Tuesday, December 6, 2011

டிசம்பர் மாதச் சித்திரங்கள்

First Published : 05 Dec 2011 02:59:17 AM IST


வெளியூர் சென்று திரும்பிய பாரதியார் இருண்ட அறையில் கிழிந்த பாயில் சோர்வாய் படுத்திருந்த நீலகண்ட பிரம்மச்சாரியாரைக் கலக்கத்துடன் பார்க்கிறார். அவர் மெதுவாய் எழுந்து சென்று மண்பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் அள்ளிப்பருகிவிட்டு மீண்டும் வந்து பாயில் படுக்கிறார்.அதைக்கண்ட பாரதி, ""என்ன பிரம்மச்சாரியாரே, உடல் நலம் சரியில்லையா?'' என்று கவலையுடன் கேட்கிறார். அமைதியாய் இருந்தவரை, பாரதி மீண்டும் மீண்டும் வினவவே, அவர் கூறுகிறார் ""என்ன செய்ய? சாப்பிட்டு நான்கு நாளாகின்றன. தண்ணீரை மட்டும்தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்று சொன்னாராம்.நெல்லை மாவட்டத்தில் சுதந்திரக் கனலைப் பற்ற வைத்த வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து போராடிய ஆவேசத்துடன் முழங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியார் பட்டினியில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்காத அந்த முண்டாசுக்கவிஞன் அந்த நேரத்தில்தான் எழுதுகிறான்:"தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று. அப்பேர்ப்பட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் பிறந்த நாள் டிசம்பர் 2.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஒரு படக்கண்காட்சி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களோடு இருந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனுமான ச. தமிழ்ச்செல்வன், மீசை முளைக்காத ஓர் இளைஞரின் படத்தைக் காண்பித்து, ""இந்த இளைஞரைத் தெரியுமா?'' என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. அவர் கூறினார்.""இவர் பெயர் குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 15. பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தது. மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.குதிராம் போஸின் தாய் கதறினார். ""என் பச்சிளம்பாலகனை விட்டு விடுங்கள்'' என்று அரற்றினார்.குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச்சாலையின் சுவற்றில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:""அழாதே அம்மா!நான் மீண்டும் பிறப்பேன்சித்தியின் வயிற்றில் மகனாக..பிறந்ததுநான்தான் என்ப தறியகுழந்தையின்கழுத்தைப்பார்அதில் -தூக்குக்கயிற்றின்தழும்பு இருக்கும்!அழாதே அம்மா!'' அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்குமேடை ஏறினார். அதன்பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவற்றில் தங்கள் கைகளால் தடவிப்பார்த்து ஆவேசமடைந்தார்கள். கிராமப்புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.''""அப்படியானால் நமது பாடப்புத்தகத்தில் இவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை?'' என்று கேட்டோம்.அவர் சிரித்தபடியே ""இந்த தேசத்தின் தலையெழுத்து அப்படி... பாடப்புத்தகங்களில் குதிராம்போஸýம் இல்லை. பகத்சிங்கும் இல்லை. செங்கோட்டையில் வெகுண்டெழுந்த வாஞ்சி ஐயரும் இல்லை. ஆனால், மத்திய அரசு தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாற்று ஆவணத்தில் இவர்களது வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் ஆவணக் காப்பகங்களில் பெரிய நூலகங்களில் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள்'' என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்று நாயகர் குதிராம்போஸ் பிறந்த தினம் டிசம்பர் 3.""வல்லமை தாராயோ? - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே''என்று சிவசக்தியிடம் வரம் கேட்ட எங்கள் நெல்லை மண்ணின் மகாகவி பாரதி பிறந்த தினம் டிசம்பர் 11.பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் கணித ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் (ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி) அடிக்கடி கேட்பார்: ""ஸ்ரீரங்கத்தில் பிறந்த பிரபலமானவர் பெயரைக்கூறு'' நாங்கள் வேகமாகப் பதில் அளிப்போம். ""ஹேமமாலினி''.அவர் கோபத்தில் சாபமிடுவார் ""நீங்கள் யாரும் உருப்படவே போறதில்லை. அவரைவிட்டால் வேறு யாரையும் தெரியாதா?'' பின்பு சிறிதுநேரம் கழித்து ஆசுவாசமடைந்து அவரே கூறுவார்.""நடிகையின் பெயரைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகத்து கணக்குப்புலிகளை எல்லாம் தனது புதிர்க் கணக்குகளால் மடக்கிய ராமானுஜத்தின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கடா... அவர் ஒரு கணித மேதை. அவரது மனைவிக்கு மேற்கு வங்காள அரசு பென்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டு மக்கள் அந்தக் கணிதப்புலியைக் கொண்டாடும் நாள் என்றோ, அந்த நாள்தான் புனித நாள்'' என்று சொன்னது இன்னமும் காதில் எதிரொலிக்கிறது. அந்தக் கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் டிசம்பர் 22.தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்த படிப்பாளி - போராளி பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர். தன்னைப்படிக்க வைத்த ஆசிரியரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். லண்டன் நூலகத்தின் அநேகமாக பெரும்பாலான நூல்களைப் படித்தவர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் சட்டமேதை அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6.புரட்சிகரமான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின் அமைதி வழிக்குத் திரும்பி, ஆன்மிகத் தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரவிந்தரின் நினைவு நாள் டிசம்பர் 5.1936-ல் "சதிலீலாவதி' என்ற திரைப்படத்தை எடுத்து சாதனை புரிந்த திரைப்பட இயக்குநர் அமெரிக்கர் எல்லீஸ்.ஆர்.டங்கன். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா என்றபோதிலும், தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தமாகவும், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். அவர் நடித்தது என்னவோ ஒரு இன்ஸ்பெக்டர் வேஷத்தில்தான். இவருடன் நடித்த வில்லன் நடிகர் திருநெல்வேலியிலிருந்து, நாடகக் கம்பெனியில் நடிக்க ஓடிவந்த டி.எஸ். பாலையா.இந்தப் படத்தில் இடம்பெற்ற ""கைராட்டினமே கதர் பூஷணமே'' என்ற பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கை இப்படத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். குடித்துச் சீரழியும் எம்.கே. ராதாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு ""இன்று முதல் நான் குடிப்பதில்லை'' என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்குக் கடிதங்களாய் எழுதினார்களாம்.இப்போது சொல்லுங்கள்... எல்லீஸ்.ஆர்.டங்கனை மறக்க முடியுமா? அவரது நினைவு நாள் டிசம்பர் 1.கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது இனிமையான குரலால் பலரை மயக்கிய இளம் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் திரைப்படம் 1938-ல் வெளிவந்த "சேவாசதனம்'. படத்தை இயக்கியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.கல்கியின் பாடலான ""காற்றினிலே வரும் கீதம்'' பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ? அந்த இசைமேதையின் நினைவு தினம் டிசம்பர் 11.முன்னரே குறிப்பிட்டதுபோல, தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சகாப்தமாய் விளங்கியவர் எம்.ஜி.ஆர். நல்லவனாகவே நடித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப்பெற்று, அரசியல் இயக்கத்தின் மூலமாக அரியணை ஏறியவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலானாலும் சரி, கவியரசு கண்ணதாசன் பாடலானாலும் சரி, கவிஞர் வாலியின் பாடலானாலும் சரி, அதை எம்.ஜி.ஆர். பாடுவதாகவே மக்கள் நம்பினார்கள். இன்னமும் அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நிகழ்ந்ததுதான் நாடகக்கலைஞர் விஸ்வநாத தாஸýக்கும் நடந்தது. போலீஸôரின் கெடுபிடிகளால் நாடகங்கள் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன்பட்டார். திருமங்கலம் அவரது சொந்த ஊர்.1940 டிசம்பர் 31-ல் சென்னையில் "வள்ளி திருமணம்' நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் காந்திஜியின் கொள்கைகளை விடுதலை வேட்கைப் பாடல்களை - நாடகத்தில் புகுத்தி விடுவார் என்பதை அறிந்து போலீஸ்காரர்கள் நாடக அரங்கை முற்றுகையிட்டனர்.மயிலாசனம் மீது அமர்ந்து ""மாயமான வாழ்வு இம்மண் மீதே'' என்ற பாடலின் வரிகளைப் பாடும்போதே திணறுகிறார். மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அதே பல்லவியைப் பாடுகிறார். மேடையின் மீதே சரிந்து விழுகிறார்.முருகன் வேடமணிந்த விஸ்வநாத தாஸின் இறுதி ஊர்வலம் அங்கிருந்தே தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் இணைபிரியா நண்பரான - அந்த நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் இறந்த தினம் டிசம்பர் 31.

No comments: