பாளையம்கோட்டைஅன்புநகர் பக்கம் செல்லும்போது எல்லாம் அந்த வீட்டின் முன் பலவிதமான இரு சக்கர வாகனங்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்தபடி செல்வேன். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டுசன் எடுக்கிறார் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.நூற்றுகணக்கான மாணவர்களும் மாணவிகளும் காலை மாலை ரெண்டு வேலையும் அங்கே சங்கமிக்கிறார்கள்.அவரிடம் படித்தால் இருநூறு மதிப்பெண்கள் உறுதியாய் எடுக்கலாம் என்ற நம்பிக்கை ...இத்தனைக்கும் அவர் வயதில் மூத்தவரும் அல்லர்.சுமார் முப்பத்து ஐய்ந்துக்குள் தான் இருக்கும். ஒரு வருடத்திற்கு சுமார் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரை ஒரு மாணவருக்கு வாங்குகிறார் என்று கேள்வி.
நான் பள்ளியில் படித்த காலத்தில் மகாதேவன் என்று ஒரு அறிவியல் ஆசிரியர் எனக்கு பாடம் எடுத்தார்.அந்த காலத்தில் வகுப்பில் குறைந்தமதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டுமே டுசன் படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வகையில் அவரும் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு டுசன் சொல்லி கொடுத்தார்.அவர் வீட்டு மாடியில் இருக்கும் அறையில் வைத்து சொல்லி தருவது வழக்கம்.அவர் அறிவியல் ஆசிரியர் என்ற போதிலும் ஆங்கில பாடமும் நடத்துவார். வகுப்பில் தெளிவாய் ஒவ்வொன்றையும் இருமுறை சொல்லி விளக்குவார். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையும் கரும்பலகையில் எழுதிபோடுவார். டுசன் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக இன்னொரு முறை விளக்குவார்.அவர் விளக்கம் கொடுக்கும் முறையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் யார் யார் எல்லாம் அவரிடம் டுசன் படிக்கிறார்கள் என்பதை.
அப்போது எல்லாம் பதினொன்றாம் வகுப்பு தான் பொது தேர்வு. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் எடுக்கும் சிரத்தை அலாதியானது.முந்தய மூன்று ஆண்டுகளின் வினாத்தாள்களை எடுத்து வைத்து கொண்டு இந்த ஆண்டு எது வர வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து அது போன்ற வினாக்களை தேர்வு செய்வார்.அதை எல்லா மாணவர்களும் திரும்ப திரும்ப போட்டு போட்டு பார்க்க வைப்பார்.இந்த விசயத்தில் பாரபட்சம் இன்றி எல்லா மாணவர்களையும் அவர் படிக்க வைப்பார். பைடு பைபர் என்ற ஒரு கதை உண்டு. அது இந்த ஆண்டு பத்து மார்க் வினாவில் வரும் என்பதை உறுதியாய் அறிந்து கொண்டு அந்த கதை சுருக்கத்தை அருமையான எளிமையான ஆங்கிலத்தில் எழுதி போட்டு அதை திரும்ப திரும்ப படிக்க வைப்பார்.
நான் ஒரு முறை எனது ஓதுவார் முடுக்கு சந்து வழியாக வந்து கொண்டு இருந்த போது எனக்கு எதிரே மகாதேவன் சார் வந்து விட்டார். "நாதன், நம்ம முருகேசன் இருந்தா அவன கொஞ்சம் வர சொல்லேன்.."என்று என்னிடம் சொல்லியவுடன் நான் எனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த முருகேசனை அழைத்து சார் கூப்பிடுவதை சொன்னேன்.நான் வெளியே கடைக்கு சென்று திரும்பும் போதும் சாக்கடை நாற்றம் அடிக்கும் அந்த குறுகிய சந்தில் அந்த காலை வேளையில் முருகேசனிடம் ஏதோ கேட்பது தெரிந்தது..கிட்ட வந்ததும் தான் தெரிந்தது அவன் அவரிடம் ஆங்கில பாடம் ஒன்றை ஒப்பித்து கொண்டு இருக்கிறான் என்பது.
"நீ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில தான் தப்பு விடுகிறாய் ..ஸ்பெல்லிங் கரெக்டா சொல்லு பார்க்கலாம் " என்று அவர் அவனை திட்டுவது தெரிந்தது.என்னை பார்த்தவுடன் அவர் லேசாக சிரித்தபடி "இன்னைக்கு காலாண்டு பரீட்சை ...இங்கிலீஷ் எக்ஸாம் ...இவன் கொஞ்சம் வீக் ..அதான் வந்தேன் " என்று சமாளித்தார்..
"சார் அவன் வீட்டில் சென்று கேளுங்களேன்..வாசலுக்கு வெளியே ஏன் கேட்கிறீர்கள் " என்றேன்.
"வேண்டாம்..வேண்டாம்..அது அவங்க வீட்ல இருப்பவங்களுக்கு தொந்தரவாக இருக்கும்..இங்க பரவா இல்லே ..சமாளிசுகறேன்." என்பார்.உண்மையான காரணம் அது அல்ல என்பது எனக்கும் தெரியும். முருகேசன் தப்பாய் ஒப்பித்தால் சட் டென்று தலையில் ஒரு போடு போடுவார். வீட்டுக்குள் என்றால் அது முடியாது.
மனுஷன் இந்த நாற்றம் எடுக்கும் சந்துக்குள் நின்று கொண்டு டுசன் படிக்கும் ஒரே காரணத்துக்காக அவன் பாஸ் ஆகிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த அதிகாலை வேளையில் வந்து நிற்கிறாரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அது மட்டும் அல்ல..மதியம் தேர்வு என்றால் காலை நேரத்தில் சிறுநீர் இடைவேளை நேரத்தில் கூட வகுப்பறைக்கு வெளியே நின்று முருகேசனையோ அல்லது மாரியப்பனையோ ஒப்பிக்க சொல்வது வழக்கம்.இத்தனைக்கும் அவர் அதற்காக வாங்கும் ரூபாய் ஐந்து தான்..
அவன் பாசாகி விட்டால் அவர் முகம் பிரகாசமாகி விடும்..அவரின் நேர்மை எனக்கு இப்போது நினைத்தால் கூட வியப்பை அளிக்கிறது..யாருக்கும் தனது இருத்தல் தொந்தரவு அளிக்க கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்..
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்தபோது வங்கிக்கு வெளியே சிகரட் குடித்தபடி நான் நின்று கொண்டு இருந்தேன்.அப்போது திடீரென்று என் முன் மகாதேவன் சார் தோன்றினார். இதை நான் சற்றும் எதிர்பார்கவில்லை..அவசரமாக சிகரெட்டை கீழே போட போனவனை அவர் சட்டென்று இடை மறித்து , " பரவா இல்ல ...நீ குடிப்பா ..நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..நான் சொல்லாம கொள்ளாம வந்து உன் முன்னால வந்து நின்னா நீ என்ன பண்ணுவ..இங்க ஒரு கல்யாண வீட்டுக்கு வந்தேன்..நீ பாங்க்ல ஆபீசர் ஆயிட்டியா..?" என்றாரே பார்க்கலாம்..
எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது.வாத்தியார் முன்னால சிகரட் குடித்து விட்டோமே என்று.அன்றே விட்டு தொலைத்து இருக்கலாம்..பை பாஸ் அறுவை சிகிச்சையையும் தவிர்த்து இருக்கலாம்..
மகாதேவன் என்ற அந்த ஆசிரியர் , முருகேசன் என்ற மாணவனுக்கு டுசன் ஆசிரியர் என்று எந்த வகையில் பார்த்தாலும் அவரின் பண்பு எனக்கு இன்னும் பிரமிப்பு ஊட்டுகிறது..
2 comments:
இன்றும்கூட அந்தமாதிரி ஆசிரியர் எதாவது ஒரு மூலையில் 'நல்லாசிரியர்' பட்டம் பெறாமலேயே 'நல்லசஈரியராக' இருப்பார். நிச்சயமாக!
உமா மகேஸ்வரன்
Teachers those days never never entered the profession for the meager pay they got - their work was with devotion .
Post a Comment