Wednesday, April 27, 2011

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்

மெய்ப்பொருள் நாயனார் தெருவுக்குள் நுழையும்போதே மனம் கனத்தது. எவ்வளவு நாளாயிற்று வந்து? வீடுகளின் முகத்தோற்றங்கள் ரொம்பவே மாறியிருந்தன.இரும்புகடைக்காரரின் பெரிய காம்பௌண்டு சுவர் இடிக்கப்பட்டு அங்கே சின்னச்சின்னதாய் நாலைந்து புதுவீடுகள்... பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை சண்முகம் அண்ணாச்சி எங்கே போனாரோ? கடையையும் காணோம்..அங்கேதான் கணேசன் புத்தகமும் சிகரெட்டுமாய் கிடப்பான். எனக்கு நினைவில் தெரிந்து சொல்வதானால் கணேசன் சிகரெட்டுடன் தான் முதலில் அறிமுகமானான்.கோல்ட் பில்ட்டர் சிகரெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவன் நினைவு தான் வரும்.

கணேசன் வீடே எனக்கு அடையாளம் தெரியவில்லை.அந்த தெருவில் அவன் வீடு மட்டும் வித்தியாசமாக இருக்கும்.மற்ற வீடுகள் நெருக்கமாக முன் தள்ளி இருக்கையில் அவன் வீடு மட்டும் காம்பௌண்டில் இருந்து சற்று உள்ளடங்கி இருக்கும்.காம்பௌண்டு கதவில் இருந்து வீடு சுமார் இருபது அடி தூரம் இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருந்தது. "வீட்டின் முன்புறம் திறந்தவெளி இருப்பது தாண்டா அழகு" என்று அடிக்கடி சொல்வான். காம்பௌண்டை ஒட்டி முன்புறம் ஒரேஒரு உயரமான தென்னை மரம்.வீட்டின் முற்றத்தில் நிறைய பூச்செடிகள் விதவிதமாய் பூத்திருக்கும்.வீட்டின் வலது மூலையில் உள்ள வேப்பமர நிழலில் அவன் சைக்கிள் நிற்கும். பின்னால் அவன் மொபெட் வாங்கியபோதிலும் சைக்கிளை அவன் ஒரு போதும் விற்றதில்லை.ஆபீஸ் போவதற்குதான் மொபெட். மீதிநேரம் சைக்கிள் தான்.கன்னிவினாயகர் கோவில் முன் பக்கம் உள்ள தந்தி போஸ்டில் சைக்கிளில் சாய்ந்தபடி நிற்கும் கணேசன் நினைவில் வந்து போனான்.

கணேசன் வீட்டு காம்பௌண்டுக்குள் ஒரு செல்போன் கடை புதுசாய் உருவாகி இருந்தது. கடையில் நாலைந்து மாணவர்கள் ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.யாரையும் அடையாளம் காணமுடியவில்லை.அவன் வீட்டிற்கு எதிரே இருந்த காலி மனையில் பெருசாய் ஒரு வீடு எழும்பி நின்றது.கணேசன் வீட்டு வாசலில் சின்னதாய் இருந்த நுழைவாயிலின் கேட்டை திறந்து உள்ளே சென்றேன்.செல்போன் கடையின் சுவர் நீளமாய் உட்புறம் சென்றதால் வீட்டு முகப்பே பெரிதும் மறைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

வலது ஓரத்து மூலையில் ஒட்டடை தூசிகளோடு நின்றது கணேசனின் சைக்கிள்.
"யாரு?"

உள்ளே இருந்து முதலில் வந்தது சின்னவன் காசி. நன்கு வளர்ந்து இருந்தான்.
"காசி ... எப்படிடே இருக்கே?"

அவன் கையை பிடித்து கொண்டேன்.முதலில் தயங்கி, பின் சுதாரித்து கொண்டவனாய் "மாமா ..மணி மாமா .."என்று சொல்லிக்கொண்டு உட்புறமாய் திரும்பி "மணி மாமம்மா " என்றான்.

இருபத்தஞ்சு வருஷங்களுக்கும் மேலாக வந்து போன வீடு என்றாலும் வராண்டா சேரில் உட்காரும் போது புதுசாய் உட்கார்வது போல இருந்தது. உள்ளே இருந்து வந்தாள் பூரணி.

"வாங்கண்ணே..இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?"

சிரித்தபடியே கேட்டாள். முன்பைவிட சற்றே பெருத்து இருந்தாள்.சமையல் கட்டில் இருந்து வந்ததால் முகமெல்லாம் வியர்வை. சேலை தலைப்பால் முகத்தை துடைத்து கொண்டாள்.

காசியை பக்கத்தில் இழுத்தேன். "என்ன படிக்கே? நாலாப்பா?"

"நாலப்பா ...எல்கேஜி யான்னு கேக்ககூடாது ? ஆறு படிக்கான்.." என்றவள்
"ஏல..மாமவ உள்ளே கூட்டியா..தார்சா லேயே உட்கார்ந்துடீக..உள்ளே வாங்க .."
பூரணி உட்புறம் திரும்பினாள்.

ஹாலில் ஷோபாவில் அமர்ந்தேன்.அறைக்குள்ளும் நிறைய மாற்றங்கள். கணேசனும் பூரணியும் இருந்த பெரிய கருப்பு வெள்ளை புகைப்படம் டிவி க்கு மேல்புறம் தொங்கிக்கொண்டு இருந்தது .திருமணத்தின்போது மாரிஸ் எடுத்தது. இடது பக்கம் மேல்புறத்தில் கணேசனின் பெரிய வண்ணபுகைப்படம் ..புகைப்படத்தில் சந்தனமாலை தொங்கிக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.

"பெரியவன எங்க ?" பூரணியிடம் கேட்டேன்.

"மூர்த்தியா அவன் டுஷன் போயிருக்கான் ..இந்த வருஷம் பிளஸ் டூல்ல.." என்றவள் "அக்கா எப்படி இருக்காங்க ? கூட்டிட்டு வர வேண்டியதுதான..? திலக் படிப்ப முடிச்சுட்டானா? " ஆவலுடன் கேட்டாள் பூரணி.

குரலில் இப்போது தெளிவு தெரிந்தது. முன்பெல்லாம் பேசுவதுக்கே ரொம்ப கூச்சபடுவாள்.விபத்தில் கணேசன் இறந்த அன்று அவள் உடைந்து போய் முட்டி முட்டி அழுத காட்சி கண்ணில் நிழலாடியது.

"பி.எட் முடிச்சுட்டீங்களா ? பென்ஷன்லாம் ஒழுங்கா வருதா?" வார்த்தைகள் திக்கி திணறி மோதித்தான் வெளிவருகின்றன எனக்கு.

"பி.எட் முடிச்சு பதிஞ்சும் வச்சாச்சு. எப்ப வருதுன்னு பார்ப்போம்..டி.டி பி வொர்க் பார்த்துக்கிட்டு இருக்கேன். அண்ணன் ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் ஜாப் வொர்க் கிடைச்சுட்டு இருக்கு.பென்ஷன் பணம் மட்டும் போததுல்ல..கொஞ்சம் இரிங்க அண்ணாச்சி ..அடுப்ப தணிசுட்டு வரேன் " உள்ளே போனாள்.

காசியின் கைகளை கையில் எடுத்து கொண்டேன். லேசான சூட்டுடன் மென்மையாய் இருந்தது. கூச்சத்துடன் கைகளை இழுத்து கொண்டான். கணேசனை உறிச்சி வச்சு பிறந்தவன்.

"அண்ணன் டுஷன் விட்டு எப்ப வருவான்? " என்றேன்.

"சித்தி மார்க்கெட்டுக்கு போயிட்டு வரும்போது அவன கூட்டிட்டு வருவா" என்றான்.

"காப்பிய குடிங்க முதல்ல .."நீட்டினாள் பூரணி.

"ரேவதி இப்ப அடுத்த வீட்டுல தான இருக்கு.அவ தான் அவன கவனிச்சுகுவா. வாரத்துக்கு ரெண்டு நாள் டுசனுக்கு கொண்டு போய் விடறதும்கூட்டியாறதும் அவ தான்.சைக்கிள் ள்ள தனியா விட பயமா தான இருக்கு "

கணேசன் சாலையில் சைக்கிளில் கால் ஊன்றி நின்றபடி செல்பேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது தான் அந்த லாரிகாரன் பின்புறமாய் வந்து இடித்து தூக்கி எறிந்து...

"அடுத்த வாரம் புது வீடு க்ரஹப்ரவேசம்..திருநவேலி ல தான்..பிள்ளைகளை கூட்டிட்டு கட்டாயம் வரணும்.." என்றபடி கைப்பையில் இருந்து எடுத்து அழைபிதழை பூரணியிடம் நீட்டினேன்.

"பூரணி கணேசன் " என்பதை எழுத்து கூட்டி வாசித்தது போல இருந்தது. "அடுத்த புதனா ? சந்தோஷம். எவ்வளவு நாளா வீடு கட்டணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க ..நம்ம வீடு மாதிரி முன்னால இடம் விட்டு கட்டணும்னு சொன்னேகல்ல..அப்படிதான் கட்டி இருக்கீகளா" சிரித்தாள் பூரணி.

நான் செல்போன் கடையை பார்த்தேன்.அவள் பெருமூச்சு எறிந்தாள்.

"என்ன செய்ய ? அம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்து அவனே கடையை கட்டிகிட்டான். வாடகை ரெண்டாயிரம் வருது. சென்டரான இடம்லா. சரின்னுட்டேன். செடி கொடில்லாம் அவுகளோட போச்சு.." என்றவள்
"பிள்ளைகளையும் ரேவதியையும் அனுப்பி வைக்கிறேன். நான் இன்னொரு நாள் வரேன் .." என்றவளை மறித்து "இல்லை இல்லை நீயும் கண்டிப்பா வரணும் " என்று அழுத்தமாய் கூறினேன்.

"மூத்தவனையும் பார்க்கலாம்னு நெனச்சேன். நேரமாயிரும். அப்ப நான் கெளம்பறேன் " எழுந்தேன்.

ஷோபாவின் பக்கவாட்டில் இருந்த ஷெல்பில் கணேசன் அடுக்கி இருந்த புத்தகங்கள்..தூசி படிந்து கிடந்தன.

மேல்புற வரிசையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். ஜமீலா நாவல்.சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ் மதாவ் எழுதிய அழகான காதல் கதை.முத்தஆனந்தபுரம் மடத்தில் உள்ள பெரிய புளியமரத்தின் கீழ் அமர்ந்து எண்பதுகளில் கணேசன் மணிக்கணக்கில் சிலாகித்து பேசிய நாவல். ஜமீலாவையும் ஐஸ்மதேவையும் எனக்கு அவன் தான் அறிமுகம் செய்தவன். மனம் பிரளயம் கொண்டதை போல உணர்ந்தேன்.

"இத நான் எடுத்துகிடடுமா? " நாவலை கையில் எடுத்தேன்.

"எடுத்துக்குங்கனேன்.."பூரணியின் குரல் கம்மியது.

வெளியே வந்தேன். காதுகளில் பூரணியின் கேவல் சத்தம் விழுந்தது. "முப்பது வருஷமா பழகி இருக்கீங்க. அவரு போய்ட்டா எல்லாமே போச்சா ?கடைசில என்கூட பொறந்தவங்க மட்டும்தான் எனக்கு உறவா? அப்பப்ப வந்து பார்த்துக்குங்க உங்க பிரெண்டு பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்களா இல்லையானு . .."என்பது போல இருந்தது அந்த விசும்பலின் உணர்வுகள்.

அவளை திரும்பி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

8 comments:

ramanujam said...

அன்புள்ள நாறும்பூநாதன்

மிக நல்ல கதை.இறந்துவிட்ட நண்பனின் மனைவி என்பது ஒரு குறியீடாகத் தோன்றுகிறது.நமக்கு ஒரு பொருள் கிடைத்து அது இல்லாத அல்லது அதை இழந்த ஒருவனைப் பார்க்கும் போது ஏற்படும் குற்ற உணர்வை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். நாலாப்பு,தார்சா போன்ற சொற்கள் திருநெல்வேலி டவுணில் இருவருக்கிடையே நடக்கும் உரையாடலைக் கண்முன் நிறுத்துகிறது. தொடரட்டும் இந்த முயற்சி.
ராமானுஜம்

மாதவராஜ் said...

கலங்க வைத்து விட்டீர்கள் நாறும்பூ. எழுதுங்கள் என் அருமைத் தோழா!

வலையுலகம் உங்களுக்காக காத்திருக்கிறது!

காலம் said...

மிக சபீபத்தில் படித்த உலுக்கியெடுத்த சிறுகதை

venu's pathivukal said...

அற்புதம் நாறும்பூ. உங்களது பதிவுலக பிரவேசத்தை, இலக்கியம் துய்க்க இன்னுமொரு வலைப்பூ என்ற அறிமுகத்தோடு ஏராளமான மின்னஞ்சல் தோழர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். தமிழில் வாசிக்கும் பேராவல், இப்போது ஐம்பதைக் கடந்தவர்களுக்கு அதிகரிப்பது போல எனது வங்கி வட்டாரங்களில் உணர்ந்தேன். தொலைக்காட்சியின் அதிரடிச் செய்திகள், நாளேடுகளின் பரபரப்பு பேட்டிகள், உருப்படாத மூன்றாந்தர தொடர்கள், சிரிக்க வைக்க முடியாமல் தோற்று அழவைக்கும் காமெடிகளின் அலுப்பில் nostalgic வீதிகளில் இறங்கி நடக்கலாம் போல நினைப்பவர்களுக்கு உங்களைப் போன்றோரது எழுத்து இதமான வருடலாக, சில போது முதுகில் அடித்துச் சோர்வைத் தூக்கி வீசியடிக்கிற குற்றாலக் குளியலாக அமையக் கூடும்.
மற்றவர்களுக்கு அனுப்பியதையே முழு மொத்தமாக இங்கே பதிவு செய்து களிப்புறுகிறேன்:


அன்புத் தோழர் நாறும்பூநாதன் (பாரத ஸ்டேட் வங்கி, நெல்லை) மிகச் சிறந்த இலக்கியக் கொண்டாடி, எழுத்தாளர். மனித நேயர். வலைப்பூவில் ஒரு பூத் தொடுத்து அனுப்பி இருக்கிறார்.
http://narumpunathan.blogspot.com/
மணக்கிறது அதில் மண்ணின் மணமும், மண்ணுக்குண்டான மனிதர்களின் மனமும்....

நெஞ்சை நெகிழவைக்கும் நட்புக்கு என்ன பெயர் இருந்தால் என்ன....சோவியத் எழுத்தாளன் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எங்கே, கணேசன் எங்கே, கதை சொல்லி நாறும்பூநாதன் எங்கே....பூரணி இணைத்துவிட்டாள் மூவரையும் நம்முடன்.


நண்பர் டாக்டர் ராமானுஜம் எனது குறுஞ்செய்தி பார்த்து மேற்படி பதிவை வாசித்துப் பதிலும் இட்டுவிட்டார். அதை வாசிக்கிற வரையில் அப்பாவி வாசகனான நான், நாறும்பூ எழுதியிருப்பது உண்மை நிகழ்வு என்றே ஏமாந்தேன். சிறுகதையின் வெற்றிக்கு இதைவிட என்ன வேண்டும்?

அவரது மின்னஞ்சல் முகவரி: narumpu@gmail.com
எஸ் வி வேணுகோபாலன்

Rathnavel Natarajan said...

நல்ல நட்பு.
அருமையான பதிவு.
கண் கலங்கி விட்டேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் எழுத்து நடை எளிமையாக அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஐயா.

காமராஜ் said...

மிக அழுத்தமான கதை.
கனக்க வைக்கிறது.

kumaraguruparan said...

'மத்த வீடுகள் நெருக்கமாக இருக்கையில் அவன் வீடு மட்டும் உள்ளடங்கி இருக்கும்" என்ற வருணனையே நாம் தினம்தோறும் சந்தித்து வரும் இழப்பை உணர்த்துகிறது. நண்பனில்லாத குடும்பத்து நெருக்கடியை குடும்பத்தலைவி மூலம் உணர்த்துவது மனதைப்பிசைகிறது. இரண்டு நாள் முன்புதான் எங்கள் காலனியில் சற்று தூரத்தில் இருக்கும் அந்த வீட்டின் முன் நான் தினமும் காணும் காட்சி நினைவுக்கு வந்தது. காலையில் முற்றத்தில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருப்பார் அந்தப் பெண்மணி .இரண்டாண்டுகள் முன்பு அவர்கள் வீட்டின் முன் இரண்டு சொட்டுக் கண்ணீருடன் ஒரு போஸ்டர் இருந்தது மூலம் அந்த வீட்டிலுள்ள குடும்பத்தலைவர் இறப்பு பற்றி அறிந்து கொண்டேன் .அதைக் கடந்து செல்லும் போதெல்லாம் அந்த நினைவு எனக்கு வரும். குடும்பத்தலைவர் இல்லாத வீட்டை அந்தப் பெண்மணி நிர்வகிக்கிறாள். இப்போதெல்லாம் அந்தப் பெண்மணியை நான் காண முடிவதில்லை. முன்பெல்லாம் மாலை வேளைகளில் சோகத்தோடு உட்கார்ந்திருப்பார். பொட்டு மட்டுமல்லாமல் நெருங்கிய உறவுகளின் அருகாமையையும் இழந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி பற்றி மனம் வருந்தியது. அந்தக்குடும்பத்துடன் நான் பேசியதே இல்லை இதுவரை... இப்படித்தான் மனதுக்குள்ளாகவே நாம் நாள்தோறும் பலவற்றை உரையாடிக் கொண்டிருக்கிறோம்! அது கதையாக உருவெடுத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அதே மனஅலைகள் நாறும்பூவுக்கும் பரவி இருக்கக்கூடும்!... உறவுகளும் நட்பு வட்டஅருகாமையும் 'இத்தகைய குடும்பங்களுக்கு' தேவை என்பதை சிறுகதை வடிவம் உரத்துக்கூறுகிறது.மேலும் பல பதிவுகள் இப்படி வெளிவரட்டும் -இரா. குமரகுருபரன்

Unknown said...

Very much interesting posting .Online World News in Tamil