பொக்கிஷம்
சிறிது நாட்களுக்குமுன் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவள்ளுவர் மன்ற கூட்டத்துக்கு பேச வர இயலுமா என்று கேட்டார். நான் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். கேட்டவருக்கு நான் கோவில்பட்டியை சேர்ந்தவன் என்ற விபரம் மட்டுமே தெரிந்திருக்ககூடும்.எனக்கும் திருவள்ளுவர் மன்றத்துக்கும் உள்ள தொடர்பு அவர் தெரிந்திருக்க நியாயமில்லை.
கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த புதிதில் என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆயிர வைஸ்ய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற திருவள்ளுவர் மன்ற இலக்கிய கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்து செல்வது வழக்கம்.(இந்த பள்ளியில் தான் கரிசல் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பயின்றார்) அந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தவர்கள் , நான் படித்த ஆயிர வைஸ்ய வுயர்நிலை பள்ளி தமிழாசிரியர் புலவர் மு.படிக்கராமு அவர்களும் கோவில்பட்டி கோ.வே.நா.கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பேரா.அ. சங்கரவள்ளிநாயகம் அவர்களும். இவர்கள் இருவரையும் இணைபிரியாத இலக்கிய இரட்டையர்கள் என்று தான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு சுமார் முப்பது அல்லது நாற்பது பேர் வருவார்கள். தமிழ் இலக்கியத்தின் வளமை குறித்து பல அறிஞர்கள் பேசுவார்கள். பேரா.வளனரசு , திரு.சி.சு.மணி, பேரா.இளம்பிறை மணிமாறன் , தசாவதானி ராமையா , தமிழ்கனல் என பல அறிஞர்களின் பேச்சினை கேட்டு வளர்ந்தேன்.எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது இப்படிதான்.
ஒவ்வொரு மாதமும் தவறாது கூட்டம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும். வருட கடைசியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும்.அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்...அதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அந்த பொது மேடையில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் , அந்த ஆண்டின் பனிரெண்டு கூட்டங்களும் தவறாது கலந்து கொண்ட அன்பர்களுக்கு மு.வ.தெளிவுரை எழுதிய திருக்குறள் அன்பளிப்பாக வழங்குவார்கள். அதை எப்படியும் வாங்கிவிடனும் என்ற தீராத வேட்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். நான் எட்டாவது படிக்கும் போது இப்படி சென்று கொண்டு இருக்கும்போது கடைசி மாத கூட்டத்துக்கு போக முடியாதபடி எனக்கு காய்ச்சல்..பதினோரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் நமக்கு திருக்குறள் புத்தகம் கிடைக்காதே என்ற எனது ஆதங்கத்தை யாரிடம் சொல்லி அழ ? என் அப்பா இதை புரிந்து கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் நான் வருத்ததுடன் கலந்து கொண்டேன். பனிரெண்டு கூட்டங்களும் கலந்து கொண்ட பதிமூன்று பெயர்களை புலவர் மு.படிக்கராமு அவர்கள் வரிசையாய் வாசித்து வந்தவர் இறுதியில் பதினாலாவது பெயராக எனது பெயரை சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதை நினைக்கும் போது இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
உடல்நலம் சரி இல்லாததால் கடைசி கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிந்து இவருக்கு இந்த பரிசு அளிக்கபடுகிறது என்று அவர் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது ? பலரும் எனது பெயரை இன்று வரை தப்பும் தவறுமாய் உச்சரிக்கும்போது , எனது ஆசான் புலவர் மு.படிக்கராமு அவர்கள் என்னை " பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார். அவரிடம் நான் பயின்றது நான் பெற்ற பேறு தான். அன்று முதல் நான் தொடர்ச்சியாக எல்லா திருவள்ளுவர் மன்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்..பின்னாட்களில் நான் த.மு.எ.ச.கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இதுவே உத்வேகம் அளித்தது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட திருவள்ளுவர் மன்றத்தினர் என்னை பேச அழைத்தார்கள் என்றால் எனக்கு கசக்குமா என்ன ...
உற்சாகமாக கலந்து கொண்டு பேசினேன்..சுமார் அறுபது பேர் கலந்து கொண்டார்கள்..என்ன எனது பேராசிரியர் அய்யா சங்கரவள்ளிநாயகம் அவர்கள் இல்லை..காலமாகிவிட்டார்..அவரது மகன் முத்து இருந்தார்..படிக்கராமு அய்யா நெல்லையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்..எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன..பேருந்து ஏறும் போது நிர்வாகிகளுள் ஒருவர் எனது பையில் ஒரு கவரை திணித்தார்..என்ன என்று கேட்டேன்..பயணப்படி என்றார்..நான் மறுத்தேன். .அவர் புன்சிரிப்புடன் மறுத்து சென்று விட்டார்..அந்த கவரை எனது பொக்கிசமாய் வைத்து இருக்கணும் போல இருந்தது..
Tweet
7 comments:
செக்கச்சிவந்த "நாறும் பூ"வை இளைஞனாக பார்த்தது நினைவு தட்டுகிறது." வயதும் ஏறிவிட்டது முடியும் ஏறிவிட்டது". அது எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடுகிறது. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது---காஸ்யபன்..
\\" பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார்.//
:) நல்ல பெயர்..
- கயல்
கோவில்பட்டி வறட்சியான ஊர் தான்...ஆனால் இலக்கிய வறட்சியை ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை.திருவள்ளுவர் மன்ற நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார் இலக்கிய உரை கேட்டிருக்கிறேன்.திரு.படிக்கராமு அவர்களை அடிகளார் தலைமையில் பட்டிமன்ற பேச்சாளராக பார்த்தது நினைவுக்கு வருகிறது.விகடனில் பணியாற்றும் திருமாவேலன் அவரது மகனாக இருக்க வேண்டும். அருமையான பதிவு.!! நாறும்பூ போன்றோர் கோவில்பட்டி மா நகரின் பொக்கிஷமே....வாழ்த்துக்கள்!!
பழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும் அனுபவம் மனதை நெகிழச் செய்பவை!
திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினிவூட்டியதற்கு நன்றி, நாறுபூ!
நான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான். இப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம், இதன் நடுவே ஒரு ஹால். இதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி. இரண்டு வகுப்புகளுக் மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கும். . மரத்தடுப்புகளுக்கு நடுவே நடைபாதை. திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும்.
நான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர்.
கூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது. பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.
படிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .
திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி, நாறும்பூ!
நான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான்!
இப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம். இதன் நடுவே ஒரு ஹால். அதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி.. நடுவே பாதை! இரண்டு வகுப்புகளும் மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கும்.
திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும்.
நான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர்.
கூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் அறிவிப்பு எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது, பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.
படிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .
-அப்பணசாமி
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்துடன் நாறும்பூவின் தொடர்பு பற்றிய பதிவு அருமை! புலவர் படிக்கராமு அவர்கள் பற்றி நாறும்பூஅடிக்கடி வீட்டில் பேசுவான். பேரா சங்கரவள்ளிநாயகம்அவர்கள் சந்தைபேட்டைதேருவில் அடுத்த வீடு. தொடர்ந்து திருக்குறள்வகுப்புகளுக்கு சென்று வந்துஉடல் நலமின்மையால் ஒருகூட்டத்தை விட்ட நாறும்பூவின் ஏமாற்றத்தை ஈடு செய்த புலவர் படிக்கராமு அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். (அவரது புதல்வர் திருமாவேலன் அவர்களும் விகடனில்அருமையான வார்த்தைகளால் வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்!) ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு படித்தேன்...(ஆசையே அலை போலே பாடல் அப்போது காற்றில் மிதந்து வரும்! இரண்டாம் வகுப்பு படித்த மூன்று மாதங்களிலேயே அப்பாவுக்கு கழுகுமலைக்கு மாற்றம்.)...திருவள்ளுவர் மன்றங்களும், திருவள்ளுவர் கழகங்களும் தமிழகத்தில் பெரும்பாலும் காலம் தவறாமை, தொடர்ச்சி ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது வியப்பான உண்மை! 1968-69-புகுமுக வகுப்பில் பாடம் எடுத்தஎனதுதமிழ்ப்பேராசிரியர் பா வளன் அரசு அவர்களின் தெளிந்த கவர்ச்சியான குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! தனித்தமிழ் இயக்கம் கோலோச்சிய நாட்கள் அவை. அவரும் நெல்லை அஞ்சல் தலைவர் மணி அவர்களும் இணைந்து நடத்திய தொடர் கூட்டங்கள் பெருமை பெற்றவை!
Post a Comment