Monday, June 27, 2011

இலை உதிர்வதைப்போல...

இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை நாள் என்றாலே பிள்ளைகளைப்போலவே எனது மனமும் குதூகலிக்கத்தான் செய்கிறது. எதையும் நிதானமாகச் செய்யலாம். பதட்டத்துடன் காலைச்சாப்பாட்டை அவசர அவசரமாய் சாப்பிட்டு பள்ளிக்கு ஓட வேண்டியதில்லை. இரண்டு பேருக்கும் டிபன் கேரியரில் மதியச் சாப்பாட்டை எடுத்து வைக்க வேண்டியதில்லை. காலை டிபனையே பத்து மணிக்கு நிதானமாய் சாப்பிடலாம். சாப்பிடாமல் கூட இருக்கலாம். நம் இஷ்டம் தானே? மாலையில் எதிர்வீட்டு வினோதினியுடன் ஜவுளிக்கடைக்கு போகவேண்டும். அவளுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். 'நீங்களும் வாங்கக்கா!' என்று திரும்ப திரும்ப அழுத்தியதால் வருவதற்கு ஒப்புக்கொண்டேன.; பீரோவைத் திறந்து என்ன சேலை கட்டுவது என்ற யோசனையில் மனம் அலசத் தொடங்க, கைகள் சேலைகளைப் புரட்டியபடி இருந்தன. ஊடுவாக்கில் கை எதையோ ஒரு சேலையைப்பற்றி இழுக்க, கால்களுக்கிடையே வேறு ஒரு புடவை விழுந்தது. குனிந்து பார்த்தபோது நீல வர்ணத்தில் வெள்ளைப்பூக்கள் பூத்த சேலை அம்மா கடைசியாய் கட்டியிருந்த சேலை கைகள் அந்தச் சேலையை அனிச்சையாய் தூக்கின. சேலையைப் பிரித்த போது அம்மாவின் வாசனையை உணர்ந்தேன்.

இதேபோல் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்தான் அம்மா தனது கடைசி மூச்சுக்காற்றை விட்டுவிட்டு, நீலநிறப் புடவையில் மௌனித்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். என்றுமே ஏழு மணி வரை தூங்காத அம்மா, அன்று வெகுநேரம் தூங்குவதைப் பார்த்து நான் அம்மாவை எழுப்பியபோது அம்மாவின் ஜில்லிட்ட உடம்பு கீழே சரிந்தது. அறுபது வயதில் ஏன் அம்மா என்னை விட்டுச் சென்றாய்? வரும் தைப்பொங்கல் வந்தால் அம்மா இறந்து பத்து வருஷங்கள் ! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அம்மா இறக்கும் போது ரிஷிக்கு ஒன்பது வயதிருக்கும். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆச்சி இறந்து எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது, அழுவதற்குக்கூடத் திராணியற்று, விக்கித்துப் போய் ஒரு போர்வையில் முடங்கிக் கிடந்தான்.

அவனை அம்மா தானே வளர்த்தாள்! சிசேரியன் மூலம் அவன் பிறந்தபோது டாக்டருக்குப் பிறகு முதலில் அவனைத் தூக்கி எடுத்து உச்சி முகர்ந்தது அம்மா தான்! மூன்று வயசு வரை முழுசாய் அவனை வளர்த்தது அம்மா.. அவனைக் குளிப்பாட்டுவதில், மருந்து கொடுப்பதில், அவனோடு விளையாடுவதில், நர்சரி வகுப்பி;ற்குப் போகும்போது அவனை இடுப்பில் சுமந்தபடி தெருவில் வேடிக்கை பார்த்தபடி அழைத்துச் செல்வதில்... அம்மாவுக்கும் அவனுக்குமான பந்தம் மிகவும் இனிiமான தருணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்குப் போகும்போது ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகளை அம்மா நாய் அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சியிடம் காண்பிப்பான். 'குட்டி நாயை எடுத்துக்கொடு.. அதைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும்' என்று அடம்பிடிப்பான். அம்மா அவனுக்காக எதுவுமே செய்வாள். அம்மாவின் பொறுமை எனக்குத் துளியும் கிடையாது. அம்மாவிடம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டிருக்கிறேன். இது கூடக் கண்ணுக்குத் தெரியலையா' என்று நான் கேட்ட போதெல்லாம், அம்மா பதிலுக்கு ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்திருக்கிறாள். அதே மாதிரி தான் ரிஷியும் என்னிடம்கோபப்படுவான். 'என்னம்மா பாக்குறே! பக்கத்துல வச்சுக்கிட்டே தேடுறியே' என்பான். கண்ணாடியைப் போட்ட பின் தான் தெளிவாகத் தெரிகிறது உலகமே.. அம்மா கடைசியாய் படுத்த போது தலையணை அருகே மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குக் கண்ணாடியை ரிஷியின் அப்பா பத்திரமாக எடுத்து சாமி போட்டோவின் கீழே வைத்திருக்கிறார். அம்மாவின் மாத்திரை டப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. டயானில் மாத்திரைகள் மீதம் முப்பதும் அப்படியே இருந்தன. கடைசிக் காலத்தில் அம்மா எங்கே சென்றாலும் சேலைகளை எடுத்து வைக்கிறாளோ இல்லையோ, மாத்திரை டப்பாவும், கண்ணாடி கூடும் ஞாபகமாய் அவளது கைப்iயில் இடம் பெற்றிருந்தன.

இப்பொழுதெல்லாம் அம்மா அடிக்கடி கனவில் வருகிறாள். கிட்டே வந்து எதுவோ சொல்ல நினைத்து பின் எதுவும் சொல்லாமல் விலகி.... பால்வெளியில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு கிரகத்தைப் போல பிரகாசித்தும், மினுங்கியும் செல்வது போல இருக்கும். வீட்டிலே வேலை செய்யும் பணியாளிடம் அம்மா சுவாரசியமாய் கதை கேட்டுக்கொண்டிருப்பாள். சாப்பி;ட்டு மீந்து போனதை அல்லது பழைய தின்பண்டங்களை எதையாவது வேலை செய்யும் இசக்கியம்மாளுக்குக் கொடுக்கப்போனால் அம்மா சொல்வது அடிக்கடி நினைவிற்கு வரும். 'எது கொடுத்தாலும் சாப்பிடுற நிலையில் உள்ளதையே கொடு. வேலைக்காரிதானே என்று நினைத்து ஊசிப்போன காய்கறிகளையோ, கெட்டுப்போன சாப்பாட்டையோ கொடுக்காதே! அதைவிடப் பாவம் எதுவுமில்லே...' என்று அம்மா சொல்வாள். சாப்பாடு விஷயத்தில் அம்மாவின் தாராளம் என்னை பல சமயங்களில் வியக்க வைக்கும். ஐந்து பேருக்குச் சமையல் என்றால்கூட அம்மா எட்டு பேருக்குச் சாப்பிடுவது போல செய்வாள். திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டால் என்ன செய்வது... என்று விளக்கம் வரும். சமயங்களில் அது உண்மையாகக் கூட ஆகிவிடும். அண்ணனின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது 'சாப்பிட்டுப் போயேன் சுப்பையா' என்று அம்மா இயல்பாகச் சொல்வது வழக்கம். அவர்களும் பெரும்பாலும் மறுப்பு சொல்வதில்லை. அம்மாவின் சாப்பாட்டு ருசியை அனுபவித்தவர்கள் அவர்கள்! கோணங்கி வீட்டிற்கு வந்தால் தாராளமாய் பத்து, பனிரெண்டு முழு உளுந்தம் தோசைகளை ஒரு பிடிபிடிப்பான். அடுத்தவர்கள் முழு ஈடுபாட்டோடு ரசித்து உண்பது அம்மாவுக்கு இயல்பிலேயே பிடித்தமானதாக இருந்தது

. இப்பொழுதும் கன்னி விநாயகர் கோவிலில் எல்ஆர்.ஈஸ்வரியின் 'தாயே கருமாரி!' பாடலைக்கேட்கும்போது எனக்கு வ.உ.சி.நகர் நினைவிற்கு வந்து விடுகிறது. மதுரையில் வ.உ.சி. நகரில் நாங்கள் குடியிருந்த காலத்தில் நானும் அம்மாவும் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப்பாடல்கள் எல்லாமே கேட்டு, கேட்டு மனசுக்குள் மனப்பாடம் ஆகியிருந்த காலம்!. கால அடுக்கின் எல்லைகளை இசைப்பாடல்களே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தெருவில் என் வயதொத்த இளம்பெண்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் எனக்கு அம்மாவே மிகச்சிறந்த தோழி... நானும் அம்மாவும் பார்க்காத சினிமா கிடையாது. வீட்டிலிருந்து இரண்டு பர்லாங் தொலைவில் இருக்கும் சரஸ்வதி தியேட்டருக்கு இருவரும் பேசியபடியே நடந்து செல்வோம். கல்லூரியில் எனக்கு சீனியராகப் படிக்கும் உமாசங்கர் சைக்கிளிலேயே பின்னால் வருவதைக் கவனித்திருக்கிறேன். இதைக்கூட அம்மாவிடம் கூச்சமின்றிக் கூறியிருக்கிறேன். அம்மா எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்வாள். கல்லூhயில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் அம்மாவிடம் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு மிகச்சிறந்த தோழியைப் போல அம்மா எல்லாவற்றையும் ஆர்வமாய்க் கேட்பாள். புடவை எடுக்கவோ, ஸடிக்கர் பொட்டு, வளையல், தோடு வாங்கவோ, எனக்கான பேனா, நோட்புக்ஸ் வாங்கவோ கூட நான் அம்மாவையே துணையாய் அழைத்துச் செல்வேன். என் வாழ்க்கைப்பயணத்தில் இடையில் நின்றுவிட்ட சக பயணியாகவே அம்மாவை உணர்கிறேன்.

போன வாரம் வைரஸ் காய்ச்சலில் அவதிப்பட்டபோது, ரத்தப் பரிசோதனை செய்யச்சொல்லி டாக்டர் அட்வைஸ் பண்ணினார். அப்போது வழக்கமான பரிசோதனையுடன் சாக்கரைநோய் இருக்கிறதா என்பதையும் பார்த்து இல்லையென்பதை உறுதி செய்து கொண்டேன். அம்மாவிற்கு மட்டும் எப்படி வந்தது இந்த சர்க்கரை வியாதி.. கடைசி இரண்டு வருஷங்கள் மாத்திரை டப்பாவுடன் அம்மா இருந்த நினைவு வந்தது. வியாதி வந்து விட்டதே என்று அம்மா ரொம்ப வருத்தப்பட்டதும் இல்லை. அதைக்கூட எல்லாவற்றையும்போல இயல்பாக எடுத்துக்கொண்டாள்.

அம்மாவின் உலகம் ரொம்ப சிறியது. அப்பா, இரண்டு அண்ணன்கள், நான் மட்டுமே அந்த உலகில் உண்டு. திருமணத்திற்குப் பிறகு மருமகன், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்ற உறவுகளைத் தாண்டி வேறு யாரும் கிடையாது. தனது சொந்தங்களைக் கடந்து வெகு தூரம் வந்து விட்டவள். ஆனால் எல்லா மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவள். மனிதர்களை உணர்வுபூர்வமாக உணர்ந்தவள். சர்க்கரை வியாதியை ஒரு பொருட்டாகவே அம்மா எடுத்துக் கொள்ளாமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். 'எம்மா! பேசாம படுத்திறேன்... நான் பாத்துக்க மாட்டேனா?' என்பேன்.'நீ ஸ்கூல் விட்டு இப்பத்தான் வந்திருக்கே... கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு' என்றபடி அம்மா காப்பியைக் கலப்பாள். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் அம்மாவின் மணமான காப்பியைக் குடிக்க நாக்கு பரபரக்கும். விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால், மனம்தான் எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இருந்த ஜாலியான உணர்வு மனசைத் தொற்றிக் கொள்கிறது. காலையில் சீக்கிரமாய் எழுந்து காப்பி போட வேண்டாம்! வேலைக்காரிக்கு பாத்திரங்களை அவசர அவசரமாய் எடுத்துப்போட வேண்டாம.! எல்லாவற்றிற்கும் மேலாக சமையல் பண்ண வேண்டாம். எல்லாத்துக்கும் அம்மா இருக்கிறாள்... மனம் நிம்மதிப் பெருமூச்சில்.. ஆனந்த நித்திரை கண்களைக் கட்டிப்போடும்... எவ்வளவு பாதுகாப்பாய் உணர்ந்திருக்கிறேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படித்தானே தூங்கினேன்? முதல்நாள் இரவு 11மணிக்கு அம்மாதானே எல்லோருக்கும் தோசை சுட்டுக்கொடுத்தாள். நாளை மதியத்துக்குமேல் ஊருக்குக் கிளம்பணும்' என்று படுக்குமுன்பு என்னிடம் சொல்லிவிட்டுப் படுத்தாள். உலகத்தை விட்டே கிளம்பப்போவது யாருக்குத் தெரியும்? என்றுமே ஏழுமணி வரை தூங்காத அம்மா அன்று தூங்கினாள். யார் எதிர்பார்த்தார்கள் இதை? அப்பா விக்கித்துப் போனார். வெளியூர் போயிருந்த அண்ணன் உடல் பதைபதைக்க ஓடிவந்தான். அம்மா ஆழ்நத நித்திரையில் உறங்குவது போலத் தான் இருந்தாள். முகம் எலுமிச்சை நிறத்தில் கலங்கமற்று இருந்தது. யார் யாரோ வந்தார்கள். அம்மாவுக்கு நல்ல சாவு தான். படுக்கையில் கிடந்து சங்கடப்படாமல்... கொடுத்து வச்ச மகராசிதான்... யாரோ ஒரு வயதானவர் அண்ணனிடம் கூறிக்கொண்டிருந்தார். மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அதன்பின் எது நடந்தாலும் மனம் அதனைப் பக்குவமாய் ஏற்றிpருக்கும்.திடுதிப்பென்று நிர்க்கதியாய் விட்டுப்போனாயே அம்மா.

.ஒரு மாதத்திற்கு முன்பு அம்மா பேச்சுவாக்கில் சொன்னாள். 'மகள் மருமக எல்லோரும் வேலைக்குப் போயிட்டு இருக்கீக... படுக்கையில மட்டும் விழுந்துறக்கூடாது மீனா... யாரையும் தொந்தரவு படுத்தாம போய்ச்சேரணும்...பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்ற மாதிரி உதிர்ந்து போகணும்.' சொன்னது போலவே, இயல்பாய் உதிர்ந்து விட்டாள் அம்மா...வாழ்க்கையில் அம்மா ஜெயித்துவிட்டது போலவே தோன்றுகிறது. அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரு தெளிந்த நீரோடை போல சென்றுவிட்டது. சேலையைக் கட்டிவிட்டு கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் சாயல் எனக்குள் படிமமாய் உறைந்தது. நீ எங்கேயும் போகவில்லை அம்மா! எனக்குள்தான் இருக்கிறாய்!.

4 comments:

Rathnavel Natarajan said...

உங்கள் எளிமையாக, நிறங்கள் அதிகமில்லாமல் நேர்த்தியாக இருக்கிறது. அதனால் தளம் எளிதாக, சீக்கிரமாக திறக்கிறது.
கதையா? நிஜமா?
கண் கலங்கி விட்டேன்.
வாழ்த்துக்கள்.

mrajaramiah said...

'எது கொடுத்தாலும் சாப்பிடுற நிலையில் உள்ளதையே கொடு. வேலைக்காரிதானே என்று நினைத்து ஊசிப்போன காய்கறிகளையோ, கெட்டுப்போன
சாப்பாட்டையோ கொடுக்காதே! அதைவிடப் பாவம் எதுவுமில்லே...நெஞ்சை தொட்ட வரிகள்! ஐந்து பேருக்குச் சமையல் என்றால்கூட அம்மா எட்டு பேருக்குச் சாப்பிடுவது போல செய்வாள். பரந்த மனது அம்மாக்கள் வாழ்ந்த காலம். அனால் இன்று "மூன்று தோசை சாப்பிட்டச்சி, இன்னும் என்ன உட்கார்ந்துட்டிருக்கிங்க" எப்பவும் எதாவது நினைப்பு! கஷ்ட காலம்டா சாமி!

Shanmugam said...
This comment has been removed by the author.
Shanmugam said...

Tenkasi railway station aachiai pole,ungal appavin kaditham pole,Ammavin selaiyum manathai thottathu.