Sunday, September 13, 2020

தமிழறிஞர் சாத்தான்குளம் ராகவன் (1902 -1981 ) ---------------------------------------------------------- பேரா.தொ.பரமசிவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், அவர் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு தமிழறிஞர் பெயர் சாத்தான்குளம் ராகவன் என்பதை நெருங்கிப் பழகியவர்கள் அறிவர். தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை எழுதியவர் அவர் என்று சொல்வார். பின்னாட்களில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலைப் பார்த்தபோது, மிகப்பெரும் வியப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ராகவன் துவக்கத்தில் ஆசிரியர் வேலை தான் பார்த்தார். பின்னர், ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் துவக்கப்பட்டபோது அதற்கு மேலாளர் பொறுப்பிற்கு சென்று விட்டார். பின்னர், ஜீவானந்தம் அவர்களின் தொடர்பால், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார். " அறிவு " என்ற இதழை நடத்திய அனுபவம் உண்டு. குடும்ப சூழல் காரணமாக இலங்கை செல்ல வேண்டியதாயிற்று. கொழும்பு நகரில் ஒரு நூலகத்தில், " திருநெல்வேலி காசுகள் " என்றொரு நூலை படித்து ஆச்சரியம் அடைந்தார். கொற்கையில் கிடைத்த காசுகள் பற்றி ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த அந்த நூல் அவரின் வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசின் தொல்லியல் ஆய்வு துறை இணை இயக்குனர் சண்முகநாதன் என்பவரின் தொடர்பால், மேலும் மேலும் இது போன்ற ஆராய்ச்சி நூல்களை படிக்க ஆரம்பித்தார். மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த ராகவன், கொற்கைக்கு பயணம் மேற்கொண்டார். ஒருகாலத்தில், கொற்கை துறைமுக நகராக இருந்தது. தற்போது கடல் உள்வாங்கி, கொற்கை என்பது ஒரு சிறிய கிராமமாக இருப்பதை அறிந்து வியப்புற்றார். கொற்கை குறித்து ஆய்வாளர் கால்டுவெல் எழுதிய நூல்களை படித்தார். கொற்கை குறித்தும், முதன்முதலில் இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் குறித்தும் நூல் எழுதினார். அவை கோநகர் கொற்கை, ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் ஆகியன. ஆதிச்சநல்லூர் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவே. பண்டை தமிழர் பயன்படுத்திய மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், பயன்படுத்திய உலோகங்கள், உமி,தானியங்கள்,இரும்பாலான ஆயுதங்கள் போன்றவற்றை பற்றி எல்லாம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அலெக்சாண்டர் ரே எழுதிய குறிப்புக்களோடும், படங்களோடும் விளக்கமாய் எழுதியிருப்பதை காணமுடியும். இவர் திருநெல்வேலியின் மகத்தான புகைப்பட கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் நெருங்கிய நண்பர். இசக்கி அண்ணாச்சி நெல்லை சந்திப்பின் அருகில் உள்ள உடையார்பட்டியில் ஸ்டூடியோ வைத்திருந்தார். இவர் எழுதிய " தமிழர்களின் அணிகலன்கள் " என்ற நூலுக்கு முகப்பு படம் வரைந்து தருவதாக இசக்கி அண்ணாச்சி சொல்லி இழுத்தடித்துக்கொண்டே வந்தார். அவ்வ்ளவு எளிதாக எல்லாம் இசக்கி அண்ணாச்சியிடம் படத்தை வாங்கி விட இயலாது. (தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்..நூலுக்கு அட்டைப்படம் வாங்க அவர் அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும் ) படத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார் சாத்தான்குளம் ராகவன். இசக்கி அண்ணாச்சி இதுபற்றி பேசும்போது " தம்பி..நானும் நாளைக்கு,நாளன்னைக்கு ன்னு சொல்லிட்டே இருந்தேனா..ஒரு நாள் ராத்திரி வந்தவன் படத்தை தந்தா தான் ஆச்சு..ன்னு வீட்டிலேயே படுத்துக்கிட்டான். ராத்திரி பதினோரு மணிக்கு வரைய ஆரம்பிச்சு நாலு மணிக்கு முடிச்சு தந்தேன்..கூடவே இருந்தான் ராகவன்..மனுஷன் தூங்காம பேய் மாதிரி முழிச்சுருந்து படத்தை பார்த்து " நல்லா வந்துருக்கு ன்னு " பாராட்டி விட்டு, பேப்பர்ல சுற்றி, மொத பஸ்ல போயிட்டான் " என்று சிரியாய் சிரித்தார். இவர் எழுதிய பிறநூல்கள் தமிழரின் கப்பல் கட்டும் கலை, திருவிளக்குகள், தமிழரும் தாமரையும், தமிழரும் படைக்கலன்களும் போன்ற 15 நூல்கள். தமிழர்களின் கலை,பண்பாட்டு வரலாற்றை எழுதியவர்களுள் மயிலை சீனி வேங்கடசாமி க்கு அடுத்தபடியாக சாத்தான்குளம் ராகவன் அவர்களை உறுதியாய் சொல்லலாம். ஜனசக்தி இதழில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் ராகவன். இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியாது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போனார். தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்த இந்த தமிழறிஞரின் பெயர் பெரிய அளவில் பேசப்படாதது வருந்தத்தக்க விஷயமே.

No comments: