Thursday, March 29, 2012

மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்

மெல்லிய பதிவுகள்

எஸ் வி வேணுகோபாலன்


ழக்கமாக நாம் நடந்து போகும் தெருவில் ஏதோ ஒரு வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது ஆரம்பித்தார்கள் என்று கூடத் தெரிவதில்லை. வீதியில் மிஞ்சியிருக்கும் ஐந்தாறு பழைய கால வீடுகளில் இன்னொன்றும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வாசல் பக்க மரம் ஒன்றில் பழைய பர்மா தேக்கு மரக் கதவு, சன்னல், தூண் இதரவை இங்கே கிடைக்கும் என்று ஒரு பலகை அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கிறது ...ஆனால் அந்த வீட்டுக்குள் காலகாலமாக அந்தக் குடும்பத்தவர்கள் வம்சாவழியாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கேனும் கிடைக்குமா என்று யாருக்கும் தோன்றினால் பெருக்கெடுக்கும் உணர்ச்சி இருக்கிறதே, விம்மலும் தன்னெழுச்சியாகக் கன்னங்களைச் சூடாக்கியபடி வழியும் கண்ணீரும், நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

மனிதர்களையும் மனித உறவுகளையும் சரக்காக ஆக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தாராளமய காலத்தில், செடி கொடிகளையும், பயிர் பிரதேசங்களையும், இல்லங்களையும் அவற்றோடு கலந்திருக்கும் வாழ்க்கையோடு இணைத்து உயிரோட்டமாக தரிசிக்கும் உணர்வை படைப்பாளிகள் எழுத்திலேயே சாத்தியமாக்கினால் வாசகருக்கு அதைவிட கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? நாறும்பூநாதனின் ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற சிறுகதை தொகுப்பு அப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுத்தபிறகு, அந்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம் எடுத்துப் பேசா விட்டால் எப்படி?

இருப்புப் பாதையின் இடையே கடக்கும் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அந்த கதவுகளை சார்த்தித் திறப்பவர் (அவர் உள்ளபடியே அதைத் திறந்து கொடுத்து அப்புறம் தேவைக்கு சார்த்துபவர். அப்படி யாரும் அவரது பணியைப் புரிந்து கொள்ள முற்படுவது இல்லை!) அந்த வழி வாகனங்களில் போகும் யாருக்கும் உவப்பான மனிதர் இல்லை. ஆனால் சாமிக்கண்ணு நேர வாரியாக, வாகன விலாவரியாக அன்றாடம் கடந்து போகும் மனிதர்களைச் சொந்தம் பிடித்து வைத்திருக்கும் ஒரு பணியாளர். அதனால் அவர்கள் வரும் நேரம் தப்பி விட்டால் என்னவோ ஏதோ என்று அலைமோதும் மனசு. அதைத் தானய்யா மானுட உணர்வென்பது. "ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்" கதை, சாமிக்கண்ணுவின் பணி ஓய்வு நாளில் அவரது நினைவுக்குறிப்புகளை அசை போட வைக்கிறது. படிக்க வாய்ப்பற்ற குழந்தைகளை, அதுவும் பெண் குழந்தைகளை வெள்ளரிப் பிஞ்சு விற்கப் பார்த்துப் பதறும் அவரது நெஞ்சு, ஆங்கிலத்தில் ஃபெயிலானதால் அரளி விதை அரைத்துக் குடித்துச் செத்துப் போன தமது சொந்த மகளது நினைவால் மேலும் வாட்டம் கொள்கிறது. கேட் போட்ட பிறகு சைக்கிளோடு கடக்கப் போகும் சிறுமி ஒருத்தியை வீட்டுல சொல்லிட்டு வந்தியா என்று கண்டித்தபடி ஓடிச் சென்று காக்கும் அவரிடம், மாலை வீடு திரும்பும்போது வந்து நன்றி சொல்லும் சின்னப் பெண், காலையில் வீட்டில சொல்லிட்டுத் தான் வந்தேன், ஏன் கேட்டிங்க என்று கேட்பது, அவரை மட்டுமல்ல வாசகரையும் சேர்த்துப் புரட்டிப் போடும் இடம். அவர் கையில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தாத்தா என்று வாஞ்சையுடன் அழைக்கும் எந்தக் குரலுக்காகவும் காத்திருக்க, குழந்தைகள் பாதையைக் கடந்து போய்க் கொண்டிருக்க, அவரது பணிக்காலமும் கடந்துவிடப் பார்க்கும் வலி மிகுந்த பொழுதில் வேதனையோடு முடிகிறது. தொகுப்பின் சிறப்பான கதையாகப் பட்டது எனக்கு.

"ஆற்றுப்படுத்துதல்" கதை, அன்பான நண்பரது குடும்பத்தில் திடுதிப்பென்று மறிக்கும் அவரது மனைவியின் மரணச் செய்தியினால் சூழும் நினைவுகளோடு வேக வேகமாக இன்னொரு நண்பரோடு அந்த ஊர் நோக்கிப் பயணப் படுவதைச் சொல்கிறது. சாவு எடுக்கப்பட்டபின் சற்றே காலம் தள்ளிப் போய்ச் சேருவது யாருக்குமே சங்கடத்தையும், உளைச்சலையும் கூட்டும். பரிச்சயமான முகத்தை இனி ஒரு போதும் பார்க்க முடியாத வலி அது. அப்படியான நேரத்தில் துணையை இழந்து நிற்பவரைப் பார்க்கவும் நெருடும். இத்தனை உணர்வுகளைத் தூண்டும் கதை.

வாழ்க்கைக் கணக்கில் தோற்கும் கணக்கு வாத்தியார் (சூத்திரங்கள்), சாதி விட்டு சாதி திருமண அழைப்பிதழைக் காலத்தின் விதியாய்ச் செரித்துக் கொள்ளும் குடும்பப் பெரியவர் ( "அவரவர் மனசு போல.."), எல்லாம் இருந்தும், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடச் சொல்லும் அன்புக் கணவனால், வீட்டில் எதுவுமே இல்லாதபடி ஆக்கும் எந்திரகதியான ஐ டி வாழ்க்கையில் தவிக்கும் மனைவி (அவனும் அவளும்), கல்விக் கடனுக்குத் திண்டாடும் பொறுப்புள்ள தந்தையின் நிச்சயமற்ற அலைச்சல்கள் (இன்றும் நேற்றே), இனம் புரியாத முரட்டுத் தனத்தில் வாழ்க்கையைக் கடத்தும் இளைஞனிடமும் துளிர்க்கும் ஒரு நேயம் (முட்பூ)....என வெவ்வேறு தளங்களில் வாழ்க்கையின் வித விதமான காட்சிகளை நாறும்பூ தமது இளகிய மொழியின் கயிற்றில் அவற்றின் வண்ணம் போகாத வண்ணம் அலசி உலர்த்திப் போட்டிருக்கிறார்.

வீட்டுச் சாமான் களவு போனதைத் தாம் மன்னித்து மறந்தாலும், வேறொரு களவில் அகப்படும் கள்வன் காட்டிக் கொடுத்துவிட, அதற்கான சாட்சிக்கு காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் நடுத்தர மனிதர்களின் கதை ("யாருக்குத் தண்டனை") நமது சட்டம், நீதி நடைமுறைகளின் முரண் தன்மை குறித்து நல்ல நகைச்சுவை குரலில் பேசுகிறது. முதியவர்களின் மரணம் வீட்டில் இருப்போரையும் விடுதலை செய்யும் விதமாய் நிகழ வேண்டும் என்று பேசும் (இலை உதிர்வதைப் போல்) கதை, ஒரு பெண் தனது பிரியத்திற்குரிய தாயை நினைவு கூறும் மதிப்பான சொற்களில் படைக்கப்படுகிறது.

தந்தையின் கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்படும் வாழ்க்கை சென்ற தலைமுறைகளின் இளசுகள், பெரிசுகள் யாவருக்கும் ஓரளவு பொதுவானது. பலாச்சுளை போல் முள்ளாலான கடினமான மேற்புறத்திற்குள் பொதிந்திருக்கும் அப்பாவின் வாஞ்சையை வெவ்வேறு விதமாய்க் கொணரும் "அப்பாவின் கடிதம்", "கையெழுத்து" கதைகள், ஒளிவு மறைவற்ற எதிரெதிர் கருத்தாக்கங்களுக்கிடையே பாறைக்கிடையே கசியும் சிலீரென்ற தூய்மையான நீரைத் தொடும் உணர்ச்சியைத் தருகின்றன. "ஹைக்கூ கவிதை" பெரிய மனுஷியாக வலம் வரும் சிறுமியிடம் குழந்தையாக மாறத் துடிக்கும் மனிதரின் மெல்லுணர்வின் தடம். இந்தக் கதைகளில் நாறும்பூவின் சொந்தத் தடயம் அதிகம் இருப்பதாகப் படுகிறது.

தலைப்புக் கதை, நன்கு இழைத்துச் செய்யப்பட்டிருக்கும் எழிலான மரச்சிற்பம். நண்பன் மறைவதோடு நட்பு மறைவதில்லை. நினைவுகள் கூட அகலுவதில்லை. ஆனால் அவன் இருந்தபோது போய்ப் பழகிய குடும்பத்தோடான உறவின் இழைகள் நைந்துவிடுகின்றன. நகர வாழ்க்கையின் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையில் இதற்கெல்லாம் நிகழ்ச்சி நிரலும் போடப்படுவதில்லை. தனக்கு அற்புத இலக்கியப் பக்கங்களை வாசிக்கப் பழக்கிக் கொடுத்தவனது நினைவை அங்கிருக்கும் ஒரு புத்தகத்தோடு எடுத்துக் கொண்டு நகர முயலும்போது, அதோடு போய்விடுவதில்லை, குடும்பத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்று நண்பனின் மனைவி ஒரு கேவலால் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்" கதை வாசிப்பவரைத் தொடர் சிந்தனையிலும், நினைவுகளிலும் ஆழ்த்தும்.

நெல்லை வட்டார வழக்கின் சுவையான உரையாடல் மணக்க, பெரும்பாலும் சொற்சித்திரங்களாக நகரும் விவரிப்புகளில் மனித உணர்வுகளை மீட்டெடுக்கும் வேட்கை பரவிக் கிடக்கிறது. இடித்துவிட்டுப் போன பழைய வீடாய் நமது பண்பாக்கங்களை உலகமயம் உரு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதன் கூறுகள் பழைய பர்மா தேக்கு மரக் கதவுகளாக, சன்னல்களாக இன்னும் மதிப்போடு கேட்பார்க்கு வாய்க்கும் வண்ணம் அறிவிக்கப்படுகிறது. அதன் ஒரு மெல்லிய பதிவாக விரிகின்றன இந்தத் தொகுப்பின் சிறுகதைகள்.

வம்சி புக்ஸ் நிறுவனத்திற்கும், சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்பு செய்திருக்கும் ராஜ்குமார் ஸ்தபதிக்கும் பாராட்டுதல்கள். தோழமை நேயம் மலர முன்னுரை வழங்கியிருக்கும் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்து, வாசகருக்கு ஒரு வரவேற்புரை.

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
சிறுகதை தொகுப்பு
நாறும்பூநாதன்
வம்சி புக்ஸ்
19 டி எம் சாரோன், திருவண்ணாமலை
112 பக்கங்கள். விலை ரூ.70/-

1 comment:

ஆர் எஸ் மணி said...

" ஜமீலாவை எனக்கு அறிமுகப் படுத்தியவன் " சிறுகதைத் தொகுப்பினை வாசகருக்கு அறிமுகப் படுத்துவதன் மூலம்

நாறும்பூவின் வாசத்தை மேலும் நுகரத் தூண்டுகிறார் கவிஞர் எஸ்.வி.வி. அழகுக்கு அழகு செய்யும் ஆற்றல்மிகு

அற்புத வரிகள் அவரது எழுத்துக்கள்!!!-----------------------------ஆர்.எஸ்.மணி. திண்டுக்கல்