..இப்படி இரி .." என்று காலை நீட்டி வெற்றிலையை தட்ட தொடங்கும்போதே, எமனின் கம்பீரம் மறைந்து போகும். " உன்னாலே என் உசுரைத்தானே எடுத்துக்கிட்டு போவ முடியும் ? இந்த உடலைத் தூக்கிட்டு போவ உனக்கு திறமை இருக்கா ? ஒன்னை வேறயா மாத்த முடியும்..உன்னால அழிக்க முடியுமா ? அடியோட இல்லாம ஆக்க முடியுமா ? அதை உன்னைப்படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே ! அப்புறமில்ல உனக்கு ? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே ?" என்று பொக்கை வாயை திறந்து கிழவி சிரிக்கையில், எமன் மட்டுமா..நாமே வாயடைச்சு நிக்கிறோம். இது தான் புதுமைப்பித்தனின் அசலான எழுத்து. ******************************** " மனிதன் கடவுளைப் படைத்தான் ; அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.. இருவரும் மாறி மாறி போட்டி போட ஆரம்பித்தார்கள் ; இன்னும் போட்டி முடியவில்லை. நேற்று வரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப்பிறந்த மனிதன் ஈடுகட்டிக்கொண்டு வந்தான்." என்று துவங்கும் " சாமியாரும் குழந்தையும் சீடையும்" கதையின் களம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் படித்துறை. படித்துறையில் அமர்ந்து தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சாமியார். அருகே சற்று தள்ளி நான்கு வயது பெண் குழந்தை... ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடது பக்கம் சுலோச்சன முதலியார் பாலம்..முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டிய பாலம். கட்டபொம்முவின் துபாஷ் இராமலிங்க முதலியார் மகனான சுலோச்சன முதலியார் கட்டியது என்பதில் திருநெல்வேலிக்காரர்களுக்கு அபாரப்பெருமை என்று கிண்டல் செய்கிறார் புதுமைப்பித்தன்.( இப்பவும் பாலம் கட்டி நூற்றி எழுபத்தாறு வருஷம் ஆச்சு என்று வருஷா வருஷம் கொண்டாடிட்டு இருப்பதை பார்த்தால் என்ன சொல்வாரோ ?) பாவாடையில் சீடையை கட்டிக்கொண்டு வந்த குழந்தை காலை தண்ணீரில் விட்டு ஆட்டிக்கொண்டே அப்பப்ப சீடையை தின்கிறது. சின்ன கால்காப்புகள் தண்ணீரில் இருந்து வெளிவரும்போது, சூரிய கிரணம் அதன் மேல் பட்டு கண் சிமிட்டும். அடுத்த நிமிடம் கிரகத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன ? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்து தான் ஆகவேண்டும். கதையை வாசித்து விட்டு வருகையில், இந்த இடத்தை கடக்க முடியாமல் வியந்து நிற்க வைப்பார் புதுமைப்பித்தன். " மனிதன் நல்லவன்தான். தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அது தன்னிடமிருந்ததாக அவனுக்கு தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்." என்று சாமியார் சொல்லும்போது வேறேதோ நம் மனக்கண்ணில் ஓடினால், அது அவரின் தவறல்ல. " மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்கு கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்க தெரியாது. அழியும்வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது ." என்று மேலும் சொல்லிச்சென்ற சாமியாரின் சொற்கள் அர்த்தம் மிக்கவை. அவை சாமியாரின் சொற்களா ? இல்லையில்லை.. புதுமைப்பித்தனின் சொற்கள்.. அந்த கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை..அனந்த கோடி வருஷங்களில் ஒருவராவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே ! " உயிரற்ற மோட்ச சிலையே..உன்னை உடைக்கிறேன் " சாத்தனின் கோபம் நியாயமானது.. என்ன..இந்தக்கதை வாசிப்பவன் எவனும் கோவிலுக்குப் போவதில்லை. வாசித்தவன் கோவிலுக்கு சென்றால் ..சிலையின் மகோன்னதத்தை உணர முடியும்.. மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க ஒளிச்சுடராய் தெரிகிறான் புதுமைப்பித்தன்...! -----------------------------------இரா.நாறும்பூநாதன்
மொகைதீன் வாத்தியாரும், எலக்ட்ரிக் குக்கரும் ( சிறுகதை ) --------------------------------------------------------------------------- " இங்கன கோபால் வீடு எங்க இருக்கு ?" காஜா மொகைதீன் வாத்தியார் தனது பழைய ஹெர்குலஸ் சைக்கிளில் இருந்து இறங்கி தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார். இந்த தெரு என்று தானே சொன்னாங்க..! " எந்த கோபாலு ?" அவர் காம்பவுண்டின் வெளியே நின்றிருந்த வேப்ப மர கொழுந்து இலைகளை பறித்தபடி கேட்டார். இப்பவும் வேப்பிலைக்கொழுந்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் போல..நல்ல இளசாய் ஒரு கொத்து அவரின் கைகளில் இருந்தது. " முழுப்பெயர் ராஜகோபால் ன்னு நெனைக்கேன்.." மொகைதீன் வாத்தியார் முகத்தில் வழிந்த வியர்வையை கைகளால் துடைத்துக்கொண்டார். " மிலிட்டரி ல வேலை பார்த்தார்னு சொல்வாங்க.." வாத்தியாருக்கு அதில் உறுதியாய் தெரியாமல் மெல்ல இழுத்தார். " மிலிட்டரி ராஜாவா ..இதுலேயே நாலு வீடு தள்ளி பச்சை கலர் அடிச்ச வீடு தெரியுதா..முன்னாலே நாவல் மரம் நிக்குதுல்லா ..அந்த வீடு தான்" தெரிந்தது. நல்ல வேளை, ரொம்ப அலையாமல் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த ஊரில்தான் அம்பது வருஷமா இருக்கோம்..ஊரே ரொம்ப மாறி விட்டது. ரிடையர் ஆகியே பதினைஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகுது. " ரொம்ப தேங்க்ஸ் சார்..அவன் என்னோட ஸ்டுடென்ட் தான்.." இப்படி சொல்லும்போது சற்று பெருமிதமாக நெஞ்சை உயர்த்திக்கொண்டார். மிலிட்டரி ராஜாவுக்கு நல்ல பேரு இருக்கும் போல என நினைத்தபடியே வாத்தியார் சைக்கிளை மீண்டும் மிதிக்காமல் மெல்ல உருட்ட தொடங்கினார். இந்த தெருவிற்குப்பெயர் பிச்சுவனத்தெரு. ஒரு காலத்தில் இங்கே உள்ள நந்தவனத்தில் இருந்து கோபாலசாமி கோவில் பெருமாளுக்கு பூக்கள் போகும் . மஞ்சள் செவ்வந்திப்பூ, அரளிப்பூ, பிச்சிப்பூ என மாலைகள் கட்டிக்கொண்டு போவார்கள். முப்பது வருஷத்திற்கு முன்பு வாத்தியார் இந்த தெருவின் வழியாகத்தான் சைக்கிளில் சென்று, தெற்கு பஜார் லூர்துநாதன் சிலைக்கு பின்னால் உள்ள அஸ்போர்ன் பள்ளிக்கு செல்வார். அப்போது தெரு ரொம்ப விசாலமாய் இருந்தது. இப்போது தெரு முழுக்க செல்போன் கடைகள்..நகலெடுக்கும் கடைகள்.. ஜெராக்ஸ் எடுக்க பக்கம் ஒன்றிற்கு ரூ.2 என்று பெரிது பெரிதாய் விளம்பரம் வேறு. ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் கருவியை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் என்றே தெரியாமல் தமிழர்கள் இப்படி மூடர்களாய் இருக்கிறார்களே என்று வாத்தியாருக்கு பல சமயங்களில் கோபம் பழியாய் வரும். பேரன் கரீம் ஒருமுறை சொன்னபோது, அவனை பக்கத்தில் அழைத்து சொன்னார். " ஜெராக்ஸ் இல்லை ப்பா..போட்டோ காப்பி ன்னு சொல்லணும்..சரியா.." அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அடுக்களையில் இருந்து மருமகள் ஆயிஷா " அப்படி சொன்னா யாருக்கு தெரியும் .. ஊரோட ஒத்து வாழனும்.." என்று குரல் கொடுத்தாள். நல்லதை சொன்னால் யார் இங்கே கேட்கிறார்கள் ? கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டார். பச்சைக்கலர் அடித்த வீட்டிற்கு முன் வந்து நின்றார். சைக்கிளை நவாப்பழ மரத்தின் முன் நிறுத்தி விட்டு, மரத்தை நோட்டம் விட்டார். இப்போ சீசன் இல்லை போல. இலைகள் செழித்து இருந்தன . வீட்டின் தார்சா மூடியிருந்தது. அந்தக்கால அழி போட்ட வீடு. கோபாலின் பூர்வீக வீடாக இருக்கக்கூடும். அழைப்பு மணியை அழுத்தவா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தார். கோபால்னு கூப்பிடவா..ராஜகோபால்ன்னு கூப்பிடவா.. " கோபால் சார்.." என்று லேசாக செருமியபடி கூப்பிட்டார். கூப்பிட்டது தனக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை. அது என்ன கோபால் சார் ! தனது மாணவன் தானே .. " கோபால் தம்பீ..." மனம் ஒன்று நினைக்குது, வாய் ஒன்றை சொல்கிறது. " யாரு..." உள்ளிருந்து கனத்த குரல் வந்தது...நல்லவேளை, தம்பி வீட்டில்தான் இருக்கான். கவலையில்லை..வந்தவேலை பாதி முடிந்தமாதிரி நினைக்க தொடங்கினார். கதவை திறந்தவர் " யார் நீங்க.." என்று கேட்டு விட்டு, அடுத்த கணமே " மொகைதீன் சார் தானே ...உள்ளே வாங்க.." என்று உள்ளே அழைத்தார். நெற்றியில் திருநீறு குங்குமம் பளிச்சிட்டது. ராஜகோபால் முகம் ரொம்ப மாறி விட்டதோ ? பெயரையும் டவுசர் போட்ட பழைய உருவத்தையும் இணைக்க முயன்றார். " தம்பி குளிச்சுட்டு இருக்கான்..இப்ப வந்துருவான்.. இப்ப இங்கே தான் இருக்கீங்களா ?" என்று அவர் சொன்னபிறகு தான், இவர் அவன் அண்ணன் என்பதை உணர்ந்து கொண்டார். " ஓ..அப்படியா..வரட்டும் வரட்டும்..அவசரமில்லை.." என்றபடியே அங்கே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தார். அந்தக்காலத்து நாற்காலி. ரோஸ் மரத்தில் செய்ததாக இருக்க வேண்டும். " நானும் அதே ஸ்கூல்ல தான் படிச்சேன்..நான் வேதநாயகம் சாரிடம் படிச்சேன்..தம்பி தான் உங்க கிட்டே படிச்சான்.." அவராய் தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டார். " ஓகோ...வேதநாயகம் சார் போய் சேர்ந்திட்டார்...நான் தான் இன்னும் உலகிற்கு பாரமாய் இருக்கிறேன்.." என்று சொன்னவர், " தம்பி...உங்க பேரு என்ன " என்றார். வாத்தியார் கழிவிரக்கத்துடன் சொன்னதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ, " சீனிவாசன்..ரோடு கான்ட்ராக்ட் எடுத்து செய்றேன்.." என்றபடியே உள்ளே சென்றார். பட்டும் படாத டைப் போல.. கோபால் அப்படி இருக்க மாட்டான் என்று உள்ளுணர்வு சொல்லியது. அறையை நோட்டமிட்டார். ராமர் பட்டாபிஷேகம் போட்டோ நேர் எதிரே தெரிந்தது. பொதுவாய் இதெல்லாம் பூஜை அறையில் தானே வைத்திருப்பார்கள் என்று நினைத்தார். அடுத்து ஒரு பெரியவர் படம்.. மாலை போட்டபடம்..கோபாலின் அப்பாவாக இருக்குமோ என்னவோ ? நாமாக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும் ? வேறு யாராகவும் இருக்கலாம். எழுபத்தாறு வயதில் நாம் இருக்கும்போது, அவன் அப்பாவும் இருக்கலாம்..தப்பு..தப்பு... " சார்..வாங்க..வாங்க..." உள்ளே இருந்து வந்தவர், ராஜகோபாலாகவே இருக்க வேண்டும், நேராக காஜா மொகைதீன் வாத்தியாரின் பாதந்தொட்டு வணங்கினார். " தம்பி...எழுந்திரிங்க..எதற்கு இதெல்லாம்.." வாத்தியார் மனசெல்லாம் பூரித்து விட்டார். அந்தக்காலத்து மாணவர்கள் மாணவர்கள் தாம்.. அவர் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. " சார்..நல்லா இருக்கீங்களா..பெரிய பள்ளிவாசல் தெருவில் தான் இருக்கீங்களா..பேரன் பேத்திகள் எல்லாம் நல்லா இருக்காங்களா " ராஜகோபால், வாத்தியார் முன்பு உட்காராமல் சற்று தள்ளி நின்றான். " நீங்க உட்காரலாமே..நின்னுகிட்டு பேசறீங்களே.." வாத்தியார் தடுமாறினார். " சார்..என்ன நீங்க.. என்னைப்போயி நீங்க நாங்கன்னு பேசிக்கிட்டு..நான் உங்க மாணவன்..உங்க கிட்டே கணக்கு படிக்கலேன்னா நான் எஸ்எஸ்எல்சி தாண்டி இருக்க மாட்டேன்.." கோபால் பற்கள் வெளியே தெரிய சிரித்தான். வாத்தியாருக்கு நெஞ்சு விம்மியது. காரியம் பழம் தான் என்று மனதுள் சொல்லிக்கொண்டார். " உங்களை ரெண்டு மட்டம் ரோட்டில் பார்த்து விஷ் பண்ணி இருக்கேன்.. உங்களுக்கு மறந்திருக்கலாம்.." என்றான் கோபால். " நீ நல்லா படிக்கிறவன் தானே..பிறகு எதுக்கு பட்டாளத்திற்கு போனே " வாத்தியார் உறுதிப்படுத்தும் நோக்கில் கேட்டு விட்டார். அவர் காலத்தில், படிப்பு வராதவன் தான் பட்டாளம் போவான் என்பது விதி. " ரொம்ப நல்லா படிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது சார்.. காலேஜ்ல படிக்கும்போது, ஏர் போர்ஸ்ல சேரச்சொல்லி சித்தப்பா ஒருத்தர் சொன்னதால எழுதினேன்..குருட்டாம்போக்குல கெடைச்சதோ என்னவோ..டெல்லியிலும் நாக்பூர்லயும் பதினைந்து வருஷம் இருந்தேன்..பிறகு இங்கே வந்துட்டேன்..இப்போ பேங்க்ல வேலை.. பாளையங்கோட்டை வந்து மூணு வருஷந்தான் ஆகுது.." ராஜகோபால் சுருக்கமாய் சொல்லி முடித்தான் தனது கடந்தகால வாழ்க்கையை. " வாங்க.." என்று வணங்கியபடி, உள்ளே இருந்து வந்த பெண்மணி டீப்பாயில் காப்பியும், காராசேவும் கொண்டு வந்து வைத்தார். " சார்..எனக்கு கணக்கு வாத்தியார்..சாரைப்போல யாரும் கணக்கு சொல்லித்தர முடியாது." என்று சொன்ன கோபால், " சார்..இது என்னோட மனைவி .." என்று அறிமுகம் செய்வித்தான் வாத்தியாரிடம். அந்த பொண்ணு மீண்டும் வணக்கம் சொன்னார். லட்சுமிகரமான முகம். சாந்தமான பெண் என்பதை முகமே உணர்த்தியது. மனதில், சம்பந்தமே இல்லாமல் மருமகள் ஆயிஷாவின் முகம் தோன்றி மறைந்தது. " பேசிக்கிட்டு இருங்க " என்று புன்னகைத்த அவன் மனைவி உள்ளே சென்று விட்டாள். ஆமாம் பேசவேண்டும் தான். வந்த வேலையை மறந்து ஏதேதோ பேசினால் எப்படி.. எப்படி துவங்க..நாம் கேட்பதை நினைத்தால், நம்மை பற்றி என்ன நினைப்பானோ கோபால் ..ரொம்ப மரியாதையாய் பேசுகிறான்..வாத்தியார் ரொம்ப அற்பமாய் கேட்கிறாரே என்று கூட நினைக்கலாம்..மீண்டும் முகம் வியர்த்தது. குனிந்து வேட்டியால் முகத்தை துடைத்துக்கொண்டார். " ஏர் போர்ஸ்ல இருந்துட்டு, பேங்க் வேலை பார்க்க ஈஸியா இருக்கா " ஏதாவது கேட்கணுமே என்று கேட்டார். மனம், முதல் உரையாடலுக்காய் ஒத்திகை பார்த்தது. " அதெல்லாம் என்ன சார் கஷடம்..அது ஒரு மாதிரி..இது ஒரு மாதிரி.. ஆசைப்பட்டதற்கு பதினைந்து வருஷம் நாட்டுக்காக வேலை பார்த்தாச்சு.." என்று சிரித்தான் கோபால். " ஆமாமா...தேசத்துக்காக எல்லையில வேலை பார்த்தது பெருமை தானே..எனக்கே ரொம்ப பெருமையாய் இருக்கு..என்னோட மாணவன் ராணுவத்துல வேலை பார்த்தான்னு சொல்றது " வாத்தியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இதை இந்த நேரம் சொல்லலாமா வேண்டாமா என்று மனம் தத்தளித்தது. தார்சாவில், கோபால் நீலநிற சீருடையில் இருக்கும் படத்தை பார்த்தபோது,மேலும் தயங்கினார். " உங்க கிட்ட படிச்ச கணக்கு எப்போதுமே மறக்காது..சார்.." கோபால் இன்னமும் உட்காராமல் நின்று கொண்டே பேசியது, அவன்மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது. லேசாக செருமியபடி, " எனக்கு ஒரு உதவி ...உன்னாலே ஆகணும்.." என்று துவங்கினார். " என்ன உதவி சார்...உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறேன்.. சொல்லுங்க சார்.." கோபாலின் வார்த்தைகள் அவருக்குள் நம்பிக்கையை தோற்றுவித்தது. " எனக்கு ஒரு டேபிள் பேனும், எலக்ட்ரிக் குக்கரும் வாங்கணும்.." என்று சொன்ன மொகைதீன் வாத்தியாரை வியப்புடன் பார்த்தான் கோபால். " நீ ராணுவத்தில் வேலை பார்த்ததால, மிலிட்டரி கான்டீன்ல குறைஞ்ச விலைக்கு உனக்கு தருவாங்களாமே..கேள்விப்பட்டேன்..இப்பவும் தருவாங்க ள்ள..என்கிட்டே இருக்குற பழைய சீலிங் பேனு ரிப்பேர் ஆயிட்டு..அதை ஒக்கிடணும்னா ரொம்ப செலவாகும்னு சொல்றாங்க. என்னோட மருமகள் எலக்ட்ரிக் குக்கர் வேணும்னு என்னோட மகன் கிட்ட ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கா..அவனும் அந்தா இந்தான்னு சொல்லிட்டே இருக்கான்..அவனும் என்ன செய்வான் பாவம்..ஒண்ணுக்கு மூனா பிள்ளைகள் இருந்தா என்ன பண்ணுவான் ..என்னோட வீட்டுக்காரி மூத்த பையனோட வாணியம்பாடியில் இருக்கா..பிள்ளைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே.. வாத்தியான் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..ரெண்டு பேரும் மக்கு இல்லைதான்..ஆனாலும், நல்ல வேலையில உட்காரலை..இன்ஷா அல்லாஹ்..அவன் தான் நல்லது நடக்க உதவி பண்ணனும்.." என்று மேலே பார்த்து சொன்னவர், " தம்பி..இப்ப என்கிட்ட ரெண்டாயிரத்து சொச்சம் இருக்கு..எவ்வளவு ஆகும்னு தெரியல..மருமகள்ட்ட கூட கேட்டேன்.." அது தெரிஞ்சு உமக்கு என்னாகப்போகுது..குக்கரு கெடைச்சாலும் கெடைக்காட்டியும் உங்களுக்கு வேணும்கிறதை தராமல் பட்டினி போட்டுற மாட்டேன்.." என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி சொல்லிட்டா..வாங்குற பென்ஷன் பணத்தில் பாதி வீட்டு லோனுக்கு தான் கொடுக்குறேன்..புது வீடு இல்ல.. இப்ப இருக்குற பழைய வீடு மழைக்காலத்துல ஒழுகுச்சு..அதை ரிப்பேர் பார்க்க மோட்டார் வைக்கன்னு அஞ்சு லட்சம் ஆயிருச்சு.. அதெல்லாம் பெரிய கதை..நம்ம கஷடத்தை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு நேரத்தை வீணடிச்சுட்டு இருக்கேன்.." என்று எழுந்தவர், அவன் அருகே சென்று, " இந்த ரூபாயை பிடிங்க..நீங்க உங்களுக்கு வாங்குவதாய் நினைச்சு வாங்கி, எனக்கு அன்பளிப்பாய் கொடுப்பதாக நினைச்சு கொடுப்பீங்களா.." என்று கோபால் கையில் பணம் உள்ள கவரை திணித்தார் வாத்தியார். " சார்..அதெல்லாம் வேண்டாம்..பணமெல்லாம் இருக்கட்டும்.. நாலு லீப் வைச்ச பேனும், நல்ல எலக்ட்ரிக் குக்கரும் வாங்கி தரேன் சார்.. இதை நீங்க வந்து சொல்லனுமா..யாரிட்டயாவது சொல்லி விட்டால் போதாதா.." என்று கோபால் பணத்தை அவரிடமே திரும்ப கொடுத்தான். " இல்ல கோபால்..பணத்தை முதல்ல வாங்குப்பா..இந்த மாதிரி வாங்குறதே ஒரு வகையில் தப்பு தான்..என்னோட இயலாமையிலே கேட்டுட்டேன்.." வாத்தியார் மீண்டும் கவரை தந்தார். " நான் வாங்கி கொடுத்துட்டு, அப்புறமாய் கண்டிப்பாய் வாங்கிக்கறேன்.. இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வந்தது தான் கஷடமாய் இருக்கு.." என்று கோபால் சொல்லி விட்டு, வாத்தியாரை அமர செய்தான். " நேரமாச்சுப்பா...உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம்..மருமகள் மார்க்கெட் வரை போயிருக்கிறா ..அவள் வரமுன்னாடி உன்னை பார்த்துட்டு போயிரணும்னு தான் வந்தேன்..பார்த்துட்டேன்..நீ நல்லா இருக்கணும் பா..இன்ஸா அல்லாஹ்.." தட்டு தடுமாறி எழும்பினார் மொஹைதீன் வாத்தியார். " வீட்டுல சொல்லீருப்பா..அண்ணன் இருந்தாரே..போயிட்டாரா..அவர்ட்டயும் சொல்லீரு..நல்ல மனுஷன்.. அப்ப நான் வரட்டுமா..." கிளம்பிய வாத்தியாரின் கையை பிடித்தபடி வெளியே அழைத்து வந்தான் கோபால். " இந்த பணம் உன்கிட்டேயே இருக்கட்டுமே..செலவழிஞ்சு போயிருமோன்னு பயமாவும் இருக்கு.." என்று மீண்டும் வாத்தியார் பணம் இருந்த கவரை கொடுக்க முயன்றார். கோபால் அதனை வாங்காமல், அவரது வெள்ளை கதர் சட்டையின் பைக்குள் வைத்து அவரை வணங்கினான். உள்ளே அவனது செல்பேசி ஒலிக்க தொடங்கியது. வேகமாய் உள்ளே வந்தான். ஏர்டெல் விளம்பர அழைப்பு..எதிர் அறையில் இருந்து அண்ணன் சீனிவாசன் வெளியே வந்தார். " துலுக்க வாத்தியான் இதுக்கு தான் வந்தாரா " என்று நக்கலுடன் கோபாலை பார்த்து கேட்டபோது, " அண்ணே..என்ன இருந்தாலும் அவரு நம்ம வாத்தியாரு.." என்றான். " ஆமாமா..வாத்தியாரு தான்..இன்னும் கொஞ்ச நாள்ல பாகிஸ்தான் போகப்போற வாத்தியாரு..அங்கெ போயி கேக்க சொல்லு.." சீனிவாசன் இளக்காரமாக சிரித்தார். " இப்படிலாம் பேசாதீங்க..நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அப்படி எதுவும் நடக்க போறதில்ல.." என்றவன், வேகமாய் வாசலுக்குப்போனான். நவாப்பழ மரத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் மொகைதீன் வாத்தியார். அவர் காதில் எதுவும் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் வலது காதில் மாட்டியிருந்த செவிட்டு மெஷின் சொல்லியது. கேட்டிருக்காது. அவர் ஸ்டான்ட் எடுத்து விட்டு, தனது ஹெர்குலஸ் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்.. -------------------------------------------இரா.நாறும்பூநாதன்
பெருமைமிகு நெல்லைச்சீமை - 8 ------------------------------------------------------ கிளாரிந்தா சர்ச், பாளையங்கோட்டை வருடம் : 1770 இடம் : தஞ்சாவூர் , வெண்ணாற்றங்கரை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கரையோரம் சந்தனக்கட்டைகள் அடுக்கப்பட்ட சிதையில் ஒரு சடலம். தஞ்சை சாயாஜி மன்னனின் அரண்மனையில் பணிபுரிந்த திவானின் உடல் தான் எரிந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் திவானின் உறவினர்களும் அரண்மனை ஊழியர்களும். மேளச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. சிதை அருகே சிவப்பு பட்டு சேலையணிந்த இளம்பெண்ணொருத்தி. அவள் கோகிலா. இறந்த திவானின் மனைவி.பிராமண சமூகத்தை சேர்ந்தவள். கழுத்தில்மலர் மாலையணிந்திருந்தாள். சிதையை அவள் வலம் வந்தபோது சுற்றியிருந்த கூட்டம் கூவியது. " சதி மாதா கி ஜே " கோகிலாவின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப்போலவே அவள் கண்களும் ஒளியோடு பிரகாசித்தன. மேளச்சத்தம் தொடர்ந்து விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. கூட்டம் மீண்டும் ஆரவாரித்தது. " சதி மாதா கி ஜே " அடுத்தகணம், சுற்றியிருந்த அரசகுல ஆண்கள், கோகிலாவை அலாக்காக தூக்கி எரியும் நெருப்பில் போட்டனர். பெண்கள் குரவையிட்டனர். அதே கணத்தில் - யாரும் எதிர்பாராத வகையில், குதிரையில் வந்த ஆங்கிலேயப்படையின் அதிகாரி லிட்டில்டன், சிதைக்குள் விழுந்த கோகிலாவின் தலைமயிரைப்பிடித்து தூக்கி இழுத்தவன், தனது குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவளைக்கிடத்தினான். கோகிலாவை இளம்வயதில் இருந்து வளர்த்து வந்த சாரதா என்ற வேலைக்கார பெண்மணியும் உடன் ஏறிக்கொண்டாள். அவள்தானே ஆங்கிலேயப்படையை அழைத்து வந்தவள் ! படைகள் பின்தொடர, சாரட் வண்டி புயலெனப்புறப்பட்டது. மயானக்கரையில் கூட்டம் செய்வதறியாது திகைத்து நின்றது. --- -- -- -- -- -- -- அந்த புராதன பங்களாவின் வராண்டாவில் இருந்தபடி ஆங்கிலேயே அதிகாரி லிட்டில்டன் புகைத்துக்கொண்டிருந்தார். நடந்து முடிந்த அநியாயத்தை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. " கணவன் இறந்தவுடன், மனைவியை உயிரோடு நெருப்பில் போட்டு எரிக்க நினைக்கிறார்களே ..முட்டாள் ஜனங்கள் " சாரட்டில் தூக்கி வந்து, உடனடியாய் மருத்துவரை அழைத்து வந்து தீக்காயங்களுக்கு மருந்திட்டு படுக்க வைத்துள்ளார். எனினும், கூந்தலின் ஒரு பகுதி நன்றாக எரிந்து விட்டது. முதுகுப்பகுதியிலும் தோள்பட்டையிலும் கடுமையான தீக்காயங்கள்..இடையிடையே வலியில் வீறிட்டு அலறுகிறாள் கோகிலா. அவளது பணிப்பெண் சாரதா தான் அருகில் இருந்து அவளை கவனித்துக்கொள்கிறாள். சதியில் தள்ள முடியாத வைதீகக்கூட்டம், தஞ்சை மன்னரிடம் சென்று முறையிடுகிறார்கள். ஒரு பறங்கியன் தங்களின் குடும்ப சடங்குகளில் தலையிடுவதா என்று ஆவேசப்படுகிறார்கள். மன்னரும் லிட்டில்டன்னை வரச்சொல்லி பேசுகிறார். வாழவேண்டிய ஒரு இளம்பெண்ணை கணவனோடு எரிப்பது என்பது மோசமான மூடநம்பிக்கை. தன்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு திரும்புகிறார். சில நாட்களில், கோகிலாவின் தீக்காயங்கள் ஆறி, தழும்புகள் ஏற்படுகின்றன. கைகள், தோள்பட்டை,இடுப்பு, கால் பகுதி என வெள்ளை வெள்ளையாய் தேகமெங்கும் தழும்புகள்..முகம் மட்டும் பவுர்ணமி நிலவென பிரகாசிக்கிறது. தன்னைக் காத்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில்டன்னை மனதுள் பூஜிக்கிறாள். எவ்வளவு உயர்ந்த மனிதர் ! அவளும், பணிப்பெண் சாரதாவும் பங்களா விற்கு பின்புறம் இருக்கும் தனி வீட்டில் இருக்கிறார்கள். தேவையின்றி அந்த ஆங்கிலேய அதிகாரி வருவதில்லை. மிகுந்த கண்ணியத்துடன் பேசுவார். லிட்டில்டன் இப்போது கோகிலாவிடம் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். கோகிலா அவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள். இருவரும் தினம் உரையாடுகிறார்கள். தான் உயிருடன் வாழ அனுமதிக்காத மதத்தில் இனியும் இருக்க வேண்டுமா என நினைக்கிறாள். " வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் " என்ற பைபிள் வசனம் அவளை ஈர்க்கிறது. கோகிலாவிற்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது. அவளும் லிட்டில்டன்னும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர். கோகிலா மதம் மாற சம்மதிக்கிறாள். அந்த நேரத்தில், தஞ்சையில் இருந்த ஜெர்மன் பாதிரியார் ஸ்வார்ட்சிடம் ஞானஸ்நானம் பெற செல்கின்றனர். ஆனால், உயர்குல பெண்ணான கோகிலாவை லிட்டில்டன் திருமணம் செய்துகொள்வதை பாதிரியார் ஸ்வார்ட்ஸ் விரும்பாததால், கோகிலாவை மதம்மாற அவர் அனுமதிக்கவில்லை. (இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிட்டில்டன் ஏற்கனவே திருமணமாகி, மனைவியோடு மனஸ்தாபம் ஆகி பிரிந்து வாழ்கிறார் என்பதும் சொல்லவேண்டிய செய்தி ) எனினும்,இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு living together ஆக வாழ முடிவெடுத்தனர். ஆங்கிலேயப்படை அதிகாரி லிட்டில்டன் திருநெல்வேலிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கோகிலாவையும் உடன் அழைத்து வருகிறார். இவர்களோடு பணிப்பெண் சாரதாவும் அவளது மகன் கோபாலனும் வருகின்றனர். காவிரியாற்றில் வளர்ந்த கோகிலாவிற்கு, திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றின் குளிர்ச்சியும் தென்பொதிகை தென்றலும் புதிய உற்சாகத்தை அளிக்கின்றன. இங்கே அவளுக்கு புதிய வாழ்க்கை துவங்குகிறது. பெயரை கிளாரிந்தா என்று அவளே மாற்றிக்கொண்டாள். மூட நம்பிக்கையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றால், அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்து பெண் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து பாடம் சொல்லிக்கொடுக்கிறாள். இந்நிலையில், லிட்டில்டன் மீண்டும் இங்கிலாந்து தேசம் திரும்பியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் அவர் இந்தியா வரவில்லை. அவர் சூலை நோய் ஏற்பட்டு இங்கேயே இறந்து விட்டார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஏழைக்குழந்தைகளுக்கு புராணங்களில் இருந்தும், விவிலியத்தில் இருந்தும் குட்டி குட்டிக்கதைகளை சொல்லிக் கொடுத்தார் கிளாரிந்தா. வீட்டருகில் ஒரு துவக்கப்பள்ளியை துவக்கினார். 18 மாணவ,மாணவியர் படித்த அந்தப் பள்ளி தான் குளோரிந்தா பள்ளி. தென் தமிழகத்தின் முதல் பள்ளியும் அது தான். இரண்டு ஆசிரியைகளை நியமித்தார். அவரே ஊதியமும் வழங்கினார். பாளையங்கோட்டையில் நடந்த ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஐரோப்பிய பாதிரியார் ஒருவர் வந்தபோது, அவரிடம் சென்று ஞானஸ்நானம் பெற, கோகிலா என்ற கிளாரிந்தாவும், அவளது பணிப்பெண் சாரதாவும் உற்சாகமாக சென்றனர். இவர்களோடு பல குழந்தைகளும் வரிசையில் நின்றனர். அருகில் நெருங்கி வந்தபோது தான் கிளாரிந்தா கவனித்து திடுக்கிட்டார். எதிரே நின்று கொண்டிருந்தவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த மிஷனரி ஸ்வார்ட்ஸ் . அவர் கோகிலாவை ஏறெடுத்துப் பார்த்தார். (தொடரும் )
கழுகுமலை -------------------- கீழே இருந்த மலைச்சரிவில் உளிச்சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்த தந்தை சிற்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தான் இந்த ஊரில் எவ்வளவு பெரிய சிற்பி. தனக்குத் தெரியாமல் இன்னொரு சிற்பி இந்த ஊரில் வந்து சிற்பங்களை செதுக்குவதா என்ற கோபத்தில், தனது கையில் இருந்த உளியை தூக்கி கீழே எறிந்தாராம். வேகமாய் வந்த உளி, வெட்டுவான்கோவில் சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருந்த சிற்பியின் கழுத்தில் பட்டு " அப்பா.." என்ற அலறியபடியே கீழே விழுந்தானாம். ஓடிவந்து பார்த்த தந்தை சிற்பி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது மகனைப்பார்த்து கதறி அழுதாராம். இறந்து போன மகனைப் பார்த்த அந்தக்கணத்தில் தான் அவன் அழகுற வடித்த ஒற்றைக்கல் கோபுரத்தையும், சிற்பங்களையும் பார்த்து திகைத்து போனார் அவர். என்ன தவறிழைத்து விட்டேன் என்று முட்டி முட்டி அழுதார் அந்த சிற்பி. இதனால் தான் வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவிலாக இருக்கிறது என்று மலையின் தொன்மக்கதையை என்னுடைய அப்பா(தமிழாசிரியர் சு.ராமகிருஷ்ணன் ) கூறக்கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, பஞ்சுப்பொதி கல்லான கதை, சோற்றுருண்டை கல்லாய்ப்போன கதை என பல்வேறு கதைகளும் உண்டு. கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோவில் என்பது தான் வியப்பு. தாழ்வான மலைச்சரிவில், " ப " வடிவில் பாறையை குடைந்தெடுத்து அதன் பின் நடுவில் இருக்கும் பாறையை செதுக்கி திராவிட கட்டிட பாணியில் கோபுரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். வழக்கமான கோவில் கட்டும்போது கீழிருந்து மேலே கட்டுவார்கள். இதில், மேலிருந்து கீழாக கோபுர கலசப் பகுதியில் துவங்கி, கோபுரத்தின் பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள், பின்னர் கீழே குடைந்து அர்த்தமண்டபம், கருவறை உருவாக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி ஒரு சுற்றுப்பாதை. ஒற்றைக்கற்றளியை - ஒரே பாறையில் உருவாக்கிய இந்த கற்கோவிலை நீங்கள் நேரில் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள். பொதுவாக , கோவில் கோபுரங்களில், சுதையில் செய்யப்பட்ட சிற்பங்களை இணைப்பது தான் வழக்கம். இதிலோ, ஒரே கல்லில் கோபுரம், சுற்றிலும் சிற்பங்கள்...எவ்வளவு கவனமுடன் செதுக்க வேண்டும் ? மலைச்சரிவில், 30 அடி ஆழத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 48 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டதாக இருக்கும் இந்தக்கோவில் எழில்மிகு சிற்பங்களை கொண்டுள்ளது. கோவிலின் விமானப்பகுதியில் தாமரை மொட்டுப்போன்ற அமைப்பு. கீழே யாளி சிற்பங்கள்..யானை முக சிற்பங்கள்..இசைக்கருவிகளை இசைக்கும் பூதகணங்கள் ,,நான்கு மூலைகளிலும் இளமங்கையர் சிற்பங்கள்..கவிகை மாடத்தின் மூலைகளில் சிங்கமுக சிற்பங்கள்..என எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் விமானப்பகுதியில், நான்முகன், நரசிங்கபெருமாள், சிவபெருமான், பார்வதி, மிருதங்க தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. சூரியனின் தேவியான சுவர்ச்சலை, சந்திரனின் தேவியான ரோகிணி, உஷை,சுவாகாதேவி ஆகியோரின் சிலைகளும் எழிலுற காட்சியளிக்கின்றன. இவ்வளவு அற்புதமான ஒற்றைக்கல் கோபுரம் சாதாரணமாக கண்களில் தென்படாது. ஒரு பள்ளத்தில் இருப்பது போன்றே தெரியும். மலையில் ஏறி வடதுபக்க சரிவில் நின்று பார்த்தால் மட்டுமே வெட்டுவான்கோவிலின் எழில்மிகு தோற்றம் தென்படும். பக்கவாட்டில் இறங்கிச்செல்ல குறுகலான படிக்கட்டுகள் உண்டு. அதில் அமர்ந்தபடியே கோவிலின் சிற்பங்களையும், மாலை சூரியனின் அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு கோவிலைச்சுற்றி முள்வேலியிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பெருமையுடைய கோவிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்க்க வரும்போது, கோவிலை சுற்றியுள்ள முள்வேலி கதவு, பெரும்பாலும் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது பெரும்சோகமே. இத்தனைக்கும் மத்திய அரசின் சுற்றுலா கிராமமாக கழுகுமலை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதெற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில தனியார் குடில்கள் மலை அருகே உருவாக்கப்பட்டுள்ளன. கழுகுமலையின் இந்த குன்றை சுற்றி கிரிவலப்பாதை ஒன்று உண்டு. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் சுற்றி வருகிறார்கள். இங்குள்ள கழுகாசலமூர்த்தி கோவில் சூரசம்காரம் பிரசித்தி பெற்றது. சூரர்களின் தனித்தனியான உருவங்கள் பிரம்மாண்டமானவை. கந்த சஷ்டி காலங்களில் இந்த சூரர்களின் உருவங்களை தூக்கி ஆடுவதற்கென்றே பல கலைஞர்கள் உண்டு. மிகவும் கனமான இந்த சூரர்களை அவ்வளவு எளிதாக யாரும் தூக்கி ஆட முடியாது. முருகன் வீதியுலா வரும்போது நாலு வீதிகளிலும் சப்பரத்தின் முன்பு ஆறு சூரர்களும் பேயாட்டம் ஆடியபடியே வருவார்கள். பெரியண்ணத்தேவர் என்ற கலைஞர் அவர்களில் மிக முக்கியமானவர். அவர் மகாபெரியவர் என்ற சூரனுக்குள் புகுந்து விட்டால், அவரது ஆட்டத்தைக்காண பெரியவர்கள்,சிறுவர்கள்,பெண்கள் ஓடோடி வருவார்கள். பிற முருகன் கோவில்களில் மாலை ஆறு மணிக்கெல்லாம் சூரசம்காரம் முடியும்போது, இங்கு மட்டும் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை விழா நடக்கும். இந்தக்கோவில் எட்டயபுர ஜமீனின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, வேறு மாதிரியான விழாக்கள் நடந்துள்ளன என தெரிய வருகிறது. சமண,சைவ மதங்களின் மோதல் நாம் அறிந்த விஷயமே. அக்காலத்தில் இந்த ஊர் சமணத்திற்கு புகழ்பெற்ற ஊராக திகழ்ந்ததால், சைவ மதம் கால் ஊன்றியபிறகு, சமணர்களை போல வேடம் அணிந்து கொண்டு ஊர்வலமாய் வந்து, பின் அவர்களை கழுவேற்றுதல் போன்ற விழாக்கள் நடந்திருக்கின்றன. சமணர்களின் குதப்பகுதியில் ஈட்டியை நுழைத்து வாய்ப்பகுதியில் வரும்படியான கழுவேற்றும் காட்சிகள் கழுகுமலை முருகன் கோவிலின் விதானப்பகுதியில் ஓவியமாக தீட்டிய காட்சியினை நான் பார்த்துள்ளேன். மூலிகை ஓவியங்களால் வரையப்பட்ட அந்த ஓவியங்களை தற்போது காண இயலவில்லை. கோவிலின் உட்புறம் உள்ள பிரம்மாண்டமான தெப்பக்குளம் எட்டயபுரம் ஜமீனால் உருவாக்கப்பட்ட அக்கால மழைநீர் சேகரிப்பு மையம் என்றே சொல்லலாம். ஊருக்கே குடிநீரை கொடுக்கும் அந்த தெப்பக்குளம் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளா அழகு. பசு வாய் வழியாக தெப்பக்குளத்தில் தண்ணீர் கொட்டும் அழகைக்காண ஊரே திரண்டு நிற்கும். " ஊர் நினைவு என்பது கள்ளுண்ட போதை போல " என்பார் எழுத்தாளர் புதுமைப்பித்தன். சொந்த ஊரைப் பற்றி எழுதும்போது, நான், எனது போன்ற வார்த்தைகள் என்னையறியாமல் வந்து விழுகின்றன. டெல்லி செங்கோட்டையை பார்க்க செல்கிறோம். மகாபலிபுரம் பார்க்க செல்கிறோம். அருகில் இருக்கும் கழுகுமலை போன்ற வரலாற்றுப்புகழ்பெற்ற ஊரின் சிற்பங்களை எப்போது சென்று ரசிக்கப்போகிறோம் ?
கழுகுமலை - தென்னகத்து எல்லோரா அந்த உயர்ந்த குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள அரைமலை .. வெட்டுவான்கோவில் கைப்பிடிச்சுவற்றைப் பிடித்தபடி மூன்று சிறுவர்கள். " ஒன்..டூ..த்ரீ..." என்று சொல்லி விட்டு, இடுப்பில் இருந்த டவுசரை அவுத்து கையில் பிடித்துக்கொண்டு அம்மணக்குண்டியோடு மேலிருந்து கீழே வேகமாய் பாறையில் தாவி தாவி குதித்தபடி ஓடி சென்று ஆம்பூரணியில் "பொத்தென்று " குதித்தார்கள். கடைசியாய் ஓடிய சிறுவன் நான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், தொல்லியல் துறை வருவதற்கு எல்லாம் முன்பு நடந்த நிகழ்வு இது. சங்க காலத்தில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவர் பாடிய ஒரு பாடல் உண்டு. இளமைப்பருவத்தில், மகளிரோடு குளத்தங்கரையில் நீராடும்போது, கை கோர்த்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒளிவு மறைவு இன்றி, கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி மகிழ்ந்த நாட்கள்..பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக,படித்துறையில் ஓங்கி வளர்ந்துள்ள மருதமரத்தில் ஏறி, கரையில் குளித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மருளும்படி தொப்பென குதித்து ஆழத்திற்கு சென்று மண்ணை கையில் எடுத்து வந்து காட்டிய நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றனவே..இப்போதோ தடி ஊன்றிக்கொண்டு, உடல் நடுங்க , தொடர்ந்து பேச முடியாமல் ஒருசில வார்த்தைகளே வருகின்றன..அந்த நாட்களும் திரும்பி வருமோ என்று அந்தப்புலவர் பாடும் புறநானூற்றுப் பாடல் (243 ) யாண்டு உண்டு கொல்? என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இளமைக்கால நாட்களை எண்ணி வருந்தாத மனிதர்களும் உண்டோ ? நான் பிறந்த ஊர் கழுகுமலை. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இருபது கிமீ தொலைவில் இருக்கும் சிற்றூர். அங்குள்ள வெட்டுவான்கோவில் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்கள் புகழ் பெற்றவை. கழுகுமலை ஊரின் சிறப்பினை, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, அருணகிரிநாதரின் திருப்புகழ், பிஷப் கால்டுவெல் எழுதிய " திருநெல்வேலி வரலாறு " குருகுகதாசப்பிள்ளையின் திருநெல்வேலிசீமை சரித்திரம் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள இயலும். இதுபோக தளவாய்புர செப்பேட்டிலும் பல்வேறு செய்திகள் உள்ளன. கழுகுமலை ஊரின் ஆதிப்பெயர் நெச்சுரம். இப்போது வறண்ட பகுதியாக இருந்தபோதும், பல ஆண்டுகளுக்கு முன்பு நெல் வயல்கள் சூழ்ந்த மலைப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். சமண மதம் தழைத்தோங்கியிருந்த காலத்தில், சமண துறவிகள் தங்குவதற்கு மலைக்குன்றுகளை தான் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்,பெண் சமணத்துறவிகள் கழுகுமலை வந்து சமண சித்தாந்தங்களை படித்து சென்றுள்ளனர். அவ்வகையில் சமணம் போதித்த பல்கலைக்கழகம் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த கலாசாலையை குழுவாணைநல்லூர் என்று சொல்கிறார்கள். இது ஒரு உறைவிடப்பள்ளியாகும். பள்ளி என்ற சொல்லே சமணர்களிடம் இருந்து வந்ததே. பகலில் மலையுச்சியில் இருந்து கீழே இறங்கி வரும் சமணத்துறவிகள் வீடுகளில் உணவை தானமாக பெற்றுக்கொண்டு, குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அவர்கள் படுக்கும் பள்ளியறையில் (சமணப்படுகை ) அவர்களை அமர வைத்து பாடம் போதித்ததால், அது பள்ளிக்கூடம் ஆயிற்று என்று பேரா.தொ.ப. சொல்வார். அவ்வாறு இங்கு தங்கி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இலவசமாக உணவு உண்ண பயிர் நிலங்களை தானமாக இருவர் வழங்கி உள்ளனர். மேலும், இரு கிணறுகளையும் தங்களின் சொந்த செலவில் அவர்கள் வெட்டி தந்துள்ளனர் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. குணசகாரப்படாரர் தலைமையில் இந்த கலாசாலை இயங்கி வந்துள்ளது. யாப்பெருங்கலக்காரிகை நூலாசிரியர் இங்கு வந்து சமண சித்தாந்தம் பயின்றிருக்கிறார். இங்கு வந்து படித்த மாணாக்கர்கள், படித்து முடித்து விட்டு செல்லும்போது, சமண தீர்த்தங்கரர்களின் சிலையை வடித்து விட்டு, கீழே சிலை வடித்த சிற்பியின் பெயர், மாணவர் பெயர்,ஊர் ஆகியவற்றையும் பொறித்துவிட்டு சென்றுள்ளனர். அவை பெரும்பாலும் வட்டெழுத்துக்கள். ஒன்றிரண்டு மட்டுமே தமிழ்க்கல்வெட்டுக்கள். இப்படியாக 102 சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன. மகாவீரர்,ஆதிநாதர்,நேமிநாதர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், பத்மாவதி, அம்பிகா போன்ற இயக்கன்,இயக்கிகளின் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இந்த சமண தலத்தில் உள்ள தீர்த்தங்கரர்களின் சிலை வழிபாட்டிற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் செ.மா.கணபதி ஐயா தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். கழுகுமலை குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள வெட்டுவான்கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா கைலாசநாதர் கோவிலைப்போன்றே திராவிட கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது.. கைலாசநாதர் கோவில் ஒரே கல்லில் எழுப்பப்பட்டது போலவே, வெட்டுவான்கோவிலும் ஒரே கல்லில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதை குடைவரைக்கோவில் என்று சொல்வார்கள். வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவில். இது பற்றி பல தொன்மக்கதைகள் இங்குண்டு. கழுகுமலையில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பிக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ஆண் மகன் பிறந்தான். சிற்பியும் அவனது மனைவியும் அவனை ரொம்ப செல்லமாக வளர்த்து வந்தனர். அவன் வளர்ந்தபின்னரும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வந்த போது, சிற்பி அவனை கண்டித்ததால் அவன் கோபித்துக்கொண்டு ஊரை விட்டு சென்று விட்டானாம். மகனை இழந்த சிற்பி மனம் வெதும்பிபோய் சிலகாலம் கழித்து கழுகுமலை குன்றின் வடதுபுறத்தில் சிற்பங்களை செதுக்க தொடங்கினாராம். அதே சமயம் மலையின் உயரம் குறைந்த தாழ்வான பகுதியில், வேறு யாரோ ஒருவர் உளியால் செதுக்கிக்கொண்டிருக்கிறார். தந்தை சிற்பி உளியால் செதுக்கும் அதே நேரத்தில், அதன் எதிரொலி போல , கீழே உள்ள சிற்பியும் உளியை உபயோகித்ததால், இன்னொரு சிற்பி வேலை பார்ப்பது பெரியவருக்கு தெரியவில்லை. ஒருநாள், வெற்றிலை போடுவதற்காக, தந்தை சிற்பி உளியை கீழே வைத்த போது, கீழே உளிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கீழே என்ன உளிச்சத்தம் என்று உற்றுக்கவனித்தார் தந்தை. (தொடரும் )