Sunday, September 13, 2020

கழுகுமலை -------------------- கீழே இருந்த மலைச்சரிவில் உளிச்சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்த தந்தை சிற்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தான் இந்த ஊரில் எவ்வளவு பெரிய சிற்பி. தனக்குத் தெரியாமல் இன்னொரு சிற்பி இந்த ஊரில் வந்து சிற்பங்களை செதுக்குவதா என்ற கோபத்தில், தனது கையில் இருந்த உளியை தூக்கி கீழே எறிந்தாராம். வேகமாய் வந்த உளி, வெட்டுவான்கோவில் சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருந்த சிற்பியின் கழுத்தில் பட்டு " அப்பா.." என்ற அலறியபடியே கீழே விழுந்தானாம். ஓடிவந்து பார்த்த தந்தை சிற்பி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது மகனைப்பார்த்து கதறி அழுதாராம். இறந்து போன மகனைப் பார்த்த அந்தக்கணத்தில் தான் அவன் அழகுற வடித்த ஒற்றைக்கல் கோபுரத்தையும், சிற்பங்களையும் பார்த்து திகைத்து போனார் அவர். என்ன தவறிழைத்து விட்டேன் என்று முட்டி முட்டி அழுதார் அந்த சிற்பி. இதனால் தான் வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவிலாக இருக்கிறது என்று மலையின் தொன்மக்கதையை என்னுடைய அப்பா(தமிழாசிரியர் சு.ராமகிருஷ்ணன் ) கூறக்கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, பஞ்சுப்பொதி கல்லான கதை, சோற்றுருண்டை கல்லாய்ப்போன கதை என பல்வேறு கதைகளும் உண்டு. கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோவில் என்பது தான் வியப்பு. தாழ்வான மலைச்சரிவில், " ப " வடிவில் பாறையை குடைந்தெடுத்து அதன் பின் நடுவில் இருக்கும் பாறையை செதுக்கி திராவிட கட்டிட பாணியில் கோபுரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். வழக்கமான கோவில் கட்டும்போது கீழிருந்து மேலே கட்டுவார்கள். இதில், மேலிருந்து கீழாக கோபுர கலசப் பகுதியில் துவங்கி, கோபுரத்தின் பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள், பின்னர் கீழே குடைந்து அர்த்தமண்டபம், கருவறை உருவாக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி ஒரு சுற்றுப்பாதை. ஒற்றைக்கற்றளியை - ஒரே பாறையில் உருவாக்கிய இந்த கற்கோவிலை நீங்கள் நேரில் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள். பொதுவாக , கோவில் கோபுரங்களில், சுதையில் செய்யப்பட்ட சிற்பங்களை இணைப்பது தான் வழக்கம். இதிலோ, ஒரே கல்லில் கோபுரம், சுற்றிலும் சிற்பங்கள்...எவ்வளவு கவனமுடன் செதுக்க வேண்டும் ? மலைச்சரிவில், 30 அடி ஆழத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 48 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டதாக இருக்கும் இந்தக்கோவில் எழில்மிகு சிற்பங்களை கொண்டுள்ளது. கோவிலின் விமானப்பகுதியில் தாமரை மொட்டுப்போன்ற அமைப்பு. கீழே யாளி சிற்பங்கள்..யானை முக சிற்பங்கள்..இசைக்கருவிகளை இசைக்கும் பூதகணங்கள் ,,நான்கு மூலைகளிலும் இளமங்கையர் சிற்பங்கள்..கவிகை மாடத்தின் மூலைகளில் சிங்கமுக சிற்பங்கள்..என எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் விமானப்பகுதியில், நான்முகன், நரசிங்கபெருமாள், சிவபெருமான், பார்வதி, மிருதங்க தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. சூரியனின் தேவியான சுவர்ச்சலை, சந்திரனின் தேவியான ரோகிணி, உஷை,சுவாகாதேவி ஆகியோரின் சிலைகளும் எழிலுற காட்சியளிக்கின்றன. இவ்வளவு அற்புதமான ஒற்றைக்கல் கோபுரம் சாதாரணமாக கண்களில் தென்படாது. ஒரு பள்ளத்தில் இருப்பது போன்றே தெரியும். மலையில் ஏறி வடதுபக்க சரிவில் நின்று பார்த்தால் மட்டுமே வெட்டுவான்கோவிலின் எழில்மிகு தோற்றம் தென்படும். பக்கவாட்டில் இறங்கிச்செல்ல குறுகலான படிக்கட்டுகள் உண்டு. அதில் அமர்ந்தபடியே கோவிலின் சிற்பங்களையும், மாலை சூரியனின் அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு கோவிலைச்சுற்றி முள்வேலியிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பெருமையுடைய கோவிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்க்க வரும்போது, கோவிலை சுற்றியுள்ள முள்வேலி கதவு, பெரும்பாலும் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது பெரும்சோகமே. இத்தனைக்கும் மத்திய அரசின் சுற்றுலா கிராமமாக கழுகுமலை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதெற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில தனியார் குடில்கள் மலை அருகே உருவாக்கப்பட்டுள்ளன. கழுகுமலையின் இந்த குன்றை சுற்றி கிரிவலப்பாதை ஒன்று உண்டு. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் சுற்றி வருகிறார்கள். இங்குள்ள கழுகாசலமூர்த்தி கோவில் சூரசம்காரம் பிரசித்தி பெற்றது. சூரர்களின் தனித்தனியான உருவங்கள் பிரம்மாண்டமானவை. கந்த சஷ்டி காலங்களில் இந்த சூரர்களின் உருவங்களை தூக்கி ஆடுவதற்கென்றே பல கலைஞர்கள் உண்டு. மிகவும் கனமான இந்த சூரர்களை அவ்வளவு எளிதாக யாரும் தூக்கி ஆட முடியாது. முருகன் வீதியுலா வரும்போது நாலு வீதிகளிலும் சப்பரத்தின் முன்பு ஆறு சூரர்களும் பேயாட்டம் ஆடியபடியே வருவார்கள். பெரியண்ணத்தேவர் என்ற கலைஞர் அவர்களில் மிக முக்கியமானவர். அவர் மகாபெரியவர் என்ற சூரனுக்குள் புகுந்து விட்டால், அவரது ஆட்டத்தைக்காண பெரியவர்கள்,சிறுவர்கள்,பெண்கள் ஓடோடி வருவார்கள். பிற முருகன் கோவில்களில் மாலை ஆறு மணிக்கெல்லாம் சூரசம்காரம் முடியும்போது, இங்கு மட்டும் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை விழா நடக்கும். இந்தக்கோவில் எட்டயபுர ஜமீனின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, வேறு மாதிரியான விழாக்கள் நடந்துள்ளன என தெரிய வருகிறது. சமண,சைவ மதங்களின் மோதல் நாம் அறிந்த விஷயமே. அக்காலத்தில் இந்த ஊர் சமணத்திற்கு புகழ்பெற்ற ஊராக திகழ்ந்ததால், சைவ மதம் கால் ஊன்றியபிறகு, சமணர்களை போல வேடம் அணிந்து கொண்டு ஊர்வலமாய் வந்து, பின் அவர்களை கழுவேற்றுதல் போன்ற விழாக்கள் நடந்திருக்கின்றன. சமணர்களின் குதப்பகுதியில் ஈட்டியை நுழைத்து வாய்ப்பகுதியில் வரும்படியான கழுவேற்றும் காட்சிகள் கழுகுமலை முருகன் கோவிலின் விதானப்பகுதியில் ஓவியமாக தீட்டிய காட்சியினை நான் பார்த்துள்ளேன். மூலிகை ஓவியங்களால் வரையப்பட்ட அந்த ஓவியங்களை தற்போது காண இயலவில்லை. கோவிலின் உட்புறம் உள்ள பிரம்மாண்டமான தெப்பக்குளம் எட்டயபுரம் ஜமீனால் உருவாக்கப்பட்ட அக்கால மழைநீர் சேகரிப்பு மையம் என்றே சொல்லலாம். ஊருக்கே குடிநீரை கொடுக்கும் அந்த தெப்பக்குளம் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளா அழகு. பசு வாய் வழியாக தெப்பக்குளத்தில் தண்ணீர் கொட்டும் அழகைக்காண ஊரே திரண்டு நிற்கும். " ஊர் நினைவு என்பது கள்ளுண்ட போதை போல " என்பார் எழுத்தாளர் புதுமைப்பித்தன். சொந்த ஊரைப் பற்றி எழுதும்போது, நான், எனது போன்ற வார்த்தைகள் என்னையறியாமல் வந்து விழுகின்றன. டெல்லி செங்கோட்டையை பார்க்க செல்கிறோம். மகாபலிபுரம் பார்க்க செல்கிறோம். அருகில் இருக்கும் கழுகுமலை போன்ற வரலாற்றுப்புகழ்பெற்ற ஊரின் சிற்பங்களை எப்போது சென்று ரசிக்கப்போகிறோம் ?

No comments: