Sunday, September 13, 2020
புதுமைப்பித்தன் (ஏப்ரல் 25 - பிறந்த நாளை முன்னிட்டு )
----------------------------
இவருக்கு எல்லாமே எள்ளல் தாம்..ஆனால் இலக்கிய விமர்சனம் என்று வந்து விட்டால் மனுஷன் நெற்றிக்கண்ணை திறந்து விடுவார்.
தனக்கு வேண்டியவர் என்பதால் அவரது படைப்புக்களை பாராட்டி விடமாட்டார். மனிதர் நக்கீரப்பிறவி தான்.
அவரோட நண்பர் சுடலைமுத்து அஞ்சல் துறையில் வேலை பார்ப்பவர்.
கூடவே கொஞ்சம் கவிதைப் பைத்தியமும் உண்டு. ஒரு பிரபந்தத்தை இயற்றி (!) புதுமைப்பித்தனிடம் நீட்டி,
" இதுக்கு ஒரு சிறப்புப் பாயிரம் எழுதிக்கொடும் ஓய்.." என்றார். நண்பர் என்பதால், பிரபந்தத்தை முழுவதும் கேட்டார்.
கேட்டபிறகு ஒன்றுமே சொல்லவில்லை.( மனுஷன் எப்படித்தான் பொறுமையுடன் கேட்டாரோ ).
சிறப்புப்பாயிரம் எழுதியே தர வேண்டும் என்று குரங்குப்பிடியாய் நிக்கிறார் நம்ம சுடலைமுத்து.
மளமளவென ஒரு தாளை எடுத்து ஒரு பாடல் எழுதினார் :
" அஞ்சல் சுடலைமுத்துவின்
ஆலகவி கேட்டவர்கள்
நெஞ்சம் உலர்ந்துபட்ட
நேர்மை என்னே ! - நஞ்சு தின்னும்
பிறந்திறவா வரம் பெற்றான்
பித்தனான என்றக்கால்
பிறந்திருப்பார் பெற்றி என்ன
சொல் ! "
பாடலின் அர்த்தம் புரிகிறதா ? கோனார் நோட்ஸ் தேவையே இன்றி
புரியும் என்று நினைக்கிறேன். காதில் ரகசியமாய் வந்து கேட்பவர்களுக்கு சொல்கிறேன்.
திருப்பாற்கடலில் உருவான விஷத்தை சிவபெருமான் பருகியது தேவர்களை காப்பாற்றுவதற்காக இல்லை ஐயா..நம்ம சுடலைமுத்துவின் கவிதைகளை கேட்ட கொடுமை தாங்காமல் பருகி விட்டார்..அவரால், தற்கொலையும் பண்ண முடியாத நிலைமை ஏற்பட்டு பித்தனாகி விட்டார்..ஆனானப்பட்ட ஆதிசிவனுக்கே இந்த நிலைமை எனில், சாதாரண மானிடப்பிறவிகளான மக்களின் கதி என்னவாகும் ?
அன்றோடு போனவர் தாம் சுடலைமுத்து.
************************************
ஞானராஜசேகரன் தயாரித்த " பாரதி " திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.
பீஜித்தீவில் கண்ணீர் விடும் தமிழ்பெண்களை எண்ணி பாரதி
கவிதை வரிகளை எழுதும்போதே, கண்ணீர் விட்டு அழுவார் :
" நாட்டை நினைப்பாரோ ? எந்த
நாளினிற் போயதைக்
காண்போமென்றே அன்னை
நாட்டை நினைப்பாரோ ?- அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே ! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுங்குரல்
மீட்டும் உரையாயோ ?...
.. .. .. .. .. .. .. .. .. .. "
இந்தக்காட்சி எவரின் மனதையும் தொடும். இந்த கவிதை வரிகளில் இருந்தே புதுமைப்பித்தனின் " துன்பக்கேணி " உருவாகியது.
இலங்கை தேயிலை தோட்டத்தில் வெள்ளைக்காரர்களின் பொருளாதார சுரண்டலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளான தமிழ்ப்பெண்களின் குரலை தனது நீண்ட நெடுங்கதையில் பதிவு செய்தார்.
அந்தக்கதையில் " வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது " என்ற வரிகளை போகிறபோக்கில் எழுதி இருப்பார்.
வெள்ளக்கோவில் சுடுகாட்டு அருகே உள்ள பனைவிளையில் இருக்கும் மருதாயி கிழவியிடம் மூக்குடை பட்டு திரும்பும் எமதர்ம ராஜாவைப்
பார்த்தால், நமக்கே பரிதாபமாய் இருக்கும்.
சாகப்போகிற கிழவியைப்பார்த்து " நான்தான் எமன்.." என்று விஸ்வரூபம் எடுத்து காட்சி தரும்போது,
"அப்படியா..வா..இப்படி இரி .." என்று காலை நீட்டி வெற்றிலையை தட்ட தொடங்கும்போதே, எமனின் கம்பீரம் மறைந்து போகும்.
" உன்னாலே என் உசுரைத்தானே எடுத்துக்கிட்டு போவ முடியும் ?
இந்த உடலைத் தூக்கிட்டு போவ உனக்கு திறமை இருக்கா ?
ஒன்னை வேறயா மாத்த முடியும்..உன்னால அழிக்க முடியுமா ? அடியோட இல்லாம ஆக்க முடியுமா ? அதை உன்னைப்படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே ! அப்புறமில்ல உனக்கு ?
பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே ?" என்று பொக்கை வாயை திறந்து கிழவி சிரிக்கையில், எமன் மட்டுமா..நாமே வாயடைச்சு நிக்கிறோம்.
இது தான் புதுமைப்பித்தனின் அசலான எழுத்து.
********************************
" மனிதன் கடவுளைப் படைத்தான் ;
அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்..
இருவரும் மாறி மாறி போட்டி போட ஆரம்பித்தார்கள் ;
இன்னும் போட்டி முடியவில்லை.
நேற்று வரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப்பிறந்த
மனிதன் ஈடுகட்டிக்கொண்டு வந்தான்."
என்று துவங்கும் " சாமியாரும் குழந்தையும் சீடையும்" கதையின் களம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் படித்துறை.
படித்துறையில் அமர்ந்து தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சாமியார்.
அருகே சற்று தள்ளி நான்கு வயது பெண் குழந்தை...
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடது பக்கம் சுலோச்சன முதலியார் பாலம்..முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டிய பாலம். கட்டபொம்முவின் துபாஷ் இராமலிங்க முதலியார் மகனான சுலோச்சன முதலியார் கட்டியது என்பதில் திருநெல்வேலிக்காரர்களுக்கு அபாரப்பெருமை என்று கிண்டல் செய்கிறார் புதுமைப்பித்தன்.( இப்பவும் பாலம் கட்டி நூற்றி எழுபத்தாறு வருஷம் ஆச்சு என்று வருஷா வருஷம் கொண்டாடிட்டு இருப்பதை
பார்த்தால் என்ன சொல்வாரோ ?)
பாவாடையில் சீடையை கட்டிக்கொண்டு வந்த குழந்தை காலை தண்ணீரில் விட்டு ஆட்டிக்கொண்டே அப்பப்ப சீடையை தின்கிறது.
சின்ன கால்காப்புகள் தண்ணீரில் இருந்து வெளிவரும்போது, சூரிய கிரணம் அதன் மேல் பட்டு கண் சிமிட்டும். அடுத்த நிமிடம் கிரகத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும்.
சூரியனாக இருந்தால் என்ன ? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்து தான் ஆகவேண்டும்.
கதையை வாசித்து விட்டு வருகையில், இந்த இடத்தை கடக்க முடியாமல் வியந்து நிற்க வைப்பார் புதுமைப்பித்தன்.
" மனிதன் நல்லவன்தான். தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அது தன்னிடமிருந்ததாக அவனுக்கு தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்." என்று சாமியார் சொல்லும்போது வேறேதோ நம் மனக்கண்ணில் ஓடினால், அது அவரின் தவறல்ல.
" மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்கு கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்க தெரியாது. அழியும்வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது ."
என்று மேலும் சொல்லிச்சென்ற சாமியாரின் சொற்கள்
அர்த்தம் மிக்கவை. அவை சாமியாரின் சொற்களா ? இல்லையில்லை..
புதுமைப்பித்தனின் சொற்கள்..
அந்த கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை..அனந்த கோடி வருஷங்களில் ஒருவராவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே !
" உயிரற்ற மோட்ச சிலையே..உன்னை உடைக்கிறேன் "
சாத்தனின் கோபம் நியாயமானது..
என்ன..இந்தக்கதை வாசிப்பவன் எவனும் கோவிலுக்குப் போவதில்லை.
வாசித்தவன் கோவிலுக்கு சென்றால் ..சிலையின் மகோன்னதத்தை உணர முடியும்..
மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க ஒளிச்சுடராய் தெரிகிறான் புதுமைப்பித்தன்...!
-----------------------------------இரா.நாறும்பூநாதன்
Tweet
மொகைதீன் வாத்தியாரும், எலக்ட்ரிக் குக்கரும் ( சிறுகதை )
---------------------------------------------------------------------------
" இங்கன கோபால் வீடு எங்க இருக்கு ?"
காஜா மொகைதீன் வாத்தியார் தனது பழைய ஹெர்குலஸ் சைக்கிளில் இருந்து இறங்கி தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம்
கேட்டார். இந்த தெரு என்று தானே சொன்னாங்க..!
" எந்த கோபாலு ?" அவர் காம்பவுண்டின் வெளியே நின்றிருந்த வேப்ப மர கொழுந்து இலைகளை பறித்தபடி கேட்டார். இப்பவும் வேப்பிலைக்கொழுந்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் போல..நல்ல இளசாய் ஒரு கொத்து அவரின் கைகளில் இருந்தது.
" முழுப்பெயர் ராஜகோபால் ன்னு நெனைக்கேன்.."
மொகைதீன் வாத்தியார் முகத்தில் வழிந்த வியர்வையை கைகளால் துடைத்துக்கொண்டார்.
" மிலிட்டரி ல வேலை பார்த்தார்னு சொல்வாங்க.."
வாத்தியாருக்கு அதில் உறுதியாய் தெரியாமல் மெல்ல இழுத்தார்.
" மிலிட்டரி ராஜாவா ..இதுலேயே நாலு வீடு தள்ளி பச்சை கலர் அடிச்ச வீடு தெரியுதா..முன்னாலே நாவல் மரம் நிக்குதுல்லா ..அந்த வீடு தான்"
தெரிந்தது. நல்ல வேளை, ரொம்ப அலையாமல் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்த ஊரில்தான் அம்பது வருஷமா இருக்கோம்..ஊரே ரொம்ப மாறி விட்டது. ரிடையர் ஆகியே பதினைஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகுது.
" ரொம்ப தேங்க்ஸ் சார்..அவன் என்னோட ஸ்டுடென்ட் தான்.."
இப்படி சொல்லும்போது சற்று பெருமிதமாக நெஞ்சை உயர்த்திக்கொண்டார். மிலிட்டரி ராஜாவுக்கு நல்ல பேரு இருக்கும் போல என நினைத்தபடியே வாத்தியார் சைக்கிளை மீண்டும் மிதிக்காமல் மெல்ல உருட்ட தொடங்கினார்.
இந்த தெருவிற்குப்பெயர் பிச்சுவனத்தெரு. ஒரு காலத்தில் இங்கே உள்ள நந்தவனத்தில் இருந்து கோபாலசாமி கோவில் பெருமாளுக்கு பூக்கள் போகும் . மஞ்சள் செவ்வந்திப்பூ, அரளிப்பூ, பிச்சிப்பூ என மாலைகள் கட்டிக்கொண்டு போவார்கள். முப்பது வருஷத்திற்கு முன்பு வாத்தியார் இந்த தெருவின் வழியாகத்தான் சைக்கிளில் சென்று,
தெற்கு பஜார் லூர்துநாதன் சிலைக்கு பின்னால் உள்ள அஸ்போர்ன் பள்ளிக்கு செல்வார். அப்போது தெரு ரொம்ப விசாலமாய் இருந்தது.
இப்போது தெரு முழுக்க செல்போன் கடைகள்..நகலெடுக்கும் கடைகள்..
ஜெராக்ஸ் எடுக்க பக்கம் ஒன்றிற்கு ரூ.2 என்று பெரிது பெரிதாய் விளம்பரம் வேறு. ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் கருவியை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் என்றே தெரியாமல் தமிழர்கள் இப்படி மூடர்களாய் இருக்கிறார்களே என்று வாத்தியாருக்கு பல சமயங்களில் கோபம் பழியாய் வரும். பேரன் கரீம் ஒருமுறை சொன்னபோது, அவனை பக்கத்தில் அழைத்து சொன்னார்.
" ஜெராக்ஸ் இல்லை ப்பா..போட்டோ காப்பி ன்னு சொல்லணும்..சரியா.."
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அடுக்களையில் இருந்து
மருமகள் ஆயிஷா " அப்படி சொன்னா யாருக்கு தெரியும் ..
ஊரோட ஒத்து வாழனும்.." என்று குரல் கொடுத்தாள்.
நல்லதை சொன்னால் யார் இங்கே கேட்கிறார்கள் ? கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.
பச்சைக்கலர் அடித்த வீட்டிற்கு முன் வந்து நின்றார். சைக்கிளை நவாப்பழ மரத்தின் முன் நிறுத்தி விட்டு, மரத்தை நோட்டம் விட்டார்.
இப்போ சீசன் இல்லை போல. இலைகள் செழித்து இருந்தன .
வீட்டின் தார்சா மூடியிருந்தது. அந்தக்கால அழி போட்ட வீடு. கோபாலின் பூர்வீக வீடாக இருக்கக்கூடும். அழைப்பு மணியை அழுத்தவா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தார்.
கோபால்னு கூப்பிடவா..ராஜகோபால்ன்னு கூப்பிடவா..
" கோபால் சார்.." என்று லேசாக செருமியபடி கூப்பிட்டார். கூப்பிட்டது தனக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை. அது என்ன கோபால் சார் ! தனது மாணவன் தானே ..
" கோபால் தம்பீ..."
மனம் ஒன்று நினைக்குது, வாய் ஒன்றை சொல்கிறது.
" யாரு..." உள்ளிருந்து கனத்த குரல் வந்தது...நல்லவேளை, தம்பி வீட்டில்தான் இருக்கான். கவலையில்லை..வந்தவேலை பாதி முடிந்தமாதிரி நினைக்க தொடங்கினார்.
கதவை திறந்தவர் " யார் நீங்க.." என்று கேட்டு விட்டு, அடுத்த கணமே
" மொகைதீன் சார் தானே ...உள்ளே வாங்க.."
என்று உள்ளே அழைத்தார். நெற்றியில் திருநீறு குங்குமம் பளிச்சிட்டது.
ராஜகோபால் முகம் ரொம்ப மாறி விட்டதோ ? பெயரையும் டவுசர் போட்ட பழைய உருவத்தையும் இணைக்க முயன்றார்.
" தம்பி குளிச்சுட்டு இருக்கான்..இப்ப வந்துருவான்..
இப்ப இங்கே தான் இருக்கீங்களா ?" என்று அவர் சொன்னபிறகு தான், இவர் அவன் அண்ணன் என்பதை உணர்ந்து கொண்டார்.
" ஓ..அப்படியா..வரட்டும் வரட்டும்..அவசரமில்லை.." என்றபடியே அங்கே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தார். அந்தக்காலத்து நாற்காலி.
ரோஸ் மரத்தில் செய்ததாக இருக்க வேண்டும்.
" நானும் அதே ஸ்கூல்ல தான் படிச்சேன்..நான் வேதநாயகம் சாரிடம் படிச்சேன்..தம்பி தான் உங்க கிட்டே படிச்சான்.."
அவராய் தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டார்.
" ஓகோ...வேதநாயகம் சார் போய் சேர்ந்திட்டார்...நான் தான் இன்னும்
உலகிற்கு பாரமாய் இருக்கிறேன்.." என்று சொன்னவர்,
" தம்பி...உங்க பேரு என்ன " என்றார்.
வாத்தியார் கழிவிரக்கத்துடன் சொன்னதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ,
" சீனிவாசன்..ரோடு கான்ட்ராக்ட் எடுத்து செய்றேன்.." என்றபடியே உள்ளே சென்றார். பட்டும் படாத டைப் போல..
கோபால் அப்படி இருக்க மாட்டான் என்று உள்ளுணர்வு சொல்லியது.
அறையை நோட்டமிட்டார். ராமர் பட்டாபிஷேகம் போட்டோ நேர் எதிரே தெரிந்தது. பொதுவாய் இதெல்லாம் பூஜை அறையில் தானே வைத்திருப்பார்கள் என்று நினைத்தார். அடுத்து ஒரு பெரியவர் படம்..
மாலை போட்டபடம்..கோபாலின் அப்பாவாக இருக்குமோ என்னவோ ?
நாமாக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும் ? வேறு யாராகவும் இருக்கலாம். எழுபத்தாறு வயதில் நாம் இருக்கும்போது, அவன் அப்பாவும் இருக்கலாம்..தப்பு..தப்பு...
" சார்..வாங்க..வாங்க..." உள்ளே இருந்து வந்தவர், ராஜகோபாலாகவே இருக்க வேண்டும், நேராக காஜா மொகைதீன் வாத்தியாரின் பாதந்தொட்டு வணங்கினார்.
" தம்பி...எழுந்திரிங்க..எதற்கு இதெல்லாம்.." வாத்தியார் மனசெல்லாம் பூரித்து விட்டார். அந்தக்காலத்து மாணவர்கள் மாணவர்கள் தாம்..
அவர் மனதில் நம்பிக்கை துளிர்த்தது.
" சார்..நல்லா இருக்கீங்களா..பெரிய பள்ளிவாசல் தெருவில் தான் இருக்கீங்களா..பேரன் பேத்திகள் எல்லாம் நல்லா இருக்காங்களா "
ராஜகோபால், வாத்தியார் முன்பு உட்காராமல் சற்று தள்ளி நின்றான்.
" நீங்க உட்காரலாமே..நின்னுகிட்டு பேசறீங்களே.."
வாத்தியார் தடுமாறினார்.
" சார்..என்ன நீங்க.. என்னைப்போயி நீங்க நாங்கன்னு பேசிக்கிட்டு..நான் உங்க மாணவன்..உங்க கிட்டே கணக்கு படிக்கலேன்னா நான் எஸ்எஸ்எல்சி தாண்டி இருக்க மாட்டேன்.." கோபால் பற்கள் வெளியே தெரிய சிரித்தான்.
வாத்தியாருக்கு நெஞ்சு விம்மியது. காரியம் பழம் தான் என்று மனதுள் சொல்லிக்கொண்டார்.
" உங்களை ரெண்டு மட்டம் ரோட்டில் பார்த்து விஷ் பண்ணி இருக்கேன்..
உங்களுக்கு மறந்திருக்கலாம்.." என்றான் கோபால்.
" நீ நல்லா படிக்கிறவன் தானே..பிறகு எதுக்கு பட்டாளத்திற்கு போனே "
வாத்தியார் உறுதிப்படுத்தும் நோக்கில் கேட்டு விட்டார். அவர் காலத்தில், படிப்பு வராதவன் தான் பட்டாளம் போவான் என்பது விதி.
" ரொம்ப நல்லா படிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது சார்..
காலேஜ்ல படிக்கும்போது, ஏர் போர்ஸ்ல சேரச்சொல்லி சித்தப்பா ஒருத்தர் சொன்னதால எழுதினேன்..குருட்டாம்போக்குல கெடைச்சதோ என்னவோ..டெல்லியிலும் நாக்பூர்லயும் பதினைந்து வருஷம் இருந்தேன்..பிறகு இங்கே வந்துட்டேன்..இப்போ பேங்க்ல வேலை..
பாளையங்கோட்டை வந்து மூணு வருஷந்தான் ஆகுது.."
ராஜகோபால் சுருக்கமாய் சொல்லி முடித்தான் தனது கடந்தகால வாழ்க்கையை.
" வாங்க.." என்று வணங்கியபடி, உள்ளே இருந்து வந்த பெண்மணி டீப்பாயில் காப்பியும், காராசேவும் கொண்டு வந்து வைத்தார்.
" சார்..எனக்கு கணக்கு வாத்தியார்..சாரைப்போல யாரும் கணக்கு சொல்லித்தர முடியாது." என்று சொன்ன கோபால்,
" சார்..இது என்னோட மனைவி .." என்று அறிமுகம் செய்வித்தான் வாத்தியாரிடம். அந்த பொண்ணு மீண்டும் வணக்கம் சொன்னார்.
லட்சுமிகரமான முகம். சாந்தமான பெண் என்பதை முகமே உணர்த்தியது. மனதில், சம்பந்தமே இல்லாமல் மருமகள் ஆயிஷாவின் முகம் தோன்றி மறைந்தது.
" பேசிக்கிட்டு இருங்க " என்று புன்னகைத்த அவன் மனைவி உள்ளே சென்று விட்டாள். ஆமாம் பேசவேண்டும் தான். வந்த வேலையை மறந்து ஏதேதோ பேசினால் எப்படி..
எப்படி துவங்க..நாம் கேட்பதை நினைத்தால், நம்மை பற்றி என்ன நினைப்பானோ கோபால் ..ரொம்ப மரியாதையாய் பேசுகிறான்..வாத்தியார் ரொம்ப அற்பமாய் கேட்கிறாரே என்று கூட நினைக்கலாம்..மீண்டும் முகம் வியர்த்தது. குனிந்து வேட்டியால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
" ஏர் போர்ஸ்ல இருந்துட்டு, பேங்க் வேலை பார்க்க ஈஸியா இருக்கா "
ஏதாவது கேட்கணுமே என்று கேட்டார். மனம், முதல் உரையாடலுக்காய் ஒத்திகை பார்த்தது.
" அதெல்லாம் என்ன சார் கஷடம்..அது ஒரு மாதிரி..இது ஒரு மாதிரி..
ஆசைப்பட்டதற்கு பதினைந்து வருஷம் நாட்டுக்காக வேலை பார்த்தாச்சு.." என்று சிரித்தான் கோபால்.
" ஆமாமா...தேசத்துக்காக எல்லையில வேலை பார்த்தது பெருமை தானே..எனக்கே ரொம்ப பெருமையாய் இருக்கு..என்னோட மாணவன் ராணுவத்துல வேலை பார்த்தான்னு சொல்றது " வாத்தியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இதை இந்த நேரம் சொல்லலாமா வேண்டாமா என்று மனம் தத்தளித்தது.
தார்சாவில், கோபால் நீலநிற சீருடையில் இருக்கும் படத்தை பார்த்தபோது,மேலும் தயங்கினார்.
" உங்க கிட்ட படிச்ச கணக்கு எப்போதுமே மறக்காது..சார்.."
கோபால் இன்னமும் உட்காராமல் நின்று கொண்டே பேசியது, அவன்மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது.
லேசாக செருமியபடி, " எனக்கு ஒரு உதவி ...உன்னாலே ஆகணும்.."
என்று துவங்கினார்.
" என்ன உதவி சார்...உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறேன்..
சொல்லுங்க சார்.." கோபாலின் வார்த்தைகள் அவருக்குள் நம்பிக்கையை தோற்றுவித்தது.
" எனக்கு ஒரு டேபிள் பேனும், எலக்ட்ரிக் குக்கரும் வாங்கணும்.."
என்று சொன்ன மொகைதீன் வாத்தியாரை வியப்புடன் பார்த்தான் கோபால்.
" நீ ராணுவத்தில் வேலை பார்த்ததால, மிலிட்டரி கான்டீன்ல குறைஞ்ச விலைக்கு உனக்கு தருவாங்களாமே..கேள்விப்பட்டேன்..இப்பவும் தருவாங்க ள்ள..என்கிட்டே இருக்குற பழைய சீலிங் பேனு ரிப்பேர் ஆயிட்டு..அதை ஒக்கிடணும்னா ரொம்ப செலவாகும்னு சொல்றாங்க. என்னோட மருமகள் எலக்ட்ரிக் குக்கர் வேணும்னு என்னோட மகன் கிட்ட ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கா..அவனும் அந்தா இந்தான்னு சொல்லிட்டே இருக்கான்..அவனும் என்ன செய்வான் பாவம்..ஒண்ணுக்கு மூனா பிள்ளைகள் இருந்தா என்ன பண்ணுவான்
..என்னோட வீட்டுக்காரி மூத்த பையனோட வாணியம்பாடியில் இருக்கா..பிள்ளைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே..
வாத்தியான் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..ரெண்டு பேரும் மக்கு இல்லைதான்..ஆனாலும், நல்ல வேலையில உட்காரலை..இன்ஷா அல்லாஹ்..அவன் தான் நல்லது நடக்க உதவி பண்ணனும்.."
என்று மேலே பார்த்து சொன்னவர்,
" தம்பி..இப்ப என்கிட்ட ரெண்டாயிரத்து சொச்சம் இருக்கு..எவ்வளவு ஆகும்னு தெரியல..மருமகள்ட்ட கூட கேட்டேன்.." அது தெரிஞ்சு உமக்கு என்னாகப்போகுது..குக்கரு கெடைச்சாலும் கெடைக்காட்டியும் உங்களுக்கு வேணும்கிறதை தராமல் பட்டினி போட்டுற மாட்டேன்.."
என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி சொல்லிட்டா..வாங்குற பென்ஷன் பணத்தில் பாதி வீட்டு லோனுக்கு தான் கொடுக்குறேன்..புது வீடு இல்ல..
இப்ப இருக்குற பழைய வீடு மழைக்காலத்துல ஒழுகுச்சு..அதை ரிப்பேர் பார்க்க மோட்டார் வைக்கன்னு அஞ்சு லட்சம் ஆயிருச்சு..
அதெல்லாம் பெரிய கதை..நம்ம கஷடத்தை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு நேரத்தை வீணடிச்சுட்டு இருக்கேன்.." என்று எழுந்தவர்,
அவன் அருகே சென்று, " இந்த ரூபாயை பிடிங்க..நீங்க உங்களுக்கு வாங்குவதாய் நினைச்சு வாங்கி, எனக்கு அன்பளிப்பாய் கொடுப்பதாக நினைச்சு கொடுப்பீங்களா.." என்று கோபால் கையில் பணம் உள்ள கவரை திணித்தார் வாத்தியார்.
" சார்..அதெல்லாம் வேண்டாம்..பணமெல்லாம் இருக்கட்டும்..
நாலு லீப் வைச்ச பேனும், நல்ல எலக்ட்ரிக் குக்கரும் வாங்கி தரேன் சார்..
இதை நீங்க வந்து சொல்லனுமா..யாரிட்டயாவது சொல்லி விட்டால் போதாதா.."
என்று கோபால் பணத்தை அவரிடமே திரும்ப கொடுத்தான்.
" இல்ல கோபால்..பணத்தை முதல்ல வாங்குப்பா..இந்த மாதிரி வாங்குறதே ஒரு வகையில் தப்பு தான்..என்னோட இயலாமையிலே கேட்டுட்டேன்.." வாத்தியார் மீண்டும் கவரை தந்தார்.
" நான் வாங்கி கொடுத்துட்டு, அப்புறமாய் கண்டிப்பாய் வாங்கிக்கறேன்..
இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வந்தது தான் கஷடமாய் இருக்கு.."
என்று கோபால் சொல்லி விட்டு, வாத்தியாரை அமர செய்தான்.
" நேரமாச்சுப்பா...உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம்..மருமகள் மார்க்கெட் வரை போயிருக்கிறா ..அவள் வரமுன்னாடி உன்னை பார்த்துட்டு போயிரணும்னு தான் வந்தேன்..பார்த்துட்டேன்..நீ நல்லா இருக்கணும் பா..இன்ஸா அல்லாஹ்.."
தட்டு தடுமாறி எழும்பினார் மொஹைதீன் வாத்தியார்.
" வீட்டுல சொல்லீருப்பா..அண்ணன் இருந்தாரே..போயிட்டாரா..அவர்ட்டயும் சொல்லீரு..நல்ல மனுஷன்..
அப்ப நான் வரட்டுமா..."
கிளம்பிய வாத்தியாரின் கையை பிடித்தபடி வெளியே அழைத்து வந்தான் கோபால்.
" இந்த பணம் உன்கிட்டேயே இருக்கட்டுமே..செலவழிஞ்சு போயிருமோன்னு பயமாவும் இருக்கு.." என்று மீண்டும் வாத்தியார் பணம் இருந்த கவரை கொடுக்க முயன்றார்.
கோபால் அதனை வாங்காமல், அவரது வெள்ளை கதர் சட்டையின் பைக்குள் வைத்து அவரை வணங்கினான். உள்ளே அவனது செல்பேசி ஒலிக்க தொடங்கியது. வேகமாய் உள்ளே வந்தான். ஏர்டெல் விளம்பர அழைப்பு..எதிர் அறையில் இருந்து அண்ணன் சீனிவாசன் வெளியே
வந்தார். " துலுக்க வாத்தியான் இதுக்கு தான் வந்தாரா " என்று நக்கலுடன்
கோபாலை பார்த்து கேட்டபோது,
" அண்ணே..என்ன இருந்தாலும் அவரு நம்ம வாத்தியாரு.."
என்றான்.
" ஆமாமா..வாத்தியாரு தான்..இன்னும் கொஞ்ச நாள்ல பாகிஸ்தான் போகப்போற வாத்தியாரு..அங்கெ போயி கேக்க சொல்லு.."
சீனிவாசன் இளக்காரமாக சிரித்தார்.
" இப்படிலாம் பேசாதீங்க..நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அப்படி எதுவும் நடக்க போறதில்ல.." என்றவன், வேகமாய் வாசலுக்குப்போனான்.
நவாப்பழ மரத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் மொகைதீன் வாத்தியார். அவர் காதில் எதுவும் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் வலது காதில் மாட்டியிருந்த செவிட்டு மெஷின் சொல்லியது.
கேட்டிருக்காது. அவர் ஸ்டான்ட் எடுத்து விட்டு, தனது ஹெர்குலஸ் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்..
-------------------------------------------இரா.நாறும்பூநாதன்
Tweet
பெருமைமிகு நெல்லைச்சீமை - 8
------------------------------------------------------
கிளாரிந்தா சர்ச், பாளையங்கோட்டை
வருடம் : 1770
இடம் : தஞ்சாவூர் , வெண்ணாற்றங்கரை
ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கரையோரம்
சந்தனக்கட்டைகள் அடுக்கப்பட்ட சிதையில் ஒரு சடலம். தஞ்சை சாயாஜி மன்னனின் அரண்மனையில் பணிபுரிந்த திவானின் உடல் தான் எரிந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் திவானின் உறவினர்களும் அரண்மனை ஊழியர்களும்.
மேளச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சிதை அருகே சிவப்பு பட்டு சேலையணிந்த இளம்பெண்ணொருத்தி.
அவள் கோகிலா. இறந்த திவானின் மனைவி.பிராமண சமூகத்தை சேர்ந்தவள். கழுத்தில்மலர் மாலையணிந்திருந்தாள். சிதையை அவள் வலம் வந்தபோது
சுற்றியிருந்த கூட்டம் கூவியது.
" சதி மாதா கி ஜே "
கோகிலாவின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப்போலவே அவள் கண்களும் ஒளியோடு பிரகாசித்தன. மேளச்சத்தம் தொடர்ந்து விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. கூட்டம் மீண்டும் ஆரவாரித்தது.
" சதி மாதா கி ஜே "
அடுத்தகணம், சுற்றியிருந்த அரசகுல ஆண்கள், கோகிலாவை அலாக்காக தூக்கி எரியும் நெருப்பில் போட்டனர். பெண்கள் குரவையிட்டனர்.
அதே கணத்தில் -
யாரும் எதிர்பாராத வகையில், குதிரையில் வந்த ஆங்கிலேயப்படையின் அதிகாரி லிட்டில்டன், சிதைக்குள் விழுந்த கோகிலாவின் தலைமயிரைப்பிடித்து தூக்கி இழுத்தவன், தனது குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவளைக்கிடத்தினான்.
கோகிலாவை இளம்வயதில் இருந்து வளர்த்து வந்த சாரதா என்ற வேலைக்கார பெண்மணியும் உடன் ஏறிக்கொண்டாள்.
அவள்தானே ஆங்கிலேயப்படையை அழைத்து வந்தவள் !
படைகள் பின்தொடர, சாரட் வண்டி புயலெனப்புறப்பட்டது.
மயானக்கரையில் கூட்டம் செய்வதறியாது திகைத்து நின்றது.
--- -- -- -- -- -- --
அந்த புராதன பங்களாவின் வராண்டாவில் இருந்தபடி ஆங்கிலேயே அதிகாரி லிட்டில்டன் புகைத்துக்கொண்டிருந்தார். நடந்து முடிந்த
அநியாயத்தை அவரால் ஜீரணிக்க இயலவில்லை.
" கணவன் இறந்தவுடன், மனைவியை உயிரோடு நெருப்பில் போட்டு
எரிக்க நினைக்கிறார்களே ..முட்டாள் ஜனங்கள் "
சாரட்டில் தூக்கி வந்து, உடனடியாய் மருத்துவரை அழைத்து வந்து தீக்காயங்களுக்கு மருந்திட்டு படுக்க வைத்துள்ளார். எனினும், கூந்தலின் ஒரு பகுதி நன்றாக எரிந்து விட்டது. முதுகுப்பகுதியிலும் தோள்பட்டையிலும் கடுமையான தீக்காயங்கள்..இடையிடையே வலியில் வீறிட்டு அலறுகிறாள் கோகிலா. அவளது பணிப்பெண் சாரதா தான் அருகில் இருந்து அவளை கவனித்துக்கொள்கிறாள்.
சதியில் தள்ள முடியாத வைதீகக்கூட்டம், தஞ்சை மன்னரிடம் சென்று முறையிடுகிறார்கள். ஒரு பறங்கியன் தங்களின் குடும்ப சடங்குகளில் தலையிடுவதா என்று ஆவேசப்படுகிறார்கள். மன்னரும் லிட்டில்டன்னை வரச்சொல்லி பேசுகிறார். வாழவேண்டிய ஒரு இளம்பெண்ணை கணவனோடு எரிப்பது என்பது மோசமான மூடநம்பிக்கை. தன்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு திரும்புகிறார்.
சில நாட்களில், கோகிலாவின் தீக்காயங்கள் ஆறி, தழும்புகள் ஏற்படுகின்றன. கைகள், தோள்பட்டை,இடுப்பு, கால் பகுதி என வெள்ளை வெள்ளையாய் தேகமெங்கும் தழும்புகள்..முகம் மட்டும் பவுர்ணமி நிலவென பிரகாசிக்கிறது. தன்னைக் காத்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில்டன்னை மனதுள் பூஜிக்கிறாள். எவ்வளவு உயர்ந்த மனிதர் !
அவளும், பணிப்பெண் சாரதாவும் பங்களா விற்கு பின்புறம் இருக்கும் தனி வீட்டில் இருக்கிறார்கள். தேவையின்றி அந்த ஆங்கிலேய அதிகாரி வருவதில்லை. மிகுந்த கண்ணியத்துடன் பேசுவார்.
லிட்டில்டன் இப்போது கோகிலாவிடம் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். கோகிலா அவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள்.
இருவரும் தினம் உரையாடுகிறார்கள். தான் உயிருடன் வாழ அனுமதிக்காத மதத்தில் இனியும் இருக்க வேண்டுமா என நினைக்கிறாள். " வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் " என்ற பைபிள் வசனம் அவளை ஈர்க்கிறது. கோகிலாவிற்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது.
அவளும் லிட்டில்டன்னும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர்.
கோகிலா மதம் மாற சம்மதிக்கிறாள். அந்த நேரத்தில், தஞ்சையில் இருந்த ஜெர்மன் பாதிரியார் ஸ்வார்ட்சிடம் ஞானஸ்நானம் பெற செல்கின்றனர்.
ஆனால், உயர்குல பெண்ணான கோகிலாவை லிட்டில்டன் திருமணம் செய்துகொள்வதை பாதிரியார் ஸ்வார்ட்ஸ் விரும்பாததால், கோகிலாவை மதம்மாற அவர் அனுமதிக்கவில்லை. (இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிட்டில்டன் ஏற்கனவே திருமணமாகி, மனைவியோடு மனஸ்தாபம் ஆகி பிரிந்து வாழ்கிறார் என்பதும் சொல்லவேண்டிய செய்தி ) எனினும்,இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு living together ஆக வாழ முடிவெடுத்தனர்.
ஆங்கிலேயப்படை அதிகாரி லிட்டில்டன் திருநெல்வேலிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கோகிலாவையும் உடன் அழைத்து வருகிறார். இவர்களோடு பணிப்பெண் சாரதாவும் அவளது மகன் கோபாலனும் வருகின்றனர்.
காவிரியாற்றில் வளர்ந்த கோகிலாவிற்கு, திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றின் குளிர்ச்சியும் தென்பொதிகை தென்றலும் புதிய உற்சாகத்தை அளிக்கின்றன. இங்கே அவளுக்கு புதிய வாழ்க்கை துவங்குகிறது. பெயரை கிளாரிந்தா என்று அவளே மாற்றிக்கொண்டாள்.
மூட நம்பிக்கையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றால், அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்து பெண் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து பாடம் சொல்லிக்கொடுக்கிறாள்.
இந்நிலையில், லிட்டில்டன் மீண்டும் இங்கிலாந்து தேசம் திரும்பியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் அவர் இந்தியா வரவில்லை.
அவர் சூலை நோய் ஏற்பட்டு இங்கேயே இறந்து விட்டார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.
ஏழைக்குழந்தைகளுக்கு புராணங்களில் இருந்தும், விவிலியத்தில் இருந்தும் குட்டி குட்டிக்கதைகளை சொல்லிக் கொடுத்தார் கிளாரிந்தா. வீட்டருகில் ஒரு துவக்கப்பள்ளியை துவக்கினார். 18 மாணவ,மாணவியர் படித்த அந்தப் பள்ளி தான் குளோரிந்தா பள்ளி. தென் தமிழகத்தின் முதல் பள்ளியும் அது தான். இரண்டு ஆசிரியைகளை நியமித்தார். அவரே ஊதியமும் வழங்கினார்.
பாளையங்கோட்டையில் நடந்த ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஐரோப்பிய பாதிரியார் ஒருவர் வந்தபோது, அவரிடம் சென்று ஞானஸ்நானம் பெற, கோகிலா என்ற கிளாரிந்தாவும், அவளது பணிப்பெண் சாரதாவும் உற்சாகமாக சென்றனர்.
இவர்களோடு பல குழந்தைகளும் வரிசையில் நின்றனர்.
அருகில் நெருங்கி வந்தபோது தான் கிளாரிந்தா கவனித்து திடுக்கிட்டார்.
எதிரே நின்று கொண்டிருந்தவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த மிஷனரி ஸ்வார்ட்ஸ் .
அவர் கோகிலாவை ஏறெடுத்துப் பார்த்தார்.
(தொடரும் )
Tweet
கழுகுமலை
--------------------
கீழே இருந்த மலைச்சரிவில் உளிச்சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்த தந்தை சிற்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தான் இந்த ஊரில் எவ்வளவு பெரிய சிற்பி. தனக்குத் தெரியாமல் இன்னொரு சிற்பி இந்த ஊரில் வந்து சிற்பங்களை செதுக்குவதா என்ற கோபத்தில், தனது கையில் இருந்த உளியை தூக்கி கீழே எறிந்தாராம். வேகமாய் வந்த உளி, வெட்டுவான்கோவில் சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருந்த சிற்பியின் கழுத்தில் பட்டு " அப்பா.." என்ற அலறியபடியே கீழே விழுந்தானாம்.
ஓடிவந்து பார்த்த தந்தை சிற்பி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது மகனைப்பார்த்து கதறி அழுதாராம். இறந்து போன மகனைப் பார்த்த அந்தக்கணத்தில் தான் அவன் அழகுற வடித்த ஒற்றைக்கல் கோபுரத்தையும், சிற்பங்களையும் பார்த்து திகைத்து போனார் அவர்.
என்ன தவறிழைத்து விட்டேன் என்று முட்டி முட்டி அழுதார் அந்த சிற்பி.
இதனால் தான் வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவிலாக இருக்கிறது என்று மலையின் தொன்மக்கதையை என்னுடைய அப்பா(தமிழாசிரியர் சு.ராமகிருஷ்ணன் ) கூறக்கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, பஞ்சுப்பொதி கல்லான கதை, சோற்றுருண்டை கல்லாய்ப்போன கதை என பல்வேறு கதைகளும் உண்டு.
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோவில் என்பது தான் வியப்பு. தாழ்வான மலைச்சரிவில், " ப " வடிவில் பாறையை குடைந்தெடுத்து அதன் பின் நடுவில் இருக்கும் பாறையை செதுக்கி திராவிட கட்டிட பாணியில் கோபுரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். வழக்கமான கோவில் கட்டும்போது கீழிருந்து மேலே கட்டுவார்கள். இதில், மேலிருந்து கீழாக கோபுர கலசப் பகுதியில் துவங்கி, கோபுரத்தின் பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள், பின்னர் கீழே குடைந்து அர்த்தமண்டபம், கருவறை உருவாக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி ஒரு சுற்றுப்பாதை.
ஒற்றைக்கற்றளியை - ஒரே பாறையில் உருவாக்கிய இந்த கற்கோவிலை நீங்கள் நேரில் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள். பொதுவாக , கோவில் கோபுரங்களில், சுதையில் செய்யப்பட்ட சிற்பங்களை இணைப்பது தான் வழக்கம். இதிலோ, ஒரே கல்லில் கோபுரம், சுற்றிலும் சிற்பங்கள்...எவ்வளவு கவனமுடன் செதுக்க வேண்டும் ?
மலைச்சரிவில், 30 அடி ஆழத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 48 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டதாக இருக்கும் இந்தக்கோவில் எழில்மிகு சிற்பங்களை கொண்டுள்ளது.
கோவிலின் விமானப்பகுதியில் தாமரை மொட்டுப்போன்ற அமைப்பு.
கீழே யாளி சிற்பங்கள்..யானை முக சிற்பங்கள்..இசைக்கருவிகளை இசைக்கும் பூதகணங்கள் ,,நான்கு மூலைகளிலும் இளமங்கையர் சிற்பங்கள்..கவிகை மாடத்தின் மூலைகளில் சிங்கமுக சிற்பங்கள்..என எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலின் விமானப்பகுதியில், நான்முகன், நரசிங்கபெருமாள், சிவபெருமான், பார்வதி, மிருதங்க தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
சூரியனின் தேவியான சுவர்ச்சலை, சந்திரனின் தேவியான ரோகிணி, உஷை,சுவாகாதேவி ஆகியோரின் சிலைகளும் எழிலுற காட்சியளிக்கின்றன.
இவ்வளவு அற்புதமான ஒற்றைக்கல் கோபுரம் சாதாரணமாக கண்களில் தென்படாது. ஒரு பள்ளத்தில் இருப்பது போன்றே தெரியும். மலையில் ஏறி வடதுபக்க சரிவில் நின்று பார்த்தால் மட்டுமே வெட்டுவான்கோவிலின் எழில்மிகு தோற்றம் தென்படும். பக்கவாட்டில் இறங்கிச்செல்ல குறுகலான படிக்கட்டுகள் உண்டு. அதில் அமர்ந்தபடியே கோவிலின் சிற்பங்களையும், மாலை சூரியனின் அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு கோவிலைச்சுற்றி முள்வேலியிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பெருமையுடைய கோவிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்க்க வரும்போது, கோவிலை சுற்றியுள்ள முள்வேலி கதவு, பெரும்பாலும் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது பெரும்சோகமே.
இத்தனைக்கும் மத்திய அரசின் சுற்றுலா கிராமமாக கழுகுமலை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதெற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சில தனியார் குடில்கள் மலை அருகே உருவாக்கப்பட்டுள்ளன.
கழுகுமலையின் இந்த குன்றை சுற்றி கிரிவலப்பாதை ஒன்று உண்டு.
தற்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலப்பாதையில்
சுற்றி வருகிறார்கள்.
இங்குள்ள கழுகாசலமூர்த்தி கோவில் சூரசம்காரம் பிரசித்தி பெற்றது.
சூரர்களின் தனித்தனியான உருவங்கள் பிரம்மாண்டமானவை. கந்த சஷ்டி காலங்களில் இந்த சூரர்களின் உருவங்களை தூக்கி ஆடுவதற்கென்றே பல கலைஞர்கள் உண்டு. மிகவும் கனமான இந்த சூரர்களை அவ்வளவு எளிதாக யாரும் தூக்கி ஆட முடியாது. முருகன் வீதியுலா வரும்போது நாலு வீதிகளிலும் சப்பரத்தின் முன்பு ஆறு சூரர்களும் பேயாட்டம் ஆடியபடியே வருவார்கள். பெரியண்ணத்தேவர் என்ற கலைஞர் அவர்களில் மிக முக்கியமானவர். அவர் மகாபெரியவர் என்ற சூரனுக்குள் புகுந்து விட்டால், அவரது ஆட்டத்தைக்காண பெரியவர்கள்,சிறுவர்கள்,பெண்கள் ஓடோடி வருவார்கள்.
பிற முருகன் கோவில்களில் மாலை ஆறு மணிக்கெல்லாம் சூரசம்காரம் முடியும்போது, இங்கு மட்டும் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை விழா நடக்கும். இந்தக்கோவில் எட்டயபுர ஜமீனின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, வேறு மாதிரியான விழாக்கள் நடந்துள்ளன என தெரிய வருகிறது. சமண,சைவ மதங்களின் மோதல் நாம் அறிந்த விஷயமே. அக்காலத்தில் இந்த ஊர் சமணத்திற்கு புகழ்பெற்ற ஊராக திகழ்ந்ததால், சைவ மதம் கால் ஊன்றியபிறகு, சமணர்களை போல வேடம் அணிந்து கொண்டு ஊர்வலமாய் வந்து, பின் அவர்களை கழுவேற்றுதல் போன்ற விழாக்கள் நடந்திருக்கின்றன.
சமணர்களின் குதப்பகுதியில் ஈட்டியை நுழைத்து வாய்ப்பகுதியில் வரும்படியான கழுவேற்றும் காட்சிகள் கழுகுமலை முருகன் கோவிலின் விதானப்பகுதியில் ஓவியமாக தீட்டிய காட்சியினை நான் பார்த்துள்ளேன். மூலிகை ஓவியங்களால் வரையப்பட்ட அந்த ஓவியங்களை தற்போது காண இயலவில்லை.
கோவிலின் உட்புறம் உள்ள பிரம்மாண்டமான தெப்பக்குளம் எட்டயபுரம் ஜமீனால் உருவாக்கப்பட்ட அக்கால மழைநீர் சேகரிப்பு மையம் என்றே சொல்லலாம். ஊருக்கே குடிநீரை கொடுக்கும் அந்த தெப்பக்குளம் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளா அழகு. பசு வாய் வழியாக தெப்பக்குளத்தில் தண்ணீர் கொட்டும் அழகைக்காண ஊரே திரண்டு நிற்கும்.
" ஊர் நினைவு என்பது கள்ளுண்ட போதை போல " என்பார் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.
சொந்த ஊரைப் பற்றி எழுதும்போது, நான், எனது போன்ற வார்த்தைகள் என்னையறியாமல் வந்து விழுகின்றன.
டெல்லி செங்கோட்டையை பார்க்க செல்கிறோம். மகாபலிபுரம் பார்க்க செல்கிறோம். அருகில் இருக்கும் கழுகுமலை போன்ற வரலாற்றுப்புகழ்பெற்ற ஊரின் சிற்பங்களை எப்போது சென்று ரசிக்கப்போகிறோம் ?
Tweet
கழுகுமலை - தென்னகத்து எல்லோரா
அந்த உயர்ந்த குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள அரைமலை ..
வெட்டுவான்கோவில் கைப்பிடிச்சுவற்றைப் பிடித்தபடி மூன்று சிறுவர்கள்.
" ஒன்..டூ..த்ரீ..."
என்று சொல்லி விட்டு, இடுப்பில் இருந்த டவுசரை அவுத்து கையில் பிடித்துக்கொண்டு அம்மணக்குண்டியோடு மேலிருந்து கீழே வேகமாய் பாறையில் தாவி தாவி குதித்தபடி ஓடி சென்று ஆம்பூரணியில் "பொத்தென்று " குதித்தார்கள். கடைசியாய் ஓடிய சிறுவன் நான்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், தொல்லியல் துறை வருவதற்கு எல்லாம் முன்பு நடந்த நிகழ்வு இது.
சங்க காலத்தில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவர் பாடிய ஒரு பாடல் உண்டு. இளமைப்பருவத்தில், மகளிரோடு குளத்தங்கரையில் நீராடும்போது, கை கோர்த்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒளிவு மறைவு இன்றி, கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி மகிழ்ந்த நாட்கள்..பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக,படித்துறையில் ஓங்கி வளர்ந்துள்ள மருதமரத்தில் ஏறி,
கரையில் குளித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மருளும்படி தொப்பென குதித்து ஆழத்திற்கு சென்று மண்ணை கையில் எடுத்து வந்து காட்டிய நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றனவே..இப்போதோ தடி ஊன்றிக்கொண்டு, உடல் நடுங்க , தொடர்ந்து பேச முடியாமல் ஒருசில வார்த்தைகளே வருகின்றன..அந்த நாட்களும் திரும்பி வருமோ என்று அந்தப்புலவர் பாடும் புறநானூற்றுப் பாடல் (243 ) யாண்டு உண்டு கொல்? என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இளமைக்கால நாட்களை எண்ணி வருந்தாத மனிதர்களும் உண்டோ ?
நான் பிறந்த ஊர் கழுகுமலை. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இருபது கிமீ தொலைவில் இருக்கும் சிற்றூர். அங்குள்ள வெட்டுவான்கோவில் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்கள் புகழ் பெற்றவை.
கழுகுமலை ஊரின் சிறப்பினை, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, அருணகிரிநாதரின் திருப்புகழ், பிஷப் கால்டுவெல் எழுதிய " திருநெல்வேலி வரலாறு " குருகுகதாசப்பிள்ளையின் திருநெல்வேலிசீமை சரித்திரம் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள இயலும். இதுபோக தளவாய்புர செப்பேட்டிலும் பல்வேறு செய்திகள் உள்ளன. கழுகுமலை ஊரின் ஆதிப்பெயர் நெச்சுரம். இப்போது வறண்ட பகுதியாக இருந்தபோதும், பல ஆண்டுகளுக்கு முன்பு நெல் வயல்கள் சூழ்ந்த மலைப்பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
சமண மதம் தழைத்தோங்கியிருந்த காலத்தில், சமண துறவிகள் தங்குவதற்கு மலைக்குன்றுகளை தான் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்,பெண் சமணத்துறவிகள் கழுகுமலை வந்து சமண சித்தாந்தங்களை படித்து சென்றுள்ளனர்.
அவ்வகையில் சமணம் போதித்த பல்கலைக்கழகம் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த கலாசாலையை குழுவாணைநல்லூர் என்று சொல்கிறார்கள். இது ஒரு உறைவிடப்பள்ளியாகும்.
பள்ளி என்ற சொல்லே சமணர்களிடம் இருந்து வந்ததே. பகலில் மலையுச்சியில் இருந்து கீழே இறங்கி வரும் சமணத்துறவிகள் வீடுகளில் உணவை தானமாக பெற்றுக்கொண்டு, குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அவர்கள் படுக்கும் பள்ளியறையில் (சமணப்படுகை ) அவர்களை அமர வைத்து பாடம் போதித்ததால், அது பள்ளிக்கூடம் ஆயிற்று என்று பேரா.தொ.ப. சொல்வார்.
அவ்வாறு இங்கு தங்கி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இலவசமாக உணவு உண்ண பயிர் நிலங்களை தானமாக இருவர் வழங்கி உள்ளனர். மேலும், இரு கிணறுகளையும் தங்களின் சொந்த செலவில் அவர்கள் வெட்டி தந்துள்ளனர் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
குணசகாரப்படாரர் தலைமையில் இந்த கலாசாலை இயங்கி வந்துள்ளது.
யாப்பெருங்கலக்காரிகை நூலாசிரியர் இங்கு வந்து சமண சித்தாந்தம் பயின்றிருக்கிறார். இங்கு வந்து படித்த மாணாக்கர்கள், படித்து முடித்து விட்டு செல்லும்போது, சமண தீர்த்தங்கரர்களின் சிலையை வடித்து விட்டு, கீழே சிலை வடித்த சிற்பியின் பெயர், மாணவர் பெயர்,ஊர் ஆகியவற்றையும் பொறித்துவிட்டு சென்றுள்ளனர். அவை பெரும்பாலும் வட்டெழுத்துக்கள். ஒன்றிரண்டு மட்டுமே தமிழ்க்கல்வெட்டுக்கள். இப்படியாக 102 சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன.
மகாவீரர்,ஆதிநாதர்,நேமிநாதர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், பத்மாவதி, அம்பிகா போன்ற இயக்கன்,இயக்கிகளின் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
இந்த சமண தலத்தில் உள்ள தீர்த்தங்கரர்களின் சிலை வழிபாட்டிற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் செ.மா.கணபதி ஐயா தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
கழுகுமலை குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள வெட்டுவான்கோவில்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா கைலாசநாதர் கோவிலைப்போன்றே திராவிட கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது.. கைலாசநாதர் கோவில் ஒரே கல்லில் எழுப்பப்பட்டது போலவே, வெட்டுவான்கோவிலும் ஒரே கல்லில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதை குடைவரைக்கோவில் என்று சொல்வார்கள்.
வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவில். இது பற்றி பல தொன்மக்கதைகள் இங்குண்டு.
கழுகுமலையில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பிக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ஆண் மகன் பிறந்தான். சிற்பியும் அவனது மனைவியும் அவனை ரொம்ப செல்லமாக வளர்த்து வந்தனர். அவன் வளர்ந்தபின்னரும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வந்த போது, சிற்பி அவனை கண்டித்ததால் அவன் கோபித்துக்கொண்டு ஊரை விட்டு சென்று விட்டானாம். மகனை இழந்த சிற்பி மனம் வெதும்பிபோய் சிலகாலம் கழித்து கழுகுமலை குன்றின் வடதுபுறத்தில் சிற்பங்களை செதுக்க தொடங்கினாராம். அதே சமயம் மலையின் உயரம் குறைந்த தாழ்வான பகுதியில், வேறு யாரோ ஒருவர் உளியால் செதுக்கிக்கொண்டிருக்கிறார்.
தந்தை சிற்பி உளியால் செதுக்கும் அதே நேரத்தில், அதன் எதிரொலி போல , கீழே உள்ள சிற்பியும் உளியை உபயோகித்ததால், இன்னொரு சிற்பி வேலை பார்ப்பது பெரியவருக்கு தெரியவில்லை.
ஒருநாள், வெற்றிலை போடுவதற்காக, தந்தை சிற்பி உளியை கீழே வைத்த போது, கீழே உளிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.
கீழே என்ன உளிச்சத்தம் என்று உற்றுக்கவனித்தார் தந்தை.
(தொடரும் )
Tweet
கொற்கை
----------------
அப்படிப்பட்ட கொற்கை , இன்று சிறப்பு மங்கி சிற்றூராக காட்சியளிக்கிறது.
முத்துக்குளிக்கும் இடம் மட்டும் அல்ல, சங்கறுக்கும் தொழில் நடைபெறும் இடமாகவும் கொற்கை திகழ்ந்திருக்கிறது. முத்துக்குளிப்பவர்கள் கடலில் இருந்து முத்துக்களையுடைய சிப்பிகளையும் சங்குகளையும் கூடைகளில் வாரி எடுத்து வருவார்கள் .
சங்கு வளைகள், மோதிரங்கள்,காதணிகள்,மாலைகள் போன்றவற்றை செய்ய சங்கையறுத்து அதில் எஞ்சிய பொருட்களை குழிகளில் போட்டு புதைத்துள்ளனர். கொற்கை நிலத்தை அகழாய்வு செய்தபோது இவை தெரிய வருகின்றன.
அக்காலத்தில், சங்கு நகைகள் அணிவதில் பெண்கள் ஆர்வம் கொண்டிருந்தனர்.
கொற்கையில் வாழ்ந்த பெருங்குடிமக்கள் தங்களின் உணவை பொற்கலத்திலேயே சமைத்து, பொன் வட்டிலிலே உண்டு , பொற்கிண்ணங்களில் நீர் பருகியதாக சொல்கிறார்கள். ( உழைப்பாளி மக்கள் எப்படி இருந்தார்கள் என்பது கேள்விக்குறி தான் )
பொருநை ஆற்றங்கரையில் தோன்றிய இலக்கியவாதிகள் அநேகம் என்பது பலரும் அறிந்ததே. சங்க காலத்தில் பல பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாறோக்கத்து நப்பசலையார்.( எட்டு பாடல்கள் சங்க நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன ) இவர் கொற்கை அருகே உள்ள மாறமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர்.
கொற்கையை தலைநகராக பாண்டியர் ஆண்ட காலத்தில், பொற்காசுகள், செப்புக்காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவற்றை இங்குள்ள அக்கசாலையில் தயாரித்துள்ளனர். அக்கசாலை என்பது பணம் அச்சடிக்கும் இடம் . கொற்கையில் உள்ள பொற்கொல்லர்கள் இங்கு தங்கியிருந்த இடத்தின் பெயர் அக்கசாலைத்தெரு. அங்கு விநாயகர் கோவில் இருந்ததால், அக்கசாலை பிள்ளையார் கோவில் தெரு என்பர்.
கோவலன் மதுரையில் கொலை செய்யப்பட்டவுடன் மதுரையை கண்ணகி எரித்தாள். அதே நேரத்தில் கொற்கையை ஆண்ட வெற்றிவேல் செழியன் என்ற பாண்டிய அரசன் பத்தினி தெய்வத்தை சாந்தப்படுத்த நினைத்து ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டான் என்று சொல்லப்படுகிறது. உயிருக்குப் பயந்து கொற்கையில் இருந்த பொற்கொல்லர்கள் இரவோடிரவாக புறப்பட்டு, திருநெல்வேலி வந்து குடியேறினர். திருநெல்வேலி நகரத்தில் அவர்கள் குடியேறிய தெருவே தற்போதும் அக்கசாலை தெரு என்று அழைக்கப்படுகிறது.
கொற்கை நகரத்தில் அச்சடித்த நாணயங்களை பற்றி ஆராய்ந்து தென்னிந்தியாவின் பழங்காசுகளைப் பற்றிய ஒரு நூலை எழுதினார் வேலூர் டேனிஷ் லுத்தரன் மிஷன் பாதிரியார் உலோவந்தால்.
அவரது " திருநெல்வேலி காசுகள் " நூல் புகழ்பெற்ற ஒன்று. இவ்வகையில், பழந்தமிழகத்தில் கரன்சி அச்சிடப்பட்ட இடமாக முதன்முதலில் கொற்கையே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
கொற்கையில் பல ஆண்டுகளாக நிற்கும் வன்னிமரத்தின் அடியில் சமண தீர்த்தங்கரர் ஒருவரின் சிலையை கண்டெடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல் கொற்கை நகரில் பல்வேறு இடங்களில் தோண்டி பார்த்தபோது, பாண்டியர்கள் காசுகள் மட்டுமின்றி, ரோமானியர்கள்,அரபியர்கள்,நாயக்கர்கள் காசுகளும் கிடைத்துள்ளன. கிணறுகள் தோண்டும்போது, இரும்பினால் ஆன வாள்கள்,ஈட்டிகள்,அரிவாள்கள் கிடைத்துள்ளன.
டில்லி சுல்தான் தளபதி ஒருவர் இங்கே வந்து கொற்கை நகரின் செல்வங்களை கொள்ளையடித்து டெல்லிக்கு அனுப்பியதாக ஒரு செய்தி உண்டு. மாலிக்காபூர் 1310 இல் படையெடுத்து வந்தபோதும், கொற்கை நகரில் இருந்து ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றான் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அக்கால மக்கள் இது போன்ற கொள்ளைகளுக்கு அஞ்சி தங்கள் ஊரின் ஒரு மைல் சுற்றளவில் தங்களின் செல்வங்களை புதைத்து வைத்தனர் என்றும் சொல்வார்கள்.
கொற்கை துறைமுகம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தூர்ந்து போயிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. கடல் உள்வாங்கியதால், இதன்பிறகு பழையகாயல் பாண்டியர்களின் துறைமுகமாக மாறியிருக்கிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த இத்தாலிய வணிகர் மார்க்கோபோலோ பழையகாயல் துறைமுகத்தில் தான் கப்பல் ஏறினார் என்று அவரது நாட்குறிப்பு கூறுகிறது.
அவரது நாட்குறிப்பில் இங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை வியப்புடன் எழுதி வைத்துள்ளார்.
" இங்குள்ள மக்கள் தினந்தோறும் குளிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் வலது கையையே பயன்படுத்துகிறார்கள். இடது கையால் கொடுப்பது அவமதிப்பாக கருதப்படுகிறது. ஒருவரை பிடிக்கவில்லை எனில் காறித்துப்புகிறார்கள். அதன்பிறகு அவரது முகத்தில் விழிக்க விரும்புவதில்லை. மதுபானம் அருந்துவதை குற்றச்செயலாக எண்ணுகிறார்கள். இந்த நாட்டில் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை சரியாக குறித்து வைத்து ஜாதகம் என்ற ஒன்றை எழுதுகிறார்கள். அதைக்கொண்டு அந்த குழந்தையின் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று சொல்லி என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டார்கள். இங்குள்ள அரசன் உடம்பில் சட்டை அணிவதில்லை. பொன் அணிகலன்களை அணிந்துள்ளார். வீரத்தை போற்றுகிறார்கள். அறவுணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.. அயல்நாட்டினரை உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பு நிறைந்து இருக்கிறது ".
ஒரு கட்டத்தில், பழைய காயலும், கொற்கையை போலவே செயல் இழந்து போக, பின்னர் வந்த போர்ச்சுகீசியர்கள் தூத்துக்குடியை துறைமுக நகரமாக உருவாக்கினார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலைநகரம் என்ற சிறப்போடு புகழ் பெற்று விளங்கியது கொற்கை. பிற்காலத்தில் மதுரை பாண்டியர்களின் தலைநகராக மாற்றப்பட்டது. மதுரையின் சிறப்பை எடுத்துக்கூறும்போதெல்லாம் கொற்கையின் சிறப்பையும் புலவர்கள் எடுத்துக்கூறுவது மரபாக இருந்து வந்தது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி மதுரையை புகழ்ந்து கூறும். அதே சமயம்,
புகழ் பெற்ற மூதூர் என்றும், முதிர்ந்த முத்துக்கள் மலிந்த மூதுடைப்பட்டினம் என்றும் முத்துக்குளிக்கும் முதுமக்கள் வாழும் முதுபெரும் நகரம் என்றும் கொற்கையை அந்த நூல் வியந்து போற்றுகிறது.
இப்படி பெயர்பெற்று விளங்கிய கொற்கை நகரில், தமிழக தொல்லியல்துறை 1968 , 1969 ஆம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தியது. 12 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்தன. 1 .62 மீ ஆழத்தில் முதுமக்கள் தாழிகள், ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் செங்கற்சுவர்கள், உறைகிணறுகள், கழிவுநீர் கால்வாய்களும் இருந்தன. கார்பன் ஆய்வில்
இவற்றின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
" கொற்கைத்துறைமுகத்திலே - கண்ணே நீ
கொண்டு வந்த கெட்டி முத்தோ
குலசேகரப் பட்டினத்திலே- கண்ணே நீ
குளிச்சு எடுத்த முத்தோ
தூத்துக்குடி துறைமுகத்திலே- கண்ணே நீ
துணிஞ்சு எடுத்த முத்தோ
பாட்டி அடிச்சாளோ
பால் முத்து சரத்தாலே
பாண்டியரே உம்மாமன்
பாலகனே கண்ணுறங்கு "
எங்கோ நம் ஆதித்தாய் குழந்தையை தாலாட்டும் தாலாட்டில்
மெய்மறந்து நாமும் கண்ணயர்வோமா ?
Tweet
கொற்கை
----------------
அது ஒரு அழகிய துறைமுகம். நீண்டு விரிந்து கிடக்கும் எழில்மிகு கடற்கரை..அங்கே யவன தேசத்து மீகாமன்கள் ( கப்பலை செலுத்தும் மாலுமிகள் ) யவன வணிகர்கள், அரேபிய நாட்டு குதிரை வணிகர்கள்..உள்ளூர் வணிகர்கள் ..என பரபரப்பாய் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
கடலில் நங்கூரமிட்டு நிற்கும் யவனர் நாட்டு கலங்கள்,தோணிகள்..
அகன்ற வீதியில் பெரிய கடற்சுங்க சாவடி இருக்கிறது. சரக்குகளை வைக்கும் பண்டகசாலைகள், கிடங்குகள் இருக்கின்றன. கொண்டுவரப்படும் பொருட்கள் சரிபார்க்கப்பட்டு வரி விதிக்கப்பட்டு,
இணையக்கயல் முத்திரை இடுகிறார்கள். பொருட்கள் உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகின்றன.
அருகில் உள்ள சோலையில் தாழைமரங்கள் அழகுடன் நிற்கின்றன.
கடற்கரையின் மீன் நாற்றத்தை, தாழம்பூவின் நறுமணம் மாற்றியதாம்.
" முண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைக்கரைப்
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்
புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின்
நற்றோர் வழுதிக் கொற்கை முன்துறை "
என்று சங்க இலக்கிய நூலான அகநானூறு விவரிக்கும் அந்த துறைமுகம் கொற்கை துறைமுகம் !
தமிழ்நாட்டின் பெருமையை உலகிற்கே அறிவித்த கொற்கை !
2000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டு துறைமுகங்களுள் மிகவும் புகழ்பெற்ற கொற்கை,ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்ட்டத்தில் ஆத்தூரில் இருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது.. தற்போது கொற்கையின் சிறப்பே தெரியாவண்ணம், கடல் ஒன்பது கிலோமீட்டர் உள்வாங்கி ஒரு சிற்றூராக காட்சியளிக்கிறது.
சங்க கால பாண்டிய மன்னர்கள் கொற்கையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
ரோமானியர்கள்,கிரேக்கர்கள்,எகிப்தியர்கள் தங்கள் நாட்டில் உள்ள பொற்காசுகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு, இங்கிருந்து முத்து, மெல்லிய மஸ்லின் துணிகள்,மைசூர் தந்தங்கள், ஏலம்,கிராம்பு,சாதிக்காய், மிளகு போன்றவற்றை வாங்கி சென்றனர்.
வெள்ளைக்களிமண்ணால் செய்த கோப்பைகள், கண்ணாடி புட்டிகள், மற்றும் மதுப்புட்டிகளையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு, தமிழகத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கலயத்தில் உள்ள பனங்கள்ளை விரும்பி உண்டு களித்தனர்.
குறிப்பாக கூந்தற்பனங்கள்ளை மிகவும் ரசித்து உண்டார்களாம்.
யவனர்கள் தங்கள் மன்னர்களிடம் பணிவுடன் இருப்பவர்கள். நேர்மையும், இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் பண்பும் கொண்டவர்களாகவும் இருந்ததால், பாண்டிய மன்னர்கள் கொற்கையிலும்,மதுரையிலும் உள்ள அரண்மனைகளில் வாயிற்காப்பாளர்களாய் பணியமர்த்தினர். அரசின் கருவூலங்களில் பணியாளர்களாய் இருந்தனர்.
அரபு நாடுகளில் இருந்து ஏராளமான குதிரைகளும் இந்த கொற்கை துறைமுகத்திலும் அதன் பின்னர் புன்னைக்காயல் துறைமுகத்திலும் வந்து இறங்கின. இலங்கையில் இருந்தும் பல்வேறு உணவுப்பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கியதாக சொல்லப்படுகிறது.
முத்துக்குளித்தலுக்கு புகழ்பெற்ற துறைமுகம் கொற்கை. கொற்கை கடலில் கிடைக்கும் முத்துக்களுக்கு இணையான நல்முத்துக்கள் உலகில் எங்குமே கிடைக்காது என்று சொல்லுவார்கள். நமது சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, கிரேக்க நாட்டின் தாலமி கொற்கையின் சிறப்பை வியந்து போற்றுகிறார். இவர் கி.பி.130 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்.
தமிழகத்திற்கு கி.பி.1292 இல், வந்த மார்க்கோபோலோ முத்துக்குளித்தல் பற்றி விவரிக்கிறார்..
" இலங்கையில் இருந்து மேற்கே 60 கல் தொலைவில் மாபார் (தமிழகம்)
உள்ளது. இங்கே பாண்டியர்கள் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முத்துக்குளிக்கும் துறை உள்ளது. இங்குள்ள வணிகர்கள் முத்துகுளிப்பதில் கைதேர்ந்தவர்களை படகுகளில் அழைத்து செல்வார்கள். முத்துகுளிப்பவர்கள் தங்களின் இடுப்பில் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு நீரில் மூழ்கி முத்து சிப்பிகளை தங்கள் முதுகில் உள்ள கூடைகளில் வாரி அள்ளுவார்கள். பின்னர், படகுகளில் உள்ளவர்கள் அவர்களை மேலே இழுப்பார்கள். பிறகு தங்களின் படகுகளில் அவர்களை ஏற்றிக்கொண்டு கடற்கரை திரும்புவார்கள். இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்களாக திகழ்கிறார்கள் "
( முத்துக்குளிக்க வாரீகளா..மூச்சையடக்க வாரீகளா ..பாடல் நினைவு வருகிறதா ?)
கடலில் முத்துக்குளிப்பவர்களுக்கு ராட்சச மீன்களினால் உயிரபாயம் ஏற்படுவதுண்டு. தங்களின் சாதுர்யத்தால் அவற்றை விரட்டி, வலம்புரி சங்குகளையும், பவளங்களையும், ஆணி முத்துக்களையும் அள்ளி எடுத்து வருவார்கள். அவ்வாறு கொற்கை கடலில் இருந்து பரதவர்கள் வரும்போது, கடற்கரையில் காத்திருக்கும் அவர்தம் மனைவியரும்,மக்களும், உறவினர்களும் சங்கொலி முழக்கி உற்சாகத்துடன் வரவேற்பார்கள். கடற்கரையே மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைக்கும்.
" இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப்பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை "
என்று அகநானூறு அந்தக்காட்சியை வர்ணிக்கிறது.
தங்கள் உறவினர்கள்சூழ உற்சாகமாய் பரதவர்கள் கடற்கரையில் செல்லும்போது, முத்துக்கள் கடற்கரையில் சிதறி விழுந்தனவாம்.
அதையெல்லாம் தேடி எடுத்து செல்வது வழக்கம் இல்லைபோலும்.
( மனுஷன் உசிரோடு வந்ததே கடலன்னை புண்ணியத்தில் என்ற சந்தோசம் கூட காரணமாக இருக்கலாம் ). கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அந்த முத்துக்களை பொறுக்கி எடுத்து மீண்டும் சிப்பிக்குள் அடைத்து கிலுப்பைகளாக ஆட்டி விளையாடினார்களாம். இதைப்பார்த்து அங்கிருந்த குரங்குக்குட்டி தானும் விளையாடி எண்ணி, கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்களை எடுத்து, கீழே விழுந்து கிடக்கும் முத்துக்களை அதில் போட்டு கிலுகிலுவென்று ஆட்டி மகிழ்ந்தது என்று சிறுபாணாற்றுப்படை
ஒரு கவின்மிகு சித்திரமாய் வரைகிறது.
மனக்கண்ணில் இந்த சித்திரத்தை கொண்டு வாருங்கள்..எப்படிப்பட்ட ஆரவாரமிக்க கடற்கரை துறைமுக நகரமாக கொற்கை இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட கொற்கை இப்போதோ....
Tweet
பெருமைமிகு நெல்லைச்சீமை -3
----------------------------------------------------
பாரிஸ் நகரத்தில் இருந்து கிளம்பிய அந்த மனிதரின் பெயர் லூயிஸ் லாபிக்யூ. இவரும் முனைவர் ஜாக்கோர் வந்ததுபோலவே, சென்னை வந்து அதன்பின்னர் திருநெல்வேலி வந்து சேர்ந்தார்.
ஆதிச்சநல்லூர் பறம்பில் வந்து புதைபொருள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது, இவருக்கும் ஏராளமான பழம்பொருட்கள் கிடைத்தன.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி தமிழர்கள் பயன்படுத்திய உலோகப்பொருட்கள் பலவற்றையும் கண்டு வியப்படைந்தார் லூயிஸ்.
இவை மனிதகுல வரலாற்றின் அறிய பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்து , கண்டுபிடித்த பழம்பொருட்களை அட்டைப்பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்து பத்திரமாய் பாரிஸ் நகருக்கு கொண்டு சென்றார்.
உலகின் ஆதிக்குடி மக்கள் பயன்படுத்திய உலோகங்களை, இரும்பு பொருட்களை பாரிஸ் நகரத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார் லூயிஸ். ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் வரக்கூடிய அந்த அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தமிழர்களின்
வரலாறும் இடம்பெற்றது.
இப்படி ஜெர்மன் நாட்டில் இருந்து ஒரு ஜாக்கோரும், பிரெஞ்சு நாட்டில் இருந்து ஒரு லூயிசும், நெல்லைச்சீமைக்கு வருகை தந்து, இங்குள்ள பழமையான பொருட்களை எப்படி எடுத்து செல்ல முடிந்தது ?
தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எப்படி இவர்கள் அறிந்தார்கள் ? அதிலும் துல்லியமாக, ஆதிச்சநல்லூர் என்ற குக்கிராமத்தில் ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பரந்துபட்ட ஞானம் கொண்டிருந்தார்கள் என்பதை எதன்மூலம் தெரிந்து கொண்டார்கள் ? போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிறிஸ்தவம் பரப்ப வந்த மிஷனரிகளில்
முக்கியமானவரான பிஷப் கால்டுவெல் அவர்கள் ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற பகுதிகளில் கிடைத்த செப்புக் காசுகள், ஓடுகள், முதுமக்கள் தாழிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள் மிகசிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆங்கில இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியுள்ளதாக தெரிகிறது. அதைப்படித்து விட்டுத்தான் ஜாக்கோர்,லூயிஸ் போன்றவர்கள் தமிழ்மண்ணை நோக்கி வந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.
இந்தியாவில் வாணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரர்கள், இங்கிருந்த சிற்றரசர்களை துவக்கத்தில் வளைத்துப்போட்டு, இடங்களை வாங்கி, வரிவசூல் உரிமையை பெற்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர் என்பதை நாம் அறிவோம். கிழக்கிந்திய கம்பெனியின் நோக்கம் வியாபார லாபம் என்றபோதிலும், இந்தியாவின் முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள முயன்றனர். ஒரு தேசத்தின் மக்களை பற்றிய முழுமையான வரலாற்றை அறிய வேண்டுமானால், அவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் தங்களின் வரலாற்றை முறையாக பதிவு செய்யவில்லை என்று ஆதங்கப்படுவோர் உண்டு. உண்மை என்னவெனில், வரலாற்றை ஆவணப்படுத்தவே செய்தார்கள். " அவை வம்சாவளிகளாகவும், புராணங்களாகவும் சமய மட பதிவேடுகளாகவுமே இருக்கின்றன "
என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்.
கி.பி.1000 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள வரலாற்றிற்கு சான்றுகள் இருக்கின்றன. அதற்கு முந்தைய காலம் மங்கலாகவே உள்ளது என்கிறார்கள். எனவே, வெள்ளைக்காரர்கள் இந்திய வரலாற்றை எழுத முடிவு செய்தார்கள்.
1861 இல் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை தொடங்கியது. அதன் தலைவர் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர். இவர் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று பழம்பொருட்களை சேகரித்து வந்தார். மரபு வழிப்பட்ட செய்திகளையும் சேகரித்தார். இப்படி ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது தான்,
1876 இல் ஜெர்மனியின் ஜாக்கோர் வந்து புதைபொருள் ஆய்வு செய்து
ஆதிச்சநல்லூர் பழம்பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார்.
அவர் வந்து கால் நூற்றாண்டு காலம் கடந்தபிறகு லூயிஸ் லாபிக்யூ என்ற பிரெஞ்சு தேசத்துக்காரர் வந்து அவர் பங்கிற்கு சில பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார்.
வடபகுதி மாகாணங்களுக்கு மட்டுமே சென்று வந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்களுக்கு, தென்னாட்டில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற இந்த புதைபொருள் ஆய்வு ஏன் கண்ணில் படவில்லை ?
இத்தனைக்கும் 1876 இல் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்டூவர்ட் அவர்கள், ஜாக்கோர் வந்து சென்ற இரவே கிழக்கிந்திய கம்பெனி மேலதிகாரிகளுக்கு நீண்டதொரு கடிதம் எழுதுகிறார்.
நெல்லை மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தில், ஜெர்மனியை சேர்ந்த ஜாக்கோர் என்பவர் வந்து ஆய்வு செய்த விபரம், அங்கு தோண்டப்பட்ட குழிகள், கிடைத்த பொருட்கள் என ஒரு பட்டியல் போட்டு எழுதி இருக்கிறார். இது எப்படி அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்களுக்கு தட்டுப்படாமல் போனது என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. இப்போது போலவே, வெள்ளைக்காரர்கள் காலத்திலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையே அது.
1904 இல், பிரெஞ்சு தேசத்து லூயிஸ் லாபிக்யூ வந்து சென்றபின்னர்தான், தேசத்தை ஆண்ட வெள்ளைக்காரர்களுக்கு சற்று சொரணை வந்ததோ என்னவோ, 1904 இறுதியில், அலெக்சாண்டர் ரியா என்ற ஆய்வாளரை ஆதிச்சநல்லூர் பறம்பிற்கு அனுப்பியது.
இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அதிகாரபூர்வ அதிகாரியான அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூர் வந்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஏற்கனவே, இங்கு ஆய்வு செய்யப்பட்ட விபரங்களை அறிந்து கொண்டு,
பறம்பில் குழிகளை தோண்டி ஆய்வுகள் செய்தபோது, இவருக்கும் பல்வேறு பழம்பொருட்கள் கிடைத்தன. இரும்பினாலான குறுவாள்கள்,கைக்கோடாரிகள், பெரிய அளவிலான தலையோடுகளும்,எலும்புகளும் கிடைத்தன. இரண்டு சிறுமட்பாண்டங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்பட்டிருந்தன.
சிறு பாண்டங்களில் உலர்ந்த கூலப்பொருட்கள் மக்கிய நிலையில் இருந்தன. இறந்து போனவர்கள், மறு உலகிற்கு போகும்போது அவர்கள் பயன்படுத்திக்கொள்ள உணவும், இரும்பு கருவிகளும், அவர்கள் விரும்பிய பிற பொருட்களும் இருந்தன. இறந்த மனிதர்கள் மட்டுமின்றி, இறக்கும் நிலையில் இருந்த நூறு வயதிற்கும் மேற்பட்டவர்களையும் இந்த முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்திருந்தனர்.
எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதைகுழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளவை என்று சொன்னார்.
அலெக்சாண்டர் ரியா கண்டுபிடித்த பொருட்கள் யாவும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இப்போதும் தனி அறையில் இருக்கின்றன.
1913 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் ரியா அவர்கள் பணி ஓய்வு பெறும்போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டு பெருமை சேர்த்தார். இவர் மட்டும் அதை வெளியிடவில்லை என்றால், ஆதிச்சநல்லூர் நாகரீகத்தை உலகம் அறிந்திருக்காது.
சுதந்திர இந்தியாவில், 2004 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களும் பல்வேறு பழம்பொருட்களை, முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்தனர்.
இவற்றில் சில, நெல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன. எனினும், 15 ஆண்டுகள் கடந்தும், ஆய்வு முடிவுகள் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. ஆதிச்சநல்லூர் அருகே உள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை ஏன் வெளியிடாமல் வைத்துள்ளனர் என்பதே அவரது கேள்வி.
சத்தியமூர்த்தி குழுவினர் சமர்ப்பித்த ஆய்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் சொன்ன பிறகு, இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஆய்வு முடிவுகள் வெளியாகிறதோ இல்லையோ, தமிழக அரசின் தொல்லியல் துறை,
இந்த ஆண்டில் ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து ஆய்வு நடத்த முடிவு செய்து, தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன . ஆதிச்சநல்லூர் மட்டுமின்றி,
அருகில் உள்ள சிவகளையிலும் ஆய்வுகள் நடைபெற்று வருவது
திருப்தி அளிக்கிறது.
வரலாற்றுப் பாடங்களில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள் பற்றி படித்திருப்போம். அவை எல்லாம் 1920 குப்பிறகு ஆய்வு செய்யப்பட்டவை. ஆனால், 1876 இல், இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு என்ற பெருமையை ஆதிச்சநல்லூர் பெற்றுள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே ?
Tweet
பெருமைமிகு நெல்லைச்சீமை -2
---------------------------------------------------------
ஆதிச்சநல்லூர் அகழாய்வு
------------------------------------------
ஒருமுறை பாளையங்கோட்டை பள்ளி மாணவ,மாணவியர் மத்தியில் பேசும்போது " நீங்கள் எல்லோரும் குற்றாலம் போயிருக்கீங்களா ?"
என்றேன்.
எல்லோரும் கோரஸாக " போயிருக்கோம் சார்.."
" பாபநாசம் போயிருக்கீங்களா ?"
" போயி அங்கெ எல்லா குரங்குகளையும் கூட சீண்டி பார்த்திருக்கோம் சார் " பசங்க சிரிப்பொலி.
" திருச்செந்தூர் கடல் பார்த்திருக்கீங்களா ?"
மீண்டும் அதே உற்சாகத்தில் " நல்லா குளிச்சு விளையாண்டிருக்கோம் சார் .." என்றனர்.
" பாளையங்கோட்டையில் கோட்டை பார்த்திருக்கிறீர்களா ? என்றேன்.
ஒரு மாணவி எழுந்து " நம்ம ஊருல எங்கே சார் கோட்டை இருக்கு..
இருந்தா எங்க அப்பா கூட்டிட்டு போயிருப்பாங்களே" என்றாள்.
" கோட்டை இல்லாவிட்டாலும் கோட்டை இருந்த சுவடுகள், அதன் மிச்ச மீதி ஏதேனும் பார்த்த நினைவு இருக்கா ?" என்று தூண்டிப் பார்த்தேன்.
அவர்கள் இல்லை என்று தலையசைத்தனர்.
இதில் வேடிக்கை என்னவெனில், கூட்டம் நடைபெற்றதே பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தான். பாளையங்கோட்டையில் இருந்த கோட்டையின் கீழ்ப்பக்க வாசல் இருந்த இடத்தில்தான் அதுவே அமைந்துள்ளது. நுழைவாசலை நன்கு ஊன்றி கவனித்தால், கோட்டையின் முகப்பு தெரியும்.
" சரி..ஆதிச்சநல்லூர் போயிருக்கீங்களா ?" என்றேன்.
ஒரே அமைதி. எல்லோருமே உதட்டை பிதுக்கினார்கள்.
ஒரு மாணவன் எழுந்து " அது எங்கே சார் இருக்கு ?" என்று கேட்டான்.
" திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு.." என்றேன்.
மாணவர்களின் பின்பக்கம் பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களும் அதை புதிதாக கேட்பது போலிருந்தது. 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து " தெரியும் சார்..போற வழியில் ஒரு பறம்பு தெரியும். அதுல
என்ன இருக்கு..? சின்ன பசங்களுக்கு காட்டுற அளவுக்கு அங்கே எதுவும்
இல்லையே சார்.." என்றார்.
அங்கே என்ன இருக்கா ?
* * * * * * * * ** * * * * * * * * ** * * * * * *
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருந்து கிளம்பினார் அந்த வெள்ளைக்கார பயணி. கப்பல் பயணம். கீழ்த்திசை நாடான இந்தியா நோக்கி அந்த கப்பல் செல்கிறது. பயண காலம் எப்படியும் நான்கைந்து மாதம் ஆகும். ஆனாலும் எப்படியும் போயே ஆக வேண்டும் என்ற மனஉறுதி அவர் கண்களில் தெரிகிறது.
சென்னை துறைமுகம் வந்து இறங்கும்போது, சூரிய ஒளி தகதகத்தது.
தனது கால்களை தமிழ் மண்ணில் பதித்தார் அந்த மனிதர்.
பிறகு அங்கிருந்து புகைவண்டி மூலமாக திருநெல்வேலி வந்து சேர்ந்தார். தான் விரும்பிய புராதன மண்ணிற்கு வந்து சேர்ந்த பெருமை
அவர் கண்களில் தெரிந்தது.
அவர் போக வேண்டிய இடத்தை தனது கையில் இருந்த வரைபடத்தில் பார்த்தார்..
ஆதிச்சநல்லூர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவு.
ஆனால், அவர் உடனே ஆதிச்சநல்லூர் செல்லவில்லை. முன்பின் தெரியாத ஊர். கிராமமாக கூட இருக்கலாம். வந்த நோக்கத்திற்கு குந்தகம் ஏதும் நேரக்கூடாது. காரியம் நடக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்திக்க நினைத்தார்.
தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சுலோச்சனா முதலியார் பாலத்தின் வழியாக கொக்கிரகுளத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். பாலம் அவருக்கு தேம்ஸ் நதிக்கரையில் இருந்த வாட்டர்லூ பாலத்தை நினைவுபடுத்தியது.
அப்போது மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு ) ஸ்டூவர்ட் என்பவர் இருந்தார்.
அவரை சந்தித்து " நான் ஜாக்கோர்..(jagore ) ஜெர்மனியில் இருந்து வருகிறேன். மானுடவியல் துறையை சேர்ந்தவன். இங்கே அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்ற பழமையான ஊரில் தொல்லியல் ஆய்வு செய்ய வந்துள்ளேன். உலகின் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த ஊர் போல தெரிகிறது. எனக்கு இந்த விஷயத்தில் நீங்கள் உதவ வேண்டும் "
என்று கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் ஸ்டூவர்ட் டுக்கு சற்று ஆச்சரியம்.
மறுநாள்
மாவட்ட ஆட்சியர், மாவட்ட பொறியாளர் மற்றும் வேலை செய்ய 10 , 15 பணியாட்கள் ஆகியோரோடு , தனது கனவு பிரதேசமான ஆதிச்சநல்லூர் பறம்புக்கு வந்து சேர்ந்தார் ஜாக்கோர்.
மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், பணியாட்கள் இவர்களோடு ஒரு வெள்ளைக்காரர் என தங்கள் கிராமத்திற்கு வந்திருந்தவர்களை வியப்புடன் பார்த்தார்கள் ஆதிச்சநல்லூர் மற்றும் புளியங்குளத்து மக்கள்.
அவர்கள் நின்று கொண்டிருந்த பறம்பு ஒரு இடுகாடு. இறந்தவர்களை புதைக்கும் இடம்.
114 ஏக்கர் கல்லும் மண்ணும் கலந்த களர் நிலம்.
உயர்ந்த பறம்பில், ஜாக்கோர் குறித்து கொடுத்த நிலப்பகுதியில் கடப்பாரையால் தோண்ட ஆரம்பித்தனர். கிராமத்து மக்களுக்கு ஒரே அச்சம். பேய்,பிசாசுகள் நடமாடும் இடமாச்சே..இவர்களை ஏதும் செய்து விட்டால் ? சாடை மாடையாக சொல்கின்றனர்.
அதைக்கேட்ட ஜாக்கோர் சிரிக்கிறார்.
" உங்களுக்கு பயமாக இருந்தால் வீட்டிற்குள் இருந்து கொள்ளுங்கள்..
எங்களை ஒன்றும் செய்யாது. பயம் இல்லாதவர்கள் எங்களோடு இருந்து பார்க்கலாம் " என்று சொல்கிறார்.
பணியாட்கள் குழிகளை தோண்ட தோண்ட பல்வேறு முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. தாழிகளில் உட்கார்ந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள்..இரும்பு பொருட்கள், கத்திகள், பொன், வெங்கலத்தில் ஆன ஏனங்கள்..தாழிகளில் கூலப்பொருட்கள், உமி, இற்றுப்போன துணிகள், தலையில் பட்டம் கட்டும் சூடிகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன.
துள்ளிக்குதிக்கிறார் நமது ஜாக்கோர். தனது நீண்ட பயணம் வீணாகவில்லை என்று அகம் மகிழ்கிறார்.
தோண்ட தோண்ட மேலும் மேலும் விதவிதமான மட்பாண்டங்களும் , உலோகப்பொருட்களும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
அவை சாதாரண மண் பாண்டங்களை விட அளவில் பெரியதும், கனமானதும் கூட.
கிடைத்த பொருட்களை சாக்கு மூட்டைகளில் காட்டுகிறார் ஜாக்கோர்.
எதோ மாயாஜாலம் போல இருக்கிறதே..எங்கிருந்தோ வந்த ஒருவர்
முன்பின் பார்த்திராத ஒரு பறம்பில் மிக துல்லியமாக தோண்டி, பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எடுத்து விட்டாரே என்று மாவட்ட ஆட்சியர் ஸ்டூவர்ட் வியக்கிறார்.
அடுத்தடுத்த நாட்களில் கிடைத்த அனைத்து பொருட்களையும் ஏழெட்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றி திருநெல்வேலி வருகிறார் ஜாக்கோர்.. மாவட்ட ஆட்சியரிடம் நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து சென்னைக்கு கிளம்புகிறார். புகைவண்டியில் அவர் கால்களுக்கு கீழே ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூதாதையர் பயன்படுத்திய பொருட்கள் சாக்கு மூட்டையில். மூதாதையர்களின் மண்டையோடுகளும் கூடத்தான்.
சென்னை சென்று, மீண்டும் கப்பல் பயணம் ஜெர்மனி நோக்கி . வெற்றிக்களிப்பில்
இப்போது ஜாக்கோர் இருக்கிறார். ஒரு சுருட்டை பற்ற வைத்து இழுத்தவாறு, தமிழ் மண்ணில் இருந்து விடை பெறுகிறார் அந்த ஜெர்மானிய மானுடவியல் ஆய்வாளர் .
அவர் கொண்டு சென்ற பொருட்கள் எல்லாவற்றையும் பெர்லின் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
உலோகத்தின் பயனை அறிந்திருந்த, விவசாய தொழில்நுட்பத்தை அறிந்திருந்த, நெசவு பற்றிய ஞானம் பெற்றிருந்த ஆதி தமிழனின்
மண்டையோடுகளும், அவன் பயன்படுத்திய பொருட்களும் இப்போது
பெர்லின் நகரின் அருங்காட்சியகத்தில் சாக்கு மூடையில் உறங்கிக்கொண்டு இருக்கின்றன.
1903 ஆம் ஆண்டின் இறுதியில்..பிரெஞ்சு தேசத்தின் பாரிஸ் நகரத்தில் இருந்து மற்றொரு கனவான் கப்பலில் புறப்படுகிறார்.
எங்கு செல்கிறார் ?
இந்திய தேசத்திற்குத்தான். அவரது கைகளில் ஆதிச்சநல்லூர் வரைபடம் இருக்கிறது.
(தொடரும் )
Tweet
கி.ரா.98
-----------------கோவில்பட்டி சாரதா ஸ்டூடியோ அக்காலத்தில் பிரபலமானது. காலண்டர் ஓவியர் கொண்டையாராஜு அவர்களின் தலைமை சீடர் ஓவியர் சுப்பையா நடத்தி வந்த ஸ்டூடியோ என்றால் கேட்கவா வேணும் ?
விடுமுறை தினமான அன்று நாங்கள் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தபோது தான், குடையை மடக்கியபடி உள்ளே நுழைந்தார் எழுத்தாளர் கி.ரா.
" ஆவணி மாசத்துல கூட வெயில் இந்த போடு போடுதே..." என்று சொன்னவர் " தலையை எண்ண ஆரம்பித்தார்.." ஒன்னு,ரெண்டு,மூணு.."
ஆக ஒன்பது பேரு..என்னையும் சேர்த்தா பத்து பேரு..என்று சொல்லி விட்டு, மாடியில் இருந்து கீழே இருந்த டீக்கடைக்காரரைப் பார்த்து
" மொத்தம் பத்து டீ..பத்து சம்சா..மேலே கொடுத்து விட்டுருங்கோ "
என்று சொல்லி விட்டு எங்களோடு வந்து அமர்ந்தார்.
" நைனா..என்ன விஷேசம் ? டீ ,சம்சால்லாம் ஆர்டர் பண்றீகளே ?"
எங்களுக்கு ஒரே வியப்பு.
" சொல்லுதேன்..பொறுங்க.." என்றவர், துண்டால் முகத்தை நன்றாக அழுத்தி துடைத்துக்கொண்டார். " எனக்கு இன்னைக்கு அறுபது வயசு முடிஞ்சு 61 பொறக்குது. பொறந்த நாளை சேக்காளிகள் கூடத்தானே கொண்டாடணும்.." என்று மென்மையாக சிரித்தார்.
அவருடைய சேக்காளிகள் எங்களுக்கு அப்போது வயது 22 , 23 தான். சற்றே வயது கூட இருந்தவர் எனில் எழுத்தாளர் ஜோதிவிநாயகத்தை சொல்லலாம். அப்போது அவருக்கு 29 இருக்கலாம்.
தனது சஷ்டியப்தபூர்த்தியை மிக எளிமையாக எங்களோடு டீ,சம்சா வோடு கொண்டாடியவர் கி.ரா. அந்த நண்பர்கள் சந்திப்பையும் ஒரு சின்ன இலக்கிய கூட்டமாக நடத்தி விட்டோம். சம்சாவை சாப்பிட்டபடியே, ஜோதிவிநாயகம் பேச ஆரம்பித்தார் " நாமெல்லாம் ஒம்போதுன்னு கேலி பண்ணிப்பேசும் பரிதாபத்திற்குரிய அலிகளைப்பற்றி (அப்போது திருநங்கையர் என்ற சொற்பிரயோகம் அறிமுகம் ஆகவில்லை) நம்ம நைனா ஒரு கதை எழுதி இருக்கார்..
கோமதி என்ற அந்த கதையில், ஆணாக அறியப்பட்ட கோமதி, ரகுபதி நாய்க்கர் வீட்டில் சமையல்காரனாக வேலை பார்க்கும்போது அவருடைய மகன் மேல் காதல் கொண்டதை பற்றி எழுதியிருப்பார்..தற்கால இலக்கியத்தில் இவர்களைப் பற்றி எல்லாம் எந்த படைப்பாளியும் கதை எழுதியிருப்பதாக தெரியவில்லை. 1964 இல் " தீபம் " இதழில் வந்த நினைவு. படிச்சுப் பாருங்க.." என்று முடித்தார்.
அந்தக்காலத்தில், நாங்கள் அவரது " கதவு ", " வேட்டி", " மாயமான்"
" கரண்ட்" , " ஒரு வெண்மைப்புரட்சி " போன்ற கதைகளை வாசித்திருந்தோம். நாங்கள் அவரது படைப்புகளை குறித்து உற்சாகமாய் பேச ஆரம்பித்தோம். இங்கே நாங்கள் என்பது நான்,ஓவியர் மாரிஸ்,எழுத்தாளர்கள் ஜோதிவிநாயகம்,கோணங்கி, உதயசங்கர்,சாரதி,அப்பணசாமி,தி
அரசாங்கம் அறிவிக்கும் கடன் திட்டங்கள் எப்படி கேலிக்கூத்தானவை என்பதை " மாயமான் " கதை எப்படி சொல்கிறது என கோணங்கி பேசிய ஞாபகம். கிட்டத்தட்ட கதையில் வரும் கதாபாத்திரம் அப்பாவு செட்டியாராகவே அவர் மாறி விட்டார்.
மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சம்சாரிகளை ஒரு மனுஷனாகவே மதிக்காத ( கன்ஸீமர்கள் என்றால் நாய்க்குப் பொறந்த பயல்கள் என்று அர்த்தம் ) தன்மையை சொல்லும் " கரண்ட் " கதையை உதயசங்கர் விவரித்து சொன்னார். மழை பொய்த்துப்போன காலத்தில், வீட்டு வரி கட்டவில்லை என்று சொல்லி, விவசாயி வீட்டின் வாசல் கதவை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்து தூக்கி சென்ற
" கதவு " கதையைப் பற்றி நான் பேசினேன்.
எல்லாவற்றையும் நைனா ரசித்துக் கேட்டார். " பரவாயில்லையே..கதைகளை நல்ல உள்வாங்கி வாசித்திருக்கீர்களே..நான்லாம் என்னோட நாற்பது வயதுக்கு மேல் தான் பெரும்பாலான கதைகளை எழுத ஆரம்பிச்சேன்..ஆறாப்பு படிச்ச விவசாயி தானய்யா..நண்பர் ஒருவருக்கு கடிதமாய் எழுதுன விஷயம் தான் கதவு கதை..அது இப்ப ரொம்ப பிரபலம் ஆயிட்டு..என்று நைனா ஏற்புரை வழங்கினார்.
அறுபதுகளில் பொடியன்கள் எங்களோடு சேக்காளியாய் பழகிய எழுத்தாளர் கி.ரா. இன்றும் அதற்கு அடுத்த தலைமுறையான கார்த்திக் புகழேந்தி (வயசு 30 ) போன்றவர்களோடு இணக்கமாய் பழகி வருகிறார் என்பதுதான் விஷேசம்.
ராயங்ககுல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமானுஜன் என்ற கி.ராஜநாராயணனுக்கு இந்த செப்டம்பர் 16 இல் 98 வயது தொடங்குகிறது. காசநோயிலும், பாம்புக்கடியிலும் தப்பி, இந்த 98 வயதிலும் " அண்ட ரெண்ட பட்சி " என்ற நீண்ட சிறுகதை எழுதி தமிழ் இலக்கிய உலகை வியப்பில் ஆழ்த்தி வரும் கி.ரா. தமிழின் மூத்த எழுத்தாளர். தனது அழகான கையெழுத்தில் நாவலை எழுதி அதை அப்படியே அச்ச்சாக்கம் பண்ணியவர்.
இவரை கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று சொல்லி ஒரு வட்டார எழுத்தாளர் என்ற அளவில் சுருக்கி விட இயலாது. இவரது கோபல்ல கிராமம் நாவல் வந்த புதிதில், அது நாவல் வகைமைக்குள் வரவில்லையே என்று சொன்னவர்கள் பலருண்டு. ஆந்திரத்தின் ஒரு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஒரு இனத்தின் வரலாறை மங்கத்தாயாரம்மாள் வழியாக சொல்லும்போது அவரோடு சேர்ந்து நாமும் பயணிக்க முடிகிறது. தனது இனத்தின் வரலாறை தொன்மக்கதைகளோடு அவர் விவரிக்கும்போது எளிதில் ஒன்றிவிட முடிகிறது.
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா. அவருக்குப் பின்னால், பா.செயப்பிரகாசம், பூமணி, தமிழ்ச்செல்வன்,சூரங்குடி முத்தானந்தம் சோ.தர்மன், தேவதச்சன், கௌரிசங்கர், உதயசங்கர்,கோணங்கி, அப்பாஸ், ஜோதிவிநாயகம்,உதயசங்கர், அப்பணசாமி,நாறும்பூநாதன், சாரதி, திடவை பொன்னுச்சாமி என பல படைப்பாளிகளை ஒரு வட்டாரத்தில் உருவாக்கிய பெருமை அவருக்குண்டு. ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய கரிசல் சொல்லகராதியை, தனி ஒருவராக, கோவில்பட்டி நண்பர்கள் துணையோடு 1982 இல் உருவாக்கினார்.
இது மகத்தான சாதனை தானே ?
ஆறாப்பு மட்டுமே படித்த இந்த மனிதரை புதுச்சேரி பல்கலைக்கழகம் வருகைதரு பேராசிரியராக நியமித்தபோது முதலில் திகைத்தார்.
பல்கலைக்கழகத்தில் பாடங்களை வேப்ப மரத்தடியில் நடத்தி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது. சிறுகதை எழுத்தாளர்,நாவலாசிரியர், சிறார் எழுத்தாளர், பாலியல் இலக்கியத்தை எழுதியவர். கடித இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர். கட்டுரையாளர். மிகசிறந்த கதைசொல்லி என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர் கி.ரா.அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவப்படுத்த வேண்டும் என்ற குரல் தமிழ் இலக்கிய உலகில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு அவர் எல்லா வகையிலும் பொருத்தமானவரே.
1965 முதல் இலக்கியத்திற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டு வந்தபோதிலும், தமிழில் எழுத்தாளர் அகிலனும் (1975 ) எழுத்தாளர் ஜெயகாந்தனும் (2002 ) மட்டுமே பெற்றுள்ளனர்.
மலையாள எழுத்தாளர்கள் ஐவருக்கும், கன்னடத்தில் எழுவருக்கும், வங்க மொழி எழுத்தாளர்களுக்கு நால்வருக்கும், இந்தி மொழி படைப்பாளிகள் எட்டு பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கி.ரா.அவர்களின் படைப்புகள் இந்தி, பிரெஞ்சு,ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வாழும் எழுத்தாளரான கி.ரா.அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவப்படுத்துவதே அவரது இலக்கிய பங்களிப்பிற்கு வழங்கும் அங்கீகாரம் என்று சொல்லலாம்.
இந்த 98 வயதிலும் கதை,கட்டுரை எழுதுகிறார். தொலைபேசியில் நண்பர்களோடு உரையாடுகிறார். அன்ட்ரோய்டு தொலைபேசியில் விஷயங்களை பகிர்கிறார். ஜூம் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
கேரளத்தின் முகமது பஷீர் போல, தகழி சிவசங்கரன் போல, தமிழகத்தில் கி.ரா.எனும் இலக்கிய ஆளுமை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Subscribe to:
Posts (Atom)