Sunday, September 13, 2020

பெருமைமிகு நெல்லைச்சீமை -2 --------------------------------------------------------- ஆதிச்சநல்லூர் அகழாய்வு ------------------------------------------ ஒருமுறை பாளையங்கோட்டை பள்ளி மாணவ,மாணவியர் மத்தியில் பேசும்போது " நீங்கள் எல்லோரும் குற்றாலம் போயிருக்கீங்களா ?" என்றேன். எல்லோரும் கோரஸாக " போயிருக்கோம் சார்.." " பாபநாசம் போயிருக்கீங்களா ?" " போயி அங்கெ எல்லா குரங்குகளையும் கூட சீண்டி பார்த்திருக்கோம் சார் " பசங்க சிரிப்பொலி. " திருச்செந்தூர் கடல் பார்த்திருக்கீங்களா ?" மீண்டும் அதே உற்சாகத்தில் " நல்லா குளிச்சு விளையாண்டிருக்கோம் சார் .." என்றனர். " பாளையங்கோட்டையில் கோட்டை பார்த்திருக்கிறீர்களா ? என்றேன். ஒரு மாணவி எழுந்து " நம்ம ஊருல எங்கே சார் கோட்டை இருக்கு.. இருந்தா எங்க அப்பா கூட்டிட்டு போயிருப்பாங்களே" என்றாள். " கோட்டை இல்லாவிட்டாலும் கோட்டை இருந்த சுவடுகள், அதன் மிச்ச மீதி ஏதேனும் பார்த்த நினைவு இருக்கா ?" என்று தூண்டிப் பார்த்தேன். அவர்கள் இல்லை என்று தலையசைத்தனர். இதில் வேடிக்கை என்னவெனில், கூட்டம் நடைபெற்றதே பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தான். பாளையங்கோட்டையில் இருந்த கோட்டையின் கீழ்ப்பக்க வாசல் இருந்த இடத்தில்தான் அதுவே அமைந்துள்ளது. நுழைவாசலை நன்கு ஊன்றி கவனித்தால், கோட்டையின் முகப்பு தெரியும். " சரி..ஆதிச்சநல்லூர் போயிருக்கீங்களா ?" என்றேன். ஒரே அமைதி. எல்லோருமே உதட்டை பிதுக்கினார்கள். ஒரு மாணவன் எழுந்து " அது எங்கே சார் இருக்கு ?" என்று கேட்டான். " திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு.." என்றேன். மாணவர்களின் பின்பக்கம் பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களும் அதை புதிதாக கேட்பது போலிருந்தது. 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து " தெரியும் சார்..போற வழியில் ஒரு பறம்பு தெரியும். அதுல என்ன இருக்கு..? சின்ன பசங்களுக்கு காட்டுற அளவுக்கு அங்கே எதுவும் இல்லையே சார்.." என்றார். அங்கே என்ன இருக்கா ? * * * * * * * * ** * * * * * * * * ** * * * * * * ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருந்து கிளம்பினார் அந்த வெள்ளைக்கார பயணி. கப்பல் பயணம். கீழ்த்திசை நாடான இந்தியா நோக்கி அந்த கப்பல் செல்கிறது. பயண காலம் எப்படியும் நான்கைந்து மாதம் ஆகும். ஆனாலும் எப்படியும் போயே ஆக வேண்டும் என்ற மனஉறுதி அவர் கண்களில் தெரிகிறது. சென்னை துறைமுகம் வந்து இறங்கும்போது, சூரிய ஒளி தகதகத்தது. தனது கால்களை தமிழ் மண்ணில் பதித்தார் அந்த மனிதர். பிறகு அங்கிருந்து புகைவண்டி மூலமாக திருநெல்வேலி வந்து சேர்ந்தார். தான் விரும்பிய புராதன மண்ணிற்கு வந்து சேர்ந்த பெருமை அவர் கண்களில் தெரிந்தது. அவர் போக வேண்டிய இடத்தை தனது கையில் இருந்த வரைபடத்தில் பார்த்தார்.. ஆதிச்சநல்லூர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவு. ஆனால், அவர் உடனே ஆதிச்சநல்லூர் செல்லவில்லை. முன்பின் தெரியாத ஊர். கிராமமாக கூட இருக்கலாம். வந்த நோக்கத்திற்கு குந்தகம் ஏதும் நேரக்கூடாது. காரியம் நடக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்திக்க நினைத்தார். தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சுலோச்சனா முதலியார் பாலத்தின் வழியாக கொக்கிரகுளத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். பாலம் அவருக்கு தேம்ஸ் நதிக்கரையில் இருந்த வாட்டர்லூ பாலத்தை நினைவுபடுத்தியது. அப்போது மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு ) ஸ்டூவர்ட் என்பவர் இருந்தார். அவரை சந்தித்து " நான் ஜாக்கோர்..(jagore ) ஜெர்மனியில் இருந்து வருகிறேன். மானுடவியல் துறையை சேர்ந்தவன். இங்கே அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்ற பழமையான ஊரில் தொல்லியல் ஆய்வு செய்ய வந்துள்ளேன். உலகின் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த ஊர் போல தெரிகிறது. எனக்கு இந்த விஷயத்தில் நீங்கள் உதவ வேண்டும் " என்று கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஸ்டூவர்ட் டுக்கு சற்று ஆச்சரியம். மறுநாள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட பொறியாளர் மற்றும் வேலை செய்ய 10 , 15 பணியாட்கள் ஆகியோரோடு , தனது கனவு பிரதேசமான ஆதிச்சநல்லூர் பறம்புக்கு வந்து சேர்ந்தார் ஜாக்கோர். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், பணியாட்கள் இவர்களோடு ஒரு வெள்ளைக்காரர் என தங்கள் கிராமத்திற்கு வந்திருந்தவர்களை வியப்புடன் பார்த்தார்கள் ஆதிச்சநல்லூர் மற்றும் புளியங்குளத்து மக்கள். அவர்கள் நின்று கொண்டிருந்த பறம்பு ஒரு இடுகாடு. இறந்தவர்களை புதைக்கும் இடம். 114 ஏக்கர் கல்லும் மண்ணும் கலந்த களர் நிலம். உயர்ந்த பறம்பில், ஜாக்கோர் குறித்து கொடுத்த நிலப்பகுதியில் கடப்பாரையால் தோண்ட ஆரம்பித்தனர். கிராமத்து மக்களுக்கு ஒரே அச்சம். பேய்,பிசாசுகள் நடமாடும் இடமாச்சே..இவர்களை ஏதும் செய்து விட்டால் ? சாடை மாடையாக சொல்கின்றனர். அதைக்கேட்ட ஜாக்கோர் சிரிக்கிறார். " உங்களுக்கு பயமாக இருந்தால் வீட்டிற்குள் இருந்து கொள்ளுங்கள்.. எங்களை ஒன்றும் செய்யாது. பயம் இல்லாதவர்கள் எங்களோடு இருந்து பார்க்கலாம் " என்று சொல்கிறார். பணியாட்கள் குழிகளை தோண்ட தோண்ட பல்வேறு முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. தாழிகளில் உட்கார்ந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள்..இரும்பு பொருட்கள், கத்திகள், பொன், வெங்கலத்தில் ஆன ஏனங்கள்..தாழிகளில் கூலப்பொருட்கள், உமி, இற்றுப்போன துணிகள், தலையில் பட்டம் கட்டும் சூடிகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. துள்ளிக்குதிக்கிறார் நமது ஜாக்கோர். தனது நீண்ட பயணம் வீணாகவில்லை என்று அகம் மகிழ்கிறார். தோண்ட தோண்ட மேலும் மேலும் விதவிதமான மட்பாண்டங்களும் , உலோகப்பொருட்களும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவை சாதாரண மண் பாண்டங்களை விட அளவில் பெரியதும், கனமானதும் கூட. கிடைத்த பொருட்களை சாக்கு மூட்டைகளில் காட்டுகிறார் ஜாக்கோர். எதோ மாயாஜாலம் போல இருக்கிறதே..எங்கிருந்தோ வந்த ஒருவர் முன்பின் பார்த்திராத ஒரு பறம்பில் மிக துல்லியமாக தோண்டி, பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எடுத்து விட்டாரே என்று மாவட்ட ஆட்சியர் ஸ்டூவர்ட் வியக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் கிடைத்த அனைத்து பொருட்களையும் ஏழெட்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றி திருநெல்வேலி வருகிறார் ஜாக்கோர்.. மாவட்ட ஆட்சியரிடம் நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து சென்னைக்கு கிளம்புகிறார். புகைவண்டியில் அவர் கால்களுக்கு கீழே ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூதாதையர் பயன்படுத்திய பொருட்கள் சாக்கு மூட்டையில். மூதாதையர்களின் மண்டையோடுகளும் கூடத்தான். சென்னை சென்று, மீண்டும் கப்பல் பயணம் ஜெர்மனி நோக்கி . வெற்றிக்களிப்பில் இப்போது ஜாக்கோர் இருக்கிறார். ஒரு சுருட்டை பற்ற வைத்து இழுத்தவாறு, தமிழ் மண்ணில் இருந்து விடை பெறுகிறார் அந்த ஜெர்மானிய மானுடவியல் ஆய்வாளர் . அவர் கொண்டு சென்ற பொருட்கள் எல்லாவற்றையும் பெர்லின் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். உலோகத்தின் பயனை அறிந்திருந்த, விவசாய தொழில்நுட்பத்தை அறிந்திருந்த, நெசவு பற்றிய ஞானம் பெற்றிருந்த ஆதி தமிழனின் மண்டையோடுகளும், அவன் பயன்படுத்திய பொருட்களும் இப்போது பெர்லின் நகரின் அருங்காட்சியகத்தில் சாக்கு மூடையில் உறங்கிக்கொண்டு இருக்கின்றன. 1903 ஆம் ஆண்டின் இறுதியில்..பிரெஞ்சு தேசத்தின் பாரிஸ் நகரத்தில் இருந்து மற்றொரு கனவான் கப்பலில் புறப்படுகிறார். எங்கு செல்கிறார் ? இந்திய தேசத்திற்குத்தான். அவரது கைகளில் ஆதிச்சநல்லூர் வரைபடம் இருக்கிறது. (தொடரும் )

No comments: