Sunday, September 13, 2020

இடம் : மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமம். நாள் : 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி. கோவில் வாசல் முன்பு அந்த அலங்கரிக்கப்பட்ட ரெட்டை மாட்டு வண்டி நிற்கிறது. மாட்டு வண்டி நிறைய புத்தகங்கள். வண்டியில் இருந்து கிராமபோன் ரெகார்டுகளில் பாடல்கள் ஒலிக்கின்றன. மக்கள் ஆர்வத்துடன் கூடுகின்றனர். ஊர் வழக்கப்படி ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் அமர்கின்றனர். ஊர்க்காரர்கள் போட்ட பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த மனிதர் பேச தொடங்குகிறார். " நீங்கள் உலக நடப்பை தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதில் கதைகள் உண்டு. வரலாறு உண்டு. இலவசமாக இதை நீங்கள் வாசிக்கலாம். உங்களில் படித்தவர்கள் , இவற்றை படிக்காத மக்களுக்கு வாசித்து காட்டலாம். காந்தியடிகள் சொன்னது போல, அனைவரும் கற்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நூலகத்துறை மூலமாக இந்த ஏற்பாட்டை செய்கிறோம். இந்த நடமாடும் நூலகத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்வீர்களா ? " பேசியவர் எஸ்.ஆர்.ரெங்கநாதன். மாட்டு வண்டியை ஏற்பாடு செய்தவர் மன்னார்குடியை சேர்ந்த கனகசபை பிள்ளை என்பவர். அவர் அந்த பகுதியில் முதியோர் கல்வி நடத்தி வருபவர். கூட்டம் அமைதி காத்தது. ரெங்கநாதன் மீண்டும் கேட்கிறார் " யாரேனும் வந்து பேசுங்களேன் " ஆறு பேர் தயங்கி தயங்கி முன் வருகின்றனர். " நாங்கள் படிக்க ஆர்வமாத்தான் இருக்கோம். ஆனால், பகல் முழுக்க வயக்காட்டில் வேலை செஞ்சுட்டு, சூரியன் சாஞ்சபிறகு தான் வீட்டுக்கு வருவோம். இருட்டுனப்பிறகு தான் படிக்க முடியும் " ஒருவாறு சொல்லி முடிக்கின்றனர். ஆண்கள் பகுதியில் தலைவர் போன்று இருப்பவர் கூறுகிறார் " ராத்திரி தான் படிக்க முடியும்னா , வெளக்குக்கு ஊத்துறதுக்கு எண்ணெய் யாரு கொடுப்பாக ? " பெண்கள் பகுதியில் இருந்து லேசாக சத்தம் வருகிறது. " நாங்க எண்ணெய் தர்றோம் ". தலைவர் : நாங்க எண்ணெயெல்லாம் தர முடியாது..ஆமா.." பெண் : "நீங்க ஒன்னும் தரவேண்டாம் " தலைவர் : " அப்படின்னா, எண்ணெய்க்கு எங்கே போவீங்க ?" பெண் : வீடு வீடாய் போயி எண்ணெய் கேட்கலாமே..?" தலைவர் : " என்னது..பிச்சையா...எங்க வீட்டு பெண்கள் எல்லாம் எண்ணெய் பிச்சை எடுக்க வர மாட்டாங்க..(ஆவேசத்துடன் ) பெண் : பிச்சை கேட்க வேண்டாம். சின்ன பசங்களை அழைச்சு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் மட்டும் வாங்கிட்டு வாங்க..ன்னு சொல்லலாம்..கிருஷ்ண ஜெயந்திக்கு அப்படித்தானே சேகரிக்கோம்..அதை மாதிரியே செய்வோம்.." கூட்டம் அந்த பெண்ணின் குரலை கை தட்டி ஆமோதிக்கிறது. தலைவர் முகத்தை தொங்கப்போட்டபடி அமர்கிறார். கனகசபை பிள்ளை முகத்தில் மகிழ்ச்சி. இப்போது அவர் பேச ஆரம்பிக்கிறார். " இந்த மாட்டு வண்டி இரண்டு மாதம் கழித்து மீண்டும் வரும். இப்போது எடுத்து படித்து விட்டு, அடுத்த முறை கொடுக்கலாம்.எல்லோரும் படியுங்கள். படித்தவர்கள் வாசித்து காட்டுங்கள் ". படித்த இளைஞன் ஒருவன் கூட்டத்தில் எழும்பி பேசுகிறான். தேவாரம், திருவிளையாடல்புராணம், பூகோளம் மற்றும் வரலாறு சார்ந்த புத்தகங்கள் சில நிரந்தரமாய் இங்கே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றான். கனகசபை : " ஒரு கிராமத்திற்கு என்று நிரந்தரமாய் புத்தகங்களை எப்படி கொடுக்க முடியும். நம்மிடம் வாங்க பணம் இல்லையே.." இளைஞன் : அந்த பெண்மணி அதற்கு வழி காட்டி இருக்கிறார். முதியவர் ஒருவர் : அதெப்படி ? எண்ணையை வாங்குவது போல புத்தகம் எப்படி வாங்க முடியும் ? ஒருத்தர்ட்டயும் புத்தகம் கிடையாதே.." இளைஞன் : இல்லை..அறுவடை நேரத்தில், ஒவ்வொருத்தர்ட்டயும் அவர்களால் இயன்ற நெல்லை கொடுங்கள் என்று கேட்கலாம். அப்படி வாங்கினால், வருடத்திற்கு பத்து ரூபாயாவது கிடைக்காதா ? அதை கொண்டு நிரந்தரமாய் புத்தகங்கள் வாங்கலாமே?" பெஞ்சில் அமர்ந்திருந்த ரெங்கநாதன் மற்றும் கனகசபை ஆகியோர் முகத்தில் மகிழ்ச்சி. மக்கள் ஆர்வத்துடன் கரவொலி எழுப்புகின்றனர். இரண்டு மணி நேரம் கழித்து மன்னார்குடிக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்றனர் அந்த இருவரும். மக்களின் அறிவு தாகம் அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மாட்டு வண்டி மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் 12 மைல் சுற்றளவிற்கு செல்கிறது. கிராமத்து மக்கள், மாட்டு வண்டிக்கு ஒரு ஜோடி மாடுகளையும், ஒரு வண்டிக்காரரையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். எஸ்.ஆர்.ரெங்கநாதன் பிரமித்து போகிறார். மன்னார்குடியில் நூலக இயக்கத்திற்காகவே ஒரு மாநாடு நடத்திய கனகசபை கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார். அக்டோபர் 18 முதல் 21 வரை (1931 ) நடத்திய மன்னார்குடி மாநாடு, நூலக வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை உருவாக்கியது. லண்டன் நூலகத்தில் நூலகப்பயிற்சி பெற்ற, சீர்காழி எஸ்.ஆர்.ரெங்கநாதன், மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனத்தில் நடமாடும் நூலகத்தை அறிமுகம் செய்ததை போல, நமது நாட்டில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகத்தை அறிமுகம் செய்தால் என்ன என்று யோசித்து ஸ்லைடு ஷோ மூலம் மாட்டு வண்டி நூலகத்தை வடிவமைத்து வெளியிட்டார். அதை பார்த்த மன்னார்குடி கனகசபை என்ற அறிஞர் , " புத்தகங்கள் நிரம்பிய மாட்டு வண்டியை ஒற்றை மாடு இழுக்க இயலாது. இரட்டை மாடுகள் இழுக்கும் வண்டியாக அதை மாற்றி அமையுங்கள். இல்லையெனில், அதை நானே செய்து தருகிறேன்..அந்த மாநாட்டில் நீங்கள் வந்து பேசி, நூலக இயக்கத்தை மாட்டு வண்டியில் ஆரம்பியுங்கள் " என்று யோசனை சொன்னார். அது மகத்தான வெற்றி பெற்றது. அப்படி 72 கிராமங்களில் 275 முறை பயணங்கள் செய்து, 3782 நூல்கள் 20000 தடவைகளுக்கு மேல் அந்த மக்களிடம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன என்கிற செய்தி உண்மையில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ரெங்கநாதன் அவர்களின் மாட்டு வண்டி பயணத்தால் ஈர்க்கப்பட்டு, மறு வருடம் ஜூலை 10 ஆம் நாள் தென்னாற்காடு மாவட்டத்தில் வில்வ ராய நத்தத்தில் மிதிவண்டி மூலம் நடமாடும் நூலக இயக்கத்தை தொடங்கியவர் வழக்கறிஞர் டி.ஆர்.சக்கரபாணி என்பவர். மிதி வண்டியில் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வீடு வீடாக நூல்களை கொடுத்து ஐந்தே மாதங்களில் 1649 வாசக அன்பர்களுக்கு 2379 நூல்களை கொடுத்து வாங்கி இருக்கிறார். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாட்டு வண்டி மூலம் நூலக இயக்கப்பணியை மேற்கொண்டவர் பாலசுப்பிரமணிய ஐயர். தனது வண்டிக்கு பாரதியின் " ஞானரதம்" என்று பெயர் வைத்துக்கொண்டாராம். 1936 இல் நடைபெற்ற இந்த நடமாடும் நூலகம் மூலம் 25 கிராமங்களில் 3407 வாசக அன்பர்களிடம் 787 நூல்கள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் நடமாடும் மோட்டார் வாகன வண்டி நூலகம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள் ? ஒவ்வொரு மாவட்ட தலைநகர் மைய நூலகத்திலும் ஒரு பேருந்து இருக்கிறது. நூலகங்கள் இல்லாத கிராமப்புறங்களுக்கு இந்த வண்டி செல்கிறது. மக்களிடம் புத்தகங்களை வழங்கி அவர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுகிறது. 1948 இல், தனது மாணவராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக ஆனதை கேள்விப்பட்டு, எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவரை பார்க்க அதிகாலையில் ஆறு மணிக்கு அவர் வீட்டு கதவை தட்டுகிறார். அதிகாலையில் தனது முன்னாள் ஆசிரியர் வந்து நிற்பதை பார்த்து அவர் திடுக்கிடுகிறார். " ஐயா..வாருங்கள்..என்ன இந்த அதிகாலை நேரத்தில் ?" முன்னாள் ஆசிரியர் ரெங்கநாதன் அவரிடம், " நான் உங்களுக்கு குரு தானே..எனக்கு இப்போது குருதட்சணை வேண்டும் " என்கிறார். " என்ன தர வேண்டும்..சொல்லுங்கள்.." என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார் அவர். " நீங்கள் தானே கல்வி அமைச்சர்..பொது நூலக சட்ட முன் வரைவு இதோ இருக்கிறது. இதை எப்படியேனும் சட்டமாக்கி தர வேண்டும். அனைத்து மக்களும் நூலகத்தை பயன்படுத்த இது உதவி செய்யும் " என்கிறார் எஸ்.ஆர்.ரெங்கநாதன். அப்படி நிறைவேறியது தான் 1948 பொது நூலக சட்டம். இந்தியாவில் முதன்முதலில் சட்டம் நிறைவேற்றப்பட்டது சென்னை மாகாணத்தில் தான். தனது வாழ்நாள் சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை நூலக இயக்கத்திற்கு அளித்தவர் " தேசிய நூலக இயக்கத்தின் தந்தை " யான எஸ்.ஆர்.ரெங்கநாதன், தஞ்சை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர். கணித பேராசிரியராகவும், சென்னை பல்கலை கழக நூலகராகவும் பணியாற்றிய இந்த மனிதரின் வீட்டில் விருந்தாளிகள் வந்தால் உட்கார ஒரு நாற்காலியோ, ஷோபாவோ கிடையாது. பழைய பாய் விரித்து அதில் தான் யார் வந்தாலும் அமர வேண்டும். மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்த இந்த மனிதர் உருவாக்கிய கோலன் பகுப்பு முறை உலகின் பல்வேறு நூலகங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ---------------------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தொடர்பிற்கு ; narumpu @gmail .com Attachments area

No comments: