நான் நைனா வை முதன்முதலில் பார்த்தது ஜோதிபாசு சலூனில் தான்.என் அண்ணன் ஆர்.எஸ்.மணியுடன் பஜாருக்கு சென்றிருந்த போது தேவப்ரகாஷ் அண்ணன், பால்வண்ணம்,ஜவஹர் வாத்தியார் இன்னும் பெயர் தெரியாத சில "தோழர்களோடு" சங்கரப்ப நைனா பேசிகொண்டிருந்த காட்சி இன்னமும் மனதில் பதிந்து கிடக்கிறது. நான் எஸ்.எஸ்.எல். சி. படித்துகொண்டிருந்த நேரம்.அவசரநிலை அமுலில் இருந்தது. புதிதாய் தைத்த எனது பேன்ட்,சட்டையை அருகில் இருந்த வீனஸ் தையல் கடையில் வாங்குவதற்காக நான் காத்திருந்தேன்.இருபது நிமிடம் ஆகும் என்றதால் எனது அண்ணன் சைக்கிளை பிடித்தபடி நின்றிருந்தேன்.
தேவப்ரகாஷ் அண்ணன் சத்தமாய் சிரித்து பேசினாலும் சங்கரப்ப நைனா மென்மையாய் சிரிப்பை உதிர்த்தவாறு தலையை பெரிதாய் ஆட்டிகொண்டிருந்தார். அதுதான் அவரது சுபாவம்.வெள்ளை கதர் சட்டையும் வேட்டியும் ஒரு சிலருக்கு மட்டுமே வசீகரத்தை கொடுக்கும். நைனாவிற்கு அந்த வசீகரம் உண்டு.கையில் எப்போதும் வைத்திருக்கும் தீக்கதிர் பேப்பரையோ செம்மலரையோ மடங்கிய நிலையில் பிடித்து கொண்டு கையை நீட்டி பேசும் நைனா தீக்கதிர் நாளிதழின் ஏஜென்ட் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.நைனா கோவில்பட்டி நகரில் இருந்த லக்ஷ்மி மில்லில் பஞ்சாலை தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்பதையும் காலபோக்கில் தெரிந்து கொண்டேன்.
தேவப்ரகாஷ் அண்ணனுக்கு ஈடுகொடுத்து சிரிப்பதில் வல்லவர் சக்தி பயில்வான். அவர் அடிப்படையில் ஒரு தையல் தொழிலாளி.ஜோதிபாசு சலூனில் இருந்து ஐந்தாறு கடை தள்ளி அவரது கடை இருந்தது.அவரது கடையில் உள்ள தையல் மிசினில் யாரோ ஒருவர் தைத்து கொண்டிருப்பார்.இன்னொருவர் காசா போட்டுகொண்டு இருப்பார்.ஒரு நாள் கூட சக்தி பயில்வான் மிசினில் உட்கார்ந்து பார்த்தது இல்லை.நோடிசும் கையுமாக தான் இருப்பார்.ஆர்ப்பாட்டம், மறியல் என்றால் அவர் முன்னால் நிற்பார்.மே தினம் என்றாலே அவர் நினைவு வந்து விடும். அவரது உடல்பயிற்சி கழக நண்பர்களின் சிலம்பாட்டம் ,தீப்பந்த விளையாட்டு என சாகச நிகழ்ச்சிகள் பார்த்து மெய்சிலிர்த்தது உண்டு. சக்தி பயில்வானிடம் பேசிகொண்டிருக்கும் போது தோழர் லக்ஷ்மனபெருமாள் ஒருமுறை சொன்னார்." உம்ம கிட்ட பேசிட்டு இருந்ததுல முக்யமானத மறந்துட்டேன்..பையன் சட்டைய வீனஸ் டேய்லர் ல வாங்க நினைச்சேன்..கடையை பூட்டிட்டு போய்ட்டானே..."
"ஏன் எங்க கிட்டே சட்டையெல்லாம் தைக்க மாட்டிகளோ " சக்தி தான் கேட்டார்.
"வேய்..உம்மகிட்டே அண்ட்ராயர் வேண்ணா தைக்கலாம்..சட்டையெல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுக்க முடியுமா "
லக்ஷ்மனபெருமாள் சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தார்.
தோழர் சக்தி சிரித்து கொண்டார்.அது உண்மைதான்.அவரிடம் சட்டை தைக்க கொடுத்து தீபாவளிக்கு சட்டை வாங்கி போட்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ..மறியலில் கைதாகி சிறை சென்றால் எப்போது வருவாரோ?
ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் வீட்டில் இருந்து தேங்காய் சில்லு வாங்க வெளியே வரும் போது சங்கரப்ப நைனா அவரது பழைய சைக்கிளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தார்." அண்ணன் இருக்குதா " என்று என்னைபார்த்து கேட்டார். "தூங்கறாங்க " என்றேன்.
"தோழரை கொஞ்சம் வர சொல்ல முடியுமா ?" தயக்கத்துடன் கேட்டார்.
நான் அண்ணனை எழுப்பினேன்.சட்டயைபோட்ட்படி வெளியே வந்தான் அவன்.இருவரும் ஏதோ பேசினார்கள்.அண்ணன் சட்டைப்பையில் இருந்து ஐந்தும் பத்துமாக ரூபாய் நோட்டுகளை எடுத்துகொடுத்தான். தீக்கதிர் பேப்பர் ரூபாயாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.அப்பா வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தார். அண்ணன் வாங்கும் தீக்கதிர் பேப்பரை அப்பா வாசித்து ஒருநாளும் பார்த்தது இல்லை. தினமணி பேப்பர் வராவிட்டால் மட்டும் இந்த பேப்பரை லேசாக பட்டும் படாமலும் புரட்டி பார்ப்பார்." எங்க பொரட்டுனாலும் போராட்ட செய்தியா தான் இருக்கும் "என்பார். நானும் அக்காவும் அன்னக்கிளி சினிமா விமர்சனம் என்ன போட்ருக்கான் என்று தீக்கதிர் பேப்பரை புரட்டுவோம்.
நைனா இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேலையில் அண்ணனை சந்தித்து ரூபாய் வாங்கி செல்வது வாடிக்கையாய் இருந்தது.மனுஷன் கடன் வாங்குதாரோ என்று எண்ணினேன்.ஒரு முறை சைக்கிளில் அவர் பின்னாலேயே சென்று பார்த்தேன்.பால்வண்ணம் வீட்டிற்கு சென்றார்.அவரிடமும் பேசி கொஞ்சம் ரூபாய் வாங்குவது பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.அங்கிருந்து கோவில் மேட்டு பக்கம் இருந்த விஸ்வகர்மா பள்ளி அருகே சென்றார்.தனது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த ஜவகர் வாத்தியாரிடம் போவது தெரிந்தது.அவரும் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து சொல்லி வைத்தாற்போன்று ரூபாய் நோட்டுகளை கொடுப்பது பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றேன். என்ன இதெல்லாம் ? மண்டை குடைந்தது.
ஒருமுறை பள்ளி நண்பன் உதயசங்கர் வீட்டிற்கு ஏதோ நோட்டு வாங்க சென்றவன் எனக்கு முன்னால் சங்கரப்ப நைனா தனது ஓட்டை சைக்கிளில் தகர சத்தம் முழங்க மெதுவாய் அழுத்தி சென்று கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் சைக்கிள் சக்தி பயில்வான் வீட்டுமுன் நின்றது.அவரது சைக்கிள் ஹான்ட் பாரில் இருந்து ஒரு பெரிய துணி பையை எடுத்தபடி உள்ளே சென்றார்.அவரது மனைவி வரண்டா பக்கம் வந்த போது "இதுல அரிசி, காய்கறி இருக்கு..ரெண்டு நாளைக்கு சமாளிச்சுக்க ."என்று சொல்லியபடி ஒரு சிறிய பையை எடுத்து கொடுத்தார்.அப்போது சக்தி பயில்வான் சிறையில் இருந்தார்.ஒரு மௌனத்துடன் அந்த பையை பெற்றுக்கொண்ட அந்த அம்மா அதே வேகத்துடன் மெதுவாய் சைக்கிளில் அழுத்தும் நைனா வை ஒரு பெருமூச்சுடன் பார்த்துகொண்டிருந்தார்.தனது முந்தானையால் கண்களை துடைத்து கொள்வது தெரிந்தது.
நைனா இப்போது மெயின் பஜார் தாண்டி கடலையூர் ரோட்டிற்கு பக்கவாட்டில் இருந்த சந்தில் நுழைந்து பச்சை பெயிண்ட் அடித்த வீட்டின் முன் நின்றார்.தோழர் ராமசுப்பு அவர்களின் வீடு அது.
"தங்கச்சி .."என்று குரல் கொடுத்தார்.
"யாரு அண்ணாச்சியா .."என்று குரல் கொடுத்தபடி வந்த அந்த அம்மாவின் கையில் அரிசி, காய்கறி அடங்கிய மஞ்சள் பையை கொடுத்தார் நைனா.
"ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போங்களேன் .."பையை வாங்கி கொண்ட அந்த அம்மாவின் வேண்டுகோளுக்காக வீட்டு திண்ணையில் அமர்ந்தார் நைனா.
அவரது பயணம் தொடர்ந்தது.புது கிராமம் பகுதியில் இருந்த இன்னொரு தோழர் வீட்டை பார்த்து அவரது ஓட்டை சைக்கிள் திரும்பியது.எனக்கு இப்போது விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டது.எல்லா தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள்..எமெர்ஜென்சியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் தோழர்களும் கணிசமானவர்கள் சிறையில்.கோழி திருடினேன் ஆடு திருடினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கோரினால் விடுதலை செய்யபட்டார்கள்.அப்படி வெளியே வந்த திராவிட இயக்கத்தினர் ஏராளம்.."இன்குலாப் ஜிந்தாபாத் " முழக்கமிட்டபடி ஆவேசமாய் கர்ஜித்து சென்ற சக்தி, ராமசுப்பு போன்ற செங்கொடி தோழர்கள் எவருக்கும் மண்டியிடாது சிறையில் நாட்களை கழித்தார்கள்.சிறைக்கு வெளியே அவர்கள் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு வழிஇன்றி வாடி விடக்கூடாதே என்று சங்கரப்ப நைனா மத்திய தர வர்க்க தோழர்கள் பால்வண்ணம்,ஆர்.எஸ்.மணி, ஜவகர்,கோபால்சாமி போன்ற தோழர்களிடம் ரூபாய் வசூலித்து அவர்களது குடும்பத்தை கண்ணின் மணி போல காத்து வந்தார்.ஒவ்வொரு நாள் காலையிலும் தனது ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது சகாக்களின் குடும்பத்திற்கு அரிசியும் காய்கறியும் வாங்கி கொடுத்து சென்று கொண்டிருந்த நைனா வின் கால்கள் சற்றும் ஓய்வு எடுக்கவில்லை.எமெர்ஜென்சி நீடித்த ஒரு வருட காலத்திலும் அவரது சைக்கிளின் தகர சத்தம் கோவில்பட்டி நகரின் புழுதி படிந்த வீதிகளில் கேட்டுக்கொண்டு தான் இருந்தது.
சங்கரப்ப நைனா என்ற மனிதர் வெறும் தீக்கதிர் ஏஜென்டா ? சிறைபட்டிருக்கும் தோழர்கள் குடும்பத்தினர் , இயக்கத்தை ஒரு பொழுதும் பழித்து பேசிவிடக்கூடாதுஎன்று இவர் ஏன் துடித்தார் ? சிறைக்கு வெளியே இருந்தாலும் தினமும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் ஏன் கடந்தார் ..ஏன் உழன்றார் ?கோழி திருடியதாக ஒப்புக்கொண்டால் விடுதலை செய்யபடுவோம் என்று தெரிந்தும் ஏன் லட்சிய வேட்கையோடு சக்தியும், ராமசுப்புவும், வள்ளிநாயகமும் சிறைக்குள்ளே இருந்தார்கள்.?தங்களது குடும்பம் வாடுமே என்ற கவலை ஏன் அவர்களுக்கு ஏற்படவில்லை ?
ஒரு வருஷம் நீடித்த எமெர்ஜென்சி இன்னும் பல வருஷம் நீடித்து இருக்க வாய்ப்புண்டு.அதைப்பற்றி சிறிதும் கவலைபடாமல் கொள்கைக்காக இவர்கள் ஏன் சிறைபட்டிருந்தர்கள்.?
இவர்கள் ஜெர்மனிய நாட்டின் தத்துவ மேதைகள் மார்க்ஸ் எங்கல்சின் மூலதன நூலை கரைத்து குடித்த அறிவுஜீவிகளா?அல்லது மார்க்சிய சித்தாந்தத்தின் மூலக்கூறுகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்ட மேதைகளா ?
எதுவும் இல்லை..எது இவர்களுக்கு சக மனிதனின் துயரத்தை பரிவுடன் பார்க்க வைத்தது?எது இவர்களுக்கு ஏழ்மையிலும் சமரசமற்ற போராட்டத்தை நிகழ்த்த கற்று கொடுத்தது?
சித்தாந்தத்தை அறிவார்ந்த முறையில் கற்றுணர்ந்து தெளிவு பெற்று ஏற்றுகொள்வது ஒருவகை..
சங்கரப்ப நைனாவின் வாழ்க்கை நெறிகளையும் சக்தி பயில்வானின் லட்சிய நோக்கினையும் பார்த்து உணர்வு பூர்வமாக சித்தாந்தத்தை ஏற்றுகொள்வது இன்னொருவகை..
ஒரு மாபெரும் தத்துவத்தின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய சங்கரப்ப நைனாவை நினைக்கும்போது நெஞ்சு பெருமிதத்தில் விம்முகிறது ...
2 comments:
நாறும் பூ அவர்களே! எத்தனை எத்தனை சங்கரப்ப நாயினாக்கள்! ---அருமையான மனதை நெகிழச்செய்யும் பதிவு---காஸ்யபன்
நாறும்பூ எழுதியிலேயே மிகவும் சிறந்த, கச்சிதமான எழுத்து இதுதான். அவரது வாஞ்சையான ஸ்பரிசம் திடீரென என் முதுகில் படர்ந்து சிலிர்க்க வைக்கிறது. - அப்ஸ்
Post a Comment