வானரமுட்டி சிவஞான மாமாவிற்கு ஆறு பொம்பளை பிள்ளைகள் இருந்தாலும் பொங்கல் கறிகள் அவர் தான் செய்வார். வேட்டியை மடித்து கட்டி கொண்டு அடுப்பங்கரையில் அவர் சூடு பண்ணும் காட்சி மனசில் தெரிகிறது. ஒவ்வொரு பொங்கல் கடக்கும் போதும் மாமாவின் முகம் தோன்றி மறையும்.
ரஸ்தாளி கரும்பை யாரும் எடுப்பதில்லை என்பதை அறிந்து அப்பா கரும்பை சிறு கத்தியால் வெட்டி சிறு சிறு துண்டாக தட்டில் போடுவார்."கரும்பை வேஸ்ட் பண்ணாம திண்றீகளா இல்லையா " என்று வேறு சத்தம் போடுவார். பனங்கிழங்கு சாப்பிட யாரும் தயக்கம் காட்டியது இல்லை. நார் உரித்து எப்படி சாப்பிடனும் என்று கணபதி ஆச்சி தான் சொல்லுவாள்.இதெல்லாம் இப்ப தான் கிடைக்கும் பொறகு நீ நினைச்சாலும் சாப்பிட முடியாது என்பாள் . பொங்கல் சீசனில் தான் சிறுகிழங்கு, பிடிகிழங்கு,கருணை கிழங்கு, சீனி கிழங்கு சக்கரைவள்ளி கிழங்கு என்று எல்லா கிழங்குகளும் கிடைக்கும்.
அப்பா கோவை சென்ற பிறகு அங்கெ எல்லா காய் கறிகள் கிடைத்தாலும் பொங்கல் நேரத்தில் பனங்கிழங்கு மட்டும் கிடைக்கவில்லை என்று அடிகடி வருத்தபடுவார். அதற்காகவே நான் கோவை செல்லும் பொது பனங்கிழங்கு வாங்கி செல்வது வழக்கம்.
பொங்கல் அன்று மாலையில் பஞ்சாயத்து பள்ளி மைதானத்தில் கபடி போட்டி நடப்பது உண்டு. எந்த விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அதை பார்பதற்கு என்றும் தவறியது இல்லை. சமயங்களில் பொங்கல் பண்டிகையின் போது , தொடர்ந்து ஏழு நாட்கள் சைக்கிள் ஓட்டும் சைக்கிள் கணேசன் வருவது உண்டு.அவன் அந்த ஏழு நாட்களும் சைக்கிளை விட்டு இறங்குவது இல்லை..சாபிடுவது, குளிப்பது எல்லாம் சைக்கிள் ஒட்டியபடி தான்..ராத்திரி கூட இறங்குவது இல்லை என்று கூறுவார்கள். ஒரு நாலு ராத்திரியாவது முழிச்சுருந்து பார்கனும்டே அவன் உண்மையிலேயே ராத்திரி சைக்கிளை விட்டு இறங்குறான இல்லையா என்று என்று நடேச பட்டர் மகன் செல்லகண்ணு கூறுவான்.
பட்டு பாவாடை எங்கே கட்டி வாய்த்த கூந்தல் எங்கே என்ற பிரபலமான எம்ஜிஆர் பாட்டை அவன் அடிகடி பாடியபடி சைக்கிளில் வலம் வருவான். தலை சீவி கூந்தல் முடித்து பூ வைத்து குஞ்சம் வைத்து என என்னனவோ செய்வான் கணேசன்.எழாவது நாள் முடிவில் பொங்கல் வரும் படி பார்த்து கொள்வான் . அன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் பஞ்சாயத்து சேர்மன் கே.பி.கணபதி கலந்து கொண்டு அவனுக்கு பரிசுகள் வழங்குவார்.உள்ளூர் தொழில் அதிபர் கோபாலக்ருஷ்ண யாதவ் அவர்கள் அவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌவ்ரவபடுதுவார்.
கணேசன்கள் இப்போது எங்கே போனார்கள்? அவன் பிள்ளைகள் படித்து இருப்பார்களா ?
பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள்..அன்று ஓய்வு நாள் எல்லோருக்கும்..முந்தய நாள் சமைத்த பொங்கல் சோற்றையும் கரும்பு கிழங்குகளையும் எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடங்களுக்கு சென்று ஜாலி யாக சாபிடுவது வழக்கம் கோவில்பட்டி யில் அப்போது தண்ணீர் கஷ்டம் உண்டு.தண்ணீர் இருக்கும் தோப்பாலம், கதிரேச மலை போன்ற இடங்களுக்கு மக்கள் செல்வது உண்டு. குருமலைக்கு போகலாமா என்று பள்ளி நண்பன் உதயசங்கர் ஒரு முறை சொல்லி போன கதை தனி கதை. முயல் கறி எங்க வீட்டிலே எடுப்பாங்க என்று சொல்லி இருந்தான். முயல் கறி சாப்பிடும் ஆசையில் நான் ,சாரதி மற்றும் உதயசங்கர் எல்லோரும் மறுநாள் குருமலை புறப்பட்டோம். நான் வழக்கம் போல எங்க வீட்டு சம்பா சோறும்,பழங்கறியும் ஒரு தூக்குவாளியில் எடுத்துக்கொண்டு போனேன் எங்களுக்கு முன்னால் சங்கரின் குடும்பம் போய்கொண்டு இருந்தது பேச்சுவாக்கில் அவர்கள் போன வழி மாறி நாங்கள் வேறு எங்கோ சென்று திசை மாறி தவியாய் தவித்து கடைசியில் எல்லோரும் நான் கொண்டு போன சோற்றையும் கரும்பையும் தான் திங்க முடிந்தது. முயல் கறியை முன்னால் போனவர்கள் சாப்பிட்டு செமித்து இரவு வீடு திரும்பினார்கள். அதன் பின்பு இன்று வரை முயல் கறி சாப்பிட்டதே இல்லை என்பது வேறு விஷயம்.
இப்போது மக்கள் தொலைகாட்சி முன்பு உட்கார்ந்து சாலமன் பாப்பையா பட்டி மன்றம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் நான் இருக்கும் சாந்திநகர் பகுதியில் பொங்கல் விழாவை இளைஞர்கள் நன்றாகவே கொண்டாடி வருகிறார்கள். குழந்தைகள் ஏராளமாக கூடுகிறார்கள்.பலூன் உடைத்தல், ஓட்டபந்தயம் ஸ்கிப்பிங் என்று போட்டிகள்..பெரியவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, இளைஞர்களுக்கு பானை உடைத்தல் என பொங்கல் விழா களை கட்டுகிறது..ஆனாலும் அப்பா நறுக்கி வைக்கும் ரஸ்தாளி கரும்பின் ருசியை நாக்கு தேடுகிறது, அப்போது சாப்பிடா விடினும்.