Sunday, September 13, 2020

புதுமைப்பித்தன் (ஏப்ரல் 25 - பிறந்த நாளை முன்னிட்டு ) ---------------------------- இவருக்கு எல்லாமே எள்ளல் தாம்..ஆனால் இலக்கிய விமர்சனம் என்று வந்து விட்டால் மனுஷன் நெற்றிக்கண்ணை திறந்து விடுவார். தனக்கு வேண்டியவர் என்பதால் அவரது படைப்புக்களை பாராட்டி விடமாட்டார். மனிதர் நக்கீரப்பிறவி தான். அவரோட நண்பர் சுடலைமுத்து அஞ்சல் துறையில் வேலை பார்ப்பவர். கூடவே கொஞ்சம் கவிதைப் பைத்தியமும் உண்டு. ஒரு பிரபந்தத்தை இயற்றி (!) புதுமைப்பித்தனிடம் நீட்டி, " இதுக்கு ஒரு சிறப்புப் பாயிரம் எழுதிக்கொடும் ஓய்.." என்றார். நண்பர் என்பதால், பிரபந்தத்தை முழுவதும் கேட்டார். கேட்டபிறகு ஒன்றுமே சொல்லவில்லை.( மனுஷன் எப்படித்தான் பொறுமையுடன் கேட்டாரோ ). சிறப்புப்பாயிரம் எழுதியே தர வேண்டும் என்று குரங்குப்பிடியாய் நிக்கிறார் நம்ம சுடலைமுத்து. மளமளவென ஒரு தாளை எடுத்து ஒரு பாடல் எழுதினார் : " அஞ்சல் சுடலைமுத்துவின் ஆலகவி கேட்டவர்கள் நெஞ்சம் உலர்ந்துபட்ட நேர்மை என்னே ! - நஞ்சு தின்னும் பிறந்திறவா வரம் பெற்றான் பித்தனான என்றக்கால் பிறந்திருப்பார் பெற்றி என்ன சொல் ! " பாடலின் அர்த்தம் புரிகிறதா ? கோனார் நோட்ஸ் தேவையே இன்றி புரியும் என்று நினைக்கிறேன். காதில் ரகசியமாய் வந்து கேட்பவர்களுக்கு சொல்கிறேன். திருப்பாற்கடலில் உருவான விஷத்தை சிவபெருமான் பருகியது தேவர்களை காப்பாற்றுவதற்காக இல்லை ஐயா..நம்ம சுடலைமுத்துவின் கவிதைகளை கேட்ட கொடுமை தாங்காமல் பருகி விட்டார்..அவரால், தற்கொலையும் பண்ண முடியாத நிலைமை ஏற்பட்டு பித்தனாகி விட்டார்..ஆனானப்பட்ட ஆதிசிவனுக்கே இந்த நிலைமை எனில், சாதாரண மானிடப்பிறவிகளான மக்களின் கதி என்னவாகும் ? அன்றோடு போனவர் தாம் சுடலைமுத்து. ************************************ ஞானராஜசேகரன் தயாரித்த " பாரதி " திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பீஜித்தீவில் கண்ணீர் விடும் தமிழ்பெண்களை எண்ணி பாரதி கவிதை வரிகளை எழுதும்போதே, கண்ணீர் விட்டு அழுவார் : " நாட்டை நினைப்பாரோ ? எந்த நாளினிற் போயதைக் காண்போமென்றே அன்னை நாட்டை நினைப்பாரோ ?- அவர் விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே ! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுங்குரல் மீட்டும் உரையாயோ ?... .. .. .. .. .. .. .. .. .. .. " இந்தக்காட்சி எவரின் மனதையும் தொடும். இந்த கவிதை வரிகளில் இருந்தே புதுமைப்பித்தனின் " துன்பக்கேணி " உருவாகியது. இலங்கை தேயிலை தோட்டத்தில் வெள்ளைக்காரர்களின் பொருளாதார சுரண்டலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளான தமிழ்ப்பெண்களின் குரலை தனது நீண்ட நெடுங்கதையில் பதிவு செய்தார். அந்தக்கதையில் " வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது " என்ற வரிகளை போகிறபோக்கில் எழுதி இருப்பார். வெள்ளக்கோவில் சுடுகாட்டு அருகே உள்ள பனைவிளையில் இருக்கும் மருதாயி கிழவியிடம் மூக்குடை பட்டு திரும்பும் எமதர்ம ராஜாவைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாய் இருக்கும். சாகப்போகிற கிழவியைப்பார்த்து " நான்தான் எமன்.." என்று விஸ்வரூபம் எடுத்து காட்சி தரும்போது, "அப்படியா..வா..இப்படி இரி .." என்று காலை நீட்டி வெற்றிலையை தட்ட தொடங்கும்போதே, எமனின் கம்பீரம் மறைந்து போகும். " உன்னாலே என் உசுரைத்தானே எடுத்துக்கிட்டு போவ முடியும் ? இந்த உடலைத் தூக்கிட்டு போவ உனக்கு திறமை இருக்கா ? ஒன்னை வேறயா மாத்த முடியும்..உன்னால அழிக்க முடியுமா ? அடியோட இல்லாம ஆக்க முடியுமா ? அதை உன்னைப்படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே ! அப்புறமில்ல உனக்கு ? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே ?" என்று பொக்கை வாயை திறந்து கிழவி சிரிக்கையில், எமன் மட்டுமா..நாமே வாயடைச்சு நிக்கிறோம். இது தான் புதுமைப்பித்தனின் அசலான எழுத்து. ******************************** " மனிதன் கடவுளைப் படைத்தான் ; அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.. இருவரும் மாறி மாறி போட்டி போட ஆரம்பித்தார்கள் ; இன்னும் போட்டி முடியவில்லை. நேற்று வரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப்பிறந்த மனிதன் ஈடுகட்டிக்கொண்டு வந்தான்." என்று துவங்கும் " சாமியாரும் குழந்தையும் சீடையும்" கதையின் களம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் படித்துறை. படித்துறையில் அமர்ந்து தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சாமியார். அருகே சற்று தள்ளி நான்கு வயது பெண் குழந்தை... ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடது பக்கம் சுலோச்சன முதலியார் பாலம்..முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டிய பாலம். கட்டபொம்முவின் துபாஷ் இராமலிங்க முதலியார் மகனான சுலோச்சன முதலியார் கட்டியது என்பதில் திருநெல்வேலிக்காரர்களுக்கு அபாரப்பெருமை என்று கிண்டல் செய்கிறார் புதுமைப்பித்தன்.( இப்பவும் பாலம் கட்டி நூற்றி எழுபத்தாறு வருஷம் ஆச்சு என்று வருஷா வருஷம் கொண்டாடிட்டு இருப்பதை பார்த்தால் என்ன சொல்வாரோ ?) பாவாடையில் சீடையை கட்டிக்கொண்டு வந்த குழந்தை காலை தண்ணீரில் விட்டு ஆட்டிக்கொண்டே அப்பப்ப சீடையை தின்கிறது. சின்ன கால்காப்புகள் தண்ணீரில் இருந்து வெளிவரும்போது, சூரிய கிரணம் அதன் மேல் பட்டு கண் சிமிட்டும். அடுத்த நிமிடம் கிரகத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன ? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்து தான் ஆகவேண்டும். கதையை வாசித்து விட்டு வருகையில், இந்த இடத்தை கடக்க முடியாமல் வியந்து நிற்க வைப்பார் புதுமைப்பித்தன். " மனிதன் நல்லவன்தான். தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அது தன்னிடமிருந்ததாக அவனுக்கு தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்." என்று சாமியார் சொல்லும்போது வேறேதோ நம் மனக்கண்ணில் ஓடினால், அது அவரின் தவறல்ல. " மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்கு கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்க தெரியாது. அழியும்வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது ." என்று மேலும் சொல்லிச்சென்ற சாமியாரின் சொற்கள் அர்த்தம் மிக்கவை. அவை சாமியாரின் சொற்களா ? இல்லையில்லை.. புதுமைப்பித்தனின் சொற்கள்.. அந்த கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை..அனந்த கோடி வருஷங்களில் ஒருவராவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே ! " உயிரற்ற மோட்ச சிலையே..உன்னை உடைக்கிறேன் " சாத்தனின் கோபம் நியாயமானது.. என்ன..இந்தக்கதை வாசிப்பவன் எவனும் கோவிலுக்குப் போவதில்லை. வாசித்தவன் கோவிலுக்கு சென்றால் ..சிலையின் மகோன்னதத்தை உணர முடியும்.. மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க ஒளிச்சுடராய் தெரிகிறான் புதுமைப்பித்தன்...! -----------------------------------இரா.நாறும்பூநாதன்

No comments: