மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகை வேறுபட்டது.அது பள்ளி மாணவனாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லும் குடும்பஸ்தராக இருந்தாலும் சரி, மூன்று நாள் தொடர்ந்தார்போல லீவு என்றால் மனசுக்குள் ஒரு குதூகலம் இருக்கத்தானே செய்யும்? தீபாவளி என்றால் வெடி,மத்தாப்பு, என்று நெருப்போடு சார்ந்த பண்டிகை என்பதால் சற்று கவனமாக கொண்டாட வேண்டும்.பொங்கல் அப்படி இல்லை.வீட்டுக்கு வெள்ளை அடித்து பளிச் சென்று இருப்பதால், மனசுக்குள்ளும் அந்த வெளிச்சம் ஏற்படும்.டவுனில் இப்போது யார் ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்? ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு ஒரு முறை டிஸ்டம்பர் கலர் அடிப்பதற்கு மட்டுமே இருபதினாயிரம் ஆயி விடும்.
அந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வெள்ளை அடிப்பது என்பது மரபாகவே இருந்து வந்திருக்கிறது. வெள்ளை அடிக்க என்றாலே மூன்று நாட்கள் ஆகி விடும்.வீட்டை ஒழுங்க வைக்க அம்மா படும் பாட்டை சொல்லி முடியாது. பரணில் இருக்கும் பண்ட, பாத்திரங்களை கீழே இறக்கி வைப்பதும் அதை புளியால் நன்றாக விளக்கி கழுவி மீண்டும் மேலே ஏற்றுவதும் மலைப்பான வேலை.அம்மா அதை செய்ய எப்போதும் சளைத்தவள் இல்லை. பழைய பித்தளை பாத்திரங்களோடு எத்தனையோ வேண்டாத பொருட்களும் இருந்தாலும் அம்மா அவற்றை அவ்வளவு எளிதில் கழித்து விடுவது இல்லை. அப்பா திட்டி கொண்டே இருப்பார்.பதவல்களை குறை என்று சொன்ன கேக்குராளா என்று ஏசுவார். ஆனாலும் அம்மா எல்லா பொருட்களையும் சேர்த்து சேர்த்து தான் வைத்து கொண்டு இருப்பாள். இந்த மாதிரி சமயங்களில் தான் நான் எப்போவோ தொலைத்த பென்சில், கோல்டன் கலர் பேனா போன்ற பொருட்கள் கிடைபதுண்டு.வீடு முழுசும் துணிகளும் பெட்டிகளும் இறைந்து கிடக்கும் காட்சி இப்போதும் நினைவில் உள்ளது.நானும் கணபதி அக்கா, செம்பகவல்லி அக்கா எல்லோரும் எங்களின் பழைய பொருட்களை தேடுவதிலேயே குறியாய் இருப்போம்.
வெள்ளை அடித்து முடியும் போது வீடு புதிய பொலிவுடன் காட்சி தரும்.அம்மா ரெண்டு நாளைக்கு படுத்து கொள்வாள். பொங்கலுக்கு ரெண்டு நாட்களுக்கு முன் காவி கரைத்து வாசல் படிகளுக்கு காவி பட்டை அடிப்போம்.அம்மா, அக்காக்கள் எல்லோரும் கோலம் போடுவதில் மும்முரமாக இருப்பார்கள்.அது பெண்களுக்கான வேலையாம். அதற்காகவே அக்கா ரெண்டு பெரும் வீரபத்திரன் டாக்டர் வீட்டில் உள்ள ஜானகி அக்காவிடம் ரெண்டு வாரத்துக்கு முன்பே பதினாறு புள்ளி கோலம், பத்தொன்பது புள்ளி கோலம் என்றெல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு கரும்பு வாங்க அப்பாவுடன் நான் மட்டுமே பெரும்பாலும் செல்வதுண்டு.இருப்பதில் நான் தான் கடைக்குட்டி என்பதால் இந்த பொறுப்பு. எதிர் வீட்டு கண்ணன் வாங்கும் கரும்பு நீண்டு ஒரு கணுக்கும் இன்னொரு கணுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும்.கடித்து தின்பது எளிதாக இருக்கும். ஆனால் அப்பா வாங்கும் கரும்பு ரஸ்தாளி கரும்பாய் இருக்கும்.கணுக்கள் நெருக்கமானதாக இருக்கும் அந்த கரும்பு சாப்பிட எனக்கு பிடிக்காது. ஆனாலும் அப்பா அந்த கரும்புகளை தான் வாங்குவார்.வீட்டிலே மொத்தம் ஏழு டிக்கெட்டுகள் இருந்தாலும் அப்பா ரெண்டு கரும்புகள் தான் வாங்குவார். கரும்பு சாபிடுவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
மஞ்சல்குலையும் பனங்கிழங்கும் பச்சை காய்கறிகளும் பார்த்து பார்த்து அப்பா வாங்குவார்.காய் வாங்குவதில் அப்பா சில பழக்கங்களை வைத்திருப்பது வழக்கம்.முதலில் தேங்காய்.பின்பு கிழங்கு வகைகள், பச்சை காய் கறிகள், அதற்கு மேல் தக்காளி போன்ற பழ வகைகள் என்று பையின் மேல் போட வசதியாய் வாங்குவார். அப்பா ஒரு பையும் நான் ஒரு பையுமாய் வந்து சேரும் போது வீட்டிலே கோலம் போடும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும்.
அப்பா வருவதற்குள் எவ்வளவு அதிகமாய் கோலங்கள் போடா முடியுமோ அவ்வளவு அதிகமாய் போட முயற்சி பண்ணுவார்கள். வீடு நிறைய கோலங்கள் மணிகணக்கில் போட அப்பா விரும்புவதில்லை. அம்மா பொங்கல் கட்டிகளை காவியால் மெழுகி சுண்ணாம்பு நீரால் பட்டை அடித்து கொண்டு இருப்பாள். செண்பகவல்லி அக்கா சிறு வீட்டு பொங்கல் விட களி மண்ணால் சிறு வீடு கட்டிக்கொண்டு இருப்பாள் .அண்ணன் குமரகுரு அதை அழகுபடுத்தி கொண்டு இருப்பான். மணி அண்ணன் எல்லோருக்கும் மேலாக ஆலோசனை சொல்லி கொண்டு இருப்பான். தெருவே உற்சாகமாக இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் பாடம் எதுவும் படிக்க வேண்டாம் என்பதே எங்களுக்கு மேலும் தெம்பூட்டும்.
அங்கெ இங்கே சுற்றி கொண்டு இருந்தாலும் அப்பா என்னை விடுவது இல்லை. "எல ..அந்த பருத்தி மாரு கட்ட எடுத்து பிரிச்சு போடு..காலைலே அம்மா அடுப்பு பத்த வைக்க ஈஸியா இருக்கும் " என்பார்.அம்மா காலைலேயே எழுந்து குளித்து ஈர துணியுடன் அடுப்பு பத்த வைப்பாள். புகை மண்டலத்துக்கு நடுவே அம்மா உட்கார்ந்து குழல் ஊதி கண்களை கசக்கியபடி பொங்கல் இடுவாள்.
சூரியன் வருமுன்பே பொங்கல் பொங்கி விடும்..அம்மா குலவை இடுவாள். அம்மாவுக்கு பிறகு இப்போது யாரும் குலவை இட்டு பார்த்தது இல்லை.வாழை இலையில் அம்மா படையல் இட்டு காக்காவிற்கு தனியாக இடுவாள். மதியம் சாப்பாட்டிற்கு எல்லா காய்களும் வைத்து அவியல்,போரியல், கூட்டு பச்சடி வைக்க வேண்டும்.அம்மா எதையும் சுமையாய் நினைத்தது இல்லை. காய் வைக்கும் போது எங்களுக்கு வானரமுட்டி மாமா ஞாபகத்துக்கு வரும். சிவஞான மாமா பொங்கல் கறிகளை அவரே கிண்டி பழங்கறியாக சூடு பண்ணுவார்...(தொடரும் )
No comments:
Post a Comment