Sunday, September 13, 2020

கொற்கை ---------------- அது ஒரு அழகிய துறைமுகம். நீண்டு விரிந்து கிடக்கும் எழில்மிகு கடற்கரை..அங்கே யவன தேசத்து மீகாமன்கள் ( கப்பலை செலுத்தும் மாலுமிகள் ) யவன வணிகர்கள், அரேபிய நாட்டு குதிரை வணிகர்கள்..உள்ளூர் வணிகர்கள் ..என பரபரப்பாய் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். கடலில் நங்கூரமிட்டு நிற்கும் யவனர் நாட்டு கலங்கள்,தோணிகள்.. அகன்ற வீதியில் பெரிய கடற்சுங்க சாவடி இருக்கிறது. சரக்குகளை வைக்கும் பண்டகசாலைகள், கிடங்குகள் இருக்கின்றன. கொண்டுவரப்படும் பொருட்கள் சரிபார்க்கப்பட்டு வரி விதிக்கப்பட்டு, இணையக்கயல் முத்திரை இடுகிறார்கள். பொருட்கள் உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகின்றன. அருகில் உள்ள சோலையில் தாழைமரங்கள் அழகுடன் நிற்கின்றன. கடற்கரையின் மீன் நாற்றத்தை, தாழம்பூவின் நறுமணம் மாற்றியதாம். " முண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைக்கரைப் பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇப் புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின் நற்றோர் வழுதிக் கொற்கை முன்துறை " என்று சங்க இலக்கிய நூலான அகநானூறு விவரிக்கும் அந்த துறைமுகம் கொற்கை துறைமுகம் ! தமிழ்நாட்டின் பெருமையை உலகிற்கே அறிவித்த கொற்கை ! 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டு துறைமுகங்களுள் மிகவும் புகழ்பெற்ற கொற்கை,ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்ட்டத்தில் ஆத்தூரில் இருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது.. தற்போது கொற்கையின் சிறப்பே தெரியாவண்ணம், கடல் ஒன்பது கிலோமீட்டர் உள்வாங்கி ஒரு சிற்றூராக காட்சியளிக்கிறது. சங்க கால பாண்டிய மன்னர்கள் கொற்கையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர். ரோமானியர்கள்,கிரேக்கர்கள்,எகிப்தியர்கள் தங்கள் நாட்டில் உள்ள பொற்காசுகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு, இங்கிருந்து முத்து, மெல்லிய மஸ்லின் துணிகள்,மைசூர் தந்தங்கள், ஏலம்,கிராம்பு,சாதிக்காய், மிளகு போன்றவற்றை வாங்கி சென்றனர். வெள்ளைக்களிமண்ணால் செய்த கோப்பைகள், கண்ணாடி புட்டிகள், மற்றும் மதுப்புட்டிகளையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு, தமிழகத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கலயத்தில் உள்ள பனங்கள்ளை விரும்பி உண்டு களித்தனர். குறிப்பாக கூந்தற்பனங்கள்ளை மிகவும் ரசித்து உண்டார்களாம். யவனர்கள் தங்கள் மன்னர்களிடம் பணிவுடன் இருப்பவர்கள். நேர்மையும், இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் பண்பும் கொண்டவர்களாகவும் இருந்ததால், பாண்டிய மன்னர்கள் கொற்கையிலும்,மதுரையிலும் உள்ள அரண்மனைகளில் வாயிற்காப்பாளர்களாய் பணியமர்த்தினர். அரசின் கருவூலங்களில் பணியாளர்களாய் இருந்தனர். அரபு நாடுகளில் இருந்து ஏராளமான குதிரைகளும் இந்த கொற்கை துறைமுகத்திலும் அதன் பின்னர் புன்னைக்காயல் துறைமுகத்திலும் வந்து இறங்கின. இலங்கையில் இருந்தும் பல்வேறு உணவுப்பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கியதாக சொல்லப்படுகிறது. முத்துக்குளித்தலுக்கு புகழ்பெற்ற துறைமுகம் கொற்கை. கொற்கை கடலில் கிடைக்கும் முத்துக்களுக்கு இணையான நல்முத்துக்கள் உலகில் எங்குமே கிடைக்காது என்று சொல்லுவார்கள். நமது சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, கிரேக்க நாட்டின் தாலமி கொற்கையின் சிறப்பை வியந்து போற்றுகிறார். இவர் கி.பி.130 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர். தமிழகத்திற்கு கி.பி.1292 இல், வந்த மார்க்கோபோலோ முத்துக்குளித்தல் பற்றி விவரிக்கிறார்.. " இலங்கையில் இருந்து மேற்கே 60 கல் தொலைவில் மாபார் (தமிழகம்) உள்ளது. இங்கே பாண்டியர்கள் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முத்துக்குளிக்கும் துறை உள்ளது. இங்குள்ள வணிகர்கள் முத்துகுளிப்பதில் கைதேர்ந்தவர்களை படகுகளில் அழைத்து செல்வார்கள். முத்துகுளிப்பவர்கள் தங்களின் இடுப்பில் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு நீரில் மூழ்கி முத்து சிப்பிகளை தங்கள் முதுகில் உள்ள கூடைகளில் வாரி அள்ளுவார்கள். பின்னர், படகுகளில் உள்ளவர்கள் அவர்களை மேலே இழுப்பார்கள். பிறகு தங்களின் படகுகளில் அவர்களை ஏற்றிக்கொண்டு கடற்கரை திரும்புவார்கள். இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்களாக திகழ்கிறார்கள் " ( முத்துக்குளிக்க வாரீகளா..மூச்சையடக்க வாரீகளா ..பாடல் நினைவு வருகிறதா ?) கடலில் முத்துக்குளிப்பவர்களுக்கு ராட்சச மீன்களினால் உயிரபாயம் ஏற்படுவதுண்டு. தங்களின் சாதுர்யத்தால் அவற்றை விரட்டி, வலம்புரி சங்குகளையும், பவளங்களையும், ஆணி முத்துக்களையும் அள்ளி எடுத்து வருவார்கள். அவ்வாறு கொற்கை கடலில் இருந்து பரதவர்கள் வரும்போது, கடற்கரையில் காத்திருக்கும் அவர்தம் மனைவியரும்,மக்களும், உறவினர்களும் சங்கொலி முழக்கி உற்சாகத்துடன் வரவேற்பார்கள். கடற்கரையே மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைக்கும். " இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப்பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை " என்று அகநானூறு அந்தக்காட்சியை வர்ணிக்கிறது. தங்கள் உறவினர்கள்சூழ உற்சாகமாய் பரதவர்கள் கடற்கரையில் செல்லும்போது, முத்துக்கள் கடற்கரையில் சிதறி விழுந்தனவாம். அதையெல்லாம் தேடி எடுத்து செல்வது வழக்கம் இல்லைபோலும். ( மனுஷன் உசிரோடு வந்ததே கடலன்னை புண்ணியத்தில் என்ற சந்தோசம் கூட காரணமாக இருக்கலாம் ). கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அந்த முத்துக்களை பொறுக்கி எடுத்து மீண்டும் சிப்பிக்குள் அடைத்து கிலுப்பைகளாக ஆட்டி விளையாடினார்களாம். இதைப்பார்த்து அங்கிருந்த குரங்குக்குட்டி தானும் விளையாடி எண்ணி, கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்களை எடுத்து, கீழே விழுந்து கிடக்கும் முத்துக்களை அதில் போட்டு கிலுகிலுவென்று ஆட்டி மகிழ்ந்தது என்று சிறுபாணாற்றுப்படை ஒரு கவின்மிகு சித்திரமாய் வரைகிறது. மனக்கண்ணில் இந்த சித்திரத்தை கொண்டு வாருங்கள்..எப்படிப்பட்ட ஆரவாரமிக்க கடற்கரை துறைமுக நகரமாக கொற்கை இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட கொற்கை இப்போதோ....

No comments: