Sunday, September 13, 2020

இன்னா நாற்பது , இனியவை நாற்பது ----------------------------------------------------------- அற்புதமான சிறுகதைகள் எழுதி புகழ்பெற்ற அன்டன் செகாவ், ஷெர்லாக் ஹோம்ஸ் புகழ் சர் ஆர்தர் கானன் டாயில், வில்லியம் சாமெர்செட்மாம், ஆலிவர் கோல்ட்ஸ்மித், காதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்ற ஜான் கீட்ஸ், ராபின் குக், சீனக்கவிஞர் லூசுன் ஆகியோர் வரிசையில் தற்போது மருத்துவர் கு.சிவராமனும் இணைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இதென்ன வரிசை என்று கேட்கிறீர்களா ? மேற்கூறிய அனைவரும் மருத்துவம் படித்த எழுத்தாளர்கள் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. . நான் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் நீண்டநாள் வாசகன். ஆறாம் திணை, ஏழாம் சுவை,உயிர் பிழை, நலம் 360 இவற்றை தொடர்ந்து இன்னா நாற்பது, இனியவை நாற்பது .. என்னதான் நமக்கு தமிழ் மொழி மீது பற்றிருந்தாலும், பதினெண்கீழ்க்கணக்கு , பதினெண் மேல்கணக்கு நூல்கள் எவை என்று கேட்டால், காத தூரம் ஓடுவோம். இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வரும் என்பதை போகிற போக்கில் சொல்லி செல்கிறேன். " கொடுங்கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா ; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ; கடு மொழியாளர் தொடர்பு இன்னா, இன்னா தடுமாறி வாழ்தல் உயிர்க்கு " என்ற பாடலை சொல்லும்போது, எட்டாம் வகுப்பில் மனப்பாட செய்யுளில் நாலு மதிப்பெண் சொளையாய் எடுத்த ஞாபகம் வருகிறதா ? அப்போது அதன் பொருள் அறிய கோனார் நோட்ஸ் துணைக்கு இருந்தாலும், வாழ்வோடு சேர்த்து பொருத்திப்பார்க்கும் அதன் உண்மைப்பொருள் நாற்பது வயதில் தான் தெரியும். சரி..நம்ம நூலுக்கு வருவோம். இதற்கு முந்தைய தலைமுறை அப்பாக்கள் பார்த்த கேன்சர் நோயாளிகள் , " வாழ்வே மாயம் " கமலும், " பயணங்கள் முடிவதில்லை " மோகனும் தான் என அவர் நகைச்சுவையோடு ஆரம்பிக்கும்போது நாம் வாய்விட்டு சிரிக்க ஆரம்பிக்கிறோம். நாற்பதின் " மகிமைகள் " தான் என்னே ! நாற்பது வயதில் மாஸ்டர் செக் அப் பண்ணாவிடில், நாம் வினோத ஜந்து போல சமூகத்தில் பார்க்கப்படும் பார்வையில் இருந்து துவங்குகிறது நூல். சர்க்கரை நோய் பெற்றோர் கொடுத்த சீதனம் என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, காற்றில் கலந்துள்ள ஆபத்தான துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், அவை நமது நுரையீரலுக்கும், மூளைக்கும், ரத்தத்திற்கும், கணையத்திற்கும் ஊடுருவி செல்லும் தன்மை கொண்டன என்பதும், இப்படி காற்று மாசுபடுதலும் கூட சர்க்கரை நோய்க்கு காரணம் என்ற புதிய உண்மை அச்சுறுத்துகிறது. உலகில் ஆரோக்கியமான உணவு பட்டியலில் , நமது இட்லியும், சாம்பாரும் இரண்டாவது இடம் என்று ஒருமுறை படித்த ஞாபகம். திருநெல்வேலி டவுண் விஞ்சை விலாஸ் ஓட்டல் வாசலில் இந்த பேப்பர் செய்தியை ஒருவர் கத்தரித்து ஒட்டி இருந்தார். இப்போது ஓட்டலுக்கு சென்றால், யார் இட்லியை சாப்பிடுகிறார்கள் ? " வீட்டுல தான் தெனமும் இதத்தான அவிச்சுக்கொட்டுதோம். இங்கயும் வந்து இதையெ சொல்லுதீகளே ? " என்று ஒரே ஆவலாதி பெண்களிடம் இருந்து வருவதை புறந்தள்ள முடியாது. EAT LANCET GLOBAL COMMISSION என்ற சர்வதேச அமைப்பு 2050 க்குள் உலகில் உணவு முறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றொரு அறிக்கை விட்டு, " உணவில் இனி அதிகம் தாவர உணவும், குறைவான மீன் புலால் புரதமும் சேர்க்கப்பட வேண்டும் " என்று வலியுறுத்துகிறதாம். தலைவாழை இலைபோட்டு, அதில் காய் வகைகள் பலவும் பரிமாறி விட்டு, ஆவி பறக்கும் சோற்றை, டேபிள் ஸ்பூன் கொண்டு இனிமேல் பரிமாறுங்கள் என்று மருத்துவர் சொல்லும்போது, மனசு திக்கென்றது. முட்டைகோஸ், பீன்ஸ் பொரியலில் சாம்பார் ஊற்றி பிசைந்து, ஓரமாய் கொஞ்சூண்டு இருக்கும் மல்லி சம்பா சோற்றை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் என்று நைசாக அறிவுறுத்துகிறார் மருத்துவர். எடையை குறைக்க, " கீட்டோஜெனிக் டயட், மரக்கறி வீகன் டயட்" என்ற இருவகைகள் இருக்கின்றன. இந்த இரண்டு உணவு வகைகளிலும் உள்ள சர்வதேச உணவு அரசியலை இவர் சொல்லும்போது, க்ரில் சிக்கன் உள்ளே இறங்க மறுக்கிறது. இன்றைய தலைமுறையை " FAANG " என்ற அமைப்பே நிர்வகிக்கிறது என்று சொன்னவுடன், எதோ ஒரு சர்வதேச அமைப்பு போல என நினைத்தால், facebook ,apple ,amazaan ,netflix , google என்று விளக்கம் கொடுத்தபோது குபீர் சிரிப்பு எழுந்தாலும், அதுவே ஆட்டிப்படைக்கும் பூதங்கள் என்பது நம் கண் முன்னே தெரிகிறது. காலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது, காதில் செவிட்டு மெஷின் போல வயரை மாட்டிக்கொண்டு, எதிர்ப்படும் எந்த ஜீவனையும் உற்று நோக்காத, " காலை வணக்கம் " கூட சொல்லாத, நாற்பது வயதினரை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதன் அவ்வளவு வெறுப்பானவனா ?.. தனி தீவாக இப்படி மாறிப்போயிருக்கும் மனிதர்களை என்ன செய்வது ? மனிதர்களை விடுங்கள்..அதிகாலை பொழுதில் இரை தேட வலசை செல்லும் பறவைக்கூட்டங்களை ரசிக்கலாம்..கலைடாஸ்க்கோப் போல வானில் மாறும் வினோத அதிசயங்களை காணலாம். எதையுமே ரசிக்காமல் வாட்ஸ் ஆப் வாந்திகளை அடுத்தடுத்து எடுத்துக்கொண்டிருக்கும் இந்தக்கால தலைமுறைகளை கவலையோடு கவனிக்கிறார் மருத்துவர். முந்தைய தலைமுறையினரின் கோபங்கள் எப்படி எல்லாம் வெளிப்பட்டன, இந்த தலைமுறையினரின் கோபங்கள் எப்படி வெளிப்படுகின்றன என்ற ஒப்பீடு சுவாரசியமானது. அப்பாக்கள் யாரும் யோகா வகுப்பிற்கு சென்றதில்லை. " ஒரு முழ மல்லிகைப்பூவில், அம்மாக்களோடு சமரசம் செய்து விடுவார்கள் அல்லது " கூட ஒரு வாய் தான் சாப்பிடுங்களேன் " என்ற அம்மாக்களின் குழைவில் கோபமெல்லாம் கரைந்து விடும் என்று சொல்லும்போது, ஊடலும், கூடலும் எவ்வளவு இயல்பாக நடந்து விடுகின்றன என்பதை உணர முடிகிறது. முப்பது நொடிகளில் வாட்ஸ் ஆப் பில் பதில் வரவில்லை எனில், அன்பில்லை..என்று சண்டையிடும் இன்றைய தலைமுறையின் சகிப்பற்ற போக்கினை அதோடு ஒப்பீடு செய்து சொல்லும் அதே வேளையில், அதற்காக அந்த காலத்தில் எல்லாமே சரி, இப்போது எல்லாமே மோசம் என்ற முடிவுக்கு வருவதும் சரியல்ல என்றும் சில உதாரணங்கள் கூறி செல்கிறார். ஒரு நாளைக்கு 15 கி.மீ நடக்கும் யானைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்ற செய்தி புதியது. யானைகளை தேக்கு மரக்கட்டைகளை எடுத்து செல்ல பயன்படுத்தலாம். பக்தர்களிடம் பத்து ரூபாய் வாங்கவும், கடைகளில் ஓசி மிச்சருக்கு கையேந்த வைப்பதும் அந்த மிகப்பெரும் ஆகிருதியை கேவலப்படுத்தும் செயல் தானே ? ஒரு நாளைக்கு 150 கிலோ இலை தழைகளை தின்று வாழும் அந்த ஜீவனை, புளியோதரைக்கும் சர்க்கரை பொங்கலுக்கும் பழக்கப்படுத்தினால், பின்னே சர்க்கரை வியாதி வராமலா இருக்கும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மருத்துவர். பெண்களுக்கு மெனோபாஸ் போல ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் வருவதையும் சொல்லி, கணவனுக்கும், மனைவிக்கும் இரண்டும் ஒரே சமயத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, இருவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஐந்து வயது இடைவெளி இருக்கும்படி அக்காலத்தில் திருமணம் செய்து வைத்ததையும் நினைவுகூரும்போது, வியப்பளிக்கிறது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு ஆஞ்சியோ பார்த்தபிறகு, வெளியே வந்த டாக்டர் , நோயாளியின் மனைவியிடம் " அடைப்பு நாலஞ்சு இருக்கு. மெடிகேட்டட் ஸ்டண்ட் வச்சிடலாமா ? மூணு லட்சம் தான்..இல்லேன்னா விலை குறைஞ்ச ஸ்டண்ட் வைக்கவா " என கேள்வி கேட்பதை பார்த்து மருத்துவர் கூறும் வாசகங்கள் மனதை நெகிழ வைக்கின்றன . " திக்கற்று திகைத்து நிற்கும் அந்த மனைவிக்கு எதுவும் தெரியாது. ஸ்டண்ட் டும் தெரியாது. அதன் விலையும் தெரியாது. அவருக்கு வேண்டியதெல்லாம் கணவனின் உயிர். எது செய்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது என்பதை ஒரு சகோதரனாய், நல்ல ஆலோசகனாய், அறம் சார்ந்த உணர்வோடு மருத்துவர்களே..நீங்களே முடிவெடுங்கள் " என கூறும் அறிவுரையை மருத்துவ உலகம் செவி சாய்த்து கேட்குமா ? உடல் சார்ந்த பரிசோதனைகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்று சொல்லும் அதே நேரத்தில், இந்த நேரத்தில் இவ்வளவு சோதனைகளும் அவசியமா என்பதையும் வணிகமாய் செயல்படும் மருத்துவமனைகள் மேல் வைக்கிறார். யோகா நல்லதா என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இடுப்பில் லங்கோடு கட்டி, காலை முதுகுக்கு பின்புறம் போட்டபடி ஆசனம் போடும் ஆசன ஆண்டியப்பன் திருநெல்வேலியை சேர்ந்தவர். அறுபதுகளின் பிற்பகுதிகளில் பாளையங்கோட்டை சந்தை அருகே யோகாசன மையத்தை துவக்கியவர். அவர் யோகாசனம் என்றே சொல்வார். என்ன ஆசனம் செய்தால், என்ன நோய் வராமல் தடுக்கலாம் என்று சொல்வாரே தவிர ஆன்மீகத்துடன் முடிச்சுப்போட்டதில்லை. நவீன விஞ்ஞானம் யோகா மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்று சொல்கிறது. இதனால் பின்னாளில் ஏற்படும் சிறுநீரக, இதய பிரச்னைகள் வருவதும் கணிசமாக தடுக்கப்படும். திருமூலரின் மூன்றாம் தந்திரத்தையும், ஒன்பதாம் தந்திரத்தையும் நியூட்டனை படித்தது போல அறிவியலாய் பார்க்காமலும், பிடிக்காமலும் போனதும் காரணம் என்று குறிப்பிடுகிறார் ஒரு இடத்தில. இந்த நூல் புற்றுநோய் பற்றி..பக்கவாதம் பற்றி..மாரடைப்பு பற்றி, சுற்றுசூழல் பற்றி..எல்லாம் பேசுகிறது. ஆனால், நோய்கள் பற்றிய புத்தகம் என்று சொல்ல மாட்டேன்..தம்பதியர்களிடையே ஏற்படும் இடைவெளியை பற்றி பேசி விட்டு, அவற்றை களைய சில மெனக்கெடல்களை பற்றியும் பேசுகிறது. மலரினும் மெல்லிய காதலை பற்றி பேசுகிறது. நாற்பது வயதில், அந்த மலர் சூலுற்று, காயாகி,முள் சீத்தாப்பழமாகி போய்விடுகிறது என்று சொல்கிறது. கணவனோடு சண்டை போட்டு விட்டீர்களா ? அரை மணி நேரம் கழித்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வாங்கி அன்பை கொட்டி ஒரு கடிதம் எழுதிப்போடுங்கள் என்று சொல்கிறது. " சங்கத்தில் பாடாத கவிதை, உன் அங்கத்தில் யார் தந்தது ?" என்ற இளையராஜா பாடலை கேளுங்கள் என்று கிளுகிளுப்பூட்டுகிறது. நாற்பது வயது பெண்ணுக்கு தேவை " எத்தனை முறை என்னிடம் நீ உச்சம் பெறுகிறாய் அல்லது கொடுக்கிறாய் " என்பதல்ல. எத்தனை முறை என்னிடம் புன்னகைக்கிறாய் ? எவ்வளவு நிமிடங்கள் கண் பார்த்து பேசுகிறாய் ? எத்தனை முறை என் கரம் பற்றி உனது நெஞ்சில் வைத்து கொள்கிறாய் ? என்றெல்லாம் அகநானூற்று பாடல்களாய் காதல் உணர்வுகளை கண்முன்னே விரிக்கிறது என்றே சொல்லலாம். " இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் ? முழுமை பெற்ற காதல் என்றால், முதுமை வரை கூட வரும் " என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன. நோய் பற்றிய நூலை தொடர்ந்து வாசித்தால், வாசகனுக்கு களைப்பும் சோர்வும் ஏற்பட்டு மூடி விட வாய்ப்புண்டு. வாசிக்க வாசிக்க எல்லாமே இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆனால், இந்த நூலை நகைச்சுவை உணர்வும், காதலும் இழையோட எழுதியிருப்பதால், படிக்க சுவாரஸ்யமே ஏற்படுகிறது. நோய்க்கூறுகளை சொல்லிய அடுத்தகணமே, அவற்றை எப்படி இயல்பாக சரி செய்யலாம் என்பதை சொல்லி செல்கிறார் மருத்துவர். இது கூட ஒரு உளவியல் பார்வை தான். நோய்களை மட்டும் அல்ல. மலிவான ஆட்கள் கிடைக்கும் தேசமாய் மாறிப்போயுள்ள அவலத்தையும் சொல்கிறது. கொடுப்பதை வாங்கி விட்டு வேலை செய்ய 1000 ஜிகாபைட் இயந்திரங்கள் 120 கோடிப்பேர் உள்ளதை சொல்லி, பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டு கம்பளம் விரிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள்,அரசுகள் பற்றியும், சூழலியல் சிதைவுகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. எதிர்காலத்தில், கிரிக்கெட்டில் மேற்கு இந்திய தீவு அணி வேண்டுமானால் இருக்கும். தீவு இருக்குமா என்று தெரியாது என்று சொல்கிறது. பயணங்களின்போது நல்ல திரைப்படங்களை பாருங்கள் என்கிறார்.நல்ல புத்தகங்களை வாசித்தால், ஆயுள் கூடும் என வாசகர்களுக்கு மட்டுமல்ல, நோயை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் சேர்த்தே கூறுகிறார். பறை இசை என்பது இழவுக்கு அடிக்கும் இசையல்ல. உழவுக்கும், உடலுக்குமான கொண்டாட்ட ஒலி.. அமெரிக்க தமிழ் சங்கங்களின் தேசிய கீதமாக பறை இசை ஒலிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். பறை இசை மன அழுத்தத்தை குறைக்கிறது என்று சொல்லும்போது, மனம் குதூகலிக்கிறது. திருமண வீடுகளில், நண்பர்களோடு, சுற்றத்தாரோடு சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள் என்று உற்சாகமூட்டுகிறார். காத்திருத்தல் பற்றிய கட்டுரை அருமையான கவிதை. காத்திருத்தல் என்பது எவ்வளவு சுகம். 3000 , 4000 மூலிகைகளை முகர்ந்து பார்த்து, சுவைத்து பார்த்து, அந்த சாறு இறங்கிய 3000 மனிதர்களின் முகங்களை பார்த்து, விழி பார்த்து நாடி பார்த்து சொன்ன சித்தர்களின் காத்திருத்தலை விவரிக்கும்போது, சித்த மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது. இடையிடையே, இவரது அப்பாவின் பழைய அட்லஸ் சைக்கிள் கேரியரில் நம்மை அரூபமாய் உட்காரவைத்து திருநெல்வேலி ராயல் டாக்கீஸுக்கும் அழைத்து செல்லும்போதும், அசோக் பிளேடு கொண்டு எட்டாவது முறை அவர் சவரம் செய்வதை பார்க்க வைக்கும்போதும், பழையதை தயிர் விட்டு பிசைந்து , தொட்டுக்க லட்சுமி விலாஸில் வாங்கிய பக்கடா பொட்டலத்தை வைத்துக்கொள்வதை வர்ணிக்கும்போதும், என்னைப்போன்ற திருநெல்வேலிக்காரன்களின் விழியோரம் நீர் கோர்ப்பதை தவிர்க்க முடியாது. நோய்களைப்பற்றி எழுதும்போதே, தேவதேவனின் கவிதையை சொல்கிறார். வண்ணதாசனின் கதையை, வேள்பாரியின் நினைவை, புதுமைப்பித்தனின் " காஞ்சனையை " ...அடேங்கப்பா...மனிதர் எவ்வளவு வாசிக்கிறார் என்று வியக்க வைக்கிறது. இவை எல்லாமும்தான் இந்த நூலின் சுவை..! இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, பின்னணியில் ராஜாவின் இசையில் ஜென்சி பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது. அன்புடன்... இரா.நாறும்பூநாதன்

No comments: