பொக்கிஷம்
சிறிது நாட்களுக்குமுன் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவள்ளுவர் மன்ற கூட்டத்துக்கு பேச வர இயலுமா என்று கேட்டார். நான் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். கேட்டவருக்கு நான் கோவில்பட்டியை சேர்ந்தவன் என்ற விபரம் மட்டுமே தெரிந்திருக்ககூடும்.எனக்கும் திருவள்ளுவர் மன்றத்துக்கும் உள்ள தொடர்பு அவர் தெரிந்திருக்க நியாயமில்லை.
கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த புதிதில் என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆயிர வைஸ்ய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற திருவள்ளுவர் மன்ற இலக்கிய கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்து செல்வது வழக்கம்.(இந்த பள்ளியில் தான் கரிசல் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பயின்றார்) அந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தவர்கள் , நான் படித்த ஆயிர வைஸ்ய வுயர்நிலை பள்ளி தமிழாசிரியர் புலவர் மு.படிக்கராமு அவர்களும் கோவில்பட்டி கோ.வே.நா.கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பேரா.அ. சங்கரவள்ளிநாயகம் அவர்களும். இவர்கள் இருவரையும் இணைபிரியாத இலக்கிய இரட்டையர்கள் என்று தான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு சுமார் முப்பது அல்லது நாற்பது பேர் வருவார்கள். தமிழ் இலக்கியத்தின் வளமை குறித்து பல அறிஞர்கள் பேசுவார்கள். பேரா.வளனரசு , திரு.சி.சு.மணி, பேரா.இளம்பிறை மணிமாறன் , தசாவதானி ராமையா , தமிழ்கனல் என பல அறிஞர்களின் பேச்சினை கேட்டு வளர்ந்தேன்.எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது இப்படிதான்.
ஒவ்வொரு மாதமும் தவறாது கூட்டம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும். வருட கடைசியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும்.அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்...அதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அந்த பொது மேடையில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் , அந்த ஆண்டின் பனிரெண்டு கூட்டங்களும் தவறாது கலந்து கொண்ட அன்பர்களுக்கு மு.வ.தெளிவுரை எழுதிய திருக்குறள் அன்பளிப்பாக வழங்குவார்கள். அதை எப்படியும் வாங்கிவிடனும் என்ற தீராத வேட்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். நான் எட்டாவது படிக்கும் போது இப்படி சென்று கொண்டு இருக்கும்போது கடைசி மாத கூட்டத்துக்கு போக முடியாதபடி எனக்கு காய்ச்சல்..பதினோரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் நமக்கு திருக்குறள் புத்தகம் கிடைக்காதே என்ற எனது ஆதங்கத்தை யாரிடம் சொல்லி அழ ? என் அப்பா இதை புரிந்து கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் நான் வருத்ததுடன் கலந்து கொண்டேன். பனிரெண்டு கூட்டங்களும் கலந்து கொண்ட பதிமூன்று பெயர்களை புலவர் மு.படிக்கராமு அவர்கள் வரிசையாய் வாசித்து வந்தவர் இறுதியில் பதினாலாவது பெயராக எனது பெயரை சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதை நினைக்கும் போது இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
உடல்நலம் சரி இல்லாததால் கடைசி கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிந்து இவருக்கு இந்த பரிசு அளிக்கபடுகிறது என்று அவர் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது ? பலரும் எனது பெயரை இன்று வரை தப்பும் தவறுமாய் உச்சரிக்கும்போது , எனது ஆசான் புலவர் மு.படிக்கராமு அவர்கள் என்னை " பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார். அவரிடம் நான் பயின்றது நான் பெற்ற பேறு தான். அன்று முதல் நான் தொடர்ச்சியாக எல்லா திருவள்ளுவர் மன்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்..பின்னாட்களில் நான் த.மு.எ.ச.கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இதுவே உத்வேகம் அளித்தது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட திருவள்ளுவர் மன்றத்தினர் என்னை பேச அழைத்தார்கள் என்றால் எனக்கு கசக்குமா என்ன ...
உற்சாகமாக கலந்து கொண்டு பேசினேன்..சுமார் அறுபது பேர் கலந்து கொண்டார்கள்..என்ன எனது பேராசிரியர் அய்யா சங்கரவள்ளிநாயகம் அவர்கள் இல்லை..காலமாகிவிட்டார்..அவரது மகன் முத்து இருந்தார்..படிக்கராமு அய்யா நெல்லையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்..எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன..பேருந்து ஏறும் போது நிர்வாகிகளுள் ஒருவர் எனது பையில் ஒரு கவரை திணித்தார்..என்ன என்று கேட்டேன்..பயணப்படி என்றார்..நான் மறுத்தேன். .அவர் புன்சிரிப்புடன் மறுத்து சென்று விட்டார்..அந்த கவரை எனது பொக்கிசமாய் வைத்து இருக்கணும் போல இருந்தது..
Tweet