சுகாவின் ’தாயார் சன்னதி’ - ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…
“தாயார் சன்னதி” நூலை இப்பொழுது மீண்டும் நிதானமாகப் படித்த போது, புதுப்புது விஷயங்கள் மனதில் அலை மோதின. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பில் சுகா கண்ட கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு உண்மையை உரக்கச் சொல்வது போலத் தோன்றுகிறது.
“எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ!” என்று குசலம் விசாரிக்கும் கையில் காசு இல்லாத கல்யாணி ஆச்சி…
சாமியாடும்போது ஊரே தன்னை வணங்கும் அந்த சொற்ப தருணத்தில் மனம் நிறைந்த வாழ்க்கை வாழும் சிவசக்தி ரெடிமேட்ஸில் துணி கிழித்துப் போடும் அருணாசலம் பிள்ளை…
தனது சொந்த வாழ்க்கை சோகமானதாக இருந்தாலும், ஊருக்கெல்லாம் ‘துப்பு’ சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் வீரையன் தாத்தா…
தைப்பொங்கல் என்றாலே கரும்பு, மஞ்சள்குலை, வாழ்த்து அட்டைகள் என்ற பிம்பங்களைத் தாண்டி, சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகளுக்கு மத்தியில் கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடி வியாபாரம் செய்யும் நைந்து போன வாழ்க்கை வாழும் முப்பிடாதி…
அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும் பானைகளையும் கொண்டு வந்து போட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவன்…
இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்க்கை கிழிந்து போன துணியாய்க் கிடந்தாலும், வாழ்வின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்கள். எதையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள். இவர்களைப் படிக்கும்போது மனதில் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்வின் மீது ஆழமான பிடிப்பு ஏற்படுகிறது.
மரணம் என்றுமே புதிரானது. அதை வேடிக்கையாக எதிர்கொள்ளும் திருநெல்வேலிப் பெரியவர்களின் சம்பாஷணை சுவாரஸ்யமானது. கருப்பந்துறை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய தாத்தாவுக்குப் பிறகு யார் என்ற அவர் வயதொத்த நண்பர்கள் கிண்டலாய்ப் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவை.
“சாப்பிட்டா எங்க வீட்டுப் பிள்ளைல எம்.ஜி.ஆர். சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல…” என்று வாழ்க்கையையே எம்.ஜி.ஆர். வழியாகப் பார்க்கும் கல்லூரிப் பேராசிரியர் அன்னபூரணன், எம்.ஜி.ஆர். படத் தொகுப்பான “காலத்தை வென்றவன்” படத்தைப் பார்த்து உடைந்து போய், மூக்கைச் சிந்தி அழுதபடி நடந்து செல்லும் அய்யாப்பிள்ளை சித்தப்பா, “அவாள மாதிரியெல்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா…” என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும் வாட்ச்மேன் நெல்லையப்பன்…
தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்குச் சற்றே கூடுதலாக ஆக்கிரமித்திருந்த எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம், தமிழ்ச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பாதித்திருந்ததன் அடையாளங்களாய் இவர்களை உணர முடியும்.
துஷ்டி வீட்டில், சாம்பல் கரைத்த அன்று, பந்தி பரிமாறும்போது, “சுப்பிரமணிப்பய சரியா சாப்புடுதானா?மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டிருந்தான்…” என்று பரிமாறுபவர் கேட்க, சுப்பிரமணி ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு ரசமான விஷயம். இரண்டுமே நிஜங்கள் அல்லவா?
‘கிரேக்க’ இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்துக் கூறிய மீனாட்சி சுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஜெயமோகனின் நண்பர் சண்முகசுந்தரமும் ‘கிரேக்கர்’ என்று அறியும்போது படிக்கும் வாசகனிடம் வெடிச்சிரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
சிவதீட்சை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுடன் சேர்ந்து பொருட்காட்சிக்குச் சென்று ‘ராட்டு’ சுற்றிய அனுபவம் இருக்கிறதே…அந்த ஹாஸ்யத்தை எழுத்தில் சொல்லி மாளாது.
‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடலை ரசித்துக் கேட்கும் ராஜேஸ்வரி அக்கா இப்போது சென்னை என்ற கடலில் கரைந்து போய் விட்டாள். ‘தாயார் சன்னதி’ நூலை அவர் இப்போது படித்தாலும், பாடலைக் கேட்ட அதே சந்தோஷத்தை உணர்வார்கள் என்று தோன்றுகிறது.
அதேபோல, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடும் பெண் சாயல் கொண்ட குகன், ‘நாடகமெல்லாம் கண்டேன்’ என்ற பாடலைப் பாட முயற்சித்த (அதுதானே சரி?) முகம் தெரியாத அந்த சொக்கலிங்க மாமா ஆகியோரும்கூட கனவில் வந்து போவார்கள்.
உச்சினிமாகாளி கொடையின்போது அருள் வந்து சாமியாடிய பிரமு ஆச்சி, மறுநாள் காலை தொலைந்து போன ஒற்றைத் தோட்டை அழுது கொண்டே தரையில் தேடியது எவ்வளவு யதார்த்தமானது!
தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. தனது மகனை அம்மைக்காரி “ஏல, இங்க வா.” என்று கூப்பிட்டதுக்கு, இந்த ஆச்சிகள் ஊர்ப்பிரச்னையாக்கி விடுகிறார்கள்.
ஆழ்வார் குறிச்சியில் இருக்கும் ஆச்சிகள்தாம் எத்தனை பேர்! சைலு தாத்தா வீட்டாச்சியின் கிண்டலான பேச்சை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? (”கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறஞ்சா போயிருவியெ?”…) எனக்கும் சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சிதாம். தங்கத்தாச்சியை நினைத்துக் கொள்கிறேன்.
சுகாவின் சங்கீத ஞானம், அது குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும்கூட, பிரமிக்க வைக்கிரது. பொறாமைப்படவும் வைக்கிறது.
மொத்தத்தில் “தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளைப் போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.
சுகா
சுகா… உங்களிடம் ஒரு கேள்வி.
திருநெல்வேலியில் உள்ள இந்த பண்பாட்டுச் சூழல், அது உருவாக்கியுள்ள இந்த சாகாவரம் பெற்ற மனிதர்கள், அவர்தம் நகைச்சுவை உரையாடல்கள்… வேறு ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் அல்லது மண்ணில் இவையெல்லாம் சாத்தியமா?
இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு, கண்கள் மூடிய நிலையில், கடைசியில் யார் நினைவில் தங்கியிருக்கிறார் என்று யோசிக்கும்போது…
திருநெல்வேலி சைவாள் ஹோட்டல் உரிமையாளர் கருப்பையா பிள்ளையின் மனைவி…
வாழ்நாள் முழுவதும் புகை படிந்த அடுக்களை இருட்டுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல் முன்பாக இடுங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெயர் குறிப்பிடாத பெண்மணியின் ஒற்றைக்குரல் (”கல்லு காயுது… செத்த நேரம் ஆகும்…”) மனதைப் பிசைகிறது.
உங்கள் கைகளைத் தேடுகிறேன் சுகா…!
சுகாவின் ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
2 comments:
" 'அவாள்' இப்போல்லாம் ஏங்கிட்ட பேசுதத விட சுகாட்ட தாம் அதிகம் பேசுதது ..." என்று சுகாவின் அப்பா இரண்டு மாதம் முன்பு உன்னைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டதைச் சொல்ல வேண்டும் நாறும்பூ. தீபாவளிக்காகப் பட்டிமன்றம் பொதிகை சார்பில் நடைபெற்றதற்கு நெல்லை கண்ணன் அவர்களின் மருமகன் (முறை) ஐ ஒ பி செந்தூர்நாதன் அழைத்திருந்தார். எனது முதல் சந்திப்பு அவர் கூட அதுதான்..பட்டி மன்றம் முழுக்க நெல்லையில் இருப்பதாக உணர்ந்தேன். சுகாவின் விகடன் தொடர் பற்றி கே பி பாலசந்தருடன் பேச நினைத்தது முடியாமலேயே போய் விட்டது.-தலைமைக் காசாளர் பணி காரணமாக.அவருக்கும் வேலைப் பளு அதிகம் இருந்த காலம்! அதுதான் என் வருத்தம்...சுகா தொடர் மூலம் தொலைந்து விட்ட நெல்லைத்தமிழை ரசிக்க முடிந்தது.
வாழ்த்துக்கள்!
Post a Comment