Sunday, September 13, 2020

இன்னொரு ஜாலியன் வாலாபாக் ----------------------------------------------------- " தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 13 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியானது வேதனையளிக்கிறது. எனினும், இந்த ஆலையை தொடர்ந்து இயக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் ." துப்பாக்கி சூட்டிற்கு மறுநாள், லண்டனில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ரொம்ப கூலாக அறிக்கை விட்டார். அவருக்கு தெரியும் இதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று. 1997 இல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 165 பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோதும், 1999 இல், வானொலி நிலைய ஊழியர்கள் 11 பேர் மயங்கி விழுந்தபோதும் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், எண்ணி முப்பது நாளில் மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ? மீண்டும் ஆலையில் இருந்து சல்பியூரிக் அமிலம் கசிந்து ஒருவர் மரணம்,பலருக்கு மூச்சு திணறல் என்று பிரச்னை எழுந்தபோது ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தை மூடுவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி நூறு கோடி ரூபாயை அபராதம் கட்டி விட்டு இயக்கலாம் என்று சொன்னவுடன், சிரித்துக்கொண்டே தனது பர்சில் இருந்து ஒரு நாள் லண்டன் பயண செலவு போல எடுத்து வீசி விட்டு மீண்டும் ஆலையை இயக்கியவர் அல்லவா இவர் ? கடந்த பெப்ரவரி 12 ஆம் தேதி (2018 ) ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தை ஆரம்பித்தபோது, அரசு கண்டுகொள்ளவில்லை. பத்து வயது சிறுவன் " ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு " என்று அடிவயிற்றில் இருந்து கோஷம் போட்டபோதும் , மாவட்ட நிர்வாகத்திற்கோ, அரசுக்கோ கேட்கவில்லை. போராடிய அனைவரையும் கைது செய்தது அரசு. முன்னணி தலைவர்களை மட்டும் பிணையில் விடுவித்து விட்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள். மறுநாள் muthal அந்த ஊர் மக்கள் மரத்தடியில் அமர்ந்து அறவழியில் போராட ஆரம்பித்தார்கள். பேச்சுவார்த்தை நடத்த வருபவர்களிடம், தங்கள் ஊரின் கிணற்று தண்ணீரை குடித்து பாருங்கள் என்று சொன்னார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவு பெருகியது. எழுத்தாளர்கள் கோணங்கி , சோ.தருமன் ,யவனிகா ஸ்ரீராம், சுகிர்தராணி உள்ளிட்ட பல படைப்பாளிகள் ஒருநாள் அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர். 99 நாள் வரை போராடும் மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தை அரசு புரிந்து கொள்ளவில்லை. நூறாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றவுடன் 144 தடையுத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கிறது. மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி ஜமாபந்திக்கு சென்று விடுகிறார். ஊரே தீப்பற்றி எரியும்போது மாவட்ட ஆட்சியர் எதற்கு கோவில்பட்டி செல்கிறார் ? சுமார் 50 ,000 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கின்றனர். வி.வி.டி.சிக்னல் அருகே போலீசார் வழி மறித்து தடியடி நடத்துகின்றனர். எனினும், மக்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையும்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் பத்தாம் வகுப்பு மாணவி ஸ்னோலினும் ஒருவர். வயது 17 . துப்பாக்கி குண்டு அவரது வாயில் பாய்ந்துள்ளது. தானியங்கி துப்பாக்கியை காவல் துறையினர் பயன்படுத்தியுள்ளனர். சாதாரண உடையணிந்த காவல் துறையினர் தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஸ்னைப்பர்களாக செயல்பட்டு சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களை மஞ்சள் உடையணிந்த காவல்துறையினர் சுட்டுக்கொள்வதை செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் போடவே, தூத்துக்குடி,நெல்லை,குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கியது தமிழக அரசு. மே 22 க்கு முதல்நாள் காவல்துறை வீடு வீடாக புகுந்து 122 பேரை கைது செய்து கண்காணாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டதாக பலரும் கூறுகின்றனர். வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திற்கு காவல்துறை கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சுடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மதுரை, பாளையங்கோட்டை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களை கேட்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை பலரும் எழுப்பவே, ஏழு நாட்கள் கழிந்த நிலையில், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த மூன்று துணை வட்டாட்சியர்கள் என்று இப்போது அரசு தெரிவிக்கிறது. 144 தடையுத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர் எங்கே போனார் ? அவராக சென்றாரா அல்லது போக வைக்கப்பட்டாரா என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர்கள் இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? போராட்டக்காரர்கள் வன்முறையை கையாண்டனர் என்று சிலர் கூறுகிறார்கள். 99 நாள் அமைதியான முறையில் போராடும்போது அரசும், பொதுவாக ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. நூறாவது நாள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என்று சொன்னபிறகே 144 தடையுத்தரவு வருகிறது. காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. போராடும் மக்களுக்கு இதுதான் பரிசு என எச்சரிக்கை விடுக்கிறது அரசு. 13 பேர் பலியான பிறகே அரசு ஆலையை மூட நடவடிக்கை எடுக்கிறது. இதை, முன்பே எடுத்திருந்தால், இத்தனை உயிர்களை பலி கொடுத்திருக்கவேண்டாம். போராடும் மக்கள், வேலை கேட்டார்களா..இல்லை சம்பள உயர்வு கேட்டார்களா ? எங்கள் சந்ததிகள் நோயின்றி வாழ வேண்டும் என்று தானே போராடினார்கள் ? சுற்று சூழலை மாசுபடுத்தி, புற்று நோயை உருவாக்கும் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள் என்ற ஒரே கோரிக்கையை வைத்து தானே போராடினார்கள் ? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து உலகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. லண்டனில், வேதாந்தா நிறுவன தலைவர்அ னில் அகர்வால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போது நிரந்தரமாக மூடி விட்டதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆலைக்கு சீல் வைத்தாகி விட்டது. சுமார், 110 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தல் போன்ற கோரிக்கைகளுக்காக போராடியபோது அன்றைய வெள்ளைக்கார அரசு அவர்களை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தவில்லை. வேலை நிறுத்தத்தை தூண்டிய வ.உ.சி. மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது ஆலை நிர்வாகம். சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகள் வெற்றி பெற்றன. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து வஉசி யும், சிவாவும் கைது செய்யப்பட்டபோது, தூத்துக்குடி நகரத்தில் கலவரம் உருவானது. தொடர்ந்து நெல்லையிலும் கலவரம் ஏற்பட்டது. புகழ்பெற்ற " திருநெல்வேலி கலகம் " பற்றி லண்டன் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில், அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்காக பொதுமக்கள்,தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது முதல்முறையாக வ உ.சி. க்காக தான். இதன்பிறகே, திலகர் கைது செய்யப்பட்டபோது, பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. வரலாறு படைத்த தூத்துக்குடி மக்களுக்கு, போராட்டம் என்பது புதிதல்ல. மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் கொக்கரித்துள்ளார். பிரச்னையை ஆறப்போட்டு மூன்று மாதங்கள் கழித்து மாறுபட்ட முடிவை நீதிமன்றம் எடுக்கலாம். கடந்த கால வரலாறுகள் எதுவும் நடக்கலாம் என்பதைத்தானே தெரிவிக்கின்றன ? எந்த சூழ்நிலையிலும், மீண்டும் ஆலையை திறக்க பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோணுகிறது. திருநெல்வேலி எழுச்சி வரலாற்றை யாரேனும் அனில் அகர்வாலுக்கு சொன்னால் நல்லது.

No comments: