நாறும்பூ
Tuesday, June 18, 2024
நாங்குநேரி மாணவன் சின்னதுரை
வாழ்த்துகள் (நாங்குநேரி) சின்னத்துரை
---------------------------------------------
ஆறுமாத காலம் பள்ளிக்கே
போகாமல், ஆஸ்பத்திரி, பேன்டேஜ், ஊசி , தையல் என்றே காலம் ஓடிப்போன நிலையில்,
நடந்தவற்றையே மன அழுத்தத்துடன்
நினைத்துக்கொண்டிராமல்,
தன்னம்பிக்கையுடன் படித்து,
வேறொரு புதிய சூழலில், புதிய பள்ளியில் சேர்ந்து படித்து,
469 மதிப்பெண்களைப் பெற்ற சின்னத்துரையை உச்சி முகர்ந்து
வாழ்த்துகிறேன்.
சின்னத்துரைக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்களுக்கு நல்லமுறையில் சிகிச்சையளித்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணப்படுத்தியதில்
பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பெரும்பங்குண்டு.
இந்த நேரத்தில் அவர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி சின்னத்துரை !
படி..மேலும் படி..மேலும் மேலும் படி!
உனக்கான அறிவாயுதம் அதுவே !
Tweet
Monday, June 17, 2024
மாஞ்சோலை எஸ்டேட்
மாஞ்சோலை எஸ்டேட்
ஒரு திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமத்தையே வரைபடத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். அதாவது அந்த ஊரையே அழித்து விடுவார்கள்.
96 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் நெல்லை மாவட்ட உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது.
மாஞ்சோலை, காக்காச்சி, குதிரைவெட்டி,நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்களில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன ஒரு காலத்தில்.
தற்போது வெறும் தேயிலை மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்த சூழலில்,
குத்தகை காலம் முடிவடைய இருப்பதைக் காரணமாகச் சொல்லி, தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வை அளித்து வெளியேற்றி வருகிறது எஸ்டேட் நிர்வாகம்.
இந்தத் தொழிலாளர்களின் தொப்புள்கொடி உறவு என்பது இந்த மாஞ்சோலை தான்.
வேறு உறவுகள் இல்லை. குடியிருக்க மனைகள் ஏதுமில்லை. சம்பாத்தியம் என எதுவுமில்லை.
திடீரென வெளியே போகச்சொன்னால் எங்கே போவார்கள்?
இங்குள்ள மக்கள் சாதி, மதம் பார்க்காமல் பழகுபவர்கள். எல்லாக் கோவிலுக்கும் போவார்கள். எல்லாச் சாமிகளையும் கும்பிடுவார்கள்.
கடந்த மாதம் வனப்பேச்சியம்மன் கோவில் கொடையின்போது, " இதுதான் கடைசித்திருவிழா..வெளியூர், வெளிமாநிலங்களில் வசிக்கும் உறவுகள் எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என அறிவிப்பு செய்தபோதே மனம் கலங்கியது.
நாம் பிறந்த ஊர் இனி இல்லை.
நாம் படித்த பள்ளிக்கூடம் இனி இல்லை.
நாம் விளையாண்ட தெருக்கள் இல்லை.
நாம் குளித்த ஓடைகள் கூட இனி இல்லை.
நாம் பணிபுரிந்த தொழிற்சாலை இல்லை.
எல்லாம் மீண்டும் காடாக மாறி விடும்
எல்லாவற்றிற்கும் மேலாக ,
அந்தப் " பதினேழு பேரின்" நினைவுகளுமே அழிந்து போகும்.
வளர்ச்சி பெற்ற மனித சமூகம் இதை அனுமதிக்கலாமா?
தமிழ்நாடு அரசு இந்த எஸ்டேட்டை எடுத்து நடத்த முன்வர வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஞ்சோலை போயிருந்தபோது, அங்குள்ள ஒரு பெண் தொழிலாளி பேசும்போது " கையில் கொடுக்கும் இந்த ஒன்றரை லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு எந்தத் திக்கில் போவது ? எங்கே வாழ்வது? " என்று கண்ணீர் ததும்பக் கூறினார்.
மாஞ்சோலை மண்மூடிப்போவதை
நாம் அனுமதிக்கப்போகிறோமா?
Tweet
Sunday, September 13, 2020
நாட்டார் வழக்காற்றியலின் தந்தை நா.வானமாமலை
-------------------------------------------------------------------------------------
வைணவ கோவில்களில் வைணவப் பிராமணர்களுக்கு உதவ " தாதர் " என்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியினர் உண்டு. அவர்களை சாத்தானியர்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் மாலைகள் தொடுப்பது,தெய்வங்களின் ஊர்வலத்தில் தீவட்டி தூக்கி செல்வது, நாமக்கட்டி செய்யப்பயன்படுத்தும் வெள்ளைக்களிமண் உருண்டைகள், குங்குமம் தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். மடப்பள்ளிகளில் பிரசாதம் தயாரிக்கவும் இவர்கள் உதவுவார்கள். நெல்லை மாவட்டம் நான்குனேரியில் இந்த சாத்தானியர் குடும்பத்தில் பிறந்தவர் நா.வானமாமலை.
பள்ளிக்கல்வியை நான்குனேரியிலும், ஏர்வாடியிலும் கற்ற நா.வானமாமலை, கல்லூரிப் படிப்பிற்கு நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். கல்லூரியில் மிக சிறந்த இலக்கிய நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேரா.அ.சீனிவாச ராகவன்.(சாகித்ய அகாடமி விருது பெற்றவர் )
பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, காங்கிரஸ்காரர் வைத்யநாதய்யர் தொடர்பு ஏற்பட்டது. அதனால், மாணவர் இயக்கத்தில் ஈடுபாடு வந்தது. பின்னர், ஆசிரியராக பணியாற்றினார். அரசுப்பணியை உதறி விட்டு, 1947 இல், நெல்லையில் ஸ்டுடண்ட்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட் என்ற தனிப்பயிற்சி நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார். இந்த டுடோரியல் மையத்தில் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மற்றும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் ஆகியோரும் பகுதி நேரமாக பணிபுரிந்தனர்.
சுதந்திரமாக இருந்த நா.வா.அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் வெளிப்படையாக ஈடுபட்டார். நெல்லை கொக்கிரகுளத்தில் முதல் வார்டில் நா.வா.வும், இரண்டாவது வார்டில் தோழர்.சு.பாலவிநாயகமும் நகராட்சி கவுன்சிலர் பதவியில் வெற்றி பெறுவது வழக்கம்.
1961 இல், கலை இலக்கிய பெருமன்றத்தின் துணை தலைவராக இருந்த நா.வா. அவர்கள் உருவாக்கிய நாடோடி இலக்கிய குழுவில் தோழர்கள்.கு.சின்னப்ப பாரதி, எஸ்.எஸ்.போத்தையா, எஸ்.எம்.கார்க்கி போன்றோர் இருந்தனர்.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957 இல் நடைபெற்றபோது, ஒரு கருத்தரங்கு நடத்த கம்யூனிஸ்ட் கட்சியில் தீர்மானித்தார்கள். கட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி " தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாட்டார் பாடல்களை சேகரியுங்கள் " என்று நா.வா.அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதுவே இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. மக்கள் மத்தியில் இந்த நாடோடி இலக்கிய குழு சென்று நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்தது. ஏற்றம் இறக்கும் விவசாயிகள்,நாற்று நடும் பெண்கள், சலவை தொழிலாளர்கள் என எல்லா உழைப்பாளி மக்களிடமும் சென்று, அவர்களோடு வாழ்ந்து,உணவு உண்டு, அவர்களின் வாய்ப்பாட்டுக்களை எழுத்தில் பதிவு செய்தனர்.
இப்படி தொகுத்த பாடல்களை " தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் " என்ற பெயரில் நூலாக கொண்டு வந்தார் நா.வா. அதற்கு முன்பு இது போன்ற பாடல்களை தொகுத்தவர்கள், பாடல்களில் இருந்த கொச்சையான சொற்களை திருத்தி எழுதினார்கள். மேலும், பாடல்களை சேகரித்தவரின் பெயர்,இடம் எதுவும் இடம் பெறவில்லை.
இதற்கு மாறாக, நா.வா.தொகுத்த பாடல்கள் தொகுப்பில், எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டார். பாடல்களை சேகரித்த தோழர்களின் பெயர்,ஊர் போன்றவற்றையும் எழுதி, இது ஒரு கூட்டு முயற்சி என்பதை அறியும் வண்ணம் நூலை வெளியிட்டவிதம், அனைவரையும் கவர்ந்தது.
சங்க இலக்கிய நூல்களின் ஏட்டுசுவடிகளை தேடித்தேடி அலைந்து பதிப்பித்த உ.வே.சா. அவர்களை போல, நாட்டுப்புற மக்கள் வாய்மொழியாக பாடி வந்த ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதை,கட்டபொம்மு கதை, வீணாதி வீணன் கதை, முத்துப்பட்டன் கதை என கதைப்பாடல்களை தேடி தேடி தொகுத்தவர் பண்பாட்டுப் போராளி நா.வா.அவர்கள்.
அவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த அவரது மாணவர் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் நா.வா.பற்றி கூறும்போது, " நா.வா.என்ற மார்க்சியவாதி, அறிவால் ஆலமரமாகவும், பண்பால் வாழை மரமாகவும் விளங்கியவர். தன்னருகில் தன் பக்கக்கன்றுகளுக்கு இடம் கொடுத்து வளர்க்கும் வாழைமரம் போன்று தாம் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியனவற்றின் வாயிலாக இளம் ஆய்வாளர்களை உருவாக்கியவர். அவர்களை படிக்கவும்,எழுதவும், விவாதிக்கவும் தூண்டினார். அவர்கள் எழுதும் கட்டுரைகளை படித்து திருத்தினார். வாழை மரம் தனக்குரிய நீரையும் உரத்தையும் தன் பக்கக் கன்றுகளுடன் பகிர்ந்து கொள்வதைப்போன்றதாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தது " என்று சொல்கிறார். தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பேரா.நா.ராமசந்திரன் அவர்கள் நா.வா.வின் இன்னொரு முக்கிய மாணவர் ஆவார்.
இந்திய தத்துவம், பண்பாட்டியல் ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி முறை மகத்தானது. வேதாந்த பிரபஞ்சம் என்னும் நூலுக்கு அவர் எழுதிய விமர்சனம் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவையும் வரலாற்றுணர்வையும் புலப்படுத்தும்.
இவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த ஆய்வாளர்கள், ஒப்பாரி பற்றியும், நாட்டுப்பாடல்களில் மழை பற்றியும், கிராமப்புற தெய்வங்கள் பற்றியும், தமிழ்நாட்டு விதவைகள் பற்றியும்,தமிழ்நாட்டுப் பளியர்கள் பற்றியும், இலங்கைக்கு குடிபெயர்ந்த மக்கள் பற்றியும், தமிழ்நாட்டு தத்துவங்கள் பற்றியும், பவுத்த,ஜைன, சைவ தத்துவ போராட்டங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சமூகத்திற்கு இவரது பங்களிப்பினை அறிந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
Tweet
பாரம்பரிய விளையாட்டுக்கள்
------------------------------------------------
" நாங்கல்லாம் அந்தக் காலத்துல பம்பரம்,கோலிக்காய், பாண்டி,பல்லாங்குழி ன்னு விளையாடிட்டு இருந்தோம்..ஒங்களை மாதிரி கிரிக்கெட் எல்லாம் வெளையாண்டது இல்லம்மா..இப்ப என்னடான்னா கிரிக்கெட் கூட நீங்க வெளையாடுறது இல்ல..பொழுதன்னைக்கும் அப்பா செல்லை எடுத்து நோண்டிக்கிட்டே இருக்கீக.."
வீடுகளில் இப்படியான பரவலான குரலை கேட்க முடிகிறது.
நூலக இயக்குனர் உதயசந்திரன் சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால கொண்டாட்டம் நடத்துங்கள் என்று.
மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் யோகாசனப்பயிற்சி,பாரம்பரிய விளையாட்டுக்கள்,ஓவிய பயிற்சி , கழிவு பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்குதல் பயிற்சி, கதை சொல்லல் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என்று சுற்றறிக்கை விட்டார்.
பாளையங்கோட்டையில் உள்ள மைய நூலகத்தில் தினமும் சுமார் 100 முதல் 150 பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவ,மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றது இனிய அனுபவம்.
பாரம்பரிய விளையாட்டுக்களான பாண்டியாட்டம், பல்லாங்குழி, கிளித்தட்டு, கோலிக்காய் போன்ற விளையாட்டுக்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதெல்லாம் பொய் என நிரூபித்து காட்டினார்கள். விளையாட்டின் விதிமுறைகள் ஒரு சில தெரியவில்லையே தவிர, சொல்லி கொடுத்ததும் உற்சாகமாய் பாண்டி கட்டம் வரைந்து விளையாட ஓடு ஒன்றையும் கண்டெடுத்து விளையாட ஆரம்பித்து விட்டனர். நூலகத்தின் திறந்த வெளியெங்கும்
" ரைட்டா, தப்பா ?" என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. அம்மாக்கள், பாட்டிகள், தாத்தாக்கள் என பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
இன்னொரு பக்கம், அரங்கின் இன்னொரு மூலையில்,சாக்பீஸால் வரையப்பட்ட தெப்பக்குளம் வடிவிலான தாயக்கட்டத்தில் நான்கு மாணவிகள் அமர்ந்து தாயக்கட்டைகளை உருட்டி " தாயம், ஈராறு,.." என சொல்லியபடியே விளையாடிக்கொண்டிருந்தனர். உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள், புளியங்கொட்டைகள் போன்றவற்றை விளையாடும் காய்களாக பயன்படுத்தி கொண்டனர்.
வலதுபுறம், மரத்தால் செய்யப்பட்ட பல்லாங்குழியில், சோவிகளால் நிரப்பி இரு மாணவிகள் விளையாட, சுற்றிலும் நாலைந்து மாணவிகள் விளையாட்டை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். தனக்கான குழியில் இருந்து ஐந்து காய்களை எடுத்து ஒவ்வொரு குழியாய் போட்டபடி வந்து இறுதியில் காலியாய் இருக்கும் குழியை தடவி விட்டு அடுத்த குழியில் இருக்கும் காய்களையும், அதன் எதிரே இருக்கும் குழியில் இருக்கும் காய்களையும் எடுத்துக்கொள்ளும் ஆட்டக்காரரின் விரல் அசைவுகளை நுட்பமாக கவனித்துக்கொண்டிருந்தனர்.
இடையிடையே " கள்ளாட்டம் ஆடுதியோ .." என்ற குரல்களையும் கேட்க முடிந்தது.
ஆம்பளைப்பயலுவலை சும்மா சொல்லக்கூடாது. விளையாட்டின் உத்திகள் மரபிலேயே இருக்கும்போல. பம்பரத்தை வாங்கியவுடன் கயிறை எடுத்து சுற்ற ஆரம்பித்து விட்டனர். சுற்றும் பம்பரத்தை கயிற்றால் சுண்டி மேலே தூக்கி " கோஸ்" என்று சொல்லியபடி கேட்ச் பிடித்தார்கள். இன்னொரு பக்கம், கிளித்தட்டு கட்டங்கள் வரைந்து இரண்டு அணிகளாய் பிரிந்து கிளிகள் ஐவர், அவர்களை பிடிக்கும் பொறிகள் ஐவர் என விளையாட்டு துவங்கியது...
ஒருவன் சாதுரியமாக கட்டங்களை தாண்டி, " கிளி பறக்குது " என்றபடியே ஓட ஆரம்பிக்க, இன்னொருவன் அவனை துரத்திப்பிடிக்க பின்னாலேயே ஓடினான்.
ஐம்பது வயது பெண்கள் இருவர், பெண் குழந்தைகளுக்கு " பூப்பறிக்க வருகிறோம்.." விளையாட்டை சொல்லிக்கொடுக்க, பிள்ளைகள் அவற்றை கச்சிதமாக உள்வாங்கிக்கொண்டு, கோடு போட்டு விட்டு,
"
பூப்பறிக்கவருகிறோம் பூப்பறிக்கவருகிறோம்,
யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க,
ராணியைஅனுப்பபோகிறோம் ராணியைஅனுப்பபோகிறோம்;
எந்த பூ வேண்டும்…எந்த பூ வேண்டும்,
மல்லிகைப் பூ வேண்டும் மல்லிகைப் பூ வேண்டும் "
என்று விளையாட, மொத்தக்கூட்டமும் அவர்களை நோக்கி திரும்பியது.
ஸ்கிப்பிங் விளையாட்டு கேட்கவே வேண்டாம். இப்போதும் குழந்தைகளின் விளையாட்டு தான். இரண்டு பசங்க கயிற்றை சுற்ற, நடுவே இருக்கும் பெண் குதித்து குதித்து விளையாட வேண்டும். இதில் சமயங்களில் ஜோடியாகவும் குழந்தைகள் குதிப்பதுண்டு.
இதில் வேடிக்கை என்னவெனில், ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டை 15 நிமிடங்களுக்கு மேல் விளையாடவில்லை. விரும்பிய விளையாட்டை தேர்வு செய்து விளையாடி, அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, அடுத்த விளையாட்டை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். யாரும் இதை கட்டாயம் விளையாடு என சொல்லவில்லை. அவர்களாகவே தேர்வு செய்து, அவர்களே விளையாடுகின்றனர்.
உண்மையில், தற்போது கோடை வகுப்புகள் என்ற பெயரில், ஸ்கெட்டிங் ,நடனம்,இசை,நீச்சல்,யோகா, ஹிந்தி பயிற்சி என குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவது எல்லா நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் வேறு. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றால், பசங்களை எங்காவது சேர்த்து விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அல்லது போட்டிகள் நிரம்பிய உலகில், தங்களின் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்து ஈடு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறில்லை. தங்களின் குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது என்பதை தெரிந்து அதில் சேர்த்து விடுகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. பெற்றோர் பெரும்பாலும், தங்களின் விருப்பதையே குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்.
குழந்தையின் தனித்திறமையை பெற்றோர்களோ அல்லது ஆசிரியரோ தான் கண்டறிய வேண்டும். அவனுக்கு ஓவியம் வரைய ஆர்வம் இருக்கும் பட்சத்தில், அவனைப்போய் கராத்தே விளையாடு என்று கட்டாயப்படுத்தினால், அவன் வேண்டாவெறுப்பாக சேர்வான்.( கவனிக்க : விளையாட மாட்டான். )
விருப்பத்திற்கு மாறாக, அவை எல்லாமே கண்டிப்பு நிறைந்த இன்னொரு வகுப்பாகவே மாறும். வருடம் முழுவதும் பாடங்கள், டியூசன், தேர்வுகள்,காலை நேர பதட்டங்கள் என மன அழுத்தத்துடன் இருக்கும் மாணவர்கள், தேர்வு முடிந்தவுடன் இந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைக்கு செல்ல விரும்புகிறார்கள். வெளியூரில் இருக்கும் ஆச்சி, தாத்தா வீட்டுக்கோ, அத்தை,மாமா வீட்டுக்கோ சென்று அங்கு இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி, கிணற்றில் குதித்து நீச்சல் படித்து, நுங்கு தின்று, பதநீரை பட்டையில் குடித்து மகிழ விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முற்றிலும் மாறுபட்ட சூழல்..விரும்பிய விளையாட்டை விளையாடனும் என்பது மட்டுமே.
விளையாட்டை விளையாடும்போது மட்டுமே, குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு, பொறுமை, வெற்றி தோல்வியை சமமாய் பாவிக்கும் தன்மை போன்றவை ஏற்படும். பொதுத்தேர்வில் தோல்வி அடையும்போது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருவாவதற்கு காரணமே அவர்கள் யாருமே பள்ளியில் விளையாடுவதில்லை. படிப்பு..படிப்பு..படிப்பு..மட்டுமே.
விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமே, உடல் ஊக்கம் மட்டுமின்றி, தோல்வியும் ஒரு அனுபவமே என்பதை மாணவன் உணர்வான்.
பாம்பு கட்டம் விளையாட்டில் வரும் ஏணியும்,பாம்பும் வாழ்க்கையில் வரும் ஏற்றங்களும், இறக்கங்களும் என்பதை அவர்கள் உணர்வார்கள்.
குழந்தைகளுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த இரண்டு ஆச்சிமார்கள், ஒரு கட்டத்தில், பிள்ளைகள் எழுந்து ஓடியதும் அவர்களே உட்கார்ந்து தாயக்கட்டைகளை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டனர். விளையாட்டு அவர்களை உள்ளிழுக்க ஆரம்பித்து விட்டது.
மொத்தத்தில், இந்த கோடை காலம், மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இது போன்ற விளையாட்டுக்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், அவர்களை செல்பேசியில் இருந்தும் தொலைக்காட்சியில் இருந்தும் சற்றே தள்ளி நிற்க வைக்கலாம்.
------------------------------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்
Tweet
தமிழறிஞர் சாத்தான்குளம் ராகவன் (1902 -1981 )
----------------------------------------------------------
பேரா.தொ.பரமசிவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், அவர் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு தமிழறிஞர் பெயர் சாத்தான்குளம் ராகவன் என்பதை நெருங்கிப் பழகியவர்கள் அறிவர். தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை எழுதியவர் அவர் என்று சொல்வார்.
பின்னாட்களில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலைப் பார்த்தபோது,
மிகப்பெரும் வியப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ராகவன் துவக்கத்தில் ஆசிரியர் வேலை தான் பார்த்தார்.
பின்னர், ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் துவக்கப்பட்டபோது அதற்கு மேலாளர் பொறுப்பிற்கு சென்று விட்டார்.
பின்னர், ஜீவானந்தம் அவர்களின் தொடர்பால், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார். " அறிவு " என்ற இதழை நடத்திய அனுபவம் உண்டு.
குடும்ப சூழல் காரணமாக இலங்கை செல்ல வேண்டியதாயிற்று. கொழும்பு நகரில் ஒரு நூலகத்தில், " திருநெல்வேலி காசுகள் " என்றொரு நூலை படித்து ஆச்சரியம் அடைந்தார். கொற்கையில் கிடைத்த காசுகள் பற்றி ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த அந்த நூல் அவரின் வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசின் தொல்லியல் ஆய்வு துறை இணை இயக்குனர் சண்முகநாதன் என்பவரின் தொடர்பால், மேலும் மேலும் இது போன்ற ஆராய்ச்சி நூல்களை படிக்க ஆரம்பித்தார்.
மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த ராகவன், கொற்கைக்கு பயணம் மேற்கொண்டார். ஒருகாலத்தில், கொற்கை துறைமுக நகராக இருந்தது. தற்போது கடல் உள்வாங்கி, கொற்கை என்பது ஒரு சிறிய கிராமமாக இருப்பதை அறிந்து வியப்புற்றார். கொற்கை குறித்து ஆய்வாளர் கால்டுவெல் எழுதிய நூல்களை படித்தார். கொற்கை குறித்தும், முதன்முதலில் இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் குறித்தும் நூல் எழுதினார்.
அவை கோநகர் கொற்கை, ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் ஆகியன. ஆதிச்சநல்லூர் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவே. பண்டை தமிழர் பயன்படுத்திய மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், பயன்படுத்திய உலோகங்கள், உமி,தானியங்கள்,இரும்பாலான ஆயுதங்கள் போன்றவற்றை பற்றி எல்லாம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அலெக்சாண்டர் ரே எழுதிய குறிப்புக்களோடும், படங்களோடும் விளக்கமாய் எழுதியிருப்பதை காணமுடியும்.
இவர் திருநெல்வேலியின் மகத்தான புகைப்பட கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் நெருங்கிய நண்பர். இசக்கி அண்ணாச்சி நெல்லை சந்திப்பின் அருகில் உள்ள உடையார்பட்டியில் ஸ்டூடியோ வைத்திருந்தார். இவர் எழுதிய " தமிழர்களின் அணிகலன்கள் " என்ற நூலுக்கு முகப்பு படம் வரைந்து தருவதாக இசக்கி அண்ணாச்சி சொல்லி இழுத்தடித்துக்கொண்டே வந்தார். அவ்வ்ளவு எளிதாக எல்லாம் இசக்கி அண்ணாச்சியிடம் படத்தை வாங்கி விட இயலாது. (தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்..நூலுக்கு அட்டைப்படம் வாங்க அவர் அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும் ) படத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார் சாத்தான்குளம் ராகவன்.
இசக்கி அண்ணாச்சி இதுபற்றி பேசும்போது " தம்பி..நானும் நாளைக்கு,நாளன்னைக்கு ன்னு சொல்லிட்டே இருந்தேனா..ஒரு நாள் ராத்திரி வந்தவன் படத்தை தந்தா தான் ஆச்சு..ன்னு வீட்டிலேயே படுத்துக்கிட்டான். ராத்திரி பதினோரு மணிக்கு வரைய ஆரம்பிச்சு நாலு மணிக்கு முடிச்சு தந்தேன்..கூடவே இருந்தான் ராகவன்..மனுஷன் தூங்காம பேய் மாதிரி முழிச்சுருந்து படத்தை பார்த்து " நல்லா வந்துருக்கு ன்னு " பாராட்டி விட்டு, பேப்பர்ல சுற்றி, மொத பஸ்ல போயிட்டான் " என்று சிரியாய் சிரித்தார்.
இவர் எழுதிய பிறநூல்கள் தமிழரின் கப்பல் கட்டும் கலை, திருவிளக்குகள், தமிழரும் தாமரையும், தமிழரும் படைக்கலன்களும் போன்ற 15 நூல்கள்.
தமிழர்களின் கலை,பண்பாட்டு வரலாற்றை எழுதியவர்களுள் மயிலை சீனி வேங்கடசாமி க்கு அடுத்தபடியாக சாத்தான்குளம் ராகவன் அவர்களை உறுதியாய் சொல்லலாம். ஜனசக்தி இதழில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் ராகவன்.
இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியாது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போனார்.
தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்த இந்த தமிழறிஞரின் பெயர் பெரிய அளவில் பேசப்படாதது வருந்தத்தக்க விஷயமே.
Tweet
இன்னொரு ஜாலியன் வாலாபாக்
-----------------------------------------------------
" தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 13 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியானது வேதனையளிக்கிறது. எனினும், இந்த ஆலையை தொடர்ந்து இயக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் ."
துப்பாக்கி சூட்டிற்கு மறுநாள், லண்டனில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ரொம்ப கூலாக அறிக்கை விட்டார்.
அவருக்கு தெரியும் இதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று.
1997 இல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 165 பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோதும், 1999 இல், வானொலி நிலைய ஊழியர்கள் 11 பேர் மயங்கி விழுந்தபோதும் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், எண்ணி முப்பது நாளில் மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ?
மீண்டும் ஆலையில் இருந்து சல்பியூரிக் அமிலம் கசிந்து ஒருவர் மரணம்,பலருக்கு மூச்சு திணறல் என்று பிரச்னை எழுந்தபோது ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தை மூடுவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி நூறு கோடி ரூபாயை அபராதம் கட்டி விட்டு இயக்கலாம் என்று சொன்னவுடன், சிரித்துக்கொண்டே தனது பர்சில் இருந்து ஒரு நாள் லண்டன் பயண செலவு போல எடுத்து வீசி விட்டு மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ?
கடந்த பெப்ரவரி 12 ஆம் தேதி (2018 ) ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தை ஆரம்பித்தபோது, அரசு கண்டுகொள்ளவில்லை. பத்து வயது சிறுவன் " ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு " என்று அடிவயிற்றில் இருந்து கோஷம் போட்டபோதும் , மாவட்ட நிர்வாகத்திற்கோ, அரசுக்கோ கேட்கவில்லை.
போராடிய அனைவரையும் கைது செய்தது அரசு.
முன்னணி தலைவர்களை மட்டும் பிணையில் விடுவித்து விட்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள்.
மறுநாள் muthal அந்த ஊர் மக்கள் மரத்தடியில் அமர்ந்து அறவழியில் போராட ஆரம்பித்தார்கள். பேச்சுவார்த்தை நடத்த வருபவர்களிடம், தங்கள் ஊரின் கிணற்று தண்ணீரை குடித்து பாருங்கள் என்று சொன்னார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவு பெருகியது. எழுத்தாளர்கள் கோணங்கி , சோ.தருமன் ,யவனிகா ஸ்ரீராம், சுகிர்தராணி உள்ளிட்ட பல படைப்பாளிகள் ஒருநாள் அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
99 நாள் வரை போராடும் மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தை அரசு புரிந்து கொள்ளவில்லை. நூறாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றவுடன் 144 தடையுத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கிறது. மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி ஜமாபந்திக்கு சென்று விடுகிறார். ஊரே தீப்பற்றி எரியும்போது மாவட்ட ஆட்சியர் எதற்கு கோவில்பட்டி செல்கிறார் ?
சுமார் 50 ,000 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கின்றனர்.
வி.வி.டி.சிக்னல் அருகே போலீசார் வழி மறித்து தடியடி நடத்துகின்றனர்.
எனினும், மக்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையும்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் பத்தாம் வகுப்பு மாணவி ஸ்னோலினும் ஒருவர். வயது 17 . துப்பாக்கி குண்டு அவரது வாயில் பாய்ந்துள்ளது. தானியங்கி துப்பாக்கியை காவல் துறையினர் பயன்படுத்தியுள்ளனர். சாதாரண உடையணிந்த காவல் துறையினர் தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஸ்னைப்பர்களாக செயல்பட்டு சுட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை மஞ்சள் உடையணிந்த காவல்துறையினர் சுட்டுக்கொள்வதை செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் போடவே, தூத்துக்குடி,நெல்லை,குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கியது தமிழக அரசு.
மே 22 க்கு முதல்நாள் காவல்துறை வீடு வீடாக புகுந்து 122 பேரை கைது செய்து கண்காணாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டதாக பலரும் கூறுகின்றனர். வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திற்கு காவல்துறை கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சுடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மதுரை, பாளையங்கோட்டை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களை கேட்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை பலரும் எழுப்பவே, ஏழு நாட்கள் கழிந்த நிலையில், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த மூன்று துணை வட்டாட்சியர்கள் என்று இப்போது அரசு தெரிவிக்கிறது. 144 தடையுத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர் எங்கே போனார் ? அவராக சென்றாரா அல்லது போக வைக்கப்பட்டாரா என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர்கள் இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ?
போராட்டக்காரர்கள் வன்முறையை கையாண்டனர் என்று சிலர் கூறுகிறார்கள். 99 நாள் அமைதியான முறையில் போராடும்போது அரசும், பொதுவாக ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. நூறாவது நாள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என்று சொன்னபிறகே 144 தடையுத்தரவு வருகிறது. காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. போராடும் மக்களுக்கு இதுதான் பரிசு என எச்சரிக்கை விடுக்கிறது அரசு. 13 பேர் பலியான பிறகே அரசு ஆலையை மூட நடவடிக்கை எடுக்கிறது. இதை, முன்பே எடுத்திருந்தால், இத்தனை உயிர்களை பலி கொடுத்திருக்கவேண்டாம். போராடும் மக்கள், வேலை கேட்டார்களா..இல்லை சம்பள உயர்வு கேட்டார்களா ? எங்கள் சந்ததிகள் நோயின்றி வாழ வேண்டும் என்று தானே போராடினார்கள் ?
சுற்று சூழலை மாசுபடுத்தி, புற்று நோயை உருவாக்கும் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள் என்ற ஒரே கோரிக்கையை வைத்து தானே போராடினார்கள் ?
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து உலகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. லண்டனில், வேதாந்தா நிறுவன தலைவர்அ னில் அகர்வால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போது நிரந்தரமாக மூடி விட்டதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆலைக்கு சீல் வைத்தாகி விட்டது.
சுமார், 110 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தல் போன்ற கோரிக்கைகளுக்காக போராடியபோது அன்றைய வெள்ளைக்கார அரசு அவர்களை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தவில்லை.
வேலை நிறுத்தத்தை தூண்டிய வ.உ.சி. மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது ஆலை நிர்வாகம். சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகள் வெற்றி பெற்றன. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து வஉசி யும், சிவாவும் கைது செய்யப்பட்டபோது, தூத்துக்குடி நகரத்தில் கலவரம் உருவானது. தொடர்ந்து நெல்லையிலும் கலவரம் ஏற்பட்டது. புகழ்பெற்ற " திருநெல்வேலி கலகம் " பற்றி லண்டன் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில், அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்காக பொதுமக்கள்,தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது முதல்முறையாக வ உ.சி. க்காக தான். இதன்பிறகே, திலகர் கைது செய்யப்பட்டபோது, பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. வரலாறு படைத்த தூத்துக்குடி மக்களுக்கு, போராட்டம் என்பது புதிதல்ல.
மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் கொக்கரித்துள்ளார். பிரச்னையை ஆறப்போட்டு மூன்று மாதங்கள் கழித்து மாறுபட்ட முடிவை நீதிமன்றம் எடுக்கலாம்.
கடந்த கால வரலாறுகள் எதுவும் நடக்கலாம் என்பதைத்தானே தெரிவிக்கின்றன ?
எந்த சூழ்நிலையிலும், மீண்டும் ஆலையை திறக்க பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோணுகிறது.
திருநெல்வேலி எழுச்சி வரலாற்றை யாரேனும் அனில் அகர்வாலுக்கு சொன்னால் நல்லது.
Tweet
குருதியில் நனைந்த தாமிரபரணி
-----------------------------------------------------
அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. கையில் கொடியும், இடுப்பில் குழந்தையுமே இருந்தன. கூட்டத்தை கலைக்கிறோம் என்று சொல்லி விரட்டினார்கள். கட்டிடம் கட்ட குவிக்கப்பட்டிருந்த செங்கல்களை காவல்துறையினர் எடுத்து பொதுமக்களை குறி பார்த்து எறிந்தனர். ஆறு அடி நீளமுள்ள சவுக்கு கம்பால், தண்ணீருக்குள் குதித்த ஆண்களை,பெண்களை அடித்து துவைத்தனர்.
ஆற்றின் மறுபுறம் கரையேறி தப்பிக்க முயன்ற ஆண்களையும், ஈர சேலையுடன் இருந்த பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர்.
காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஆற்றில் குதிக்கும் முன்பு, தனது ஒன்றரை வயது குழந்தை விக்னேஷை, அம்மா இரத்தினமேரி கரையில் போடும்போது, குழந்தையையும் தூக்கி போலீஸ்காரர்கள் உள்ளே எறிந்தனர்.
ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள் என்று திரும்ப திரும்ப சொல்லும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை பார்த்து, நீச்சல் போட்டியில் கோப்பைகள் வென்ற அவர்களின் புகைப்படங்கள் சிரிக்கின்றன.
தெருவெங்கும் இறைந்து கிடந்த ஒற்றை செருப்புகள் , மூன்றுமணி நேர வெறியாட்டத்தின் உச்சத்தை காட்டுகின்றன.
எல்லாம் முடிந்த பின், சுலோச்சனா முதலியார் பாலத்தில், வழக்கம்போல பேருந்துகள் ஓட ஆரம்பித்தன. பாலத்தின் அடியில், பதினேழு உயிர்களை சுமந்தபடி தாமிரபரணி ரத்தச்சிவப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்.
1 .விக்னேஷ் ( ஒன்றரை வயது குழந்தை )
2 .ரத்தினம்
3 .சஞ்சீவி
4 .ஷாநவாஸ்
5 .குட்டி என்ற குமார்
6 .திருமதி இரத்தினமேரி
7 .இன்னாசி மாணிக்கம்
8 .ஜான் பூபாலராயன்
9 .வேலாயுதம்
10 .கெய்சர்
11 .ஜெயசீலன்
12 .அந்தோணி
13 .முருகன்
14 . திரு.ராஜி
15 .ஜோசஃபின்
16 .அப்துல் ரஹ்மான்
17 .ஆறுமுகம்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளவரை,
தாமிரபரணி ஆறு இருக்கும் வரை,
இந்த பதினேழு பேரின் பெயர்களும் நிலைத்து நிற்கும்.
( ஜூலை 23 - மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். வருடம் : 1999 )
Attachments area
Tweet
கலகக்காரர் தொ.மு.சி.ரகுநாதன்
----------------------------------------------------
ஒரு நாவல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதன்மூலம் எழுத்தாளனின் பேனா பிடுங்கப்பட்டது என்பது இன்றைய சரித்திரம். ஒரு நாவலின் சர்ச்சைக்குரிய எழுத்துக்காக ஒரு எழுத்தாளன் கைது செய்யப்பட்ட விவகாரமும் தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த காலத்தில் நடந்துள்ளது என்பது பலரும் அறியாத செய்தி.
1949 இல், எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய " முதலிரவு " என்ற நாவலுக்கு அத்தகைய பெருமை உண்டு. பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாய் பேசாத அந்தக்காலங்களில், ஓரின சேர்க்கை குறித்தும்,முறை தவறிய உறவுகள் குறித்தும், காமம் சார்ந்தும் எழுதப்பட்ட இந்த நாவல் பெரும் புயலை கிளப்பியது. அக்காலத்தில் பல பதிப்புக்களையும் கண்ட இந்த நாவலை, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தடை செய்து உத்தரவிட்டார்.
இந்தத்தடையாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொ.மு.சி.போராடியபோதிலும், தோல்வியடைந்து, இறுதியில் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டி விட்டு வெளியே வந்தது தனிக்கதை.
இருந்தும் சளைக்காமல், மறுவருடமே " கன்னிகா " என்ற இன்னொரு நாவலை எழுதினார். இப்போது இந்த நாவல் வெளி வந்திருந்தால் பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் தேடிப்படித்துக்கொள்ளவும்.
இப்படி அதிரடியாய் எழுதிய அதே தொ.மு.சி. தான் நெல்லை மாவட்டத்தில் பஞ்சம் தலை விரித்தாடிய நிலையில் நெசவாளர் பட்ட துயரம் கண்டு, " பஞ்சும் பசியும் " என்ற நாவலையும் எழுதி பெரும்புகழ் பெற்றார். தமிழில் வெளி வந்த முதல் யதார்த்த நாவல் என்று சொல்லலாம். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலை செக் நாட்டு தமிழ் அறிஞர் கமில் ஸ்வலபில், செக் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழில் இருந்து ஒரு ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான தொ.மு.சி., புதுமைப்பித்தன் இறந்தபிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தனது எழுத்துலக ஆசானாக புதுமைப்பித்தனையே கருதினார். பாரதி மீது அளப்பரிய பற்றுதல் கொண்டு, பல ஆண்டுகள் பல்வேறு தரவுகளை சேகரித்து, " பாரதி : காலமும் கருத்தும்" என்ற அற்புதமான நூலை எழுதினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலின் எழுத்தில் மயங்கி, பின்னர் அவரைப் பற்றி அவரது " சாந்தி " இதழ் பற்றி, பல்வேறு விஷயங்களை தேடித்தேடி படித்தேன் என்றே சொல்ல வேண்டும்.
பாகப்பிரிவினையில் தனக்கு கிடைத்த சொத்தான மூவாயிரத்தை கொண்டு " சாந்தி " என்ற இலக்கிய இதழை 1954 இல் நெல்லையில் தொடங்கியவர் ரகுநாதன். நெல்லை பப்ளீசிங் ஹவுஸ் நடத்திய சண்முகம் பிள்ளை அண்ணாச்சியின் ஒத்துழைப்போடு, அவரது கடைக்கு அடுத்ததாக இருந்த சேவியர் என்ற கம்யூனிஸ்ட் தையல்காரரின் தையல் கடையின் ஒரு மூலையில் சாந்தி அலுவலகம்
தொடங்கப்பட்டது. அதற்கு வாடகை இலவசம். ஒருபுறம் தையல் இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும்.இன்னொரு புறம், பத்திரிக்கைக்கு வரும் படைப்புக்களை சரிபார்ப்பது, பிழை திருத்துவது, தபால் அனுப்புவது என இலக்கிய வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அறையில் கிடக்கும் அலமாரி,சாய்வு நாற்காலி கூட அவரது சொத்தில் கிடைத்தவையே. சாந்தி இதழுக்கு வேண்டிய உதவிகள் செய்தவர் எழுத்தாளர் சுந்தரராமசாமி. முதல் இதழில் சுந்தர ராமசாமி எழுதிய தண்ணீர் என்ற சிறுகதை வெளி வந்தது.
சாந்தி இதழுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சாந்தி அலுவலகத்தில் பல்வேறு படைப்பாளிகள் வந்து போவது போல இன்னொரு விருந்தாளியும் தினமும் வருவார். அது ஒரு அணில் பிள்ளை. தனது சாப்பாட்டில் ஒரு கவளத்தை இந்த அணிலுக்கு அளித்து விட்டே சாப்பிடுவாராம் ரகுநாதன். நீண்ட நாள் அவரது அன்பைப் பெற்றது இந்த அணில்பிள்ளை.
பிற்காலத்தில், அவரது வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார் அவர்.இறுதிக்காலத்தில், தன்னிடம் இருந்த பொக்கிஷமான நூல்களை எல்லாம் எட்டயபுரம் பாரதி ஆய்வு மையத்திற்கு (ரகுநாதன் நூலகம் ) அளித்து விட்டு, தனது வீட்டுப் பொருட்களை, நகைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுக்கும் உயில் ஒன்றையும் எழுதி வைத்தார். அதில் இந்த வெள்ளை நாயை பற்றியும் ஒரு செய்தி உண்டு.
தனது இறப்பிற்கு பிறகு இந்த நாயை யாரும் கவனிக்க மாட்டார்கள் எனக்கருதி, அது தெரு நாயாக அலைய நேரிடுமோ என்று நினைத்து, தான் இறந்தபிறகு, நகராட்சிக்கு தெரிவித்து அதை கொன்று விடுமாறு உயில் எழுதி வைத்திருந்தார் என்கிறார் எழுத்தாளர் பொன்னீலன்.
காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார் போன்ற நூல்கள் படித்த பின்னணியில், அவரை நெல்லையில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற அழைக்க முடிவு செய்திருந்தோம். எழுத்தாளர் தமிழ்செல்வன்,கவிஞர் கிருஷி மற்றும் நான் மூவரும் அவரது பெருமாள்புரம் வீட்டில் சந்திக்க சென்றோம். வாசலுக்கு வந்தவர், யாரென விசாரித்தார். விஷயத்தை சொன்னோம். கேட்டு விட்டு, " இன்னும் மூணு மாசம் இருக்குல்ல..பார்ப்போம் ." என்று சொல்லி விட்டு வாசல் கதவைக்கூட திறக்காமல் உள்ளே போய்விட்டார். எங்களுக்கு முகம் வாடி விட்டது.
தமிழ்ச்செல்வன் எங்களிடம் " பெரிய ஆளுமை ன்னா அப்படித்தான்..எழுத்தாளர்க்குள்ள கெத்து எப்படி இருக்குன்னு பார்த்தீகளா ..அது பாரதியின் ஞான செருக்கு .." என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.
பின்னால் மாநில மாநாட்டில் சிறப்பான சொற்பொழிவு ஆற்றியதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சம்.
ஒருமுறை, பாரதி விழாவில் பேச அழைத்தபோது ரொம்ப உற்சாகமாய் தனது வெள்ளை ஜிப்பாவில் கைகளை நுழைத்தபடி பேச்சை துவக்கினார். இந்தியன் வங்கியின் அப்போதைய தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பற்றி நகைச்சுவையாய் பேச ஆரம்பிக்கவும், எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதை எதற்கு இவ்வளவு நேரம் பேசுகிறார் என்று. திடீரென்று, பின்னோக்கி செல்ல ஆரம்பித்தார்.
நெல்லையில் மேம்பாலத்திற்கு அடியில் சந்திர விலாஸ் அருகில் வெள்ளைக்காரன் ஆரம்பித்த அர்பத்நாட் வங்கியை , அதன் வரலாற்றை சொல்லி, ஒரு திங்கள் கிழமை அது திவாலா என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட போது, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி புலம்பிய கதையை சொல்லி, அதில் ஏற்பட்ட துயரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களை பற்றியும், மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாய் அலைந்தவர்களைப்பற்றியும் சொல்ல ஆரம்பித்தபோது கூட்டத்தில் நீண்ட மௌனம் ஏற்பட்டது.
அந்த மக்கள் கூட்டத்தில், பைத்தியமும் பிடிக்காமல், தற்கொலையும் செய்து கொள்ளாமல் திக்பிரமை பிடித்து நின்ற மூவர் வ.உ.சி, பாரதி,சிவா. சுதேசி இயக்கத்திற்காக மக்களிடம் வசூலித்த தொகையை இந்த அந்நிய நாட்டு வங்கியில் போட்டு இழந்தவர்கள் இவர்கள். அந்நிய வங்கிகளிடம் இனியும் ஏமாறக்கூடாது என்று நினைத்து கல்லிடைக்குறிச்சி ஐயர்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆகியோரிடம் பேசி, சுதேசி வங்கி ஒன்றை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அப்படி ஆரம்பிக்கப்பட்ட வங்கி, இன்றைய இந்தியன் வங்கி என்று வீர முழக்கமிட்டு, அப்படிப்பட்ட வங்கியை இன்று நஷடத்தில் இயங்குகிறது என்று மூடி விட முயற்சி செய்யும் போக்கினை கடுமையாய் சாடினார். சுமார் ஒரு மணிநேரம் பேசிய அவரது உரை அற்புதமான தகவல்களின் தொகுப்பு.
அது தான் தொ.மு.சி.
திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற பெயரில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார் அவர். பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்ட ரகுநாதன், ஜீவா,நா.வானமாமலை,என்.டி.வானமாமலை,தி.க.சி, அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பாளை.சண்முகம், கணபதியப்பன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். ஜீவா அவர்கள் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கியபோது உடன் இருந்து பணியாற்றியவர். ஜீவாவிற்குப் பிறகு அதன் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
இவரது புகை பிடிக்கும் பழக்கத்தை இவரது துணைவியார் விட சொல்லி வற்புறுத்தியபோதெல்லாம் கேட்காமல், அவர் இறந்தபிறகு, தனிமையில் அவரது புகைப்படத்தை பார்த்து இனி பிடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து ஒரு நாளில் நிறுத்தி விட்டதை பலரும் அதிசயமாய் பார்த்தனர்.
எழுதும் எல்லோரையும் பாராட்ட மாட்டார் ரகுநாதன். ஒருவரின் எழுத்து வசீகரித்து விட்டால், அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் பாராட்டுவார்.
இறுதிக் காலத்தில், தனது மகள் பேரா. மஞ்சுளா வீட்டில் வசித்து வந்தார். அந்த நேரத்தில், பாளையங்கோட்டையின் புறநகர் பகுதியில் அது இருந்ததால், அவரால் பல கூட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. தனிமையில் இருந்த அவருக்கு மகள்,பேரன் இல்லாத நேரங்களில்,நாய் மட்டுமே துணை. எப்போதாவது சந்தித்தால், " வீட்டுக்கு வாங்களேன்..பேசுவோம்." என்று சொல்லி, கேடிசி நகர் தெரு விபரம்,தண்ணீர் தொட்டி அருகில் எதிரே செல்லும் மண் பாதையில் கடைசியில் இருக்கும் மஞ்சள் நிற வீடு என்றெல்லாம் சொல்லி விட்டு,
லேசாக இருமிய படி, " அங்கெ வந்து ரகுநாதன் வீடுன்னா, யாருக்கும் தெரியாது..மஞ்சுளா வீடு எதுன்னு கேளுங்க..சொல்லுவாங்க.." என்று சொன்னபோது அதிர்ந்து போனேன்.
புதுமைப்பித்தன், ஜீவா,கு.அழகிரிசாமி,கலாநிதி.க.சிவத்தம்பி,கலாநிதி.க.கைலாசபதி,சுந்தர ராமசாமி,தவத்திரு குன்றக்குடி அடிகளார், கிருஷ்ணன் நம்பி என பல இலக்கிய ஆளுமைகளுடன் நட்பு பாராட்டிய தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் என்ற தொ.மு.சி. ரகுநாதன் உண்மையில் ஒரு கலகக்காரரே !
Tweet
நெல்லையில் லெனின் சிலை
---------------------------------திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவ்வை முளரி நுண்கலைக்கூடம் கடந்த நான்கு மாத காலம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தோழர் லெனின் சிலை உருவான இடம். தினமும் நாலைந்து தோழர்களாவது இங்கே வந்து சிலை உருவாவதை நேரில் பார்த்து வியந்தவண்ணம் சென்றார்கள்.
கைத்தறி துணியில் பனியனும், கரண்டைக்காலுக்கு மேல் நிற்கும் நாலு முழ வேட்டியுமாய் கிராமத்து விவசாயியை போலிருக்கும் இந்த மனிதர், தேசிய , சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி என்று அறியும்போது பலருக்கும் வியப்பு ஏற்படும். ஜப்பானில் 1996 இல் பனிச்சிற்பத்தை உருவாக்கி விருது பெற்றவர். கொழும்பில் 1997 இல் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் இவரது கலைப்படைப்பிற்கு பரிசு கிடைத்தது. சென்னை ஓவியக்கல்லூரியின் முன்னாள் முதல்வர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் சந்துரு அவர்களிடம், லெனினோடு இருந்த அனுபவத்தை கேட்டபோது...
" ஆமாம்..இந்த நான்கு மாதங்கள் தோழர் எங்களோடு இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சிலைகள் செய்வதற்கும், இந்த சிலை செய்ததற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.
சாதாரண நேரத்தில் ஒரு சிலையை இயல்பாக செய்வது வேறு. வடக்கே ஒரு மாநிலத்தில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி சில காரணங்களால் தோல்வியுறும்போது, ஆட்சியை கைப்பற்றியவர்கள் சித்தாந்தத்தை தகர்ப்பதாக நினைத்துக்கொண்டு, லெனின் சிலையை தகர்த்தபோது, பலரையும் போல நானும் அதிர்ந்து தான் போனேன்.
அடுத்தடுத்து இது போன்ற செய்திகள் வரும்போது, சிலையை உடைத்தால் ஏன் அதற்கு ஒப்பாரி வைக்கணும் ..நீ அங்கெ உடைத்தால் நாங்கள் இங்கே எழுப்புவோம்டா ன்னு சொல்றது தானே சரி..
(சிரிக்கிறார் )...
அதைத்தான் தோழர் பாஸ்கரன் செய்தார். ஒரு அதிகாலைப்பொழுதில் அவர் இங்கே வந்து, தோழர் லெனின் சிலையை எட்டடி உயரத்தில் செய்ய வேண்டும்..எங்கள் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிறுவ இருக்கிறோம்..என்றார். ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.
ஏனெனில், லெனினை ஒரு வெளிநாட்டு சித்தாந்தத்தின் குறியீடாக எவருமே நினைக்க இயலாது. அவர் எல்லா தேசத்திற்கும், உழைக்கும் மக்களின் உந்து சக்தியாய் திகழ்ந்த தலைவர். மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பதை உணர்ந்து ரஷ்ய மண்ணிற்கேற்றபடி செயல்படுத்தியவர். அவரது சிலையை உருவாக்குவது பெருமையாக இருந்தது.
சிலை எட்டடியில் இருந்து பத்தடியாய் உயர்ந்து, பிறகு பெலோனியாவில் இருந்த பதினோரு அடியை விட கூடுதலாய் இருக்க வேண்டும் என நினைத்து பன்னிரண்டு அடியாய் செய்யப்பட்டது.
இந்த நாலைந்து மாதங்களில் இரவு பகலாய் உழைத்தவர்கள் எனது அருமை மாணவர்கள் பரணி,ராமச்சந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர்.
சிலை உருவாக்கத்தின்போது தோழர் வாசுகி வந்து பார்த்தாங்க..பின்னர் தோழர் நல்லக்கண்ணு வந்து பார்த்தாங்க...நல்லா வந்திருக்கு என்று எல்லோரும் சொன்னது திருப்தி..தினமும் பல்வேறு தோழர்கள் இங்கே வந்தவண்ணம் இருந்தாங்க..அது எங்கள் குழுவிற்கு உற்சாகம் அளித்தது.
சோவியத்தின் பிர்ச் மரங்களின் மத்தியில் வாழ்ந்த லெனின், இங்கே எங்களது கலைக்கூடத்தில் வேப்ப மரங்களின் குளுமையை ரசித்தபடி எங்களோடு வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்..
நாலைந்து மாதங்கள் எங்களோடு இருந்த மகத்தான ஒரு தலைவர் ,என்னோட வார்த்தையில் சொல்லனும்னா , எங்க வீட்டில் இருந்த பெரிய மனுஷன் , இப்போ இல்லாதது, ஒரு வெற்றிடம் போல கூட இருக்குது..(சிரிக்கிறார் )
அவரோடு சிலை உருவாக்கத்தில், பெரும்பங்காற்றிய ஓவியர் பரணி , நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காத்தமுத்து அவர்களின் மகன் வயிற்று பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அப்பாவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவரே. பரணியிடம் பேசியபோது...
" சந்துரு சார், என்னிடம் இந்த பெரும்பொறுப்பை ஒப்படைத்தபோது சந்தோசமாய் இருந்தது. லெனின் எனக்கு பூட்டன் தாத்தா மாதிரி. நிறைய படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். சிலை உருவாகும்போது, பல தோழர்கள் வந்து பார்த்தார்கள். ஒருநாள், இரண்டு பேர் வந்து கேள்விகளாய் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நானும், சிலையில் கவனம் செலுத்தியபடி பதில் சொல்லிக்கொண்டே வந்தேன்.
இந்த சிலை என்ன மெட்டல்..என்ன வெயிட் வரும்..இதுல வேற என்னல்லாம் சேர்ப்பீங்க..என்று கேட்டுக்கொண்டே இருந்தாங்க..அப்போதான் திரும்பி அவங்க முகத்தை பார்த்தேன்..
எதுக்கு இதெல்லாம் கேக்கீங்க..என்றேன்.
மேலே இருக்கவங்க கேட்டா சொல்லணும்ல..என்றார்கள். அவங்களை இங்கே வர சொல்லுங்க..எப்படி செய்யணும்னு சொல்லி தரேன் என்று சொன்னேன்.. அவங்க முகத்தை பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விட்டேன். இவங்க க்யூ பிரான்ச் போலீஸ் ஆக இருக்கும் என்று.
நாங்க சிபிஐ ன்னு சொல்லிட்டு போனாங்க..
அதன்பிறகு கூட இருந்த நண்பர்கள் சொன்னாங்க..ஒரு மாசமா இவங்க வாசல் பக்கம் நின்னு நோட்டம் பார்த்துட்டு இருந்தாங்க என்று.
இந்த மனுஷனை கண்டால் , அதிகார வர்க்கத்திற்கு இன்னமும் நடுக்கம் இருக்கு போல ..ஒருவேளை உசிரோடு எழுந்து வந்து விடுவார்னு நெனைச்சாங்களோ என்னவோ...என்று சிரிக்கிறார் பரணி.
----------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்
----------------
Tweet
பதியமிட்ட மனிதர்கள் -1
------------------------------------
சங்கரனை உங்களுக்கு தெரியுமா ? தெரியாவிட்டாலும் பரவாயில்லை...உங்கள் ஊரிலும் நிச்சயம் ஒரு சங்கரன் இருப்பார். என்ன..என்னோட சங்கரன் எம்.ஜி.ஆர்.ரசிகர் என்றால், உங்கள் ஊர் சங்கரன் , கணேசன் ரசிகராய் இருப்பார். அவ்வளவுதான்...!
எங்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி மூணு ஓட்டு சாய்ப்பு வீடுகள் உண்டு. அதில் முதல் வீட்டில் தான் சங்கரன் இருந்தார். ஒண்டிக்கட்டை. அவர் நடக்கையில் " சரக்..சரக்.." என்று செருப்பை தேய்த்து தேய்த்து தான் நடந்து வருவார். சந்துக்குள் நுழையும்போதே செருப்பு சத்தத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கல்யாணம் மற்றும் விசேஷ வீடுகளில் பண்டம்,பலகாரம் செய்வதில் கெட்டிக்காரர் நம்ம சங்கரன். துவக்கத்தில் தவசுப்பிள்ளை உத்தியோகம்தான் பார்த்துக்கொண்டிருந்ததாக சொல்லுவார்கள். தவசுப்பிள்ளைன்னா தெரியும்ல ? நெல்லை வட்டாரத்தில், சமையல்காரரைத்தான் தவசுப்பிள்ளை என்று சொல்வது வழக்கம். சமையல்காரர் என்று சொன்னால் கோபம் மூக்குக்கு மேல் வந்து விடும் . தவசுப்பிள்ளை என்றால், பத்துபேரை வைத்து வேலை வாங்கும் தலைமை சமையல்காரர் என்பதனால் கூட இருக்கலாம். சரி சவத்தை விடுங்கய்யா..
. இவரது பூந்தி ரொம்ப விசேஷம். எம்.ஜி.ஆர்.ரசிகரான சங்கரன், ரிஃசாக்காரன் படத்தை கோவில்பட்டி ராமசாமி தியேட்டரில் தொடர்ந்து அம்பது நாட்கள் பார்த்து சாதனை படைத்தவர். ஐம்பதாவது நாளில் ஒரு தங்க செயின் போட்டதை பெருமையாகக் காட்டுவார். கையில் போட்டிருக்கும் தங்க மோதிரம், உலகம் சுற்றும் வாலிபன் 75 வது நாள் விழாவில் போட்டது...
உரிமைக்குரல் படத்தை 100 நாள் தொடர்ந்து பார்த்து அவருக்கு பெரிய ஷீல்ட் கொடுத்தார்கள்.
" வெளங்காத பயலுவோ..எனக்கு என்னத்துக்கு இந்த பதைக்கம் எல்லாம்..? ஒரு சின்னதா மோதிரமோ, செயினோ போட்டா பரவாயில்ல..வாத்தியார் படத்தை நடுவுல போட்டுக் கொடுதுத்துட்டானுவோ ..அதனால தான் தம்பி வச்சுருக்கேன்.." என்று மர பீரோக்கு மேலே தூசி தும்பட்டையோடு கிடக்கும் ஷீல்டை காட்டி சொல்வார். மர பீரோவின் முகப்பில், எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.- மஞ்சுளா, எம்.ஜி.ஆர்.- லதா இணைந்து இருக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு எண்ணெய்படிந்து இருக்கும். சில நோட்டீஸ் களில் ஐம்பது நாள் வசூல், நூறு நாள் வசூல் தொகை குறிப்பிடப்பட்டு . அடைப்புக்குறிக்குள் சிவாஜி பட வசூல் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆர்.பட வசூல் அதிகமாகவே சொல்லப்பட்டிருக்கும் என்பதை தனியாக குறிப்பிட வேண்டியதில்லை.
விரைவில் பொன்மனச்செம்மல் நடிப்பில் வெளிவர இருக்கும் " கிழக்காப்பிரிக்காவில் ராஜு " என்ற பேப்பர் விளம்பரம் ஒன்றையும் சங்கரன் பசை தடவி மர பீரோவில் ஒட்டி வைத்திருந்தார். அந்தப்படம் கடைசி வரை வரவே இல்லை என்றாலும், வரலாறு முக்கியம் என்பதாலோ என்னவோ அது பீரோ முகப்பில் இடம் பெற்றிருந்தது.
" அண்ணாச்சி..அது எப்படி உங்களால தொடர்ந்து பாக்க முடியுது..நானும் வாத்தியார் ரசிகன் தான்..ஆனாலும் மூணு வாட்டி பாக்கலாம்..அதுக்கு மேலே என்னால ல்லாம் முடியாது..." என்பேன்.
" தம்பி...வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போறேன்..அதனால தரை டிக்கெட்டு எடுத்துட்டுப் போவேன்..ஒரு மூலையில சாஞ்சு உக்காந்து கொஞ்ச நேரம் பார்ப்பேன்.." நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு..." பாட்டு வரைக்கும் பார்ப்பேன்..அப்புறமா கண்ணு அசந்துரும்...
அப்புறம், " ஒரு தாய் வயிற்றில் பிறந்த .." ன்னு ஒரு பாட்டு வரும்..உருக்கமான பாட்டு தம்பி. அண்ணனை பார்த்து வாத்தியார் பாடுற பாட்டு...முழுசும் பார்ப்பேன்..அஞ்சாறு பைட்டு உண்டு..சிலது பார்ப்பேன்..ஆனா மொதத்தடவ பார்க்கும்போதே எத்தனை பைட்டுன்னு பாத்துக்கிடுவேன்..எல்லாவனும் என்கிட்டே வந்து தான் கேப்பானுவ ..சொல்லணும் பாத்தீகளா..? "
தோளில் போட்டிருக்கும் துண்டை கீழே விரித்து திண்ணையில் படுத்து விடுவார். அடுத்த சில நொடிகளில் குறட்டை சத்தம் வந்து விடும்.
எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் அன்று முதல் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று விடுவார். தியேட்டர் ஆபரேட்டர் எல்லாரும் அவருக்கு பழக்கம்.
கல்யாண வீடுகளுக்கு அவரை புக் செய்ய வருபவர்கள் தெருவில் வந்து " எம்.ஜி.ஆர்.சங்கரன் " வீடு எங்கன இருக்கு ? என்று தான் வருவார்கள். ( அந்தக் காலத்துலேயே இதெல்லாம் வந்தாச்சு ...)
அதிலே அவருக்கு ஏகப் பெருமை..
கண்ணு கண்ணாய் இருக்கும் பெரிய கண்ணாகப்பையோடு அவர் வெளியே கிளம்பி விட்டால், விசேஷ வீட்டிற்கு போகிறார் என்று அர்த்தம். அவரோட கைப்பக்குவத்தைப் பற்றி " கோட்டி" கண்ணாயிரம் தான் வானளாவ புகழுவான். இதென்ன கோட்டி கண்ணாயிரம்னு கேக்கீகளா..அது ஒரு தனிக்கதை..அப்புறமா சொல்லுதேன்..எம்.ஜி.ஆர்.சங்கரன் பிறகு கோவிச்சுக்குவார்.
என்னோட பெரிய அக்கா சடங்குக்கு காரா பூந்தியும், லட்டும் செய்வதற்கு அப்பா , எம்.ஜி.ஆர்.சங்கரனிடம் தான் சொல்லி இருந்தார்.
வீட்டு தார்சாவை அடுத்து இருந்த வானவெளியில் எண்ணெய் சட்டியை போட்டு விடிய விடிய பலகாரங்கள் செய்ததை பக்கத்தில் இருந்து நானும், சின்ன அக்காவும் பார்த்து கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.
" அண்ணாச்சி..உங்களுக்கும் வயசான மாதிரி இருக்கு..ஏன் நீங்க கலியாணம் பண்ணிக்கிடவே இல்ல.." என்றேன் ஒருதடவை.
அண்ணாச்சி பதிலே சொல்லவில்லை..
கொஞ்ச நேரம் கழித்து, " அதெல்லாம் நடந்து எல்லாம் முடிஞ்சு போச்சு.. அவளுக்கு நம்ம கூட வாழ கொடுத்து வைக்கல..அவ்வளவு தான்.." என்று ஒரு வரியில் முடித்து விட்டார்.
கோர்ட் முருகன் தான் சொன்னார்." கூரு இருக்காலே உனக்கு ? அவரு பொண்டாட்டி அவர விட்டுட்டு வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டா..எத்தன மட்டம் சொல்லி இருக்கேன்..இதப் போயி அவருட்டேயே ஒருத்தன் கேப்பானா .." என்று தலையில் அடுத்துக் கொண்டார். இப்ப தான் என்னிடம் சொல்கிறார் என்றாலும் எத்தனை மட்டம் என்பது அவரோட மானரிசம்..அடிக்கடி அதை சொல்வார்.
அதன்பிறகு சங்கரனைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாய் இருக்கும்.
ஊருக்குள்ளே சில இளவட்டங்கள் அவரை மானாங்கன்னியா பேசுவாங்க. அவருக்கு ஏலலெ ன்னா என்ன பண்ணுவாரு என்று கேலியும் குதர்க்கமுமாய் பேச்சுக்கள்...!
" வாத்தியார் படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது அண்ணாச்சி.." என்று ஒருதடவை கேட்டேன்.
" என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீக..எல்லாப்படமுமே புடிக்கும்..சதி லீலாவதி படத்துல இருந்து நவரத்தினம் படம் வரைக்கும் வரிசையா ஒன்னு விடாம என்னால சொல்ல முடியும்...வாத்தியார் படத்துல அவருக்கு என்ன பேரு என்பதைக் கூட சொல்லிருவேன்.." என்று சொன்னார்.
இரவு திண்ணையில் படுக்கும்போது அவர் தலைமாட்டில் டிரான்சிஸ்டர்
ரேடியோ மாத்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். தூங்கும்போதும் அவர் எம்.ஜி.ஆர்.பாடலைக் கேட்டுக் கொண்டே தான் தூங்குவார்.
"பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ " படகோட்டி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
" எம்.ஜி.ஆரை பார்துருக்கீகளா ? " என்றேன்.
" அதெல்லாம் எதுக்கு தம்பி...படத்துல இருக்குற மாதிரி தான நெசத்துலேயும் இருப்பாரு..மெனெக்கெட்டு போயி பார்க்கனும்னு எல்லாம் நெனைச்சது இல்ல...நம்மூருக்கு ஓட்டுக் கேட்டு வந்தாப் பாத்துக்குவோம்.." என்று நிதானமாய் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஒரு கோடைகால அதிகாலைப் பொழுதில், சங்கரன் போய் சேர்ந்திருந்தார். அவரது நெஞ்சில் இருந்த பனியனில் " பல்லாண்டு வாழ்க " எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டிருந்தார்.
------------------------------------இரா.நாறும்பூநாதன்
Tweet
Subscribe to:
Posts (Atom)