Sunday, September 13, 2020

பதியமிட்ட மனிதர்கள் -1 ------------------------------------ சங்கரனை உங்களுக்கு தெரியுமா ? தெரியாவிட்டாலும் பரவாயில்லை...உங்கள் ஊரிலும் நிச்சயம் ஒரு சங்கரன் இருப்பார். என்ன..என்னோட சங்கரன் எம்.ஜி.ஆர்.ரசிகர் என்றால், உங்கள் ஊர் சங்கரன் , கணேசன் ரசிகராய் இருப்பார். அவ்வளவுதான்...! எங்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி மூணு ஓட்டு சாய்ப்பு வீடுகள் உண்டு. அதில் முதல் வீட்டில் தான் சங்கரன் இருந்தார். ஒண்டிக்கட்டை. அவர் நடக்கையில் " சரக்..சரக்.." என்று செருப்பை தேய்த்து தேய்த்து தான் நடந்து வருவார். சந்துக்குள் நுழையும்போதே செருப்பு சத்தத்தில் தெரிந்து கொள்ளலாம். கல்யாணம் மற்றும் விசேஷ வீடுகளில் பண்டம்,பலகாரம் செய்வதில் கெட்டிக்காரர் நம்ம சங்கரன். துவக்கத்தில் தவசுப்பிள்ளை உத்தியோகம்தான் பார்த்துக்கொண்டிருந்ததாக சொல்லுவார்கள். தவசுப்பிள்ளைன்னா தெரியும்ல ? நெல்லை வட்டாரத்தில், சமையல்காரரைத்தான் தவசுப்பிள்ளை என்று சொல்வது வழக்கம். சமையல்காரர் என்று சொன்னால் கோபம் மூக்குக்கு மேல் வந்து விடும் . தவசுப்பிள்ளை என்றால், பத்துபேரை வைத்து வேலை வாங்கும் தலைமை சமையல்காரர் என்பதனால் கூட இருக்கலாம். சரி சவத்தை விடுங்கய்யா.. . இவரது பூந்தி ரொம்ப விசேஷம். எம்.ஜி.ஆர்.ரசிகரான சங்கரன், ரிஃசாக்காரன் படத்தை கோவில்பட்டி ராமசாமி தியேட்டரில் தொடர்ந்து அம்பது நாட்கள் பார்த்து சாதனை படைத்தவர். ஐம்பதாவது நாளில் ஒரு தங்க செயின் போட்டதை பெருமையாகக் காட்டுவார். கையில் போட்டிருக்கும் தங்க மோதிரம், உலகம் சுற்றும் வாலிபன் 75 வது நாள் விழாவில் போட்டது... உரிமைக்குரல் படத்தை 100 நாள் தொடர்ந்து பார்த்து அவருக்கு பெரிய ஷீல்ட் கொடுத்தார்கள். " வெளங்காத பயலுவோ..எனக்கு என்னத்துக்கு இந்த பதைக்கம் எல்லாம்..? ஒரு சின்னதா மோதிரமோ, செயினோ போட்டா பரவாயில்ல..வாத்தியார் படத்தை நடுவுல போட்டுக் கொடுதுத்துட்டானுவோ ..அதனால தான் தம்பி வச்சுருக்கேன்.." என்று மர பீரோக்கு மேலே தூசி தும்பட்டையோடு கிடக்கும் ஷீல்டை காட்டி சொல்வார். மர பீரோவின் முகப்பில், எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.- மஞ்சுளா, எம்.ஜி.ஆர்.- லதா இணைந்து இருக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு எண்ணெய்படிந்து இருக்கும். சில நோட்டீஸ் களில் ஐம்பது நாள் வசூல், நூறு நாள் வசூல் தொகை குறிப்பிடப்பட்டு . அடைப்புக்குறிக்குள் சிவாஜி பட வசூல் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆர்.பட வசூல் அதிகமாகவே சொல்லப்பட்டிருக்கும் என்பதை தனியாக குறிப்பிட வேண்டியதில்லை. விரைவில் பொன்மனச்செம்மல் நடிப்பில் வெளிவர இருக்கும் " கிழக்காப்பிரிக்காவில் ராஜு " என்ற பேப்பர் விளம்பரம் ஒன்றையும் சங்கரன் பசை தடவி மர பீரோவில் ஒட்டி வைத்திருந்தார். அந்தப்படம் கடைசி வரை வரவே இல்லை என்றாலும், வரலாறு முக்கியம் என்பதாலோ என்னவோ அது பீரோ முகப்பில் இடம் பெற்றிருந்தது. " அண்ணாச்சி..அது எப்படி உங்களால தொடர்ந்து பாக்க முடியுது..நானும் வாத்தியார் ரசிகன் தான்..ஆனாலும் மூணு வாட்டி பாக்கலாம்..அதுக்கு மேலே என்னால ல்லாம் முடியாது..." என்பேன். " தம்பி...வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போறேன்..அதனால தரை டிக்கெட்டு எடுத்துட்டுப் போவேன்..ஒரு மூலையில சாஞ்சு உக்காந்து கொஞ்ச நேரம் பார்ப்பேன்.." நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு..." பாட்டு வரைக்கும் பார்ப்பேன்..அப்புறமா கண்ணு அசந்துரும்... அப்புறம், " ஒரு தாய் வயிற்றில் பிறந்த .." ன்னு ஒரு பாட்டு வரும்..உருக்கமான பாட்டு தம்பி. அண்ணனை பார்த்து வாத்தியார் பாடுற பாட்டு...முழுசும் பார்ப்பேன்..அஞ்சாறு பைட்டு உண்டு..சிலது பார்ப்பேன்..ஆனா மொதத்தடவ பார்க்கும்போதே எத்தனை பைட்டுன்னு பாத்துக்கிடுவேன்..எல்லாவனும் என்கிட்டே வந்து தான் கேப்பானுவ ..சொல்லணும் பாத்தீகளா..? " தோளில் போட்டிருக்கும் துண்டை கீழே விரித்து திண்ணையில் படுத்து விடுவார். அடுத்த சில நொடிகளில் குறட்டை சத்தம் வந்து விடும். எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் அன்று முதல் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று விடுவார். தியேட்டர் ஆபரேட்டர் எல்லாரும் அவருக்கு பழக்கம். கல்யாண வீடுகளுக்கு அவரை புக் செய்ய வருபவர்கள் தெருவில் வந்து " எம்.ஜி.ஆர்.சங்கரன் " வீடு எங்கன இருக்கு ? என்று தான் வருவார்கள். ( அந்தக் காலத்துலேயே இதெல்லாம் வந்தாச்சு ...) அதிலே அவருக்கு ஏகப் பெருமை.. கண்ணு கண்ணாய் இருக்கும் பெரிய கண்ணாகப்பையோடு அவர் வெளியே கிளம்பி விட்டால், விசேஷ வீட்டிற்கு போகிறார் என்று அர்த்தம். அவரோட கைப்பக்குவத்தைப் பற்றி " கோட்டி" கண்ணாயிரம் தான் வானளாவ புகழுவான். இதென்ன கோட்டி கண்ணாயிரம்னு கேக்கீகளா..அது ஒரு தனிக்கதை..அப்புறமா சொல்லுதேன்..எம்.ஜி.ஆர்.சங்கரன் பிறகு கோவிச்சுக்குவார். என்னோட பெரிய அக்கா சடங்குக்கு காரா பூந்தியும், லட்டும் செய்வதற்கு அப்பா , எம்.ஜி.ஆர்.சங்கரனிடம் தான் சொல்லி இருந்தார். வீட்டு தார்சாவை அடுத்து இருந்த வானவெளியில் எண்ணெய் சட்டியை போட்டு விடிய விடிய பலகாரங்கள் செய்ததை பக்கத்தில் இருந்து நானும், சின்ன அக்காவும் பார்த்து கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. " அண்ணாச்சி..உங்களுக்கும் வயசான மாதிரி இருக்கு..ஏன் நீங்க கலியாணம் பண்ணிக்கிடவே இல்ல.." என்றேன் ஒருதடவை. அண்ணாச்சி பதிலே சொல்லவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து, " அதெல்லாம் நடந்து எல்லாம் முடிஞ்சு போச்சு.. அவளுக்கு நம்ம கூட வாழ கொடுத்து வைக்கல..அவ்வளவு தான்.." என்று ஒரு வரியில் முடித்து விட்டார். கோர்ட் முருகன் தான் சொன்னார்." கூரு இருக்காலே உனக்கு ? அவரு பொண்டாட்டி அவர விட்டுட்டு வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டா..எத்தன மட்டம் சொல்லி இருக்கேன்..இதப் போயி அவருட்டேயே ஒருத்தன் கேப்பானா .." என்று தலையில் அடுத்துக் கொண்டார். இப்ப தான் என்னிடம் சொல்கிறார் என்றாலும் எத்தனை மட்டம் என்பது அவரோட மானரிசம்..அடிக்கடி அதை சொல்வார். அதன்பிறகு சங்கரனைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாய் இருக்கும். ஊருக்குள்ளே சில இளவட்டங்கள் அவரை மானாங்கன்னியா பேசுவாங்க. அவருக்கு ஏலலெ ன்னா என்ன பண்ணுவாரு என்று கேலியும் குதர்க்கமுமாய் பேச்சுக்கள்...! " வாத்தியார் படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது அண்ணாச்சி.." என்று ஒருதடவை கேட்டேன். " என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீக..எல்லாப்படமுமே புடிக்கும்..சதி லீலாவதி படத்துல இருந்து நவரத்தினம் படம் வரைக்கும் வரிசையா ஒன்னு விடாம என்னால சொல்ல முடியும்...வாத்தியார் படத்துல அவருக்கு என்ன பேரு என்பதைக் கூட சொல்லிருவேன்.." என்று சொன்னார். இரவு திண்ணையில் படுக்கும்போது அவர் தலைமாட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ மாத்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். தூங்கும்போதும் அவர் எம்.ஜி.ஆர்.பாடலைக் கேட்டுக் கொண்டே தான் தூங்குவார். "பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ " படகோட்டி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. " எம்.ஜி.ஆரை பார்துருக்கீகளா ? " என்றேன். " அதெல்லாம் எதுக்கு தம்பி...படத்துல இருக்குற மாதிரி தான நெசத்துலேயும் இருப்பாரு..மெனெக்கெட்டு போயி பார்க்கனும்னு எல்லாம் நெனைச்சது இல்ல...நம்மூருக்கு ஓட்டுக் கேட்டு வந்தாப் பாத்துக்குவோம்.." என்று நிதானமாய் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு கோடைகால அதிகாலைப் பொழுதில், சங்கரன் போய் சேர்ந்திருந்தார். அவரது நெஞ்சில் இருந்த பனியனில் " பல்லாண்டு வாழ்க " எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டிருந்தார். ------------------------------------இரா.நாறும்பூநாதன்

No comments: