Sunday, September 13, 2020

பெருமைமிகு நெல்லைச்சீமை - 8 ------------------------------------------------------ கிளாரிந்தா சர்ச், பாளையங்கோட்டை வருடம் : 1770 இடம் : தஞ்சாவூர் , வெண்ணாற்றங்கரை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கரையோரம் சந்தனக்கட்டைகள் அடுக்கப்பட்ட சிதையில் ஒரு சடலம். தஞ்சை சாயாஜி மன்னனின் அரண்மனையில் பணிபுரிந்த திவானின் உடல் தான் எரிந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் திவானின் உறவினர்களும் அரண்மனை ஊழியர்களும். மேளச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. சிதை அருகே சிவப்பு பட்டு சேலையணிந்த இளம்பெண்ணொருத்தி. அவள் கோகிலா. இறந்த திவானின் மனைவி.பிராமண சமூகத்தை சேர்ந்தவள். கழுத்தில்மலர் மாலையணிந்திருந்தாள். சிதையை அவள் வலம் வந்தபோது சுற்றியிருந்த கூட்டம் கூவியது. " சதி மாதா கி ஜே " கோகிலாவின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப்போலவே அவள் கண்களும் ஒளியோடு பிரகாசித்தன. மேளச்சத்தம் தொடர்ந்து விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. கூட்டம் மீண்டும் ஆரவாரித்தது. " சதி மாதா கி ஜே " அடுத்தகணம், சுற்றியிருந்த அரசகுல ஆண்கள், கோகிலாவை அலாக்காக தூக்கி எரியும் நெருப்பில் போட்டனர். பெண்கள் குரவையிட்டனர். அதே கணத்தில் - யாரும் எதிர்பாராத வகையில், குதிரையில் வந்த ஆங்கிலேயப்படையின் அதிகாரி லிட்டில்டன், சிதைக்குள் விழுந்த கோகிலாவின் தலைமயிரைப்பிடித்து தூக்கி இழுத்தவன், தனது குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவளைக்கிடத்தினான். கோகிலாவை இளம்வயதில் இருந்து வளர்த்து வந்த சாரதா என்ற வேலைக்கார பெண்மணியும் உடன் ஏறிக்கொண்டாள். அவள்தானே ஆங்கிலேயப்படையை அழைத்து வந்தவள் ! படைகள் பின்தொடர, சாரட் வண்டி புயலெனப்புறப்பட்டது. மயானக்கரையில் கூட்டம் செய்வதறியாது திகைத்து நின்றது. --- -- -- -- -- -- -- அந்த புராதன பங்களாவின் வராண்டாவில் இருந்தபடி ஆங்கிலேயே அதிகாரி லிட்டில்டன் புகைத்துக்கொண்டிருந்தார். நடந்து முடிந்த அநியாயத்தை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. " கணவன் இறந்தவுடன், மனைவியை உயிரோடு நெருப்பில் போட்டு எரிக்க நினைக்கிறார்களே ..முட்டாள் ஜனங்கள் " சாரட்டில் தூக்கி வந்து, உடனடியாய் மருத்துவரை அழைத்து வந்து தீக்காயங்களுக்கு மருந்திட்டு படுக்க வைத்துள்ளார். எனினும், கூந்தலின் ஒரு பகுதி நன்றாக எரிந்து விட்டது. முதுகுப்பகுதியிலும் தோள்பட்டையிலும் கடுமையான தீக்காயங்கள்..இடையிடையே வலியில் வீறிட்டு அலறுகிறாள் கோகிலா. அவளது பணிப்பெண் சாரதா தான் அருகில் இருந்து அவளை கவனித்துக்கொள்கிறாள். சதியில் தள்ள முடியாத வைதீகக்கூட்டம், தஞ்சை மன்னரிடம் சென்று முறையிடுகிறார்கள். ஒரு பறங்கியன் தங்களின் குடும்ப சடங்குகளில் தலையிடுவதா என்று ஆவேசப்படுகிறார்கள். மன்னரும் லிட்டில்டன்னை வரச்சொல்லி பேசுகிறார். வாழவேண்டிய ஒரு இளம்பெண்ணை கணவனோடு எரிப்பது என்பது மோசமான மூடநம்பிக்கை. தன்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு திரும்புகிறார். சில நாட்களில், கோகிலாவின் தீக்காயங்கள் ஆறி, தழும்புகள் ஏற்படுகின்றன. கைகள், தோள்பட்டை,இடுப்பு, கால் பகுதி என வெள்ளை வெள்ளையாய் தேகமெங்கும் தழும்புகள்..முகம் மட்டும் பவுர்ணமி நிலவென பிரகாசிக்கிறது. தன்னைக் காத்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில்டன்னை மனதுள் பூஜிக்கிறாள். எவ்வளவு உயர்ந்த மனிதர் ! அவளும், பணிப்பெண் சாரதாவும் பங்களா விற்கு பின்புறம் இருக்கும் தனி வீட்டில் இருக்கிறார்கள். தேவையின்றி அந்த ஆங்கிலேய அதிகாரி வருவதில்லை. மிகுந்த கண்ணியத்துடன் பேசுவார். லிட்டில்டன் இப்போது கோகிலாவிடம் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். கோகிலா அவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள். இருவரும் தினம் உரையாடுகிறார்கள். தான் உயிருடன் வாழ அனுமதிக்காத மதத்தில் இனியும் இருக்க வேண்டுமா என நினைக்கிறாள். " வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் " என்ற பைபிள் வசனம் அவளை ஈர்க்கிறது. கோகிலாவிற்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது. அவளும் லிட்டில்டன்னும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர். கோகிலா மதம் மாற சம்மதிக்கிறாள். அந்த நேரத்தில், தஞ்சையில் இருந்த ஜெர்மன் பாதிரியார் ஸ்வார்ட்சிடம் ஞானஸ்நானம் பெற செல்கின்றனர். ஆனால், உயர்குல பெண்ணான கோகிலாவை லிட்டில்டன் திருமணம் செய்துகொள்வதை பாதிரியார் ஸ்வார்ட்ஸ் விரும்பாததால், கோகிலாவை மதம்மாற அவர் அனுமதிக்கவில்லை. (இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிட்டில்டன் ஏற்கனவே திருமணமாகி, மனைவியோடு மனஸ்தாபம் ஆகி பிரிந்து வாழ்கிறார் என்பதும் சொல்லவேண்டிய செய்தி ) எனினும்,இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு living together ஆக வாழ முடிவெடுத்தனர். ஆங்கிலேயப்படை அதிகாரி லிட்டில்டன் திருநெல்வேலிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கோகிலாவையும் உடன் அழைத்து வருகிறார். இவர்களோடு பணிப்பெண் சாரதாவும் அவளது மகன் கோபாலனும் வருகின்றனர். காவிரியாற்றில் வளர்ந்த கோகிலாவிற்கு, திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றின் குளிர்ச்சியும் தென்பொதிகை தென்றலும் புதிய உற்சாகத்தை அளிக்கின்றன. இங்கே அவளுக்கு புதிய வாழ்க்கை துவங்குகிறது. பெயரை கிளாரிந்தா என்று அவளே மாற்றிக்கொண்டாள். மூட நம்பிக்கையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றால், அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்து பெண் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து பாடம் சொல்லிக்கொடுக்கிறாள். இந்நிலையில், லிட்டில்டன் மீண்டும் இங்கிலாந்து தேசம் திரும்பியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் அவர் இந்தியா வரவில்லை. அவர் சூலை நோய் ஏற்பட்டு இங்கேயே இறந்து விட்டார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஏழைக்குழந்தைகளுக்கு புராணங்களில் இருந்தும், விவிலியத்தில் இருந்தும் குட்டி குட்டிக்கதைகளை சொல்லிக் கொடுத்தார் கிளாரிந்தா. வீட்டருகில் ஒரு துவக்கப்பள்ளியை துவக்கினார். 18 மாணவ,மாணவியர் படித்த அந்தப் பள்ளி தான் குளோரிந்தா பள்ளி. தென் தமிழகத்தின் முதல் பள்ளியும் அது தான். இரண்டு ஆசிரியைகளை நியமித்தார். அவரே ஊதியமும் வழங்கினார். பாளையங்கோட்டையில் நடந்த ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஐரோப்பிய பாதிரியார் ஒருவர் வந்தபோது, அவரிடம் சென்று ஞானஸ்நானம் பெற, கோகிலா என்ற கிளாரிந்தாவும், அவளது பணிப்பெண் சாரதாவும் உற்சாகமாக சென்றனர். இவர்களோடு பல குழந்தைகளும் வரிசையில் நின்றனர். அருகில் நெருங்கி வந்தபோது தான் கிளாரிந்தா கவனித்து திடுக்கிட்டார். எதிரே நின்று கொண்டிருந்தவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த மிஷனரி ஸ்வார்ட்ஸ் . அவர் கோகிலாவை ஏறெடுத்துப் பார்த்தார். (தொடரும் )

No comments: