Friday, December 7, 2012

பெண்கள் "பேப்பர்' படிக்கிறார்களா... By ஆ. சிவகாமசுந்தரி First Published : 24 November 2012 01:33 AM IST

First Published : 24 November 2012 01:33 AM IST
நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும். அப்படியே படித்தாலும் என்ன மாதிரி செய்திகளை, எப்படிப் படிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் அது பல ருசிகரமான தகவல்களைத் தரக்கூடும்.
என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. சிலர், "தலைப்பு'ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் விடுமுறை நாள்களில் மட்டும் படிப்பதுண்டு. இன்னும் சிலர் மத்திய, மாநில அரசுகளின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை மட்டும் தவறாது படிக்கின்றனர்!
அலுவலகப் பெண்கள், தாம் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதும் இருந்து கணவர் ஞாபகப்படுத்தினால் அந்த நேரம் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன் பிரித்துப் பார்கின்றனர்.
சிலர் ஜோதிடப் பலன்களைப் பார்க்க ஆர்வம் செலுத்துவது உண்டு. பொதுவாய் ஜோதிடப் பலன்களில் பெண்களுக்கு என்று ஒரு வரி மட்டுமே பலன் போட்டிருப்பார்கள்; மீதியெல்லாம் ஆண்களுக்கானவை போலும்!
பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல், வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க முடியாமல் போகிறது.
நமது நாட்டில் அரசியலே ""ஆண்களுக்கு மட்டும்'' என்பது போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது. ஒரு சில பெண் முதல்வர்கள், சில பெண் எம்.பிக்கள், சில எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.
நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது பெண்களுக்கு வரவேண்டுமே!
அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜரிவால், 2ஜி ஸ்பெக்ட்ரம், வதேரா, கூடங்குளம்  அணுஉலை உதயகுமார் என்று அன்றாடம் அடிபடும் பெயர்களை முழுமையாகப் படிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு இளம்பெண் அவளது திருமணம் நடந்ததையொட்டி அரசு அளித்த உதவித்தொகை அடங்கிய கடித உறையை வைத்திருந்தாள். அதில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம்' என்று அச்சிட்டிருந்தது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டில் எத்தனை பெண்களுக்குத் தெரியும்? ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் பெண் தலைவராக இருக்கும் என்றே பலர் நினைக்கக்கூடும்.
இதுபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, கேப்டன் லட்சுமி ஷெகல், தில்லையாடி வள்ளியம்மை என எத்தனையோ வீரப் பெண்களின் வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும்பட்சத்தில் இவர்களைப் பற்றி அவ்வப்போது வரும் செய்திகளைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
 பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் அதே நேரத்தில், நாட்டின் அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் போக்கு பெண்கள் மத்தியில் உருவாக வேண்டும். அது இல்லாமல் இருப்பதால்தான் ஆண்கள் தொகுதியை பெண்களுக்கான தொகுதியாக மாற்றும்போது, கணவன்மார்கள் லாலு பிரசாத் பாணியில், தங்களது மனைவிமார்களைப் போட்டியிட வைத்து, வெற்றிக்குப்பின் தங்களது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர்.
 கூடங்குளத்தில் அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் தினமும் ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஏராளமான பெண்கள் தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். பிற பகுதிகளில் உள்ள பெண்கள் இது குறித்து யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இது பற்றிய செய்திகளையாவது படிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
அணுப்பிளவு குறித்து ஆராய்ச்சி செய்து, அணுப்பிளவின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்திய முதல் விஞ்ஞானி மேடம் கியூரி என்ற பெண்மணி. பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஆண் விஞ்ஞானிகளுக்குப் பக்கபலமாக இருந்து குறிப்புகள் எடுத்துக் கொடுத்ததும் அவர்தம் மனைவிமார்களாக இருந்த பெண் விஞ்ஞானிகளே என்பதும் வரலாற்று உண்மைகளே.
அரசியல், விஞ்ஞானம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவது வரவேற்கத்தக்க விஷயமே எனினும் அவர்கள் பெண்கள் என்பதாலேயே எல்லாவற்றையும் வரவேற்றுவிட முடியாது. சமூகம் சார்ந்த மதிப்பீடுகளுக்கான அளவுகோல் அவர்களுக்கும் பொருந்தும். அந்த அளவுகோலில் வெற்றிபெற்ற பெண்களே சரித்திரத்தில் இடம்பிடிப்பர். இந்த உண்மையை அறிந்து கொள்ள தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். ஆம், பெண்கள் தொடர்ச்சியாக செய்தித்தாளை வாசித்தால் மட்டுமே இது சாத்தியம்.

கருத்துகள்(3)

பெண்களுக்கு நமது நாட்டு அரசியல் போக்கு பற்றிய விழிப்புனர்வவது கண்டிப்பாக வேண்டும்..,அதற்க்கு வுடகங்கள் மட்டுமே துணை புரியும் என்பதே உண்மை..,
பெண்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் இர்ருப்பதால்தான் அவர்களின் கணவர்கள் அவர்களுக்கு பதிலாக பெரும்பான்மையான பெண்கள் பிரச்சினைகளுக்கு நம் நாட்டில் சரியான தீர்வு காணபடாமல் இருக்கின்றது
பெண்கள் பேப்பர் படிக்கிறார்களா....... சிந்திக்க வைக்கும் தலைப்பு. எல்லா வீடுகளிலும் பேப்பர் வாங்கபடுவதில்லை, என்பதே அதிர்ச்சியான விஷயம். டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர். அவரை கல்லூரியில் சேர்த்தால் ஆண்கள் கவனம் சிதறும் என்று சொன்னதும். பிரிட்டிஷ் அதிகாரி கவனம் சிதறுபவர்கள் படிப்பை நிறுத்தி கொள்ளட்டும், அந்த ஒரு பெண் டாக்டர் ஆனால் போதும் என உறுதியாக நின்றதால் அவர் மருத்துவர் ஆனார். சமிபத்தில் இறந்த கேப்டன் லட்சுமி ஷெகல் வீரமிக்க வரலாறு பெண்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இன்று மாறிவிட்ட சூழ்நிலையில் பெண்களுக்கு சமூக அக்கறை வேண்டுமானால் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை எழுதிய சகோதரியை பாராட்டுகிறேன். பெண்களும் ஆன்மிகம் மற்றும் ஜோதிட செய்திகளை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் படிக்க வேண்டும்.
(Press Ctrl+g or click this 
 to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க

*
1000 ஏதாவதொன்று
reCAPTCHA சேலஞ்ச் படம்

புதிய சேலஞ்சைப் பெறுக
ஆடியோ சேலஞ்சைப் பெறுகபார்வை சேலஞ்சைப் பெறுக
உதவி
வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

1 comment:

vimalanperali said...

பெண்களின் பங்கேற்பு எதிலுமே முக்கிய என வலியுறுத்திச்செல்கிற கட்டுரை,நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.