Saturday, June 9, 2012

நான் ஏன் எழுதுகிறேன்

 
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னால் சட்டென்று பதில் சொல்ல
முடியவில்லை..என்னவாய் இருக்கும் என்றும் யூகிக்க முடியவில்லை.சின்ன
வயசில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் விளையாட்டு பீரிடில் நொண்டி சாக்கு
சொல்லிக்கொண்டு மரத்தடி நிழலில் உட்கார்ந்து நோட்டு புத்தகத்தில்
எதையாவது படம் வரைந்து கொண்டு இருப்பேன்..என்னோடு உட்காரும் முருகேசன்
என்ற மாணவன் அவனுடைய நோட்டில் என்னை மாதிரியே பட கதை வரைந்து கதை போல
கொண்டு செல்வான்..இத்தனைக்கும் அவன் என்னை விட சுமாராகத்தான் படம்
வரைவது உண்டு..முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களின் பாதிப்பு தான்
அது..என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாரதி "ஏல..நீயும் முருகேசன
மாதிரி படக்கதை வரை " என்பான்.நானும் உற்சாகமாக படம் வரைந்து ஹீரோ
எங்கெங்கோ பறந்து போய் எதை எதையோ கொண்டு வந்து சாகசம் செய்வது போல கதையை
நகர்த்தி செல்வேன்..என் அருகிலும் பல நண்பர்கள் அமர்ந்து என்னுடைய
படக்கதையை படிப்பதில் ஆர்வம் கொண்டார்கள். என்னுடைய முதல் படைப்பு என்பது
அது தான்..இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முருகேசனுக்கு என் மேல்
எந்த பொறாமையும் இல்லாமல் அவனும் என் கதையை வாசிப்பதில் ஆர்வம்
கொண்டிருந்தான் என்பது தான்..சில இடங்களில் சில திருத்தங்கள்
சொல்வான்..அவனை போல நாமும் வரைய வேண்டும் அல்லது எழுத வேண்டும் என்பது
தான் எனது லட்சியமாக இருந்தது..

விளையாட்டு நேரத்தில் கட் அடித்து விட்டு என் அருகில் உட்கார்ந்து கதை
படிக்கும் நண்பர்களின் எண்ணிக்கை வுயர்ந்து கொண்டே போனது..அது ஒரு வகையான
போதை மாதிரி தொத்தி கொண்டது..இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கே
புரிகிறது..உண்மையில் சொல்லபோனால் ஓவியம் தான் எனக்கான தளம் என்று
நினைத்தேன்..

கல்லூரியில் படிக்கும்போது உதயசங்கர், சாரதி, முத்துசாமி போன்ற
நண்பர்களோடு சேர்ந்து மொட்டுக்கள் என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தும்
போது கூட என்னுடைய ஓவியமும் கையெழுத்தும் கைகொடுத்தன..உதயசங்கர்
கவிதையும் கட்டுரையும் எழுதினான்.படித்து பார்த்த கவிஞர் தேவதச்சன் "இந்த
மூவரில் ஒருவன் தேறுவான் " என்று குறிப்பிட்டது இன்னமும் நினைவில்
உள்ளது. அது உதயசங்கரின் கவிதைகளை படித்து பார்த்து சொன்னதாக நினைவு..
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.எங்கள் எவருக்கும் உதயசங்கரை
பார்த்து எவ்வித பொறாமையும் ஏற்பட்டது இல்லை..ஒரு படைப்பாளியாக எங்களில்
ஒருவரை அவர் ஏற்று கொண்டாரே என்ற சந்தோஷம் தான் தோன்றியது..

துரதிர்ஷ்டம் என்னவெனில் , அதன் பிறகு நான் ஓவியத்தை விட்டு
விட்டேன்..உதயசங்கரும் கவிதையை விடவும் கதை எழுதுவதில் ஆர்வத்தை
காட்டினான்..(நாலைந்து கவிதை தொகுப்பு போட்டிருக்கிறான் என்பது வேறு
விஷயம் ).
தொடர்ச்சியாய் நூலகத்தில் வாசித்ததின் தாக்கம்..செம்மலர், தாமரை,
கண்ணதாசன் போன்ற இதழ்களை படித்து வந்ததின் விளைவாய் நாமும் ஏன் கதை எழுதி
பார்க்க கூடாது என்ற தீராத ஆசை பெருங்கனவாய் மனசில் உருவாகி தொழில் என்ற
சிறுகதையை முதலில் எழுதினேன். ஒரு சிலர் அதை வெகுவாய் பாராட்ட விட்டாலும்
"தொடர்ந்து எழுத்து..உனக்கு கதை வரும் " என்று சொன்னது கூட காரணமாக
இருக்கும்..

ஆனால் தொடர்ந்து எழுதாமல் போனது தான் என்னுடைய துரதிர்ஷ்டம்..!

1 comment:

J.P Josephine Baba said...

எழுதி பதிவிட்ட கதைகள் மிகவும் அருமை!