பேருந்து நிறுத்தத்தில் தூத்துக்குடி செல்வதற்காக காத்திருக்கும்போது எதிரே கிருஷ்ண பகவான் தோன்றினார்.சட்டைபையினுள் கையை விட்டு துளாவி, கிடைத்த இரண்டு ரூபா நாணயத்தை அவர் நீட்டிய தட்டில் போட்டேன்.கிருஷ்ணர் நகர்ந்த மறு நிமிடத்தில் கால்சலங்கை ஒலிக்க அனுமன் பிரசன்னமானார்.என்னிடம் வேறு சில்லறை காசுகள் ஏதும் இல்லை.அனுமன் வருத்தப்படவில்லை. அடுத்தவரிடம் நகர்ந்து விட்டார்.சாலையின் எதிர்புறத்தில் இருந்து கரடி ஒன்று சில்லரைகாசுகளை இன்னொரு குவளைக்கு மாற்றியபடி சாலையை கடந்து வந்து கரும்புச்சாறு விற்பவரிடம் ஜூசுக்கு ஆர்டர் கொடுத்தது.என்ன விநோதமாய் பார்க்கிறீர்கள்?
தசரா பண்டிகை தொடங்கி விட்டால் பாளையம்கோட்டை களைகட்டி விடும்.வீதியெங்கும் கிருஷ்ணர்களும், அனுமர்களும் வலம் வருவார்கள்.பக்தர்களிடம் காணிக்கை பெற்று குலசெகரபட்டனத்தில் கடைசி நாளில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வார்கள்.இந்த ஒன்பது நாட்களிலும் விதவிதமான வேடங்களில் வரும் பக்தர்களை ரசிப்பது எனக்கு பிடித்தமானது.ரோஸ் பவுடர்களை முகத்தில் ஏகமாய் அப்பி, லிப்ஸ்டிக் போட்டு கூலிங் கிளாஸ் அணிந்து கால் சலங்கை ஒலிக்க இவர்கள் வருவதை பார்த்தவுடன் கல்லாபெட்டியில் உட்கார்ந்து இருப்பவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் சில்லறை காசுகளை போடுவார்கள்.தசராவுக்கு என்றே சில நூறு ரூபாய்களுக்கு சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள்.
சந்தை மைதானத்தில் ராட்சத ராட்டினங்களை மாட்டி கொண்டிருந்தார்கள்.இன்று இரவில் இருந்தே குழந்தைகள் கூட்டம் கூட்டமாய் வர தொடங்கி விடுவார்கள்.திருவிழா சேதியை முன்னறிவிப்பு செய்யும் பலூன் காரர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருந்தார்கள். டிஜிட்டல் வாட்சுகள் மலையாய் குவிந்துவிட்டதால் பிளாஸ்டிக் வாட்சுகளை குழந்தைகள் வாங்குவது இல்லை போலும்.மின்சாரத்தில் இயங்கும் டோரா டோரா, ஆர்க் போன்ற ராட்சச ராட்டினங்கள் வந்தபின் பழைய குடைராட்டினம், ரங்க ராட்டினம் போன்றவை காணாமல் போய் விட்டன.ஒவ்வொரு இரவும் கலைநிகழ்ச்சிகள் நடத்த பெரிய கொட்டகையினை வியாபாரிகள் சங்கம் சார்பில் எழுப்பி இருந்தனர். பேருந்தில் அமர்ந்து டிக்கெட் எடுப்பதற்காக சட்டைபையினுள் இருந்து ரூபாயை எடுக்கும்போது கூடவே அம்மா எழுதிய கடிதமும் வந்தது.சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு ஊருக்கு வரசொல்லி எழுதி இருந்தாள்.வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தீபாவளிகாவது குடும்பத்துடன் வா என்று முடித்திருந்தாள்.இந்த ரெண்டு வருசமாய் தான் எதாவது ஒரு வேலை வந்து போகமுடியாமல் போய் விடுகிறது.பொங்கலைபோல அம்மா ரொம்ப விரும்பிகொண்டாடும் பண்டிகை சரஸ்வதி பூஜை.
சின்ன வயசில் நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்திருப்பதை பார்க்க அம்மாவுடன் சென்ற ஞாபகம் மனசில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ராமச்சந்திரன் டாக்டர் வீட்டில் விதவிதமான பொம்மைகள் பத்து பதினைந்து அடுக்குகளில் பளிச் சென்று இருக்கும்.பொம்மைகள் அருகில் சென்று பார்க்கலாம்.ஆனால் தொடக்கூடாது.டாக்டரின் பொண்ணுகள் லக்ஷ்மியும், ரேவதியும் கீர்த்தனைகளை பாடிகொண்டிருப்பர்கள். பூஜை முடிந்த பின்னர்தான் சக்கரை பொங்கலும் சுண்டலும்.வடகோடியில் இருக்கும் கோமளா அக்கா வீட்டில் அறுபது வாட்ஸ் பல்ப் உமிழும் சுமாரான வெளிச்சத்தில் அபூர்வமான பொம்மைகளை ரசித்த அனுபவம் உண்டு.மேளதாளங்களுடன் மாப்பிள்ளை அழைத்து செல்வது போன்ற ஊர்வலம் , தவழும் கிருஷ்ணர் , தொட்டிலில் ஆடும் கிருஷ்ணர், மரத்தில் ஒளிந்து இருக்கும் கிருஷ்ணர், என பல ரூபங்களில்..பூஜை முடிந்தாலும் முடியாவிட்டாலும் துண்டு வாழை இலையில் பாசிபருப்பு சுண்டலை மடித்து மாமிக்கு தெரியாமல் என் கையில் அழுத்துவாள் கோமளா அக்கா."சின்ன பிள்ளைகளை சாமி ஒண்ணும் செய்யாது " என்பாள் அவள்.
"ஒம் சக்தி ஓம் சக்தி ஒம் "பாரதியின் பாடலை கண்களை மூடிய படி கோமளா அக்கா பாடுவாள்.அந்தபாடலை எங்கே கேட்டாலும் கோமளா அக்கா நினைவு வந்து விடும்.ரொம்ப நாளாய் கோமளா அக்காவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற செய்தி மட்டும் வந்து அடி மனசில் தங்கியது.
சரஸ்வதி பூஜைக்கு அம்மா சரஸ்வதி படம் எல்லாம் வைத்து கும்பிடுவது இல்லை. அம்மியில் மஞ்சளை மையாய் அரைத்து அதை உருட்டி முகமாய் செய்து காபி குடிக்கும் கெண்டியின் பக்கவாட்டில் ஒட்டவைத்து கண், காது மூக்கு செய்து சரஸ்வதியின் முக தோற்றத்தை அப்படியே கொண்டு வந்துவிடுவாள் . ஆரம்பத்தில் அம்மா தான் இதை செய்து வந்தாள். பின்பு சுந்தரம் அண்ணன் மதுரையில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது அவனிடம் இந்த பொறுப்பு விடப்பட்டது. அண்ணனுக்கு சாமி நம்பிக்கை அவ்வளவாக இல்லாத போதும் மஞ்சளில் சரஸ்வதி முகம் செய்வதில் அலாதியான பிரியம் உண்டு. அவனை சுற்றி நானும் அக்கா இருவரும் சூழ்ந்து கொண்டு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருப்போம்.அம்மா அதிகாலையில் குளித்து அம்மியில் அரைத்த மஞ்சளை அண்ணன் கையில் கொடுக்கும் போது அவன் குளித்து விட்டானா என்பதை உறுதிபடுத்தி கொள்வாள். சாமி விசயத்தில் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது அவளின் தீர்க்கமான கொள்கை.
அண்ணனுக்கு ஓவியம் நன்றாக வரும்.எனவே அதே சிரத்தையுடன் இதில் ஈடுபடுவான்.அரைத்த மஞ்சளை குழைவாய் கெண்டியில் அப்பி முக வடிவத்துக்கு சீர் செய்வான்.மீனா அக்காவின் கையில் இருக்கும் பிச்சிபூவை வாங்கி சிறிய இதழ்களை பிரித்து எடுத்து கண்களாய் ஒட்டுவான். வள்ளி கையில் வைத்திருக்கும் கண் மை டப்பாவில் இருந்து மையை குச்சியால் இழுத்து புருவங்கலாய் வளைப்பான்.பின்புறத்தில் இருந்து கொஞ்சம் மஞ்சளை உருவி மூககாய் ஓட்ட வைப்பான்.ஈர்க்குச்சியால் மூக்கின் கீழ்புறம் ரெண்டு துளைகள் ..குங்கும சிமிழை திறந்து சிணுகொலியால் குங்குமத்தை எடுத்து உதட்டருகே வைத்து ஒரே கோட்டில் அழகுற வளைத்து விடுவான்.அப்போது அவன் முகம் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கும்.அந்த வளைவில்தான் சரஸ்வதியின் புன்னகை வெளிப்படும்.கருப்புமை பாட்டிலோடு நான் நின்று கொண்டு இருப்பேன்.மை பாட்டிலின் மூடியில் கொஞ்சம் மையை ஊற்றி சின்ன தூரிகையால் சரஸ்வதியின் தலைபகுதியை கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக்கி கொண்டே வருவான். மஞ்சளின் ஈரபதத்தில் மை விரிந்து பரவி செல்லும்.
"கண்ணை சீக்கிரம் வரையேன்"
மீனாவும் வள்ளியும் தொணதொணப்பார்கள்.கண்ணை கடைசியில்தான் திறக்கவேண்டும்.எதையும் காதில் வாங்காமல் அவன் போக்கிலேயே இயங்கி கொண்டு இருப்பான்.காதில் அணிந்து இருக்கும் மீனாவின் தோடுகளை கழட்டிசரஸ்வதியின் காதில் அழகாக மாட்டி விடுவான்.அம்மாவின் சிவப்பு கல் மூக்குத்தியும் வள்ளியின் சின்னதான தங்க சங்கிலியும் முகத்திற்கு எழில் கூட்டும். கடைசியில் நெற்றிசூடியை உச்சந்தலையில் அணிவித்து கண்களை திறப்பான்.சரஸ்வதி தேவி உயிர்ப்புடன் புன்னகை புரிவாள்.கண் சிமிட்டாமல் உடல் சிலிர்க்க நாங்கள் பார்த்துகொண்டிருப்போம்.
எங்களது நோட்டுகளையும் புத்தகங்களையும் மேஜை மீது அடுக்கி புதுசாய் எடுத்த சீட்டி துணியால் அவற்றை மூடி அண்ணன் செய்த சரஸ்வதி முகம் தாங்கிய கெண்டியை மேலே வைத்து மாலை அணிவித்து பூஜையை தொடங்குவாள் அம்மா.இவ்வளவு நேரம் நடந்த ஆர்ப்பாட்டம் எதுவும் காதில் விழுந்தும் விழாததுமாய் அப்பா ஈஸி சேரில் இருந்து எழுந்து வந்து பூஜையில் கலந்து கொள்வார்.
"சுந்தரம் செஞ்ச சாமிய பாத்திகளா..?"
அம்மா சூடனை காட்டியபடியே அப்பாவிடம் சொல்வாள்.
"ம்..ம்..பரவா இல்ல ..அம்மனுக்கு எதுக்கு கண் மை எல்லாம் போட்டு இருக்கான் " என்பார் அப்பா.
அப்பாவின் குணம் இப்பிடித்தான். எப்போதுமே பிள்ளைகளின் திறமையை வெளிபடையாய் புகழ்ந்தது இல்லை.எங்களுக்கு இதெல்லாம் பழகி போய் இருந்தது.மேலும் நாங்கள் உற்சாகமாய் இருப்போம்.வருடம் முழுதும் படிக்கிறோமோ இல்லையோ சரஸ்வதி பூஜை அன்று படிக்கவோ எழுதவோ வேண்டியது இல்லை.சட்டபூர்வமாக இன்று படிக்க கூடாது என்ற உத்தரவு இருப்பதை போல உணர்வு எங்கள் எல்லோருக்கும்.மீறி படித்தால் கண் அவிஞ்சு போகும் என்று கூட சொல்லி கொள்வோம். பூஜை முடிந்தவுடன் அப்பா "வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்.."பாடலை பாடுங்க ..என்பார்.பாரதியின் இந்த பாடல் எங்களுக்கு மனப்பாடம்.எத்தனை வருடங்கள் இதை படிச்சுருக்கோம் .தாமரை பூவை ரொம்ப நாளா பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் கடைசியில் கோமளா அக்கா வீட்டில் பார்த்த போது ஆச்சர்யமாய் போனது.சரஸ்வதி அமர்ந்து இருக்கும் தாமரை பூ இவ்வளவு சின்னூண்டாக இருக்குதே என்ற வியப்பு..
அண்ணன் கொல்லைபுறத்தில் நின்று கொண்டு பூம்பருப்பு சுண்டலை கொறித்தபடி கொடுக்காபுளி மரத்தில் பழங்கள் ஏதும் காய்த்து தொங்குகிறதா என்று பார்த்துகொண்டு இருப்பான்.
"சாமி கும்பிடுற நேரத்துல கொல்லைப்புறதுல நின்னுகிட்டு இருக்கான் பாரு .."
அப்பா அவனை திட்டுவார்.
அம்மா எதுவும் பேசாமல் எல்லோருக்கும் பிரசாதத்தை இலையில் வைத்து கொடுப்பாள் .
"அண்ணன் ஏம்மா இப்படி இருக்கான் " என்று நாங்கள் கேட்டாள், அம்மா
"அதனாலே இப்ப என்ன ...கொஞ்ச நேரத்துக்கு முன்னால எவ்வளவு கண்ணும் கருத்துமா செஞ்சான்..அது போதும் அவனுக்கு..நமக்கு கிடைக்குற பலன் எல்லாம் அவனுக்கும் கிடைக்கும்."
அம்மா அண்ணனை விட்டு கொடுக்காமல் பேசுவாள்.
அண்ணன் வேலை கிடைத்து பாம்பே சென்ற பிறகு எப்போதாவது தான் வரும்படியாகி போனது.அவன் வேலை இப்போது என்னுடைய வேலையாக மாறிவிட்டது.அண்ணனின் செய்நேர்த்தி என்னிடம் இல்லை என்றாலும் அவனது நுட்பமான முறைகளை கையாண்டு பார்த்ததில் எனக்கு வெற்றிதான்.மீனாவும் வள்ளியும் கேலி செய்தபடி எனக்கு உதவினார்கள்.வள்ளி கவரிங் கடையில் இருந்து செட்டாய் வாங்கி வந்து சரஸ்வதியின் தலையில் நெற்றிசூடி, காதுலே தோடு, மூக்கிலே மூக்குத்தி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு என விதவிதமாய் அலங்கரிக்க உதவி செய்தாள். அம்மாவுக்கு அம்மனை பார்த்தவுடன் சந்தோஷம் தாளவில்லை.
"தாத்தாவோட வாரிசில்லையா நீ ..அவரோட திறமை உனக்கும் வராமலா போகும்? " என்பாள் அம்மா.
அப்பாவின் அப்பா நல்ல ஓவியராம்.அந்த காலத்துலே கோவிலில் ஓவியங்கள் வரைவதிலும் களிமண் சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராய் இருந்தவராம்.அவரது பழைய போட்டோ ஒன்று அப்பாவின் பெட்டியில் உள்ளது.தலைமுறை தலைமுறையாய் ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டுருப்பது அம்மாவுக்கு திருப்தி அளித்து கொண்டுஇருக்கிறது.அதன் பிறகு வந்த தசரா பண்டிகைகளில் இடையிடையே அண்ணன் வரும்போது நான் முகம் செய்யும் அழகை அருகில் நின்று ரசித்து பார்பான்.அப்போது எல்லாம் வள்ளி மட்டுமே கூட மாட இருந்து உதவுவாள்.மீனாவை தென்காசியில் கட்டி கொடுத்திருந்தது.
என்னுடைய திருமணத்துக்கு பின்னால் நான் பாளையம்கோட்டைக்கு இடம் பெயர்ந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
"பாளையங்கோட்டை தசரா ன்னா தெரியாதவங்க யாரு இருக்கா? ராத்திரி பத்து சப்பரங்கள் வரும்.அந்த காலத்துலே திரிசூலிமாரியம்மன் கோவில் பக்கத்துல நின்னுபார்ப்போம் ..தாமிரபரணியும் தசராவும் இருக்கும் போது வேற என்ன வேணும் ?
சமய நம்பிக்கைகளை தாண்டி கலாச்சாரத்தின் ஆணிவேராய் திகழும் திருவிழாக்கள் இல்லாத மனித சமூகத்தை கற்பனை பண்ணவே முடியவில்லை.
ஆபீசில் ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் விடுப்பு எடுத்து செல்லமுடியாது.அதனால் சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் புறப்பட்டு மதுரை சென்று அன்று இரவே ஊர் திரும்ப நானும் என் மனைவியும் முடிவு செய்தோம்.பையன் கார்த்திக்கும் உற்சாகமாக கிளம்பி விட்டான். முன்னறிவிப்பு இன்றி இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணினோம்.
அம்மாவிற்கு அதிர்ச்சியில் கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை.
"வாரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே "
பேரனை கட்டி கொண்டாள்.ஈஸி சேரில் படுத்திருந்த அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"இப்பதான் சாமி கும்பிட்டு முடிச்சோம்.நேத்தே போன் பண்ணி சொல்லிருக்கலாமே ?"
அப்பாவின் முகத்தில் லேசாக ஒரு புன்முறுவல்.
"உன்னோட பாட புஸ்தகம் ஏதும் கொண்டு வந்துருக்கியம்மா ?"
ஆச்சி பேரனிடம் அக்கறையாய் கேட்டாள்.அவன் உதட்டை பிதுக்கினான்.
"இல்லேன்னா பரவாயில்லை..வாறது தெரிஞ்சா சக்கரபோங்கல் வச்சுருக்கலாம்.
ரெண்டு கிழடுகளுக்கும் சக்கரை வியாதி..பொறியும் கடலையும் வச்சு கும்பிட்டாச்சு..
அம்மா பரபரப்புடன் உள்ளே போனாள்.
ஹாலில் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி விட்டு திரும்பும்போது கண்ணில் பட்டது இடது புற மேஜையின் மீது அடுக்கி வைக்கபட்டிருந்த அப்பாவின் புத்தககட்டிற்கு மேல் வீணை வாசிக்கும் கலைவாணி சிலை..பிளாஸ்டர் ஆப் பாரிசில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற சரஸ்வதி .பத்தியின் வாசனை அறையெங்கும் பரவி இருந்தது .கார்த்திக்கும் சிவகாமியும் விபூதி எடுத்து பூசி கொண்டனர்.
பையன் சரஸ்வதி சிலையையும் என்னையும் மாறி மாறி பார்த்தான்.ஆச்சியின் முகத்தை பார்த்து எதையோ கேக்க எண்ணியது போலிருந்தது.
ஆச்சி புரிந்து கொண்டாள்.
"ஆமா ..பொறகு என்ன செய்ய ..இங்க ஆச்சியும் தாத்தாவும் மட்டும் தான் இருக்கோம். .உங்க அப்பா வந்தா அழகா முகம் செய்வான்..வாறது தெரியாம போச்சே ..முன்னால எல்லாம் ஆச்சியே செஞ்சுருக்கேன்..இப்பல்லாம் முடியாது ராஜா..கையெல்லாம் கொஞ்சம் நடுக்கம் இருக்கு..போன வாரம் இத தெருவில வித்துட்டு போனான்..நல்லா இருக்கா?"
கலைவாணியை உற்று நோக்கினேன்.கழுத்தில் கிடந்த அம்மாவின் ரெட்டை வட
சங்கிலியின் தாமரை டாலர் சூரிய ஒளி பட்டு மின்னிக்கொண்டு இருந்தது.என் வாய் முணுமுணுத்தது.
"வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியில்இருப்பாள்
கொள்ளை இன்ப குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளதிருப்பாள்.."
Tweet
9 comments:
நேர்த்தியாக, இயல்பாக, கோர்வையாக தசரா பற்றியும் சரஸ்வதி பூஜை பற்றியும் உங்கள் எழுத்தோட்டம் இருந்ததால். என் குறும்புத்தனமான எப்படி சின்ன தாமரையில் பெரிய சரஸ்வதி மவுஸ் வரை வந்த கேள்வியை மானிடருக்கு வராமல் பார்த்துக்கொண்டேன். சிறுவயது நினைவுகள் படமாக மனதில்ஓடவிட்டது அருமை.
Please invite us for saraswathi pooja this year
சரஸ்வதி செய்யும் அந்நாளைய நிகழ்வை அழகாக நீங்கள் எழுதியது படித்ததும் எனக்கும் எங்க அப்பா சரஸ்வதி செய்யும் போது துணையாக இருந்தது நினைவுக்கு வந்தது. இப்போது எல்லாம் அவர்கள் செய்யும் அலங்காரங்களைப் பார்க்க போகவும் முடிவதில்லை. ..
- கயல்
அருமையான, இயல்பான பதிவு.
மீண்டும் சிறு வயதுக்குச் செல்லும் முயற்சியே (regression)மனிதனின் வாழ்நாள் போராட்டமெல்லம் என்றார் ஃப்ராய்டு.கலையும் அவ்வாறே
அருமை. கைப்பிடித்து அழைத்துச் சென்று (உண்மைக்)கதை சொன்னீர்கள். லயித்தேன்.
நல்லதொரு பதிவு
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html
மறுபடியும் இளமைப் பிராயத்துக்குப் போய்வந்த உணர்வு.அனுபவத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
உங்கள் வலைப்பூ வின் பெயர், திறந்து பார் என்றது.
நாறும் பூ...இந்த நாறும் எனும் சொல், ஈழத்தில் கெட்ட வாசனைகளுக்கு மாத்திரமே!
சொல்லப்படுவது!
"கற்பூரம் நாறுமோ" என்ற இலக்கியச் சொல்! இது என்பதை உணர எனக்கு வயது அதிகரித்தது.
இந்தத் தசராப் பண்டிகை ஈழத்தில் இல்லை. நவராத்திரி குறிப்பாக சரஸ்வதி பூசை உண்டு.
என் வீட்டில் கொலு வைத்ததை யான் அறியேன்.
ஆனால் சரசுவதி படத்துக்கு பூசை புணஸ்காரம் வருடா வருடமுண்டு.
தங்கள் சுவையான எழுத்து வாசிக்க வைத்தது.
Post a Comment