Sunday, September 13, 2020

கலகக்காரர் தொ.மு.சி.ரகுநாதன் ---------------------------------------------------- ஒரு நாவல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதன்மூலம் எழுத்தாளனின் பேனா பிடுங்கப்பட்டது என்பது இன்றைய சரித்திரம். ஒரு நாவலின் சர்ச்சைக்குரிய எழுத்துக்காக ஒரு எழுத்தாளன் கைது செய்யப்பட்ட விவகாரமும் தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த காலத்தில் நடந்துள்ளது என்பது பலரும் அறியாத செய்தி. 1949 இல், எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய " முதலிரவு " என்ற நாவலுக்கு அத்தகைய பெருமை உண்டு. பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாய் பேசாத அந்தக்காலங்களில், ஓரின சேர்க்கை குறித்தும்,முறை தவறிய உறவுகள் குறித்தும், காமம் சார்ந்தும் எழுதப்பட்ட இந்த நாவல் பெரும் புயலை கிளப்பியது. அக்காலத்தில் பல பதிப்புக்களையும் கண்ட இந்த நாவலை, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தடை செய்து உத்தரவிட்டார். இந்தத்தடையாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொ.மு.சி.போராடியபோதிலும், தோல்வியடைந்து, இறுதியில் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டி விட்டு வெளியே வந்தது தனிக்கதை. இருந்தும் சளைக்காமல், மறுவருடமே " கன்னிகா " என்ற இன்னொரு நாவலை எழுதினார். இப்போது இந்த நாவல் வெளி வந்திருந்தால் பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் தேடிப்படித்துக்கொள்ளவும். இப்படி அதிரடியாய் எழுதிய அதே தொ.மு.சி. தான் நெல்லை மாவட்டத்தில் பஞ்சம் தலை விரித்தாடிய நிலையில் நெசவாளர் பட்ட துயரம் கண்டு, " பஞ்சும் பசியும் " என்ற நாவலையும் எழுதி பெரும்புகழ் பெற்றார். தமிழில் வெளி வந்த முதல் யதார்த்த நாவல் என்று சொல்லலாம். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலை செக் நாட்டு தமிழ் அறிஞர் கமில் ஸ்வலபில், செக் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழில் இருந்து ஒரு ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான தொ.மு.சி., புதுமைப்பித்தன் இறந்தபிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தனது எழுத்துலக ஆசானாக புதுமைப்பித்தனையே கருதினார். பாரதி மீது அளப்பரிய பற்றுதல் கொண்டு, பல ஆண்டுகள் பல்வேறு தரவுகளை சேகரித்து, " பாரதி : காலமும் கருத்தும்" என்ற அற்புதமான நூலை எழுதினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலின் எழுத்தில் மயங்கி, பின்னர் அவரைப் பற்றி அவரது " சாந்தி " இதழ் பற்றி, பல்வேறு விஷயங்களை தேடித்தேடி படித்தேன் என்றே சொல்ல வேண்டும். பாகப்பிரிவினையில் தனக்கு கிடைத்த சொத்தான மூவாயிரத்தை கொண்டு " சாந்தி " என்ற இலக்கிய இதழை 1954 இல் நெல்லையில் தொடங்கியவர் ரகுநாதன். நெல்லை பப்ளீசிங் ஹவுஸ் நடத்திய சண்முகம் பிள்ளை அண்ணாச்சியின் ஒத்துழைப்போடு, அவரது கடைக்கு அடுத்ததாக இருந்த சேவியர் என்ற கம்யூனிஸ்ட் தையல்காரரின் தையல் கடையின் ஒரு மூலையில் சாந்தி அலுவலகம் தொடங்கப்பட்டது. அதற்கு வாடகை இலவசம். ஒருபுறம் தையல் இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும்.இன்னொரு புறம், பத்திரிக்கைக்கு வரும் படைப்புக்களை சரிபார்ப்பது, பிழை திருத்துவது, தபால் அனுப்புவது என இலக்கிய வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அறையில் கிடக்கும் அலமாரி,சாய்வு நாற்காலி கூட அவரது சொத்தில் கிடைத்தவையே. சாந்தி இதழுக்கு வேண்டிய உதவிகள் செய்தவர் எழுத்தாளர் சுந்தரராமசாமி. முதல் இதழில் சுந்தர ராமசாமி எழுதிய தண்ணீர் என்ற சிறுகதை வெளி வந்தது. சாந்தி இதழுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. சாந்தி அலுவலகத்தில் பல்வேறு படைப்பாளிகள் வந்து போவது போல இன்னொரு விருந்தாளியும் தினமும் வருவார். அது ஒரு அணில் பிள்ளை. தனது சாப்பாட்டில் ஒரு கவளத்தை இந்த அணிலுக்கு அளித்து விட்டே சாப்பிடுவாராம் ரகுநாதன். நீண்ட நாள் அவரது அன்பைப் பெற்றது இந்த அணில்பிள்ளை. பிற்காலத்தில், அவரது வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார் அவர்.இறுதிக்காலத்தில், தன்னிடம் இருந்த பொக்கிஷமான நூல்களை எல்லாம் எட்டயபுரம் பாரதி ஆய்வு மையத்திற்கு (ரகுநாதன் நூலகம் ) அளித்து விட்டு, தனது வீட்டுப் பொருட்களை, நகைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுக்கும் உயில் ஒன்றையும் எழுதி வைத்தார். அதில் இந்த வெள்ளை நாயை பற்றியும் ஒரு செய்தி உண்டு. தனது இறப்பிற்கு பிறகு இந்த நாயை யாரும் கவனிக்க மாட்டார்கள் எனக்கருதி, அது தெரு நாயாக அலைய நேரிடுமோ என்று நினைத்து, தான் இறந்தபிறகு, நகராட்சிக்கு தெரிவித்து அதை கொன்று விடுமாறு உயில் எழுதி வைத்திருந்தார் என்கிறார் எழுத்தாளர் பொன்னீலன். காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார் போன்ற நூல்கள் படித்த பின்னணியில், அவரை நெல்லையில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற அழைக்க முடிவு செய்திருந்தோம். எழுத்தாளர் தமிழ்செல்வன்,கவிஞர் கிருஷி மற்றும் நான் மூவரும் அவரது பெருமாள்புரம் வீட்டில் சந்திக்க சென்றோம். வாசலுக்கு வந்தவர், யாரென விசாரித்தார். விஷயத்தை சொன்னோம். கேட்டு விட்டு, " இன்னும் மூணு மாசம் இருக்குல்ல..பார்ப்போம் ." என்று சொல்லி விட்டு வாசல் கதவைக்கூட திறக்காமல் உள்ளே போய்விட்டார். எங்களுக்கு முகம் வாடி விட்டது. தமிழ்ச்செல்வன் எங்களிடம் " பெரிய ஆளுமை ன்னா அப்படித்தான்..எழுத்தாளர்க்குள்ள கெத்து எப்படி இருக்குன்னு பார்த்தீகளா ..அது பாரதியின் ஞான செருக்கு .." என்று சொல்லி சமாதானப்படுத்தினார். பின்னால் மாநில மாநாட்டில் சிறப்பான சொற்பொழிவு ஆற்றியதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சம். ஒருமுறை, பாரதி விழாவில் பேச அழைத்தபோது ரொம்ப உற்சாகமாய் தனது வெள்ளை ஜிப்பாவில் கைகளை நுழைத்தபடி பேச்சை துவக்கினார். இந்தியன் வங்கியின் அப்போதைய தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பற்றி நகைச்சுவையாய் பேச ஆரம்பிக்கவும், எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதை எதற்கு இவ்வளவு நேரம் பேசுகிறார் என்று. திடீரென்று, பின்னோக்கி செல்ல ஆரம்பித்தார். நெல்லையில் மேம்பாலத்திற்கு அடியில் சந்திர விலாஸ் அருகில் வெள்ளைக்காரன் ஆரம்பித்த அர்பத்நாட் வங்கியை , அதன் வரலாற்றை சொல்லி, ஒரு திங்கள் கிழமை அது திவாலா என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட போது, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி புலம்பிய கதையை சொல்லி, அதில் ஏற்பட்ட துயரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களை பற்றியும், மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாய் அலைந்தவர்களைப்பற்றியும் சொல்ல ஆரம்பித்தபோது கூட்டத்தில் நீண்ட மௌனம் ஏற்பட்டது. அந்த மக்கள் கூட்டத்தில், பைத்தியமும் பிடிக்காமல், தற்கொலையும் செய்து கொள்ளாமல் திக்பிரமை பிடித்து நின்ற மூவர் வ.உ.சி, பாரதி,சிவா. சுதேசி இயக்கத்திற்காக மக்களிடம் வசூலித்த தொகையை இந்த அந்நிய நாட்டு வங்கியில் போட்டு இழந்தவர்கள் இவர்கள். அந்நிய வங்கிகளிடம் இனியும் ஏமாறக்கூடாது என்று நினைத்து கல்லிடைக்குறிச்சி ஐயர்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆகியோரிடம் பேசி, சுதேசி வங்கி ஒன்றை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அப்படி ஆரம்பிக்கப்பட்ட வங்கி, இன்றைய இந்தியன் வங்கி என்று வீர முழக்கமிட்டு, அப்படிப்பட்ட வங்கியை இன்று நஷடத்தில் இயங்குகிறது என்று மூடி விட முயற்சி செய்யும் போக்கினை கடுமையாய் சாடினார். சுமார் ஒரு மணிநேரம் பேசிய அவரது உரை அற்புதமான தகவல்களின் தொகுப்பு. அது தான் தொ.மு.சி. திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற பெயரில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார் அவர். பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்ட ரகுநாதன், ஜீவா,நா.வானமாமலை,என்.டி.வானமாமலை,தி.க.சி, அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பாளை.சண்முகம், கணபதியப்பன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். ஜீவா அவர்கள் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கியபோது உடன் இருந்து பணியாற்றியவர். ஜீவாவிற்குப் பிறகு அதன் தலைவர் பொறுப்பில் இருந்தார். இவரது புகை பிடிக்கும் பழக்கத்தை இவரது துணைவியார் விட சொல்லி வற்புறுத்தியபோதெல்லாம் கேட்காமல், அவர் இறந்தபிறகு, தனிமையில் அவரது புகைப்படத்தை பார்த்து இனி பிடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து ஒரு நாளில் நிறுத்தி விட்டதை பலரும் அதிசயமாய் பார்த்தனர். எழுதும் எல்லோரையும் பாராட்ட மாட்டார் ரகுநாதன். ஒருவரின் எழுத்து வசீகரித்து விட்டால், அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் பாராட்டுவார். இறுதிக் காலத்தில், தனது மகள் பேரா. மஞ்சுளா வீட்டில் வசித்து வந்தார். அந்த நேரத்தில், பாளையங்கோட்டையின் புறநகர் பகுதியில் அது இருந்ததால், அவரால் பல கூட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. தனிமையில் இருந்த அவருக்கு மகள்,பேரன் இல்லாத நேரங்களில்,நாய் மட்டுமே துணை. எப்போதாவது சந்தித்தால், " வீட்டுக்கு வாங்களேன்..பேசுவோம்." என்று சொல்லி, கேடிசி நகர் தெரு விபரம்,தண்ணீர் தொட்டி அருகில் எதிரே செல்லும் மண் பாதையில் கடைசியில் இருக்கும் மஞ்சள் நிற வீடு என்றெல்லாம் சொல்லி விட்டு, லேசாக இருமிய படி, " அங்கெ வந்து ரகுநாதன் வீடுன்னா, யாருக்கும் தெரியாது..மஞ்சுளா வீடு எதுன்னு கேளுங்க..சொல்லுவாங்க.." என்று சொன்னபோது அதிர்ந்து போனேன். புதுமைப்பித்தன், ஜீவா,கு.அழகிரிசாமி,கலாநிதி.க.சிவத்தம்பி,கலாநிதி.க.கைலாசபதி,சுந்தர ராமசாமி,தவத்திரு குன்றக்குடி அடிகளார், கிருஷ்ணன் நம்பி என பல இலக்கிய ஆளுமைகளுடன் நட்பு பாராட்டிய தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் என்ற தொ.மு.சி. ரகுநாதன் உண்மையில் ஒரு கலகக்காரரே !

No comments: