Sunday, September 13, 2020

கொற்கை ---------------- அப்படிப்பட்ட கொற்கை , இன்று சிறப்பு மங்கி சிற்றூராக காட்சியளிக்கிறது. முத்துக்குளிக்கும் இடம் மட்டும் அல்ல, சங்கறுக்கும் தொழில் நடைபெறும் இடமாகவும் கொற்கை திகழ்ந்திருக்கிறது. முத்துக்குளிப்பவர்கள் கடலில் இருந்து முத்துக்களையுடைய சிப்பிகளையும் சங்குகளையும் கூடைகளில் வாரி எடுத்து வருவார்கள் . சங்கு வளைகள், மோதிரங்கள்,காதணிகள்,மாலைகள் போன்றவற்றை செய்ய சங்கையறுத்து அதில் எஞ்சிய பொருட்களை குழிகளில் போட்டு புதைத்துள்ளனர். கொற்கை நிலத்தை அகழாய்வு செய்தபோது இவை தெரிய வருகின்றன. அக்காலத்தில், சங்கு நகைகள் அணிவதில் பெண்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். கொற்கையில் வாழ்ந்த பெருங்குடிமக்கள் தங்களின் உணவை பொற்கலத்திலேயே சமைத்து, பொன் வட்டிலிலே உண்டு , பொற்கிண்ணங்களில் நீர் பருகியதாக சொல்கிறார்கள். ( உழைப்பாளி மக்கள் எப்படி இருந்தார்கள் என்பது கேள்விக்குறி தான் ) பொருநை ஆற்றங்கரையில் தோன்றிய இலக்கியவாதிகள் அநேகம் என்பது பலரும் அறிந்ததே. சங்க காலத்தில் பல பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாறோக்கத்து நப்பசலையார்.( எட்டு பாடல்கள் சங்க நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன ) இவர் கொற்கை அருகே உள்ள மாறமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். கொற்கையை தலைநகராக பாண்டியர் ஆண்ட காலத்தில், பொற்காசுகள், செப்புக்காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவற்றை இங்குள்ள அக்கசாலையில் தயாரித்துள்ளனர். அக்கசாலை என்பது பணம் அச்சடிக்கும் இடம் . கொற்கையில் உள்ள பொற்கொல்லர்கள் இங்கு தங்கியிருந்த இடத்தின் பெயர் அக்கசாலைத்தெரு. அங்கு விநாயகர் கோவில் இருந்ததால், அக்கசாலை பிள்ளையார் கோவில் தெரு என்பர். கோவலன் மதுரையில் கொலை செய்யப்பட்டவுடன் மதுரையை கண்ணகி எரித்தாள். அதே நேரத்தில் கொற்கையை ஆண்ட வெற்றிவேல் செழியன் என்ற பாண்டிய அரசன் பத்தினி தெய்வத்தை சாந்தப்படுத்த நினைத்து ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டான் என்று சொல்லப்படுகிறது. உயிருக்குப் பயந்து கொற்கையில் இருந்த பொற்கொல்லர்கள் இரவோடிரவாக புறப்பட்டு, திருநெல்வேலி வந்து குடியேறினர். திருநெல்வேலி நகரத்தில் அவர்கள் குடியேறிய தெருவே தற்போதும் அக்கசாலை தெரு என்று அழைக்கப்படுகிறது. கொற்கை நகரத்தில் அச்சடித்த நாணயங்களை பற்றி ஆராய்ந்து தென்னிந்தியாவின் பழங்காசுகளைப் பற்றிய ஒரு நூலை எழுதினார் வேலூர் டேனிஷ் லுத்தரன் மிஷன் பாதிரியார் உலோவந்தால். அவரது " திருநெல்வேலி காசுகள் " நூல் புகழ்பெற்ற ஒன்று. இவ்வகையில், பழந்தமிழகத்தில் கரன்சி அச்சிடப்பட்ட இடமாக முதன்முதலில் கொற்கையே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது. கொற்கையில் பல ஆண்டுகளாக நிற்கும் வன்னிமரத்தின் அடியில் சமண தீர்த்தங்கரர் ஒருவரின் சிலையை கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல் கொற்கை நகரில் பல்வேறு இடங்களில் தோண்டி பார்த்தபோது, பாண்டியர்கள் காசுகள் மட்டுமின்றி, ரோமானியர்கள்,அரபியர்கள்,நாயக்கர்கள் காசுகளும் கிடைத்துள்ளன. கிணறுகள் தோண்டும்போது, இரும்பினால் ஆன வாள்கள்,ஈட்டிகள்,அரிவாள்கள் கிடைத்துள்ளன. டில்லி சுல்தான் தளபதி ஒருவர் இங்கே வந்து கொற்கை நகரின் செல்வங்களை கொள்ளையடித்து டெல்லிக்கு அனுப்பியதாக ஒரு செய்தி உண்டு. மாலிக்காபூர் 1310 இல் படையெடுத்து வந்தபோதும், கொற்கை நகரில் இருந்து ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றான் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அக்கால மக்கள் இது போன்ற கொள்ளைகளுக்கு அஞ்சி தங்கள் ஊரின் ஒரு மைல் சுற்றளவில் தங்களின் செல்வங்களை புதைத்து வைத்தனர் என்றும் சொல்வார்கள். கொற்கை துறைமுகம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தூர்ந்து போயிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. கடல் உள்வாங்கியதால், இதன்பிறகு பழையகாயல் பாண்டியர்களின் துறைமுகமாக மாறியிருக்கிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த இத்தாலிய வணிகர் மார்க்கோபோலோ பழையகாயல் துறைமுகத்தில் தான் கப்பல் ஏறினார் என்று அவரது நாட்குறிப்பு கூறுகிறது. அவரது நாட்குறிப்பில் இங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை வியப்புடன் எழுதி வைத்துள்ளார். " இங்குள்ள மக்கள் தினந்தோறும் குளிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் வலது கையையே பயன்படுத்துகிறார்கள். இடது கையால் கொடுப்பது அவமதிப்பாக கருதப்படுகிறது. ஒருவரை பிடிக்கவில்லை எனில் காறித்துப்புகிறார்கள். அதன்பிறகு அவரது முகத்தில் விழிக்க விரும்புவதில்லை. மதுபானம் அருந்துவதை குற்றச்செயலாக எண்ணுகிறார்கள். இந்த நாட்டில் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை சரியாக குறித்து வைத்து ஜாதகம் என்ற ஒன்றை எழுதுகிறார்கள். அதைக்கொண்டு அந்த குழந்தையின் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று சொல்லி என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டார்கள். இங்குள்ள அரசன் உடம்பில் சட்டை அணிவதில்லை. பொன் அணிகலன்களை அணிந்துள்ளார். வீரத்தை போற்றுகிறார்கள். அறவுணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.. அயல்நாட்டினரை உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பு நிறைந்து இருக்கிறது ". ஒரு கட்டத்தில், பழைய காயலும், கொற்கையை போலவே செயல் இழந்து போக, பின்னர் வந்த போர்ச்சுகீசியர்கள் தூத்துக்குடியை துறைமுக நகரமாக உருவாக்கினார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலைநகரம் என்ற சிறப்போடு புகழ் பெற்று விளங்கியது கொற்கை. பிற்காலத்தில் மதுரை பாண்டியர்களின் தலைநகராக மாற்றப்பட்டது. மதுரையின் சிறப்பை எடுத்துக்கூறும்போதெல்லாம் கொற்கையின் சிறப்பையும் புலவர்கள் எடுத்துக்கூறுவது மரபாக இருந்து வந்தது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி மதுரையை புகழ்ந்து கூறும். அதே சமயம், புகழ் பெற்ற மூதூர் என்றும், முதிர்ந்த முத்துக்கள் மலிந்த மூதுடைப்பட்டினம் என்றும் முத்துக்குளிக்கும் முதுமக்கள் வாழும் முதுபெரும் நகரம் என்றும் கொற்கையை அந்த நூல் வியந்து போற்றுகிறது. இப்படி பெயர்பெற்று விளங்கிய கொற்கை நகரில், தமிழக தொல்லியல்துறை 1968 , 1969 ஆம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தியது. 12 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்தன. 1 .62 மீ ஆழத்தில் முதுமக்கள் தாழிகள், ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் செங்கற்சுவர்கள், உறைகிணறுகள், கழிவுநீர் கால்வாய்களும் இருந்தன. கார்பன் ஆய்வில் இவற்றின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது. " கொற்கைத்துறைமுகத்திலே - கண்ணே நீ கொண்டு வந்த கெட்டி முத்தோ குலசேகரப் பட்டினத்திலே- கண்ணே நீ குளிச்சு எடுத்த முத்தோ தூத்துக்குடி துறைமுகத்திலே- கண்ணே நீ துணிஞ்சு எடுத்த முத்தோ பாட்டி அடிச்சாளோ பால் முத்து சரத்தாலே பாண்டியரே உம்மாமன் பாலகனே கண்ணுறங்கு " எங்கோ நம் ஆதித்தாய் குழந்தையை தாலாட்டும் தாலாட்டில் மெய்மறந்து நாமும் கண்ணயர்வோமா ?

No comments: