Saturday, April 30, 2011

சுகாவை எனக்கு பிடிக்கும்

ஆனந்த விகடனில் சுகா மூங்கில் மூச்சு எனும் தொடரை எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், திருநவேலி காரர்களுக்கு ஏக சந்தோஷம்.

"அது யாருடே ! நம்ம ஊரைப்பத்தி அப்படியே எழுதுதான்...அருமையா எழுதுதாண்டே ! ஒனக்கு தெரியாமலா இருக்கும்? "

எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக நான் செயல்பட்டு கொண்டு இருப்பதால் எழுத்தாளர் சுகாவை நான் கண்டிப்பா அறிந்து இருப்பேன் என்ற நினைப்பில் பல திருநெவேலி வாசிகள் என்னிடம் உரிமையாய் விசாரிப்பார்கள். உண்மையில் இந்த ஆண்டு ஜனவரி 30 வரை நான் சுகாவை அறிந்திருக்கவில்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது சுகாவின் அப்பா சுகா எழுதிய "தாயார் சன்னதி " என்ற நூலை எனக்கு படிக்க கொடுத்தார்.அன்று இரவே அந்த நூலை வாசித்து முடித்து விட்டேன்.

மனுஷன் என்னமாய் எழுதியிருக்கான். நான் கரிசல்காட்டு மண்ணான கோவில்பட்டியில் பிறந்து வளந்தவன் தான்.எனினும் கடந்த 25 வருசங்களாக தாமிரபரணி தண்ணியை குடித்து வளர்ந்து விட்டதால் அந்த மண்ணின் வாசம் எனக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.நெல்லை மண்ணின் ஈரமான மனிதர்களை, பிரியமான ஆச்சிகளை, அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை இவ்வளவு நுட்பமாக பதிவு செய்துருக்கிறாரே என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. கல்யாணி ஆச்சியை பற்றி அவர் கூறுவதை கேளுங்கள்.


....யாரையுமே நெருக்கமாக பழகுபவர் போலவே தான் ஆச்சியால் சொல்ல முடியும்.ஒருமுறை சொன்னாள்.

"சாவடிபிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்துருந்தா. ஆனா நான் அவாள அங்க வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுதான் பாத்தேன்.பக்கத்துல போய் கும்பிட்டேன். பச்சபுள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டே அவாளும் பதிலுக்கு கும்பிட்டா"

தமிழகத்தின் மற்ற பகுதியில் அவாள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்.ஆனால் திருநேவேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல்.கல்யாணி ஆச்சி "அவாள்" என்று சொன்னது மகாத்மா காந்தியை.

திருநெல்வேலி சிவசக்தி ரெடிமேடு கடையில் துணி கிழிக்கும் சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளை, திருமண துப்பு சொல்லும் பிரியமான வீரையன் தாத்தா, நடிகை விஜலலிதாவின் பரம விசிறி பிரம்மநாயகம் தாத்தா , விஞ்சைவிலாஸ் கைலாசம் பிள்ளை , எப்போதும் பவுடர் பூசியிருக்கும் கிரிஸ்டி டீச்சர், பொருட்காட்சியில் "ராட்டுல" சுத்தி அவஸ்தை பட்ட சுந்தரம்பிள்ளை பெரியப்பா , இளம்பிராய காதலி சந்திரா ...என எத்தனை விதவிதமான மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்துகிறார்..!

படிக்க படிக்க அப்படியொரு இன்பம் மனசுக்குள் ஊற்றாய் பெருகியது.
உண்மையில் இப்படியொரு பிரியத்துடன் திருநெல்வேலியில் மட்டும்தான் இத்தகைய மனுசர்கள் இருப்பார்களா? மதுரையிலோ கோவையிலோ ஈரோட்டிலோ அல்லது ராமநாதபுரத்திலோ உள்ள மனுஷர்களின் வாழ்க்கையிலும் இது போன்ற ஈரமான பக்கங்கள் இருக்கும்தானே ? இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.நான் படிக்காமல் கூட இருந்திருக்கலாம்.

வண்ணதாசனின் அருமையான முன்னுரை மனசை ரொம்பவே இளக வைக்கிறது. ஓவியர் பொன்.வள்ளிநாயகத்தின் அற்புதமான கோட்டோவியங்கள் புத்தகத்துக்கு மேலும் பொலிவூட்டுகிறது.

படித்து முடித்ததும் நாற்பது ஆண்டுகள் டவுன் அம்மன் சன்னதி தெருவில் குடியிருந்த உணர்வு ஏற்பட்டது. இவரது பல கதாபாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள்.அறிந்தவர்கள்.சுகாவை தவிர.

சொல்வனம் வெளியீடான தாயார் சன்னதி டிசம்பர் 2010 இல் வெளியானது.
மறுநாள் காலையில் அவரது அப்பாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

"என்கிட்ட பேசினது எல்லாம் சரிதான்.அவனுக்கு ஒரு கடுதாசி எழுதி போட்டுரு.குறிச்சிக்கோ அவன் முகவரியை .."என்றபடி அவரது முகவரியை தந்தார்.

நெல்லைக்கண்ணன் அண்ணாச்சி ! மன்னிச்சுக்குங்க ..இன்னமும் உங்க பையனுக்கு நான் கடுதாசி எழுதல..எதை எழுத..எதை விட..என்று மனசு அடிச்சுக்குது..எப்படியும் எழுதிவிடுவேன் "

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
திரு சுகா எழுதுவதை ஆனந்த விகடனில் தொடர்ந்து படித்து வருகிறேன்.
நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சகாதேவன் said...

நான் ஒரு பாலிடெக்னிக் காலேஜில் ரோட்டரி நிகழ்ச்சியில் முத்தணைந்த பெருமாள் என்றொரு மாணவனை சந்தித்தேன். அவனிடம் உன் பெயர் ஹிந்து ஹைஸ்கூலில் என் தமிழாசிரியர் பெயர் என்றேன். உடனே அவன் அது என் தாத்தா என்றான்.
அது போல உஙகள் பெயர் நாறும்பூநாதன் என்று டி.வி.எஸ்-ல் அறுபதுகளில் மெக்கானிக் வேலை பார்த்தவர் நினைவு வந்தது. அது உங்கள் தாத்தாவா?
நானும் சுகாவின் திருநெல்வேலி பற்றிய தகவல்களை ஆர்வத்துடன் படிக்கிறேன்.
சகாதேவன்

ramanujam said...

நல்ல பதிவு.நானும் சுகாவின் வாசகன்.குறிப்பாக திருநெல்வேலி டவுண் பற்றிய வர்ணனைகள் அபாரம்.டவுண் மார்வாடிகள் கூட நெல்லைத் தமிழில் 'அங்க வாரியலால தூத்துக்கிட்டிருக்கால்ல அவதாம்' என்று பேசுவதைக் குறிப்பிட்டிருப்பார் சுகா.அருமை.

Nellai V.Kannan said...

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
kannan