Sunday, September 13, 2020

பாரம்பரிய விளையாட்டுக்கள் ------------------------------------------------ " நாங்கல்லாம் அந்தக் காலத்துல பம்பரம்,கோலிக்காய், பாண்டி,பல்லாங்குழி ன்னு விளையாடிட்டு இருந்தோம்..ஒங்களை மாதிரி கிரிக்கெட் எல்லாம் வெளையாண்டது இல்லம்மா..இப்ப என்னடான்னா கிரிக்கெட் கூட நீங்க வெளையாடுறது இல்ல..பொழுதன்னைக்கும் அப்பா செல்லை எடுத்து நோண்டிக்கிட்டே இருக்கீக.." வீடுகளில் இப்படியான பரவலான குரலை கேட்க முடிகிறது. நூலக இயக்குனர் உதயசந்திரன் சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால கொண்டாட்டம் நடத்துங்கள் என்று. மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் யோகாசனப்பயிற்சி,பாரம்பரிய விளையாட்டுக்கள்,ஓவிய பயிற்சி , கழிவு பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்குதல் பயிற்சி, கதை சொல்லல் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என்று சுற்றறிக்கை விட்டார். பாளையங்கோட்டையில் உள்ள மைய நூலகத்தில் தினமும் சுமார் 100 முதல் 150 பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவ,மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றது இனிய அனுபவம். பாரம்பரிய விளையாட்டுக்களான பாண்டியாட்டம், பல்லாங்குழி, கிளித்தட்டு, கோலிக்காய் போன்ற விளையாட்டுக்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதெல்லாம் பொய் என நிரூபித்து காட்டினார்கள். விளையாட்டின் விதிமுறைகள் ஒரு சில தெரியவில்லையே தவிர, சொல்லி கொடுத்ததும் உற்சாகமாய் பாண்டி கட்டம் வரைந்து விளையாட ஓடு ஒன்றையும் கண்டெடுத்து விளையாட ஆரம்பித்து விட்டனர். நூலகத்தின் திறந்த வெளியெங்கும் " ரைட்டா, தப்பா ?" என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. அம்மாக்கள், பாட்டிகள், தாத்தாக்கள் என பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், அரங்கின் இன்னொரு மூலையில்,சாக்பீஸால் வரையப்பட்ட தெப்பக்குளம் வடிவிலான தாயக்கட்டத்தில் நான்கு மாணவிகள் அமர்ந்து தாயக்கட்டைகளை உருட்டி " தாயம், ஈராறு,.." என சொல்லியபடியே விளையாடிக்கொண்டிருந்தனர். உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள், புளியங்கொட்டைகள் போன்றவற்றை விளையாடும் காய்களாக பயன்படுத்தி கொண்டனர். வலதுபுறம், மரத்தால் செய்யப்பட்ட பல்லாங்குழியில், சோவிகளால் நிரப்பி இரு மாணவிகள் விளையாட, சுற்றிலும் நாலைந்து மாணவிகள் விளையாட்டை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். தனக்கான குழியில் இருந்து ஐந்து காய்களை எடுத்து ஒவ்வொரு குழியாய் போட்டபடி வந்து இறுதியில் காலியாய் இருக்கும் குழியை தடவி விட்டு அடுத்த குழியில் இருக்கும் காய்களையும், அதன் எதிரே இருக்கும் குழியில் இருக்கும் காய்களையும் எடுத்துக்கொள்ளும் ஆட்டக்காரரின் விரல் அசைவுகளை நுட்பமாக கவனித்துக்கொண்டிருந்தனர். இடையிடையே " கள்ளாட்டம் ஆடுதியோ .." என்ற குரல்களையும் கேட்க முடிந்தது. ஆம்பளைப்பயலுவலை சும்மா சொல்லக்கூடாது. விளையாட்டின் உத்திகள் மரபிலேயே இருக்கும்போல. பம்பரத்தை வாங்கியவுடன் கயிறை எடுத்து சுற்ற ஆரம்பித்து விட்டனர். சுற்றும் பம்பரத்தை கயிற்றால் சுண்டி மேலே தூக்கி " கோஸ்" என்று சொல்லியபடி கேட்ச் பிடித்தார்கள். இன்னொரு பக்கம், கிளித்தட்டு கட்டங்கள் வரைந்து இரண்டு அணிகளாய் பிரிந்து கிளிகள் ஐவர், அவர்களை பிடிக்கும் பொறிகள் ஐவர் என விளையாட்டு துவங்கியது... ஒருவன் சாதுரியமாக கட்டங்களை தாண்டி, " கிளி பறக்குது " என்றபடியே ஓட ஆரம்பிக்க, இன்னொருவன் அவனை துரத்திப்பிடிக்க பின்னாலேயே ஓடினான். ஐம்பது வயது பெண்கள் இருவர், பெண் குழந்தைகளுக்கு " பூப்பறிக்க வருகிறோம்.." விளையாட்டை சொல்லிக்கொடுக்க, பிள்ளைகள் அவற்றை கச்சிதமாக உள்வாங்கிக்கொண்டு, கோடு போட்டு விட்டு, " பூப்பறிக்கவருகிறோம் பூப்பறிக்கவருகிறோம், யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க, ராணியைஅனுப்பபோகிறோம் ராணியைஅனுப்பபோகிறோம்; எந்த பூ வேண்டும்…எந்த பூ வேண்டும், மல்லிகைப் பூ வேண்டும் மல்லிகைப் பூ வேண்டும் " என்று விளையாட, மொத்தக்கூட்டமும் அவர்களை நோக்கி திரும்பியது. ஸ்கிப்பிங் விளையாட்டு கேட்கவே வேண்டாம். இப்போதும் குழந்தைகளின் விளையாட்டு தான். இரண்டு பசங்க கயிற்றை சுற்ற, நடுவே இருக்கும் பெண் குதித்து குதித்து விளையாட வேண்டும். இதில் சமயங்களில் ஜோடியாகவும் குழந்தைகள் குதிப்பதுண்டு. இதில் வேடிக்கை என்னவெனில், ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டை 15 நிமிடங்களுக்கு மேல் விளையாடவில்லை. விரும்பிய விளையாட்டை தேர்வு செய்து விளையாடி, அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, அடுத்த விளையாட்டை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். யாரும் இதை கட்டாயம் விளையாடு என சொல்லவில்லை. அவர்களாகவே தேர்வு செய்து, அவர்களே விளையாடுகின்றனர். உண்மையில், தற்போது கோடை வகுப்புகள் என்ற பெயரில், ஸ்கெட்டிங் ,நடனம்,இசை,நீச்சல்,யோகா, ஹிந்தி பயிற்சி என குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவது எல்லா நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் வேறு. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றால், பசங்களை எங்காவது சேர்த்து விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அல்லது போட்டிகள் நிரம்பிய உலகில், தங்களின் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்து ஈடு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறில்லை. தங்களின் குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது என்பதை தெரிந்து அதில் சேர்த்து விடுகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. பெற்றோர் பெரும்பாலும், தங்களின் விருப்பதையே குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். குழந்தையின் தனித்திறமையை பெற்றோர்களோ அல்லது ஆசிரியரோ தான் கண்டறிய வேண்டும். அவனுக்கு ஓவியம் வரைய ஆர்வம் இருக்கும் பட்சத்தில், அவனைப்போய் கராத்தே விளையாடு என்று கட்டாயப்படுத்தினால், அவன் வேண்டாவெறுப்பாக சேர்வான்.( கவனிக்க : விளையாட மாட்டான். ) விருப்பத்திற்கு மாறாக, அவை எல்லாமே கண்டிப்பு நிறைந்த இன்னொரு வகுப்பாகவே மாறும். வருடம் முழுவதும் பாடங்கள், டியூசன், தேர்வுகள்,காலை நேர பதட்டங்கள் என மன அழுத்தத்துடன் இருக்கும் மாணவர்கள், தேர்வு முடிந்தவுடன் இந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைக்கு செல்ல விரும்புகிறார்கள். வெளியூரில் இருக்கும் ஆச்சி, தாத்தா வீட்டுக்கோ, அத்தை,மாமா வீட்டுக்கோ சென்று அங்கு இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி, கிணற்றில் குதித்து நீச்சல் படித்து, நுங்கு தின்று, பதநீரை பட்டையில் குடித்து மகிழ விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முற்றிலும் மாறுபட்ட சூழல்..விரும்பிய விளையாட்டை விளையாடனும் என்பது மட்டுமே. விளையாட்டை விளையாடும்போது மட்டுமே, குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு, பொறுமை, வெற்றி தோல்வியை சமமாய் பாவிக்கும் தன்மை போன்றவை ஏற்படும். பொதுத்தேர்வில் தோல்வி அடையும்போது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருவாவதற்கு காரணமே அவர்கள் யாருமே பள்ளியில் விளையாடுவதில்லை. படிப்பு..படிப்பு..படிப்பு..மட்டுமே. விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமே, உடல் ஊக்கம் மட்டுமின்றி, தோல்வியும் ஒரு அனுபவமே என்பதை மாணவன் உணர்வான். பாம்பு கட்டம் விளையாட்டில் வரும் ஏணியும்,பாம்பும் வாழ்க்கையில் வரும் ஏற்றங்களும், இறக்கங்களும் என்பதை அவர்கள் உணர்வார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த இரண்டு ஆச்சிமார்கள், ஒரு கட்டத்தில், பிள்ளைகள் எழுந்து ஓடியதும் அவர்களே உட்கார்ந்து தாயக்கட்டைகளை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டனர். விளையாட்டு அவர்களை உள்ளிழுக்க ஆரம்பித்து விட்டது. மொத்தத்தில், இந்த கோடை காலம், மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இது போன்ற விளையாட்டுக்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், அவர்களை செல்பேசியில் இருந்தும் தொலைக்காட்சியில் இருந்தும் சற்றே தள்ளி நிற்க வைக்கலாம். ------------------------------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்

No comments: