Sunday, September 13, 2020
மொகைதீன் வாத்தியாரும், எலக்ட்ரிக் குக்கரும் ( சிறுகதை )
---------------------------------------------------------------------------
" இங்கன கோபால் வீடு எங்க இருக்கு ?"
காஜா மொகைதீன் வாத்தியார் தனது பழைய ஹெர்குலஸ் சைக்கிளில் இருந்து இறங்கி தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம்
கேட்டார். இந்த தெரு என்று தானே சொன்னாங்க..!
" எந்த கோபாலு ?" அவர் காம்பவுண்டின் வெளியே நின்றிருந்த வேப்ப மர கொழுந்து இலைகளை பறித்தபடி கேட்டார். இப்பவும் வேப்பிலைக்கொழுந்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் போல..நல்ல இளசாய் ஒரு கொத்து அவரின் கைகளில் இருந்தது.
" முழுப்பெயர் ராஜகோபால் ன்னு நெனைக்கேன்.."
மொகைதீன் வாத்தியார் முகத்தில் வழிந்த வியர்வையை கைகளால் துடைத்துக்கொண்டார்.
" மிலிட்டரி ல வேலை பார்த்தார்னு சொல்வாங்க.."
வாத்தியாருக்கு அதில் உறுதியாய் தெரியாமல் மெல்ல இழுத்தார்.
" மிலிட்டரி ராஜாவா ..இதுலேயே நாலு வீடு தள்ளி பச்சை கலர் அடிச்ச வீடு தெரியுதா..முன்னாலே நாவல் மரம் நிக்குதுல்லா ..அந்த வீடு தான்"
தெரிந்தது. நல்ல வேளை, ரொம்ப அலையாமல் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்த ஊரில்தான் அம்பது வருஷமா இருக்கோம்..ஊரே ரொம்ப மாறி விட்டது. ரிடையர் ஆகியே பதினைஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகுது.
" ரொம்ப தேங்க்ஸ் சார்..அவன் என்னோட ஸ்டுடென்ட் தான்.."
இப்படி சொல்லும்போது சற்று பெருமிதமாக நெஞ்சை உயர்த்திக்கொண்டார். மிலிட்டரி ராஜாவுக்கு நல்ல பேரு இருக்கும் போல என நினைத்தபடியே வாத்தியார் சைக்கிளை மீண்டும் மிதிக்காமல் மெல்ல உருட்ட தொடங்கினார்.
இந்த தெருவிற்குப்பெயர் பிச்சுவனத்தெரு. ஒரு காலத்தில் இங்கே உள்ள நந்தவனத்தில் இருந்து கோபாலசாமி கோவில் பெருமாளுக்கு பூக்கள் போகும் . மஞ்சள் செவ்வந்திப்பூ, அரளிப்பூ, பிச்சிப்பூ என மாலைகள் கட்டிக்கொண்டு போவார்கள். முப்பது வருஷத்திற்கு முன்பு வாத்தியார் இந்த தெருவின் வழியாகத்தான் சைக்கிளில் சென்று,
தெற்கு பஜார் லூர்துநாதன் சிலைக்கு பின்னால் உள்ள அஸ்போர்ன் பள்ளிக்கு செல்வார். அப்போது தெரு ரொம்ப விசாலமாய் இருந்தது.
இப்போது தெரு முழுக்க செல்போன் கடைகள்..நகலெடுக்கும் கடைகள்..
ஜெராக்ஸ் எடுக்க பக்கம் ஒன்றிற்கு ரூ.2 என்று பெரிது பெரிதாய் விளம்பரம் வேறு. ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் கருவியை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் என்றே தெரியாமல் தமிழர்கள் இப்படி மூடர்களாய் இருக்கிறார்களே என்று வாத்தியாருக்கு பல சமயங்களில் கோபம் பழியாய் வரும். பேரன் கரீம் ஒருமுறை சொன்னபோது, அவனை பக்கத்தில் அழைத்து சொன்னார்.
" ஜெராக்ஸ் இல்லை ப்பா..போட்டோ காப்பி ன்னு சொல்லணும்..சரியா.."
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அடுக்களையில் இருந்து
மருமகள் ஆயிஷா " அப்படி சொன்னா யாருக்கு தெரியும் ..
ஊரோட ஒத்து வாழனும்.." என்று குரல் கொடுத்தாள்.
நல்லதை சொன்னால் யார் இங்கே கேட்கிறார்கள் ? கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.
பச்சைக்கலர் அடித்த வீட்டிற்கு முன் வந்து நின்றார். சைக்கிளை நவாப்பழ மரத்தின் முன் நிறுத்தி விட்டு, மரத்தை நோட்டம் விட்டார்.
இப்போ சீசன் இல்லை போல. இலைகள் செழித்து இருந்தன .
வீட்டின் தார்சா மூடியிருந்தது. அந்தக்கால அழி போட்ட வீடு. கோபாலின் பூர்வீக வீடாக இருக்கக்கூடும். அழைப்பு மணியை அழுத்தவா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தார்.
கோபால்னு கூப்பிடவா..ராஜகோபால்ன்னு கூப்பிடவா..
" கோபால் சார்.." என்று லேசாக செருமியபடி கூப்பிட்டார். கூப்பிட்டது தனக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை. அது என்ன கோபால் சார் ! தனது மாணவன் தானே ..
" கோபால் தம்பீ..."
மனம் ஒன்று நினைக்குது, வாய் ஒன்றை சொல்கிறது.
" யாரு..." உள்ளிருந்து கனத்த குரல் வந்தது...நல்லவேளை, தம்பி வீட்டில்தான் இருக்கான். கவலையில்லை..வந்தவேலை பாதி முடிந்தமாதிரி நினைக்க தொடங்கினார்.
கதவை திறந்தவர் " யார் நீங்க.." என்று கேட்டு விட்டு, அடுத்த கணமே
" மொகைதீன் சார் தானே ...உள்ளே வாங்க.."
என்று உள்ளே அழைத்தார். நெற்றியில் திருநீறு குங்குமம் பளிச்சிட்டது.
ராஜகோபால் முகம் ரொம்ப மாறி விட்டதோ ? பெயரையும் டவுசர் போட்ட பழைய உருவத்தையும் இணைக்க முயன்றார்.
" தம்பி குளிச்சுட்டு இருக்கான்..இப்ப வந்துருவான்..
இப்ப இங்கே தான் இருக்கீங்களா ?" என்று அவர் சொன்னபிறகு தான், இவர் அவன் அண்ணன் என்பதை உணர்ந்து கொண்டார்.
" ஓ..அப்படியா..வரட்டும் வரட்டும்..அவசரமில்லை.." என்றபடியே அங்கே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தார். அந்தக்காலத்து நாற்காலி.
ரோஸ் மரத்தில் செய்ததாக இருக்க வேண்டும்.
" நானும் அதே ஸ்கூல்ல தான் படிச்சேன்..நான் வேதநாயகம் சாரிடம் படிச்சேன்..தம்பி தான் உங்க கிட்டே படிச்சான்.."
அவராய் தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டார்.
" ஓகோ...வேதநாயகம் சார் போய் சேர்ந்திட்டார்...நான் தான் இன்னும்
உலகிற்கு பாரமாய் இருக்கிறேன்.." என்று சொன்னவர்,
" தம்பி...உங்க பேரு என்ன " என்றார்.
வாத்தியார் கழிவிரக்கத்துடன் சொன்னதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ,
" சீனிவாசன்..ரோடு கான்ட்ராக்ட் எடுத்து செய்றேன்.." என்றபடியே உள்ளே சென்றார். பட்டும் படாத டைப் போல..
கோபால் அப்படி இருக்க மாட்டான் என்று உள்ளுணர்வு சொல்லியது.
அறையை நோட்டமிட்டார். ராமர் பட்டாபிஷேகம் போட்டோ நேர் எதிரே தெரிந்தது. பொதுவாய் இதெல்லாம் பூஜை அறையில் தானே வைத்திருப்பார்கள் என்று நினைத்தார். அடுத்து ஒரு பெரியவர் படம்..
மாலை போட்டபடம்..கோபாலின் அப்பாவாக இருக்குமோ என்னவோ ?
நாமாக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும் ? வேறு யாராகவும் இருக்கலாம். எழுபத்தாறு வயதில் நாம் இருக்கும்போது, அவன் அப்பாவும் இருக்கலாம்..தப்பு..தப்பு...
" சார்..வாங்க..வாங்க..." உள்ளே இருந்து வந்தவர், ராஜகோபாலாகவே இருக்க வேண்டும், நேராக காஜா மொகைதீன் வாத்தியாரின் பாதந்தொட்டு வணங்கினார்.
" தம்பி...எழுந்திரிங்க..எதற்கு இதெல்லாம்.." வாத்தியார் மனசெல்லாம் பூரித்து விட்டார். அந்தக்காலத்து மாணவர்கள் மாணவர்கள் தாம்..
அவர் மனதில் நம்பிக்கை துளிர்த்தது.
" சார்..நல்லா இருக்கீங்களா..பெரிய பள்ளிவாசல் தெருவில் தான் இருக்கீங்களா..பேரன் பேத்திகள் எல்லாம் நல்லா இருக்காங்களா "
ராஜகோபால், வாத்தியார் முன்பு உட்காராமல் சற்று தள்ளி நின்றான்.
" நீங்க உட்காரலாமே..நின்னுகிட்டு பேசறீங்களே.."
வாத்தியார் தடுமாறினார்.
" சார்..என்ன நீங்க.. என்னைப்போயி நீங்க நாங்கன்னு பேசிக்கிட்டு..நான் உங்க மாணவன்..உங்க கிட்டே கணக்கு படிக்கலேன்னா நான் எஸ்எஸ்எல்சி தாண்டி இருக்க மாட்டேன்.." கோபால் பற்கள் வெளியே தெரிய சிரித்தான்.
வாத்தியாருக்கு நெஞ்சு விம்மியது. காரியம் பழம் தான் என்று மனதுள் சொல்லிக்கொண்டார்.
" உங்களை ரெண்டு மட்டம் ரோட்டில் பார்த்து விஷ் பண்ணி இருக்கேன்..
உங்களுக்கு மறந்திருக்கலாம்.." என்றான் கோபால்.
" நீ நல்லா படிக்கிறவன் தானே..பிறகு எதுக்கு பட்டாளத்திற்கு போனே "
வாத்தியார் உறுதிப்படுத்தும் நோக்கில் கேட்டு விட்டார். அவர் காலத்தில், படிப்பு வராதவன் தான் பட்டாளம் போவான் என்பது விதி.
" ரொம்ப நல்லா படிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது சார்..
காலேஜ்ல படிக்கும்போது, ஏர் போர்ஸ்ல சேரச்சொல்லி சித்தப்பா ஒருத்தர் சொன்னதால எழுதினேன்..குருட்டாம்போக்குல கெடைச்சதோ என்னவோ..டெல்லியிலும் நாக்பூர்லயும் பதினைந்து வருஷம் இருந்தேன்..பிறகு இங்கே வந்துட்டேன்..இப்போ பேங்க்ல வேலை..
பாளையங்கோட்டை வந்து மூணு வருஷந்தான் ஆகுது.."
ராஜகோபால் சுருக்கமாய் சொல்லி முடித்தான் தனது கடந்தகால வாழ்க்கையை.
" வாங்க.." என்று வணங்கியபடி, உள்ளே இருந்து வந்த பெண்மணி டீப்பாயில் காப்பியும், காராசேவும் கொண்டு வந்து வைத்தார்.
" சார்..எனக்கு கணக்கு வாத்தியார்..சாரைப்போல யாரும் கணக்கு சொல்லித்தர முடியாது." என்று சொன்ன கோபால்,
" சார்..இது என்னோட மனைவி .." என்று அறிமுகம் செய்வித்தான் வாத்தியாரிடம். அந்த பொண்ணு மீண்டும் வணக்கம் சொன்னார்.
லட்சுமிகரமான முகம். சாந்தமான பெண் என்பதை முகமே உணர்த்தியது. மனதில், சம்பந்தமே இல்லாமல் மருமகள் ஆயிஷாவின் முகம் தோன்றி மறைந்தது.
" பேசிக்கிட்டு இருங்க " என்று புன்னகைத்த அவன் மனைவி உள்ளே சென்று விட்டாள். ஆமாம் பேசவேண்டும் தான். வந்த வேலையை மறந்து ஏதேதோ பேசினால் எப்படி..
எப்படி துவங்க..நாம் கேட்பதை நினைத்தால், நம்மை பற்றி என்ன நினைப்பானோ கோபால் ..ரொம்ப மரியாதையாய் பேசுகிறான்..வாத்தியார் ரொம்ப அற்பமாய் கேட்கிறாரே என்று கூட நினைக்கலாம்..மீண்டும் முகம் வியர்த்தது. குனிந்து வேட்டியால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
" ஏர் போர்ஸ்ல இருந்துட்டு, பேங்க் வேலை பார்க்க ஈஸியா இருக்கா "
ஏதாவது கேட்கணுமே என்று கேட்டார். மனம், முதல் உரையாடலுக்காய் ஒத்திகை பார்த்தது.
" அதெல்லாம் என்ன சார் கஷடம்..அது ஒரு மாதிரி..இது ஒரு மாதிரி..
ஆசைப்பட்டதற்கு பதினைந்து வருஷம் நாட்டுக்காக வேலை பார்த்தாச்சு.." என்று சிரித்தான் கோபால்.
" ஆமாமா...தேசத்துக்காக எல்லையில வேலை பார்த்தது பெருமை தானே..எனக்கே ரொம்ப பெருமையாய் இருக்கு..என்னோட மாணவன் ராணுவத்துல வேலை பார்த்தான்னு சொல்றது " வாத்தியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இதை இந்த நேரம் சொல்லலாமா வேண்டாமா என்று மனம் தத்தளித்தது.
தார்சாவில், கோபால் நீலநிற சீருடையில் இருக்கும் படத்தை பார்த்தபோது,மேலும் தயங்கினார்.
" உங்க கிட்ட படிச்ச கணக்கு எப்போதுமே மறக்காது..சார்.."
கோபால் இன்னமும் உட்காராமல் நின்று கொண்டே பேசியது, அவன்மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது.
லேசாக செருமியபடி, " எனக்கு ஒரு உதவி ...உன்னாலே ஆகணும்.."
என்று துவங்கினார்.
" என்ன உதவி சார்...உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறேன்..
சொல்லுங்க சார்.." கோபாலின் வார்த்தைகள் அவருக்குள் நம்பிக்கையை தோற்றுவித்தது.
" எனக்கு ஒரு டேபிள் பேனும், எலக்ட்ரிக் குக்கரும் வாங்கணும்.."
என்று சொன்ன மொகைதீன் வாத்தியாரை வியப்புடன் பார்த்தான் கோபால்.
" நீ ராணுவத்தில் வேலை பார்த்ததால, மிலிட்டரி கான்டீன்ல குறைஞ்ச விலைக்கு உனக்கு தருவாங்களாமே..கேள்விப்பட்டேன்..இப்பவும் தருவாங்க ள்ள..என்கிட்டே இருக்குற பழைய சீலிங் பேனு ரிப்பேர் ஆயிட்டு..அதை ஒக்கிடணும்னா ரொம்ப செலவாகும்னு சொல்றாங்க. என்னோட மருமகள் எலக்ட்ரிக் குக்கர் வேணும்னு என்னோட மகன் கிட்ட ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கா..அவனும் அந்தா இந்தான்னு சொல்லிட்டே இருக்கான்..அவனும் என்ன செய்வான் பாவம்..ஒண்ணுக்கு மூனா பிள்ளைகள் இருந்தா என்ன பண்ணுவான்
..என்னோட வீட்டுக்காரி மூத்த பையனோட வாணியம்பாடியில் இருக்கா..பிள்ளைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே..
வாத்தியான் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..ரெண்டு பேரும் மக்கு இல்லைதான்..ஆனாலும், நல்ல வேலையில உட்காரலை..இன்ஷா அல்லாஹ்..அவன் தான் நல்லது நடக்க உதவி பண்ணனும்.."
என்று மேலே பார்த்து சொன்னவர்,
" தம்பி..இப்ப என்கிட்ட ரெண்டாயிரத்து சொச்சம் இருக்கு..எவ்வளவு ஆகும்னு தெரியல..மருமகள்ட்ட கூட கேட்டேன்.." அது தெரிஞ்சு உமக்கு என்னாகப்போகுது..குக்கரு கெடைச்சாலும் கெடைக்காட்டியும் உங்களுக்கு வேணும்கிறதை தராமல் பட்டினி போட்டுற மாட்டேன்.."
என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி சொல்லிட்டா..வாங்குற பென்ஷன் பணத்தில் பாதி வீட்டு லோனுக்கு தான் கொடுக்குறேன்..புது வீடு இல்ல..
இப்ப இருக்குற பழைய வீடு மழைக்காலத்துல ஒழுகுச்சு..அதை ரிப்பேர் பார்க்க மோட்டார் வைக்கன்னு அஞ்சு லட்சம் ஆயிருச்சு..
அதெல்லாம் பெரிய கதை..நம்ம கஷடத்தை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு நேரத்தை வீணடிச்சுட்டு இருக்கேன்.." என்று எழுந்தவர்,
அவன் அருகே சென்று, " இந்த ரூபாயை பிடிங்க..நீங்க உங்களுக்கு வாங்குவதாய் நினைச்சு வாங்கி, எனக்கு அன்பளிப்பாய் கொடுப்பதாக நினைச்சு கொடுப்பீங்களா.." என்று கோபால் கையில் பணம் உள்ள கவரை திணித்தார் வாத்தியார்.
" சார்..அதெல்லாம் வேண்டாம்..பணமெல்லாம் இருக்கட்டும்..
நாலு லீப் வைச்ச பேனும், நல்ல எலக்ட்ரிக் குக்கரும் வாங்கி தரேன் சார்..
இதை நீங்க வந்து சொல்லனுமா..யாரிட்டயாவது சொல்லி விட்டால் போதாதா.."
என்று கோபால் பணத்தை அவரிடமே திரும்ப கொடுத்தான்.
" இல்ல கோபால்..பணத்தை முதல்ல வாங்குப்பா..இந்த மாதிரி வாங்குறதே ஒரு வகையில் தப்பு தான்..என்னோட இயலாமையிலே கேட்டுட்டேன்.." வாத்தியார் மீண்டும் கவரை தந்தார்.
" நான் வாங்கி கொடுத்துட்டு, அப்புறமாய் கண்டிப்பாய் வாங்கிக்கறேன்..
இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வந்தது தான் கஷடமாய் இருக்கு.."
என்று கோபால் சொல்லி விட்டு, வாத்தியாரை அமர செய்தான்.
" நேரமாச்சுப்பா...உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம்..மருமகள் மார்க்கெட் வரை போயிருக்கிறா ..அவள் வரமுன்னாடி உன்னை பார்த்துட்டு போயிரணும்னு தான் வந்தேன்..பார்த்துட்டேன்..நீ நல்லா இருக்கணும் பா..இன்ஸா அல்லாஹ்.."
தட்டு தடுமாறி எழும்பினார் மொஹைதீன் வாத்தியார்.
" வீட்டுல சொல்லீருப்பா..அண்ணன் இருந்தாரே..போயிட்டாரா..அவர்ட்டயும் சொல்லீரு..நல்ல மனுஷன்..
அப்ப நான் வரட்டுமா..."
கிளம்பிய வாத்தியாரின் கையை பிடித்தபடி வெளியே அழைத்து வந்தான் கோபால்.
" இந்த பணம் உன்கிட்டேயே இருக்கட்டுமே..செலவழிஞ்சு போயிருமோன்னு பயமாவும் இருக்கு.." என்று மீண்டும் வாத்தியார் பணம் இருந்த கவரை கொடுக்க முயன்றார்.
கோபால் அதனை வாங்காமல், அவரது வெள்ளை கதர் சட்டையின் பைக்குள் வைத்து அவரை வணங்கினான். உள்ளே அவனது செல்பேசி ஒலிக்க தொடங்கியது. வேகமாய் உள்ளே வந்தான். ஏர்டெல் விளம்பர அழைப்பு..எதிர் அறையில் இருந்து அண்ணன் சீனிவாசன் வெளியே
வந்தார். " துலுக்க வாத்தியான் இதுக்கு தான் வந்தாரா " என்று நக்கலுடன்
கோபாலை பார்த்து கேட்டபோது,
" அண்ணே..என்ன இருந்தாலும் அவரு நம்ம வாத்தியாரு.."
என்றான்.
" ஆமாமா..வாத்தியாரு தான்..இன்னும் கொஞ்ச நாள்ல பாகிஸ்தான் போகப்போற வாத்தியாரு..அங்கெ போயி கேக்க சொல்லு.."
சீனிவாசன் இளக்காரமாக சிரித்தார்.
" இப்படிலாம் பேசாதீங்க..நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அப்படி எதுவும் நடக்க போறதில்ல.." என்றவன், வேகமாய் வாசலுக்குப்போனான்.
நவாப்பழ மரத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் மொகைதீன் வாத்தியார். அவர் காதில் எதுவும் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் வலது காதில் மாட்டியிருந்த செவிட்டு மெஷின் சொல்லியது.
கேட்டிருக்காது. அவர் ஸ்டான்ட் எடுத்து விட்டு, தனது ஹெர்குலஸ் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்..
-------------------------------------------இரா.நாறும்பூநாதன்
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment