Sunday, July 8, 2012

இது வாழ்க்கையோடு இணைந்த கல்வி...ஆ. சிவகாமசுந்தரி First Published : 07 Jul 2012 12:57:15 AM IST


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானபோது 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்த மாணவரைப் பார்த்துத் தமிழகமே வியந்தது. தமிழில் கூடவா 100 மதிப்பெண்கள் என்றெல்லாம் ஆங்காங்கே குரல்கள் எழும்பின. ஓர் ஆசிரியை என்ற வகையில் நான் உள்ளபடியே சந்தோஷமும், பெருமிதமும் அடைகிறேன். சமச்சீர் கல்வி என்ன பாடுபடுத்தப்போகிறதோ என்று பயந்த மாணவர்கள், பெற்றோர்கள், இப்போது அதன் மகத்தான வெற்றியைக் கண்டு அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். வாழ்க்கையோடு ஒன்றிய கல்வித்திட்டமாய் அமைந்து போனதுதான் அதன் ரகசியம் என்பேன்.

உதாரணத்திற்கு, கடந்த காலங்களில் சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்று அறிவியலில் கேள்வி கேட்பார்கள். தற்போதைய புதிய கல்வித் திட்டத்தில் கேட்கப்படும் வினாத்தாளிலேயே சிறுநீரகத்தின் படத்தை வரைந்திருப்பார்கள். படம் பார்த்து, விடைத்தாளில் சிறுநீரகத்தின் படத்தை வரைந்து ஏதேனும் 2 பாகங்களைக் குறிப்பிடவும் என்று கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கு எளிதாக உள்ளது. ஒரு சிறுநீரக உறுப்பின் பாகங்கள் இன்னென்ன என்று அவன் அறிந்துகொள்ள இதுவே சிறந்த உத்தி எனலாம். சிறுநீரகம் எவ்வாறு இருக்கும் என்பதை அவன் மனப்பாடமாக அறிந்திருக்கவோ அல்லது நன்றாக ஓவியம் வரையத் தெரிந்த வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை மருத்துவப் படிப்பில் விருப்பம் உள்ளவராக இருந்தால், அவன் கல்லூரியில் அது குறித்து விரிவாய்ப் படித்துக்கொள்ளலாம்.


அதேபோல, "உனது தோழி சுகன்யாவிற்கு சளி பிடித்துள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவாய்?' என்று ஒரு கேள்வி வருகிறது. இது மாணவ மாணவியர் இயல்பாய் பதில் சொல்ல வழி சொல்கிறது. அவள் தும்முவதைப் பார்த்து, அவள் குரலில் ஏற்படும் மாற்றம், கண்களில் சிவப்பு நிறம், சமயங்களில் காய்ச்சல் என காரணங்களை அவர்களால் இயல்பாய் எழுத முடிகிறது. இதுபோலவே கொசு கடித்தால் என்ன நோய்கள் வரலாம்? உடல் பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகள் உயிரியல் பாட சம்பந்தமான கேள்விகளாகக் கேட்கப்படும்போது, மாணவர்கள் சாதாரணமாய் டெங்கு, மலேரியா என்றும், நடைப்பயிற்சி என்றும் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்கள். ஆர்வமாய் விடை எழுதுகிறார்கள். 15 வயது அனுபவங்களின் வெளிப்பாடாக, ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் சட் சட்டென்று எளிதாக வெளிப்படுத்த முடிகிறது.

தமிழ்ப் பாடத்தைப் பொருத்தவரையில் வகுப்பறைத் திறன் வளர்த்தல், வாழ்க்கைத் திறன் அறிதல், தயக்கமின்றித் தமிழ் பேசுவோம் எனப் பல சுவையான பகுதிகள் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பின்னூட்டமாக அமைந்துள்ளன. உதாரணத்துக்கு... ""டாடி வர்ர சண்டே எனக்கு பர்த்டே. பட், நீங்க இன்னும் எனக்கு பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே, வொய் டாடி? என்னோட பிரெண்ட்ûஸயெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி கால் பண்ணியிருக்கிறேன்'' ""சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ் டேஸ் இருக்குதே, டோண்ட் வொர்ரி. டுமாரோ ஈவினிங் ஷாப்பிங் போகலாம். இப்ப உனக்கு ஹேப்பி தானே?'' தந்தைக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைப் படித்தீர்களா? இப்படிப் பேசினால் தமிழுக்கும் பெருமையில்லை. ஆங்கிலத்திற்கும் சிறப்பில்லை. தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம். மேற்காணும் உரையாடலில் பயன்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பேசிப் பழகுக.

இதுபோன்ற பகுதிகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் பேசும் சொற்றொடர்களில் எவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்பதும் புரிபடும். ஒன்று முழுவதுமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது தமிழில் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டிலேதானே இருக்கிறோம். ஏன் தமிழிலேயே பேசக்கூடாது என்ற தெளிவு பிறக்கவும் வழி செய்யும்.

துணைப்பாட நூலில் ஒரு சிறுகதை. "மெல்ல மெல்ல மற' என்ற இக்கதையில் தினமும் சிகரெட் புகைக்கும் ஒருவன், சிகரெட்டால் இறந்து போகும் தனது நண்பனின் மரணத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பு, அந்தப் போதையிலிருந்து விடுபட நினைத்து மனைவியிடம் கூறுகிறான். ""இனிமேல் இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா விட முயற்சி செய்கிறேன். எனது கவனத்தைப் புத்தகம் படிப்பதில், குழந்தைகளுடன் விளையாடுவதில், தோட்ட வேலை பார்ப்பதில் திருப்புகிறேன்''. கதை இயல்பாய் முடிகிறது. தன் வீட்டிலும் அப்பா புகைபிடித்துக் கொண்டிருப்பதால் இப்படி மனம் மாற வாய்ப்பு உள்ளதே என்று ஒரு பத்தாம் வகுப்பு மாணவி யோசிக்க இடம் கொடுக்கும் சிறுகதை. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

என்னதான் கல்லூரியில் உயர்படிப்பு படித்தாலும், ரயில்வே முன்பதிவு இருக்கை படிவத்தை நிரப்பவோ, வங்கியில் சென்று பணம் செலுத்தும் பாரத்தை நிரப்பவோ பலருக்கும் முடியாத காரியமாய் அல்லது திணற வைக்கும் விஷயமாகவே உள்ளது. இங்கே பத்தாம் வகுப்பு மாணவன் அதிலே தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, அஞ்சலக மணியார்டர் படிவம், வங்கிப் பணம் செலுத்தும் படிவம், ரயில்வே முன்பதிவுப் படிவம் எனப் பலவகை படிவங்களை நிரப்பக் கற்றுத் தரப்படுகிறது. வினாத்தாள்களோடு இப் படிவங்களும் அளிக்கப்பட்டு, அவை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எதிர்பார்ப்பிற்கு மாறாக, மாணவ, மாணவியர் இதைக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பதே உண்மை.

காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் வரலாறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. முதன் முறையாக அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய அருமையான வரலாறு பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. படித்த பலரும் அறிந்திராத இந்த சமூக சீர்திருத்தவாதி "ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தவர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர். மாணவ, மாணவியர் பள்ளிப்படிப்பு முடிந்ததும், என்ன உயர்கல்வி கற்கலாம், எத்தகைய வேலைவாய்ப்புகள் பெறலாம் என்பது குறித்த ஒரு பாடமும் உள்ளது. மதிப்பெண் சார்ந்த கல்வி முறைகளைத் தாண்டி தனது தகுதிக்கேற்ற படிப்பு எது? தனக்கு விருப்பமான கல்வி எது என்பதை அவர்களாகவே உணர்ந்து அவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் முடிவு எடுக்க வழிவகை செய்கிறது. நூலகம் குறித்த பாடத்தின் முடிவில், செயல்திட்டம் ஒன்றைத் திட்டமிடுக என்று கூறி மாணவர்களோடு இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்க முயற்சி செய்க என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இத்தகைய கையெழுத்து இதழ்கள் நடத்திய மாணவர்களில் பலர், தற்போது எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத செய்தி.

அந்த வகையில் சமூகத்தில் ஓர் இனிய பண்பாட்டு மாற்றத்தை இந்த சமச்சீர் கல்வி உருவாக்கும் என்பதே எனது கருத்து. ஓர் ஆசிரியை என்ற முறையில் மீண்டும் நான் சந்தோஷமும், பெருமிதமும் அடைகின்றேன்.
(என்னுடைய துணைவியார் தினமணியில் எழுதிய கட்டுரை இது ...)

3 comments:

kashyapan said...

நாறும் பூ அவர்களே! மிகச்சிறப்பான கட்டுரையை தோழர் சிவகாம சுந்தரி அவர்கள் எழுதி உள்ளார்கள்! வாழ்த்துக்கள்! சமச்சீர் கல்விக்கான பாடதிட்டங்களை ,பாடங்களை உருவாக்கிய கல்வியாளர்களை பாராட்ட வேண்டும்.தோழர் பிரின்ஸ் கஜெந்திர பாபுவுக்கு வாழ்த்துக்கள்.---காஸ்யபன்

மின் வாசகம் said...

மிகவும் அருமையானதொரு கட்டுரை ... ! கல்விக் குறித்த தகவல்கள் பல அறிந்துக் கொண்டேன்

Unknown said...

அன்பு நாறும்பூ! எனது முகநூல் பக்கத்தினைப் புரட்டும் பொழுது, தொடர் கண்ணியாக உங்களது வலைப்பூவினை அடைந்தேன். எப்பொழுதுமே எனக்கு ஒரு தீர்மானமானக் கருத்து உண்டு. மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வு உடையவர்கள் மட்டுமே அனுமதிக்க படவேண்டும் என்பதுதான் அது. அந்த வகையிலே அர்ப்பணிப்பு உணர்வு உடைய ஒரு ஆசிரியயை உங்கள் துணைவியாரின் கட்டுரை இனம் காட்டுகிறது. அருமையான ஒரு கட்டுரை. வாழ்க, வளர்க அவர்களது பணி.