Sunday, September 13, 2020
கதம்ப மனிதர்கள்
----------------------------
நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..
பழகும் விதம் அப்படி. வருஷங்கள் பல ஓடினாலும், அவர்களின் சித்திரம் நமது உள்ளத்தில் ஆழமாய் உறைந்து நிற்கும். வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் நாம், என்றேனும் நின்று நிதானமாய் அசைபோடும்போது, அவர்கள் மனதில் உயிர்த்தெழுந்து வருவார்கள்.
அடடா..எப்பேர்ப்பட்ட மனுஷி அவ..என்று உதடுகள் நம்மையறியாமல் முணுமுணுக்கும். அவர்களை மீண்டும் சந்திக்க காலம் அனுமதிப்பதில்லை. பலர் காலமாகியிருப்பார்கள். இன்னும் சிலர் திசை மாறி பறந்துபோயிருப்பார்கள். அப்படியான மனிதர்கள் நம் எல்லோரின் வாழ்விலும் வந்திருப்பார்கள். கடந்து சென்றிருப்பார்கள்.
மனித வாழ்வின் உன்னதமே அவர்களை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடுவது தான்.
அப்படி எனது மனதில் பதியமிட்டு சென்ற மனிதர்கள் பலருண்டு. இந்த நேரத்தில் அவர்களில் சிலரை மீண்டும் நினைவில் கொண்டு வந்து, உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.
வங்கியில் வேலை பார்த்த நாட்களில் விதவிதமான மனிதர்களை பார்த்ததுண்டு. சிலருக்கு கூட்டத்தை பார்த்தாலே அலர்ஜி. எனக்கு மனிதர்களை வாசிக்க பிடிக்கும். . சிலர் கோபுலுவின் கோட்டோவியங்களில் வரையும் அளவிற்கு சுவாரஸ்யமானவர்கள்.
சிலர், ஆர்.கே.லக்ஷ்மணன் கார்ட்டூனில் வரும் வெகுஜனம் போன்றவர்கள்.
சேது அம்மாள் எதில் சேர்த்தி என்று சொல்ல முடியவில்லை. வெள்ளை
சீலை கட்டியிருக்கும் சேது ஆச்சிக்கு வயசு எண்பது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள் பட்டியலில் எல்லாம் சேது ஆச்சி கிடையாது தான். ஆனால், எங்களுக்கு சேது ஆச்சி வங்கிக்குள் வந்துவிட்டால், ஒரே கலகலப்பு தான்.
உள்ளே நுழையும்போதே, " ஏம்மா..நல்லா இருக்கியா ? எய்யா..வளந்த தம்பி..சொகமா இருக்கியாய்யா ?..ஏ ராசாத்தி..ஒனக்கு போன புரட்டாசில தான கலியாணம் ஆச்சு..ஏதும் விசேஷம் உண்டுமா ?..பேராண்டி..ஏன் இப்படி காலங்காத்தால கொட்டாவி விட்டுட்டு இருக்கே.. மூஞ்சியை கழுவீட்டு வந்து உக்காருய்யா..நல்லாவா இருக்கு.."
என்று ஏகத்துக்கு வசனங்கள் பேசிவிட்டு, எனது இருக்கை அருகே வந்து உட்காருவாள் ஆச்சி.
" எய்யா..நல்லா இருக்கியா..கொஞ்சம் கரைஞ்சாப்ல இருக்கியே.." என்று சொல்லி விட்டு அமர்வது ஆச்சியின் இயல்பு. இவ்வளவு உரிமையோடு எல்லோரிடமும் பேசினாலும், ஆச்சிக்கு யார் மேலும் நம்பிக்கை கிடையாது. என்னவோ என்னை ஆச்சிக்கு பிடித்துப்போச்சு என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சி தாலியறுத்து அம்பது வருஷம் இருக்கும் என்பாள். புள்ளைகுட்டிகள் எதுவும் கிடையாது. கூட பொறந்த தம்பி மகன் வீட்டில் இருக்கிறாள். தம்பி செத்துப்போயி நாளாச்சு. பெருமாள்புரம் ஏரியாவில் உள்ள சில வீடுகளில் சமையலுக்கு ஒத்தாசையாய் வீட்டு வேலைகள் செய்து கொடுப்பது ஆச்சியின் அன்றாட தொழில். வீடுகளில் பாத்திரம் தேய்த்து கொடுக்கும் வீட்டு வேலை செய்பவள் என்று சொன்னால் பழியாய் கோபம் வரும் ஆச்சிக்கு.
" வாரியல கொண்டு அடி.. என்னை என்ன வேலைக்காரின்னா நெனைச்சே..எதோ அந்த அம்மா கூடமாட ஒத்தாசைக்கு வந்து நில்லுன்னு சொன்னாளேன்னு போயிகிட்டுருக்கேன்..நான் பவுசா வாழ்ந்த வாழ்க்கை என்ன..இப்படி என்னை அவரு நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாருன்னு தான ஆளாளுக்கு பேசுதீக.." என்று கண்ணீர் சிந்தி விட்டு, சீலை முந்தானையால் கண்களை துடைத்துக்கொள்வாள்.
வெள்ளை சீலைன்னு தான் பேரு. எப்போதும் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை சீலை முந்தியில் முடிந்து வைத்திருக்கும் முடிச்சை அவிழ்த்து தனது பர்ஸை வெளியே எடுப்பாள். அதில் பொதிந்திருக்கும் பத்து ரூபாய், இருபது ரூபாய், அம்பது ரூபாய் நோட்டுக்களை எனது மேஜையில் பரப்புவாள் ஆச்சி. சிலவற்றில், திருநீற்றின் வாசம் இருக்கும். அவற்றை நோட்டு வாரியாக பிரித்து,அடுக்கி, எண்ணி ரப்பர் பேன்ட் போட்டு செல்லானில் எழுதுவது வரை என்னோட வேலை.
" எவ்வளவு இருக்குய்யா ?" கண்களை இனுக்கியபடி ஆச்சி கேட்பாள்.
" முன்னூத்தி இருபது.." என்பேன்.
" ஆங்..நல்லா பாரு..முன்னூத்தி எம்பதுல்லா இருக்கும்..ஒரு தடவைக்கு ரெண்டு தடவைல்லா எண்ணிட்டு வந்தேன்.."
ஆச்சி நம்மிடம் போட்டு வாங்குவாள்.
ஆச்சி கண்முன்னேயே, மூணு மட்டம் எண்ணி காண்பித்தபிறகு,
" இருக்கும்..இருக்கும்..வரும்போது கந்தையா பிள்ளை கடைல பாக்கி சில்லறை கேட்டாருன்னு எடுத்து கொடுத்தது அயத்துப்போச்சு .."
என்று பொக்கை வாயை திறந்து சிரிப்பாள் சேது ஆச்சி.
கவுண்டரில் பணத்தை கொடுத்து பாஸ் புக்கில் வரவு வைத்த பிறகு மீண்டும் என்னிடம் வந்து " இப்ப எவ்வளவுய்யா மொத்தம் இருக்கு.?"
என்று கேட்பாள். பார்த்து சொன்னபிறகுதான் நிம்மதி. ஆச்சியின் மனதில், முந்தைய பாலன்ஸ் நினைவில் இருக்கும். மனக்கணக்கில் கூட்டி சரி பார்த்துக்கொள்வாள்.
" எனக்கு நீ சொன்னாதான்யா ஒரு திருப்தி வரும் பாத்துக்க.." என்று வாயை கோணியபடி ஒரு சிரிப்பு.
ஆச்சி, சமயத்தில் என் பக்கத்தில் உள்ள மர ஸ்டூலில் அமர்ந்து வீட்டு கதைகளை எல்லாம் சொல்லுவாள். தம்பி மகன்,மருமகள் மேலே நிறைய ஆவலாதிகள் உண்டு அவளுக்கு.
" நல்ல சாப்பாடு கெடையாதுய்யா..ஒரு நல்லது கெட்டதுக்கு என்னை கூட்டிட்டு போக மாட்டாகய்யா..நான் சம்பாதிக்குறத எல்லாத்தையும் இவுகளுக்குத்தானய்யா கொடுக்கேன்..நாளைக்கு நான் செத்துப்போனா, நாலு பேருக்கு ஒருவாய் காப்பித்தண்ணி கொடுப்பாளாய்யா..நீயே சொல்லு.."
ஆச்சி இப்படி சொல்லும்போது அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகும்.
" கவலைப்படாத ஆச்சி..நீ செத்துப்போனா, வர்ற ஆளுகளுக்கு நான் காப்பித்தண்ணி வாங்கி தரேன்..நிம்மதியா இருங்க..உங்களை ஜாம் ஜாம்னு வழியனுப்பி வச்சுருவோம்.." என்று நான் சொல்வேன்.
ஆச்சிக்கு ஏகத்துக்கு சந்தோசம்.
" நம்ம ஆபிஸ் ல உள்ள எல்லாரும் வருவாக..அவங்க பிள்ளைகள் எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்கும் ஆச்சி..சரிதானா மணி ? " என்று ஆபீஸ் மணியிடம் நான் ஆச்சி முன்பு ஒப்புதல் வாங்குவேன்.
ஆச்சி வாயெல்லாம் சிரிப்பை பார்க்கணுமே..ஒரே சிரிப்பாணி தான்.
" நீ மகராசனா இருக்கணும்யா.." ஆச்சி இடுப்பில் இருந்து சுருக்குப்பை எடுத்து திருநீறு பூசி விட்டாள்.
அன்று முதல், வங்கிக்கு வரும்போதெல்லாம், ஆச்சி என்னிடம்
" எய்யா..காப்பித்தண்ணி ..மறந்துராதீக.." என்று சிரித்துக்கொண்டு சொல்வது வழக்கமாகி போனது. என்னோடு பணிபுரியும் ஊழியர்கள் கூட கேலி செய்யும் அளவிற்கு காப்பித்தண்ணி பிரபலமாகி விட்டது.
வங்கி கணினிமயமாகியபிறகு, நிலைமை ரொம்பவே மாறிப்போனது.
வங்கி வாடிக்கையாளர்களை நிமிர்ந்து பார்த்து பேசும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது. சேது ஆச்சி எப்போதும் போல வந்தாள். போனாள். வங்கிக்கு என்று இருந்த வாடிக்கையாளர்கள் போக, புதிது புதிதாய் ஆட்கள் வந்து போனார்கள். வேறு வேறு கிளையின் வாடிக்கையாளர்கள் எல்லாம் வந்து வெவ்வேறு கிளைகளின் கணக்கிற்கு பணம் கட்டினார்கள். கோர் பாங்கிங் முறையில் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்..வங்கி முழுவதும் குளிர் சாதன வசதி..ஆச்சி குளிரில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.
விரைக்குது என்பாள். வெள்ளை சீலையை உடம்பு முழுக்க இழுத்து போர்த்தி கொள்வாள். முன்புபோல எனது இருக்கை அருகே அமர்ந்து கதை சொல்ல எல்லாம் இப்போது அனுமதி இல்லை. நேரமும் இல்லை.
ஆச்சி சத்தமின்றி வந்து போனாள்.
எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அலுவலகம் வந்த என்னைப்பார்த்து ஆச்சி அழுதே விட்டாள்.
" இப்படி அரை ஆளா போயிட்டியேய்யா...உடம்புக்கு என்னய்யா செஞ்சது..யாருகிட்டேயும் கேட்டா ஒழுங்கா சொல்லுதாகளா..
கரைஞ்சு போயிட்டீகளே.."
எனது கைகளை பிடித்து மூசு மூசென்று அழுதாள் ஆச்சி.
" ஆச்சி..உனக்கு காப்பி தண்ணி கொடுக்காம, நான் முந்திக்குவேன்னு பயந்து போயிட்டிகளா ?"
என்று சிரித்தேன். சட்டென்று வாயை பொத்தினாள் ஆச்சி.
" வேண்டாம்யா..அந்த வார்த்தை எல்லாம் சொல்லாதேய்யா..ஒனக்கு வாழற வயசு..பேரன்,பேத்திக எல்லாம் எடுத்து சந்தோசமா இருக்கணும்..
நேத்து தான் பழனிக்கு போயிட்டு பழநியாண்டவனை பார்த்துட்டு வாறன்..ஜெயா மகள அங்க தான கட்டி கொடுத்திருக்கு.. மாசமா இருக்காளாம்..அதான் பார்த்துட்டு வருவோம்னு எல்லாரும் போனாக..நானும் போயிட்டு வந்தேன்..நெத்தியக்காட்டு.." என்று சொல்லி பட்டு போல இருந்த திருநாறு பூசி விட்டாள் ஆச்சி.
பூசும்போது ஆச்சியின் கைகள் நடுங்கின. வாய்க்குள் என்னவோ முணுமுணுப்பது கேட்டது. திருவாசகமாய் இருக்குமோ என்னவோ..?
சில மாதங்களில், நான் அருகில் இருந்த வேறொரு கிளைக்கு மாறி சென்று விட்டேன். போகும்போது சேது ஆச்சியிடம் சொல்லி செல்ல இயலவில்லை. ஆச்சி ரொம்ப வருத்தப்படுவாள் என்று தெரியும்.
பின்னொரு முறை, ஆச்சியை பற்றி விசாரித்தபோது, தம்பி மகன் பொண்டாட்டிக்கும், ஆச்சிக்கும் பேச்சு தடித்துப்போய் ஆச்சி கோவிச்சுட்டு வெளியே வந்து லைன் பஸ் முதலாளி வீட்டு கார் கொட்டகையில் படுத்து வேலைக்கு செல்கிறாளாம்..அட கண்றாவியெ..
இங்கே வந்தபிறகு, பழைய கிளைக்கு அடிக்கடி சென்று வர முடியவில்லை. ஒருமுறை வங்கியில் இருந்து வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் முறை எனக்கு வந்தது.( 570 கோடி கண்டைனர் லாரி மாதிரி ) பழைய கிளைக்கு உற்சாகமாய் சென்றேன். நல்ல கூட்டம்.
நவீன இருக்கைகள்..டோக்கன் சிஸ்டம்..வலது ஓரத்தில் இடுங்கியபடி உட்கார்ந்திருந்த வெள்ளை சீலை கட்டிய ஆச்சி..
அட..சேது ஆச்சி..வேகமாய் அருகில் சென்றேன்.
எதிர் சீட்டில் இருந்த சரோஜா மேடம் " சார்..வாங்க..நல்லா இருக்கீகளா..சேது ஆச்சி மண்டையை போட்டு மூணு மாசம் ஆச்சு..எல்லோரும் உங்களைத்தான் நினைச்சோம்..நீங்க வெளியூர் போயிருந்ததாய் சொன்னாங்க..அதான் சொல்லல.."
நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
காப்பித்தண்ணி யாராச்சும் வாங்கி கொடுத்தாகளா? என்று கேட்க வார்த்தைகள் வந்தன. அடக்கி கொண்டேன்.
ஆச்சியின் தம்பி மகன் வாங்கி கொடுத்திருப்பான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
-------------------------------நாறும்பூநாதன்
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment