Sunday, September 13, 2020

நாட்டார் வழக்காற்றியலின் தந்தை நா.வானமாமலை ------------------------------------------------------------------------------------- வைணவ கோவில்களில் வைணவப் பிராமணர்களுக்கு உதவ " தாதர் " என்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியினர் உண்டு. அவர்களை சாத்தானியர்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் மாலைகள் தொடுப்பது,தெய்வங்களின் ஊர்வலத்தில் தீவட்டி தூக்கி செல்வது, நாமக்கட்டி செய்யப்பயன்படுத்தும் வெள்ளைக்களிமண் உருண்டைகள், குங்குமம் தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். மடப்பள்ளிகளில் பிரசாதம் தயாரிக்கவும் இவர்கள் உதவுவார்கள். நெல்லை மாவட்டம் நான்குனேரியில் இந்த சாத்தானியர் குடும்பத்தில் பிறந்தவர் நா.வானமாமலை. பள்ளிக்கல்வியை நான்குனேரியிலும், ஏர்வாடியிலும் கற்ற நா.வானமாமலை, கல்லூரிப் படிப்பிற்கு நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். கல்லூரியில் மிக சிறந்த இலக்கிய நூல்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேரா.அ.சீனிவாச ராகவன்.(சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ) பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, காங்கிரஸ்காரர் வைத்யநாதய்யர் தொடர்பு ஏற்பட்டது. அதனால், மாணவர் இயக்கத்தில் ஈடுபாடு வந்தது. பின்னர், ஆசிரியராக பணியாற்றினார். அரசுப்பணியை உதறி விட்டு, 1947 இல், நெல்லையில் ஸ்டுடண்ட்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட் என்ற தனிப்பயிற்சி நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார். இந்த டுடோரியல் மையத்தில் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மற்றும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் ஆகியோரும் பகுதி நேரமாக பணிபுரிந்தனர். சுதந்திரமாக இருந்த நா.வா.அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் வெளிப்படையாக ஈடுபட்டார். நெல்லை கொக்கிரகுளத்தில் முதல் வார்டில் நா.வா.வும், இரண்டாவது வார்டில் தோழர்.சு.பாலவிநாயகமும் நகராட்சி கவுன்சிலர் பதவியில் வெற்றி பெறுவது வழக்கம். 1961 இல், கலை இலக்கிய பெருமன்றத்தின் துணை தலைவராக இருந்த நா.வா. அவர்கள் உருவாக்கிய நாடோடி இலக்கிய குழுவில் தோழர்கள்.கு.சின்னப்ப பாரதி, எஸ்.எஸ்.போத்தையா, எஸ்.எம்.கார்க்கி போன்றோர் இருந்தனர். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957 இல் நடைபெற்றபோது, ஒரு கருத்தரங்கு நடத்த கம்யூனிஸ்ட் கட்சியில் தீர்மானித்தார்கள். கட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி " தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாட்டார் பாடல்களை சேகரியுங்கள் " என்று நா.வா.அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதுவே இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. மக்கள் மத்தியில் இந்த நாடோடி இலக்கிய குழு சென்று நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்தது. ஏற்றம் இறக்கும் விவசாயிகள்,நாற்று நடும் பெண்கள், சலவை தொழிலாளர்கள் என எல்லா உழைப்பாளி மக்களிடமும் சென்று, அவர்களோடு வாழ்ந்து,உணவு உண்டு, அவர்களின் வாய்ப்பாட்டுக்களை எழுத்தில் பதிவு செய்தனர். இப்படி தொகுத்த பாடல்களை " தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் " என்ற பெயரில் நூலாக கொண்டு வந்தார் நா.வா. அதற்கு முன்பு இது போன்ற பாடல்களை தொகுத்தவர்கள், பாடல்களில் இருந்த கொச்சையான சொற்களை திருத்தி எழுதினார்கள். மேலும், பாடல்களை சேகரித்தவரின் பெயர்,இடம் எதுவும் இடம் பெறவில்லை. இதற்கு மாறாக, நா.வா.தொகுத்த பாடல்கள் தொகுப்பில், எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டார். பாடல்களை சேகரித்த தோழர்களின் பெயர்,ஊர் போன்றவற்றையும் எழுதி, இது ஒரு கூட்டு முயற்சி என்பதை அறியும் வண்ணம் நூலை வெளியிட்டவிதம், அனைவரையும் கவர்ந்தது. சங்க இலக்கிய நூல்களின் ஏட்டுசுவடிகளை தேடித்தேடி அலைந்து பதிப்பித்த உ.வே.சா. அவர்களை போல, நாட்டுப்புற மக்கள் வாய்மொழியாக பாடி வந்த ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதை,கட்டபொம்மு கதை, வீணாதி வீணன் கதை, முத்துப்பட்டன் கதை என கதைப்பாடல்களை தேடி தேடி தொகுத்தவர் பண்பாட்டுப் போராளி நா.வா.அவர்கள். அவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த அவரது மாணவர் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் நா.வா.பற்றி கூறும்போது, " நா.வா.என்ற மார்க்சியவாதி, அறிவால் ஆலமரமாகவும், பண்பால் வாழை மரமாகவும் விளங்கியவர். தன்னருகில் தன் பக்கக்கன்றுகளுக்கு இடம் கொடுத்து வளர்க்கும் வாழைமரம் போன்று தாம் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியனவற்றின் வாயிலாக இளம் ஆய்வாளர்களை உருவாக்கியவர். அவர்களை படிக்கவும்,எழுதவும், விவாதிக்கவும் தூண்டினார். அவர்கள் எழுதும் கட்டுரைகளை படித்து திருத்தினார். வாழை மரம் தனக்குரிய நீரையும் உரத்தையும் தன் பக்கக் கன்றுகளுடன் பகிர்ந்து கொள்வதைப்போன்றதாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தது " என்று சொல்கிறார். தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பேரா.நா.ராமசந்திரன் அவர்கள் நா.வா.வின் இன்னொரு முக்கிய மாணவர் ஆவார். இந்திய தத்துவம், பண்பாட்டியல் ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி முறை மகத்தானது. வேதாந்த பிரபஞ்சம் என்னும் நூலுக்கு அவர் எழுதிய விமர்சனம் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவையும் வரலாற்றுணர்வையும் புலப்படுத்தும். இவரது ஆராய்ச்சிக்குழுவில் இருந்த ஆய்வாளர்கள், ஒப்பாரி பற்றியும், நாட்டுப்பாடல்களில் மழை பற்றியும், கிராமப்புற தெய்வங்கள் பற்றியும், தமிழ்நாட்டு விதவைகள் பற்றியும்,தமிழ்நாட்டுப் பளியர்கள் பற்றியும், இலங்கைக்கு குடிபெயர்ந்த மக்கள் பற்றியும், தமிழ்நாட்டு தத்துவங்கள் பற்றியும், பவுத்த,ஜைன, சைவ தத்துவ போராட்டங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சமூகத்திற்கு இவரது பங்களிப்பினை அறிந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

No comments: