Sunday, September 13, 2020

 கி.ரா.98

-----------------
கோவில்பட்டி சாரதா ஸ்டூடியோ அக்காலத்தில் பிரபலமானது. காலண்டர் ஓவியர் கொண்டையாராஜு அவர்களின் தலைமை சீடர் ஓவியர் சுப்பையா  நடத்தி வந்த ஸ்டூடியோ என்றால் கேட்கவா வேணும் ?
விடுமுறை தினமான அன்று நாங்கள் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தபோது தான், குடையை மடக்கியபடி உள்ளே நுழைந்தார் எழுத்தாளர் கி.ரா.
" ஆவணி மாசத்துல கூட வெயில் இந்த போடு போடுதே..." என்று சொன்னவர் "  தலையை எண்ண ஆரம்பித்தார்.." ஒன்னு,ரெண்டு,மூணு.."
ஆக ஒன்பது  பேரு..என்னையும் சேர்த்தா பத்து  பேரு..என்று சொல்லி விட்டு, மாடியில் இருந்து கீழே இருந்த டீக்கடைக்காரரைப் பார்த்து
" மொத்தம் பத்து  டீ..பத்து  சம்சா..மேலே கொடுத்து விட்டுருங்கோ "
என்று சொல்லி விட்டு எங்களோடு வந்து அமர்ந்தார்.
" நைனா..என்ன விஷேசம் ? டீ ,சம்சால்லாம் ஆர்டர் பண்றீகளே ?"
எங்களுக்கு ஒரே வியப்பு.
" சொல்லுதேன்..பொறுங்க.." என்றவர், துண்டால் முகத்தை நன்றாக அழுத்தி துடைத்துக்கொண்டார். " எனக்கு இன்னைக்கு அறுபது வயசு முடிஞ்சு 61  பொறக்குது. பொறந்த நாளை சேக்காளிகள் கூடத்தானே கொண்டாடணும்.." என்று மென்மையாக சிரித்தார்.
அவருடைய சேக்காளிகள் எங்களுக்கு அப்போது வயது 22 , 23  தான். சற்றே வயது கூட இருந்தவர் எனில் எழுத்தாளர் ஜோதிவிநாயகத்தை சொல்லலாம். அப்போது அவருக்கு 29 இருக்கலாம்.
தனது சஷ்டியப்தபூர்த்தியை மிக எளிமையாக எங்களோடு டீ,சம்சா வோடு கொண்டாடியவர் கி.ரா. அந்த நண்பர்கள் சந்திப்பையும் ஒரு சின்ன இலக்கிய கூட்டமாக நடத்தி விட்டோம். சம்சாவை சாப்பிட்டபடியே, ஜோதிவிநாயகம் பேச ஆரம்பித்தார் " நாமெல்லாம் ஒம்போதுன்னு கேலி பண்ணிப்பேசும் பரிதாபத்திற்குரிய அலிகளைப்பற்றி (அப்போது திருநங்கையர் என்ற சொற்பிரயோகம் அறிமுகம் ஆகவில்லை) நம்ம நைனா ஒரு கதை எழுதி இருக்கார்..
கோமதி என்ற அந்த கதையில், ஆணாக அறியப்பட்ட கோமதி, ரகுபதி நாய்க்கர் வீட்டில் சமையல்காரனாக வேலை பார்க்கும்போது அவருடைய மகன் மேல் காதல் கொண்டதை பற்றி எழுதியிருப்பார்..தற்கால இலக்கியத்தில் இவர்களைப் பற்றி எல்லாம் எந்த படைப்பாளியும் கதை எழுதியிருப்பதாக தெரியவில்லை. 1964 இல் " தீபம் " இதழில் வந்த நினைவு. படிச்சுப் பாருங்க.."  என்று முடித்தார்.

அந்தக்காலத்தில், நாங்கள் அவரது " கதவு ", " வேட்டி", " மாயமான்"
" கரண்ட்" , " ஒரு வெண்மைப்புரட்சி " போன்ற கதைகளை வாசித்திருந்தோம். நாங்கள் அவரது படைப்புகளை குறித்து உற்சாகமாய் பேச ஆரம்பித்தோம். இங்கே நாங்கள் என்பது நான்,ஓவியர் மாரிஸ்,எழுத்தாளர்கள் ஜோதிவிநாயகம்,கோணங்கி, உதயசங்கர்,சாரதி,அப்பணசாமி,திடவை பொன்னுச்சாமி, சிவசு ஆகியோர்.
அரசாங்கம் அறிவிக்கும் கடன் திட்டங்கள் எப்படி கேலிக்கூத்தானவை என்பதை " மாயமான் " கதை எப்படி சொல்கிறது என  கோணங்கி பேசிய ஞாபகம். கிட்டத்தட்ட கதையில் வரும் கதாபாத்திரம்  அப்பாவு செட்டியாராகவே அவர் மாறி விட்டார்.
மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சம்சாரிகளை ஒரு மனுஷனாகவே மதிக்காத ( கன்ஸீமர்கள் என்றால் நாய்க்குப் பொறந்த பயல்கள் என்று அர்த்தம் ) தன்மையை சொல்லும் " கரண்ட் " கதையை உதயசங்கர் விவரித்து சொன்னார். மழை பொய்த்துப்போன காலத்தில், வீட்டு வரி கட்டவில்லை என்று சொல்லி, விவசாயி வீட்டின் வாசல் கதவை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்து தூக்கி சென்ற
" கதவு " கதையைப் பற்றி நான் பேசினேன்.
எல்லாவற்றையும் நைனா ரசித்துக் கேட்டார். " பரவாயில்லையே..கதைகளை நல்ல உள்வாங்கி வாசித்திருக்கீர்களே..நான்லாம் என்னோட நாற்பது வயதுக்கு மேல் தான் பெரும்பாலான கதைகளை எழுத ஆரம்பிச்சேன்..ஆறாப்பு படிச்ச விவசாயி தானய்யா..நண்பர் ஒருவருக்கு கடிதமாய் எழுதுன விஷயம் தான் கதவு கதை..அது இப்ப ரொம்ப பிரபலம் ஆயிட்டு..என்று நைனா ஏற்புரை வழங்கினார்.
அறுபதுகளில் பொடியன்கள் எங்களோடு சேக்காளியாய் பழகிய எழுத்தாளர் கி.ரா. இன்றும் அதற்கு அடுத்த தலைமுறையான கார்த்திக் புகழேந்தி (வயசு 30 ) போன்றவர்களோடு இணக்கமாய் பழகி வருகிறார் என்பதுதான் விஷேசம்.

ராயங்ககுல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமானுஜன் என்ற கி.ராஜநாராயணனுக்கு இந்த செப்டம்பர் 16 இல் 98  வயது தொடங்குகிறது.  காசநோயிலும், பாம்புக்கடியிலும் தப்பி, இந்த 98  வயதிலும் " அண்ட ரெண்ட பட்சி " என்ற நீண்ட சிறுகதை எழுதி தமிழ் இலக்கிய உலகை வியப்பில் ஆழ்த்தி வரும் கி.ரா. தமிழின் மூத்த எழுத்தாளர். தனது அழகான கையெழுத்தில் நாவலை எழுதி அதை அப்படியே அச்ச்சாக்கம் பண்ணியவர்.
 
இவரை கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று சொல்லி ஒரு வட்டார எழுத்தாளர் என்ற அளவில்  சுருக்கி விட இயலாது. இவரது கோபல்ல கிராமம் நாவல் வந்த புதிதில், அது நாவல் வகைமைக்குள் வரவில்லையே என்று சொன்னவர்கள் பலருண்டு.  ஆந்திரத்தின் ஒரு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஒரு இனத்தின் வரலாறை மங்கத்தாயாரம்மாள் வழியாக சொல்லும்போது அவரோடு சேர்ந்து நாமும் பயணிக்க முடிகிறது. தனது இனத்தின் வரலாறை தொன்மக்கதைகளோடு அவர் விவரிக்கும்போது எளிதில் ஒன்றிவிட முடிகிறது.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா. அவருக்குப் பின்னால், பா.செயப்பிரகாசம், பூமணி, தமிழ்ச்செல்வன்,சூரங்குடி முத்தானந்தம்  சோ.தர்மன், தேவதச்சன், கௌரிசங்கர், உதயசங்கர்,கோணங்கி, அப்பாஸ், ஜோதிவிநாயகம்,உதயசங்கர், அப்பணசாமி,நாறும்பூநாதன், சாரதி, திடவை பொன்னுச்சாமி என பல படைப்பாளிகளை ஒரு வட்டாரத்தில் உருவாக்கிய பெருமை அவருக்குண்டு. ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய கரிசல் சொல்லகராதியை, தனி ஒருவராக, கோவில்பட்டி நண்பர்கள் துணையோடு 1982  இல் உருவாக்கினார்.
இது மகத்தான சாதனை தானே ?

ஆறாப்பு மட்டுமே படித்த இந்த மனிதரை புதுச்சேரி பல்கலைக்கழகம் வருகைதரு பேராசிரியராக நியமித்தபோது முதலில் திகைத்தார்.
பல்கலைக்கழகத்தில் பாடங்களை வேப்ப மரத்தடியில் நடத்தி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது. சிறுகதை எழுத்தாளர்,நாவலாசிரியர், சிறார் எழுத்தாளர், பாலியல் இலக்கியத்தை எழுதியவர். கடித இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர். கட்டுரையாளர். மிகசிறந்த கதைசொல்லி என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர் கி.ரா.அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவப்படுத்த வேண்டும் என்ற குரல் தமிழ் இலக்கிய உலகில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு அவர் எல்லா வகையிலும் பொருத்தமானவரே.

1965  முதல் இலக்கியத்திற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டு வந்தபோதிலும், தமிழில் எழுத்தாளர் அகிலனும் (1975 ) எழுத்தாளர் ஜெயகாந்தனும் (2002 )  மட்டுமே பெற்றுள்ளனர்.
மலையாள எழுத்தாளர்கள் ஐவருக்கும், கன்னடத்தில் எழுவருக்கும், வங்க மொழி எழுத்தாளர்களுக்கு நால்வருக்கும், இந்தி மொழி படைப்பாளிகள் எட்டு பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கி.ரா.அவர்களின் படைப்புகள் இந்தி, பிரெஞ்சு,ஆங்கிலம் போன்ற  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வாழும் எழுத்தாளரான கி.ரா.அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கி கௌரவப்படுத்துவதே அவரது இலக்கிய பங்களிப்பிற்கு வழங்கும் அங்கீகாரம் என்று சொல்லலாம்.

இந்த 98  வயதிலும் கதை,கட்டுரை எழுதுகிறார். தொலைபேசியில் நண்பர்களோடு உரையாடுகிறார். அன்ட்ரோய்டு தொலைபேசியில் விஷயங்களை பகிர்கிறார். ஜூம் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
கேரளத்தின் முகமது பஷீர் போல, தகழி சிவசங்கரன் போல, தமிழகத்தில் கி.ரா.எனும் இலக்கிய ஆளுமை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

No comments: