Showing posts with label முகப்பு. Show all posts
Showing posts with label முகப்பு. Show all posts

Wednesday, July 9, 2014

திருநெல்வேலி நினைவுகள்..4


பிரிக்க முடியாதது என்ற தருமியின் கேள்விக்கு திருவிளையாடலில் சிவபெருமான் எதுகையும் மோனையும் என்பார். என்னிடம் கேட்டால் திருநெல்வேலிக்காரர்களும் திரை அரங்குகளும் என்று சொல்வேன்.வாரத்திற்கு ரெண்டு மூணு படம் பார்த்து விடுவார்கள்.அப்படி ஒரு சினீமா க்கோட்டி தான் அவர்களுக்கு.திரைப்படங்களும் திரையரங்குகளும் வெறும் பிலிம் சுருள்களும் பெரிய கட்டடங்களும் தானா..
எழுத்தாளர் சுகா எழுதிய மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் படித்திருந்தால் ஒரு நீண்ட பதில் உங்களுக்கு கிடைக்கும்.திரை அரங்குகள் நமது வாழ்வின் ஒரு பகுதியாய் என்றும் திகழ்கின்றன.பாட்டி வடை சுட்ட கதை எந்த வகுப்பில் படித்தீர்கள் என உங்களிடம் கேட்டால் சட்டென பதில் சொல்ல முடியாது. "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்.."என்ற பாடலை பார்க்கும் போது மூணாப்பு காலாண்டு லீவில் தென்காசி அத்தையோடு பாக்கியலக்ஷ்மி தேயேட்டரில் பார்தத ஆயிரத்தில் ஒருவன் ஞாபகம் வரும்.காட்சி ஊடகத்தின் வலிமை அப்படி.
பாளை அசோக் தேயட்டரில் நீங்கள் படம் பார்த்திருக்கிறீர்களா..ரெட்டைவால் குருவி நான் பார்தத கடைசிப்படம்..என் ரெண்டு வயது பையனுக்கு முறுக்கு வாங்கி கொடுத்து அது அவன் தொண்டையில் சிக்கி பட்ட பாடு..தனீ கதை...(தியேட்டரில் கிடைக்கும் அந்த முறுக்கு உலகத்தில் எத்தனை ரூபாய் கொடுத்தாலும் எங்கும் கிடைக்காது என்பது திருநெல்வேலி ஐதீகம்)
"வசந்த கால நதிகளிலே, வைர மணி நீரலைகள் .."பாடலை பார்க்கும் போது உங்களுக்கு வேண்டுமானால் கமல்,ஸ்ரீதேவி ஞாபகம் வரலாம்.எனக்கு எனது நண்பன் அவனோட காதலியுடன் எனக்கு நாலு ஸீட் தள்ளி ஸென்ட்ரல் தியேட்டரில் படம் பார்தத நினைவு தான் வரும்.அதே போல அழியாத கோலங்கள் சோபா வை பார்க்கும் போது எல்லாம் இறந்து போன என்னுடைய ரெண்டாப்பு  பகவதி டீச்சர் தான் நினைவுக்கு வரும்.
நெல்லை தியேட்ட்டர்கள்  ஒவ்வொன்றாய் மாறி வருகின்றன.நமது வாழ்வின் ஒரு பகுதியை ரப்பர் கொண்டு அழிப்பதை போல உள்ளது. எல்லா திரை அரங்குகளையும் ஒரு சுற்றில் படம் எடுத்து கொள்வோமே என்று தோன்றியது..
அந்த பிரம்மாண்டமான ஜவுளி நிறுவனம் என் மகனுக்குள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.எனக்கு அழிந்து போன ராயல் தியேட்டரின் தரை டிக்கெட்டில் படம் பார்தத அனுபவம் வலியை தருகிறது..